நிலா பெண்
நிலா பெண்
- Posted on
- shanthinidoss
- March 13, 2021
- 0 comments
நிலா பெண் 3
ஆத்ரேயனுக்கு அன்றைய இரவு தூக்கம் சரியாக அமையவில்லை.
இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் நேர வித்தியாசம் தற்போது ஐந்தரை மணித்தியாலங்கள் என்பதால் கொஞ்சம் சிரமப்பட்டான்.
இரவு தாமஸோடு பேசிவிட்டு லாப்டாப்போடு உட்கார்ந்து கணக்கு வழக்குகளில் இறங்கிவிட்டான்.
அப்பா சுந்தரமூர்த்தி திருமணம் முடித்த கையோடு லண்டனை விட்டு சுமார் நாற்பத்தி ஐந்து மைல் தொலைவிலுள்ள ‘கென்ட்’ என்ற இடத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டார்.
இந்தியாவில் விஸ்தாரமாக வீடு நிலம் என்று வாழ்ந்தவருக்கு லண்டன் வாழ்க்கை அவ்வளவாக சரிவரவில்லை. மனைவியின் கருத்தும் அவரோடு ஒத்துப்போகவே கொஞ்சம் நிலத்தோடு இருந்த வீடொன்றில் வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டார்.
கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். வேலை நேரம் போக வீட்டிற்குப் பின்னால் இருக்கும் நிலத்தில் பொழுதுபோக்காக காய்கறிகளைப் பயிரிட ஆரம்பித்தார் சுந்தரமூர்த்தி.
வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் எந்த செலவுமின்றி சொந்த தோட்டத்திலிருந்தே கிடைக்க ஆரம்பித்தது. காலப்போக்கில் விளைச்சல் சிறிது சிறிதாக அதிகமாகவே அக்கம்பக்கத்தில் இருந்த மக்களும் இவர்களிடம் காய்கறிகளை வாங்க ஆரம்பித்தார்கள்.
செயற்கை உரங்களோ மருந்துகளோ சேர்க்காத சுத்தமான ஆர்கானிக் காய்கறிகளை ஆங்கிலேயர்கள் எப்போதும் விரும்புவார்கள் என்பதால் வியாபாரம் சூடு பிடித்தது.
பிள்ளைகள் இருவரும் வளர்ந்ததோடு வியாபாரமும் சேர்ந்து வளர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் கணவன் மனைவி இருவரும் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இன்னும் பணிக்கு ஆட்களை அமர்த்தி வியாபாரத்தைக் கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஆர்கானிக் காய்கறிகளுக்கு சூப்பர் மார்கெட்டிலும் நல்ல கிராக்கி இருந்ததால் தங்கள் உற்பத்தியை சூப்பர் மார்க்கெட்டிற்கு அனுப்ப தொடங்கினார் சுந்தரமூர்த்தி. வியாபாரம் அடுத்த நிலைக்கு முன்னேறியது.
மூத்தவன் ஆதேஷுக்கு வியாபாரத்தில் அத்தனை நாட்டம் இருக்கவில்லை. அவ்வப்போது எட்டி பார்ப்பான், அவ்வளவுதான். அவன் கவனம் முழுவதும் கணினி துறையிலேயே இருந்தது.
ஆனால் ஆத்ரேயன் அப்படி இருக்கவில்லை. படித்தது பொறியியல் என்றாலும் ஆரம்பத்திலிருந்தே குடும்ப தொழிலில் ஈடுபாடு அதிகம்.
விடுமுறைக் காலங்களில் எல்லாம் பெற்றோரோடு தோட்டத்திற்குப் போய் விடுவான். அங்கு வேலைச் செய்பவர்களோடு தானும் ஓர் ஆளாய் நின்று வேலைச் செய்வான்.
அதனால் பயிர்களின் நுணுக்கங்கள் அவனுக்கு இலகுவாக பிடிபட்டு போனது. கூடவே பாக்கெட் மணிக்கும் வழி செய்த மாதிரி ஆகிப்போனது.
இளையவனுக்குத் தொழிலில் இருந்த ஆர்வம் பார்த்து பெற்றவர்கள் மகிழ்ந்து போனார்கள். ஒரு கட்டத்தில் தனக்குக் கிடைத்த நல்ல வேலையையும் ஒதுக்கிவிட்டு ஆதி காய்கறி வியாபாரத்தில் இறங்கி விட்டான்.
அவர்கள் காய்கறிகள் கென்ட்டையும் தாண்டி லண்டன் வரைச் சென்றது அவர்களுக்குப் பெருத்த வெற்றியே! வியாபாரம் அமோகமாக போய்க்கொண்டிருந்தது.
ஆத்ரேயனுக்கு அவன் உழைப்பிற்கான ஊதியத்தை வழங்கினாலும், வரும் லாபத்தில் இரு பிள்ளைகளுக்கும் ஒரு பகுதியைச் சமமாக பங்கிட்டு கொடுத்தார் சுந்தரமூர்த்தி.
மூத்தவன் இதையெல்லாம் ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை என்றாலும் ஒரு தந்தையாக தனது கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார் சுந்தரமூர்த்தி.
எல்லாம் ஆதேஷுக்கு திருமணம் ஆகும் வரைதான். அதன்பிறகு மூத்தவன் முழுதாக மாறிப்போனான். இதுவரை அவன் திரும்பி கூட பாராத வியாபாரத்தின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தான். எங்கெங்கே எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று விசாரித்தான்.
சுந்தரமூர்த்தி முதலில் இவற்றையெல்லாம் பெரிதாக நினைக்கவில்லை. மூத்தவனும் பொறுப்பாக தொழிலை நிர்வகிக்க ஆரம்பித்தால் தான் சிறிது ஓய்வெடுக்கலாம் என்றுதான் ஆசுவாசப்பட்டார்.
ஆனால் விசாரணை அத்தோடு நிற்கவில்லை. சுந்தரமூர்த்தியின் தலைமையில் நடக்க வேண்டிய வியாபாரம் எதற்கு ஆத்ரேயன் தலைமையில் இப்போது நடக்கின்றது என்ற கேள்வி வந்த போதுதான் தந்தைக்கு லேசாக விஷயம் பிடிபட ஆரம்பித்தது.
மூத்த மகனை அழைத்து கொஞ்சம் குரலை உயர்த்தி பேசினார் தந்தை. இளைய மகன் தொழிலின் வளர்ச்சிக்காக பட்டிருக்கும் கஷ்டங்களை எடுத்து சொன்னார்.
“ஏன்? அதுக்கெல்லாம் ஆதிக்கு நீங்கள் சம்பளம் குடுக்கல்லையா?” என்று மூத்தவன் கேட்ட போது தந்தை லேசாக அதிர்ந்துதான் போனார்.
“அவன் நினைச்சிருந்தா உன்னைப் போல ஒரு நல்ல வேலையில அவனால உட்கார்ந்திருக்க முடியும் ஆதேஷ்!”
“அதை அவன் ஏன் செய்யல்லை? அப்படின்னா அவன் மனசுல இருக்கிற திட்டம் என்ன?” இந்த கேள்வியில் சுந்தரமூர்த்தி நிலைகுலைந்து போனார். இது அவரது மூத்த மகனின் வார்த்தைகள் அல்ல.
இவன் வெறும் அம்பு. எய்தவர் வேறெங்கோ இருக்கிறார். எய்தவர் இருக்க அம்பை நொந்து என்ன பயன்?!
“ஆதேஷ்! இப்பிடியெல்லாம் பேசாதே, அவன் உன்னோட தம்பி, எந்த சுயநலமும் இல்லாம இந்த தொழிலை வளர்க்க அவன் நிறைய பாடுபட்டிருக்கான்!”
“அதைத்தான் நானும் சொல்றேன் டாட், எந்த சுயநலமும் இல்லைன்னு நினைச்சா இனி பிஸினஸை நாங்க பார்த்துக்கிறோம், ஆதியை கொஞ்சம் ஒதுங்க சொல்லுங்க.” அந்த பன்மை விகுதி தந்தையின் வாயைப் பலமாக அடைத்துவிட்டது.
இது மூத்த மகனின் குடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்டது. ஆதேஷை இயக்குவது வேறு யாருமாக இருந்தால் கூப்பிட்டு அறிவுரைச் சொல்லலாம். இது எங்கள் குடும்ப விஷயம், நீ நடுவில் புகுந்து குட்டையைக் குழப்பாதே என்று சண்டைப் போடலாம்.
ஆனால் இங்கே எதிரி போல நிற்பது வீட்டுக்கு வந்த மருமகள் அல்லவா?! எதுவுமே செய்ய தோன்றாமல் மனைவி, இளைய மகனோடு கலந்துரையாடினார் தந்தை.
அம்மா மார்க்ரெட் கொஞ்ச நேரம் புலம்பினார், இருந்தாலும்… மூத்த மகன் மேல் இருந்த பாசம் அவரை இளைய மகனிடம் கெஞ்ச வைத்தது.
ஆதிக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது! இருபத்தி எட்டு வருடங்கள் தன்னோடு சேர்ந்து வாழ்ந்த தம்பி மேல் ஆதேஷால் எப்படி சந்தேகம் கொள்ள முடிந்தது?!
சில மாதங்களே பழக்கமான ஒரு பெண்ணால் ஒரு மனிதனை இத்தனைத் தூரம் மடை மாற்ற முடியுமா?!
இப்போது பால்கனியில் நின்றபடி சிந்தித்து கொண்டிருந்த ஆதிக்கு இதையெல்லாம் நினைத்து பார்த்த போது சிரிப்பு வந்தது! சில மாதங்கள் என்ன?! சில மணித்தியாலங்களிலேயே ஒருத்தி என்னை இங்குத் தலைகீழாக மாற்றி விடவில்லையா?!
சிந்தனைச் சிறிது அபாயகரமான பாதையை நோக்கி போகவும் சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டான் ஆதி.
வானத்தை அண்ணார்ந்து பார்க்க அது சிவப்பு நிறத்தோடு பொல பொலவென்று புலர்ந்து கொண்டிருந்தது.
பக்கத்து வீட்டில் ஏதோ சத்தம் கேட்கவும் தலையை நீட்டி எட்டி பார்த்தான். பாட்டி வாசலில் கோலம் போடுவதற்காக நீர் தெளித்து கொண்டிருந்தார்.
அந்த இளங்காலைப் பொழுதில் கொஞ்சம் நடந்தால் நன்றாக இருக்கும் போல தோன்றவும் ஷூவை மாட்டிக்கொண்டு சட்டென்று வீட்டுக்கு வெளியே வந்தான் ஆத்ரேயன்.
“குட்மார்னிங் பாட்டி!”
“யாரது? ஓ… ஆதியா? குட்மார்னிங் பா! என்ன சீக்கிரமா எந்திரிச்சுட்ட போல?!” கை அதன் பாட்டில் வேலைச் செய்ய வாய் ஆதியோடு பேசியது.
“தூங்கினாத்தானே பாட்டி எந்திரிக்க?” ஆதியின் பதிலில் திடுக்கிட்ட பாட்டி கைவேலையை அப்படியே போட்டுவிட்டு ஆதியிடம் விரைந்து வந்தார்.
“என்னாச்சு ஆதி? உடம்பு கிடம்பு சரியில்லையா என்ன?” அவர் புறங்கை இப்போது ஆதியின் நெற்றியில் கவலையோடு பதிந்தது.
“ஐயையோ! அதெல்லாம் ஒன்னும் இல்லை பாட்டி, எங்க ஊர்ல இப்பதான் ராத்திரி பன்னிரெண்டு மணி, வழமையா இதுக்கப்புறம்தான் தூங்கவே ஆரம்பிப்பேன்.”
“ஓ… அதுதான் ரீஸனா? நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்! செத்த இரு, நான் காஃபி போட்டு நோக்கு கொண்டு வரேன்.”
“வேணாம் பாட்டி, நான் ஏற்கனவே ரெண்டு வாட்டி காஃபி குடிச்சுட்டேன்.”
“ஓ… நோக்கு அதெல்லாம் பண்ண வருமா?!”
“ஒரு நாளைக்கு வாங்க, உங்களுக்குப் சமைச்சே போடுறேன்.” ஆதி சொல்ல வாயைப் பிளந்தார் பாட்டி.
“ஏன்டாப்பா! உண்மையாத்தான் சொல்றியா?!”
“ஆமா பாட்டி, எங்க வீட்டுல பொண்ணெல்லாம் கிடையாது, நானும் எங்கண்ணனுமா ரெண்டும் தடிப்பசங்கதான், அம்மாக்கு உடம்புக்கு முடியலைன்னா அப்பா பண்ணுவார், இல்லைன்னா நாங்க ரெண்டு பேரும் டர்ன் வச்சு பண்ணுவோம்.”
“அட ஆண்டவா! கேக்கவே ரொம்ப நன்னா இருக்கே?!எங்காத்துலயும் ரெண்டு மூனு கெடக்குதுங்க, காஃபியைக் காலடியில கொண்டு போய் நீட்டினாத்தான் மகராஜன்களுக்கு காஃபியே இறங்குது!” பாட்டி நீட்டி முழக்கி புலம்ப ஆதி வாய்விட்டு சத்தமாக சிரித்தான்.
அப்போது பாரதி தெருவின் தொடக்கத்தில் யாரோ இருவர் நுழைவது தெரிந்தது.
பாட்டியும் ஆதியும் திரும்பி பார்த்தார்கள். துளசியும் அவள் அப்பாவும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
“யாரது? துளசியும் சங்கரபாணியுமா?” பாட்டி தன் கண்களைக் கூர்மையாக்கி கொண்டு கேட்க,
“ஆமா பாட்டி.” என்றாள் துளசி.
“வாக்கிங் முடிச்சுட்டீங்களா ரெண்டு பேரும்?”
“ஆமா பெரியம்மா.” இது சங்கரபாணி.
“சங்கரபாணி, இது ஆதி… தெரியுமில்லை?”
“தெரியும் பெரியம்மா, நேத்து கரீம் வீட்டுல பார்த்தேன், பேச சந்தர்ப்பம் அமையலை, எப்பிடி இருக்கப்பா? வீடு சௌகர்யமா இருக்கா?”
“ஆமா அங்கிள், குட்மார்னிங் மேடம்!” கேள்வி கேட்டவருக்குப் பதில் சொல்லிவிட்டு, பெண்ணுக்கும் ஸலாம் போட்டான் ஆத்ரேயன்.
“குட்மார்னிங், நீங்க பேசிக்கிட்டு இருங்க பாட்டி, நான் கிளம்புறேன்.”
“ஆமா ஆமா, நீ கிளம்புடி குழந்தை, அப்புறம் ஸ்கூலுக்கு லேட்டாகிட போகுது.” பாட்டி சொல்ல ஒரு சின்ன தலை அசைப்போடு துளசி வீட்டை நோக்கி நகர்ந்து விட்டாள். ஆனால் சங்கரபாணி அங்கேயே நின்று பாட்டியோடு பேச ஆரம்பித்துவிட்டார்.
“என்ன சங்கரபாணி, நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் நாலஞ்சு நாள்தான் இருக்கு, வேலையெல்லாம் எப்பிடி போகுது? ஏற்பாடெல்லாம் பண்ணிட்டியா?”
“ஆமா பெரியம்மா, உங்க மருமக வாங்கவேண்டிய தேவையான பொருட்களுக்கு லிஸ்ட் போட்டு குடுத்துட்டாங்க, அந்த லிஸ்டை கடையில குடுத்து பணமும் குடுத்துட்டேன், வியாழக்கிழமை எல்லா பொருளையும் வீட்டுக்கே கொண்டு வந்து குடுத்துருவாங்க.”
“சரி… துளசிக்கான துணி மணி?”
“கரீமோட வைஃப் இன்னும் ரெண்டு நாள்ல கடைக்குப் போகலாம்னு சொன்னாங்க, அன்னைக்கு துளசியை லீவ் போட சொல்லி இருக்கேன்.”
“சொந்த பந்தம், அக்கம் பக்கம் ன்னு ஒரு எழுபத்தைஞ்சு பேர் வருவாங்களா?”
“ஆமா பெரியம்மா, எதுக்கும் இருக்கட்டும்னு நூறு பேருக்கு சாப்பாட்டுக்கு அட்வான்ஸ் குடுத்திருக்கேன், ஐயருக்கும் சொல்லிட்டேன்.”
“நல்லது, கொஞ்சம் பிளாஸ்டிக் நாற்காலிகளை வாடகைக்கு எடுப்பா, அப்புறம்… கார் ஒன்னு புக் பண்ணிடு சங்கரபாணி, எங்க கார்ல ஏதோ ரிப்பேராம், கொஞ்சம் என்னன்னு பாருடான்னு நம்பிக்கிட்ட நானும் பல தடவைச் சொல்லிட்டேன்.”
“சரி பெரியம்மா, அது ஒன்னும் பிரச்சனை இல்லை.” இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க ஆத்ரேயன் அதற்கு மேல் அங்கு நிற்பதா, வீட்டுக்குப் போவதா என்று திணறினான்.
“பாட்டி… நீங்க பேசுங்க, நான் கிளம்புறேன்.” ஆதி சொல்ல பெரியவர்கள் இருவரும் தலை அசைத்தார்கள்.
“ரத்த கொதிப்பு இப்போ எப்பிடி இருக்கு சங்கரபாணி?” காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்த ஆதியின் கால்கள் சட்டென நின்றன.
அவர்கள் இருவரும் பேசுவது தெளிவாக அவன் காதில் விழுந்தது. தான் நடந்து கொள்ளும் முறை அநாகரிகம் என்று தெரிந்த போதும் வீட்டுக்குள் போகாமல் அப்படியே நின்றிருந்தான். எதுவோ ஒன்று அவனை அங்கே தடுத்து நிறுத்தியது.
“என்னத்தைச் சொல்ல பெரியம்மா! அவ இந்த பொண் குழந்தையை என்னோட கைல குடுத்துட்டு மகராசியா போய் சேர்ந்துட்டா!” அதுக்கு மேல் பேச முடியாமல் வார்த்தைகள் சிக்க நிறுத்திவிட்டார் சங்கரபாணி. ரங்கநாயகியின் கண்களும் கலங்கி போனது.
“கவலைப் படாதே சங்கரபாணி! அது உன்னோட உடம்புக்கு நல்லதில்லை!”
“எப்பிடி பெரியம்மா கவலைப்படாம இருக்க முடியும்? இருபத்தி ஆறு வயசாச்சு! எம் பொண்ணுக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்காமலேயே நானும் போய் சேர்ந்திடுவேனோன்னு எனக்கு பயமா இருக்கு!”
“சேச்சே! என்ன வார்த்தைப் பேசுற நீ!”
“முன்ன மாதிரி உடம்பு ஒத்துழைக்குதில்லை பெரியம்மா, துளசியை ஒரு பாதுகாப்பான கைகள்ல ஒப்படைச்சிடணும், அதுதான் இப்ப எனக்கிருக்கிற கவலை.”
“அதெல்லாம் நல்லபடியாவே நடக்கும், நீ வீணா மனசைப் போட்டு குழப்பிக்காத சங்கரபாணி.”
பெரியவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டபடி அமைதியாக நின்றிருந்தான் ஆதி. பாட்டியோடு பேசும்போது துளசியின் அப்பாவைக் கவனித்திருந்தான்.
பார்க்க மிகவும் எளிமையாக மென்மையானவர் போல தெரிந்தார். உடம்பு கொஞ்சம் மெலிந்தாற் போலத்தான் தெரிந்தது. அது மகளைப் பற்றிய கவலை என்று இப்போது புரிந்தது ஆதிக்கு.
கார் புக் பண்ண போகிறார்களாமா?!
அந்த மனிதரின் கவலையைக் கேட்ட ஆதியின் மனது துளசிக்கு எப்படியாவது நிச்சயதார்த்தம் நடந்து விடவேண்டும் என்று தன்னையும் அறியாமல் பிரார்த்தித்து கொண்டது… ஆனால் அது யாரோடு?!
***
இரண்டு நாட்கள் கடந்து போயிருக்கும். வாசலில் ஏதோ வாகனத்தின் சத்தம் கேட்டு வெளியே வந்தார் பாட்டி. அப்போது வீட்டிற்கு ஏதோ வேலையாக வந்திருந்த ராபினும் வெளியே வந்தான்.
ஆத்ரேயனின் வீட்டிற்கு முன்னால் நின்றிருந்தது அந்த புத்தம் புதிய ப்ளாக் ஆடி!
“வாவ்! சூப்பரா இருக்கு ஆதி!” கூவியபடி வீட்டிலிருந்து வெளியே வந்தான் ராபின்.
“என்னடா பயலே! புது காரா?!” பாட்டியும் ஆச்சரியப்பட்ட படி அந்த தெருவிற்கே கேட்குமாறு குரலெழுப்பினார்.
“ஆமா பாட்டி.” ஆதி அமைதியாக புன்னகைத்தான்.
“ஹேய் ஆதி! கார் வாங்க போறதைச் சொல்லவே இல்லை, வாவ்! சும்மா அட்டகாசமா இருக்குய்யா!” அந்த ப்ளாக் ஆடியை சுற்றி வலம் வந்தபடி ஆர்ப்பரித்தான் ராபின்.
“அதானே! ஒரு வார்த்தை எங்கக்கிட்ட எல்லாம் நீ சொல்லவே இல்லையே!”
எல்லா கேள்விகளுக்கும் ஆதியிடமிருந்து ஒரு புன்முறுவல் மட்டுமே பதிலாக கிடைத்தது. அவன் எண்ணங்களின் போக்கு அவனுக்கே விசித்திரமாக இருக்கும் போது மற்றவருக்கு என்னவென்று அவன் பதில் சொல்வான்?!
இந்தியாவில் மன மாறுதலுக்காக ஒரு மாதம் தங்கலாம் என்ற எண்ணத்தோடுதான் ஆதி புறப்பட்டிருந்தான். ஆனால் அது சாத்தியம் என்று ஆதிக்கு இப்போது தோன்றவில்லை.
எந்த தைரியத்தில் இப்படியெல்லாம் எண்ணுகிறோம் என்று கூட அவனுக்கு விளங்கவில்லை. ஆனாலும் தன் போக்கில் ஏதேதோ செய்கிறான்!
அன்றைக்கு பாட்டியும் துளசியின் அப்பாவும் பேசியது காதில் விழுந்த நொடி ஆதி முடிவெடுத்துவிட்டான். துளசியின் கல்யாணம் முடியும் வரை அவள் தேவைக்கு இப்போது ஒரு கார் அவசியம்.
சட்டென்று தகவல்களை ஆன்லைனில் சேகரித்து விஷயத்தை முடித்துவிட்டான். எங்கெங்கே பேசினால் விஷயத்தை எப்படியெப்படி இந்தியாவில் துரிதமாக முடிக்கலாம் என்று விஸ்வநாதன் அங்கிளுக்கு தெரிந்திருந்தது.
“ஆதி, நல்லா யோசிச்சு இந்த முடிவை எடுத்திருக்கியா?” ஒற்றைக் கேள்வி மட்டுமே கேட்டார் விஸ்வநாதன்.
“முடிவுல மாற்றமில்லை அங்கிள்.” ஆதியும் தெளிவாகவே பதில் சொன்னான். இதோ! கார் வந்துவிட்டது.
“பெரியம்மா! ரெடி ஆகிட்டீங்களா? காரை புக் பண்ணிடட்டுமா?” கேட்ட படியே வந்தார் சங்கரபாணி.
“சங்கரபாணி! அதெல்லாம் ஒன்னும் வேணாம், இங்க பார்த்தியா, நம்ம ஆதி புதுசா கார் வாங்கி இருக்கான், அதுலயே நாம கடைக்குப் போயிடலாம்.” பாட்டி சிரிப்போடு ஆர்ப்பரிக்க ஆதிக்கு பாட்டியை அள்ளி கொஞ்சலாம் போல இருந்தது.
“பெரியம்மா… தம்பி புதுசா வாங்கி இருக்கு, இதுல நாம போய்…” சங்கரபாணி பேச்சை முடிக்காமல் இழுத்தார்.
“அதனால என்ன அங்கிள், நீங்க ரெடியாகுங்க, தாராளமா போகலாம்.”
“அதான் ஆதியே சொல்லிட்டான் இல்லை, வாயைப் பார்த்துக்கிட்டு சும்மா மசமசன்னு நிக்காம போய் துளசியை ரெடியாக சொல்லு சங்கரபாணி.” பாட்டி விரட்ட மனிதர் உடனேயே போய்விட்டார்.
சற்று நேரம் காரை பற்றி இவனிடம் பேசிவிட்டு ராபினும் கிளம்பி போய்விட்டான். ஆதிக்கு தான் செய்வது உணர்வது எல்லாம் சரியா தவறா என்று ஒன்றுமே புரியவில்லை.
ஏதோ ஒரு விசைத் தன்னை உந்தி தள்ள அதன் போக்கில் ஆடினான். அதுதான் விதி என்று அவனுக்குப் புரிந்து கொள்ள இயலவில்லை, பக்குவமும் போதவில்லை.
சற்று நேரத்தில் பாட்டி, காமிலா ஆன்ட்டி, நம்பியின் அம்மா சரஸ்வதி என அனைவரும் தயாராகி வந்தார்கள்.
ராபினின் அம்மா எமிலிக்கு கொஞ்சம் உடம்பிற்கு முடியாததால் அவர் வரவில்லை.
துளசி அன்றைக்குப் புடவைக் கட்டாமல் சுடிதாரில் வந்தாள். ஆத்ரேயனின் கண்களுக்கு அன்று அவள் ஏதோ சின்ன பெண் போல தெரிந்தாள்.
“என்ன துளசி, புடவைக் கட்டலையோ நீ?”
“இல்லை பெரியம்மா, எங்கிட்ட கேட்டா, நான்தான் சுடிதார் போட்டுக்கோன்னு சொன்னேன்.”
“ஏன் காமிலா? மாப்பிள்ளை ஆத்துக்காரங்களும் ஜவுளி எடுக்க வருவாங்க இல்லை?” பாட்டி சொல்ல ஆதிக்கு ஏனோ எரிச்சலாக இருந்தது.
“அதனாலதான் சுடிதார் போட சொன்னேன் பெரியம்மா, பையன் பாங்க்ல வர்க் பண்ணுறான், கொஞ்சம் நம்ம பொண்ணும் மாடர்னா இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க இல்லை?”
“அதுவும் சரிதான் அத்தை.” இது சரஸ்வதி.
“என்னமோ பண்ணுங்கடியம்மா, காலம் கெட்டு போச்சு!” பாட்டி அங்கலாய்க்க ஆதி துளசியை மீண்டுமொரு முறைப் பார்த்தான். அவன் மனது பாட்டியின் கூற்றை ஆதரித்தது.
அன்றைக்குப் புடவையில் இந்த பெண் பார்க்க எத்தனை அழகாக இருந்தது!
“சரி சரி, எல்லாரும் ஏன் நேரத்தை வீணடிச்சுக்கிட்டு நிக்குறேள், கார்ல ஏறுங்கோ, ஆதி நீ காரை எடு!” உத்தரவு போட்டுவிட்டு முன் சீட்டில் ஏறி ஜம்மென்று உட்கார்ந்து கொண்டார் பாட்டி.
பின் சீட்டில் பெண்கள் மூவரும் அமர்ந்து கொள்ள கார் கடையை நோக்கி போனது. சங்கரபாணியும் ராபினின் அப்பா டேவிட்டும் புல்லட்டில் வந்தார்கள். அவர்கள் வழிகாட்ட கார் பின் தொடர்ந்தது.
பெரிய ஜவுளி மாளிகையின் முன்பாக கார் நிற்க அனைவரும் இறங்கி கொண்டார்கள். மாப்பிள்ளை வீட்டார் இன்னும் வந்திருக்கவில்லை.
“சங்கரபாணி, அவா வர இன்னும் நேரம் இருக்கு, அதுவரை நாம உள்ள போய் கொஞ்சம் துணிமணியைப் பார்க்கலாமா?”
“சரி பெரியம்மா.”
உள்ளே போன அனைவரும் கல்யாண ஜவுளிகள் இருந்த தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்கள். ஆதிக்கு இதெல்லாம் புதிது. சுவாரஸ்யமாக எல்லாவற்றையும் பார்த்தபடி இருந்தான்.
“துளசிக்கு தேவையானதை முதல்ல செலக்ட் பண்ணலாம் பெரியம்மா, கல்யாணத்துக்கும் சேர்த்து தேவையானதை இப்பவே எடுத்துர சொல்லி சங்கரபாணி அண்ணா ஏற்கனவே சொல்லிட்டாங்க.”
“அதுவும் சரிதான் காமிலா, நாலு முறை என்னத்துக்கு கடை ஏறி இறங்கணும்?”
அதன்பிறகு பெண்கள் பட்டுப்புடவைகளோடு ஐக்கியமாகி விட்டார்கள். சங்கரபாணியும் டேவிட்டும் ஏதோ நாட்டு நடப்பு பற்றி பேச ஆதி கடையை நோட்டம் விட்டான்.
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.
மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொன்ன நேரம் கடந்து போய் கொண்டிருக்க பாட்டி லேசாக எரிச்சலுற்றார்.
“இவ்வளவு நேரத்துக்கு இவா என்ன பண்ணுறா?!
“அதானே! சொன்ன நேரத்துக்கு வரவேணாமா?” பெண்கள் ஆளாளுக்கு ஏதோ ஒன்றைப் பேச ஆத்ரேயனின் கண்கள் துளசியை நோக்கியது.
அந்த கண்களில் இருப்பது என்ன?!
மணப்பெண்ணுக்கே உரித்தான மகிழ்ச்சி, வெட்கம், பூரிப்பு எதுவுமே அந்த முகத்தில் தெரியவில்லை. உணர்ச்சிகளைத் துடைத்தாற்போல இருந்தது.
கடைக்கு வந்திருந்த அத்தனைப் பேரும் மாப்பிள்ளை வீட்டாரின் வரவை ஆவலோடு எதிர்பார்த்தபடி வாசலில் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு பரபரப்புடன் அமர்ந்திருக்க… துளசி நிதானமாக அமர்ந்திருந்தாள். ஆதியின் கண்கள் அவசர அவசரமாக துளசியை இப்போது ஆராய தொடங்கியது.
அதற்குப் பிறகும் இவர்களைக் கொஞ்ச நேரம் காத்திருக்க வைத்து விட்டுத்தான் மாப்பிள்ளை வீட்டார் வந்து சேர்ந்தார்கள். மாப்பிள்ளை, அவன் பெற்றோர்கள், அக்கா என நான்கு பேர் வந்திருந்தனர். வந்ததும் வராததுமாக,
“நாங்க வர்றதுக்கு முன்னாடியே பட்டுப்புடவையைப் பார்க்க ஆரம்பிக்கணுமா?” ஒரு தினுசாக கேட்டார் மாப்பிள்ளையின் அம்மா.
“ஐயையோ! அப்பிடியெல்லாம் இல்லை சம்பந்தியம்மா, நீங்க வர்றோம்னு சொன்ன நேரத்துக்கு வரலை, நாங்களும் எத்தனை நாழிக்குத்தான் இந்த கடையில வேலைப் பார்க்கிற பொண்ணுங்களோடேயே பேசிக்கிட்டு இருக்கிறது? அதான் கொஞ்சம் புடவைகளைப் புரட்டி பார்த்தோம், நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.” நெடும் பதில் சொல்லிவிட்டு கடுகடுத்த முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டார் அந்த நாலும் பார்த்த அனுபவம் மிக்க பெண்மணி.
“சரிசரி, மாப்பிள்ளை ஜவுளியும் இங்கதான் எடுக்கணும்!” மாப்பிள்ளையின் அக்கா சொல்ல சங்கரபாணியை வியப்பாக பார்த்தார் பாட்டி. அந்த பில்லையும் சங்கரபாணியின் தலையில் கட்டுவதற்கே இந்த ஏற்பாடு என்று அங்கிருந்த பெண் வீட்டார் அனைவருக்கும் புரிந்து போனது, ஆத்ரேயனை தவிர!
சங்கரபாணி எந்தவித சலனமும் இல்லாமல் பாட்டியைப் பார்த்து புன்னகைத்தார்.
அவருக்கு எவ்வளவு செலவு செய்தாலும் பரவாயில்லை, தன் பெண்ணின் கல்யாணம் சிறப்பாக நடக்க வேண்டும் என்பது மட்டுமே குறியாக இருந்தது.
மாப்பிள்ளை அருண் குமார் ஆதியை ஆராய்வது போல பார்க்கவும் அவன் அருகில் வந்தான் ஆதி.
“ஐம் ஆதி, பாரதி தெருவுலதான் இருக்கேன்.” தன்னைத்தானே அறிமுகப்படுத்தி கொண்டான். பாட்டியின் கண்கள் அதையும் கண்டு கொண்டது.
“மாப்பிள்ளை! ஆதி, எங்க விச்சுவோட சொந்தக்கார பையன், யூ கேல இருந்து வந்திருக்கான்!” என்றார் பெருமையாக.
அதன் பிறகு மாப்பிள்ளையின் பார்வையே வேறாகி போனது. ஸ்டெர்லிங் பவுண்ட், அமெரிக்க டாலர், அதன் ஏற்ற இறக்கம் என்று தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் பேசி தீர்த்து விட்டான்.
அத்தோடு நிறுத்தி இருந்தால் கூட ஆதி கண்டு கொண்டிருக்க மாட்டான். ஆனால் கடைசியில்,
“துளசியோட கொஞ்சம் பேசணும் ஆதி, பொண்ணு பார்க்க போனப்ப கூட பேச முடியலை…” என்று பல்லைக் காட்டியபோது ஆதிக்கு அவன் முகத்தில் ஒரு குத்து விடலாமா என்று இருந்தது.
“பெரியவங்க கிட்ட கேக்குறேன்.” என்றான் வெகுவாக தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு.
“ஐயையோ! அப்பிடி வேணாம்!”
“ஏன்?”
“அதை எங்க வீட்டுல லைக் பண்ண மாட்டாங்க.”
“ஓ…”
அருண் குமாரை ஏற இறங்க ஒரு முறைப் பார்த்தான் ஆதி. பாட்டி சொன்னது போல துளசிக்கு அத்தனைத் தூரம் பொருத்தமில்லாமல் எல்லாம் இருக்கவில்லை அவன்.
பொது நிறமாக இருந்தான். திருத்தமான முகம்தான், அவனைப் பிடிக்கவில்லை என்றாலும் உண்மையை ஒப்புக்கொண்டான் ஆதி.
“பொண்ணுக்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடி எதுக்குப் பேசணும்னு எங்க வீட்டுல சொல்லிட்டாங்க.”
“அதுல என்ன தப்பிருக்கு? ஏன் அப்பிடி சொல்றாங்க?”
“அது அப்பிடித்தான்.” அசடு வழிந்தான் மாப்பிள்ளை.
“துளசிக்கிட்ட நான் கண்டிப்பா பேசணும்னு நீங்க கொஞ்சம் அழுத்தி சொல்லலாமே!”
“இல்லையில்லை… அப்பிடியெல்லாம் என்னால எங்க வீட்டுல பேச முடியாது.”
‘அதுக்காக! உனக்கு நான் இப்ப தூது போகணுமா?’ மனதில் நினைத்ததைக் கேட்க முடியாமல் சிரப்பட்டு அடக்கிக்கொண்டான் ஆதி.
பெண்கள் ஜவுளி தேர்வில் மூழ்கி இருக்க மெதுவாக துளசியின் அருகில் போனான் ஆதி. பெண் திரும்பி பார்த்தது.
“துளசி மேடம், மாப்பிள்ளை உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்னு சொல்றாரு.”
“இல்லையில்லை, அது சரியா வராது.” ஆதி முடிப்பதற்கு முன்பாக பதில் சொன்னாள் துளசி. அந்த பதிலில் ஆதிக்கு பறப்பது போல இருந்தது.
“இல்லை… அவர் கேட்டா அவங்க வீட்டுல சம்மதிக்க மாட்டாங்க போல, அதால நம்ம சைட்ல இருந்து…”
“இல்லைங்க, அப்பிடி ஏதாவது நடந்தா தப்பா போயிடும்.” இப்போதும் அவசரமாக பதில் சொன்னது பெண்.
“அவரை விடுங்க, உங்களுக்கு அவர் கூட பேசணும்னா…”
“ஐயையோ! அப்பிடியெல்லாம் எதுவுமில்லை.” பட்டென்று பதில் சொன்ன அந்த முகத்திலும் குரலிலும் உணர்ச்சி லவலேசமும் இருக்கவில்லை.
ஆத்ரேயனுக்கு அந்த பெண்ணின் நிலையைக் குறித்து கவலை வந்தாலும், மனதுக்குள் மத்தாப்பு சிதறியது. தனது உள்ளத்தை மறைத்துக்கொண்டு சிந்தனையோடு அப்பால் நகர்ந்தான் ஆத்ரேயன்.
அவன் சிந்தனை நல்லதாக அவனுக்கே தோன்றவில்லை!