நிரல் மொழி 10.2

_20200905_075235

நிரல் மொழி 10.2

நேரம் 9:30…

பேசிக் கொண்டும்…  சிரித்துக் கொண்டும்…  மிதமான வேகத்தில் காரில் சென்று கொண்டிருந்தனர். 

நிகில்தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

இன்னும் சற்று நேரத்தில், மழை பெய்யப் போவது போல் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. 

கொஞ்சமாகக் கார் கண்ணாடியைத் திறந்து வைத்துக் கொண்டு, அந்தக் குளிர் காற்றை அனுபவித்துக் கொண்டு வந்தனர்.

நேரம் 9:45

பின் இருக்கையில் ஷில்பா அமர்ந்திருந்தாள். அவள் மடியில் படுத்து, ஜெர்ரி உறங்கியிருந்தான். 

முன் இருக்கையில்… நிகில் மற்றும் மிலா! 

இக்கணம், பேச்சுக் குறையைத் தொடங்கியது.

“நிகில் ஏதாவது சாங் போட்டு விடு” என்றாள் ஷில்பா!

“ஹாங், ஹோலி சாங்ஸ் கேட்கலாம்” என்றாள் மிலா, இன்னும் அதே கொண்டாட்ட மனநிலையில்!!

“அவனை பிளே பண்ணச் சொல்லு” என்ற ஷில்பா… பின்னோக்கித் தலை சாய்த்துக் கொண்டாள்.

மிலா, நிகிலைப் பார்த்தாள். 

“இரு. என்னோட ஃபோன்லருந்து கனெக்ட் பண்றேன்” என்றவன், 

தன் கைப்பேசியின் ப்ளூடூத்தை ஆன் செய்தான்! 

அதைக் காரின் ‘பிளூடூத்’ உடன் இணைத்தான். 

பின், மிலாவிடம் கைப்பேசியைக் கொடுத்து, “என்ன சாங் வேணுமோ பிளே பண்ணிக்கோ” என்றான்.

சற்று நேரம் தேடி, மிலா பாட்டு போட்டுவிட்டாள்.

‘ஹோலி ரே’ என்ற பாடல், காருக்குள் ஒலிக்க ஆரம்பித்தது. 

பாடலின் பின்னே பாடிக் கொண்டே மிலா… 

மெதுவாகக் காரை ஓட்டிக் கொண்டே நிகில்… 

ஷில்பாவின் மடியில் உறங்கும் ஜெர்ரி… 

சோர்வு இருந்ததால், கண்கள் மூடிக் காரின் இருக்கையில் பின்னோக்கி தலை சாய்ந்த நிலையில் ஷில்பா… 

இந்த நேரம் தூறல் போட ஆரம்பித்தது.

நேரம் 10:00

அதே நிலையில் அனைவரும் இருந்தனர்.

ஆனால், மழை பெய்ய ஆரம்பித்திருந்தது!

காரின் சன்னல் கண்ணாடிகள் அனைத்தையும் நிகில் மூடிவிட்டான்.

காரின் ‘வைப்பர்’ வேலை செய்ய ஆரம்பித்தது. 

நேரம் 10:15

மழை இரவு இது! கனமழை கொட்டிக் கொண்டிருந்தது!!

இப்போது, நிகில் காரை வேகமாக ஓட்டினான். 

காரின் முன்கண்ணாடியில்… பட் பட்டென்று என்ற வேகத்தில் ‘வைப்பர்’ அடித்துக் கொண்டிருந்தது.

நேரம் 10:25 

இருள் அதிகமாக இருந்த சாலை, அது! 

கனமழை என்பதால், அந்தச் சாலையில் ஆட்கள் நடமாட்டமே இல்லை. 

ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டுமே! 

அதுவும், அசூர வேகத்தில் சென்று கொண்டிருந்தன.

நிகிலும் காரின் வேகத்தைக் கூட்டினான். ஷில்பாவை விட்டுவிட்டு, சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்று நினைத்தான்.

ஆனாலும், பலத்த மழைக் காரணமாக… காரை ஓட்டுவது, சற்று கடினமாக இருந்தது. 

இன்னும் மிலா பாட்டுக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

கார் சென்று கொண்டே இருந்தது.

தீடீரென்று காரின் ‘வைப்பர்’ வேலை செய்யவில்லை!!

கொட்டும் மழையின் வேகத்தில், கார் முன்புறக் கண்ணாடி மேல்… மழை நீர் இரைச்சலுடன் விழுந்தது! 

வைப்பர் இல்லாததால், சாலையின் முன்னே இருப்பது எதுவுமே தெரியவில்லை! 

வெறும் மழை நீர் மட்டுமே தெரிந்தது! 

இருட்டு வேறு!! 

காரின் முகப்பு விளக்கின் ஒளி இருந்தும், மழை நீர் விழும் வேகத்தில்… சாலையின் பாதை சுத்தமாகத் தெரியவில்லை. 

சட்டென, நிகில் காரை நிறுத்தினான்.

“என்னாச்சு நிகில்?” என்று கேட்டு, ஷில்பா கண் திறந்தாள்.

“வைப்பர் வொர்க் ஆக மாட்டிக்கு” என்றான். 

“ஆட்டோமெட்டிக் வைப்பர் நிகில். ரெயின் ஸ்டார்ட் ஆனதும், வொர்க் ஆகுயிருக்குமே??” என்று ஷில்பா சந்தேகமாகக் கேட்டாள்.

“இவ்வளவு நேரம் வொர்க் ஆனது. இப்போதுதான் இப்படி” என்றவன், காரை ஆஃப் செய்து… மீண்டும் ஆன் செய்தான். 

மற்றும் ‘மேனுவலாக'(manual) வைப்பரை ஆன் செய்தான். 

இப்போது வேலை செய்தது. 

ஆனால், கார் இரண்டு அடி நகர்ந்ததும், திரும்பவும் ‘வைப்பர்’ நின்றுவிட்டது. 

மீண்டும் காரை நிறுத்திவிட்டான். 

அந்த அடைமழையில், ‘வைப்பர்’ இல்லாமல் கார் ஓட்டுவது… சிரமம்! 

சிரமம் மட்டுமல்ல! ஆபத்தும் கூட!! ஆகவே, காரை நிறுத்தினான். 

‘ப்ச் ஏன் இப்படி?’ என்று யோசித்தான். 

பின், ‘சரி, வைப்பர் இல்லாமல் ஓட்டிப் பார்க்கலாம்’ என நினைத்து, காரை ஸ்டார்ட் செய்து ஓட்டினான். 

சிறிதளவும் சாலை தெரியவில்லை! ஓட்டுவது கடினம்! மேலும், ஆபத்து!

விபத்து ஏதும் ஏற்பட்டால்?? 

தான் மட்டுமென்றால் பரவாயில்லை. மிலா, ஜெர்ரி, ஷில்பா… மூவரும் இருக்கிறார்களே? 

நிகிலின் மனம் ஒப்பவில்லை!! 

மேலும், “இப்படி டிரைவ் பண்ண வேண்டாம். ரிஸ்க் நிகில்” என்றாள் ஷில்பா. 

காரை நிறுத்திவிட்டான். 

‘வேறு வழி என்ன?’ என்று மீண்டும் யோசித்தான்! நேரம் கடந்தது!! 

‘இப்படியே நிற்பது நேர விரயம்’ என நினைத்து, “மிலா என் மொபைல் கொடு” என்று கேட்டான். 

மிலா, கைப்பேசியை அவனிடம் கொடுத்தாள். 

கைப்பேசியைத் தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

“இறங்கப் போறியா? மழை பெய்து நிகில். நனைஞ்சிடுவ… ” என்றாள் மிலா. 

“வேற வழியில்லை மிலா. ஏதாவது ஆட்டோ கிடைக்குதா-ன்னு பார்க்கணும்” 

“வெயிட் பண்ணி, மழை நின்னதுக்கு அப்புறம் போகலாமே?” என்றாள் மிலா. 

“மழை நிக்கிற மாதிரியே தெரியலை. அப்புறம் ரொம்ப லேட்டாயிடும்! இங்கயே நின்னுக்கிட்டு இருக்கிறதும் சேஃப் இல்லை” என்றான். 

“வைப்பர் போடாமலே போகலாமே?” – மிலா. 

“முடிஞ்சா போயிருக்க மாட்டேன்னா? அது டேஞ்சர் மிலா! அதுவும் இப்படி ஹெவி ரெயின் டைம்ல, ரொம்ப டேஞ்சர்” என்று எடுத்துச் சொன்னான். 

மிலா அமைதியாகிவிட்டாள். 

“நிகில், இந்த நேரத்தில ஆட்டோ கிடைக்குமா?” என்றாள் ஷில்பா. 

“இந்த ரோட்ல வர்றது டவுட்தான். கொஞ்ச தூரம் நடந்தா, மெயின் ரோட் வரும். அங்க கிடைக்கலாம்” 

“ச்சே, ஏன் இப்படி ஆகுது?” என்று ஷில்பா புலம்ப ஆரம்பித்தாள். 

“ஹாங், ஏன் இப்படி?” என்று மிலாவும் புலம்பினாள். 

“விடுங்க!” என்றவன், நீங்க இறங்க வேண்டாம். ஆட்டோ கிடைச்சதும்… இங்கேயே கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு, நிகில் காரிலிருந்து இறங்கினான். 

காரின் வெளியே… 

காரின் முகப்பு விளக்கின் ஒளிப் பாதையில், சற்று தூரம் நடந்தான். 

இங்கே காருக்குள்… 

“நல்லா நனைஞ்சிடுவான்” என்று மிலா வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்.  

ஜெர்ரியை, தன் மடியிலிருந்து ஷில்பா மெல்ல விலக்கினாள். 

பின்,  பின்னிருக்கையில் இருந்து இறங்கி, ஓட்டுநர் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள்.

பின், காரை ஸ்டார்ட் செய்தாள். 

இப்பொழுது வைப்பர் வேலை செய்தது!! 

‘இப்ப வொர்க் ஆகுதே’ என்று நினைத்தவள், கார் கண்ணாடியைத் திறந்து… “நிகில்… இப்போ வொர்க் ஆகுது! வா போகலாம்” என்று கத்தினாள்.

நிகில் திரும்பிப் பார்த்தான். 

‘அதெப்படி?’ என்று நிகில் யோசிக்கையிலே… 

திபு திபுவென இருளின் மறைந்திருந்த சிலர், அவனைச் சூழ ஆரம்பித்தனர்!

நேரம் 10:50

தனித்து விடப்பட்ட தார் சாலை!

இருள்! இருட்டு! எத்தகையோரையும் பயம் கொள்ளச் செய்யும் இருட்டு!

விட்டுவிட்டு வெட்டும் மின்னல் ஒளி மற்றும் சற்றுத் தொலைவில் நிற்கும் கார் முகப்பு விளக்கின் ஒளி… இந்த இரண்டு மட்டுமே சிறு வெளிச்சம் தந்தன!

நிறுத்தவே போவதில்லை என்பது போல், சோவென மழைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.

பெய்யும் மழையில், உடல் முழுவதும் நனைந்தவாறு நிகில் நின்று கொண்டிருந்தான்.

அவனைச் சுற்றிப் பத்து பேர் நின்று கொண்டிருந்தனர்.

‘என்ன நடக்கிறது?’ என்று நிகில் புரியும் முன்… அவனது முதுகில்… இரும்புக் கம்பி கொண்டு, ஓங்கி ஒரு அடி விழுந்தது.

காரின் விளக்கு ஒளியில் தெரிந்த, இந்தக் காட்சியைக் கண்டதும்… காருக்குள் இருந்த, மிலா மற்றும் ஷில்பா ‘நிகில்’ என்று பயந்து கூச்சலிட்டனர்.

வலி! அடித்த இடத்தில அப்படி ஒரு வலி!!

இந்த நேரத்தில்…  

மருத்துவமனையில்… 

இப்பொழுதும், அவன் காதிற்குள்… இருவரும் ‘நிகில்’ என்று அழைத்தது கேட்டது. 

இப்பொழுதும் அந்த வலி இருந்தது. 

நேரம் 6:30 (இன்று காலை)

கண் திறந்தான். 

உறக்கமே இல்லாததால், கண்கள் சிவந்து இருந்தன.

அந்த அறையின் சன்னல் வழியே, விடியல் தெரிந்தது! 

மழை இரவின் விடியல் அது! 

சற்று மந்தமாகத்தான் இருந்தது!! 

நேற்றைய இரவு, ‘காரின் வைப்பர் ஏன் வேலை செய்யவில்லை?’ என்று புரிந்தது. 

‘நல் கேரின்’ வேலைதான் அது! 

ஆனால் எப்படி? 

பிளூடூத் வழியாகக் காருடன் இணைக்கப்பட்ட, தன் கைப்பேசியின் மூலமாக… காரின் ‘வைப்பர்’ வேலை செய்யவிடாமல் செய்திருக்கிறான்.

ஏற்கனவே, தன் கைப்பேசி ‘நல் கேர்’ ஹேக் செய்திருந்ததால், இதைச் செய்வது எளிதுதான். 

மேலும், ஆட்டோமேடிக் வைப்பர்!! ஆதலால், இது மிக எளிது! 

ஆனால், இத்தனை அவசரம் ஏன்?!? 

அதுதான் புரியவில்லை!! 

இன்னொன்றும் புரியவில்லை. 

அது! தன் கைப்பேசியை வைத்து, தன்னைத் தேடி ஏன் இங்கே ‘நல் கேர்’ ஆட்கள் யாரும் வரவில்லை என்று?!! 

இல்லை, வந்தவர்கள்… காவலர்கள் இருப்பதால் சென்றுவிட்டார்களா? 

தெரியவில்லை! 

மெதுவாக எழுந்து அமர்ந்தான். வலி நிவாரிணிகளின் வீரியம் குறைந்ததால், இப்போது அதிகமாக வலிக்க ஆரம்பித்தது. 

ஒரு கையால் தலையைப் பிடித்துக் கொண்டு… மறு கையால் கைப்பேசியை எடுத்தான்.

‘ஏன் இப்படி?’ என்று ஷில்பா ஓரளவு யூகித்திருப்பாள். மிலா, மிகவும் பயந்திருப்பாள். 

ஜெர்ரி? நிச்சயம் தன்னை தேடியிருப்பான்!

மூவரையும் பார்க்க வேண்டும் போல் மனம் வேண்டியது. 

‘மருத்துவமனை வரலாம்?’ என்று ஷில்பாவிடம் சொல்ல வேண்டும் என நினைத்து, அவளது கைப்பேசிக்கு அழைத்தான்.

‘ரிங்’ போய்க் கொண்டே இருந்தது. அழைப்பின் நேரம் முடிந்து, ‘ரிங்’ நின்றுவிட்டது. 

‘இவள் ஏன் இப்படி?’ என்று நினைத்தவன், மிலாவின் கைப்பேசிக்கு அழைத்துப் பார்த்தான்.

இம்முறை, மிலாவும் அழைப்பை ஏற்கவில்லை!

கொஞ்சம் பதற்றம் வந்தது!!

வலியைப் பொறுத்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம் நேராக அமர்ந்து கொண்டான்.

மீண்டும் இருவருக்கும் அழைத்துப் பார்த்தான். 

இருவருமே எடுக்கவில்லை!

‘ஏன்? என்னாச்சு?’ என்று பயம் வந்தது!!

‘அடுத்து என்ன செய்ய?’ என்று யோசித்தான். 

இருவருக்கும் ஏதும் பிரச்சனையா? என மூளை நினைக்கும் போதே… அதற்கு வாய்ப்பில்லை, என்று மனம் சமாதானம் செய்தது. 

மிலா பேசினாளே!? ஆனால், ஏன் இந்தமுறை அழைப்பை எடுக்கவில்லை என யோசித்தான். 

மேலும், தன்னிடம்… மிலா பேசியவற்றை எல்லாம் யோசித்துப் பார்த்தான். 

‘போலீஸ் ஸ்டேஷன் போக முடியலை’ 

‘உன்னைப் பார்க்கணும்’

‘பயமாயிருக்கு’

‘ஷில்பா தூங்கிறா! எழுப்பவா??’

ஏதோ நெருடலாகத் தோன்றியது. 

யோசித்தான். மீண்டும் மீண்டும் யோசித்தான்.

திரும்பத் திரும்ப மிலா சொன்னது… ‘பயமாயிருக்கு… உன்னைப் பார்க்கணும்’ என்றே! 

அதில் ஏதும் விடயம் இருக்கிறதா? என்று யோசித்தான்! 

ஆனால், வீட்டில் இருக்கிறோம் என்று சொன்னாளே!

யோசித்தான்!

மீண்டும் நெருடியது! ஒரு கேள்வி உதித்தது!! 

அது! வீட்டிற்குப் போனவர்கள், ‘ஏன் ஒருமுறை கூட தனக்கு அழைக்கவில்லை?’ என்பது!

ஆம், ஏன் அழைக்கவில்லை?!?

தான் அழைத்த பின்தானே, மிலா பேசினாள். 

அப்பொழுதும் ஷில்பா பேசவில்லை! ஏன்?! 

‘ஏதேனும் அழைப்பை நான் தவற விட்டிருக்கேனா?’ என்று, தன் கைப்பேசியின் ‘கால் ஹிஸ்டரி’-யை படபடவென்று பார்த்தான். 

இல்லை! எந்த அழைப்பும் வரவேயில்லை!!

இருவரும், தன் நிலை பற்றி அறிந்து கொள்ள நினைக்கவில்லையா? ஏன்? 

நினைக்கவில்லையா?_இந்தக் கேள்விக்கு வாய்ப்பே இல்லை!! 

நினைக்கும் நிலையில் அவர்கள் இருக்கவில்லையா?? _ இந்தக் கேள்விக்கு வாய்ப்பு இருக்கிறது!! 

அவர்களின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் வந்தது! 

உடனே, கைப்பேசியில் ‘ஜீபிஎஸ் ட்ராக்கர்’ செயலியை எடுத்தான்.

மிலாவின் கைப்பேசி இலக்கத்தை தட்டச்சு செய்தான்.

அது ஒரு இடத்தைக் காட்டியது!

ஷில்பாவின் கைப்பேசி இலக்கத்தை தட்டச்சு செய்யும் போது, பதற்றத்தில் கைகள் நடுங்கின. 

அது வேறொரு இடத்தைக் காட்டியது!

அதிர்ச்சி அடைந்தான்! 

ஏன்? 

இரண்டுமே, அவன் வீடு இருக்கும் இடமில்லை.

அப்படியென்றால்?  என்ன அர்த்தம்?

‘வீட்டில் இருக்கின்றோம்’ என்று மிலா சொன்னதற்கு என்ன அர்த்தம்?

குழம்பித் தவித்தான்! 

யோசிக்க… யோசிக்க… தலை விண்விண்னென்று வலித்தது.

உடனே, “சிஸ்டர் சிஸ்டர்” என்று கத்தினான். 

அக்கணம், அவனது அறைக்குள் இரு ஆண்கள் நுழைந்து…  கதவைச் சாத்தினர்!!

Out of the Story 

கார் ஹேக்கிங்… car hacking

நிறைய கார் ஸ்மார்ட் கார்தான்.

Smart car! 

அதாவது காரின் சில செயல்பாடுகள், ஆட்டோமேட்டிக்காக இருப்பது.

உதாரணம், 

1)ரிவர்ஸ் பார்க்கிங்(நாம் திரும்பி பார்க்க வேண்டாம். ஏதேனும் தடை இருந்தால், ஒரு alarm வரும்) 

2) காரின் டயரில் காற்று அழுத்தம் குறைந்தால், காரின் வேகத்தை குறைக்கச் சொல்லி சிக்னல் வருவது. 

3) சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், அணியச் சொல்லி வரும் சிக்னல்.

4) பெட்ரோலின் அளவு குறையும் பொழுது வரும் சிக்னல். 

5) மழை பெய்தால், ஆட்டோமேட்டிக்-காக காரின் வைப்பர் வேலை செய்ய ஆரம்பிப்பது.

6) accident  நடக்கும் சமயம், airbag வேலை செய்வது. 

இது போல் நிறைய..

இவை எல்லாவற்றிற்கும் சென்சார்ஸ் (sensors) பயன்படுகிறது. 

காருக்குள் இருக்கும் on board micro controller system – தான், இது போன்ற automatic செயல்களைச் செய்ய உதவுகிறது. 

Example. 

ஒரு விபத்து நடக்கும் போது, sensors அந்த அதிர்வை sense செய்து… airbag release ஆவது. 

இது automatic. 

Episode. 

கைப்பேசியின் ப்ளூடூத் காருடன் இணைக்கப்படும் பொழுது, அந்தக் கைப்பேசி வழியே காரின் micro controller system-யை attack செய்து… காரின் automatic செயல்களைக் கட்டுப்படுத்த முடியும். 

அதுதான் இந்த அத்தியாயத்தில் (வைப்பர்) பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

Note: 

These features are vary from one car to another. Based on car’s make and model, it varies. 

[ optional

Device ↔️micro controller system 

இங்கே device என்பது காரின் பாகங்கள். அது  micro controller system உடன், CAN bus மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

CAN bus – controller area network. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!