நினைவு தூங்கிடாது 1.2
நினைவு தூங்கிடாது 1.2
நிழல்
ஒரு கொடியில் இரு மலர்கள்
அழகாக புத்து குலுக்கும்
என்றும் உதிராத பந்தம்
சகோதரத்துவம் அன்றி
என்னவென்று நான் சொல்ல
பசுஞ்சோலை கிராமம் (கற்பனை ஊர். உன்மையா அப்படி ஒரு ஊர் இருந்தால் ஒப்பீடு செய்ய வேண்டாம். இது முழுவதும் என் கற்பனையே)
பெயரைப் போலவே பசுமையான கிராமம். வானுயர்ந்த கட்டிடங்கள் இல்லை. அங்கு சுற்றுசூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. உதட்டில் புன்னகையுடன் நெஞ்சத்தில் வஞ்சத்தை வைத்து பேசும் கபடமனிதர்கள் இல்லை.
அங்கு இருந்தது எல்லாம் சிறு சிறு மணல் வீடுகள். விவசாயம் மட்டுமே அங்கு முக்கிய தொழிலாக இருந்ததால், எங்கு திரும்பினாலும் வயல்களும் தோப்புகளும் செழித்து வளர்ந்து, அந்த கிராமத்தை பசுமையாக வைத்திருந்தது. இயற்கையை பாதிக்கும் தொழிற்சாலைகள் அங்கே இன்னமும் நுழையாததால், இயற்கை காற்றும், சுத்தமான நீரும் உடல் ஆரோக்கியத்தை கொடுத்தது.
சூதுவாது தெரியாத வெள்ளந்தி மனிதர்கள்.’இந்த காலத்தில் கூட இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பார்களா?’ என வியக்கும் வண்ணம் இருந்தார்கள் அங்கிருந்த மனிதர்கள். நம் நகரங்களில் யாரிடமாவது வழி கேட்டால், தெரிந்தாலும் ‘தெரியாது’ என்று சொல்வார்கள், அல்லது ‘அங்க இருக்குன்னு’ ஒரு அடையாளம் சொல்லி சென்றுவிடுவார்கள். ஆனால் கிராமத்திலோ, வீட்டிற்கு வழி கேட்டால்,”அட அது நம்ம அண்ணன் வீடுதான், மாமா வீடுதான் வாங்க” எனக் கூட்டி சென்று வீட்டிலேயே விட்டு விடுவார்கள்.
உறவாக இல்லாவிடினும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக உதவிக்கொண்டு, ஒரு வீட்டில் விசேஷம் என்றால் தங்கள் வீட்டிலே விசேஷம் நடப்பதுபோல் சந்தோஷித்து, அதே நேரம் துக்கம் என்றாலும் தன் வீட்டிலேயே துக்கம் நடந்ததுபோல் கவலையில் ஆழ்ந்து வடியும்.
அப்படிப்பட்ட பசுமையும், அன்பும் நிறைந்த கிராமம் பசுஞ்சோலை.
அந்த அழகான கிராமத்தை மேலும் அழகாக, தன் சுட்டித்தனத்தோடு வண்ணத்துப்பூச்சியாக சிறகடித்தாள் ஒரு பாவை. அவள் பதினேழு வயது பருவச் சிட்டு. அன்புக்கு அடி பணிபவள். ஏதாவது சேட்டை செய்து, யாரிடமாவது மாட்டி, தன் அன்னையிடம் திட்டு வாங்கிக் கொள்வதே, அவளின் முழு நேர வேலை.
அவளின் பகுதிநேர வேலை, தாங்கள் எழுதி இருந்த பன்னிரண்டாவது பரிட்சை முடிவுக்காக காத்திருப்பது.
இன்று என்ன வம்பை வாங்கி வந்திருக்கிறாள் அந்த பெண் பாவை? என்று பார்க்கலாமா?
“ஏண்டி அம்மு இப்படி பண்ணுற? உன் வயசு என்ன? அந்த பொடிசுகள் வயசு என்ன? அதுக கூட சேர்ந்து கிரிக்கெட் விளையாடுற. அது கூட பரவாயில்லைன்னு விட்டா, கிரிக்கெட் விளையாடி, அந்த பார்வதியோட மண் குடத்தை உடைச்சு வச்சிருக்க. அவ என்கிட்ட வந்து சண்டை போட்டுட்டு போறா. உன்னை என்ன பண்ணறது?” என்றார் அந்த நாற்பது வயது பெண்மணி ஆதங்கமாக.
“போ மா! அதுதான் கடைசி பால். சூப்பரா சிக்ஸ் போகவேண்டியது, இந்த பார்வதி அக்கா வந்ததால மிஸ் ஆயிடுச்சு. அவங்க மட்டும் வராமல் இருந்திருந்தால் என்னோட டீம் தான் வின் பண்ணியிருக்கும்.” என சலித்து கொண்டாள்.
“அடி கழுத! அந்த பொடுசுகளோட சேர்ந்து வம்பை வாங்கி வந்துட்டு, உன் மேல தப்பே இல்லாத மாதிரி பேசறயா?” என முறைத்தார்.
அவளும் அசட்டு புன்னகையுடன், இவர் முகம் பார்த்து ‘ஈ ஈ’ என இழித்து வைத்தாள். அவளது இழிப்பில் இவரது கோவம் ஏறியது.
கோபத்துடன்,”இனி அந்த பொடிசுகள் கூட சேர்ந்த, அடி வெளுத்து கட்டுவேன். ஜாக்கிரதையா இருந்துக்கோ.”
“அம்மா! என் ப்ரெண்ட்ஸுகளை பொடிசுகள்ன்னு சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும்.” என சீறினாள். அவள் நண்பர்கள் என குறிப்பிடுவது, எட்டிலிருந்து பன்னிரண்டு வயது வரை இருக்கும் நண்டு சிண்டுகளை.
“அடி செருப்பால! கோவம் வருமாம்ல கோவம், நாலு நாள் சோறு போடாம பட்டினி போட்டா தானா வழிக்கு வருவ.”
“ஆசை தோசை. நீ சோறு போடலைனா நான் பட்டினியா கிடப்பேனா?”
“பட்டினி கிடக்காம என்னடி பண்ணுவ? யார் உனக்கு சோறு போடுவா?”
“கம்பெனி சீக்ரெட் வெளிய சொல்லக் கூடாது. சாமி குத்தமாகிடும். அப்புறம் சாமி எனக்கு சாப்பாட்டை கட் பண்ணிடும்.” என அன்னையின் காதில் ரகசியம் பேசினாள்.
அதைக் கேட்ட அன்னைக்கு சிரிப்பு எட்டிப் பார்த்தது, வந்த சிரிப்பை மறைத்து,”இப்ப சொல்லல, நிஜமாவே இன்னிக்கு உனக்கு சோறு கட்டு” என்ன சொன்னால் வழிக்கு வருவாள் என தெரிந்த அன்னையாய் அவளுக்கு கிடுக்குப்பிடி போட்டார்.
முகத்தை தொங்க போட்ட பெண்,”நீ சாப்பாடு போடலைன்னா என்ன? என்னோட செல்ல அக்கா எனக்கு போடுவா.” என ஜெகஜோதியா, தன் இரட்டை சகோதரியை மாட்டி வைத்தாள்.
அன்னையின் முகத்தில் பீதி படர்ந்தது.
“ஏண்டி நீ கெட்டது பத்தாதுன்னு, அவளையும் கெடுக்க பார்க்கிறாயா? அவதான் நல்ல பொண்ணா எனக்கு ஒத்தாசையா இருக்கா. அவளையும் உன்ன மாதிரியே மாத்திடாத.”
“ஐயோ அம்மா! இன்னும் உலகம் தெரியாத சின்னப் பொண்ணாவே இருக்கியே. அதுக்கெல்லாம் அவ சரிப்பட்டு வரமாட்டா. இந்த வேலை, ஒன் அண்ட் ஒன்லி அமிர்தாவுக்கு மட்டும்தான் சொந்தம்.”
அந்தப் பருவ சுட்டி சிட்டின் பெயர் அமிர்தா. அவளின் இரட்டை சகோதரி பிருந்தா. ஐந்து நிமிடம் முன்னே பிறந்த பிருந்தா தான் அமிர்தாவிற்கு மூத்தவள். இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பாசத்தால் பின்னப்பட்ட கூடு.
பிருந்தா, அமிர்தாவின் அன்னை கஸ்தூரி. இவர்களின் எட்டு வயதில், வயலுக்கு சென்ற தந்தை பாம்பு கடியால் உயிரற்ற சடலமாக வீடு திரும்பினார்.
கணவனின் இழப்பில் துக்கத்தில் ஆழ்ந்து விடமுடியாமல், அறியா சிறு மலர்களாக இருந்த பிருந்தா, அமிர்தாவின் பொறுப்பை மனதில் கொண்டு, இந்த ஒன்பது வருடங்களாக கஸ்தூரி வயல் வேலைகள், வீட்டு வேலைகள் என செய்து தன் பெண்களை காத்து வருகிறார்.
தந்தையிடம் அதிக நெருக்கம் கொண்டிருந்த அமிர்தா, அவரின் இழப்பை தாங்க முடியாமல் தன் கவலைகளை மறக்க, சுட்டிப் பெண்ணாக மாறினாள்.
ஒரு இழப்பால் சுட்டிப் பெண்ணாக மாறிய பெண், இன்னொரு இழப்பால், இல்லை இல்லை இன்னும் மூன்று இழப்பால், இறுக்கமான பெண்ணாக மாறப்போவது காலத்தின் கட்டாயம்.
அமிர்தா எந்தளவுக்கு சுட்டி தனமும், துறுதுறுப்பும் நிறைந்தவளோ? அதற்கு நேர் எதிர் பிருந்தா, அமைதியும் நிதானமும் நிறைந்தவள்.
இருவரும் அழகில், ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்றாலும், அமிர்தாவின் விழிகளில் இருக்கும் வசீகரம் அவளைப் பேரழகாக காட்டியது. கஸ்தூரிக்கு தன் பெண்களின் அழகில் பெருமை இருந்தாலும், இந்த கால மனிதர்களை நினைத்து பயமும் கொண்டார். தூணுக்கு புடவை கட்டினாலே உற்றுப் பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில், இந்த அழகு பெண்களை எப்படி காப்பாற்றுவது என்ற கவலை.
அவரது பயம் நிஜம் என்பதை நிரூபிக்க, ஒரு சூறாவளி அவர்கள் வாழ்வை சுழற்றி அடிக்க போகிறது.
அவர் மகள், அதே அழகை பணயமாக வைத்து, இந்த உலகத்தை எதிர்கொள்ளப் போவதை அறியாமல் போனார்.
இருவரும் தன் பன்னிரண்டாவது வகுப்பை, அந்த கிராமத்திலிருந்த அரசு பள்ளியில் முடித்துக்கொண்டு, இப்போது பரீட்சை முடிவுக்காக காத்திருக்கும் பருவ மங்கைகள். இதுவரை உள்ளூரிலேயே இருந்த பெண்கள், கல்லூரி வாழ்க்கையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
காலம் அவர்களுக்கு என்ன வைத்து காத்திருக்கிறதோ?
†††††
“என்னம்மா சொல்றீங்க? நான் அந்த கிராமத்துக்கு வரணுமா? அதுவும் பத்து நாள்…” என தன் நெஞ்சில் கையை வைத்து அமர்ந்துவிட்டான் ஈஸ்வர்.
“ராஜா ஊர்ல தாத்தா பாட்டி எல்லாம் உன்னை ஆசையா எதிர்பார்ப்பாங்க. இந்த வருஷமாவது திருவிழா அவங்க கூட கொண்டாடலாம்” என அவனின் அன்னை கெஞ்சிக் கொண்டிருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு தன் பிறந்த வீட்டிற்கு சென்று தங்க போகும் ஆர்வம் அவரிடம்.
கணவனின் வேலை பளுவினால், பெற்றோர்களுடனான போக்குவரத்து குறைந்துவிட்டது. இந்த வருடம் அவர் வெளியூர் சென்றதால், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சொந்த கிராமத்திற்கு செல்ல மகனை கெஞ்சிக் கொண்டிருந்தார்.
அன்னையின் மீது பாசம் கொண்ட ஈஸ்வர், அவரின் ஆர்வத்தைக் கண்டு, அவனின் ஸ்ருதி கொஞ்சம் இறங்கியது.
“மா சொன்னா புரிஞ்சுக்கோங்க. எனக்கு நிறைய வேலையிருக்கு. அதை விட்டுட்டு அந்த கிராமத்தில பத்து நாட்கள் எல்லாம் இருக்க முடியாது.”
“சரிடா பத்து நாள் கூட வேண்டாம். ஒரு ஒரு வாரம் இருந்துட்டு வந்துடலாம். எவ்வளவு வருஷம் ஆச்சு நம்ம சொந்தங்களை பார்த்து. எனக்கும் அவங்க கூட தங்கனும்னு ஆசை இருக்காதா?” என அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, பொய்யாக மூக்கை சிந்தினார்.
அன்னையின் நடிப்பு புரிந்தாலும், அவரின் ஆசையை,’எப்படி மறுப்பது?’ என மருகி,”ஓகே மா நான் வரேன். சப்போஸ் எனக்கு புடிக்கலைனா, நான் திரும்ப வந்துகிட்டே இருப்பேன். நீங்க ஒரு வாரம் இருந்தாலும் சரி, பத்து நாள் இருந்தாலும் சரி, அது உங்க விருப்பம். என்னை அங்க இருக்க சொல்லி கட்டாயப் படுத்தக்கூடாது” என கட்டளையோடு சம்மதம் தெரிவித்தான்.
எப்படியோ வந்தால் போதும் என்ற மனநிலையிலிருந்த அவன் அன்னை,”ரொம்ப தேங்க்ஸ் டா தம்பி. நான் போய் பயணத்துக்குத் தேவையான டிரஸ் எடுத்து வைக்கிறேன். நீயும் உனக்கு வேண்டியதை எடுத்துக்கோ. அப்புறம் அங்க வந்து லேப்டாப் எடுக்கல, மொபைல் சார்ஜர் எடுக்கல, அப்பிடின்னு சொல்ல கூடாது.” என கட்டளையோட கூறி செல்ல திரும்ப
“அம்மா நில்லுங்க” அவரின் நடையை தடை செய்தான்.
“திருவிழாக்கு தான் இன்னும் ஒரு வாரம் இருக்குதே. இப்பவே எதுக்கு ரெடி பண்றீங்க”
“திருவிழா அன்னைக்கா போவாங்க. முன்னாடியே போனா தான் விசேஷமா இருக்கும். நீ வந்து பார். அப்பதான் உனக்கு புரியும். இன்னிக்கு ராத்திரி நாம கிளம்புறோம்.” என சொல்லி ஓடியே விட்டார். அங்கு நின்றால் தன் மகன் மீண்டும் ஏதாவது தடை சொல்வான் என அறிந்தவராக.
தன் தலையில் கையை வைத்து அமர்ந்துவிட்டான், தொழில் வட்டாரத்தில் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் ஈஸ்வர்.
அவன் மேற்படிப்பை வெளிநாட்டில் முடித்து, இந்தியா திரும்பியவுடன், தன் தொழிலில் தனக்கு உதவியாக வரும்படி அழைத்த தந்தையின் வேண்டுகோளை மறுத்து,”குடும்பத் தொழில் எனக்கு வேண்டாம். நானே என் அடையாளத்தை உருவாக்கிக்கறேன்” என சொந்தமாக தொழில் தொடங்கி, வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்.
அவனின் கல்லூரித் தோழனின், உதவியுடன் தொழில் வட்டாரத்தில் கால் பதித்திருந்தான். அவனின் ப்ராஜெக்ட் அனைத்தும் சரியான நேரத்தில், அதே சமயம் மிகவும் நேர்த்தியாகவும் முடித்து விடுவான். அதனால் அவனுக்கு ப்ராஜெக்ட்கள் குவிய ஆரம்பித்தது.
அதில் பொறாமை கொண்டு அவனுக்கு வரும் ப்ராஜெக்ட்களை, தட்டிப் பறிக்க என ஒரு கூட்டம் உருவாகியது. அதை அறியாத ஈஸ்வர் அனைவரையும் நம்பி பொறுப்பை ஒப்படைத்து முதல் வருடத்திலேயே அடிபட்டு போனான்.
நஷ்டம் ஏற்பட விழித்துக்கொண்டான். இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தால் அவன் ஈஸ்வரே அல்லவே.
அழிக்கும் கடவுள் ஈஸ்வரனின் அவதாரத்தை எடுத்தான்.
தனக்கு துரோகம் செய்பவர்களை, இல்லை இல்லை துரோகம் செய்ய நினைப்பவர்களையே உரு தெரியாமல் அழித்து விடுவான். அவனின் குறைந்தபட்ச தண்டனையே, கைகால்களை முடக்கி வீட்டில் அடைப்பது. அவனது அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லை. அனைவருக்கும் அவன் ஒரு சிம்ம சொப்பனம்.
அந்த ஒரு வருடத்திலேயே பல துரோகங்களை சந்தித்து அவன் இறுகிப் போயிருந்தான். இப்போது அவன் தொழில் வட்டாரத்தில் காட்டும் முகமே வேறு.
இப்படிப்பட்ட சிம்மமூர்த்தி தன் அன்னையிடம் தன் மறுப்பை கூற முடியாமல் தன் தலையில் கையை வைத்து அமர்ந்திருந்தான்.
சிம்ம சொப்பனமாக ஈஸ்வரன்.
அமைதியின் சொரூபமாக பிருந்தா.
துறுதுறு சுட்டிப்பெண் அமிர்தா.
அவனின் பசுஞ்சோலை கிராம வரவு, யார் வாழ்வை எப்படி திருப்பி போட போகிறது? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.