நிரல் மொழி 7-1

நிரல் மொழி 7-1
அடுத்தடுத்து வந்த நாட்களில்…
இப்படி அடிக்கடி நடக்கும் அனல் மின் நிலைய ஆலை ஷட்டௌன்-க்கு காரணம், ஆலையில் ஒலிக்கப்பட்ட ‘அபாய மணி’!!
அதாவது, ஆலை செயல்படுவது பாதுகாப்பு அற்றது என்பதால் அபாய மணி அடித்து… எச்சரிக்கை செய்யப்பட்டதால், ஆலையை ஷட்டௌன் செய்திருந்தனர்.
இது, ஒரு நாள்… இரண்டு நாள் என்று இருக்கும் போது பெரிதான பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப் படவில்லை.
ஆனால், அதுவே தொடரும் போது… அதனால் உற்பத்தி குறையும் போது… அனல் மின் நிலைய பாராமரிப்புக் குழுவிடம், பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது.
அபாய மணி ஒழிப்பதற்கு ‘காரணம் என்ன?’ என்று சோதித்துப் பார்த்தனர்.
அவர்கள் கண்டறிந்தது?
கொள்கலனின்(பாய்லர்) அழுத்தம் அதிகரிக்கிறது!
ஆதலால், கொள்கலன் வெடித்து… ஆலையில் பெரிய தீவிபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதால்… அபாய மணி அடித்திருக்கிறது.
இது கஸ்டமர் சோதித்துப் பார்த்ததில் கண்டறியப்பட்டது!!
அதன் பின்தான் அனல் மின் நிலைய பாராமரிப்புக் குழு, ஷில்பாவின் நிறுவனத்தை அணுகினர்.
அதாவது இப்படி அடிக்கடி கொள்கலனின் அழுத்தம் அதிகம் ஆகுவதற்கு காரணம் என்ன என்று கேட்டனர்?
முதலில் ஷில்பா வேலை பார்க்கும் நிறுவனத்தின், ப்ராஜெக்ட் மற்றும் டெக்கனிக்கல் டீம் ஹெட் சார்பில் மீண்டும் ஒருமுறை அனைத்தையும் பரிசோதித்துப் பார்த்தனர்.
அவர்கள் கண்டறிந்ததும், கொள்கலனின் அழுத்தம் அதிகரிக்கிறது என்றே!
இங்கே மின்சார உற்பத்திக்கு குறைவதால்… பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.
எனவே, இந்தத் திட்டத்தின் மேலாளர் (product manager) ஷில்பாவிடம் பிரச்சனையைக் கொண்டுவந்தனர்.
இதோ! அவள் நேரடியாகப் பிரச்சனையைக் கையாண்டு கொண்டிருக்கிறாள்!!
அதன் அடுத்த கட்டமாகத்தான், இந்த ‘ரூட் காஸ் அனாலிசிஸ்’ செய்து பார்க்க வேண்டும் என்று ஷில்பா நினைத்தது.
முடிவு எடுத்த அடுத்த நாளில், அலுவலகம் வந்தவுடன் ‘ப்ராஜெக்ட் ஹெட்’-டம் சொல்லி கஸ்டமர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யச் சொன்னாள்.
அதற்கு அடுத்த நாள்… அனல் மின் நிலைய பிளான்ட் மெயிட்டனன்ஸ் டீம் ஹெட்டை, ஷில்பா சந்தித்தாள்.
ஷில்பாவுடன், அவள் பணி செய்யும் நிறுவனத்தின் சார்பாக சிலரும் சந்திப்பில் பங்கேற்றனர்.
சந்திப்பு ஆரம்பித்தது.
கஸ்டமர் தரப்புக் கேள்வியெல்லாம் ‘ஏன் கொள்கலனின் அழுத்தம் அதிகம் ஆகிறது?’ என்று மட்டுமே.
மேலும், அதனால் தங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைச் பற்றியும் பேசினார்கள்.
‘நீங்கள் விற்ற ப்ராடைக்ட்டில் நம்பகத்தன்மை இல்லை’ என்பதை கூறினார்கள்.
ஷில்பாவின் பதில், ‘சூன், வி வில் சார்ட் அவுட் தே ப்ராப்ளம்’ என்ற ரீதியில் மட்டுமே இருந்தது.
இருக்க முடிந்தது!
இப்படியே இருபக்கமும் பேச்சுக்கள் தொடர்ந்தன.
கடைசியில் ஷில்பா, ‘ரிட்டனபில் பேஸிஸ் முறையில், ப்ராடைக்ட்டை கொடுங்க. நாங்க செக் பண்ணி, என்ன ப்ராப்ளம்-ன்னு ஃபைன்டு அவுட் பண்றோம்’ என்றாள்.
அவளின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள… ஆலையின் பொறுப்பில் இருக்கும் ஆட்கள், தங்களுக்குள் கலந்து பேசினார்கள்.
கடைசியில் அனல்மின் நிலையத்தின் சார்பாக இருப்பவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.
சோதனையின் போது, இருவருக்கும் பொதுவாகப் பேச ஒருவர் நியமிக்கப்பட்டார்.
அவர், இந்தத் துறைகளில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்!
அதாவது, தேர்ட் பார்ட்டி மெம்பெர்!
இப்படியான முடிவுகளை எடுத்த பின், சந்திப்பு நிறைவுற்றது.
எட்டு மாதங்களாகக் கிடைத்த நற் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் ஷில்பா இருந்தாள்.
ஆகையால், அதற்கு மேல் அவள் தாமதப் படுத்தவில்லை.
பிரச்சனையைக் கண்டறிய வேண்டும்! உடனே அதைச் சரிசெய்ய வேண்டும்!!
இதுதான் கண்முன் இருந்தது! இது மட்டும்தான்!! வேறெதையும் அவள் நினைக்கவில்லை.
தன் நிறுவனத்தின் டெக்கினிக்கல் டீம் ஹெட்-யை வரவழைத்தாள்.
முதலில் வன்பொருளில்(PLC/HMI hardware) ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? என்று சோதித்துப் பார்க்கக் கூறினாள்.
அதன்படி, அவர்களும் PLC/HMI இரண்டிலும் சோதித்துப் பார்த்தனர்.
அடுத்து மென்பொருளைச் (software scada) சோதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாள்.
ஆனால், அது அளவில் எவ்வளவு பெரியது(SCADA coding) !
ஆனாலும், முடிந்த அளவு சோதித்துப் பார்த்தனர்.
சோதனையின் முடிவில், ‘ஆலை கொள்கலனின் அழுத்தம் அதிகரிக்கிறது’ என்ற அதே காரணம் வந்தது!
ஆனால், ‘ஏன் இப்படி?’ நடக்கிறது என்று தெரியவில்லை.
ஒன்றரை வருடம் உழைப்பைக் கொட்டியவர்களுக்கும், அதை ஒருங்கிணைத்துச் சென்றவர்களுக்கும்… முகம் வாட்டத்தைக் காட்டியது.
அதைக் கண்டவள், “டோன்ட் வொரி! நாம வெளியே இருந்து டெக்னிக்கல் எக்ஸ்பெர்ட் அரேஞ்ச் பண்ணி, அகைன் செக் பண்ணலாம். மேனேஜ்மென்ட்-ல் இதைப் பற்றிப் பேசிப் பார்க்கிறேன்” என்று அவர்களிடம் சொல்லி அனுப்பினாள்.
இனி, ‘அடுத்து என்ன செய்ய?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
அதற்கு முன்னே, இப்பொழுது நடந்த பரிசோதனை முடிவுகள் எல்லாம் ‘பிரிண்ட் அவுட்’ எடுக்கப்பட்டது.
அவை எல்லாம் சேர்த்து ‘ரிப்போர்ட்’ தயாரிக்கப்பட்டது.
மீண்டும் அன்று கூடியது போல் ஒரு சந்திப்பு நடந்தது.
ஷில்பா, கஸ்டமர் மெயின்டெனன்ஸ் டீம் ஹெட் மற்றும் தேர்ட் பார்ட்டி மெம்பெர் என்று அனைவரும் ரிப்போர்ட்டில் கையெழுத்துப் போட்டனர்.
அவ்வளவுதான் ‘ரூட் காஸ் அனாலிசிஸ்’ முடிந்தது!!
ஆனால், இன்னும் பிரச்சனையின் பிண்ணனி என்னவென்று கண்டறிய முடியவில்லை.
தன் நிறுவனத்திற்கு வந்தவள், தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் புகுந்து கொண்டாள்.
‘ரிப்போர்ட்’ அத்தனையும் மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தாள்.
பின், அதை நிறுவனத்தின் மேலிடத்திற்கு மின்னஞ்சல் செய்தாள்.
எல்லாம் முடிந்தது!
ஆனால், ‘ஏன் இப்படி?’ என்ற கேள்வி மட்டும் மூளைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது!!
ஒரு சோர்வு வந்தது. மேசையின் மேல் கைகளை வைத்து, தலையைப் பிடித்து அமர்ந்து கொண்டாள்.
அவளுள் ஒரு கேள்வி எழுந்தது.
அது,
சரியான அளவில்,
நிலக்கரி எரிக்கப்படுகிறது.
நிலக்கரியின் ஈரப்பதம் இருக்கிறது.
கொள்கலன் வெப்பநிலையை இருக்கிறது.
எங்கேயும் எந்த ஒரு அளவுகளும் தவறில்லை?
பின்பு ஏன் கொள்கலனின் அழுத்தம் அதிகமாகிறது? என்பதுதான் அந்தக் கேள்வி.
சற்று நேரம் அப்படியே இருந்தவள், தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.
நிகில், பாமினி… இருவரும் அத்தனை முறை அழைத்திருந்தனர்.
இந்த இரண்டு நாளாக, வேலைப்பளு காரணமாக அவர்கள் இருவரின் அழைப்பையும் அவள் ஏற்கவில்லை.
கையில் கைப்பேசியை வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
சரியாக அந்த நேரம், பாமினி அழைத்தார்.
அழைப்பை ஏற்று, “ஹலோ அம்மா” என்றாள்.
“என்ன ஷில்பா? என்னாச்சு?? ஏன் ஃபோன எடுக்கலை? உடம்பு சரியில்லையா?” என்று படபடவென்று கேள்விகளைக் கேட்டார்.
அவர் குரலில் பரிதவிப்பு… பதற்றம்… ஆதங்கம், என எல்லாம் இருந்தது.
அதைப் புரிந்தவள், “அம்மா… அம்மா… ஒண்ணுமில்லை. ஜஸ்ட் வொர்க் டென்ஷன். அவ்வளவுதான்” என்று அவருக்குப் புரிய வைத்தாள்.
“அதுக்காக…” என்று சொல்லி, இடையில் நிறுத்திய போது… அவர் குரலில் கோபமும், வருத்தமும் இருந்தது.
ஷில்பா ‘என்ன நினைத்தாளோ?’… “அம்மா… நான் அங்கே வந்து கொஞ்ச நாள் இருக்கணும்-மா” என்றாள்.
“எப்போ வர்ற ஷில்பா?”
“இதெல்லாம் முடியட்டும்-மா! அப்புறம் நான் சொல்றேன்”
“உனக்கு வேலை இருந்தா, நான் வேணா வரவா?!”
“இல்லம்மா! இப்போ நீங்க வந்தாலும், உங்ககூட பேச டைம் கிடைக்காது. ஸோ, நானே வர்றேன்” என்றாள்.
சில நொடிகள் அமைதியாக இருந்தவர், “சரி. என்ன வேலைன்னாலும் ஃபோன் அட்டன் பண்ணு. சரியா??” என்றார் அரை மனதாக!
“சரிம்மா! நான் இன்னொரு நாள் பேசறேன். இப்போ வைக்கிறேன்”
“ம்ம்” என்று பாமினி அழைப்பைத் துண்டித்தார்.
அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன்… கைப்பேசியை மேசை மீது தூக்கிப் போட்டுவிட்டு, இருக்கையில் பின்னோக்கிச் சாய்ந்தாள்.
கண்களை மூடிக்கொண்டே யோசித்துப் பார்த்தாள்.
ஏதோ தப்பு நடப்பது போல் இருந்தது? ஆனால், என்ன? எங்கே நடக்கிறது?!
ஒன்றும் புரிபடவில்லை!
வெகுநேரம் அதையே யோசித்துக் கொண்டிருந்தாள்.
பின் நிமிர்ந்து அமர்ந்து, மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பார்த்தாள்.
நாளை மறுநாள் ‘வைஸ் பிரசிடென்டுடன்’ சந்திப்பு இருக்கிறது என்று மின்னஞ்சல் வந்திருந்தது.
இனி அவர்கள் கேட்கும் கேல்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
அது அவள் கடமை!
அவள்தானே இந்தப் ப்ரொஜெக்ட்டின் பொறுப்பில் இருப்பவள்!
‘ஏன்?’ என்று கேட்பார்கள். என்ன பதில் சொல்ல அவர்களிடம்?
தெரியவில்லை!!
கஷ்டப்பட்டு முட்டி மோதி முன்னுக்கு வந்த நிலை… நிலைகுலைந்து போய்விடுமோ என்ற நினைக்கும் போது, கஷ்டமாக இருந்தது.
உடனே, நிகில் நியாபகம் வந்தது.
கிளம்பிவிட்டாள், நிகில் வீட்டிற்கு!
******
நிகில் வீடு
சூழல் இரவு நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
வீட்டின் உறுப்பினர்கள் மூவருமே படுக்கை அறையில் இருந்தனர்.
நிகில், மெத்தை மேல் படுத்திருந்தான்.
அவனது நெஞ்சின் மேல் அமர்ந்து கொண்டு, ஜெர்ரி விளையாடிக் கொண்டிருந்தான்.
சில நேரம்… நிகிலும், ஜெர்ரியின் கைகளைப் பிடித்து ஆட்டியபடி விளையாட்டுக் காட்டினான்.
நிகிலுடன் பேசியபடியே… மிலா, துணிகளை மடித்து அலமாரியில் வைத்துக் கொண்டிருந்தாள்.
“மீரா-க்கா பொண்ணு ரொம்ப சேட்டை பண்றாளாம் நிகில்”
“ஓ!” என்றான்.
“அம்மாவும், அத்தையும் ஒரு பைவ் டேய்ஸ் ட்ரிப் அரேஞ் பண்ணியிருக்காங்க” என்றாள், நிகிலைத் திரும்பிப் பார்த்து!
“ம்ம்ம், தெரியும் மிலா”
அவர்கள் விளையாடுவதைப் பார்த்தவள், பாதியிலே வேலையே விட்டுவிட்டு… இருவரின் அருகே வந்தாள்.
கட்டிலின் கீழே, முட்டி போட்டு அமர்ந்து கொண்டாள்.
கன்னத்தில் கை வைத்து, அவர்கள் இருவரையும் சந்தோஷமாகப் பார்க்க ஆரம்பித்தாள்.
நிகில், மகனிடம் சின்ன சின்ன செய்கைகள் செய்து காண்பித்தான்.
ஜெர்ரி, அதைத் திரும்பச் செய்ய முயற்சித்தான்.
மேலும் மழலை மொழியில், “ப்ப்பா” என்ற அழைப்புகள் வேறு!
ஜெர்ரி இப்படி அழைத்துப் பழகுவது, இந்த ஒரு வாரமாகத்தான்.
நிகில்… மிலா இருவருக்குமே, அவனது தெளிவில்லாத உச்சரிப்பு… அவ்வளவு பிடிக்கும்.
மீண்டும் ஒருமுறை ஜெர்ரி, ‘ப்பா’ என்று அழைத்தான்.
“நிகில் கேட்டியா? இப்போ சூப்பரா சொல்றான்-ல” என்று சந்தோஷத்தில் துள்ளியவள், “ஜெர்ரி இன்னோரு தடவை சொல்லு… சொல்லு…” என்று ஜெர்ரியை நச்சரித்தாள்.
உதடுகளைச் சேர்த்து… மீண்டும் ஒருமுறை, ‘ப்ப’ என்றான் ஜெர்ரி.
மிலாவிற்கு அத்தனை சந்தோஷம்! உடனே, நிகிலிடமிருந்து ஜெர்ரியை வாங்கினாள்.
தன் முன்னே உட்கார வைத்துக் கொண்டு, அவனைக் கொஞ்ச ஆரம்பித்தாள்.
மேலும், “இப்போ மிலா சொல்லு… ஜெர்ரி, மிலா சொல்லு” என்று மீண்டும் அவனை நச்சரித்தாள்.
“அம்மா-ன்னு சொல்லச் சொல்லு மிலா” என்று, நிகில் அவளைத் திருத்தினான்
“ஸ்ஸ்” என்று முகத்தைச் சுருக்கி, “அன்னைக்கே சொன்னேல! மறந்துட்டேன். சாரி” என்றாள் சிரிப்புடன்.
பின், “ஜெர்ரி அம்மா சொல்லு… அம்மா சொல்லு” என்று தன்னைத் திருத்திக் கொண்டாள்.
ஆனால், ஜெர்ரி மழலைப் பேச்சை நிறுத்திவிட்டு… மிலாவுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தான்.
மிலா செய்வதையெல்லாம், ஜெர்ரி திரும்பச் செய்து பார்த்தான்.
அவள் பொத்தென்று மெத்தை மேல் தலை சாய்த்தால்… பொக்கை வாய் சிரிப்புடன் அவனும் தலை சாய்த்தான்.
சட்டென மிலா தலை நிமிர்ந்தால்… ஜெர்ரியும் அதைச் செய்தான்.
இப்படியே மாறி மாறி இருவரும் செய்து கொண்டிருந்தனர்.
இது நிகில் முறை! அதாவது, இருவரையும் சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டிருப்பது!!
என்னமோ இருவரின் செயல், அவனை மிகவும் ஈர்த்தது.
சட்டென எழுந்து அமர்ந்து… தன் நெற்றி கொண்டு மிலாவின் நெற்றியில் முட்டினான். அப்படியே மகனின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.
அவனின் இந்தச் செய்கை, இருவருக்கும் புதிதல்ல! இது போல் நிகில் அடிக்கடி செய்வான்!!
ஆதலால், அவர்கள் இருவரும் அவர்கள் போக்கில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அக்கணம், அழைப்பு மணியோசை கேட்டது.
‘யாரென்று பாப்போம்’ என எழப்போன நிகிலின் மேல் ஜெர்ரி தொற்றிக்கொண்டான்.
அவனைத் தூக்கிக் கொண்டே, வரவேற்பறை வந்தான்.
அதற்குள், இரண்டு மூன்று முறை அழைப்பு மணி அழுத்தப்பட்டிருந்தது.
கதவைத் திறந்தான்.
ஷில்பா நின்றிருந்தாள்.
சட்டென, நிகில் முகம் கோபத்தைக் காட்டின.