மயங்கினேன் பொன்மானிலே – 23

பொன்மானிலே _BG-ba06f913

மயங்கினேன் பொன்மானிலே – 23

அத்தியாயம் – 23

வம்சி சரேலென்று விலகியதும், “நான்…” அவள் மென்று விழுங்கினாள். “நான் உங்களை காயப்படுத்தணுமுன்னு இதை சொல்லலை” அவள் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. சுக்குநூறாக உடைந்திருந்த அவன் மனம் அவள் கண்ணீரை துடைக்கவே விழைந்தது. ஆனால், அவன் கரங்கள் அவள் கேட்ட கேள்வியின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளி வரமுடியாமல் ஸ்தம்பித்து தரையை பார்த்தபடி நின்றது.

“நான்… எங்க வீட்டுக்கு போகட்டுமா?” அவள் கேட்க, அவன் அங்கிருந்த சோபாவில் மொந்தென்று அமர்ந்தான். ‘நான் என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்? என் குழந்தையை என்னை நம்பி…’ மேலும் சிந்திக்க முடியாமல் அவன் விரல்கள் அவன் முகத்தை மூடிக்கொண்டன. அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள் மிருதுளா. “நான் போயிட்டு சீக்கிரம் வந்துடறேன்” அவள் குரல் அவனிடம் கோரிக்கையாக ஒலிக்க, அவன் அவளை கூர்மையாக பார்த்தான்.

“என்னை சந்தேகப்படுறியா பங்காரு ?” அவன் கேட்க, எம்பி அவன் வாயை மூடி மறுப்பாக தலையசைத்தாள். “நான் உங்களை சந்தேகப்பட்டால், என்னை நானே சந்தேகப்படுற மாதிரி” அவள் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். அவன் அவள் கைகளை பற்றினான். “அப்புறம் ஏன் பங்காரு போகணும்னு சொல்லுற?” அவன் கேட்க, “எனக்கு பயமா இருக்குங்க” அவள் அவன் அருகே அமர்ந்து கொண்டு, அவன் சட்டையை இறுக பற்றி கொண்டு அவன் கழுத்தின் வளைவுப்பகுதியில் தன் முகத்தை பொதித்துக் கொண்டு கதறினாள்.

அவன் அவளை இடையோடு அணைத்துக்கொண்டான்.  “என்னை பார்த்து பயப்படுறியா பங்காரு?” அவன் குரல் உடைந்தே ஒலித்தது. “இல்லைங்க…” அவள் மறுப்பாக தலை அசைக்க, அவள் தலை அவன் கன்னம் தொட்டு தொட்டு ‘இல்லை இல்லை…’ என்றே கூறியது. “என்ன பயம் பங்காரு உனக்கு? நான் அப்ப தெரியாம பண்ணிட்டேன் பங்காரு. திரும்பவும் அப்படி பண்ணுவேன்னு நினைக்கறியா பங்காரு. நான், ஏன் அப்படி…” அவன் ஆரம்பிக்கவும், அவன் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல் அவன் முகத்தை பார்க்கும் திராணி இல்லாமல், அவனுள் பொதிந்து கொண்டு அவன் அதரங்களை மூடினாள்.

“எனக்கு பழைய கதை வேண்டாம். அதை கேட்கவே பிடிக்கலை.” அவள் குரல் சற்று கோபமாக, அழுத்தமாக ஒலித்தது. “அப்புறம் எதுக்கு என்னை விட்டுட்டு போகணும்?” அவன் அவள் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தி கேட்டான். அந்த ஒற்றை விரல் அவன் அழுத்தத்தை கூற, “பயமா இருக்கு” அவள் கூற, “என்ன பயம்?” அவன் அவள் கண்களை பார்த்தான். அவள் முகத்தை திருப்பிக்கொள்ள முயல, “எனக்கு தெரியணும் பங்காரு” அவன் குரலில் உறுதி இருந்தாலும், அவன் கண்கள் கெஞ்சியது.

“என் மனசு படபடன்னு அடிச்சிக்குது. பழைய நியாபகம் வருது. நினைக்க கூடாதுனு தான் நினைக்குறேன். நீங்க திரும்ப அப்படி எல்லாம் பண்ணமாடீங்கன்னு எனக்கு தெரியும். ஆனால், என்னை அறியாமல் உங்களை பார்க்கும் பொழுது  ஒரு பதட்டம் வருது. நான் உங்களை ரொம்ப காயப்படுத்திருவேன்னோனு ரொம்ப ரொம்ப பயமா இருக்குதுங்க” அவள் பரிதாபமாக கூற, அவள் தலை கோதி அவன் புன்னகைத்தான். வலியோடு வந்த விரக்தி புன்னகை. ஆனால், தன் மனைவியின் கூற்று அவனுக்கு வலித்தாலும் அவனை வருடத்தான் செய்தது.

“பார்த்துக்கலாம்  பங்காரு. நீ என் கூடத்தான் இருக்க போற. உன் அம்மா, அப்பா கூடவும் இருக்கணும்னு தோணுச்சுனா, அவங்களையும் இங்க வர சொல்லு” அவன் கூற, “இல்லைங்க…” அவள் மறுக்க, அவன் இடைமறித்தான். “பங்காரு, ப்ளீஸ்… வளைகாப்பு முடிஞ்சி உன்னை கூட்டிட்டு போய்டுவாங்க. அது வரைக்கமாவது நீ என் கூட இருக்க வேண்டாமா?” அவன் அவள் தோள் மீது கைபோட்டு புருவங்களை உயர்த்தினான்.

“…” அவள் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்தாள். “வேண்டாம்ங்க. நமக்குள்ள இப்ப தான் எல்லாம் சரியாகுற மாதிரி இருக்கு. இந்நேரம் நான் உங்களை காயப்படுத்தி, எதையும் கெடுக்க விரும்பலை.” அவள் உறுதியாக கூற, “என் பங்காரு, என்னை எப்படி காயப்படுத்தினாலும் சரி, இந்த வம்சி தாங்கிப்பான். ஆனால், பங்காரு இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க மாட்டான்.” அவனும் உறுதியகாவே கூறினான்.

அவள் முகம் வாடியிருக்க, “நீ இப்ப சந்தோஷமா இருக்கணும் பங்காரு. உனக்கு என்ன வேணும் சொல்லு?” அவன் கனிவாக கேட்டான். “அத்தை மாமாவை இங்க வர சொல்லுவோமா?” அவன் கேட்க, “வேண்டாம்ங்க, கொஞ்சம் நாள் போகட்டும். டாக்ட்ர் கிட்ட செக் பண்ணிட்டு அம்மா, அப்பா கிட்ட சொல்லுவோம். போன தடவையே எல்லாருக்கும் ஏமாற்றமாகிருச்சு” அவள் கூற, அவன் தலையசைத்துக் கொண்டான்.

அவர்களுக்கு இடையே சில நிமிட மௌனம்.

“உங்க அக்காவுக்கு இன்னும் குழந்தை பிறக்கலையே?” அவள் அவனை பார்த்துக் கேட்க, “அது தான் அக்கா இங்க வரலைன்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் என்ன?” என்றான் அவன் அசட்டையாக. “ஓ! அது தான் நாம, குழந்தை பெத்துக்கலாமுன்னு சொல்லறீங்களா?” அவள் அச்சத்தோடு கண்களை விரித்தாள். “பங்காரு…” அவன் அவளை பரிதாபமாக அழைத்தான்.

“உங்க அக்கா குழந்தை பிறந்து நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டா, நம்ம குழந்தை வேண்டாமுன்னு சொல்லிருவீங்களா?” அவள் பதட்டமாக எழுந்து நின்று கேட்க, அவன் அவளை யோசனையாக பார்த்தான். அவளையும் மீறிக்கொண்டு அவளை தொற்றி கொள்ளும் அச்சத்தையும், பதட்டத்தையும், அவனால் கண்கூடாக பார்க்க முடிந்தது. அவள் செய்கையில் அவன் மேல் அன்பு கொண்ட உள்ளம் வலித்தாலும் கோபம் கொள்ளவில்லை. அவளை புரிந்து கொள்ளவே துணிந்தது.

“பங்காரு…” அவளை இழுத்து தன் மடி மீது அமர வைத்தான்.  “குழந்தை பிறந்த பிறகு அக்கா இங்க வந்தா, ஒரு வேலையாள் போட்டு அக்கா குழந்தையை பார்த்துக்கலாம். ஆனால், அக்கா வரமாட்டாங்க” அவன் அவள் கைகளை பிடித்து உறுதியாக கூறினான். “அப்பவே இப்படி யோசிச்சிருக்கலாமில்லை? அப்ப மட்டும் அக்கா குழந்தையை பார்க்கனுமுனு சொன்னீங்க?” அவள் அவன் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டு சந்தேகமாக கேட்க, அவன் விழிகள் அவளை கூர்மையாக பார்த்தன.

 “நான் இப்படி எல்லாம் உங்க கிட்ட கேட்கணும்னு நினைக்கலை. ஆனால், கேட்கலைன்னா என் மனசு வெடிச்சிரும் போல இருக்கு.” அவள் அவன் மேல் வாகாக சாய்ந்து கொண்டு விளக்கம் கொடுத்தாள்.

“தெரியலை பங்காரு. நான் என்னவோ நினைச்சி பண்ணிட்டேன். அதை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை. ஆனால், தப்புனு உன் வருத்தம், ஏக்கம் பார்த்து புரிஞ்சிக்கிட்டேன். ஆனால், நான் திரும்ப அந்த மாதிரி தப்பு பண்ணவே மாட்டேன்” அவன் அவள் முகம் பார்த்து கூற, “அது எனக்கு தெரியும்” அவள் விழிநீர் அவனை தொட்டது.

 “எதுக்கு அழற பங்காரு?” அவன் கேட்க, “தெரியலை. நான் என்னவோ நினச்சேன். ஆனால், என்னன்னவோ நடக்குது” அவள் கூற, “என்னை விட்டுட்டு போகலாமுன்னு தானே நினைச்ச?” அவன் இப்பொழுது கேலியாக கேட்க, “என்னை விடற ஆளா நீங்க?” செல்ல கோபத்தோடு அவன் மார்பில் அவள் குத்த, அவன் அவள் செய்கையை ரசித்து சிரித்தான்.

***

மருத்துவமனையில்.

              வம்சிக்கு தனக்கு தெரிந்த மருத்துவரிடம் அவளை அழைத்து வந்திருந்தான். மிக பெரிய மருத்துவமனை, பத்மப்ரியாவும் அவரிடம் தான் பார்க்கிறாள்.

     மருத்துவருக்காக காத்திருந்த வேளையில், “போன தடவை நீங்க இங்க கூட்டிட்டு வரலையே. முதலிருந்தே நீங்க…” அவள் பட்டென்று பேச ஆரம்பித்துவிட்டு, தன் பற்கள் இதழை அழுத்த தன் வாயை இறுக மூடிக்கொண்டாள். அவன் கண்கள் அவளை வலியோடு பார்த்தன. தன் மூச்சை நிதானித்து கொண்டு, அவள் கைகளை அவன் கைகளுக்குள் பொதித்து கொண்டான். “எனக்காக இல்லை. உனக்காக, நம்ம குழந்தை நல்லதுக்காக… நீ பழசை எல்லாம் யோசிக்க கூடாது. சரியா?” அவன் அன்பாக அக்கறையோடு கேட்டான். அவள் தலையசைத்துக் கொண்டாள்.

அதற்குள் மருத்துவர் அழைக்க, இருவரும் உள்ளே சென்றனர். மருத்துவர், சற்று வயது முதிர்ந்த பெண்மணி. அவர் வயதும் பேச்சும் செயலும் அவர் அனுபத்தை கூறியது.மருத்துவர் மிருதுளாவை பரிசோதித்தார். அதன் பின் அவளை வேறு சில பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, வம்சியை பார்த்தார்.

“வம்சி…” அவர் நட்போடு பேச ஆர்மபித்தார். “இப்ப தான் அபார்ஷன் ஆகியிருக்கு. அதுவும் நீங்க அப்ப என்கிட்டே வரலை போல…” அவர் நிறுத்த, வம்சி தர்மசங்கடமாக அவரை பார்த்தான். “இல்லை, நீங்க வந்திருந்தா நான் உங்களை கொஞ்சம் நாள் வெயிட் பண்ண சொல்லிருப்பேன். அபார்ஷன்க்கு அப்புறம் யூட்ரஸ் ரொம்ப வீக்கா இருக்கும். நீங்க கொஞ்சம் பொறுமையா குழந்தை பிளான் பண்ணிருக்கலாமே. மிருதுளா உடம்பு தாங்கணுமில்லையா?” அவர் கேட்க, வம்சி அவரை புரியாமல் பார்த்தான்.

‘சின்ன புள்ளி…’ அவன் மிருதுளாவிடம் கூறிய வார்த்தை இப்பொழுது அவனுக்கு நினைவு வந்தது. ‘ஒரு சின்ன புள்ளிக்கு பின் இதனை சிக்கலா?’ அவன் கண்கள் இப்பொழுது அப்பட்டமாக அச்சத்தை வெளிப்படுத்தியது. மருத்துவர் இப்பொழுது மருத்துவ ரீதியாக ஏதேதோ பேச, அவனுக்கு உலகமே சுற்றியது.  அவர் பேச பேச அவன் இப்பொழுது பரிதாபமாக தலை அசைத்தான்.

‘எல்லாரும் கல்யாணம் செய்கிறார்கள். எல்லாருக்கும் குழந்தை பிறக்கிறது. இது தானே எனக்கு தெரிந்த விஷயம். எனக்கு அம்மா இல்லை. அக்கா, சிந்துவை உண்டான பொழுது ரொம்ப கஷ்டப்பட்டா. அப்ப, தான் மாமா அவளை தாங்க ஆரம்பிச்சாங்க. நானும், என் மனைவியை அப்படி கையில் வச்சி தனியா தாங்கணும்னு நினைச்சி தெரியமா பண்ணிட்டேன். அதுக்கு பின்னாடி இவ்வளவு வலி இருக்குமுன்னு எனக்கு தெரியாதே. இப்ப கூட எனக்கு குழந்தை முகமுன்னு எனக்கு எதுவும் தெரியலையே. என் கண்களுக்கு என் பங்காரு மட்டும் தான் தெரியுறா’ அவன் இதயம் அதன் துடிப்பின் வேகத்தை உயர்த்தி கொண்டு, அவனுக்கு அந்த எ.சி அறையிலும் வியர்வை துளிகளை கொண்டு வந்தது.

‘நான் செய்த தப்பால், பங்காருவுக்கு எதுவும் கஷ்டமாகிருமோ?’ அவன் சிந்தை அவனுள் அச்சத்தை கிளப்ப, “இதனால், மிருதுளாவுக்கு டெலிவரியில் ஏதாவது பிரச்சனை?” அவன் வார்த்தைகள் தடுமாற,  “பெரிய பிரச்சனை இருக்கிற மாதிரி எனக்கு இப்ப தெரியலை. இது அபார்ஷன் முடிஞ்சி சீக்கிரமே வந்திருக்கிற குழந்தை. உங்க மனைவியை பத்திரமா பார்த்துக்கோங்க. நாம, பேபி ஹார்ட் பீட் இப்ப பார்க்க முடியாது. ஆறு வாரம் ஆகணும். குழந்தை வளர்ச்சி எப்படி இருக்குனு பார்ப்போம்.” அவர் கூற அவன் தலையசைத்துக் கொண்டு கிளம்பினான்.

 

மிருதுளா வீட்டிற்கு கொஞ்சம் சந்தோஷமான மனநிலையில் திரும்பினாள். தெரிந்த மருத்துவர், எந்த தப்பும் நடக்காது. அவள் அப்படி சிந்திக்கவில்லை என்றாலும், அவள் உள்மனம் திருப்தி அடைந்து கொண்டது. அவளாகவே மாத்திரையை சாப்பிட்டு கொண்டு படுத்தாள். படுத்த வேகத்தில் கண் அயர்ந்தும் விட்டாள். வம்சி, அவள் அருகே படுத்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

‘மிருதுளாவுக்கு ஏதாவது பிரச்சனை வந்துட்டா?’ அவன் அவள் மீது கைகளை போட்டு, தன்னோடு அணைத்துக் கொண்டான். “பங்காரு… பங்காரு…” அவன் இதழ்கள் அவளை மென்மையோடு அழைத்தன. “பங்காரு, எனக்கு சத்தியமா குழந்தை பிறப்புக்கு பின்னாடி இவ்வளவு கஷ்டம் இருக்குனு தெரியாது பங்காரு” அவன் இதழ்கள் கண்ணீரோடு முணுமுணுத்தது.

“உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா, நான் உயிரோட இருக்க மாட்டேன் பங்காரு. நான், அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். ஆனால், உனக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாதுனு நான் நினைச்சதே இல்லை பங்காரு. உனக்கு எப்பவும் என்னை விட குழந்தை பெருசு. ஆனால், எனக்கு குழந்தை விட நீ தான் பெருசு பங்காரு.” அவள் நித்திரை கெடாமல், அவளுள் பொதிந்து கண்ணீர் விட்டான் பங்காருவின் கணவன்.

அவன் கைகள் அவள் வயிற்றை நெருங்க, அவனுள் சொல்ல முடியாத உணர்வு.

‘எனக்கு போன தடவை எதுவும் தோணலை பங்காரு…’ அவன் கைகள் அவள் வயிற்றை நெருங்கும் பொழுதே அஞ்சியது. ‘உண்மையில், அப்ப நான் குழந்தைன்னு யோசிக்கவே இல்லை. ஒரு சின்ன விஷயமுன்னு தான் நான் நினைச்சேன்’ அவன் கைகள் அவள் வயிற்றை மெல்ல நெருங்கியது. ‘உன் ஏக்கம், உன் வருத்தம் தான் எனக்கு ஏதோ சொல்லுச்சு. குழந்தை பிறப்புக்கு பின்னாடி இவ்வளவு வலியும் வேதனையும் இருக்கும்ன்னு எனக்கு தெரியாது பங்காரு’ அவன் அவள் வயிற்றை மெல்ல தொட்டான்.

‘சிறு புள்ளி…’ அந்த வார்த்தை அவனை இப்பொழுது வதைத்தது. “சிறுபுள்ளி…” அவன் வேதனையோடு கூறிக்கொண்டு எழுந்து அமர்ந்தான். அவள் வயிற்றின் மீது பயத்தோடு மெல்ல தலை வைத்து,”பாப்பா, நீ சிறுபுள்ளி தான். ஆனால், நான் புத்தியால் அதை விட சின்னவன். எனக்கு அம்மா பாசம் தெரியாது. பங்காரு தான் எனக்கு அதை காட்டுறா. எனக்கு அப்பா பாசமும் தெரியாது. இதுவரை நான் எதையும் பார்த்ததில்லை. இப்பவும் எனக்கு அப்பா  பாசம் தெரியலை. எனக்கு தெரிஞ்சது எல்லாம் என் அக்கா மட்டும் தான். பாப்பா நீ சிறுசா இருந்தாலும், எனக்கு அப்பா பாசத்தை சொல்லி கொடுங்க. தயவு செய்து என்னை தண்டிச்சீராதீங்க. என் பங்காருவுக்கு ஏதாவது கஷ்டம் வந்துட்டாலோ, இல்லை உங்களுக்கு ஏதாவது கஷ்டம் வந்துட்டால், பங்காரு தாங்க மாட்டா…. நானும் தாங்க மாட்டேன்.” அவன் குலுங்கி அழ, அவள் விழித்து  கொண்டு அமர்ந்தாள்.

அவள் மடியில் சாய்ந்து, அவன் குலுங்கி அழ அவன் தலையை கோதினாள் அவள். அவளுக்கு அவனை புரிவது போலவும், புரியாதது போலவும் இருந்தது. முதல் அதிர்ச்சிக்கே சாய்ந்து கிடந்த அவனை இறைவன் இப்பொழுது சற்று பரிதாபமாக பார்த்தான்.

மயங்கும்…                                          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!