அனல் 10

அனல் 10

அனல் 10

 

ஒரு வழியாக கடந்த கால நினைவுகளிலிருந்து வெளிவந்து அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர்.  

 

லக்ஷ்மியின் கடந்த கால கசப்புகளை அனைவருமே கடந்து வந்திருந்தனர். அவளையும் கடக்க வைத்திருந்தனர்.

 

மித்ரனும், மித்துமாவும், விவேகனும் இப்பொழுது தங்களுடைய ஜாகையை தென்றலின் வீட்டிற்கே மாற்றி விட்டனர்.

 

தரை தளத்தில் மித்துமா உடன் மித்ரன் மற்றும் விவேகன் குடியேறி இருக்க முதல் தளத்தில் தென்றலின் கூடு, இப்பொழுது அவர்களுடன் லக்ஷ்மியும்.

 

இரண்டாம் தளம் இப்பொழுதுதான் எழுப்ப பட்டு கொண்டிருந்தது அதுவும் விவேகனின் விருப்பத்திற்கினங்க.

 

தமிழ் வழமைப் போல தூர நின்றே தென்றலை ரசித்துக் கொண்டிருந்தான்.

 

இவர்களை விட்டு இவன் தள்ளி நிற்பதற்க்கும் தமிழின் அன்னையே ஒரு காரணமாக இருந்தார். தென்றல் வீட்டில் பண வசதியை அறிந்து கொண்ட அவர், மகன் இவர்களுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து கொண்டு அவனிடம் பணத்திற்காக சண்டையிடத் துவங்கவும் இவர்களிடம் இருந்து விலகிக் கொண்டான். எப்பொழுதாவது மட்டுமே தென்றலின் அப்பாவின் கடைக்கு மட்டும் சென்று விவேகனையும் மித்ரனையும் சந்தித்து வருவான் வீட்டிற்கு செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தான்.

 

அக்ஷா நல்ல மதிப்பெண் பெற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாள்.

 

மேல்நிலை வகுப்பிற்க்காக விவேகன் அவளை தமிழின் தம்பி பயிலும் ரெஸிடென்ஷியல் பள்ளியில் சேர்த்து விட்டான்.

 

அவளாவது சற்று தைரியம் மிக்கவளாக இருக்க வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அவளையும் தென்றலைப் போல  பொத்தி வைத்து வீண் செய்து விட கூடாது என்னும் முடிவில் அவன் தெளிவாக இருந்தான். (ஆக தென்றல் இப்படி பயந்து சாகுறதுக்கு நீதான் காரணமா என் ராசா)

 

இந்த நிலையில் தென்றல் மீண்டும் தன்னுடைய கூட்டுக்குள் ஒடுங்க துவங்கியிருந்தாள்.

 

பொதுவாகவே தென்றல் நிறைய விஷயங்களுக்கு பயந்த சுபாவம் உடையவளாக இருந்தாள்‌. திடீரென அவள் அருகில் யாரும் தும்மினால் கூட பயந்துவிடுவாள். மற்றபடி மனிதர்களைக் கண்டு பயம் கொள்பவள் அல்ல. ஆனால் பாலாவின் சந்திப்பிற்குப் பிறகுதான் ஆண்களைக் கண்டாலே நடுங்கும் அளவிற்கு மாறி இருந்தாள். 

 

அதிலிருந்து அவளை மீட்டுக்கொண்டு வரவே விவேகன் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டி இருந்தது. அதிலிருந்தும் மீட்டு சற்று தேத்தி. விவேகன் ஒருவாறு  உருட்டி, மிரட்டி, கெஞ்சி, கொஞ்சி என அவளை சற்று தைரியம் மிக்கவளாக வெளியே காட்டிக் கொள்ளும் அளவிற்கு தேற்றியிருந்தான்.

 

ஆனால் அவர்கள் தஞ்சை சென்று வந்த பிறகோ நிலைமை முன்பை விடவும் மோசமானதாக மாறி இருந்தது.

 

விவேகனுடன் மட்டுமே ஒட்டி கொண்டு அலைந்தவள், இப்பொழுதெல்லாம் அவனிடமே எட்டி நின்றுதான் பேசிக் கொண்டிருக்கிறாள்.

 

அவள் கடைசியாக விவேகனுடன் சற்று நன்றாக பேசியது என்று பார்த்தால் தமிழின் மாமா வீட்டில் இருந்த கடைசி நாளாக மட்டுமே இருந்தது.

 

மித்ரனிடமும் முன்பு போன்ற அரட்டைகள் எதுவுமே இல்லை. லக்ஷ்மி இடம் மட்டுமே அவளுடைய வழமை மாறாமல் இருந்தது.

 

தென்றலின் இந்த நடவடிக்கை தேவகியை சந்தேகம் கொள்ள செய்திருந்தது. உடனே விவேகனை அழைத்து பிடி பிடி என பிடித்து எடுத்திருந்தார்.

 

ஒரு வழியாக விவேகனும் தென்றல் கடத்தபட்ட விஷயத்தை சொல்லி முடித்து விட்டான்.

 

விஷயம் அறிந்த தேவகி தைரியமானவர்தான் ஆனால், அவராலுமே உடனடியாக அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியவில்லை. 

 

ஒரு வார கால இடைவெளியில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் தர்மராஜின் காதுகளுக்கும் சென்றடைந்திருந்தது.

 

பெற்ற இரு பெண் செல்வங்களையும் கண்ணில் வைத்து தாங்குபவர் அந்த மனிதர். இத்தனை பெரிய சம்பவங்களை எல்லாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து பழகி இருந்தவருக்கு, அவர் பெண்ணுக்கே அந்த நிலையா என நினைத்து பார்க்கும் போதே உயிர் நின்று துடித்தது, அந்த பாசகார தகப்பனுக்கு.

 

அதன் பிறகு சற்றும் யோசிக்கவில்லை அவர், அன்று இரவே பிள்ளைகளை மித்துமா மற்றும் மித்ரனின் பொருப்பில் விட்டு விட்டு தேவகியையும் விவேகனையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார் மனிதர் தஞ்சையை நோக்கி.

 

இதற்கு மேலும் இதை வளர விட கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

 

மறுநாள் காலை தஞ்சையில் உள்ள தமிழின் மாமாவை சென்று சந்தித்து, அவர் செய்த உதவிக்கு மனமார நன்றி தெரிவித்தனர் தர்மராஜ் மற்றும் தேவகி தம்பதியினர்.

 

அதன் பிறகு சிறை சாலைக்கு சென்றவர்கள் பாலாவை சந்தித்தனர்.

 

அவன் நிலையைக் கண்ட பெரியவர்கள் சற்று நடுங்கி தான் போனார்கள்.

 

மெலிந்த உடல் என்பதை விட நலிந்த உடலுடன், ஆங்காங்கே கருமையான தளும்புகளுடன் அவர்களுக்கு எதிரே அமர்ந்திருநதவன் இருபத்தைந்து வயது இளையன் என சொன்னால் யாராலும் நம்ப முடியாதோர் தோற்றத்தில் இருந்தான் பாலா.

 

அவனை இந்த நிலையில் ஆளாக்கியவனை கண்டு கோபம் கொள்வதா அல்லது தங்கள் பிள்ளைக்காக அவன் இத்தனை ஆபத்தானா செயலை செய்ததை எண்ணி பெருமைக் கொள்வதா என புரியாத நிலை இருவருக்கும்.

 

ஒருவழியாக இருவரும் மனதை திடப்படுத்தி கொண்டு பாலாவிடம் தன் பிள்ளை செய்த தவறை மன்னித்து மறந்துவிடும் படியும், இனிமேலாவது திருந்தி மனிதனாக வாழ்க்கையை துவங்க சொல்லி அவர்கள் அறிவுரை கூற பாலாவின் பதில் என்னமோ வெறும் வெற்று புன்னகை மட்டுமே.

 

அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்பது போல் பெரியவர்கள் கிளம்பிவிட்டனர்.

 

அதன் பிறகு லக்ஷ்மி தங்கி இருந்த இல்லத்திற்கும் சென்று, அதன் நிர்வாகிக்கும் நன்றி சொல்ல மறக்கவில்லை அவர்கள்.

 

பிள்ளைகள் செய்தவற்றைத் திருத்திவிட்டோம் என்ற திருப்பியுடன் அன்று இரவே சென்னையை நோக்கி கிளம்பி விட்டனர்.

 

புதிய திருப்பத்திற்கான பிள்ளையார் சுழியை இட்டு வந்திருக்கிறோம் என்பதனை அறியாமல்…

 

அன்று வார இறுதி நாள் இவர்கள் குடும்பமாக சேர்ந்து அந்த தெருவில் உள்ள மற்ற குடும்பங்களின் நிம்மதியைப் பறிக்கும் நாள்.

 

தஞ்சாவூரில் இருந்து கொண்டு வந்த‌ ஆவணங்களை வைத்து லக்ஷ்மியையும் இவர்கள் கல்லூரியில் சேர்த்தாயிற்று,

வளர்ந்த எருமைகளுக்கும் இப்பொழுது மூன்றாம் ஆண்டின் முதல் பருவ தேர்வு முடிந்து விடுமுறை விட பட்டு இருக்க, வளர்ந்து வரும் எருமைகளாகிய அக்ஷாவும் தமிழின் தம்பி அபிநவும் கூட விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தனர்.

 

இவர்கள் வீட்டின் அந்த காலையே அமர்க்களமாக ஆரம்பித்து இருந்தது.

 

‘எங்க ஏரியா உள்ள வராத’ யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷின் குரலில் அந்த இரண்டு மாடி கட்டிடம் அல்லோல கல்லோல பட்டு கொண்டிருந்தது. அனைத்தும் அக்ஷா மற்றும் லக்ஷ்மியின் கை வண்ணம்.

 

முதல் தளத்தில் இவர்கள் அடிக்கும் லூட்டி தரை தளத்தில் உறங்கி கொண்டிருந்தவர்களுக்கு தலை வலியாகி போக, போர்த்தியிருந்த போர்வையுடன் கிளம்பி விட்டான் மித்ரன்.

 

“ஏய் குட்டி சாத்தான் கூட்டமே ஏன் இப்படி காலங்காத்தால பாட்ட போட்டு உயிர எடுக்குறிங்க?” இது மித்ரன்.

 

இவன் வாசலில் நின்று ஹைபிச்சில் கத்த அங்கு டபரா குத்து குத்தி கொண்டிருந்த குளவிளக்குகளின் காதில் விழுந்தால் தானே.

 

சற்று நேரம் பொருத்து பார்த்த மித்ரன் அதற்கு மேல் தாங்க மாட்டாது, அவர்களின் ஆட்ட ஜோதியில் ஜக ஜோதியாக ஐக்கியமாகி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த வேளையில்,

 

வீடே நிசப்தமாகி இருந்தது.

இவன் அக்ஷாவை பார்த்து, “ஏய் அக்ஷா பிசாசே ஏன் அமைதி ஆகிட்ட? வா வா ஆடலாம்.” என பாட்டு இல்லாமலே அவன் பாட்டிற்கு ஆடிக் கொண்டே திரும்பிய நேரம் அங்கே கடும் கோபத்துடன் நின்றிருந்தான் விவேகன்.

 

விவேகனைக் கண்ட மித்ரனின் விழிகளில் அப்படி ஒரு பிரகாசம்.

பிறகு நண்பனின் ஆட்டத்தைப் பார்க்க அத்தனை ஆவல் அவன் முகத்தில், எத்தனை மாதங்கள் ஆகிவிட்டது நண்பனின் ஆட்டத்தைப் பார்த்து.

 

“டேய் நீயும் வந்துட்டியா! வாடா, வாடா வந்து நீயும் எங்க ஆட்ட ஜோதியில் ஐக்கியமாகு.” என குதூகலமாக விவேகனை அழைத்தவாறே ஆடிக் கொண்டிருந்தான் மித்ரன்.

 

“இதோ வரேன்.” என வேகமாக வந்தவன் அதே வேகத்தில் மித்ரனின் மண்டையில் ஓங்கிக் கொட்டவும் சற்று நேரம் வரையிலுமே மித்ரனிற்கு ஒன்றும் பிடிப்படவில்லை.

 

சிறிது நேரத்தில் அவன் மண்டையை சுற்றிப்‌ பறந்துக் கொண்டிருந்த குருவிகள் சென்று விடவும் தெளிவான மித்ரன்,

 

“ஏன்டா ஏன் இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு கொட்டுன என்னை?” என்று பொங்கி கொண்டு கேட்டான் மித்ரன்.

 

மீண்டும் அவன் மண்டையில் ஓங்கிக் கொட்டிய விவேகன், “அந்த வீட்ல தண்ணீ லாரிகாரன் அத்தனை சத்தமா ஹாரன் அடிப்பான் கும்பகர்ணன் மாதிரி குப்புறப்படுத்து கொரட்டை விட்டு தூங்குற டாக் நீ. இப்போ என்ன காலங்காத்தால உனக்கு பாட்டு அதுக்கு கொஞ்சம் கூட செட் ஆகாத கேவலமான ஒரு ஸ்டெப்பு உனக்குலாம் இது போறாது இன்னும் நாலு கொட்டு சேர்த்து போடணும்.” என விவேகன் மீண்டும் கொட்டுவதற்கு வரவும் கடுப்பான மித்ரன்.

 

அவன் கையைத் தடுத்துப் பிடித்துக்கொண்டு, “என்னை மட்டும் கேக்குற இந்த அக்ஷா பிசாசும், லக்ஸு பேயும்தான் ஆரம்பிச்சுதுங்க அதுங்கல கேளேன்.” என மித்ரன் குதிகுதியென குதிக்க,

 

அவன் தலையை பிடித்து த்ரீசிக்ஸ்டி டிகிரிக்கு விவேகன் திருப்பிக் காட்ட அங்கு இவன் சொன்ன பேயும் பிசாசும் இருந்ததிற்கான தடையத்தையே காணவில்லை.

 

“டேய் இங்கதான்டா ரெண்டும் தரையே பேந்து விழுற அளவுக்கு ஆடிட்டு இருந்துச்சிங்க இப்போ எங்க போச்சிங்கனு தெரிலயே?” என குழப்பத்துடன் மித்ரன் சொல்லவும்,

 

“ஹான் அதான் சொன்னியே பேய், பிசாசுனு அதான் மறஞ்சு பொய்டுச்சுங்க போல,” என்று விவேகன் கிண்டல் செய்துக் கொண்டே வீட்டின் கிட்சனிற்குள் நுழைய அவனைப் பின் தொடர்ந்து சென்றான் மித்ரன் கடுப்புடன்.

 

அங்கு அடுப்பில் உள்ள பாத்திரத்தில் இருந்து பால் பொங்கி வழிந்து கொண்டிருக்க அதனையே வெறித்துப் பார்த்தப்படி நின்றிருந்தாள் இவர்களின் ஆருயிர் தோழி தென்றல்.

 

எக்ஸாம் ஸ்ட்ரெஸில் இருந்து சிறிது இளைப்பாறிவிட்டு வரலாம் என்றுதான் இவர்கள் சுற்றுலா சென்றதே, ஆனால் அங்கு சென்று வந்ததிலிருந்தே அவர்களின் தென்றல் அவளாகவே இல்லை.

 

எந்த நேரமும் ஏதேனும் சிந்தனையிலேயேதான் இருப்பாள். யாரேனும் வம்படியாக அவளை இழுத்து வைத்துப் பேசினாலும் பழையத் துள்ளலும் சேட்டையும் சிறுப்பிள்ளைத்தனமும் அவளிடமிருந்து தொலைந்தே போய்விட்டிருந்தது.

 

இப்பொழுதெல்லாம் விவேகனிடம் இருந்தும் அவனின்‌ அக்கறையிலிருந்தும் ஐந்தடிக்கு ஐம்பதடி தள்ளியேதான் இருக்கிறாள்.

விவேகனுக்கு இதனால் மிகப் பெரிய வருத்தம் இருந்த போதும், அவள் விலக விலக அவன் அந்த இடைவெளிகளை எல்லாம் அவனின் அன்பை இட்டு நிரப்பினான்.

 

கிட்சனிற்குள் சென்றவர்கள் கவலையாக இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டே தென்றலை நெருங்கி சென்று விவேகன், “கண்ணம்மா.” என தென்றலின் தோளைத் தொட மித்ரன் 

 அனைவருக்கும் டீ போட துவங்கினான்.

 

விவேகனின் அழைப்புக் கூட அவளுக்கு கேட்கவில்லை. அவனின் தொடுகை உணர்ந்தே சுயநினைவிற்கு வந்தவள்.

 

“என்ன விவு கூப்டியா டீ வேணுமா இரு அதான் போடறேன்.” என இவள் மீண்டும் அடுப்பை நோக்கி திரும்ப அங்கு மித்ரன் டீ போடுவதைத் கண்டவள்.

 

“ஏன்டா நான்தான டீ போட வந்தேன் நீ போ நானே போட்டுக் கொண்டு வரேன்.” என இருவரையும் கிட்சனில் இருந்து துரத்துவதிலே குறியாக இருந்தாள்.

 

மேலும் அவளைத் தொந்தரவு செய்யாமல் வெளியே வந்து ஹால் சோஃபாவில் அமர்ந்த இருவருக்கும் இன்னும் என்ன செய்து இவளைப் பழையபடி மாற்றுவது என்பதற்கான வழி மட்டும் தெரியவே இல்லை. 

 

தென்றல் ஏன்? இப்படி நடந்து கொள்கிறாள் என்பதற்கும் அவர்களிடம் விடையில்லை என்பதை விட விடைக் கிடைக்கவில்லை என்பதே சரியாக இருக்கும்.

 

எத்தனை முறையோ நேரடியாகவும் மறைமுகமாகவும் தென்றலிடம் கேட்டு பார்த்தாயிற்று, “எனக்கு ஒன்னும் இல்ல விவு நான் நல்லதான் இருக்கேன் நீ என்னைப் பத்தி கவலைப்படாத.” அவளின் ஒரே பதில் இதுவாகத்தான் இருக்கும்.

 

‘நீ என்னைப் பற்றி கவலைப்படாதே.’ என்பதில் மட்டும் சற்று அழுத்தம் கூடி இருக்கும். இத்தனை கஸ்டத்திலும் விவேகனிற்கு ஒரே ஆறுதல் அவளின் விவு என்ற அழைப்பு மட்டும் மாறாமல் இருந்ததுதான்.

 

மித்ரனும் விவேகனும் இவளைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருக்க.

‘கவலையா எனக்கா நெவர்.’ என்ற எக்ஸ்பிரஷனுடன் டீ ட்ரேவைக் கொண்டு வந்தாள் தென்றல்.

 

அவள் அந்த முகபாவத்தில் இருப்பதற்கு எத்தனை மெனக்கெடுகிறாள் என்பது அப்பட்டமாக தெரிந்தது.

 

ட்ரேவை வாங்கி டீபாயில் வைத்துவிட்டு தென்றலை தன் அருகில் அமரவைத்து அவளுக்கான டீயையும் மித்ரனுக்கான டீயையும் எடுத்து குடுத்தான் விவேகன். அவன் ஏன் எடுத்துக் கொள்ளவில்லை என தென்றல் அவன் முகத்தைப் பார்க்க.

 

“நான் எப்போடா காலையில டீ குடிச்சு இருக்கேன்?” என விவேகன் கேள்வியாக வினவ.

 

அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது. அவன் காலையில் டீ குடிக்க மாட்டான் என்பதை மறந்து அவனிடமே டீ வேண்டுமா எனக் கேட்டதை. அவன் அவளையே பார்ப்பதைக் கண்டவள்‌,

 

“இல்ல விவு நான் வந்து…” எதோ காரணத்தைக் கூற வந்தவளை தடுத்து நிறுத்தியவன்‌.

 

“எனக்கு புரிதுடா தூக்கக் கலக்கத்துல மறந்துப் போய் கேட்டிருப்ப அதான?” என இவன் கேட்கவும், அதற்கு அவளும் ஆமாம் சாமிப் போட்டாள். 

 

ஆனால் அவள் நிம்மதியான தூக்கம் பறிப்போய் பல நாட்கள் ஆனதை அவன் அறிவான் என அவள் அறிந்திருக்கவில்லை.

 

தென்றல் அமைதியாக டீயை அருந்த அவளையே கவலையாக பார்த்துக் கொண்டிருந்தனர்‌ விவேகனும் மித்ரனும்.

 

உடல் எடை இழுந்து, நிறம் மங்கி, முகப்பொழிவிழந்து, கண்ணில் கருவளையம் கூட இருந்தது.

 

இருவரின் பார்வை உணர்ந்து இவள் மித்ரனிடன் என்ன எனக்கேட்டு தலையசைக்க.

 

“ஒரு அல்ப்ப பட்டர் பிஸ்கெட்காக என் கூட குடுமி புடி‌ சண்டைப்போட்ற எங்க டோராவ தேடுறேன் உனக்கு தெரியும் அவ எங்கனு அவள மட்டும் எங்களுக்கு குடுத்துடேன்…” என கலங்கிய கண்களுடன் இவன் கேட்க.

 

சட்டென எழுந்தவள் வேகவேகமாக அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

‘ஏன்டா?’ என விவேகன் முறைக்க, மித்ரனிடம் பதில் இல்லை.

 

இங்கு இத்தனை நடந்துக் கொண்டிருக்க அப்பொழுதுதான் குளித்துவிட்டு வெளியே வந்தார், இவர்களின் டார்லிங் தேவகி.

 

இவர்களைப் பார்த்துக்‌ கொண்டே அமைதியாக அவர் பூஜை அறைக்குள் நுழைய, அவரைப் பின் தொடர்ந்து அக்ஷாவும் லக்ஷ்மியும் சென்றனர். அவர்களும் பூஜைக்கு தயாராகி இருக்க,

 

சிறிது நேரத்திற்கெல்லாம் மித்துமாவும் மேலே வந்து‌விட மித்ரனையும் விவேகனையும் குளித்துவிட்டு வர சொன்னார் அவர்.

 

இது அந்த வீட்டில் வழக்கம்தான் ஆனால் அதற்கு முன்பு வரையில் அமைதியாக இருக்கும் வீடு, தென்றலின் அமைதியை கலைவதற்காக அதிகாலை வேளையை அட்டகாசமாக மாற்றியிருந்தனர். ஆனால் பலன்தான் கிடைக்கவில்லை.

 

கீழே சென்று நண்பர்கள் இருவரும் தயாராகி வர, எப்பொழுதும் போல் காலை உணவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து அருந்தக் துவங்கினர்.

 

வீட்டில் இருந்த அனைவருக்குமே தென்றலின் இந்த மாற்றம் கவலையே அளித்தாலும், விவேகன் அவளை மீட்டு விடுவான் என நம்பிக்கை கொண்டு எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்தனர்.

 

டைனிங் டேபிளில் அமைதி பொறுக்காத அக்ஷா, “என்ன‌ ப்பா மித்ரா காலையிலேயே பேய், பிசாசு கூட செம்ம குத்தாட்டம் போல, காலையிலேயே அப்படினா அப்போ நைட்ல செம்ம ஆட்டம்தான் போலயே…”

என அவள் அவனிடம் வம்பிழுக்க.

 

“ஏய் குட்டி சாத்தான் அமைதியா இரு இல்லனா ஹாஸ்டலுக்கு பேக் பண்ணிடுவேன்.”‌ ‌என‌ அவன் அவளை மிரட்ட முயர்ச்சிக்க,

 

அவளோ, “என்ன ஹாஸ்டல்னு சொன்னதும் நான் போமாட்டேன் போமாட்டேனு விவேக் அண்ணா கால புடிச்சிட்டு கதறி கதறி அழுவுறதுக்கு நான் ஒன்னும் மித்ரன் இல்ல அக்ஷா அக்ஷயா.” என கெத்தாக கூறி மித்ரனின் காலை வாரினாள்.

 

வீடே கலகலவென சிரிக்க மித்ரன் மித்துமாவை முறைத்தான். அவனின் ரகசியத்தை வெளியில் சொன்னதற்காக.

 

அப்பொழுதும் அக்ஷா அமைதியாக இருக்காமல், “போமாட்டேன் போமாட்டேன் நான் ‌ஹாஸ்டலுக்கு போமாட்டேன்‌” என விவேகனின் கையைக் கட்டிக் கொண்டு மித்ரனை போலவே செய்து வேறு காட்டினாள்‌.

 

அதில் இன்னும் கடுப்பான மித்ரன் அவளை அடிப்பதற்காக துரத்த அவள் சாப்பாடு தட்டுடன் எழுந்து ஓடினாள்.

 

வீடே அவர்களின் கலாட்டாவை ஆனந்தமாக பார்த்து கொண்டிருக்க தென்றல் முகத்தில் அளந்து வைத்த போன்றதொரு சிரிப்பு அவ்வளவு தான்.

 

விவேகன் அவளை கவலையுடன் பார்க்க, விவேகனை கவலையுடன் பார்த்திருந்தாள் லக்ஷ்மி. காரணம் என்னவோ அவள் மட்டுமே அறிந்தது.

 

விவேகனை கவனித்த நானா, எல்லாம் சரி ஆகிவிடும் ‌எனும் விதமாக அவனின் ‌கையைப் பிடிக்க விவேகனும் சமாதானமாய் தலை அசைத்தான்.

 

அப்பொழுது நானாவின் தொலைப்பேசி இசைக்க எடுத்து பேசியவர், விவேகனிடம் ஒரு இடத்தை கூறி அங்கிருந்து பழுது பார்ப்பதற்காக ஒரு வண்டியை எடுத்து வர சொல்லவும்‌, விவேகனும் மித்ரனும் கிளம்பினர்.

 

இது எப்பொழுதும் நடப்பதுதான் பழுதுப் பார்ப்பதற்காக வண்டியை கஸ்டமரால் கொண்டு வர‌ இயலாத நிலையில் இவர்களே சென்றுக்‌கொண்டு வந்து பழுதுபார்த்து மீண்டும் அவர்களிடமே சேர்த்து விடுவார்கள்.

 

வாசல் படியைத் தாண்டும் பொழுது விவேகனின் கால் வாசல் காலில் நன்றாக இடித்துக் கொள்ள அவன் தடுமாறி சுவற்றைப் பிடித்து நின்றுவிட்டான்.

 

நல்ல வேளையாக அவன் விழவில்லை விழுந்திருந்தால் அடுத்த தளத்திற்கு செல்லும் படிகட்டின் இரும்பு கைப்பிடி கம்பியில் தலை மோதியிருக்கும்.

 

அவன் தடுமாறி நிற்பதைக் பார்த்த தென்றல் பதறிக் கொண்டு தண்ணீரை எடுத்துக்கொண்டு ஓடினாள். அனைவரும் அவனை சற்று அமர்ந்து விட்டு செல்லுமாறு கூறவும் சற்று நேரம் அமர்ந்தவன்.

 

அவனை அவஸ்தையாக பார்த்து கொண்டிருந்த லக்ஷ்மியை பார்த்ததும் உடனே கிளம்பி விட்டான்.

 

ஒரு வழியாக காலை நேர ட்ராஃபிக் இல்லாமல் கஸ்டமரிடம் இருந்து அவரின் வாகனத்தை வாங்கிக்‌கொண்டு, மித்ரனை அதில் அமர சொல்லி அவர்கள் வந்த வண்டியில் அமர்ந்த விவேகன் ட்டோ செய்ய கடையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.

 

சிறிது நேரப் பயணத்திற்கு பிறகு விவேகன் அவன் பின்னால் திரும்பி பார்க்க அசுர வேகத்தில் அவனை பின் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது ஒரு வேன்.

 

யோசிக்க அவகாசமே இல்லாமல் முன்னாடி வண்டியில் இருந்த மித்ரனிடம், “கெட்டியா புடிச்சிக்கோடா…” எனக் கத்தி கொண்டே அவன் சக்தியெல்லாம் திரட்டி மித்ரன் இருந்த வண்டியை முன் நோக்கி காலால் ஓங்கி தள்ளிவிட,

 

வேகமாக வந்த வேன் விவேகனை இடித்த வேகத்தில் வண்டியுடன் சேர்த்து தூக்கி வீசப்பட்டான்.

 

கீழே விழுந்த வேகத்தில் கண்ணைத் திறக்க முடியாமல் ‌திறந்த விவேகன்,

மித்ரன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து அவனின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு, “கண்ணம்…ஹா” என்ற முனகலுடன் அவனின் கண்களும் மூடிக் கொண்டது.

 

அதே சமயம் இங்கு வீட்டில் விவேகன் சென்றதில் இருந்தே அழுது கொண்டே தூங்கி இருந்த தென்றல்,

வீடே அதிரும் அளவுக்கு, “கண்ணா…” என அலறிக் கொண்டே தூக்கத்திலிருந்து எழுந்திருந்தாள்.

தென்றல் பேசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!