நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!06

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!06

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா

அத்தியாயம் 06

 அன்றைய தினத்தில் இருந்து ஆதினியிடம் பூங்குழலி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஆதினி எவ்வளவு பேச முயற்சி செய்தாலும் பூவு அவளை முற்றிலுமாக தவிர்த்து விட்டாள். அவள் செய்தது தவறு என்று அவள் உணரும் வரை அவளிடம் பேச கூடாது என்று முடிவெடுத்து அவளிடம் மௌனமாகிப் போனாள்.

ஆனால் ஆதினியோ அவள் பேசாததுக்கு தன் தவறான செயல்தான்  காரணம் என்று எண்ணாமல் அதற்கும் மிஸ்டர் விருமாண்டி மீதே பழியை தூக்கி போட்டு அவனை பலிகடா ஆக்கினாள்.

வசி இது யாவையும் கண்டு கொள்ளாது அவன் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.

தினம் காலையில் எழும்போதே அத்தனை புத்துணர்ச்சியாக இருக்கும். தினம் தினம் வாழ்க்கையைப் புதிகாக  வாழ தொடங்கினான் என்றால் அதற்கு முழு காரணமும் நங்கையையே சாரும்.

இப்போது ஆதினியை தனியாக வண்டி எடுத்து எங்கேயும் அனுப்புவது இல்லை. வசியுடன் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. இதையும் அவள் தவறாக புரிந்து கொண்டு அவனின் மீது மேலும் வெறுப்பை உள்ளுக்குள்ளே உமிழ்ந்து கொண்டிருந்தாள்.

தான் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் அனைத்தும் இருக்கிறது என்று ‌அவளுக்கு யார் சொல்லி புரிய வைப்பது.

சிலர் சொன்னால் புரிந்து கொண்டு அதற்கு இணங்க நடந்து கொள்வார்கள். ஆனால் ஆதினியின் தலையில் விதி பட்டுதான் திருந்த வேண்டும் என்று எழுதியிருந்தால் அதனை மாற்ற யாரால் முடியும்.

தேர்வுகள் அனைத்திற்கும் வசியே கொண்டு வந்து விடுவதும் அழைத்துச் செல்வதுமாக இருந்தான்.

வீட்டிலே சிறை கைதியாக இருப்பது போல் தோன்றி, அவளை யோசிக்க விடாது கதற தொடங்கியது மனம்.

ஆதினிக்கு இன்று வரை தெரியாத ஒரு விடயம், வசி நங்கை கூட இருப்பது. தெரிந்திருந்தால் அவன் மீது உமிழ்ந்து கொண்டிருக்கும் வெறுப்பு குறைந்திருக்குமோ என்னவோ.

அன்றுதான் அவளுக்கு கடைசி தேர்வாக இருக்க, இன்று எப்படிபட்டாவது பூவை சமாதானம் செய்திட வேண்டும் என்று நோக்கத்துடனே கல்லூரிக்கு வசியின் உதவியுடன் வந்து சேர்ந்தாள்.

கல்லூரி வளாகத்தின் முன் வண்டியை நிறுத்திய வசி, அவள் இறங்கி வசியின் முகம் பாராது கல்லூரிக்குள் நுழைய போனாள்.

“மேடம் ஒரு நிமிஷம்” என்று பணிவாகவே அழைக்க,

அவள் திரும்பி கடுப்பாகவே, “என்ன வேணும் உனக்கு இப்போ” கடுமையாகவே வார்த்தை வெளிவந்தது.

“ஆல் தி பெஸ்ட் மேடம், நல்லபடியா பரிட்சை எழுதிட்டு வாங்க”என்று வாழ்த்துக்கள் கூற,

“உன்னோட விஷ்சஸ் வச்சிதான் நான் நல்லபடியா எக்ஸாம் எழுதணும்னு  இல்லை” என்று சினத்துடன் கூறிவிட்டு வேகநடையிட்டாள்.

அவள் பேசியதில் அவனுக்கு பெரிதாக வலி ஏதும் இல்லாததை போல் சிகை கோதி புன்னகைத்தவன், அவள் பிம்பம் மறையும் வரை நின்றிருந்தவன் அவள் மறைந்ததும் அந்த இடத்தை விட்டு சென்றான்.

அவள் மறையும் வரையும் இருந்தவனுக்கு அவர்களை யாரோ மறைந்து இருந்து கண்காணிப்பது தெரியாமல் போனது.

அன்றுதான்  அவர்களது இறுதி தேர்வு மற்றும் கல்லூரியில் இறுதி நாள் என்பதால், தேர்வு முடிந்து வந்த நேரத்திலே இவர்களது அழுக்காச்சி ஆரம்பமாகிவிட, அதை தொடர்ந்து சிரிப்பதும் கேலி செய்வதுமாக அந்த நேரத்தை கழித்தனர் ஆதினி கூட்டாளிகள்.

சிறிது நேரத்திலே வசி வந்து விட, அவனை கண்ட ஆதினிக்கு கடுப்பேற, அவன் வந்து நின்றது தெரியாதது போல் இருந்து கொண்டாள்.

அந்த நேரம் பார்த்து அவளிள் தோழி ஒருத்தி, “ஹே அங்க பாருங்க டி, அங்க ஒரு ஹேன்சம் நிக்கிறான்” என்று கைக்காட்டிட,

மற்றொருவளோ, ”மச்சி நம்ம ஊருல யாரும் இவ்வளோ அழகு இல்லையே டி“ என்க.

முதலில் பேசியவளோ, அடியே நம்ம ஊருல இளவட்டங்கள் எவனும் ஹேன்சம் கிடையாது டி” என்று அவனை பார்த்தாள்.

“பார்க்க ஆளு அப்படியே விஜய தேவகொண்டா மாதிரி அழகா இருக்கான். என் மனசு அப்படியே பறந்து அவன்கிட்ட போகுது” என்று சைட் அடித்த படி சொல்ல,

“யார பார்த்து இவளுங்க இந்த ஜொல்லு ஊத்து ஊத்துறாளுங்க” என்று நினைத்து திரும்பி பார்த்த அவளுக்கு பொசு பொசுவென கோபம் தலைக்கேற, அவர்களை எரித்துவிடும் நோக்கில் பார்வையை பதித்தாள்.

“அறிவில்லையா உங்க யாருக்கும்? அவனை போய் பாத்துட்டு இருக்கீங்க?” என்று கடிக்க,

“இவ யாருடி பொச கெட்ட குப்பாயி மாதிரி பேசுறது” என்று ஒருவள் அவனை பார்க்க தொடங்கினாள்.

“அய்யோ சனியனுங்களே அந்த விருமாண்டிய பாத்து தொலைக்காதீங்க டி. அவன் நல்லவன் கிடையாது எருமைங்களா” என்க.

அனைவரும் ஒன்று சேர்ந்து அவளை உறுத்து விழித்தனர்.

‘என்ன எல்லாம் நம்மளை ஒரு மாதிரி லுக் விடுதுங்க’ என்று நினைத்தவள் வெளியில் விரைப்பாகவே நின்றிருந்தாள்.

“அவன் நல்லவன் இல்லைன்னு சொல்லுற? உனக்கெப்படி அவனை தெரியும்” என்க.

தோழியின் கேள்வியில் திருதிருவென முழித்த ஆதினி, “ஹான் என்னோட ஞான கண்ணுக்கு தெரிஞ்சது போதுமா. கிளம்புங்கடி வீட்டுக்கு” என்று அனைவரையும் துரத்தி விட்டாள்.

இவை அனைத்தையும் பூங்குழலி அமைதியாகவே பார்த்திருந்தாள். அவளுக்கு ஆதினியின் இந்த செயல் வித்தியாசமாக இருந்தது.

“வா பூவு போகலாம்” என்று அவளின் கைபிடித்து அழைக்க, அவளிடமிருந்து கையை வெடுக்கென்று பிரித்தவள் முன்னே நடந்தாள்.

ஆதினியின் கண்கள் அவளின் செயலில் கலங்கி விட, இதனை கண்டும் பூவு அமைதிகாத்தாள்.

“நில்லு பூவு” என்று பூங்குழலியை நிறுத்தினாள்.

“ப்ளீஸ் பூவு இப்படி பேசாம இருக்காத டி. எனக்கு கஷ்டமா இருக்கு அழுக அழுகையா வருது” என்று விழிநீர் இப்பவா அப்பவா என்று வெளிவர காத்திருந்தது.

“என்கிட்ட பேச மாட்டியா டி. நான் செஞ்சது தப்புதான். அப்படி யோசிச்சிருக்க கூடாதுதான் பூவு. இதுக்கெல்லாம் காரணம் அவன்தான்  டி. அதுக்காக நான் மன்னிப்பு கூட கேக்குறேன்” என்று கவலை குரலில் உரைக்க,

கசந்த புன்னகையை சிந்திய பூவு, “ரொம்ப சந்தோஷம் டி. அடுத்தவங்க மனச பத்தி கவலைபடாம நாம செய்றதுதான் சரின்னு நினைக்கிற வரைக்கும் நான் உன்கூட பேசுறதா இல்லை. நீ ஒருத்தவங்கள இவ்வளவு கேவலமா ட்ரீட் பண்ணுவன்னு நினைச்சு கூட பாக்கல” என்றதில் ஆதினி குறுக்கிட்டு,

“அவன் ஒன்னும் நல்லவன் கிடையாது” என்றாள் வெடுக்கென்று.

“அப்போ நீ தப்பே பண்ணாதவளா சொல்லு?” என்ற கேள்வியில் சுருக்கென்று தைத்தது.

“என்ன அமைதி ஆகிட்ட‌, சொல்லுங்க மிஸ் ஆதினி, அப்போ நீங்க இன்னவரைக்கும் எந்த ஒரு சின்ன தப்பு கூட பண்ணதில்லை அப்படி தானே” என்று கடுகடுத்த குரலில் உரைக்க,

“ஹோ! நீ இப்ப கூட தப்பு பண்ணதா சொல்லி தானே மன்னிப்பு கேட்ட பாரேன் அதுக்குள்ள மறந்துடுச்சி” என்று நக்கலாக உரைத்தாள்.

“ப்ளீஸ்டி இப்படி எல்லாம் பேசாத” என்று கெஞ்ச,

“உனக்கு எப்படி வலிக்கிதோ அதே மாதிரி தானே வசி அண்ணாக்கும் வலிக்கும். அவங்கள பத்தி உனக்கு என்ன தெரியும் சொல்லு. அண்ணா யாருன்னு தெரியுமா உனக்கு” என்ற ஆவேச பேச்சை, ”மேடம்” என்ற அழைப்பு தடை செய்தது.

இருவரும் திரும்பி குரல் வந்த திசையை நோக்க, அவனோ பூவை ஒரு நொடி உறுத்து விழித்தவன் ஆதினியின் புறம் திரும்பி, “மேடம் சார் கால் பண்ணாரு அவருக்கு ஏதோ அவசர வேலை இருக்காம் அதுனால சீக்கிரமா வர சொன்னாரு. அதுனாலதான்  உங்களோட பேச்சுல இடை புக வேண்டியதா போச்சி” என்றான் சங்கடமான குரலில்.

“சரி நான் வரேன். நீங்க போய் கார் எடுங்க” என்று அவனை அனுப்பி வைத்தாள்.

அவன் சென்றதும், ”சரி பூவு வா போகலாம்” என்று அவளையும் தன்னோடு அழைத்து வந்து அவள் வீட்டில் விட்டாள்.

அவள் இறங்கியதும், “நான் ரெண்டு நாள்ல ஊருக்கு போறேன். பார்த்து சூதானமா நடந்துக்கோ ஆதினி” அறிவுறை கூறியவள் வசியின் புறம் திரும்பினாள்.

“நான் உங்கள நம்பிதான் அண்ணா இவள விடுறேன். அவள பத்திரமா பாத்துக்கோங்க அண்ணா” என்க.

அவனிடம் சிறு புன்னகையுடன் கூடிய தலையசைப்பு வந்தது.

“நீ எப்போ உன்னோட தப்ப உணர்ந்து மன்னிப்பு கேக்குறீயோ அப்போ ஃபோன் பண்ணு அதுவரைக்கும் வேணாம்” என்றவள் தலையசைத்து அவர்களுக்கு விடை கொடுத்தாள்.

ஆதினிக்கு இது கடுப்பாக இருந்தாலும் வியப்பையே அளித்தது.

வீட்டிற்கு வரும் வரைக்கும் அமைதியாகவே வந்தாள். அந்த அமைதி அவளை வெகுவாக அவனை பற்றி யோசிக்க வைத்தது.

இன்று தான் அவளின் மூளைக்கு உதித்தது, ‘கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மேல் என்று’

ஆனால் தான் தானே அந்த இடத்தில் இருந்தது. தான் ஒன்றும் அங்கே பார்வையாளராக இல்லையே. அந்த உரசல் நேர்ந்தது எனக்கு தானே. இதில் எங்கே நான் தவறாக புரிந்து கொண்டுள்ளேன் என்கிறார்கள். அதுவும் இல்லாமல் அப்பா முதல் பூவு வரை அனைவரும் அவனை நம்புகின்றனரே… என்ற அவளின் சிந்தனையை கலைக்கும் விதமாக வசி அழைத்தான்.

“மேடம்” என்றழைக்க,

“ஹான்” என்றாள் தூங்கி எழுந்த குழந்தை போல்.

“மேடம்! வீடு வந்துடுச்சி” என்று கதவை திறந்து விட,

அவளும் மந்தையை போல் வீட்டுக்குள் நடந்து சென்றவள், திரும்பி வந்து”மிஸ்டர் விருமாண்டி” என்றழைக்க,

வண்டியை துடைத்துக் கொண்டு இருந்தவன், அவளின் அழைப்பில் அவள் புறம் திரும்பினான்.

“சொல்லுங்க மேடம், ஏதாவதுவாங்கிட்டு வரணுமா?” என்று பணிவாக கேட்டான்.

இந்த ஒரு மாதத்தில் அவன்தான் கடைக்கு சென்று வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வருவது. அந்த வீட்டில் ஆதினியை தவிர அனைவரும் அவனை நம்பியே இருந்தனர்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நா… நான் உன்… உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்” என்று தவிப்போடு கேட்க, அதனால் இதுவரை ஒருமையில் அழைத்தவனை தானாகவே பன்மையில் கேட்டாள்.

“கேளுங்க மேடம்” என்க.

“நீங்க இந்த ஊரு கிடையாதுன்னு எனக்கு நல்லா தெரியும். இப்போ நீங்க எங்க தங்கி இருக்கீங்க” என்று கேட்க,

“ஹான்” என்று விழி விரித்து பார்த்தான்.

“சொல்லுங்க நீங்க இப்போ எங்க இருக்கீங்க?”

“நான் நங்கை அம்மா வீட்லதான் இருக்கேன். அவங்கதான் எனக்கு இருக்க இடம் கொடுத்தாங்க மேடம், ரொம்ப நல்லவங்க அவங்கள மாதிரி ஒருத்தவங்க இங்க பார்க்கவே முடியாது மேடம்” என்று கூற, அதற்குள் சதாசிவம் வரவும், ”சரிங்க மேடம் சார் வந்துட்டாங்க நான் கிளம்புறேன்” என்று விடை பெற்றான்.

அறைக்கு வந்த ஆதினிக்கு குழப்பமாக இருந்தது.

“எப்படி நங்கை அத்தை யாரென்று தெரியாத இவனை வீட்டில் தங்க வைத்தார். அப்படி தங்க வைத்திருக்கிறார் என்றால் அதற்கு மூலதனம் ஒன்றே ஒன்றுதான்.

அதே போல்தான் தந்தையும் யாரென்று தெரியாத பையனை வயது பெண் இருந்த போதிலும் வேலைக்கு வைத்தார். இவர்கள் மட்டுமே இல்லையே கூடவே தன் தோழியும் அவனுக்காக தானே தன்னிடம் பரிந்து பேசினாள்.

இவர்கள் மூவரிடம் இருக்கிற ஒரே ஒற்றுமை அவன் மீது இவர்கள் வைத்திருந்த நம்பிக்கையே ஆகும்.

எப்படி இது சாத்தியமாகும்? அதுவும் தன்னிடம் கூட அவனுக்காக பேசாமல் இருக்கிறாளே இந்த பூவு. இவளால் எப்படி அவனிடம் தன்னை பாதுகாக்கும் படி கூற முடிந்தது. அந்த அளவிற்கு அவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாளா?

இவை அனைத்தையும் யோசித்த ஆதினிக்கு தலை விர்ரென்று வலிக்க செய்ய, அப்படியே படுத்து விட்டாள்.

                                              ***

இரண்டு நாட்கள் கழித்து…

விபுனன் வசிக்கு அழைப்பு விடுத்தான்.

“ஹலோ மச்சான்! எப்படி இருக்க? அப்பா எப்படி இருக்காரு?” என்று அக்கறையோடு கேட்க,

“நல்லவனே! என்ன அம்மா கிட்ட போனதும் நண்பனை கழட்டி விட்டுட்ட இல்ல, போடா அந்த பக்கம்” என்று செல்லமாக கோபித்துக் கொண்டான்.

“அய்ய! கழட்டி விடாம இன்னுமா உன்கூடவே சுத்து வாங்க சொல்லு” என்று அவன் நக்கலடிக்க,

“பார்ரா சார் பேக் டூ ஃபார்ம் போல” என்றான் அவனும் நக்கலாக.

“ஏன்டா? அய்யாவோட அடிய மிஸ் பண்றீயா மச்சி” என்று கௌண்டர் கொடுக்க,

“நீங்க அடிச்சு விளையாடுறதுக்குதான் எங்க மம்மி என்னை கஷ்டப்பட்டு இந்த லோகத்துக்கு கொண்டு வந்தாங்களோ” என்று அலுத்துக் கொண்டான்.

“ஜோக்ஸ் அபார்ட் மச்சி! சொல்லு நீ எப்படி இருக்கன்னு?” என்று அக்கறையோடு கேட்க,

“நல்லா இருக்கேன், அங்க அப்பாவும் நல்லா இருக்காரு. நீ இல்லாம போகவும் அப்பாக்கு கேர்ள் பேன்ஸ் அதிகமாகிடுச்சிடா. இப்போலாம் நம்பர் கேட்டு என்னைய டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. முடியலடாசாமி. ஆனாலும் மனுஷன் வாழுறாருடா” என்று அங்கலாய்த்து கொண்டான் விபுனன்.

“போதும் போதும் எங்க அப்பாவ கண்ணு வைக்காத. ஊருக்கு வந்ததும் அம்மா கிட்ட சொல்லி சுத்தி போட சொல்லணும்டா” என்று சிலாகித்து கொண்டான்.

“சரி சரி நான் போன் பண்ண விஷயத்த சொல்லிடுறேன்” என்றவன் அழைத்ததற்கு காரணத்தைச் சொன்னான்.

“மச்சி! நீ ஒரு ஃபைல சைன் பண்ணணும்டா. இட்ஸ் வெரி அர்ஜெண்ட். அப்புறம் பேங்க்ல அமௌன்ட் பே பண்ணணும். அதுக்கு உன்னோட சைன் தேவை படுதுடா”என்று அழைத்ததன் நோக்கத்தை கூற,

“ஹோ” என்றவன் ஆழ்ந்த சிந்தனைக்கு போனான்.

“மச்சி, மச்சி… மச்சான்… அடேய் வசி! லைன்ல இருக்கியா இல்லையாடா பன்னி” என்று கத்த,

“எதுக்கு விபு இந்த கத்து கத்துற? ஏன் அங்க ஏதாவதுபொண்ணு இருக்கா என்ன?” என்று நண்பனை நக்கலடிக்க,

“நீ கூட இருக்கிற வரைக்கும் எனக்கு எந்த ஒரு பொண்ணும் செட் ஆகாதுடா” என்று நறுநறுவென பற்களை கடித்தான்.

“மச்சி நாளைக்கு நீ கிளம்பி ஊருக்கு வா. நான் அங்க வந்து உனக்கு சைன் பண்ணி தரேன். இப்போதைக்கு என்னால ஊருக்கு வர முடியாது” என்றான் தன்னிலை எண்ணி.

“சரிடா நான் நாளைக்கு மார்னிங் ஃப்ளைட்ல வரேன்” என்க.

“சரி மச்சி அப்போ அப்போ அப்பாவ போய் பாத்துட்டு வாடா” என்றான் ஒரு மகனாய்.

அடுத்தநாள் விடிந்ததும் நங்கையிடம் வேலை இருக்கு என்று கூறி விட்டு, சதாசிவத்தின் வீட்டிற்கு வருகை தந்திருந்தான்.

அந்த நேரம் பார்த்து சரியாக ஆதினி வருகை தர, கேட்கலாமா வேண்டாமா என்று சிந்தனையில் இருந்தவனை கலைத்தது அவளது குரல்.

“ஏதாவது சொல்லணுமா மிஸ்டர் விருமாண்டி” என்ற குரலில் சத்தியமாக வெறுப்பு இல்லை.

“அது…” என்று இழுக்க,

“சொல்லுங்க”

அதற்குள் சதாசிவம் வருகை தர, “அப்பா நான் ஊருல இருக்க விநாயகர் கோயிலுக்கு போகட்டுமா பா” என்க.

தன் மகளா தன்னிடம் பேசியது என்று விழிவிரித்து பார்த்தார்.

“அப்பா” என்று உலுக்க,

“என்னம்மா” என்றார் கலங்கிய குரலில்.

“அப்பா கோயிலுக்கு போகட்டுமான்னு கேட்டேன் பா” என்க.

மகள் பேசிய சந்தோஷத்தில், “சரிம்மா போயிட்டு வா” என்றார் சிரித்த முகமாக.

அதில் சந்தோஷமடைந்தவள், ”தேங்க்ஸ் பா” என்று அறைக்கு விரைந்தாள்.

“சொல்லுப்பா வசி” என்று சந்தோஷமாகவே கேட்க,

“சார் எனக்கு இன்னைக்கு ஒரு நாள் லீவ் வேணும் சார்” என்க.

“எதுக்கு பா?”

“சார் கொஞ்சம் பக்கத்து ஊர் வரைக்கும் போக வேண்டியது இருக்கு சார்” என்றான்.

“சரிப்பா  போயிட்டு வா” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் ஆதினி அழகிய பச்சை வண்ண புடவையில் ஆங்காங்கே மயில் இறகை கோலமிட்டு பார்க்கவே அழகாக தேவதை போல் பிரவேசித்தாள். அந்த அழகையே தோற்கடிக்கும் விதமாக அவளின் புன்னகை அவள் முகத்தில் காட்சியளித்தது.

“என்னைய கொஞ்சம் அந்த ஊருல இருக்கிற கோயில்ல விட்டுட முடியுமா. அங்க விட்டுட்டு நீங்க உங்களோட வேலைய பார்க்கலாம் ப்ளீஸ்” என்று குமரியாக பேசி குழந்தையாக கெஞ்ச,

அதை பார்த்தவனுக்கு மறுக்க தோன்றாமல் போக, “சரி வாங்க மேடம்” என்று அழைத்துச் சென்றான்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த சதாசிவத்திற்கு மகள் பேசியதில் அத்தனை மகிழ்ச்சி இருந்தது.

அந்த மகிழ்ச்சியை குலைப்பதற்காக சிறிது நேரத்தில் அழைத்தான் வசீகரன்.

“சொல்லு தம்பி” என்க.

“சார்… சார்… மேடம்” என்று பதற்றத்தில் அழைக்க,

“ஆதினிக்கு என்ன வசி” என்ற அவருக்கு பதற்றம் குடிக் கொண்டது.

“சார்… மே… டம்… கா… காணும்” என்றவனின் குரலில் அப்படியே மடிந்து விட்டார் அந்த மனிதர்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!