நினைவு தூங்கிடாது 4.1

நினைவு தூங்கிடாது 4.1

நிஜம் 4

தென்றல் தீண்டவும் விடமாட்டேன்

 காற்று தழுவவும் விடமாட்டேன்

 உனை வேறு கைகளில் தரமாட்டேன்

நான் தரமாட்டேன் என

என் மனம் கதரும் கதரலை

என்னவென்று நான் சொல்ல 

சூரியன் மிதமான வெப்பக் கதிர்களால் பூமியை ஆளத் தொடங்கிய நேரம். அனைத்து உயிரினங்களும் தங்கள் கூட்டை விட்டு வெளியே வந்து தங்களது வேலையைத் தொடங்கியது.

ரிஷியும் மித்ராவும் இணைந்து நடிக்கும் படத்தின் கடைசி பாடல் காட்சி, தற்பொழுது ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த டேக் ஓகே ஆகவும் சற்று ரிலாக்ஸாக அமர்ந்தனர்.

சரியாக அப்போது, மித்ராவை பேட்டி காண செய்தியாளர்கள் வெளியே காத்திருப்பதாக தகவல் வர, அவள் ஒரு முடிவுடன் அவர்களை சந்தித்தாள்.

“மித்ரா மேம்! முதலில் நீங்களும் ருத்ரேஸ்வரன் சாரும் இணைந்து நடிக்கப்போகும் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.”

மனதிற்குள், எண்ணெய் இல்லாமல் அவனை பொரித்து எடுத்தாலும், வெளியே இன்முகத்துடன்,”உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.” என கை கூப்பினாள்.

“அந்தப் படத்தைப் பற்றிய உங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கிறோம்.”

மனதிற்குள்ளயே ருத்ராவை திட்டி தீர்த்தாலும், யாருக்கும் அதை காட்டாமல் ஒரு அழகான புன்னகையுடன்,”இன்று காலை பேப்பரில் வந்ததுபோல இந்தக் கதை ஒரு கிராமத்து கதை. இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும்.”

“மேம், இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போ ஆரம்பிக்க போறாங்க? உங்களுக்கு எதுவும் ஐடியா இருக்கா?”

“அது தெரியலை. எனக்கு அந்தப் படத்தில் நடிப்பதில் ஒரு சின்ன சிக்கல் ஏற்பட்டிருக்கு. அதனால் அந்தப் படத்தில் நடிப்பதை பற்றி இன்னமும் நான் ஒரு முடிவுக்கு வரல.”

“என்ன சிக்கல்ன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“தாராளமா. என்னோட திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட நினைக்கிறேன். அதனால கொஞ்சம் ப்ரேக் எடுத்துட்டு அப்பறம் நடிப்பைத் தொடரலாமென ஒரு எண்ணம்.” 

அவளின் அந்த பதிலால் கூட்டத்தில் சலசலப்பு.

“வாவ்! வாழ்த்துக்கள் மேம். இது இன்னமும் மகிழ்ச்சியான செய்தி.”

இப்போது உண்மையான மகிழ்ச்சி முகமெங்கும் ஜொலிக்க,”நன்றி” கூறினாள் மித்ராலினி. அவளின் வசீகர முகம் அனைவரின் ரசனையை தூண்டியது.

“நீங்க திருமணம் செய்யப் போற அந்த லக்கி பெர்சன் நடிகர் ரிஷி வர்மாவா?”

“அதை உங்களுக்கு சொல்லாமலா? கூடிய சீக்கரம் சொல்லுறேன். நான் இப்போது நடித்திக்கொண்டிருக்கும் இந்த படம் வெளியான பிறகு, எனது திருமணச் செய்தியும் அறிவிக்கப்படும். நன்றி.” என பேட்டியை முடிக்க முயன்ற பெண்ணை தடைசெய்து,

“ஒரே ஒரு நிமிஷம் மேடம். இந்த படத்தில் உங்க கூட நடிக்கிறது ஆக்டர் ரிஷி வர்மாதானே?”

“ஆம்” என தலையசைவு பெண்ணிடம்.

“அவரை இங்க கூப்பிட முடியுமா? உங்க ரெண்டு பேரையும் போட்டோ எடுத்துக்கறோம்.”

சம்மதமாக தலையசைத்த பெண் ஸ்டுடியோ உள்சென்று, ரிஷியை அழைத்து வந்தாள்.

ரிஷியையும் மித்ராவையும் ஜோடியாக புகைப்பட கருவிகள் உள்வாங்கிக் கொண்டன.

“ரிஷி சார், மித்ரா மேம் திருமண அறிவிப்பை வழங்கப்போறதா சொன்னாங்க. அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?” ரிஷியின் விழிகள் மித்ராவின் விழிகளோடு கலந்து ‌ மௌன மொழி பேசியது. அந்த விழி வழி செய்தியை சரியாக புரிந்துகொண்டு,

“அதை நானும் மித்ராவும் முடிவு செய்து, விரைவில் அறிவிக்கிறோம்” என அவளின் தோளின் மேல் கையிட்டு அணைத்த நிலையில், ஆளை மயக்கும் அழகான புன்னகையுடன் பதிலளித்தான் ரிஷி வர்மா.

ரிஷியும் மித்ராவும் அணைத்த நிலையில் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தையும், அவள் வழங்கியிருந்த திருமண அறிவிப்பையும் கண்டபிறகு ருத்ரேஸ்வரனின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

சிங்கத்தை சீண்டுகிறோம் என்று தெரிந்தும் அந்த விபரீத விளையாட்டை விளையாடி கொண்டிருந்தாள் மித்ரா.

††††††

மறுநாள் காலையில், ருத்ராவின் முன்னால் இருந்த செய்தித்தாளில், கொட்டை எழுத்தில் தலைப்புச்செய்தி,

 கனவுக்கன்னி மித்ராலினியின் திருமணம்

‘விரைவில் தன் திருமண செய்தியை அறிவிப்பதாக, நடிகை மித்ராலினி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இத்திருமண பந்தத்தில், நடிகையுடன் கைகோர்க்க போகும் நாயகன் யார்?  ரிஷிவர்மாவா?” என்ற கேள்வியோடு நிறைவடைந்தது.

அந்த செய்தியைப் கண்ட பிறகு, உண்மையிலேயே ருத்ரா, ருத்ரா மூர்த்தி அவதாரத்தை எடுத்தான்.

அவனின் பிஏ மகேந்திரனை அழைத்து,”இந்த செய்தியை போட்ட ரிப்போர்ட்டரை உடனே இழுத்து வர ஏற்பாடு செய். இனி அவனுக்கு எழுத கையே இருக்கக்கூடாது.” என கர்ஜித்தான். 

“சார்ர்ர்ர்” என இழுத்தான், “என்ன” எறிந்துவிழுந்தான்.

“சார், அது வந்து, வந்து” என அவன் தயங்கி நிற்க, இப்போது கோபமானவன்,”என்ன வந்து, போயிண்ட்டு இருக்க? சொன்னதை உடனே செய்” என கட்டளையிட்டான்.

“சார் இந்த செய்தி இந்த பேப்பரில் மட்டும் வரலை. தமிழில் வர எல்லா பேப்பரிலும் வந்திருக்கு.” என்றான் பயந்து நடுங்கி கொண்டே.

தன் எரிக்கும் கண்களால் அவனை சுட்டு பொசுக்கிய ருத்ரா, அவனை போகும்படி கைகளால் சைகை செய்ய, மகேந்திரனும் விட்டால் போதும் என அங்கிருந்து ஓடிவிட்டான். 

ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான். ஆனால் அந்த முயற்சி தோல்வியைத் தழுவியது. ‘என்னை ரொம்ப சீண்டிட்ட பொம்மு. இனி உன்னிடம் எல்லாம் அதிரடிதான். இதோ வரேன் உன்னை சந்திக்க. வெயிட் பேபி’ என்றான் கண்களில் பளபளப்புடன்.

சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மகேந்திரனை அழைத்து அவளின் சூட்டிங் நடக்கும் இடத்தை தெரிந்துகொண்டு. அவளை சந்திக்க நேரே அங்கு சென்றுவிட்டான். 

படப்பிடிப்பில் இருந்த அவளின் வரவுக்காக காத்திருந்த நேரத்தில்,’ஏன்டா இங்கு வந்தோம்?’ என்று ஆகிவிட்டது. 

மிகப்பெரிய புரொடக்க்ஷனின் வாரிசு, எதிர்கால திரை நட்சத்திரம், தங்களின் சூட்டிங்கிற்க்கு வந்ததை பெருமையாக நினைத்துக் கொண்ட, அந்த திரைப்படக் குழுவினர், அவனை ஆரவாரமாக வரவேற்று உபசரித்த பின்னர் தங்களின் வேலையை தொடர்ந்தனர்.

இன்றும் அதே பாடலுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. நெருக்கம் இல்லாமல் பாடல் இருக்குமா? அதுவும் இது டூயட் பாடல், மிகவும் நெருக்கமான காட்சிகளுடன். அதை கண்ட பின்னும் ருத்ராவால் பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியுமா? ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்தவனின் தகிப்பை அதிகப்படுத்தினால்?

மித்ராவின் வருகையை எதிர்நோக்கி, மிகவும் கோபத்தோடு காத்திருந்தான். ரிஷியுடன் நெருக்கமாக ஆடிக்கொண்டிருந்த, மித்ராவின் மீது பதித்த அவனின் பார்வையை சற்றும் விலக்கவில்லை. அவனால், அவளை இன்னொருவருடன் காணவே முடியவில்லை. நேரம் செல்ல செல்ல அவன் கோபம் கரையை உடைக்க காத்திருந்தது.

அந்தக் காட்சி முடிந்து ஓய்விற்காக வந்தவர்களை, தன் கனல் விழிகளால் சுட்டெரித்தான். அவனின் பார்வையை கண்டு, மிரண்ட மித்ராவின் மனதில் சிறு பயம் தோன்றினாலும், அதை மறைத்து புன்னகையுடன் அவனை நெருங்கி வரவேற்றாள்.

“வாங்க சார். எப்படி இருக்கீங்க. யாருக்காவது வெய்ட் செய்றீங்கலா?” ஒன்றும் அறியாததைபோல்.

“என்கிட்ட உன்னோட நடிப்பை காட்டாத. உன்னோடு நான் தனியா பேசணும். என்கூட வா” என்றான் அதிகாரமாக.

அவனது அதிகாரத்தை பார்த்த ரிஷி, கோபமாக ஏதோ சொல்ல வர, அவனது கரத்தை பற்றி தடுத்த மித்ரா,”வரு நான் பேசிக்கிறேன்.” என அவனை அமைதிப்படுத்தி ருத்ராவின் பக்கம் திரும்பினாள். 

ருத்ராவின் பார்வையோ, ரிஷியை பற்றியிருந்த மித்ராவின் கரத்தினை சுட்டுப் பொசுக்கியது. அதை கண்டுக்கொள்ளாமல், “ருத்ரா சார்! எனக்கு இப்போ ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு. என்னால் வெளியே வர முடியாது” என அவன் விழியை நேர்கொண்டு சந்தித்து இயம்பினாள்.

அவளின் பதிலில் கோபம் வந்தாலும்,’இது கோபத்தை காட்டும் தருனமல்ல’ என்பதை உணர்ந்து, ‘அமைதி அமைதி’ என தனக்கு தானே கூறி, தன் உணர்வுகளை தன் கட்டுக்குள் கொண்டு வந்தவன், சுற்றுமுற்றும் தேடி அங்கு ஓரமாக இருந்த ஒப்பனை அறைக்கு, அவள் கரத்தை பற்றி அழைத்து இல்லை, இல்லை இழுத்து செல்ல முயன்றான். அவனால் முடியவில்லை. காரணம் பெண்ணின், இன்னொரு கரம் ரிஷியிடம் சிறை பட்டிருந்தது. 

ருத்ரா, ரிஷியை முறைக்க, அவனது பார்வையோ அவனது மிரு மேலிருந்தது. அதில் இன்னும் கோவம் ஏற, ரிஷியின் கரத்தை அவளது கரத்திலிருந்து விலக்கி, அவளை இழுத்து சென்றான். 

அவன் செய்கையில் கோபமடைந்த ரிஷியிடம்,’நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று விழியால் அவனை அமைதிப்படுத்திவிட்டு ருத்ராவின் இழுப்பிற்கு சென்றாள்.

ஒப்பனை அறையின் உள்ளே சென்று தன் கோபம் முழுவதையும் காட்டி, அவளை ஒரு சுழற்று சுழற்றி தன் முன் கொண்டு வந்தான். 

அவன் சுழற்றியதில் அவனை மிகவும் நெருங்கி இருந்தாள் பெண். விலகி செல்ல முயல்கையில் அதைத் தடை செய்த ருத்ராவின் கரங்கள், அவளின் இடை பற்றி தன்னை நோக்கி இழுத்து, உடல் உரச அனைத்தவன், விழியோடு விழி கலக்க,”என் கூட நடிக்க முடியாதுன்னு பேட்டி கொடுத்திட்டு, அவன் கிட்ட வருன்னு கொஞ்சிகிட்டு இருக்க?” வார்த்தைகளில் நெருப்பை கக்கினான். 

“நான் வருன்னு கொஞ்சுறது, கெஞ்சுறது, மிஞ்சுறது எல்லாம் என்னுடைய இஷ்டம். என்னுடைய பர்சனல் ஸ்பெஷில் தலையிட உங்களுக்கு அனுமதி இல்லை. நான் உங்க கூட நடிக்க மாட்டேன்னு எப்ப சொன்னேன்? என்னோட திருமணம் முடிஞ்ச பிறகு, கொஞ்சம் பிரேக் எடுத்த அப்பறம்தான் நடிக்க வருவேன்னு சொன்னேன்.” நிதானமான பதில். 

அவளை ஆராய்ச்சியாக பார்த்த ருத்ராவின் பார்வை, அவள் கழுத்தில் பதிந்தது. உதட்டில் மர்மப் புன்னகையோடு, ஒற்றை விரலை வைத்து அவள் சங்குக் கழுத்தில் கோலம் வரைந்து கொண்டே,”இந்த கழுத்தில் என்னைத் தவிர வேறு யாராலும் தாலி கட்ட முடியாது.” என்றான் மயக்கும் குரலில்.

“உன் கையால் என் கழுத்தில் தாலி. அது இந்த ஜென்மத்தில் நடக்காது.”

“இந்த ஜென்மம் மட்டுமில்லை, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்” என அவள் உடல் முழுவதையும் சுட்டிக்காட்டி,”இது முழுவதும் எனக்கு மட்டுமே சொந்தம். வேற யாரையும் நெருங்க விட மாட்டேன். அதையும் மீறி யாரும் நெருங்கினா’’ சிறிது இடைவெளி விட்டு, தன் தலையில் தட்டிக்கொண்டே,”ச்ச தப்பு தப்பு நெருங்க நினச்சா கூட, அவங்க உயிர் அவங்க உடல்ல தங்காது. இப்ப எதுக்கு அந்த வெட்டிப்பேச்சு? இன்னும் ஒரு மாதத்தில் நம்ம படபூஜை.”

அவள் இதழ்களில் இகழ்ச்சி புன்னகை தவழ்ந்தது.’இந்த இகழ்ச்சிக்கு அர்த்தம் என்ன?’ அவன் சிந்திக்க, அதை தடை செய்தது அடுத்து அவள் பேசிய வார்த்தைகள்.

“கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் நம்ம சேர்ந்து இருக்கிற மாதிரி படத்தை உருவாக்கி போட்டிருக்கீங்க. என் அனுமதி இல்லாமல், என்னோட படத்தை உபயோகப்படுத்தியதுக்கே நான் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்? ஆனால் எதுக்கு தேவையில்லாமல் போலீஸ் கேஸுன்னு அலையனும் என்பதால் விட்டுட்டேன். நீ வான்னு கூப்பிட்டால் உன் பின்னாடியே வர, என்னை என்ன உன் வீட்டு நாய்க்குட்டின்னு நினைச்சியா? நான் மித்ரா, நான் விருப்பப்பட்டால் மட்டுமே என்னை யாரும் நெருங்க முடியும்.”

“ச்சுச்சு பாவம். போலீசுக்கு தானே போ, போயி முடிஞ்சா கேஸ் ஃபைல் பண்ணு. எந்தப் பயலும் உன்னை உள்ள கூட விட மாட்டாங்க. என்னை எதிர்த்தால் அதன் பாதிப்புகள் ரொம்ப அதிகமா இருக்கும். அது நீயாக இருந்தாலும் சரி, போலீசாக இருந்தாலும்.” மிரட்டல் விடுத்தான்.

“அதையும் பார்த்திடலாம்” சவாலிட்டாள்.

“இனி இதனால் வரப் போகும் பின் விளைவுகளை, நீ சந்தித்தே தீர வேண்டும். அதை யாராலும் மாற்ற முடியாது. உன்னை என்னிடம் நெருங்க வைக்கிறேன்.” சவாலை ஏற்று விடைபெற்றான்.

††††††

‘மித்ராவை எப்படி தன்னிடம் வர வைப்பது’ என்பதை முடிவு செய்திருந்த ருத்ரா, தான் ஏற்பாடு செய்திருந்த நபரிடமிருந்து வரப்போகும் அழைப்பிற்காக, தன் கைபேசியையே வெறித்துக் கொண்டிருந்தான்.

‘இந்த சின்ன விஷயத்துக்கு போய், என்னை இவ்வளவு கீழே இறங்க வச்சுட்டியே’ என அவனின் மனம் உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது.

‘உனக்கு இது தேவையா பொம்மு? ஒழுங்கா நான் செல்லுறதை கேட்டு இருக்கலாம். இப்ப பார் யார் அனுபவிக்கிறது? உனக்கு பட்டுதான் தெரிஞ்சுகனும்னு விதிபோல, அதை யாரால மாத்த முடியும்? ச்சு ச்சு” என அவளுக்காக வருந்துவது போல், அவன் இகழ்ந்து கொண்டிருந்தான்.

சரியாக அந்த நேரம் அவனின் கைபேசி ஒலி எழுப்பியது. அந்த அழைப்பை ஏற்று,”என்ன மகி காரியம் முடிஞ்சுதா?” சிம்ம கர்ஜனை.

அவனின் பிஏ மகேந்திரன், அந்த கர்ஜனையில் நடுங்கிக்கொண்டே, “எஸ் பாஸ் முடிஞ்சது. டிவில நியூஸ் வந்துட்டு இருக்கு.” 

ருத்ராவின் முகத்தினில் வஞ்ச புன்னகை. பதிலேதும் சொல்லாமல் அழைப்பை துண்டித்தான்.

மகேந்திரன் ஒரு பெருமூச்சுடன்,’அப்பாடா எப்படியோ நான் தப்பிச்சுட்டேன். இவர் கிட்ட மாட்டிகிட்டு அந்த பொண்ணு என்ன பாடு படப் போகுதோ? ஆண்டவா அந்த பொண்ணை காப்பாத்து.’ என ஆண்டவனிடன் மனு போட்டான் மகி.

தொலைக்காட்சியைப் பார்த்து உறுதி செய்து கொண்டு, கைபேசியின் மூலம் மித்ராவை அழைத்தான்.

அந்த அழைப்பை பார்த்த மித்ரா, ‘இவனுக்கு வேற வேலையே இல்லையா?’ என நினைத்து, அந்த அழைப்பை ஏற்றவுடன் பொரிய தொடங்கினாள். “ஒரு தடவ சொன்னா கேட்க மாட்டீங்களா? என்னால் உங்க கூட நடிக்க முடியாது, அதுவும் அந்தக் கதையில் சான்சே இல்ல. என்னை தொந்தரவு பண்ணாம நிம்மதியா விட்ருங்க.”

அவள் பேசும் வரை மர்மப் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்த ருத்ரா, அவள் பேசி முடிக்கவும், “என்ன பேசி முடிச்சாச்சா? நான் சொல்றதை கேட்கலைனா நஷ்டம் உனக்கு தான்னு சொன்னேன், கேட்டியா? இப்ப பாரு யாரு அனுபவிக்கிறது?” என கூலாக இயம்பினான்.

அவன் பேச்சில் புருவம் சுருக்கிய மித்ரா,”என்ன சொல்ற ருத்ரா?”

“நம்ம கிட்ட ஒன்லி ஆக்சன். லைவ் டெலிகாஸ்ட். டிவியை ஆன் பண்ணி, செய்தி சேனல் பார்.” என தொடர்பை துண்டித்திருந்தான்.

அவனது அலட்சியப் பேச்சில் ஏதோ பெரிதாக செய்திருக்கிறான் என்பதை உணர்ந்த மித்ரா, கரங்கள் நடுங்க தொலைக்காட்சியின் ரிமோட்டை தேடி எடுத்து, செய்தி சேனலை வைத்தாள். அதில் ஓடிக்கொண்டிருந்த செய்தியில் அவள் உலகம் ஸ்தம்பித்தது.

error: Content is protected !!