நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

 

நான்… நீ…5

கடிகார முட்களின் தொடர் ஓட்டங்கள் அவஸ்தையான நொடிகளாக ஓடிக் கொண்டிருக்க, அறையின் இண்டர்கம் ஒலித்து, இருவரையும் நிகழ்விற்கு வரவைத்தது.

ஒலிபேசியை எடுத்த ஆதித்யரூபனிடம் பேசிய மனஷ்வினியின் குரலில் இருவரின் தர்க்கங்களும் தூரம் போயின.

“சாரி மாமா… உங்களை டிஸ்டர்ப் பண்ணினா பிடிக்காதுன்னு தாத்தா சொன்னார்தான். பட், இப்ப நான் அக்கா கூட பேசியே ஆகணும். அவளை பேசச் சொல்றீங்களா?” மனு இயலாமையுடன் கூற, புருவம் சுருக்கியே லவுட் ஸ்பீக்கரை ஆன் செய்து, தேஜுவிடம் கொடுத்து விட்டு அருகில் நின்று கொண்டான்.

‘இந்தப் பெண் எந்த பூச்சாண்டியை கிளப்பி விடப் போகிறாளோ?’ என்ற நமைச்சல் ஆதிக்குள் குடையத் தொடங்கியது.

“சொல்லு மனு!” தேஜு கேட்க,

“அக்கா, இன்னுமா உனக்கு விடியல… எப்போ கீழே இறங்கி வரப்போற?” சலிப்புடன் கேட்டாள் மனு.

“அது வந்துடி, கொஞ்சம் டயர்டா இருந்ததா…” தேஜு இழுக்கும் போதே,

“கல்யாணத்துக்கு போட்ட தலைவலி நாடகத்தை இன்னுமா நீ முடிக்கல? உடனே கீழே இறங்கி வா!” தங்கையின் சிறுபிள்ளைதனத்தில் அவஸ்தையுடன் கணவனைப் பார்த்தாள் தேஜு.

“ம்ப்ச்… நான் சொல்ல வந்ததே வேற மனு!”

“எதுவா இருந்தாலும் கீழே வந்து பேசேன் க்கா!” தங்கையின் அவசரத்தில் தமக்கைக்கும் பதட்டம் வந்துவிட,

“என்னாச்சுடா! எதுக்கு இவ்வளவு ரெஸ்ட்லெஸ்ஸா பேசுற?” தன்போக்கில் எழுந்து நின்று கணவனின் முகம் பார்த்தாள் தேஜு.

“நத்திங் க்கா! இங்கே நான் மட்டும்தான் இருக்கேன். எல்லாரும் வெளியே போயிட்டாங்க!” என்றதும் ஆதி இடையிட்டான்.

“ஆனந்த் எங்கே மனு?”

“அவர், ஆஃபீஸ் கிளம்பி போயிட்டார் மாமா!” சுருதி இறங்கிய குரலில் மனு கூற, தலையில் அடித்துக் கொண்டான்.

‘அடுத்தவர்களை பற்றி யோசிக்கவே மாட்டானா இவன்? மனைவியினிடத்திலும் இதே உதாசீனம் தானா!’ மனதிற்குள் தம்பியை கடிந்து கொண்டே,

“தாத்தா அங்கே இல்லையா ம்மா?” ஆதி அடுத்த கேள்வியை கேட்க,

“இவருக்கு பின்னாடியே தாத்தாவும் கிளம்பிட்டாங்க மாமா! செர்வென்ட்ஸ் எல்லாரும் மார்னிங் டுயூட்டி முடிஞ்சதுன்னு அவங்க இடத்துக்கு போயிட்டாங்க… இவ்வளவு பெரிய ஹால்ல தனியா இருக்கறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு. ப்ளீஸ்… அக்காவை கீழே அனுப்பி வைங்களேன்!” தங்கையின் கெஞ்சலில் அக்காவின் சுருதி மாறிப்போனது.

“வொரி பண்ணிக்காதடா, டுவென்டி மினிட்ஸ்ல கீழே வர்றேன்!” வேகமாக தேஜு கூற,

“கார்டன் சுத்திப் பாரு மனு…. நாங்க வந்துடுறோம்.” என அழைப்பை துண்டித்தான் ஆதி.

“புது இடத்தில தனியா இருக்கவும் பயந்துட்டா போல… நான் கீழே போகவா அத்தான்?” கண காரியமாக கேட்டவளின் சொல்லும் செயலும் மின்னலின் வேகமாக இருக்க, அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தான்.

‘இத்தனை நேரம் தன்னிடம் தவிப்பும் தயக்கமுமாய் இருந்த பெண் இவள் தானா? தங்கையின் பரிதவிப்பை கேட்டதும் அத்தனை குழப்பங்களும் ஓடி ஒளிந்து கொண்டதா? என்ன பெண்களோ!’ கணவனின் உள்மனம் புரியாத புதிராக நின்றவளை விளங்காமல் பார்க்க,

“என்ன த்தான்?” தேஜுவும் புரியாமல் கேட்டாள்.

“இந்த அத்தான் இப்பதான் ஞாபகத்துக்கு வந்தேனா?” குதர்க்க கேள்வியில் அவளை ஆராய,

“ம்ப்ச்… நமக்கு கல்யாணம் முடிஞ்சு ரெண்டுநாள் கூட இன்னும் முழுசா முடியல… அதையும் ஞாபகத்துல வச்சுக்கோங்க!” அலட்டிக்கொள்ளாமல் கூறி நகன்றாள்.

தங்கை தன்னைத் திசை திருப்பிய சில நொடிப்பொழுதில், தனது நிலையை உணர்ந்து செயல்படத் தொடங்கி விட்டாள் தேஜஸ்வினி.

அவசரகதியில் குளித்து முடித்து பாத்-ரோப்பில் வெளியே வந்தவள், அனார்கலியை அணிந்து கொள்வதற்கென கைகளில் எடுக்க,

“சேலை கட்டிக்கோ தேஜு!” கட்டளையிட்டான் ஆதி.

“சீக்கிரம் போகணும், சேலை சுத்திக்க நேரம் எடுக்கும். ஈவ்னிங் கட்டிக்கிறேன் அத்தான். ப்ளீஸ்… மனு தனியா இருக்கா!” முகத்தை சுருக்கி கெஞ்சியவள் மீண்டும் அதே உடையை கையில் எடுக்க, இவனுக்குள் ஈகோ கொடி பிடிக்கத் தொடங்கியது.

‘ஆண்மகனின் உணர்விற்கும் மதிப்பில்லை; சொல் பேச்சிற்கும் மரியாதை இல்லை. இவள் வீட்டு மனிதர்கள் மட்டுந்தான் இவளுக்கு முக்கியமா? ஒரு பெண்ணிடம் இத்தனை சுயநலமா!’ மனதிற்குள் கனன்றவன்,

“அப்போ லெஹங்கா போட்டுக்கோ!” கண்டிப்புடன் கூறிவிட்டு, தானே முன்வந்து மஞ்சள் நிற லெஹங்காவை கைகளில் திணித்தான்.

“உனக்குள்ள இருக்கற நெருடலை மனசுல வச்சு, நம்ம உறவை இறக்கிக் பார்க்காதே! நீ, ஆதித்யனோட மனைவி, இந்த வீட்டு மூத்த மருமக… அதை எப்பவும் மனசுல நிறுத்தி வாழப் பழக்கிக்கோ!’ உறுதியான உத்தரவாக கூறியவனின் குரலில் அடக்கப்பட்ட கோபம் அப்பட்டமாய் தென்பட்டது.

“நான் கீழே போறேன்… நீ மெதுவா, ஒழுங்கா ரெடியாகிட்டு வா! அது வரைக்கும் உன் தங்கச்சிக்கு நான் செக்யூரிட்டி இன்சார்ஜ் எடுக்கறேன்!” குத்தலாய் மொழிந்து, பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பி விட்டான்.

“ஹப்பா… என்ன ஒரு கோபம் இவருக்கு? என் தங்கைக்கு நான் பதற மாட்டேனா! இதுவே இவர் தம்பிக்கு என்றால் சும்மா இருந்து விடுவாரா!” பல கேள்விகளை முணுமுணுத்துக் கொண்டே தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள் தேஜஸ்வினி.

எப்போதும் தனி சிரத்தையுடன் தன்னை அழகுபடுத்திக் கொள்பவளுக்கு கணவனின் கட்டளையும் சேர்ந்து விட, மிகக் கவனமாகவே தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.

“அரைகுறையாக போயி நின்னு அதுக்கு ஒரு பாட்டை கேக்க வேணாம். மனுவை அவர் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டாருல்ல…” மனதிற்குள் சமாதானப் பேச்சுகள் தோன்றி, அவளை நிதானப்படுத்தியது.

கீழே வந்தவனைப் பார்த்ததும் மனுவின் மனம் நிம்மதியடைந்ததை, அவளின் முக இறுக்கத்தின் தளர்விலேயே அறிந்து கொண்டான் ஆதி.

“என்னாச்சு மனு… தனியா இருக்கவா பயபட்ட?”

“பயமில்ல மாமா… அதை எப்படி சொல்றதுன்னும் தெரியல! எப்பவும் அக்கா, தம்பி, அம்மான்னு யாரவது ஒருத்தர் கூடவே இருந்து பழகிட்டு, இப்ப இவ்ளோ பெரிய ஹால்ல தனியா இருக்கவும் ஒரு மாதிரி படபடப்பா இருக்கு. பழக்கமில்லாத இடம் வேறயா… அதான், அக்காவை கூப்பிட்டேன். அவ வரலயா மாமா?” தனது தவிப்பினையும் தேடலையும் மனு மொத்தமாக கூறி முடிக்க, ஆதியின் மனம் துணுக்குற்றது.

‘பழக்கமில்லாத மனிதர்கள், புது இடம், புகுந்த வீடு, கணவனே என்றாலும் புது மனிதன். தேஜுவிற்கும் இதெல்லாம் புதிது தானே! அதிலும் பார்த்ததும் அதிர்வடையச் செய்யும் என் முகத்தின் தழும்புகள்… அதனால்தான் காலையில் அவளுடைய முகம் இத்தனை அவஸ்தைகளை தாங்கி நின்றதோ? நான் வேறு அதைப் புரிந்து கொள்ளாமல் குறைபாட்டு பாடி குதறி எடுத்து விட்டேன்!’ மானசீகமாய் தன்னைத்தானே கடிந்து கொண்டு அமைதியாய் நின்றான்.

மனம் வழக்கம் போல் அவனது வதனத்தின் சிறுமையை நினைத்து கதறத் தொடங்கியது. ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்ற கழிவிரக்கத்தை தாண்டிய சிந்தனைக்கு அவன் எப்போதும் செல்வதே இல்லை.

ஆதியின் மனவாட்டம் அறியாமல் அவனை ஆராயத் தொடங்கினாள் மனஷ்வினி. ‘இவருக்கும் நேற்று தானே திருமணம் முடிந்தது. அக்காவிடம் இவர் எப்படியோ? ஆனாலும் இந்த நேரம் வரையிலும் அவளுக்கு துணையாக இருக்கிறார் தானே!’ ஆனந்தனை நினைத்து ஒப்பிடத் தொடங்கியவளின் மனம், குமுறலைக் கொட்டத் தயாராய் இருந்தது.

‘உங்க தங்கக்கம்பி ஏன் இப்படி இருக்கிறார் என்று மாமாவிடமே கேட்டு விடலாமா?’ நாக்கு நுனி வரை எட்டிப் பார்த்த வார்த்தைகளை அப்படியே முழுங்கி கொண்டாள் மனஷ்வினி.

அவளின் செயலற்ற தன்மையை புரிந்து கொண்ட ஆதிக்குமே மனம் உருகிப் போனது. “மனசுக்குள்ள எதையோ நினைக்கிற… எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லலாமே மனு?” மெதுவாய் கேட்டு கனிவாகப் பார்த்தான்.

‘மனதிற்குள் நினைப்பதை எல்லாம் வெளியே கொட்டி விட்டால் அது வேறு விதமான களேபரத்தில் கொண்டு போய் விடுமோ! உறவின் அரிச்சுவடியை முகர்ந்து பார்க்காத வாழ்க்கைக்கு ஆரம்பத்திலேயே கொள்ளி வைத்துக் கொள்ள வேண்டாம்!’ என்று புத்தி அறிவுறுத்தியதில், “லேசா தலைவலி.” என்று பொய் கூறினாள் மனு.

“ஒஹ்…. இந்த தலைவலி உங்க குடும்ப வியாதியா?” ஆதி கேட்க, திடுக்கிட்டு பார்த்தாள்.

“என் கேள்விக்கு பதில் தெரியலைன்னா, உன்னை போலவே உங்க அக்காவும் தலைவலின்னு சொல்லி தப்பிக்கிறாளே? அதுக்குதான் கேட்டேன்!” விளக்கம் கூறியவன் வேலையாட்களை தொலைபேசியில் பேசி அங்கே வரவழைத்தான்.

வரிசையாக வந்து நின்ற எட்டு பேரையும் தண்டனை கொடுக்காத குறையாக, கண்டித்தும் கடிந்தும் கொண்ட நேரத்தில் தேஜஸ்வினியும் அங்கே வந்துசேர, இருவரையும் ஒன்றாக சுட்டிக் காட்டியே பேச ஆரம்பித்தான் ஆதி.

“உங்க வேலை முடிஞ்சாலும் வீட்டு முதலாளியம்மாக்கு என்ன தேவைன்னு கேட்டுச் செய்யாம, உங்களை யாரு உங்க இடத்துக்கு போகச் சொன்னது?

இந்த வீட்டுக்கு புதுசா வந்திருந்தாலும் இனிமே உங்களுக்கு சம்பளம் கொடுக்கப் போறவங்க இவங்கதான். இனி இவங்களை கேட்டுத்தான் எந்தக் காரியமும் இங்கே நடக்கணும். அதை ஞாபகத்துல வச்சுக்கோங்க!” காட்டமாக உரைத்து விட்டு, உணவருந்த அமர்ந்து விட, வேலையாட்கள் தங்கள் பொறுப்புகளை கைகளில் எடுத்துக் கொண்டனர்.

ஆதித்யனின் கண்டனக் குரலுக்கு பயந்தே லேசானா முணுமுணுப்பைக கூட பணியாட்கள் யாரும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் புது எஜமானிகளின் மீதான நல் அபிப்பிராயம் அங்கே தொலைந்தே போனது.

பணியாட்கள் உணவைப் பரிமாற, மிக அமைதியாக மூவரும் உணவருந்தத் தொடங்கினர். மனைவியின் அழகினை ஓரக்கண்ணால் ரசித்துப் பார்த்தவனுக்கோ, தனது கண்டிப்புத் தோரணையை மாற்றாமல் இருக்க மிகக் கடினமாக இருந்தது.

அவனது பார்வை எல்லாம் சகோதரிகள் உணவை எடுத்துக் கொள்ளும் பாவனையில் மட்டுமே நிலைத்து நின்றது.

“வீட்டுல வாசல்ல கோலம் போட நிறைய இடம் இருக்கு மனு. தட்டுல வளைவு போடாம சாப்பிடு!”

“இப்படி நுணுக்கி சாப்பிட்டா பொழுதுக்கும் மயக்கம் போட்டு விழ வேண்டியது தான்!” இருவரையும் அதட்டி உருட்டி சகஜமாய் மாற்றி உணவுண்ண வைப்பதற்குள் ஆதிக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.

“நினைச்ச நேரத்துக்கெல்லாம் தலைவலின்னு சொல்ற பழக்கத்தை ரெண்டு பேரும் கைவிட்டா நல்லா இருக்கும். டிஃபன் முடிச்சதும் தலைவலி மாத்திரை போட்டுட்டு ரெஸ்ட் எடுங்க. எல்லாம் சரியாகிடும்!”

கணீரென்ற குரலில் கூறிய ஆதி உணவை முடித்துக் கொண்டு எழ, ‘ஐயோ!’ என இருவருமே ஒரேசேர தலையில் கைவைத்து அமர்ந்தனர்.

“எனக்கு… நான் தலைவலின்னு சொல்லவே இல்லையே அத்தான்!” கணவனின் கை பிடித்து தேஜூ மெதுவாக கிசுகிசுக்க,

“இனிமே சொல்லாம இருக்கறதுக்கு தான் இந்த பனிஷ்மெண்ட்!” அன்புக் கட்டளையாக இருவருக்கும் கூறிவிட்டு, மனைவியின் புறம் குனிந்து,

“அப்பிடியே அள்ளிக்கலாம் போல இருக்கு தேஜுமா… ரொம்ப அழகா இருக்கடா! மனு நார்மல் ஆனபிறகு நம்ம ரூமுக்கு வா! எனக்கு ஆபீஸ் வொர்க் இருக்கு. மேலே போறேன்!” அவளுக்கு மட்டுமே கேட்கும்படியாக கூறிவிட்டு, அங்கிருந்து சென்றான்.

இவர்களின் அன்னியோன்யத்தை பாராமுகமாய் கண்ணுற்ற மனுவிற்கு நம்பமுடியாத பாவனைதான். ‘இதென்னடா மின்னல் கேப்புல இவங்க தனியா டிராக் ஓட்டுறாங்க… மாமா கில்லி, தேஜு பேபி நீ அவுட்டா!’ மனுவின் உள்மனம் சந்தோஷித்ததை கூட பகிர விடவில்லை பணியாட்கள்.

மறுநொடியே காபியும் மாத்திரையும் இருவருக்கும் வந்து சேர, “முடியல… முடியல!” சத்தமாகவே புலம்பிய மனு,

”இல்லாத தலைவலிக்கு காபியும் குடித்து, மாத்திரையும் போட்டு… கடவுளே! என்னை ரட்சிக்க மாட்டாயா?” பொய் அழுகையுடன் தேஜுவின் தோள் சாய்ந்தாள்.

“ச்சு… மனுகுட்டி! அத்தான் நம்ம நல்லதுக்கு தானே சொல்லிட்டு போயிருக்காரு! ஒரு மாத்திரை தானே போட்டு ரெஸ்ட் எடுப்போம்டா, கம் ஆன்!” அக்காவின் சமாதானத்தில் அவளைக் கூர்ந்து கவனித்தாள் தங்கை.

“நேற்று அழுகையில் கரைந்த ராஜசேகர் பொண்ணா நீ? ராவோடு ராவா அத்தான் கூட டூயட் பாடி டயர்டான பச்சைகிளியா மினுக்கிறியே தேஜுக்கா! இல்ல இல்ல… தேஜுமா! அப்படித்தானே… என்ன குழைவு, என்ன ரசனை எங்க ஆதி மாமாவுக்கு…” மேற்கொண்டு தங்கை கிண்டலை தொடரும் நேரத்தில் விரைந்து அவளின் வாயை அடைத்தாள் தேஜு.

“பப்ளிக்டி படுபாவி… மானத்தை வாங்காதே!” சிரிப்பும் குழைவும் போட்டி போட பேசிய தேஜுவின் முகம் செங்காந்தளை பூசி நாணத்தில் சிவந்தது.

“அச்சோ… இப்படி உன்னை பார்த்தா எனக்கே என்னென்னமோ பண்ணுதே… என்ற மாமன் நெலமை ரொம்ப கஷ்டம்தான். லவ் யூ அன்ட் கங்கிராட்ஸ் க்கா!” அன்போடு வாழ்த்தையும் கூறிவிட்டு, அவளின் இடைபிடித்து சுற்றினாள்.

“அத்தான்

என்னத்தான் அவர்

என்னைத்தான்

எப்படிச் சொல்வேனடி!” பாட்டுபாடி அக்காவின் கை கோர்த்து நடனமும் ஆடத் தொடங்கி விட்டாள் மனஷ்வினி.

தங்கையின் கேலியில் சிணுங்கினாலும் அவளுடன் இணைந்து ஆடி மகிழ்ந்தாள் தேஜு. சகோதரிகள் சிரித்து மகிழ்ந்த தருணங்கள் எல்லாம் விரைவாகவே கழிந்தன. ‘தனிமையில் என்னை வந்து பார்!’ எனச் சொல்லிச் சென்ற கணவனின் பேச்சினை மறந்தே போனாள் தேஜு.

அலுவல் அறையில் முடங்கிய ஆதி, “ஏன் ஆனந்த் இன்னைக்கு ஒருநாள் வீட்டுல இருந்திருக்க கூடாதா?” ஆதங்கமாக தம்பியிடம் கேட்க, பெரியவரிடம் கூறிய பதிலையே ஒப்பித்தான் ஆனந்தரூபன்.

“கொஞ்சமாவது மனிதாபிமானம் வேணும் சின்னவனே! நீ ஃபீலீங்க்ஸ் இல்லாத மரக்கட்டையா இருக்கலாம். அந்தப் பொண்ணையும் அப்படி நினைக்கணுமா? தனியா விட்டுட்டு போனது ரொம்பத் தப்பு!” கோபத்துடன் நிதானம் மாறாமல் அறிவுறுத்த,

“கல்யாணமாகிட்டா தலைகீழா தொங்கப் பழகிக்கணும்னு சொல்றியா? சாரி ப்ரோ! அது உனக்கு ஒத்து வரலாம். பட், என்னை உன்னோட இழுக்காதே… அன்ட் இது மாதிரி அட்வைஸ் பண்றது இதுவே லாஸ்டா இருக்கட்டும்!” முகத்தில் அறைந்தாற்போல பேசி அழைப்பினை துண்டித்தான் ஆனந்தன்.

அருணாச்சலத்திற்கும் அழைத்து, “அப்படியென்ன வெட்டி முறிக்கிற வேலையை பார்க்க போனீங்க ய்யா… பேத்தின்னு வாய் நிறைய சொன்னாப் பத்தாது. ஒரே ஒருநாள் பக்கத்துல நின்னு தைரியம் கொடுத்திருக்கலாம்!” தனது கோபத்தை எல்லாம் ஒட்டு மொத்தமாக அவரின் மீது இறக்கி வைத்தான் ஆதித்யன்.

குடும்பமாக இருக்க வேண்டுமென்ற எல்லையற்ற ஆசை கொண்டவனுக்கு சின்ன பெண்ணின் மனச்சுணக்கம் அத்தனை வேதனையை உண்டாக்கி இருந்தது.

ஒருநாள் பொழுதில் நம்பி வந்த பெண்ணை உதாசீனப்படுத்தி செல்வதை, ஆதியின் ரத்தத்தில் ஊறிய கௌரவமும் குடும்பப் பாரம்பரியமும் சரியென்று ஒத்துக் கொள்ளவே இல்லை.

என்றும் தனக்குதானே நீதிபதியாக இருந்து செயலற்றுபவன் வயதையும் கருத்தில் கொள்ளாமல் தங்களின் நலம் பேணும் பெரியவரையே இந்த விசயத்திற்காக நிந்தித்து விட்டான்.

அவரது பதிலைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் கோபத்துடன் அழைப்பினை துண்டித்தவனுக்கு தம்பியின் வாழ்க்கை மீது இனம் புரியாத பயமொன்று தொற்றிக் கொண்டது.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!