நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!07

295797628_586832783012651_1027496183334268553_n-90963b09

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!07

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா

அத்தியாயம்

07

ஆதினி கிளம்பி வரவும் இருவரும் அவர்களது பேச்சினை நிறுத்தி அவளை பார்த்தனர்.

அங்கே பச்சை வண்ண புடவையில் ஆங்காங்கே மயில் இறகை கோலமிட்டு பார்க்கவே அழகாக தேவதை போல் பிரவேசித்தாள். அந்த அழகையே தோற்கடிக்கும் விதமாக அவளின் புன்னகை அவள் முகத்தில் காட்சியளித்தது.

“சரிப்பா  நாங்க கிளம்புறோம். நான் வெளிய நிக்கிறேன் சீக்கிரமா பேசிட்டு வாங்க வசீகரன்” என்று விட்டு முன்னே நடந்தாள்.

இருவரும் அவள் செல்லும் பாதையையே பார்த்து நின்றனர்.

இருவரையும் நோக்கிய ஆதினி, “என்ன ஆச்சி ஏன் ரெண்டு பேரும் என்னையே பார்த்துட்டு நிக்குறீங்க” என்று குழந்தையாகவே கேட்க,

“அது ஒன்னும் இல்லை பாப்பா, இன்னைக்கு வசிக்கு ஏதோ பக்கத்து ஊருல வேலை இருக்குன்னு சொல்லி லீவ் கேட்டுருக்கான்மா. இப்போ போய் நீ அவனை கூப்பிடுறியே” என்று விளக்கம் கொடுக்க,

“அவ்வளவு தானே பா. இங்க இருக்கிற விநாயகர தரிசனம் செஞ்சா என்ன பக்கத்து ஊருல இருக்கிற கோயில்ல தரிசனம் செஞ்சா என்ன ரெண்டும் ஒன்னுதான். அதுனால நான் பக்கத்து ஊருல இருக்குற கோயிலுக்கு போயிட்டு போறேன் பா” என்க.

“அது இல்லம்மா, அவனே ஏதோ வேலை இருக்குன்னு சொல்லி போறான். இதுல உன்னைய வேற கூட அனுப்ப சொல்லுறியேம்மா” என்று சொல்ல,

“அப்பா, ப்ளீஸ்ப்பா நானும் போறேனே” என்று குழந்தைப்போல் சிணுங்கினாள்.

“பாப்பா அது” என்று இழுக்க,

“அப்பா ப்ளீஸ்” என்க.

சதாசிவமோ வசீயை பார்க்க, அவனோ, ”சரிங்க சார் நான் கூட்டிட்டு போயிட்டு பத்திரமா கூட்டிட்டு வந்து விடுறேன்” என்று வாக்குறுதி கொடுத்தான்.

அந்த வாக்குறுதி சிறிது நேரத்திலேயே உடைய போகிறது என்று அறியாமல்.

“சரிம்மா போயிட்டு வா” என்று மகளை அனுப்பி வைத்தார்.

இத்தனை ஆண்டுகளில் தன்னை விவரம் தெரிந்த நாட்களில் இருந்து அப்பா என்று அவள் அழைத்ததே இல்லை. அதற்கு காரணமாக இருந்தது என்னவோ நங்கை மேல் அவள் வைத்திருந்த அதீத அன்பே…

அதை காணும் போதெல்லாம் எழுந்த கோபம் முழுவதும் மகள் மீதும் மனைவி மீதுமே வீச, அதுவும் ஒரு காரணமாக அமைந்தது தந்தை மகள் பிரிவிற்கு. பாசத்தால் பேச வேண்டிய நிகழ்வுகள் கூட வம்படியாக வாக்குவாதமாக மாறி இருவரும் அவரவர் நிலையில் நின்றுக்கொள்வர். இதில் வெகுவாக பாதிக்கப்பட்டது என்னவோ சீதாலட்சுமி மட்டுமே.

இத்தனை வருடங்கள் கழித்து அவள் அப்பா என்று அழைக்கவும் அவர் சொல்லொணா உணர்வுக்குள் சிக்கிக் கொண்டார்.

அதன் வெளிப்பாடாக, “சீதா இங்க வா” என்று அழைக்க,

கணவன் குரலில் வெளியே வந்த சீதா, “சொல்லுங்க” என்றார்.

“நீ… நீ… பா… பாத்தில எ… என் பொண்ணு என்னைய அப்பான்னு கூப்பிட்டா. என்கிட்ட பாசமா பேசினா பாத்தியா” என்று உணர்ச்சி வசப்பட்டவராய் பேச,

“ஆமாங்க நம்ம பொண்ணு உங்ககிட்ட பேசிட்டா” என்று அகம் மகிழ்ந்து கூறினார்.

“சரி சரி அப்போ இன்னைக்கு ராத்திரிக்கு எல்லாருக்கும் பால் கொழுக்கட்டை செஞ்சிடு சீதா. அது பாப்பாக்கு ரொம்ப பிடிக்கும்” என்று உத்தரவிட,

“சரிங்க செஞ்சிடுறேன்” என்று விட்டு சமையலறை நோக்கி சென்றார்.

“இவர்கள் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கவேண்டும்” என்று வேண்டுதல் வைத்த பேச்சியம்மாள், அடுத்ததாக வைத்தது நங்கைக்கே…

“சீக்கிரமா இந்த நங்கை இந்த ஊரை விட்டு பொய்டணும் சாமி. அவளால மட்டும்தான் இத்தனை வருஷமா நான் என் பொண்ண பாக்க முடியாம இருக்கேன். அவ இந்த ஊரை விட்டு போனாலே போதும் சாமி எனக்கு வேற எதுவும் வேணாம்” என்று ஒரு மஞ்சள் துணியில் காசை கட்டி வைத்தார்.

***

வசி மற்றும் ஆதினியின் பயணம் வெகு அமைதியாகவே இருந்தது.

இருவரும் இருவேறு சிந்தனைகளுள் மூழ்கி இருப்பதால் இந்த அமைதி நிலவியது. இல்லையெனில் எப்போதும் போல் ஆதினியினிடம் தேவையில்லாமல் திட்டு வாங்கிக் கொண்டு இருந்திருப்பான்.

ஆதினியை பொறுத்தவரை, வசியை பற்றிய எண்ணம் தவறாகவே படிந்தாலும் அவனுக்கு துணையாக இருப்பவர்கள் யாரும் தவறு செய்பவர்கள் இல்லையே. அதுவும் அவள் உயிரையே வைத்திருக்கும் நங்கையே அவனை நம்பி அவருடன் தங்க வைத்திருக்கிறார் என்றால் அவன் மீது ஏதோ ஒரு வகையில் நம்பிக்கை வைத்திருந்ததால் தானே.

அப்போது அன்று பேருந்தில் அப்படி நடந்து கொண்ட வசி உண்மையா? இல்லை இத்தனை நாட்களாய் தன்னிடம் கூட கண்ணியம் காட்டி வரும் இந்த வசி உண்மையா? மிகவும் குழம்பி போய் இருந்தாள் ஆதினி. அதுவுமின்றி பூவு சொன்னது போல் யாரையும் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறோமா என்ற சிந்தனையின் காரணமாகதான்  போகும் போது தந்தையிடம் நல்லவிதமாக பேசியது அவரிடம் அனுமதி வாங்கியது எல்லாம்.

வசியின் உண்மையான குணம் அறியும் வரை அவளின் மனநிலை ஒரு நேர்க்கோட்டில் இருக்காது.

வசியின் யோசனையோ, விபுவை எப்படி ஆதினியை விட்டு தனித்து சென்று பார்ப்பது என்றே இருந்தது.

இவர்களின் யோசனைக்கு நடுவே வந்து சேர வேண்டிய ஊர் வந்து விட, “மேடம் எந்த கோயிலுக்கு போகணும்னு சொன்னா, நான் உங்கள கூட்டிட்டு போவேன்” என்று கேட்க,

“ஹான், நீங்க பக்கத்துல இருக்கிற சிவன் கோயிலுக்கு கூட்டிட்டு போங்க” என்று பதிலளித்தாள் ஆதினி.

“சரி மேடம்” என்று விட்டு வண்டியை சிவன் கோயிலுக்கு விட்டான்.

அதற்குள் அவனுக்கு விபுவிடமிருந்து அழைப்பு வர தொடங்க விரைவாகவே வண்டியைக் கோயில் முன் நிறுத்தினான்.

நிறுத்தியவன் உடனே இறங்கி அவளுக்கு கார் கதவை திறந்து விட்டவனை பார்த்து, “இனி நீங்க இப்படி கதவை திறந்து விட வேண்டாம். வண்டி மட்டும் ஓட்டிட்டு வந்தா போதும்” என்று உத்தரவிட்டாள். அதில் வெறுப்பு தெரியவில்லை.

வசி எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்து பதில் காட்டினான்.

“சரி நான் போய் அர்ச்சனைக்கு தேவையானதை வாங்கிட்டு வரேன்” என்று எதிரில் இருந்த கடைக்கு செல்ல அதேநேரத்தில் அவனுக்கு பின்பு இருந்து, ”அண்ணா” என்றழைப்பு வந்தது.

திரும்பி பார்த்தவனுக்கு முதலில் அது யாரென்று அடையாளம் தெரியாமல் போக,

“நீங்க?” என்று கேள்வியாய் நோக்க,

“என்னைய தெரியலையா அண்ணா” என்று வந்தவள் கேட்க,

“உண்மையாவே தெரியலம்மா. நான் இந்த ஊருக்கு புதுசு வேற” என்க.

“பரவால ண்ணா, அன்னைக்கு பஸ்ல எனக்கு இடம் கொடுத்து ஹெல்ப் பண்ணிங்களே ண்ணா” என்று அன்றைய பொழுதை சொல்ல, அப்போதுதான்  இந்த பெண் யாரென்று புரிய சிநேகமாய் ஒரு புன்னகையை சிந்தினான்.

“எப்படிம்மா இருக்க?” என்று கனிவாய் கேட்க,

“நான் நல்லா இருக்கேன் அண்ணா” என்றாள்.

“என்ன குழந்தைம்மா பேரு வச்சாச்சா?” என்று குழந்தையை ஆசையாய் பார்க்க,

அதை கவனித்த அந்த பெண், “பொண்ணு பிறந்திருக்கா ண்ணா, பேரு தர்ஷினி” என்று குழந்தையை அவனிடம் கொடுக்க, குழந்தையை வாங்க தயங்கிய வசியிடம், “பிடிங்க ண்ணா” என்று கொடுத்தாள்.

ஆசையாக வாங்கிய வசி குழந்தையின் சிரிப்பை பார்த்து புன்னகைத்தான்.

பால் நிறம் கொண்ட ஒரு மாத குழந்தை அவனை கண்டு கை கால்களை ஆட்ட, ஆசை தீர குழந்தையை கொஞ்சியவன் குழந்தையை திருப்பி அன்னையிடமே கொடுத்தான்.

“சரி ண்ணா நான் கிளம்புறேன். அவரு கோயிலுக்குள்ள எனக்காக காத்திட்டு இருக்காரு” என்றவள் கோயிலுக்குள் சென்றாள்.

இவை அனைத்தையும் அர்ச்சனைக்கு தேவையான பொருள் வாங்கும் கடையில் இருந்து பார்த்து கொண்டிருந்தவளுக்கு, முதலில் தோன்றிய விடயம், “இந்த பெண்ணை ஏமாற்றி இருப்பானோ” என்றுதான்.

அவளின் யோசனையே அபத்தமாக இருந்தாலும் அவளால் அந்த பெண் யார் என்று கணிக்க முடியவில்லை.

அதே யோசனையுடன் கடையிலிருந்து அர்ச்சனை பொருட்களை வாங்கிக் கொண்டு அவனை நோக்கி நடையிட்டாள்.

“கோயிலுக்கு உள்ள போகலாமா” என்று அவனை பார்த்து பாவையவள் கேட்க,

அவன் பதில் சொல்வதற்குள் விபுவிடமிருந்து அழைப்பு வந்துக்கொண்டே இருக்க, அதனை கவனித்த ஆதினிக்கு அப்போதுதான்  அவனுக்கு ஏதோ வேலை இருப்பதாக லீவ் கேட்டது ஞாபகத்தில் வரவே, “நீங்க போய் உங்க வேலைய கவனிங்க. நான் கோயிலுக்கு போயிட்டு காத்திட்டு இருக்கேன். வேலை முடிச்சு வந்து கூட்டிட்டு போங்க” என்று சொல்ல,

அதனை கேட்டவன், “இல்லை வேணாம். நான் இன்னொரு நாள் வந்து அந்த வேலைய பாத்துக்குறேன்” என்று மறுத்து பேசினான்.

“ஒரு நிமிஷம், இங்க நான் உனக்கு வேலை செய்றேனா இல்லை நீ எனக்கு வேலை செய்றீயா சொல்லு” என்று ஒருமையில் கோபத்தை காட்ட, 

“உங்க கிட்ட வேலை பாக்குறேன் மேடம்” என்றான்.

“அப்போ நான் சொல்றதை செய்யுங்க மிஸ்டர் விருமாண்டி. உங்க இஷ்டத்துக்கு எதுவும் நீங்க செய்ய வேணாம்” என்று அவனை எச்சரித்தாள்.

அவனுக்கு சரி என்று சொல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. அவளுடன் பேசும் நிலையும் அவனுக்கு இல்லை. அவன் சென்று சைன் செய்தால் மட்டுமே அங்கு அடுத்தடுத்த வேலைகள் நடக்கும்.

அதனாலே, ”சரிங்க மேடம், நீங்க போய் சாமி கும்பிடுங்க நான் என்னோட வேலையை முடிச்சிட்டு சீக்கிரமா வந்து உங்கள கூட்டிட்டு போறேன். இங்கேயே இருங்க வேறெங்கேயும் போய்டாதீங்க மேடம்” என்று நடக்க போவது அறியாமல் அவன் பாட்டிற்கு பேசினான்.

“சரி நான் போறேன்” என்று கோயிலுக்குள் செல்ல போக புடவை அணிந்திருந்ததால் அவள் கால் தடுக்கி கீழே விழ போக அவளை தாங்கி பிடித்தான் மிஸ்டர் விருமாண்டி.

அவன் கை வெற்றிடையில் பதிந்து அவளை கீழே விழாமல் காத்திருக்க, அதில் மங்கையவளின் உடலில் ஒரு நொடியேனும் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. அது மட்டும் அல்லாமல் அவனின் தொடுகை ஒரு பாதுகாப்பின் உணர்வை கொடுத்தது.

மெதுவாக அவளை நிறுத்தி அவளின் இடையிலிருந்து கையை சட்டென்று எடுத்தவன், “சாரி மேடம், நீங்க விழ போனீங்க அதான் பிடிக்க வேண்டியதா போச்சி” என்று சொல்லும் போது அத்தனை தயக்கம் இருந்தது.

“இட்ஸ் ஓகே” என்றவள் வேக நடையிட்டு கோயிலுக்குள் மறைந்து கொண்டாள்.

அவள் மறையும் வரையும் அங்கே இருந்தவன், அடுத்த நொடியே விபுவிற்கு அழைத்து அவன் இருக்கும் இடமறிந்து கிளம்பினான்.

 ***

கோயிலுக்குள் வந்த ஆதினிக்கு ஏனோ மூச்சு முட்டியது போல் உணர்வு ஏற்பட்டது.

ஏன் எதனால் என்று அவளுக்கு புரியவில்லை. அவளின் எண்ணம் முழுவதுமாய் ஆக்கிரமித்து இருந்தது அவளின் மிஸ்டர் விருமாண்டியே.

எப்படி தானே ஒருவனை தவறாக பேசி புரிந்து இருக்கும் நிலையில் அவனால் தனக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுக்க முடிந்தது. இதுநாள்வரை யாரிடமும் உணராத பாதுகாப்பு உணர்வை இவனிடம் மட்டும் எப்படி உணர முடிகிறது என்று தன் போல் யோசித்துக் கொண்டே சாமி கும்பிட்டு வந்தவள் யாரோ மீது மோதி நின்றாள்.

“சாரி சாரி ஐம் எக்ஸ்ட்ரீமிலி சாரி அக்கா” என்று ஆதினி தன்னை நிலைபடுத்தியவாறே மன்னிப்பை வேண்ட,

“பரவாலம்மா பாத்து கவனமா போங்க எதையோ யோசிச்சிட்டே  போகாதிங்கம்மா” என்றதும் அந்த குரல் யாரோடையது என்றே பார்த்தாள்.

அந்த குரல் வேறுயாரும் இல்லை சிறிது நேரத்திற்கு முன்பு வசீகரினிடம் பேசிய அதே பெண்தான் .

“நீங்க… நீங்க?” என்று அந்த பெண்ணை கை காட்டி திக்க,

“என்னம்மா” என்று அக்கறையாக கேட்கவே.

“நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணுமே கேட்கலாமா” என்று அவரது சம்மதத்தை வேண்டி கேட்க,

ஏனோ அந்த பெண்ணுக்கு ஆதினியை பார்த்து என்ன தோன்றியதோ, “சரி கேளுங்க” என்றாள்.

“கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி நீங்க ஒருத்தர் கிட்ட பேசுனீங்களே அவங்கள உங்களுக்கு முன்னாடியே தெரியுமா” என்று பதில் அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு கேட்டாள்.

முகம் சுருக்கிய அந்த பெண், “அது உங்களுக்கு எதுக்கு?” என்று சுற்று புருவம் உயர்த்திட,

“இல்ல எனக்கு அவரை பத்தி தெரிஞ்சிக்கணும். ஏன்னா அவரு என் அப்பா கிட்ட புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்காரு. அதான் அவரு எப்படின்னு தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன் வேற ஒன்னும் இல்லை” என்று  தன்மையாக பதில் அளித்தவள் தப்பி தவறி கூட அவனின் குணத்தை கீழிறக்கி பேசவில்லை என்பதை விட பேச பிடிக்கவில்லை என்றே சொல்லலாம்.

“ஹோ” என்ற அந்த பெண், ”அவங்கள எனக்கு உண்மையாவே யாருன்னு தெரியாது. ஆனா அவங்க ரொம்ப நல்லவங்கனு மட்டும் தெரியும்” என்ற பதிலில் ஆதினி திகைத்துதான் போனாள்.

“எப்படி சொல்றீங்க?”

“யாருன்னே தெரியாத ஒரு கர்ப்பிணி பெண்ணான எனக்கு அந்த பஸ்ல இடம் கொடுத்து உட்கார வச்சது மட்டும் இல்லாமல், எங்க அந்த கூட்டத்துல எனக்கு அழுத்தம் கொடுப்பாங்களோன்னு நினைச்சி எனக்கு பாதுகாப்பு கொடுத்தாங்க. ஆனா பாவம் அந்த அண்ணா” என்று நிறுத்தினாள் அந்த பெண்.

“எதனால பாவம்னு சொல்றீங்க?” என்றவளுக்கு உள்ளுக்குள் அதுக்கு காரணம் தானாக இருக்க கூடாது என்று வேண்டியது.

“எதோ ஒரு பொறுக்கி ஒரு பெண்ணை உரசினதுக்கு அந்த பொண்ணு அது அண்ணான்னு நினைச்சி பளார்னு கன்னத்துல அடிச்சி தேவையில்லாம பேசிடுச்சிமா” என்று நடந்ததை அப்படியே கூற, ஆதினி அந்த இடத்திலே நொறுங்கி போனாள்.

அவள் எதுவும் பேசாமல் இருக்க அந்த பெண்ணே, ”பொதுவா எல்லா கஷ்டமும் நல்லவங்களுக்கு மட்டும்தான்  வரும் போல” என்று ஆயாசமாக கூற, ஆதினியால் பதில் சொல்ல முடியாதபடி தொண்டை அடைத்தது.

அதற்குள் அந்த பெண்ணின் குழந்தை அழுகவும், ”சரிம்மா பாப்பா அழுகுறா நான் கிளம்புறேன்” என்று புறப்பட்டாள்.

அந்த பெண் சென்றது கூட அறியாமல் அவளின் எண்ணம் முழுவதும் இத்தனை நாட்கள் அவனை எப்படி எல்லாம் நோகடித்தோம் என்று நினைத்து வருந்தியது.

அதிர்ச்சியின் பிடியிலும் உச்சக்கட்ட குற்ற உணர்ச்சியிலும் கால்போன போக்கில் நடக்க தொடங்கியிருந்தாள் ஆதினி.

 ***

இங்கே வேகமாய் விபுவை காண அவன் புக் செய்திருந்த ஹோட்டலிற்கு வந்தான் வசீகரன். உடனே அழைப்பு விபுவிற்கு விடுத்தான்.

“டேய் எங்கடாஇருக்க? நான் இங்க வந்தே ஒரு மணிநேரம் ஆச்சி” என்று விபு போன் என்றும் பாராமல் கத்த,

“நான் இங்க ஹோட்டல்க்கு கீழ உள்ள லான்லதான்  இருக்கேன் நீ சீக்கிரமா வா” என்க.

“ஏன்டா அங்க இருக்க மேல ரூம்க்கு வரவேண்டியது தானே” என்று சொல்ல,

“அதுக்கு இப்போ நேரம் இல்ல மச்சி, நீ சீக்கிரமா டாக்குமெண்ட்ஸ் அண்ட் செக் எடுத்துட்டு கீழ வா” என்று அழைப்பை துண்டித்தான்.

“ஹலோ ஹலோ” என்று விபு கத்த அவனுக்கு, ”டொய்ங் டொய்ங்” என்றே சத்தம் வர கடுப்புடன் தன் நண்பனை காண தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கீழே சென்றான்.

கீழே வந்த விபுவிற்கு அவனை கண்டதும் அதிர்ச்சியே…

கம்பிரத்துடனே வலம் வந்த வசீகரனை மட்டுமே கண்டிருந்த விபுவிற்கு இப்போது சாதாரண வாழ்க்கையை வாழும் அவனை பார்க்க முடியவில்லை.

சாதாரண கட்டம் போட்ட சட்டையும் அதுக்கு தகுந்தாற்போல் போல் பேண்டும் அணிந்திருந்தவனை பார்த்தால் அத்தனை பெரிய மாலிற்கு சொந்தக்காரன் போல் ஒரு படி கூட தெரியவில்லை‌.

“மச்சி” என்று அவனின் முதுகில் குத்து ஒன்றை குத்த,

“எவ்வளோ மாறுனாலும் இப்படி அடிக்கிறதை மட்டும் மாத்தவே மாட்டேங்கிறானே கடங்காரா” என்று புலம்பியவன், ”மச்சான்” என்று அணைத்துக் கொண்டான்.

வசீயும் அவனை அணைத்து விடுவித்தவன், “எப்படிடா இருக்க? வேலை எல்லாம் எப்படி போகுது? அப்பா எப்படிடா இருக்காரு? ஒன்னும் பிரச்சனை இல்லையே” என்று வசீ பாட்டிற்கு கேள்வி கனைகளை தொடுக்க,

“போதும் கேள்வி கேக்குறதை நிறுத்து முதல… அங்க எல்லாரும் எல்லா வேலையும் நல்லாதான்  இருக்கு. இது என்ன கோலம் வசி நீ இப்படி ஒரு ட்ரெஸ் வியர் பண்ணிருக்க” என்று பதிலோடு அவன் உடையை சுட்டி காட்டி கேட்டான்.

“ஏன்? இந்த ட்ரெஸ்க்கு என்ன குரைச்சல் சொல்லு, நல்லா தானே இருக்கு” என்று ‌அவனும் அந்த உடையை காட்டி சொல்ல,

“நல்லாதான்டா இருக்கு. ஆனாலும் உன்னோட ரேஞ்சுக்கு நீ இப்போ போட்டுருக்க ட்ரெஸ் பார்த்தாதான்  நல்லா இல்லைன்னு தோனுது” என்று தன்னிலை விளக்கம் தந்தான்.

“நம்மளோட ஆளுமையை நாம போட்டுருக்க ட்ரெஸ் முடிவு பண்ண கூடாதுடா. நம்மளோட பிஹேவியவர்தான்  முடிவு செய்யணும் என்னைக்குமே. உடுத்துற உடை வச்சி ஒருத்தவங்கல கணக்கு போட கூடாது மச்சி அது ரொம்பவே தப்பு புரியுதா” என்று அவனின் தவறை புரிய வைத்திட,

“ரொம்ப நல்லா புரியுது மச்சி” என்றான் அவனின் ஆளுமையை கண்டு.

“சரி சீக்கிரமா டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கொடுடா. நான் சைன் போட்டுட்டு கிளம்புறேன். எனக்காக ஆதினி வெயிட் பண்ணிட்டு இருப்பா” என்று வேலையை துரிதப்படுத்த,

“சரி சரி கொஞ்சம் பொறு” என்று கொண்டு வந்த டாக்குமெண்ட்ஸ் மற்றும் செக் எடுத்து அவனிடம் கொடுத்தான்.

அதனை படித்து கூட பார்க்காத வசி அதனை பெற்றவுடன் கையெழுத்திட்டான்.

“மச்சான் படிக்காம சைன் போடுறடா” என்று பதற,

“எதுக்கு படிக்கணும் சொல்லு. உன்மேல நான் அதிகமாவே நம்பிக்கை வச்சிருக்கேன்டா. அதுனால படிச்சு பார்த்துதான் கையெழுத்து போடணும்னு  அவசியம் இல்லை” என்று பதிலளித்தான்.

அவனின் பதிலில் அகம் மகிழ்ந்து போனான் விபுனன்.

“இந்தா எல்லா பேப்பர்லையும் சைன் பண்ணிட்டேன் நீ வேலைய ஸ்டார்ட் பண்ணிடு சரியா. இந்த விஷயம் யாருக்கும் வெளிய தெரிய கூடாது” என்றவன், ”நேரமாச்சி நான் கிளம்புறேன்டா” என்று விடைப் பெற்றான்.

                                                  ***

கோயிலுக்கு வேகமாக வந்த வசி, ஆதினிக்கு அழைப்பு விட அதுவோ அடித்து ஓய்ந்தது.

விடாது முயற்சி செய்து பார்த்த வசிக்கும் மீண்டும் மீண்டும் நோ அன்ஸர் என்பதே விடையாக கிடைக்க, அதனால் கோயிலுக்குள் சென்று பார்வையிட்டான்.

கோயில் முழுவதும் தேடிய வசிக்கு ஆதினி தென்படாமல் போகவே பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது.

இருந்தும் அவள் தன்னிடம் வீம்புக்காக விளையாடுகிறாள் என்று தோன்றவும் கோபம் தலைக்கேறியது.

எதனால் இப்பெண் இப்படி என்னை பாடாய் படுத்துக்கிறாள். தன்னை மட்டும் காயப்படுத்த வேண்டும் என்று நினைத்து அனைவரின் நிம்மதியையும் கெடுக்கிறாளே என்று ஆயாசமாக இருந்தது அவனுக்கு.

ஆனாலும் அவன் மற்றொரு மனமோ கடந்த இரு தினங்களாக அவளுடைய செயல்கள் யாவும் பார்த்தால் இப்படி செய்திருக்க மாட்டாள் என்றும் அறிவுறுத்தியது.

அவனால் ஒரு நிலைப்பாட்டிற்கு வர முடியாததால், பக்கத்திலிருந்த அனைவரிடமும் அவளின் அடையாளங்கள் சொல்லி பார்த்திங்களா என்று கேட்டிட அனைவரது பதிலும் இல்லை என்றே இருந்தது.

இறுதியில் அவன் மனம் அடித்து கூறியது, அவள் ஏதோ ஆபத்தில் உள்ளாள் என்று.

சற்றும் தாமதிக்க விரும்பாமல் அவள் புகைப்படம் வேண்டி பூவிற்கு அழைக்க அதுவோ எடுக்கப்படமால் போக வேறு வழியின்றி சதாசிவத்திற்கு அழைப்பு விடுத்தான்.

அவர் எடுத்தவுடனே, “நீங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டீங்களா?” என்றே கேட்க,

“…“

“சொல்லுப்பா ரெண்டு பேரும் கிளம்பிட்டீங்களா, இல்லை இன்னும் கோயில்லதான் இருக்கீங்களா”

“… “

“தம்பி ஏன் நீ எதுவும் பதில் சொல்லாம அமைதியா இருக்க, அங்க ஏதும் பிரச்சனையா”

“…”

“ஏதாவதுபேசு தம்பி. எனக்கு நீ பேசாம இருக்கிறத பார்த்தா ஏதோ தப்பா படுது. என்னென்னு விஷயத்த சொல்லு பா” என்று தந்தையாய் பதறினார்.

“சா… சார்”

“சொல்லு வசி”

“சா… சார் மே… மேடத்தை இங்க கா… காணோம் சார்” என்று மூச்சிறைக்க சொல்ல,

“எ… என்ன எ… ன்ன சொல்ற, பா… பாப்பாக்கு என்ன ஆச்சி” என்று கலங்கியவராய் வார்த்தை திக்கி கேட்டார்.

“சார் இங்க எல்லா இடத்துலையும் மேடத்தை தேடிட்டேன் சார். ஆனா அவங்க இங்க எங்கேயும் இல்லை. அவங்கள பத்தி பக்கத்துல கூட விசாரிச்சேன் சார் ஆனா யாருக்கும் எதுவும் தெரியலைன்னு சொல்றாங்க. அதான் மேடத்தோட போட்டோ இருந்தா கொடுங்க சார் பக்கத்துல விசாரிச்சு பாக்குறேன்”

“அய்யோ என்னோட பொண்ணுக்கு என்ன ஆச்சோ தெரியலையே” என்று கதற,

“சார் சார் நான் கண்டிப்பா மேடத்தோடுதான்  வீட்டுக்கு வருவேன். நீங்க இதை பத்தி யாருக்கிட்டயும் எதுவும் சொல்லாதீங்க சார். அப்புறம் எல்லாரும் பயந்துடுவாங்க” என்று சிறியவன் ஆறுதல் கூறினான்.

பெரியவரோ, ”நான் யார்க்கிட்டயும் சொல்லல நீ எங்க இருக்கன்னு சொல்லு நான் அங்க வரேன்”

“இல்ல வேணாம் சார், மேடம் என்னோட பொறுப்பு நான் அவங்களை வீட்டுக்கே கூட்டிட்டு வருவேன். அப்போ பாருங்க இப்போ நீங்க போட்டோ மட்டும் அனுப்புங்க போதும்” என்று நிதானமாக உறுதியான குரலில் உரைத்தான்.

“சரி” என்றவர் அவனுக்கு போட்டோ அனுப்பி வைத்தார்.

போட்டோ வந்த அடுத்தநொடியே தாமதிக்காமல் விபுவிற்கு அழைத்த வசி, “மச்சி உனக்கு ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன் பாரு. அந்த பொண்ண காணோம்டா. அந்த போட்டோ காட்டி கொஞ்சம் இங்க தேடு. அப்புறம் நமக்கு தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லி சீக்ரெட்டா தேட சொல்லு” என்று துரிதபடுத்த,

“சரி மச்சான்” என்று வசி கூறிய வேலையை தொடங்கினான்.

அதேபோல் அவனுக்கு தெரிந்த இன்ஸ்பெக்டரிடம் உதவியை நாடினான் விபு.

விடாமல் அவளது நம்பருக்கு அழைப்பு விடுத்து கொண்டே இருந்தான் வசி.

கிட்டதட்ட அவள் காணாமல் போய் இரண்டு மணிநேரங்கள் கடந்து முடிந்திருந்தது.

இவரும் வெவ்வேறு இடங்களில் தேட, அவர்களுக்கோ எந்த ஒரு க்ளூவும் தெரியவில்லை.

அப்போதே வசிக்கு ஒரு ஐடியா தோன்றிட அதனை செயல்படுத்தவதற்காக விபுவிற்கு அழைப்பு விடுத்தான்.

“மச்சி! நான் உனக்கு அந்த பொண்ணோட நம்பர் அனுப்பி இருக்கேன். நீ அதை உடனே நெட்வொர்க் கம்பெனிக்கிட்ட கொடுத்து ஜிபியஸ் மூலமா அந்த நம்பர் எங்க இருக்குன்னு லொக்கேஷன் பார்த்து சொல்லுடா. க்விக்கா பண்ணு எனக்காக அவ காத்திருப்பா” என்று தன் அவசரத்தை அவசியத்தை எடுத்துரைக்க,

“அந்த பொண்ணு யாருடா?” என்று சந்தேகத்தோடு வினவ,

“ஆதினி மச்சி” என்று பதற்றத்துடன் பதில் வந்தது.

அதன் பின் விபு வசி சொன்னது போல் ஜீபியஸ் மூலமாக லொக்கேஷன் ஐடென்டிஃபை பண்ண சொல்ல, அவர்களும் வேகவேகமாக அதனை செய்ய தொடங்கினர்.

அடுத்த பத்து நிமிடத்திலேயே அவள் இருக்கும் இடம் தெரிந்து விட, தாமதிக்காமல் விபுனன் வசிக்கு லொக்கேஷன் ஷேர் செய்து கூறினான்.

அடுத்த நொடியே அவனிடம் இருந்த கார் சீறிய வேகத்தில் ஆதினி இருக்கும் இடத்தை நோக்கி பாய்ந்தது.

வசியின் வேகமே அவனின் கோபத்தை காட்ட தொடங்கியது. அது கிராமம் என்பதாலோ என்னவோ அவன் செல்லும் பாதையில் யாரும் இல்லை. இல்லையென்றால் அவனால் இன்று பலபேருக்கு காயம் ஏற்பட்டிருக்கும்.

இருட்டறையில் கைகால்கள் கட்டப்பட்டு ஒரேயொரு குண்டு பல்ப் வெளிச்சத்தில் அரை மயக்க கலக்கத்தில் கதிரையில் கட்டப்பட்டிருந்தாள் ஆதினி.

அவளை முழு மயக்கத்தில் வைத்திருக்காமல் அரை மயக்கத்திலே கடத்தியிருந்தவர்கள் வைத்திருந்தனர்.

அவளுக்கு என்ன நடந்தது நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.

கால் போன போக்கில் நடந்து சென்றவளை வழிமறித்து முகவரி கேட்பது போல் கேட்டு முகத்தில் துணிகொண்டு மூடி காருக்குள் இழுத்தனர். அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள அத்தனை மயக்கத்திலும் திமிறியவளை கன்னத்தில் ஓங்கி அறைந்து அடக்கி இழுத்துச் சென்றனர். அதற்கு மேல் அவளுக்கு எதுவுமே நினைவில் இல்லை.

யார் அவர்கள்? எதற்கு தன்னை கடத்தினார்கள்? என்று அந்த அரை மயக்கத்திலே துவண்ட தலையோடு யோசிக்க யோசிக்க மயக்கநிலை சிறிது சிறிதாக தெளிய தொடங்கியது.

எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் தவித்து அந்த அறையில் இருந்தவளுக்கு ஏதோ மங்கலாக தூரத்தில் வெளிச்சம் தெரிவது போல் தோன்ற, தன்னாலான அளவு கண்களை திறந்து பார்க்க முயன்றாள்.

அந்த வெளிச்சதோடு சேர்த்து காலடி சத்தமும் கேட்கவே, யாரென்று அறியும் நோக்கத்துடன் கண்ணை மூடிக்கொண்டாள்.

கண்ணை மூடின நேரம் அவள் முகத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்ற, அதில் விளுக்கென்று முழித்தவள் கண்ணுக்கு அப்போதும் மங்கலாகவே தெரிந்தது.

“என்ன நான் யாருன்னு சரியா தெரியலையா” என்று எதையோ சாதிக்க போவது‌ போல் சிரித்தான்.

அந்த குரலே அவன் யாரென்று புரிந்து போனது ஆதினிக்கு. அத்தனை நிமிடங்கள் அமைதியாக அரை மயக்கத்தில் இருந்தவள் முயன்று விழித்தாள்.

புருவத்தை சுருக்கி, ”உன்ன மாதிரி ஆளுங்களை எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு  எனக்கு அவசியம் இல்லை” என்று திமிராகவே சொன்னாள்.

“என்னோட இடத்துல இருக்கும்போதே உனக்கு இந்த திமிரு” என்று அவளின் தாடையை பிடித்து அழுத்தம் கொடுக்க,

“விடுடா” என்று தலையை இடவலாக ஆட்டினாள்.

“உன்ன விடுறதுக்காகவா இவ்வளோ கஷ்டப்பட்டு உன்ன தூக்கிட்டு வந்துருக்கேன். நான் வேலை பார்த்த கடைல வச்சி என்னை அசிங்க படுத்தினில அதுக்கு நீ அனுபவிக்க வேணாம்” என்று அவமானத்தின் வெறியோடு கூறினான்.

அவன் இதனை கூறும்போது அவளுக்கு வசியின் நினைவே வந்து போனது. அவன் செய்யாத தவறை நீதான் செய்தாய் என்று கூறி எவ்வளவு அவனை காயப்படுத்தி இருக்கோம். ஆனால் அவன் ஒருநாள் கூட என்னை திட்டியது இல்லையே. ஏன் ஒரு கோபப் பார்வை கூட வீசியதில்லையே.

“ச்சீ நீ தப்பு பண்ண அதான் நான் அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டேன். இதுல என்னோட தப்பு எதுவும் இல்லை. ஒரு பொண்ண தப்பா பாக்குறது என்ன பொருத்தவரைக்கும் அசிங்கமான விஷயம்” என்று முகத்தை சுளித்தாள்.

“எதுடி அசிங்கமான விஷயம். பெண்ணை பாக்குறதா பிடிச்சிருந்தது பாத்தேன் இதுல என்ன தப்பு இருக்கு. உன்ன கைப்பிடிச்சேனா இல்லை உன் பக்கத்துல வந்து இப்படி போட்டோ எடுத்தேனா” என்று சொல்லியே அனைத்தையும் செய்தான்.

அவளால் எதையும் செய்ய முடியாதபடி கைகால்களை கட்டி வைத்திருந்தான் அவன்.

“எந்த வாய் என்னைய அவ்ளோ கேவலமா திட்டுச்சோ அந்த வாயாலையே என்னைப் பார்த்து என்னைய கட்டிக்கோங்கன்னு கெஞ்ச வைக்க போறேன்” என்று ஆங்காரமாக சொன்னான்.

இதனை கேட்ட பாவையவளுக்கு நெஞ்சம் துடிப்பதே ஒரு நொடி நின்றது.

எவ்வளவுதான் தன்னை திமிரான பெண் என்று காட்டிக் கொண்டாலும் கற்பு என்று வரும்போது பயம் தானாக ஒட்டிக் கொள்கிறது.

அந்த நிமிடம் அந்த நொடி அவள் மனம் முழுக்க நிறைந்து இருந்தது வசியே… காதல் எப்போது எப்படி ஒருவருக்கு வரும் என்று அறியா விடயமே. அந்த நொடி அவளுக்கு அவன் மீது காதல் துளிர்வுற்றது. எதிரெதிர் துருவங்களில் ஒரு துருவத்திற்கு காதல் பூத்தது.

தன்னவனிடம் தன்னை காக்கும்படி அவனுடன் மானசியமாக மனதாலே வேண்டினாள்.

“உன்னால என்னைய ஒன்னும் பண்ண முடியாது” என்று அப்போதும் திமிராகவே பதிலளித்தாள்.

“அதையும்தான் பார்க்கலாமே” என்று அவளை நோக்கி நெருங்கினான்.

‘இல்ல இல்ல கண்டிப்பா இந்த உடலும் உயிரும் என் உள்ளம் கவர்ந்த என்னவனான வசிக்கு மட்டுமே’ என்று மனது சத்தமிட, இதனை அறிந்து கொண்ட ஆதினிக்கும் அதிர்ச்சியே… இருந்தும் அந்த கதிரையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடினாள்.

திடிரென்று எதுவோ கிழிவது போல் தோன்ற ஆடித்தான் போனாள் பேதையவள். அதுவும் அது தன்னுடைய ப்ளவுஸ்தான் என்று தெரிந்ததும் உயிரே இல்லை அவளுக்கு.

“என்ன உன்னோட ஜாக்கெட் கிழியுதா, அப்புறம் கிழியாம எப்படி இருக்கும் நான்தான்  அதை ஆணியோட சொறுகி இருக்கேனே” என்று அவளை கீழிருந்து மேலாக அவளது அங்கங்களை பார்வையாலே மேய்ந்தான். அதில் கூனி குறுகி போனாள் பேதையவள்.

“எங்க இப்ப நகறு பார்ப்போம்” என்றவன் அவளின் முந்தானையை பிடித்து உறுவ கையை கொண்டு போக, சீறிப்பாய்ந்து உள்ளே நுழைந்தது வசியின் கார்.

தன்னை காக்க தன்னவன் வந்துவிட்டான் என்று புரிந்த நொடி கண்கள் கலங்க, அவள் இதழ்களோ புன்னகையோடு, ”கரண்” என்று உச்சரித்தது.

“எவன்டா அவன்” என்று திரும்பிய அவனுக்கு ரூத்ரமூர்த்தியாக நின்றிருந்தான் வசீகரன்.

“என்ன ஹீரோவா நீ” என்று கண்ணில் கோரத்துடனே கேட்க,

“நான் ஹீரோ இல்லடா, உனக்கான எமன்” என்றவனின் குரலில் அவனை குதறி விடும் அளவிற்கு கோபம் நிறைந்திருந்தது.

“என்னைய மீறி நீ அவளை காப்பாத்திடுவியாடா” என்று வசியை அடிக்க கை ஓங்கினான்.

அந்த கையை அலேக்காக பிடித்தவன் அப்படியே அவன் முதுக்கு புறம் கொண்டு வந்து எலும்பு முறிக்க தொடங்கினான்.

“எவ்வளவு தைரியம் இருந்தா எங்க மேடத்தை தூக்குவ” என்று அவனை அடித்து நொறுக்கினான் வசி.

அதற்குள் அவன் நண்பர்கள் வந்து வசியிடம் மாட்டிக் கொள்ள, அவர்கள் உயிர் பிரியும் வரை அடித்து நொறுக்கினான்.

அனைவரையும் அடித்து நொறுக்கியவன் வேகமாக ஆதினியிடம் வந்து கைகால் கட்டுகளை பிரித்தெடுத்தான்.

“வாங்க மேடம்” என்றழைக்க,

“என்னால முடியாது” என்று பார்வையை பின்னே காட்டினாள்‌.

அவனும் பின்னாடி பார்க்க, அங்கே‌ அணியில் பாதி கிழிந்தும் கிழியாமலும் மாட்டியிருந்தது அவளின் ஜாக்கெட்.

உடனே கண்ணை மூடி அதனை எடுத்து விட்டான் வசீகரன். அவளின் பார்வை முழுவதும் அவன் மீது இருந்தது. அவனது கண்ணியம் அவளது காதலை பன்மடங்காகியது.

அவன் எடுத்தவுடனே எழுந்த ஆதினி அவனை இறுக்கி அணைத்து கொண்டு கண்ணீர் விட்டாள்.

அவள் அணைக்கவும் அதிர்ச்சியானவன் அவள் புலம்பலில் ஆதரவாக அணைத்தான்.

“ப்ளீஸ் கரண், என்னைய இங்க இருந்து கூட்டிட்டு பொய்டு. எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்கு” என்று கேவலின் நடுவில் சொல்ல,

“ஒன்னும் இல்ல மேடம் உங்களுக்கு, நான் உங்க கூடவேதான்  இருக்கேன்”என்று தைரியபடுத்தியவன் அவனின் சட்டையை கழற்றி அவள் மீது போர்த்தி விட்டான்.

அதற்குள் போலீஸை கூட்டிக்கொண்டு விபு வந்துவிட, கீழே மயங்கிடந்தவர்களை இழுத்துக் கொண்டு சென்றார்கள்.

வசியின் அணைப்பில் இருந்த ஆதினி அவனை விட்டு ஒரு நொடி கூட பிரியவில்லை. இதனை பார்த்த விபுவிற்கு எதுவோ தோன்ற அமைதியாக அங்கு நடப்பதை கவனித்தான்.

அவளை கைத்தாங்கலாக அழைத்து காரில் ஏற்றியவன், விபுவிடம் கண்களாலே இதனை பார்த்துக் கொள்ளும்படி கூறியவன் காரை எடுத்துச் சென்றான்.

ஆதினி கண்ணீரோடு அவனையே பார்த்துக் கொண்டு வந்தாள்.

தீடிரென ஒரு கடையில் நிறுத்தி அவளை அழைத்து வந்து அவளுக்கு உடை வாங்கி மாற்றி வர சொன்னான்.

அவள் மாற்றி வரவும் வேகமாக வீடு நோக்கி வண்டி பறந்தது.

சதாசிவத்தால் அமைதியாக அங்கே அமர்ந்திருக்கவே முடியவில்லை. வாசலிற்கும் ஹாலிற்குமாக நெடுநடையாக நடந்து கொண்டிருந்தார்.

கார் வந்து நின்றதும் வேகமாக வெளிய வந்த சதாசிவம் இறங்கிய ஆதினியை கண்ட பின் கண்கள் இரண்டும் நீர் கோர்த்தது.

“அப்பா” என்று ஓடிவந்து அணைத்து கொண்டாள் ஆதினி.

“உனக்கு ஒன்னும் இல்லம்மா, நீ கவலை படாம இரு பாப்பா” என்று தைரியபடுத்த முயன்றார்.

“ப்பா ப்பா” என்று தேம்பி தேம்பி அழுதவள் வேகமாக அவரிடமிருந்து பிரிந்து அவளது அறைக்கு ஓடி விட்டாள்.

பின்னாடியே சென்ற இருவரும் கதவை தட்ட, அவளின் கேவல் சத்தமே அதிகமாக கேட்டது.

“பாப்பா கதவை திற”

“ப்ளீஸ் பாப்பா கதவை திறடா எனக்காக”

“சார் கொஞ்சம் நேரம் அவங்களை தனியா விடுங்க சார், அவங்களே சரியாகிடுவாங்க” என்று ஆறுதல் வார்த்தைகள் சொல்ல,

“என்ன நடந்துச்சி பா” என்று சதாசிவம் நடந்ததை கேட்க,

அவனும் அங்கு நடந்தது அனைத்தையும் கூறிவிட்டு கிளம்பினான்.

அடுத்தநாள் முழுதும் ஆதினி அறையை விட்டு வெளியே வரவே இல்லை. யாரையும் பார்க்க பிடிக்காது அறைக்குள்ளே முடங்கி போனாள்.

குடும்பமே அழைத்தும் அவள் வெளியவே வரவில்லை. சதாசிவத்தை தவிர யாருக்கும் பெண்ணின் நிலமை புரியாததால் குழம்பி போயினர்.

அவருக்கு புரிந்தது இப்பெணை அறையை விட்டு வெளியே கொண்டு வர ஒரு வழிதான்  என்று… அதுவும் அவருக்கு அத்தனை பிடித்தமில்லை. ஏனெனில் அவளை அந்த அறையிலிருந்து வெளிகொண்டு வர முடியுமென்றால் அது நங்கையால் மட்டுமே முடியும்.

தாமதிக்காமல் வசிக்கு அழைத்த சதாசிவம், “நங்கையை அழைத்து கொண்டு வீட்டு வா” என்று சொல்லி வைத்து விட, சதாசிவம் சொன்னது போலவே நங்கையை அழைத்து கொண்டு வந்தான்.

வரும் வழியில் எல்லாம் வசியை ஒருவழி செய்து விட்டார் நங்கை.

“எதுக்கு ஐயா என்னை அங்க கூப்பிட்டு இருக்காரு”

“அங்க போனாதான்  தெரியும்மா”

“உனக்கு எப்படி தெரியாம போகும் சொல்லு? நீ அங்க தான வேலைக்கு போற” என்று கோபிக்க,

“மா, எனக்கு உண்மையிலே தெரியாதும்மா”

“அப்போ அங்க யாருக்காவது ஏதாவதுபிரச்சனையா வசி சொல்லு” என்று அவனை பாடாய் படுத்தி எடுத்து விட்டார்.

வீடு வரவும், ”நீங்க போங்கம்மா நான் வண்டியை நிப்பாட்டிட்டு வரேன்” என்று சொல்லி நழுவி விட்டான்.

உள்ளே சென்ற நங்கைக்கு அந்த வீட்டின் அமைதி ஏதோ தவறாக உணர்த்தியது.

அவர்கள் வீட்டின் வேலைக்காரன் நங்கையை கண்டு, ” உங்கள மேல வர சொன்னாங்க” என்று விட்டு சென்றான்.

நங்கையும் தயங்கியவாறே மேலே செல்ல, அவரை கண்ட சீதா ஓடி வந்து அணைத்துக் கொண்டார்.

“இங்க பாருங்க நங்கை முந்தாநேத்து கதவை சாத்திட்டு உள்ளே போனவ. கதவையே திறக்க மாட்டேங்கிறா” என்று அழுகையின் பிடியில் சொல்ல,

“என்ன சொல்றீங்க, ஒரு நாள் முழுக்க அறைக்குள்ளேயே இருக்காளா” என்று அதிர்ச்சியுடன் வினவியவர் சீதாவை கடந்து முன்னே நடந்தார்.

பேச்சியமாள் நங்கையை கண்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.

நேராக ஆதினியின் அறை முன் நின்ற நங்கை கதவை தட்ட அந்த புறத்தில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.

“ஆதினி கதவை திற” என்க.

“…”

“ஆதினி கதவை திறம்மா உன்னோட நங்கை அத்தை வந்திருக்காங்க” என்று சீதா கூற,

“…”

“ஆதினி கதவை திற, எதுக்கு இப்படி எல்லாத்தையும் பயமுறுத்துற” என்று சிறு கோபத்துடன் சொல்ல,

“…”

நங்கை அழைத்தும் எந்த ஒரு பதிலும் வரமால் போகவே அனைவருக்கும் பயம் தொற்றிக்கொண்டது.

இதற்கிடையில் இதனை கண்ட வசி, “சார் நான் வேணா கதவை உடைக்கட்டுமா” என்று தற்போதைய நிலையை சுட்டி சொல்ல

“அதெல்லாம் வேணாம் வசி, அவளே கதவை திறப்பா இரு” என்று பதில் சொன்னது நங்கையே.

“அம்மு கதவை திறடா. எனக்கு பயமா இருக்கு” என்ற நொடி கதவை திறந்த ஆதினி நங்கையை அணைத்து கொண்டு கண்ணீர் சிந்திய படியே மயங்கி சரிந்தாள்.

உடனே அவளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆதினியை பரிசோதித்த மருத்துவர், “அவங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, சாப்பிடாம இருந்ததாலதான்  மயங்கி விழுந்துருக்காங்க. ஒரு ட்ரிப்ஸ் போட்டு இருக்கோம் எல்லாம் சரியாகிடும்” என்று கூறி சென்றார்.

ஒரு நாளைக்கு மட்டும் மருத்துவமனையில் இருந்த ஆதினி, நங்கையை தவிர்த்து யாரிடமும் பேசவில்லை. அதுவும் வசியை முற்றிலுமாக தவிர்த்தாள்.

பேச்சியம்மாளுக்குதான்  ஜாதகத்தில் ஏதோ பிரச்சனையா இருக்குமோ என்று தோன்ற சதாசிவத்தை அழைத்துக் கொண்டு ஜோசியரிடம் சென்றார்.

ஜோசியரை பார்த்து விட்டு வந்த இருவரின் முகமும் புன்னகையிலே காட்சியளித்தது. ஆனால் இருவருமே எதுவும் கூறவில்லை.

ஒருவாரம் கழித்தே ஆதினி சிறிது சிறிதாக தன்னிலைக்கு திரும்பினாள்.

இந்த ஒரு வாரமும் நங்கை பகல் முழுதும் ஆதினியுடனே நேரத்தை கழித்து இரவுதான் வீட்டிற்கே சென்றார் அதுவும் ஆதினி உறங்கிய பின்பே.

அடுத்து வந்த வாரத்திலிருந்து ஆதினி பேக் டூ ஃபார்ம் என்றிருந்தாள்.

அன்று காலை அனைவரும் சாப்பிட அமர, ஆதினிக்கு பிடித்த கேசரி செய்திருந்ததால், அதனை ரூசி பார்த்து சாப்பிட தொடங்கினாள்.

இதுதான்  சரியான நேரம் என்று மெதுவாக பேச்சை தொடங்கினார் சதாசிவம்.

“பாப்பா நீ எனக்கு செஞ்சி கொடுத்திருக்கிற வாக்கை காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துடுச்சி” என்று அவர் சொல்ல வருவதற்கு மெதுவாக அடிப் போட்டார்.

தந்தை கூற வருவது முதலில் புரியாமல் இருந்த ஆதினி, ”காப்பாத்திட்டா போச்சி பா” என்று சொன்ன பிறகே அது என்ன வாக்குறுதி என்று புரிப்பட தானாகவே விழிகள் வசியை தேடியது.

“ரொம்ப சந்தோஷம்ம்மா, அப்போ உடனே உன்னோட அத்தை, மாமா கிட்ட பேசிடுறேன்” என்று மகிழ்ச்சியுடன் சொல்ல,

“ஆனா அப்பா, இப்போ என்னோட கல்யாணத்துக்கு என்ன அவசரம்” என்று இச்செயலை நிறுத்தும் பொருட்டு வினவ,

“உனக்கு ஏதோ நேரம் சரியில்லையாம்மா, இந்த வருஷத்துக்குள்ள கல்யாணம் நடக்கலன்னா அப்புறம் ரெண்டு வருஷம் ஆகுமா அதுனாலதான்  இப்பவே முடிச்சிடலாம்னு இருக்கோம்” என்று அதிரடியாக பதில் சொன்னார் பேச்சியம்மாள்.

அதன்பின் அவளால் எதுவும் பேசமுடியவில்லை.

அவளது மௌனத்தையே இவர்கள் சம்மதமாக எடுத்து அடுத்தடுத்த வேலையைத் தொடங்கினர்.

நேரம் தாமதிக்க விரும்பாமல் உடனே ஆதினியின் மாமாவான பரணிதரனுக்கு அழைப்பு விடுத்தார்.

                                                   ***

லண்டன்…

“மாம் நான் கிளம்புறேன் எனக்கு நேரமாகுது” என்று சொல்ல,

“இருடா ஒரு இரண்டு நிமிஷம் பொறு. நான் வந்தறேன்” என்று சமையலறையில் இருந்து சொன்னார்.

“மாம் இட்ஸ் ஆல்ரெடி லேட். நான் வெளிய சாப்பிட்டுக்கிறேன்” என்க.

“டேய் இருடா வரேன்” என்று கோபமாக சொன்னவர் வெளியே வந்தார் அவனின் தாய் சௌந்தர்யா.

“நான் உன்கிட்ட வெளிய லன்ச் முடிச்சிக்க தான சொன்னேன். நீ தான எனக்கு சமச்சி கொடுங்கன்னு சொன்ன” என்று ‌தன் மகனை பார்த்து கேள்வி கேட்க,

“மாம் அப்போ நேரம் இருந்தது சொன்னேன். பட் இப்போ டைம் சுத்தமா இல்ல” என்று நேரமின்மையை காட்டினான்.

“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது, ஒழுங்கா சாப்பிட்டுதான்  கிளம்புற. நீ இல்லாம அந்த ஹாஸ்பிட்டல எதுவும் நிக்க போறது இல்ல சரியா” என்று அதட்டி உதட்டி சாப்பிட அமர வைத்தார்.

“மம்மி நீ ரொம்ப ஓவரா பண்ணுறீங்க, அப்புறம் நான் டாடி கிட்ட கம்ப்ளெயிண்ட் கொடுக்க வேண்டியதா இருக்கும் பாத்துக்கோங்க” என்று மகன் தாயை மிரட்ட,

“ஆமா ஆமா நான்தான்  இங்க ஓவரா பண்றேன் பாரு. அப்பனும் மகனும் சேர்ந்துதான் என்னையே கொடுமை படுத்துறீங்க, இதை சமைச்சி கொடு அதை சமைச்சி போடுன்னு” என்று புலம்பினார்.

“சரி சரிம்மா ரொம்ப பிகு பண்ணாத” என்றவன் தன் மனதேவதைக்கு பிடித்தமான உணவை தேடினான்.

“கேசரி எங்கம்மா?” என்று கேட்டான் அபிநந்தன்.

“டேய் ரவா நேத்தே தீந்து போச்சிடா. உனக்கு டெய்லியும் கேசரி செஞ்சே தீர்ந்து போகுது” என்று புலம்ப,

“ஆமா நான் கேசரி இல்லாம மதிய லன்ச் சாப்பிட மாட்டேன்னு தெரியும்ல. அப்புறம் என்னமா நேத்தே வாங்கி இருக்க வேண்டியது தானே” என்று சிடுசிடுத்தான்.

“கொஞ்சம் அடங்கு தம்பி. ஒருநாள் கேசரி சாப்பிடலைனா உனக்கு ஒன்னும் ஆகாது சரியா” என்று வாரியபடியே உள்ளே வந்தாள் அவளின் பாசமிகு தங்கை மிளனி.

“மிளா” என்று சத்தம் போட,

“போடா அந்த பக்கம் உன்கூட சண்ட போட எனக்கு ஸ்ட்ரென்த் இல்லை. நானே இப்போதான்  ப்ராக்டிஸ் முடிச்சிட்டு வரேன்” என்றவள் இருக்கையில் சோர்வாக அமர்ந்தாள்.

“இன்னைக்கு ஒருநாள் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோடா மகனே. சாய்ங்காலம் போய் வாங்கிட்டு வரேன்” என்று அவனை செல்லம் கொஞ்சி சாப்பிட வைத்தே மகனை அனுப்பினார் சௌந்தர்யா.

பரணிதரன் சௌந்தர்யாவின் மக்களே அபிநந்தன் மற்றும் மிளனி. பரணிதரன் மருத்துவர் என்பதால் இங்கே வேலைக்கு சேர்ந்தவர் அப்படியே இங்கேயே செட்டிலாகி இப்போது மூன்று தளங்கள் கொண்ட ஹாஸ்பிடல் நடத்தி வருகிறார்.

அபியும் மிளனியும் கூட மருத்துவம்தான் தேர்ந்தெடுத்தனர். அபி இப்போது நந்தன் மல்டி ஸ்பெஷலிஸ்ட் ஹாஸ்பிடலில் குழந்தைகள் நல மருத்துவனாக இருக்கிறான். அதே மருத்துவமனையில் மிளனி இப்போதுதான் படிப்பை முடித்து ப்ராக்டிஸில் இருக்கிறாள்.

மருத்துவமனைக்கு வந்தடைந்த அபி, தன் வேலையில் முற்றிலுமாக இறங்கி விட்டான்.

அனைத்து பேஷன்ட்ஸையும் பார்த்த பிறகே அவனுக்காக இருந்த ஓய்வறைக்கு சென்றவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அவன் மொபைலில் இருந்த அவன் தேவதையை இரசிக்க தொடங்கினான்.

“சாரி ஃப்ளவர் இன்னைக்கு உன்னோட ஃபேவ்ரட் டிஷ்ஷ என்னால சாப்பிட முடியல. ஐ ஃபீல் வெரி பேட் டுடே” என்று அவனின் ஃப்ளவரிடம் தன் மன்னிப்பை வேண்டினான்.

வேலை இருந்த நேரம் பரணிதரனுக்கு சதாசிவம் அழைப்பு விடுத்தார்.

அதனை கண்ட பரணி மணியை பார்க்க அது மாலை ஐந்து என காட்ட, அப்போ இந்தியாவில் இது இரவு என புரிந்து கொண்ட பரணி அவரின் அழைப்பை ஏற்றார்.

“மாப்பிள்ளை வேலையா இருக்கீங்களா” என்க.

“வேலை இருக்குதான், பரவாலை சொல்லுங்க மச்சான்” என்று சொல்ல,

“மாப்பிள்ளை நாம முன்னாடியே பேசி வச்சதுதான் அதுக்கு இப்போ நேரம் வந்துடுச்சி. ஆதினிக்கு இந்த வருஷத்துலையே கல்யாணம் பண்ணணும்னு சொல்றாங்க, இல்லனா ரெண்டு வருஷம் ஆகுமா கல்யாணம் பண்ண. பாப்பாவும் படிப்ப முடிச்சிட்டா” என்று நிறுத்தினார்.

“சந்தோஷமான விஷயம்தான் மச்சான். சீக்கிரமாவே நம்ம பசங்க கல்யாணத்தை முடிச்சிடலாம். இவனுக்கு இருபத்தி ஏழு வயசாக போகுது. உங்க தங்கச்சி கிட்ட பேசிட்டு நாளைக்கு போன் பண்றேன்” என்று வைத்தார் பரணிதரன்.

சொன்னதை போலவே இரவு மனைவியிடம் பேசினார் பரணிதரன்.

சௌந்தர்யாவுக்கு அத்தனை சந்தோஷம் அபி மற்றும் ஆதினியின் திருமண பேச்சை கேட்டு.

“எனக்கு ரொம்ப சந்தோஷம்ங்க நாம சீக்கிரமாவே இவங்க கல்யாணத்தை வச்சிடலாம்ங்க” என்று மனைவி சொல்ல,

“ஆமா சௌந்தர்யா சீக்கிரமே வைக்கணும் அப்போ தானே இந்தியா போக முடியும்” என்று எதையோ நினைத்து மனைவிக்கு பதில் சொன்னார் பரணிதரன்.

“இப்போதைக்கு அபிகிட்ட எதுவும் சொல்லாத ஒரு சர்ப்ரைசா இருக்கட்டும்” என்க

“சரிங்க” என்றார் சௌந்தர்யா.

அடுத்தநாள் காலை உணவு மேசையில் நால்வரும் சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்க,

“நெக்ஸ்ட் வீக் நீங்க மூணு பேரும் இந்தியாவுல இருக்கிற உங்க மாமா வீட்டுக்கு போறீங்க. சோ மிளனி அண்ட் அபி கொஞ்சம் ஃப்ரீ ஆகிக்கோங்க” என்று சொல்ல

வேகமாக தன் தேவதையை காணப்போகும் ஆர்வத்தில், ”டபுல் ஓகே டாடி” என்றான் அபிநந்தன்.

Leave a Reply

error: Content is protected !!