நிரல் மொழி 13.2
நிரல் மொழி 13.2
பத்து நிமிடங்கள் கழித்து…
நேரம் 12:20
கொட்டும் மழை…
மின்னலுடன் சேர்ந்து இடி முழக்கம்…
பாலத்தின் கீழிருந்து வரும், விளக்கு கம்பத்தின் ஒளி…
பாலத்தின் மேலே, பைக் முகப்பு விளக்கின் ஒளி…
அந்தப் பாலத்தின் சாலையில், ரத்த வெள்ளத்தில் ஷில்பா கிடந்தாள்.
கைப்பேசியில் நிகிலிற்கு, இல்லை யாருக்காவது… அழைக்கலாம் என்று மிலா பார்த்தாள்!
அதற்கு அந்த அடியாட்கள் இருவரும் விடவில்லை.
ஜெர்ரியை கார் இருக்கையில் உட்கார வைத்து… மிலா, அவனுக்கு சீட் பெல்ட் போட்டுவிட்டாள்.
என்ன ஏதுவென்றே தெரியாமல்… விடாமல்… ஜெர்ரி அழ ஆரம்பித்திருந்தான்.
மிலா… பாலத்தின் பக்கச் சுவரைப் பிடித்துக் கொண்டு, ‘ஹெல்ப் ஹெல்ப்’ என்று கத்தினாள்.
அந்த அடியாட்களில் ஒருவன், அவளை முரட்டுத்தனமாகப் பிடித்து இழுத்து வந்து, காரின் அருகே தள்ளினான்.
அவன் தள்ளிய வேகத்தில், மிலா விழுந்துவிட்டாள்.
தார் சாலையில் விழுந்ததில், மிலா கைகளிலெல்லாம் சிராய்ப்புகள்!
அவளின் நிலை கண்டு, ஜெர்ரி அதிகமாக அழுதான். எழுந்து சென்று, அவனைச் சமாதானப்படுத்தினாள்.
பின் ஓடிச் சென்று, “ப்ளீஸ்… ப்ளீஸ் ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டுப் போக விடுங்களேன். ப்ளீஸ்” என்று, அந்தப் பைக் நபர்களிடம்… கதறிக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
கொட்டும் மழையில், ‘என்ன செய்ய?’ எனத் தெரியாமல்… மிலா தத்தளித்துக் கொண்டு வருவதைக் கண்டு, ஷில்பாவும் அழுதாள்.
பைக்கில் வந்த இருவரும், பாலத்தின் சுவர்களில் சாய்ந்து நின்றபடி… இதைப் பார்த்துக் கொண்டே நின்றனர்.
இதே நேரத்தில் நல் கேர்…
நேரம் 12:25
‘வெகு நேரம் ஆகிவிட்டதே?’ என எண்ணி, நிகிலை அடிக்கச் சென்ற அடியாட்களில் ஒருவனை… ‘நல் கேர்’ கைப்பேசியில் அழைத்தான்.
‘நிகில் அடிப்பதைத் தாங்க முடியாமல் தப்பித்து வந்து விட்டோம்’ என்று சொன்னான்.
அவர்களின் இயலாமையைக் கண்டு, நல் கேருக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
எனினும், ‘எப்படித் தலைமறைவாக இருக்க வேண்டும்?’ என்று சொன்னான்.
மேலும், ‘விஷயம் வெளியே தெரியக் கூடாது’ என்று எச்சரித்து, அழைப்பைத் துண்டித்தான்.
‘அடுத்து என்ன செய்ய?’ என்று யோசித்தான்.
இரண்டு நிமிடங்களில்…
நிகிலின் கைப்பேசி எண்ணை வைத்து, ‘அவன் எங்கிருக்கிறான்?’ என்று ‘லொகேஷன் ட்ராக்கர்’-ல் பார்த்தான்.
அது, ‘மருத்துவமனை’ என்று காட்டியது.
இனி இப்படி இருந்தால், தான் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து… மருத்துவமனைக்கு விரைந்தான்.
ஆனால், அங்கே காவல்துறை ஜீப் நிற்பதைக் கண்டதும்…
‘இவன் போலீஸிடம் எல்லாம் சொல்லிவிடுவானா? நான் இவனிடம் தோற்றுக் கொண்டிருக்கிறேனா?’ என்ற எண்ணம் வந்தது.
உடனே… ஷில்பா, மிலாவை விரட்டிச் சென்ற அடியாளை கைப்பேசியில் அழைத்தான்.
அவர்கள்… அங்கு நடந்ததைச் சொன்னதும், “முட்டாள்! சொன்னனேன்ல. எதுவும் செய்ய வேண்டாம்னு” என்று கோபப்பட்டான்.
‘இப்போ என்ன செய்ய?’ என்று அவர்கள் கேட்டதும், “இருங்க நான் அங்க வர்றேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.
‘யாரிவன்? என்னை இந்தப் பாடு படுத்துகிறான்?’ என்று ‘நல் கேருக்கு’ நிகில் மீது உச்சகட்ட கோபம் வந்தது.
இருந்தும்… அடுத்த நொடியே… அந்தப் பைக் காரர்கள் சொன்ன இடத்திற்கு விரைந்தான்.
விபத்து நடந்த இடம்…
நேரம் 1:15
மழை ஓய்ந்தபாடில்லை!
அதே நிலைதான் தொடர்ந்து கொண்டிருந்தது.
யாரும் உதவிக்கு வர மாட்டார்கள் என்று, மிலாவிற்குப் புரிந்தது.
அந்த அடியாட்களிடம் கெஞ்சிக் கொண்டு…
ஜெர்ரி அழுவதைச் சமாதானப் படுத்திக் கொண்டு…
வலியுடன், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஷில்பாவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு…
இப்படித் தவித்துக் கொண்டிருந்ததாள், மிலா!!
இதையெல்லாம்… கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், பைக் நபர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“மிலா” என்று, ஷில்பா கொஞ்சம் சத்தமாகக் கூப்பிட்டதும்… “என்ன ஷில்பா?” என்று கேட்டுக் கொண்டு, அவளருகில் வந்து அமர்ந்தாள்.
“என்னைக் காப்பாத்த டிரை பண்ணாத. வேற யாரும் வர்றதுக்கு…” என்றவள் வலியில் கண்களை ஒருமுறை மூடித் திறந்தாள். பின், “வர்றதுக்கு முன்னாடி, நீ தப்பிச்சு போ… போ” என்றாள்.
“எப்படி விட்டுட்டுப் போவேன்னு நினைக்கிற?” என்றவள், “இரு, வர்றேன்” என்று சொல்லி… மிலா எழுந்து கொள்ளும் போது… ஆறடிக்கு மேல் உயரமான ஒருவன் மேல் இடித்துக் கொண்டாள்.
உயரமான ஒருவன்?
கருப்பு நிற ‘டேங்க் டாப்’, நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தான். பொறுமையாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்துப் பயந்து போய்… எதுவும் பேசாமல், மிலா நின்றாள்.
ஜெர்ரி… இன்னும் அழுது கொண்டிருந்தான்.
பேரிரைச்சலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.
அந்த உயரமான ஒருவன் ‘நல் கேர்’!!
‘நல் கேர்’ வந்ததும், “அந்தப் பொண்ணு, தேவையில்லாம…” என்று பைக் காரன் சொல்லும்போதே… நல் கேர் கைகாட்டி நிறுத்தினான்.
“ப்ளீஸ் ஹாஸ்ப்பிட்டல்…” என்று மிலா சொல்லும் போதே, அவளை விலக்கிவிட்டு… நல் கேர் ஷில்பாவை நோக்கிச் சென்றான்.
“ஏய்! என்ன பண்ணப் போற?” என்று கோபமாகக் கேட்டு, மிலா அவனைத் தடுத்து நிறுத்தப் பார்த்தாள்.
தடுப்பவளைத் தட்டிவிடப் பார்த்தவன், அது முடியாமல் போக… பலமாகப் பிடித்து, அவளைத் தள்ளிவிட்டான்.
விழுந்ததில், திறந்து கிடந்த காரின் கதவில் இடித்து… மிலாவின் நெற்றியில் ரத்தம் வர ஆரம்பித்தது.
‘நல் கேர்’ ஷில்பாவின் அருகில் சென்று அமர்ந்தான்.
‘என்ன செய்யப் போகிறானோ?’ என்ற பயத்தில் எழுந்த மிலாவை, அடியாள் ஒருவன் வந்து பிடித்துக் கொண்டான்.
“விடு… விடு… ஹெல்ப்! ஹெல்ப் ” என்று மிலா கத்தினாள்.
அவள் கத்துவதைக் கண்டு… ‘நல் கேர்’ கோபத்துடன் திரும்பிப் பார்த்ததும்,
அவளை நகரவிடாமல் பிடித்துக் கொண்டிருந்தவன், “கத்தாம இரு” என்று சொல்லி, அவள் வாயை அழுத்தமாக மூடினான்.
நல் கேர்… ஷில்பா…
அவன், ‘தன்னை என்ன செய்யப் போகிறான்?’ என்று ஷில்பாவிற்குத் தெரிந்துவிட்டது. எனினும், அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
நல் கேரும் ஷில்பாவின் அருகே அமர்ந்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘இவன்தான்… மால்வேர் அட்டாக் செய்தவன்’ என்று ஷில்பா கணித்திருந்தாள்.
ஒரு நிமிடம், ‘நல் கேர்’ யோசித்தான்.
இவளை இப்படியே விட்டுவிடலாமா? இல்லை, கொன்று விடலாமா? என்று யோசித்தான்.
எதில் தனக்கு ஆபத்து அதிகம் என்று யோசித்தவன், ஷில்பாவைக் கொன்று விடுவதே சரியென முடிவெடுத்தான்.
கையுறைகள் அணிந்து கொண்டான்.
தன்னிடமிருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து, அவள் கழுத்தின் அருகே கொண்டு சென்றான்.
இதைப் பார்த்த மிலா, அந்த அடியாளில் பிடியிலிருந்து விடுபட திமிறினாள்.
ஆனால், இயலவில்லை!
கூர்மையான முனையை, ஷில்பா கழுத்தில் வைத்து அழுத்தினான்.
ஷில்பா வலியில் துடித்தாள்.
பின், கூர்மையான ஆயுதத்தை ஷில்பாவின் கழுத்தில் இறக்கினான்.
குத்திய இடத்திலிருந்து ரத்தம் வழிந்தது.
ஷில்பா… மூச்சுவிட முடியாமல், போராடிக் கொண்டிருந்தாள்.
கண்களை மூடிக் கொண்டாள் மிலா. அவளால் கத்தவும் முடியவில்லை. பார்க்கவும் முடியவில்லை.
மேலும் இரண்டு முறை குத்தி, ஷில்பாவின் உயிரைப் பறித்தான்.
எதுவுமே நடக்காதது போல் எழுந்து, மிலாவின் அருகே வந்தான், நல் கேர்!
அவளைப் பிடித்திருப்பவனை, விட்டுவிடுமாறு சைகையால் சொன்னான்.
அடியாள் மிலாவை விட்டுவிட்டான்.
அழுத்திப் பிடித்திருந்ததால், மிலா உதட்டின் ஓரத்தில் இருந்து ரத்தம் கசிந்து ஆரம்பித்தது.
அவன் விட்டதும்… ஓடிச் சென்று, ஜெர்ரியைத் தூக்கினாள். நடந்த கொடூரத்தை நினைத்துப் பார்த்தவளுக்கு, கண் கட்டியது.
அப்படியே அமர்ந்துவிட்டாள்.
நல் கேர், “நீங்க கிளம்பலாம். பணம் உங்களுக்கு வந்து சேரும்” என்று சொன்னதும், அவர்கள் இருவரும் பைக்கில் கிளம்பிவிட்டனர்.
அவர்கள் கிளம்பியதும்…
நேரம் 1:50
இன்னும் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.
‘நல் கேர்’ மிலாவைப் பார்த்தான்.
அழுது கொண்டிருந்த ஜெர்ரியை, சமாதானப் படுத்தும் விதமாகவும்… மழையில் நனைந்து விடாமலும்… மிலா, அவனை அணைத்திருந்தாள்.
ஷில்பா கிடக்கும் பக்கம் பார்க்காமல், வேறு பக்கம் பார்த்து… மிலா அழுது கொண்டிருந்தாள்.
உடல் நடுங்கியது. முக்கால்வாசி பயத்தினால்… கால்வாசி மழையில் நனைந்து கொண்டிருப்பதால்!
நல் கேர், மிலாவின் அருகே வந்து அமர்ந்தான்.
“வா” என்று கையைப் பிடித்து இழுக்கும் போது…
கைப்பேசியின் சத்தம்! காருக்குள் இருந்து சத்தம் வந்தது.
நல் கேர், காரின் பின்புறம் கிடந்த கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.
நிகில்தான்! ஷில்பாவின் கைப்பேசிக்கு அழைத்திருந்தான்.
கைப்பேசி அழைப்பை, மிலா கவனிக்கவில்லை.
ஷில்பா உயிருடன் இல்லை! இதுமட்டும்தான் அவள் எண்ணத்தில்!!
நல் கேர், மிலாவின் கன்னத்தில் அடித்து, அவளை நினைவிற்கு கொண்டுவந்தான்.
தன் அருகில் ஒலிக்கும் கைப்பேசி சத்தத்தைக் கேட்டு, மிலா திரும்பிப் பார்த்தாள்.
‘நல் கேர்’ கையிலிருந்த கைப்பேசி திரையில் ‘நிகில்’ என்ற பெயர்!
‘நிகில் நிகில்’ என்று சொல்லிக் கொண்டே, கைப்பேசியை வாங்கப் போனாள்.
அவன் கொடுக்கவில்லை. மேலும், “நான் சொல்ற மாதிரி பேசணும்” என்றான்.
“முடியாது. முடியவே முடியாது” என்றாள் உச்சக்கட்ட கோபத்துடன்.
இவள் பேசவில்லை என்றால், அவன் சந்தேகப்படுவான். அப்படி நடக்கக் கூடாது! இவள் பேச வேண்டும்!
மிலாவின் மறுப்பில், நல் கேருக்கு கோபம் வந்தது!
சட்டென, ஜெர்ரியை அவளிடமிருந்து பறித்துக் கொண்டான்.
“ஏய்! என்ன பண்ற நீ? ஜெர்ரியைக் கொடு” என்று கதறினாள்.
“கத்தாத! நான் சொல்லற மாதிரி பேசணும்” என்று ஜெர்ரியைக் காட்டி மிரட்டினான்.
“பேசுறேன்… பேசுறேன். ப்ளீஸ் ஜெர்ரியைக் கொடு” என்று அழுது கொண்டே சொல்லும் பொழுதே, கைப்பேசி அழைப்பு நின்றது.
ஒரு அரை நிமிடம் இடைவெளி! நிகிலிடம், ‘என்ன பேச வேண்டும்?’ என்று… மிலாவிடம், நல் கேர் சொன்னான்.
அடுத்த அழைப்பு, மிலாவின் கைப்பேசிக்கு! நிகிலடமிருந்துதான்!!
இரண்டாவது ரிங்-ல்….
“போ… போ… போய் எடுத்துப் பேசு. வேற மாதிரி ஏதாவது பேசின! அவ்வளவுதான்” என்று ஜெர்ரியைக் காட்டினான்.
“சரி பேசறேன்” என்று எழுந்தாள்.
மூன்றாவது ரிங்-ல்…
“காருக்குள் இருந்து பேசு… அப்போதான் மழை பெய்ய சத்தம் கேட்காது”
ஓடிச் சென்று, கைப்பேசியை எடுத்து காருக்குள் அமர்ந்தாள்.
நான்காவது ரிங்-ல்…
‘நல் கேரும்’ வந்து, காருக்குள் அமர்ந்து கொண்டு… கார் கதவை அடைத்தான்.
ஐந்தாவது ரிங்-ல்…
“ஹலோ நிகில்” என்றாள், மிலா.
பேசினாள்!
நல் கேர்… ஒரு கையால் ஜெர்ரி கத்தாமல் இருக்க, அவனது வாயை மூடியிருந்தான். மறு கையில் அவனது கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்தான்.
அதைப் பார்த்து, பயத்துடன்… அழுது கொண்டே… மிலா பேசினாள்.
மிலா, ‘பயமாயிருக்கு நிகில்! உன்னைப் பார்க்கனும்’ என்று சொல்வதும்…
‘மிலா, டைம் இப்போ 2:15. ஒரு பைவ் அவர்ஸ் பொறுத்துக்கோ. ப்ளீஸ்’ என்று நிகில் சொல்வதும்… என்று அழைப்பு முடிந்தது.
நல் கேர்… மிலா, ஜெர்ரி இருவரையும்… தான் வந்த காரில் கூட்டிக் கொண்டு சென்றான்.
போகும் வழியில்… மிலாவின் கைப்பேசியைத் தூரத் தூக்கி எறிந்துவிட்டான்.
‘நல் கேர்’ காரினுள்…
நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது… உதட்டின் ஓரத்தில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது…
கைகளில் சிராய்ப்புகள்… உள்ளங்கையில் ஷில்பாவின் ரத்தம்…
கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது… அவளது உடல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது!
“ஷில்பா… ஷில்பா…” என்று வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்க, கண்கள் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தது.
ஜெர்ரியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தாள்…
இது நேற்றைய இரவு!
மிலா, சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
அவள் நெற்றிக் காயத்தின் ரத்தம், உறைந்து போயிருந்தது… உதட்டின் ஓரத்திலும் உறைந்த ரத்தம்…
கைகளில் சிராய்ப்புகள்…
உள்ளங்கையில் ரத்தக் கறை…
கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது… அவளது உடல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது!
‘பயமாயிருக்கு நிகில்! உடனே உன்னைப் பார்க்கணும்’ என வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது…
அவளின் மடியில் ஜெர்ரி படுத்திருந்தான்!
இது இன்றைய பகல்!
அறையின் மறுபுறத்தில் இருந்த நல் கேர், எழுந்து வந்து… மிலா அருகில் அமர்ந்தான்.
மிலா, நிமிர்ந்து பார்க்கக் கூடப் பயந்தாள்.
அந்தப் பயத்தில், ‘பயமாயிருக்கு நிகில்! உடனே உன்னைப் பார்க்கணும்’ என முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
‘என்ன உளறுகிறாள்?’ என்று அவளருகே குனிந்து… காதைக் கொடுத்துக் கேட்டான்.
அவள் சொல்வதைக் கேட்டதும், ‘உன்னை உயிரோட அனுப்புற ஐடியா எனக்கில்லை’ என்று நினைத்துக் கொண்டு, எழுந்து சென்று… கணினி முன்னே அமர்ந்து கொண்டான்.