நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…6

ஏதோ ஒரு கோபம் ஆதியின் மனதிற்குள் புகைச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தது. ‘திருமணம் முடிந்த ஒருநாளில் நான் மாறி விட்டேனா… இல்லை, எல்லோரும் அன்னியர்களாகி விட்டார்களா!’ குழப்பத்துடன் நடைபயின்றவனுக்கு மனைவி இந்நேரம் அருகில் இருந்தால் நன்றாக இருக்குமென மனம் நினைக்க, அவனது விருப்பத்தின் காதலியே தொலைபேசியில் அழைத்து விட்டாள். 

“அத்தான், உங்களைப் பார்க்க தம்பி வந்திருக்கான். மேலே கூட்டிட்டு வரட்டுமா?” தயங்கியே கேட்ட தேஜஸ்வினியிடம்,

“நானே வர்றேன்… நம்ம ஃப்ளோர்ல யாரையும் தேவையில்லாம அலோவ் பண்ணக்கூடாது தேஜு! இதையும் மனசுல வச்சுக்கோ!” பேசிவிட்டு துண்டித்தான்.

நகுலேஷ் சகோதரிகளை பார்க்க வந்திருந்தாலும் மரியாதை நிமித்தமாக விசாரிக்க வேண்டுமே என்றுதான் அவனைப் பார்க்க வந்திருப்பதாக தேஜு, கணவனிடம் கூறியது. இல்லையென்றால் கௌரவம், இன்னபிற நடைமுறை என்று ஆதி நீட்டி முழக்கினால் பதில் சொல்ல இப்போதைக்கு தெம்பில்லை என்றே சுதாரித்து கூறினாள்.

மனஷ்வினியும் நகுலேஷும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, ஆசிரியரிடம் தனியாக மாட்டிக் கொண்ட மாணவியாக தொலைபேசியை வெறித்துக் கொண்டிருந்தாள் தேஜஸ்வினி.

‘இதைப் போல இன்னும் எத்தனை பாடம் மனசுல நிறுத்திக்கணுமோ! இவர் சொன்னத ஃபாலோ பண்ணாம என் இஷ்டத்துக்கு இருந்தா என்ன பண்ணுவாரு? இவரோட சுபாவத்தை மாத்த முடியுமா?’ தறிகெட்டு ஓடிய சிந்தனைகளை கலைத்தது நகுலேஷின் குரல்.

“அன்பிலீவபிள் சேன்ஞ்சஸ் தேஜுக்கா! ஒரேநாள்ல லவ்லி மிராக்கிள்!” தம்பியானவன் சிலாகித்து கூற,

“குறிப்பா, அந்த அத்தான் அழைப்பு… சோ கியூட் இல்ல, மிஸ்டர் நண்டு?” மனஷ்வினி தன் பங்கிற்கு கலாய்த்து விட, பொய்யாய் சிணுங்கத் தொடங்கினாள் தேஜு.

“மை டியர் பக்கீஸ்… உங்க அக்கா பாவமில்லையா? அவர் முன்னாடி இப்படி பேசி, வாங்கிக் கட்டிக்காதீங்கடா! எனக்கே ஹெவி டோஸ் குடுத்து எந்நேரமும் பதட்டத்துல வச்சுருக்காரு!” முகம் சுருக்கிக் கொண்டு சோகமாகக் கூறியவளை,

தங்கையும் தம்பியும் சேர்ந்து, “ச்சோ ஸ்வீட், மை பட்டு அக்கா!” பூரிப்புடன் அக்காவின் கன்னம் கிள்ளி கொஞ்சிக் கொண்டனர்,

“பட், ஐ அம் நாட் ஹாப்பி அக்காஸ்… இன்னைக்கு நீங்க மறுவீட்டு விருந்துக்கு வரலன்னு சொன்னதும் பிஞ்சு மனசு சல்லி சல்லியா நொறுங்கிப் போச்சு!” நகுலேஷ் மூக்கால் முகாரி பாட,

“யாருக்கு பிஞ்சு மனசு நண்டு தாத்தா!” மனஷ்வினி தனது கிண்டலைத் தொடர்ந்தாள்.

“பேச வைக்காதே குட்டியக்கா… இன்னைக்கு நிறைய பிளான் வச்சிருந்தேன். மாம்ஸ் அன்ட் உங்களை வச்சு மினி ஃபாமிலி சூட் பண்றதுக்கு கேமிரா எக்யூப்மென்ட்ஸ் எல்லாம் அரேன்ஞ் பண்ணி வச்சிருந்தேன். ஏன் க்கா வரல?” ஆற்றாமையுடன் கேட்டதில் அவனது பாசமே வெளிப்பட்டது.

“எங்க கையில ஒன்னுமே இல்ல நண்டுபாய்! உன்னோட ரெண்டு மாம்ஸ் அன்ட் தாத்தா கன்ட்ரோல்ல நாங்க இங்கே பொம்மையா ஆடிட்டு இருக்கோம்!” மனு சோர்வாகக் கூற, தேஜுவும் ஆமென்று தலையசைத்தாள்.

தங்கையை தனியாக தவிக்க விட்டுச் சென்றதில் ஆனந்தன் மற்றும் அருணாச்சலம் மீது தேஜுவுமே அதிருப்தி கொண்டிருந்தாள்.

அதிலும், ‘நீ, மருமகளாக கடமையைச் செய்ய இறங்கி வரவில்லையென்ற குற்றபாட்டை தாத்தா பாடினார்.’ என தங்கை சொல்லக் கேட்டு, அவரிடம் சற்று அதிகப்படியான கோபமே கொண்டிருந்தாள் தேஜு.

அதனைப் பற்றி விரிவாக பேசிக் கொண்டிருக்கும் போதுதான் தம்பி நகுலேஷ் வந்துவிட, கணவனை அழைத்துப் பேசி அவனது கட்டளையையும் மனதில் நிறுத்திக் கொண்டு இவர்களிடமும் பேசி முடித்தாள்.

மற்றவர்களின் கைப்பொம்மையாக ஆடாமல், தங்களின் விருப்பத்தின்படியே இந்த வீட்டில் நடமாட வேண்டுமென்ற முடிவினை மிகச் சீக்கிரமே எடுத்திருந்தாள் தேஜு.

“எங்கேயாவது வெளியே போயிட்டு வருவோமா க்கா?” மனு, தேஜுவிடம் கேட்க,

“அதுக்கும் தாத்தா, மாமாஸ் பெர்மிசன் கேக்கணுமா க்கா?” நகுலேஷ் சந்தேகத்தை கிளப்பினான்.

அம்மா வீட்டில் இருந்தவரை ஊர் சுற்ற அனுமதி கேட்டது கிடையாது. ‘எங்கடி போற?’ கேள்விக்கு, ‘வந்து சொல்றேன்!’ இவ்வளவு தான். அத்தோடு பெற்றோரிடம் பேச்சு முடிந்து விடும்.

‘இங்கே வெளியே செல்வதற்கு தாத்தாவிடம் அனுமதி பெற வேண்டுமோ?’ தேஜுவின் மனமும் ஆராயத் தொடங்கியதில், ‘கணவனிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம்!’ என்ற முடிவிற்கு வந்தாள்.

அவனும் உடன் வர சம்மதித்தால் ஜோடியாக ஊர் சுற்றி விட்டு வரலாமே என்கிற நப்பாசையும் தேஜூவிற்குள் எட்டிப் பார்த்தது.

இவர்களின் பேச்சினை கேட்டுக் கொண்டே வந்தமர்ந்த ஆதித்யன், “தலைவலிக்குதுன்னு சொன்னியே! இப்ப கட்டாயமா வெளியே போகணுமா தேஜு? எதுவா இருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம். ரெஸ்ட் எடுங்க!” அக்கறையுடன் கூற,

“இல்ல த்தான்… வெளியே போயிட்டு வந்தா கொஞ்சம் பெட்டரா இருக்கும். அம்மா வீட்டுல இருந்த வரைக்கும் நாங்க மூனுபேரும் சேர்ந்தே ஊர் சுத்திப் பழக்கம். சும்மா ஒரு சின்ன ரவுன்ட். சீக்கிரமே வந்துடுவோம்!” தேஜு தங்களைப் பற்றி எடுத்துக் கூற, அவனோ மசியவே இல்லை.

“அங்கே இங்கே சுத்துவோம்னு சொல்றதெல்லாம் கேக்கவே நல்லாயில்ல தேஜுமா!. நம்ம குடும்பத்துல இப்படியெல்லாம் வெறுமென ஊர் சுத்திப் பழக்கமில்ல.” தடைவிதித்த ஆதியை பார்த்து மூவரும் ஊமையாகிப் போயினர்.

வெளியில் சுற்றுவதற்கும், குடும்பப் பழக்கத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்குமென்று மூவருக்குமே ஒன்றும் விளங்கவில்லை.

இவர்களின் முகச்சுருக்கத்தில் சற்றே இறங்கி வந்த ஆதி, “நகுல்… ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணு! ஏதாவது மூவி போகலாம். நானும் வர்றேன்… ஆனந்தனையும் கூப்பிட்டுக்கலாம்!” அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தனது கட்டளையை மாற்றி அமைத்தான்.

அவனுக்குமே மனைவியுடன் வெளியே செல்வதை நினைத்து மனதிற்குள் மெல்லிய சாரல் அடித்து பரவசப்படுத்தியது.

“சூப்பர் ஐடியா ஆதி மாமா… இன்னைக்கு அவுட்டிங் என்னோட ட்ரீட்டா இருக்கட்டும். தாத்தாவையும் கூப்பிடுங்க, சேர்ந்து போவோம்!” நகுலேஷ் கூற, வாய்விட்டு சிரித்தாள் மனு.

“வொய் ஆர் யூ லாஃபிங் மிசஸ்.ஆனந்த்?” நகுலேஷ் கடுப்புடன் கேட்க,

“கரடி வேலை பார்க்க இவ்வளவு அவசரமா என் டோமரு!”

“வாட்? மீ கரடி… நல்லா இல்லை சொல்லிட்டேன்!” தம்பி முகம் சுழித்தான்.

“மனு… சின்ன பையன்கிட்ட என்ன விளையாட்டு?” ஆதி கண்டிக்க,

“மாமா… இவனுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க! பத்து ரூபா செலவு பண்ணிட்டு பத்தாயிரத்துக்கு வேட்டு வைப்பான்!” தம்பியின் பராக்கிரமத்தை விளக்கிய மனஷ்வினி,

“அடேய் கரடி பையா… சீட் நான் புக் பண்றேன். நீ பேமெண்ட் பண்ணிடு!” என்றபடி, இரண்டு ஜோடிக்கும் தனித்தனியாக டிக்கெட் பதிந்து விட்டு, தம்பிக்கும் தாத்தாவுக்கும் தனியாகப் பதிந்தாள்.

அந்த நேரமே அருணாச்சலம் வந்துசேர, திரைப்படத்திற்கு தான் வரவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார்.

“எனக்கு இதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல கண்ணுகளா! அசதியா இருக்கு, ரெஸ்ட் எடுக்கணும்.” சோர்வுடன் மறுத்தவரிடம்,

“உங்க சின்னவருக்கும் சேதி சொல்லிடுங்க ய்யா… நாம என்ன பிளான் பண்ணினாலும் அந்த வேலை இந்த வேலைன்னு கண்கட்டு வித்தை காட்டுவான்!” ஆதி, தம்பியின் வழக்கத்தை கூறினான்.

“கால்கட்டு விழுந்தப்புறம் அவரோட கண்கட்டு வித்தைக்கெல்லாம் மசிய முடியாதுங்க பெரியவரே! எம் பேத்தி மந்திரச் சாட்டையை சொடுக்கிவிட்டு, நம்ம சின்னவரை கட்டி இழுத்துட்டு வந்துட மாட்டாளா?” நடப்பு தெரியாமல் பேசி மனஷ்வினியின் மனதில் கடுப்பை வார்த்தார் பெரியவர்.

“ஐயோ தாத்தா… இதை கேட்டு உங்க சின்னவர் என்னை ரோட்டுல நிறுத்தாம இருந்தா சரி!” முணுமுணுப்பே என்றாலும் அது ஸ்பஷ்டமாய் அனைவரின் காதிலும் விழ,

“அதென்ன கண்ணு, இப்படி சொல்லிட்ட… நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்? உன்ற புருஷன், என் பொண்டாட்டி தங்கமேன்னு பாட்டுபாடி, உன்னை சுத்தி வரத்தான் போறான்… நானும் அதைப் பார்த்து ரசிக்கத்தான் போறேன்!” பெரியவர் தாமதிக்காமல் சின்னவளை ஆறுதல்படுத்தியதில் அனைவருக்கும் வெகு நிம்மதி.

“மதியம் சாப்பாட்டுக்கு வர்றவரை பிடிச்சு வைக்க வேண்டியது என்ற வேலைங்க கண்ணு… நீங்க கவலப்படாம கிளம்புறதுக்கு ரெடியாகுங்க!” நம்பிக்கை வார்த்தைகளை கூறிய அருணாச்சலம்,

“புது ஜோடிங்க போறப்ப, நீ ஏன்டா தம்பி குறுக்கால போற?” நகுலேஷை பார்த்து கேட்க,

“எனக்கும் உங்களுக்கும் வேற ரோ புக் பண்ணியிருக்கேன் தாத்தா. இப்ப நீங்க வரலன்னா என் ஃபிரண்டை கூட்டு சேர்த்துப்பேன்!” நகுலேஷ் கூறியதும் ஏகமனதாய் அனைவரும் சம்மதித்தனர்.

‘இன்னைக்கு பிளசன்ட் ஈவ்னிங்கா இருக்குமா? இல்ல நம்ம மச்சான் இதுக்கும் குதர்க்கம் பேசிட்டு நிப்பாரா?’ கணவனை நினைத்துக் கொண்டே மனஷ்வினி பகல் உணவை முடிக்க, மதியம் வீட்டிற்கு வந்த ஆனந்தன் அனைவரையும் தலையால் தண்ணீர் குடிக்க வைத்தான்.

“என்னைக் கேட்டு நீங்க டிக்கெட் புக் பண்ணியிருக்கணும்.” நகுலேஷை பார்த்து முறைத்துக் கூறியவன்,

“ஏனோதானோன்னு உங்க இஷ்டத்துக்கு பண்ணிட்டு புறப்பட்டு வான்னு என் கழுத்தைப் பிடிச்சா, என்னால நிச்சயம் முடியாது.” ஆதித்யனிடம் வேண்டா வெறுப்பாக பேசி முடித்தான் ஆனந்தன்.

“ஜோடியா போறதுக்கு புக் பண்ணியாச்சு சின்னவரே! புள்ளைங்க ஆசைபடுது இந்த ஒரு தடவ மட்டும்…” அருணாச்சலம் கெஞ்சலில் இறங்க, அவனது முறைப்பு மனைவியைத் தீண்டியது.

“அவ ஆசைபட்டு நிக்கறதுக்கு எல்லாம் நான் சிவப்பு கம்பளம் விரிக்க முடியாது. என்னை விட்டுட்டு, அவளை மட்டும் அழைச்சிட்டுப் போங்க… எனக்குப் பார்க்க வேண்டிய வேலை நிறைய இருக்கு!” கடுப்புடன் பொறுப்பை தட்டிக் கழித்தான்.

ஆனந்தன் சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ந்து நிற்க, மனஷ்வினி பெரும் சங்கடத்துடன் தலை குனிந்தாள்.

‘புதுசா கல்யாணம் பண்ணவன் ஜோடியா சுத்த நினைக்காம, தலைகீழா தான் குதிப்பேன்னு சாதிக்கிறானே?’ தேஜூவுமே அவனைப் பற்றி ஒரு முடிவிற்கு வர முடியாமல் தவித்தாள்.

“போதும் நிறுத்து ஆனந்த்… புருஷன் கூட வெளியே போகணும்னு அவளுக்கும் ஆசை இருக்காதா? உங்களுக்கு ஹனிமூன் பேக்கேஜ் புக் பண்ணித் தரலாம்னு காலையில யோசிச்சிட்டு இருந்தேன். அதுக்கு முன்னாடி லோக்கல்ல போயிட்டு வர்றதும் ரிலாக்ஸா இருக்கும்னு ஃபீல் பண்ணி நான்தான் புக் பண்ணச் சொன்னேன்!” எனக்கூறி ஆதித்யன் கடிந்து கொண்டான்.

சகோதரர்களின் பேச்சினைக் கேட்ட அனைவருக்கும் மகிழ்வதா, வருந்துவதா எனத் தெரியவில்லை. நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மனஷ்வினிக்கு ரெக்கை கட்டிப் பறக்கலாம் போலிருந்தது.

கணவன் ஜடமாக இருந்தாலும் அவனை உசுப்பேற்றும் வேலையையாவது மற்றவர்கள் செய்கிறார்களே என அனைவைரையும் நன்றியுடன் பார்த்தாள்.

“நான் எப்பவுமே மூவிஸ், ஷோஸ் பார்க்கிறதுல இண்டரெஸ்ட் காட்டுறதில்லைன்னு உனக்கு தெரியாதா ஆதி?” ஆனந்தன் சொன்னதுதான் தாமதம்,

“கொஞ்சம் கொஞ்சமா விருப்பத்தை மாத்திக்க வேண்டியதுதான். எப்பவும் இருக்கற மாதிரி இனிமேலும் இருக்க முடியுமா? மனஷ்வினி ராஜசேகரா இருந்த நான், மனஷ்வினி ஆனந்தரூபனா மாறலையா!

எங்களைப் போல பேரையா மாத்திக்க சொல்றோம்? எனக்காக உங்க விருப்பத்தை கொஞ்சம் மாத்திக்க கூடாதா!” ஆசை மனதின் வேகமும், அனைவரின் ஆதரவும் சேர்ந்து பக்கபலம் கொடுக்க, தைரியமாக துடுக்குத்தனத்துடன் நேரடியாகவே கேட்டு விட்டாள் மனஷ்வினி.

அவளின் நிமிர்வான பேச்சில் ஆனந்தன் திகைத்து விழிக்க, அதைப் பார்த்து உள்ளுக்குள் துள்ளிக் குதித்தாள் மனு. ‘எப்படி சமயம் பார்த்து அடிச்சேன் பார்த்தியா?’ கணவனின் விழிகளை நேருக்குநேராக சந்தித்து சவால் விட்டாள். 

“சரியாச் சொல்லிட்ட தங்கம்!” மனுவைப் பாராட்டிய அருணாச்சலம்,

ஆனந்தனைப் பார்த்து, “இனிமே நீங்க பழைய ஆனந்தன் கிடையாதுன்னு நங்கூரம் அடிச்ச மாதிரி எம் பேத்தி சொன்னதை கேட்டீங்களா சின்னவரே! இதுக்கு மேலயும் கேட்டு வாங்குவேன்னா அது உங்க இஷ்டம்.” ஆர்ப்பாட்டமாகச் சிரித்தார்.

ஆனந்தனின் முகம் மேலும் இறுக்கம் கொள்வதைக் காணக்காண மனுவிற்கு பயமும் சந்தோசமும் சேர்ந்தே வந்து இம்சித்தது. தன் கலக்கத்தை வெளியில் காட்டாமல் இருக்க படாத பாடுபட்டுப் போனாள்.

வலி எடுக்கும் என்பதற்காக பாறையைச் செதுக்காமல் இருந்தால் சிற்பம் எப்படி உருவாகும்? பாறை போல் இறுகிக் கிடப்பவனை உளியாகிய அவள்தான் மெல்ல மெல்ல செதுக்க வேண்டும்.

அந்த முயற்சியில் சில அடிகள் அவள் மீதும் விழலாம் என்பதைப் புரிந்து கொண்டவளாக மிதப்பான பார்வையை மாற்றிக் கொள்ளாமல் அவனோடு கைகோர்த்து கிளம்பினாள்.

‘ஹே சினாமிகா’ திரைப்படம் இன்றைய இளைஞர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மிக நன்றாகவே இருந்தது. ஒரு காட்சியில் தன்னை மறந்தவளாக சிரித்து சீழ்க்கை ஒலி எழுப்பி ரசித்த மனு, கணவன் எப்படி நினைத்துக் கொள்வானோ என்ற பயத்துடன் திரும்பி பார்க்க, அவனோ சுகமான நித்திரையில் இருந்தான்.

ஒருநாள் முடிவதற்குள் இன்னும் எத்தனை அதிர்ச்சிகளைத் தான் தாங்கிக் கொள்ள முடியும்? ‘எப்படி இது சாத்தியம்! கூடியிருக்கும் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் மிதக்கும் நேரம் இவனால் மட்டும் எப்படி தூங்க முடிகின்றது?’ தன் திகைப்பிலிருந்து வெளிவர முடியாமல் அவனையே வெறித்துப் பார்த்தாள் மனு.

நகுலேஷ் தனது நண்பனுடன் ஒதுங்கி விட, ஆதியும் தேஜுவும் அவர்களுக்கு எதிர்புற வரிசையில் அமர்ந்து கொண்டதில் இவர்களின் நிலவரம் யாருக்கும் தெரியவில்லை.

கணவனது ஆசைப்படியே சேலையில் பூத்த சோலையாக தேஜஸ்வினி இருக்க, முக்காடு போட்டுக் கொண்ட ஹூடி டி-சர்ட்டில் வந்திருந்தான் ஆதித்யன்.

“வெயில் காலத்துல ஹூடி எதுக்கு அத்தான்?” புரியாமல் கேட்டவளிடம்,

“வெளியே வரணும் ன்னா இப்படித்தான் டா வருவேன்!” தன் முகத் தழும்புகளின் வேதனையில் கூறினான்.

கணவன் காலையில் வெளியே செல்லத் தடைவிதித்ததன் காரணம் கூட இதற்கு தானோ? என தனக்குள் முடிவெடுத்துக் கொண்டவளாய், ஆறுதலாக அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள் தேஜஸ்வினி.

இராசயணக் கலவையை தாங்கிய காதல் கப்பலாக தேஜு, கணவனின் தோள் சாய்ந்திருக்க, பொறுப்பான மாலுமியாக அவளை அணைத்த வண்ணமே திரைப்படத்தில் லயிக்க முயன்றான் ஆதி. எல்லா நேரமும் முயற்சி திருவினை ஆவதில்லை.

படம் முடிந்து இரவு உணவிற்காக ஹோட்டலுக்கு சென்றவர்கள் திரைப்படத்தை பற்றி அலசத் தொடங்கினர்.

“படம் பிடிச்சதா தேஜுக்கா? சாங்ஸ், டயலாக்ஸ் எல்லாம் நல்லா இருந்ததுல்ல!” நகுலேஷ் கேட்க,

“சினிமாட்டோகிஃராபியும் பெஸ்டா இருந்தது நகுல்!” சிலாகித்தபடி முந்திக் கொண்டான் ஆதி.

பாதிநேரம் சங்கேத பாஷைகளில் மனைவியிடம் உரையாடியது தம்பதிகள் மட்டுமே அறிந்த ரகசியம்.

“படம் பார்க்காம மிஸ்டர்.தேஜஸ்வினிக்கு டிரைனிங் குடுத்தியா தேஜுக்கா!” அருகில் வந்து நகுல் கிசுகிசுக்க, சத்தமே இல்லாமல் தம்பியின் கையில் கிள்ளி அலற வைத்தாள் தேஜு.

“ரைட்டு, உன்கிட்ட நோ மோர் குவஸ்டீன்ஸ். அங்கே எப்படி குட்டியக்கா…. நீ எதுவுமே சொல்லாம இருக்கே?” மனஷ்வினியின் பக்கம் திரும்பினான் நகுலேஷ்.

“எனக்கு மொத்த படமும் பிடிச்சிருந்தது. வெரிகுட் என்டர்டெயினர். ஐ லைக் தட் ஹவுஸ் ஹஸ்பென்ட் கேரக்டர்!” உற்சாகத்துடன் கூறிய மனு, ஆனந்தனைப் பார்க்க அவனோ உணவில் கவனமாக இருந்தான்.

“பரவாயில்லையே… சின்சியரா படம் பார்க்க விட்டுட்டாரா மாமா? உன் தங்கையை பார்த்து கத்துக்கோ தேஜுக்கா!” இருவரையும் வாரிவிட்டு அடுத்த அடியை பரிசாகப் பெற்றுக் கொண்டான் நகுல்.

இதற்காகவாவது சிரிக்கிறானா என கணவனை மீண்டும் மனு பார்க்க, அவனது நிலை அப்பொழுதும் மாறவில்லை. ‘ஜடம்… ஜடம், எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கே!’ புழுங்கித் தவித்தவளாக முகம் வாடிப் போனாள்.

கொஞ்சல்கள் இல்லையென்றாலும் ஏன் என்று கேட்கும்படியான பேச்சும் இல்லாமல் தானே படம் பார்த்து முடித்தாள். அந்த நினைவே அவளை கசக்க வைத்து. அனைவரும் உணவை உள்ளே தள்ளுவதில் மும்முரமாக இருந்ததில் இவளின் வாட்டம் ஒருவருக்கும் புலப்படவில்லை

“என்ன ஆனந்த்? நாங்க எல்லாரும் பேசிட்டு இருக்கோம். நீ மட்டும் ஏன் அமைதியாக இருக்க… படம் உனக்கு பிடிக்கலையா?” ஆதி விசாரிக்க,

“ம்ம்… நாட் பேட். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும். வேணும்ன்னா வீட்டுக்கு போனப்புறம் நிறுத்தி நிதானமா டீடெயில் ரிவ்யூ எழுதிக் கொடுக்கறேன்!” அசிரத்தையுடன் ஆனந்தன் பதில் கூற, அனைவருக்கும் ‘அடச்சே!’ என்றானது.

‘உன்கிட்ட கேட்டேன் பாரு!’ கடுகடுத்தவனாய் ஆதி தலையில் அடித்துக் கொள்ள, கணவனை அமைதியாகப் பார்த்தாள் மனஷ்வினி. இவன் படம் பார்த்த லட்சணம் இவளுக்கு மட்டும்தானே தெரியும்.

“எதுவும் தப்பு பண்ணிட்டேனா க்கா?” நகுல், மனுவின் காதில் கிசுகிசுக்க,

“ச்சு… அதெல்லாம் ஒன்னுமில்ல டா! ஸ்டே ரிலாக்ஸ்!” ஆறுதல் அளித்தாள் மனு.

“இப்படி எல்லாரும் சந்தோசமா சேர்ந்து வெளியே போயிட்டு வர்றதை பாக்கறப்போ ரொம்ப சந்தோசமா இருக்குது கண்ணுகளா! வயசுல சின்னவனா இருந்தாலும் உனக்கு தான்யா நான் நன்றி சொல்லணும். நீ வந்து கூப்பிடலைன்னா இவங்க வெளியே போயிருப்பாங்களான்னு தெரியல!” வீட்டிற்குள் நுழைந்ததும் நகுலேஷை பாராட்டி மகிழ்ந்தார் பெரியவர்.

இரண்டு ஜோடிகளுடன் அவர்களின் மாளிகைக்கு சென்ற பிறகே நகுலேஷ் அங்கிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டான்.

“நேரமாயிடுச்சு… இங்கேயே தங்கிட்டு போ தம்பி!” பெரியவரின் சொல்லிற்கு, சகோதரர்கள் மறுப்பு கூறவில்லை என்றாலும், ‘இங்கேயே தங்கிவிடு!’ என அவர்கள் மனதாரச் சொல்லவும் இல்லை.

நகுலேஷும் இதையெல்லாம் எதிர்பார்த்து வரவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு ஒதுக்கம் அந்தப் பணக்கார மாளிகையில் இறுகிக் கிடப்பதை உணர்ந்து கொண்டான்.

கணவர்களின் எண்ணத்தை அறிந்து கொள்ளாமல் மனைவிகளுக்கும் தம்பியை இங்கேயே தங்கச் சொல்லி வற்புறுத்துவதில் சற்றும் விருப்பமில்லை.

சகோதரிகள் இருவரும் மனமே இல்லாமல் அவனுக்கு விடை கொடுத்தனர்.

“ஆட்டோல போ… நகுல்!”

“போய் சேர்ந்ததும் மெசேஜ் போடு டா!” இரு பெண்களும் ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பி வைக்கும் பொழுது, இருவருக்கும் தொண்டையடைத்துக் கொண்டது.

பிறந்த வீட்டின் பிரிவாற்றமை திருமணம் முடிந்த பிறகும் தொடரும் என்பதை தெளிவாகவே உணர்ந்து கொண்டனர் பெண்கள்.

தேஜுவின் முகச் சுருக்கத்தை வைத்தே ஆதரவாக அவளின் தோள் அணைத்துக் கொண்டு மேலே அழைத்துச் சென்று விட்டான் ஆதித்யன்.

‘தன்னையும் கணவன் அப்படி அரவணைப்பாய் அழைத்துச் சென்றால் நன்றாக இருக்குமே!’ ஏக்கத்துடன் மனஷ்வினி திரும்பிப் பார்க்க, அவனோ ஒற்றையாய் லிஃப்ட்டில் ஏறிக் கொண்டிருந்தான்

“அவன் விவரமில்லாத முரட்டு கொழந்த கண்ணு! மெதுமெதுவா சரியாகிடும். மனசுல பாரம் ஏத்திக்காம போயி தூங்கு கண்ணு!” பேத்தியின் கையை அன்புடன் பற்றி ஆறுதல் அளித்தார் அருணாச்சலம்

‘ம்ம்… அப்படிதான் போல, விட்டுத்தள்ளு மனு! எல்லாம் உள்ளே அமுக்கி வைச்சுப்போம் வேற வழி?’ தனக்குள் சமாதானம் செய்து கொண்டவளாக புன்னகையுடன் மேலே படியேறிச் சென்றாள் மனஷ்வினி.

தங்கள் அறையில் குளித்து புது மலராக வந்த மனைவியை அருகில் அமர்த்தி வைத்துக் கொண்ட ஆதி, அவள் கையில் ஒரு டூரிசம் கேட்லாக்கை திணிக்க, ஆச்சரியத்துடன் கணவனைப் பார்த்தாள் தேஜு.

“மதியம் ஹனிமூன் பத்தி சொன்னேன்ல்ல… எங்கே போகணும்ன்னு நீயே செலக்ட் பண்ணு!” எந்தவித ஆராவாரமும் இன்றி அமைதியாய் அவன் சொல்ல, சந்தோசத் திகைப்பில் ஆழ்ந்தவளுக்கு சட்டென்று இளையவர்களின் ஞாபகம் வந்தது.

“ஆனந்தன்கிட்ட கேட்டு நீங்களே முடிவு பண்ணுங்க அத்தான். இன்னைக்கே அவர் செம கடுப்புல இருந்தாரு!”

“அவன் சுபாவமே அப்படிதான் தேஜுமா… கேட்டாலும் வேணாம்னு முரண்டு பிடிப்பான். அதட்டி மிரட்டி கூட்டிட்டு போக வேண்டியதுதான். நீயும் மனுவும் சேர்ந்து இடமும் தேதியும் முடிவு பண்ணிச் சொல்லுங்க!”

“அவர் ஏன் இப்படி இருக்காரு?” தயக்கத்துடன் தேஜு கேட்க,

“சின்ன வயசுல இருந்தே யாரும் இல்லாம தனியா வளந்துட்டான் அதான்…” என்றவன் அவளின் மடி மீது தலை சாய்த்தான்.

“உங்களுக்கு எங்கே போக இஷ்டம்னு சொல்லுங்க அத்தான். மனுகிட்ட பேசும்போது சொல்றேன்!” மனைவியின் ஆர்வத்தில் கணவன் சற்றும் பங்கு கொள்ளவில்லை.

“இந்த ஹனிமூன் பிளானே உங்களுக்காகத் தான்டா! நாங்க வருசத்துல பாதிநாள் உலகம் சுத்துறவங்க… எனக்கு எப்படின்னாலும் ஓகே!” என்றவனின் பார்வை கணவனின் பணியைத் தொடங்கியது.

“அப்போ… உங்க தம்பிக்கும் இந்த ஏற்பாடு பிடிக்குமா?”

“இது அவன்கிட்ட கேக்க வேண்டிய கேள்வி. இப்படி லைட் எரியவிட்டு நீ பேசிட்டு இருக்கிறது இப்ப எனக்கு பிடிக்கல.” மோகப்பார்வையில் ஆதி சொல்ல, புரிந்து கொண்டவளாய் பட்டென்று விளக்கை அணைத்தாள் தேஜஸ்வினி.

உயிரையே உருக வைக்கும் மென்மையான தீண்டலில் தன்னை மறந்தே கணவனிடம் சரனடைந்தாள் தேஜு. எந்நேரமும் இறுக்க முகம் காட்டுபவன், கட்டிலில் சாதுப்பசுவாக மாறி காரியம் சாதித்துக் கொள்வது எப்படியென்ற கேள்வி அவள் மனதில் எழாமல் இல்லை

கணவன் மனைவிக்குள் எத்தனை கருத்து வேற்றுமை எழுந்தாலும் எல்லாவற்றையும் சுக்குநூறாய் உடைக்கும் வலிமை, காதலோடு சேர்ந்த காமத்தில் இருவரும் ஒரேசேர மோகித்திருக்கும் நேரத்தில் மட்டுமே சாத்தியம் என்பது இயற்கையின் நியதி.

தன் மனத்தின் நிராசைகளை எல்லாம் மறந்தவளாக கணவனின் கரங்களில் குழைந்தாள் தேஜூ. இதே கண்ணாமூச்சி ஆட்டத்துடன் காலம் முழுதும் பயணித்தால் அனைத்தும் நலம்… நலமே!

‘கையகம் தொட்டும் மெய்யகம் தொட்டும்

கட்டிப் பிடித்துக் கையோடு கையை

இட்டுப் பிணைத்தும் ஈந்தனன் முத்தம்!

முத்தம் கொண்டதால் மூண்டது காமம்!

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!