நினைவு தூங்கிடாது 7.2

நினைவு தூங்கிடாது 7.2

நிழல்

உன் பார்வைக்கு தவமிருந்த

எனக்கு கிடைத்ததடி

வரம்… 

உன் கரம் தீண்டலில்…

இப்போது என் நிலையை

என்னவென்று நான் சொல்ல…

தன் அன்னையிடம் சென்று நியாயம் கேட்பதாக, சொன்ன ஈஸ்வரை, எப்படி தடுப்பது என தெரியாமல் முழி பிதுங்கி நின்றாள் பெண். அதற்குள் அவளது கரத்தை பிடித்திழுத்து செல்ல முயன்றான்.

சரியாக அந்த நேரம்,”அம்மு இங்கே என்ன பண்ற?” என்ற உற்சாகக் குரல் அவர்களைத் தடைசெய்தது.

குரல் வந்த நிமிடமே ஈஸ்வரனின் கரம், அவளது கரத்தை விடுவித்திருந்தது. தன் கரம் விடுபட்ட மகிழ்ச்சியோடு, குரல் வந்த திசையை நோக்கி பாவையின் பார்வை திரும்பியது. ஈஸ்வரனின் பார்வையும் அவளுடன் பயணித்தது. அங்கே நின்ற நபரைப் பார்த்ததும் பாவை அவளுக்கு,’கட்டவண்டியிடம் இருந்து தப்பித்தோம்’ என மகிழ்ச்சி பொங்கியது என்றால், காளை அவனக்கு ‘இவன் ஏன் இங்கே வந்தான்?’ என எரிச்சல் மண்டியது.

“மாமா” என ஓடிச்சென்று அவனது கரத்தைப் பற்றிக் கொண்டாள் அமிர்தா.

‘மாமாவா?’ என்ற கேள்விக்கு, ஆம் என்ற பதிலே கிடைக்கும். தன் தோழி ரேகாவின் குடும்பத்தை தன் குடும்பமாக பாவித்து, அவள் உறவுகளை எப்படி அழைப்பாளோ? அதே உறவு முறையால் எல்லோரையும் அழைத்துப் பழகியிருந்தாள் பெண். அதுவுமில்லாமல் கிராமப்புறங்களில் உறவு முறை வைத்து அழைப்பது புதியதில்லை.

அங்கு நின்று கொண்டிருந்தது சாட்சாத் கோயிலில் சந்தித்த, ரேகாவின் மாமா (பெரிய அத்தை மகன்), ஈஸ்வரனின் சகோதரன் (பெரியம்மா மகன்) கார்த்திக். 

வெளியில் நிற்கும் ஈஸ்வரனின் காரை கண்டு, அவன் தோப்பினுள்ளே இருப்பான் என்பதை உணர்ந்து வந்த கார்த்திக், நிச்சயமாக அமிர்தாவை அங்கே, அதுவும் ஈஸ்வரனின் அருகில் எதிர்பார்க்கவில்லை. 

தங்கள் குடும்பத்தில் யாருடனும் அதிகம் ஒட்டாமல், தனித்திருக்கும் ஈஸ்வரை கண்டால் ஏனோ கார்த்திக்கிற்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. அவனின் பெண்களுடனான பழக்கங்களையும், அரசல்புரசலாக கேள்விப்பட்டிருந்த கார்த்திக்கிற்கு, அவனின் மேல் நல்ல அபிப்ராயம் வந்ததில்லை. அவன் தொழில் வட்டாரத்தில் காட்டும் முகத்தை பார்த்து சிறிது பயம் என்று கூட சொல்லலாம். குடும்பம் என வரும் போது அவ்வாறு விலகி இருக்க முடியாதல்லவா? அதனால் சந்திக்கும் சமயங்களில் பேசிக்கொள்வதுண்டு.

“ஹே அம்மு இங்க என்ன பண்ற?” என உற்சாகமாக ஆரம்பித்தவனின் முகம் உடனே சுருங்கியது. அமிர்தாவின் குறும்புகளை பற்றியும் தெரியும், ஈஸ்வரனின் கோபத்தைப் பற்றியும் தெரியும். இப்போது அவர்கள் இருவரும் அருகருகே நின்று இருப்பதை கண்டு, ‘அமிர்தா எதுவும் குறும்பு செய்து ஈஸ்வரனிடம் மாட்டி கொண்டாளோ?’ என சரியாகவே கனித்து பயம் கொண்டான். அவனது முகம் இருண்டு போனது.

ஆனால் அதற்கு நேர்மாறாக இவனைப் பார்த்தவுடன், ஓடி வந்து அவனது கரத்தை பற்றிக் கொண்ட அம்முவின் நெருக்கத்தில், அவனின் இதயம் படபடத்தது. அவனது மனம் ஆகாசத்தில் பறந்தது. முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம் மீண்டது. 

இதுவரை அவனுடன், அம்மு பேசிப் பழகி இருந்தாலும், எட்ட நின்றே பேசி சென்றுவிடுவாள். ஆனால் இன்று அவள், அவனது கரம் பற்றிக் கொண்டதை கண்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டான். 

‘தன்னை ஈஸ்வரனிடம் இருந்து காப்பாத்த வந்த ஒரு நபராக மட்டுமே’ அம்மு கார்த்திகை எண்ணினாள். அவள் மனதில் எந்த களங்கமும் இல்லாததால் இயல்பாக அவனின் அருகினில் நின்றாள்.

அவள் தன்னைத் தவிர்த்து வேறொரு நபரிடம், அது தன் சகோதரனாகவே இருந்தாலும், அவனிடன் சென்று அவனது கைப்பற்றிக் கொண்டதை கண்ட ஈஸ்வரின் மனதில் பலத்த அடி. ‘நீ எப்படி என்னை தவிர்த்து, அவனிடம் செல்லலாம்?’ என்ற வெறி ஏறியது அவன் மனதில். இதில் அவளது ‘மாமா’ என்ற அழைப்பு அவனது கோபத்துக்கு தூபம் போட்டது. ‘இங்கு வைத்து கோபத்தை காட்ட முடியாது’ என வெளியே அமைதி காத்தான். ஆனால் உள்ளமோ எரிமலையின் கொந்தளிப்பு.

சிறிது சிறிதாக சுற்றமுணர்ந்து தன்னை மீட்டுக்கொண்ட கார்த்திக்கின் பார்வை, ‘இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று அம்முவிடம் கேள்வி கேட்டது. 

அவள் ஏதாவது உளறி விடுவாளோ என பயந்த ஈஸ்வரின் கண்களில் எச்சரிக்கை வந்தது. அவள் பதில் சொல்வதற்கு முன் “பசங்க கூட மாங்காய் பறிச்சுட்டு இருந்தா.” என முடித்துக் கொண்டான்.

சுற்றியும் தேடி, யாரும் இல்லை என மீண்டும் அம்முவை பார்த்து “பசங்க எங்க?” என கேட்டான்.

“நான் வரவும், என்னை பார்த்து பயந்து ஓடிட்டாங்க.” மீண்டும் ஈஸ்வரனிடமிருந்தே பதில்.

‘உன்னைப் பார்த்து பயப்படாம இருந்தாதான் ஆச்சரியம்’ என கார்த்திக் மனதில் நினைத்து, அம்முவிடம் திரும்பி “இது உன்னோட தோப்பு மாதிரி. எதுக்கு பயப்படனும்? பயப்படாமல் எப்ப வேணாலும் வந்து எடுத்துக்கோ.” என கனிவாக, காதல் சொட்ட சொட்ட கூறினான். அந்த வளர்ந்த குழந்தைக்கு அவன் பார்வை புரிந்துவிடுமா என்ன? அம்மு மண்டையை எல்லா பக்கமும் உருட்ட, அதில் கார்த்திக்கு சிரிப்பு வந்தது.

“வா உனக்காக நான் மாங்கா பரிச்சு தரேன்” என அவளை அழைத்தான்.

“இல்லை இல்லை ஏற்கனவே பறிச்சுட்டேன். பசங்க எடுத்துட்டு போயிட்டாங்க.” என வார்த்தையை மென்று முழுங்கினாள்.

அவளது தடுமாற்றத்தில் சந்தேகமாக பார்த்தாலும், எதுவும் கேட்காமல்,”சரி கிளம்பு அப்பறம் பார்ப்போம்” என மனமே இல்லாமல் அனுப்பினான். 

அவனுக்கு தன் மனம் கவர்ந்தவளுடன் தனிமையில் நேரத்தை செலவு செய்ய கொள்ளை ஆசை. எப்பொதும் குட்டிஸ்களுடம் சுற்றிக்கொண்டிருக்கும் பெண், இன்று தான் முதல்முறையாக தனிமையில் அவனின் பார்வையில் படுகிறாள். ஆனால் அவளுடன் பேசமுடியாமல் நந்தியாக ஈஸ்வர்.

அம்மு எதுவும் சேட்டை செய்து, ஈஸ்வரிடம் மாட்டிகொள்ளும் முன் அவளை எச்சரிக்க வேண்டும் என காலம் கடந்து முடிவு செய்தான். அவளை அதிக நேரம் ஈஸ்வரனின் கண் பார்வையில் வைக்க அவன் விரும்பவில்லை. அவன் எங்கே கண்டான் அவள் ஏற்கனவே அவனிடம் மாட்டி முழி பிதுங்கி இருக்கிறாள் என்று.

அவள் கிளம்பும் முன் அவளது பார்வை ஈஸ்வரை அடைந்தது. அதுவரை கார்த்திக் அவளிடம் உருகி கொண்டிருந்ததை பார்த்து எரிச்சலோடு நின்றவன், அவள் பார்வை தன்னை நோக்கி வரவும்,’நான் சொன்ன இடத்திற்கு செல்’ என கண்களால் ஆணையிட்டான். அவனின் முகத்திலிருந்த உணர்வை புரிந்து கொள்ளாத பேதை, அவன் கண் பாஷையை புரிந்துகொண்டாள்.

‘இப்படி இவனிடம் மாட்டிக்கொண்டேனே’ என தன்னை தானே நொந்துகொண்டு ஆற்றங்கரையை அடைந்தாள்.

அவள் அந்த இடத்தை விட்டு செல்லும்வரை அவளையே தொடர்ந்தது கார்த்திக்கின் பார்வை. ஈஸ்வரால் கார்த்திக்கின் பார்வையை சகிக்க முடியவில்லை. அவனை அடித்து கொள்ளும் ஆத்திரம் வந்தது. கடினப்பட்டு உள்ளங்கையை இருக்கி தன் ஆத்திரத்தை அடக்கினான்.

அவள் சென்ற பின் ஈஸ்வரிடம்,”உங்க காரை வெளிய பார்த்தேன். உள்ள இருப்பீங்கனு வந்தேன். பார்த்தா அம்மு இருந்தா. ரேகா ஓட பிரெண்ட். எப்பவும் துறு துறுன்னு எதையாவது செஞ்சுக்கிட்டே இருப்பா. ஸ்வீட் கேர்ள்” என ரசித்து கூறினான்.

எதிரே இருப்பவன் மௌனமாக இருப்பதை உணராமல், தெடர்ந்து பேசிக்கொண்டே இருந்தான். அவன் பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை. ஈஸ்வரின் ஆத்திரம் நொடிக்கு நொடி ஏறிக்கொண்டே இருந்தது. அவள் இவனது கரத்தை பற்றி கொண்டு ‘மாமா’ என உரிமையுடன் அழைத்ததையும், இவனது ரசனையான பார்வையும், இவன் அவளை சிலாகித்து பேசுவதையும் கேட்க, கேட்க ஈஸ்வரின் கோவம் உச்சத்தை தொட்டது. அந்த கோவம் அனைத்தும் அவள் மேல் வார்தைகளாய் இறங்க போகிறது என தெரியாமல், பேசிக்கொண்டே இருந்தான் கார்த்திக். 

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத ஈஸ்வர்,”சரி கார்த்தி! எனக்கு அவசர வேலை இருக்கு. நான் கிளம்புறேன்” என பேச்சை கத்தரித்து கிளம்பிவிட்டான். கார்த்திக் அவனை ஒரு பார்வை பார்த்தானே ஒழிய, வேற எதுவும் சொல்லாமல் தோளை குலுக்கி சென்றுவிட்டான். 

ஈஸ்வருக்கு ‘அங்கயே நின்றால் அவனை அடித்து விடுவோமோ’ என்ற பயம். குடும்பத்தில் பிரச்சனை வந்திடுமோ என்ற பயம்.

நேற்று கோயிலில், அமிர்தா என்ற பெண்ணை பற்றி கேட்ட கார்த்திக்கின் முகத்திலிருந்த பிரகாசத்தையும், இன்று அம்முவிடம் பேசும்போது இருந்த அவனின் முக பிரகாசத்தையும், கவனித்து அதிலுள்ள ஒற்றுமையை யோசித்திருந்தால் அம்மு என்ற பெண்ணும், அமிர்தா என்ற பெண்ணும் ஒருவளே என்பதை தெரிந்து கொண்டிருப்பான். அவன் மூளை தான் தவறான பாதையில் சிந்தித்துக் கொண்டிருக்கிறதே. 

தோட்டத்திலிருந்து கிளம்பிய ஈஸ்வரின் மனதில்,’அந்த பெண்ணை கார்த்திக் ரசித்தால் எனக்கு ஏன் கோவம் வருகிறது? அவளை பற்றி அவன் பேசினால் எனக்கு ஏன் எரிச்சல் வருகிறது?’ என்ற சிந்தனை ஓடியது. வழக்கம் போல் அவனின் குறு கேட்ட மூளை,’அவள் நீ வெறுக்கும் பெண். அவளை கார்த்திக் விரும்பும் பட்சத்தில், அவள் உன் உறவினல் ஆவாள்’ என தவறாக எடுத்துரைத்தது.

ஒழுங்காக மனதின் பேச்சை கேட்டிருந்தால், அது சொல்லி இருக்கும் ‘ஒரே பார்வையில் உன் மனதை கவர்ந்த பெண்ணவள் என்று. உன் மனம் முழுவதும் நிறைந்திருக்கும் ஒரே உருவம் அவளது என்று. வேறு ஆடவனின் பார்வை அவள் மீது பட்டால் கூட, அவர்களை கொன்று புதைக்கும் ஆத்திரம் வரும் என்று’

இது எதையும் சரியாக ஆராயாமல், அவளை வார்த்தைகளால் வதைக்க ஆற்றங்கரை நோக்கி தன் காரில் பயணமானான் ஈஸ்வர்.

ஆற்றங்கரையில் வைத்து அவளை வார்த்தைகளால் சாடி, அவளை வீட்டுக்கு அனுப்பிவட்டு, இப்போது அங்கேயே நின்று தோப்பில் நடந்தவற்றை நினைவுகூர்ந்து, மறுநாள் அவளக்கு என்ன தண்டனை குடுக்கலாம் என சிந்தித்து கொண்டிருக்கிறான்.

†††††

மறுநாள் கஸ்தூரி காட்டு வேலைக்கு சென்ற பின், அமிர்தாவை அழைத்த பிருந்தா “அம்மு தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊத்து.” என தங்கள் வீட்டின் அருகில் இருந்த தங்கள் தோட்டத்தை கைகாட்டினாள்.

இந்த வேலைகளில் விருப்பம் இல்லாத அம்மு, மீதி நேரமாக இருந்திருந்தால், “இவளோ பெரிய தோட்டத்துக்கு தண்ணி ஊத்துனா, உன் செல்ல அம்முக்கு கை வலிக்கும். என் கை வலித்தால் உன் இதயம் தாங்குமா? அதுனால நீயே ஊத்திடு. என் செல்ல பிந்து” என அவள் கன்னத்தில் இதழ் பதித்து ஓடிருப்பாள். 

ஆனால் இப்போது அவள் இருக்கும் மன உளைச்சலுக்கு, ஏதாவது வடிகால் தேவைப்பட்டது,’சரி’ என பிருந்தாவிடம் தலையசைத்து தோட்டத்திற்கு சென்றாள். 

‘இன்னைக்கு தண்டனைன்ற பேருல அந்த கட்டவண்டி என்ன சொல்ல போகுதோ தெரியலையே? ஆண்டவா நீ தான் என்னை காப்பாத்தணும்’ என்ற மன குமுறலோடும் ப்ரார்தனையோடும் செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்தாள். அப்போது அவளது குட்டி நண்பர்கள், அவளை தேடி தோட்டத்தில் புகுந்தனர்.

அனைவரும் ஓடிவந்து அவளை அனைத்து கன்னத்தில் இதழ் பதித்து விலகினர். இது அவ்வபோது வாடிக்கையாக நடக்கும் ஒன்றுதான். 

“இன்னைக்கு எல்லாத்துக்கும் என்ன ஆச்சு? ஒரே பாச மழை பொழியுது?” என தன் மன குழப்பத்தில் இருந்து விலகி, புன்னகையுடன் அவர்களிடம் கேள்வி எழுப்பினாள்.

“ஒன்றுமில்லை சும்மாதான்.” என கண் சிமிட்டினர்.

“நாங்களும் செடிக்கு தண்ணி ஊத்துறோம்” என ஆளாளுக்கு அங்கிருந்த வாளியை எடுத்து, தொட்டியிலிருந்து தண்ணீரை எடுத்து செடிகளுக்கு ஊத்த தொடங்கினர். அம்முவிடம் மட்டும் டியூப் இருந்தது.

திடீரென பப்பு பிங்கியை துரத்தினான். பதறிப்போன அம்மு, பப்புவை பிடித்து “ஏன்டா அவளைத் துரத்துற?” 

“பாரு அம்மு, அவ என் மேல தண்ணிய ஊத்திட்டா.” என பப்பு பாவமாக உதட்டை பிதுக்கினான். அப்போதுதான் அமிர்தா அவனை கவனித்தாள், நன்றாக நீரில் நனைந்திருந்தான்.

அமிர்தா பிங்கியை முறைக்க,”அம்மு தெரியாம கொட்டிடுச்சு. அதுக்கு அவன் என் மேல தண்ணி ஊத்த வரான்” மூச்சு வாங்கிக் கொண்டே பிங்கி பதிலளித்தாள்.

“பாவம்டா சின்ன பொண்ணு, தெரியாமதானே ஊத்திட்டா?” என அவளுக்கு வக்காலத்து வாங்கினாள்.

“அதெல்லாம் முடியாது. அவ மேல தண்ணி ஊத்துவேன்” என சொல்லியவாறு அவளை துரத்தினான். இடையில் நின்ற சோட்டுவின் மீது அந்த நீரை ஊற்ற, இப்போது அவர்களை துரத்துவது சோட்டுவின் முறை. 

இவ்வாறு அடுத்து அடுத்து என அனைவரும் நீரை ஊற்றி விளையாட தொடங்கினர். அப்போது அங்கே வந்த பிருந்தா இடுப்பில் கைவைத்து அவர்களை முறத்து நின்றாள்.

அம்மு உட்பட அங்கிருந்த அனைவரும் தொப்பலாக நனைந்திருந்தனர். “என்ன அம்மு நீயும் சின்ன பசங்க கூட சேர்ந்து விளையாடிகிட்டு இருக்க?” என அவளிடம் கேள்வி எழுப்பினாலும், அம்முவின் முகம் தெளிந்திருப்பதில் நிம்மதிக்கொண்டாள்.

“பிந்து அது அது” என தடுமாறுவது போல் கிட்டுவிடம் கண்ணை காட்டினாள். அவன் தன் கட்டை விரலை காட்டி, ரெடி என சொல்லவும். அம்முவின் கரத்திலிருந்த டியூபிலிருந்து தண்ணீர் வரவும் சரியாக இருந்தது. 

அம்மு அந்த நீரை பிந்துவின் மீது அடிக்க,”என்ன அம்மு பண்ற?” என அவளை திட்ட தொடங்கி, அது முடியாமல் பிந்துவும் அவர்களுடன் சேர்ந்து விளையாடத் தொடங்கினாள்.

இவர்கள் செய்யும் சேட்டைகள் அனைத்தையும், ஈஸ்வர் அவனது அறையின் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தான். 

‘என்ன பொண்ணு இவ? சரியான நீலாம்பரி. கொஞ்சம் கூட அடக்கமில்லாமல் எப்ப பாரு சின்ன பசங்க கூட சேர்ந்து ஆட்டம் போட்டுகிட்டு.’ என அவளின் மீது தவறான அபிப்ராயத்தையே வளர்த்துக் கொண்டான்.

அங்கு அவனது நீலாம்பரியுடன் விளையாடிக் கொண்டிருந்த, இன்னொரு பெண்ணை கவனத்தில் கொள்ளவில்லை. ஒருவேளை பார்த்திருந்தால், தேவையில்லாத சில பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம்.

விதி ஈஸ்வரை பார்த்து சிரித்தது ‘அவளது எந்த துறுதுறுப்பு பிடிக்கவில்லை என அவளை சாடுகிறாயோ, அதை எப்போது மீண்டும் காண்போமென ஏங்க போகிறாயென்று; அவளை துளைத்து விட்டு, உன் உயிர்ப்பை துளைத்து நடைப்பிணமாக அலையப்போகிறாயென்று; அவள் தன்னை காதலிப்பாலா என தவமிருப்பாயென்று; அவளை அடையை நீ எந்த எல்லைக்கும் செல்வாயென்று; இனி அவளை தவிர உன் கரங்கள் வேறு பெண்ணை தீண்டாதென்று;’

error: Content is protected !!