நிலா பெண் 6
நிலா பெண் 6
- Posted on
- shanthinidoss
- March 24, 2021
- 0 comments
அந்த ப்ளாக் ஆடி ஹாஸ்பிடல் வாசலில் போய் நின்றது. காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கினான் ஆத்ரேயன். மனது பாரமிறங்கியது போல் இருக்கவும் அதன்பிறகு அவன் துளசியிடம் எதுவும் பேசவில்லை.
துளசியும் இறங்க அவளிடம் வந்தான் ஆதி. என்றைக்கும் இல்லாதது போல் இன்று மனது அவளிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொண்டது.
“துளசி, அங்கிள் இப்போ அதிகமா உணர்ச்சி வசப்படுறது அவ்வளவு நல்லதில்லைன்னு டாக்டர் ஃபீல் பண்ணுறாரு.”
“ஓ…” அழகாக குவிந்தன அந்த இதழ்கள். அதைத் தீண்டும் ஆவல் அவனுள் பேரலையாக எழுந்தது, அடக்கிக்கொண்டான்.
“ஆமா… அதால நீதான் இப்போ கொஞ்சம் கவனமா நடந்துக்கணும், புரியுதா?”
“ம்… புரியுது.”
“அங்கிளை பார்த்த உடனே நீயும் அழுது புலம்பிட கூடாது.” அவன் மீண்டும் எச்சரிக்க இப்போது பெண் லேசாக சிரித்தது.
“ஏன் சிரிக்கிற?”
“நீங்க இந்தளவுக்கு எச்சரிக்க வேண்டிய அவசியமில்லை.”
“அப்பிடியா?” அவன் அவளைக் கூர்ந்து பார்த்தபடி கேட்க அவள் முகம் சிவந்தது. அந்த இருள் படர்ந்த பொழுதிலும் அவள் முக பாவம் அவன் கண்களுக்குத் தெளிவாக தெரிய ஆதி அதை ஆழ்ந்து ரசித்தான்.
“போகலாமா?” இது துளசி. தன்னை மீட்டுக்கொண்டவன் அதற்கு மேலும் தாமதிக்காது அவளோடு கூட நடந்தான்.
சங்கரபாணியை இப்போது அறைக்கு மாற்றி இருந்தார்கள். ஆபத்து என்று சொல்ல பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. மகளைக் கண்டபோது அவர் கண்களில் நீர் கோர்த்தது.
“அப்பா!” வாஞ்சையோடு அழைத்தபடி அவசரமாக அவர் அருகினில் போல துளசி அவர் கையைப் பற்றிக்கொண்டாள்.
“துளசிம்மா!” சங்கரபாணியின் குரல் நடுங்கியது.
“எதுக்குப்பா இப்ப அழுறீங்க? அப்பிடி நீங்க அழுற அளவுக்கு என்ன நடந்து போச்சு?” சிரித்தபடியே கேட்டாள் துளசி. பெண்ணின் நடவடிக்கைகளைப் பார்த்த ஆதிகூட அதிசயப்பட்டு போனான்.
“அம்மாடி…” மேற்கொண்டு எதுவும் பேச இயலாமல் பெரியவர் தடுமாறினார்.
“அப்பா… அம்மாவும் நம்ம கூட இல்லை, நீங்களும் இப்பிடி வருத்தப்பட்டு எதையாவது எடுத்துக்கிட்டா என்னோட நிலைமை என்னப்பா?” இப்போதும் சிரித்த முகமாகவே கேட்டாள் துளசி.
“ஐயையோ துளசிம்மா!” பதறினார் சங்கரபாணி.
“அதுதான் ப்பா, இப்போ என்ன? உங்க பொண்ணோட கல்யாணம் நின்னு போச்சு, அவ்வளவுதானே?” இதைப் பெண் சொன்ன போது விம்மி வெடித்த கேவலை அடக்கி கொண்டார் சங்கரபாணி.
“இதே விபத்து கல்யாணத்துக்கு அப்புறமா நடந்திருந்தா, உங்க பொண்ணை அப்பவும் இப்பிடித்தானேப்பா நடத்தியிருப்பாங்க?”
“ஆமாம்மா.”
“அப்போ ஏன் ப்பா கவலைப்படுறீங்க? தலைத் தப்பினது தம்பிரான் புண்ணியம்னு நினைங்கப்பா.”
“நமக்கு மட்டும் ஏன் துளசி இப்பிடியெல்லாம் நடக்குது? கடவுள் ஏன் நல்லவங்களை நம்ம கண்ணுல காட்டலை?” இதை சங்கரபாணி சொன்ன போது ஆதி பல்லைக் கடித்தான்.
‘ஆமா, காட்டினா பார்த்துட்டுத்தான் மறு வேலைப் பார்ப்பீங்க, யோவ்! உங்கண்ணுக்கு நானெல்லாம் நல்லவனா தெரியலையா?!’ மனதுக்குள் சங்கரபாணியை வறுத்தெடுத்தான் ஆதி.
“போனது போகட்டும் ப்பா, அதை நினைச்சு நீங்க வருத்தப்படாதீங்க, கல்யாணம் மட்டுந்தான் வாழ்க்கையா ப்பா? அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கு இந்த உலகத்துல.”
“ம்…” மகளின் பேச்சை ஜீரணிக்க முடியாவிட்டாலும் ஆமோதித்தார் அந்த அப்பா.
“உலகத்துல எத்தனையோ பெத்தவங்க அவங்க பிள்ளைங்களை இழந்துட்டு தவிக்கிறாங்க, உங்களுக்கு அப்பிடியொரு கஷ்டத்தை ஆண்டவன் கொடுக்கலை ப்பா, நான் உங்க கூடத்தான் இருக்கேன், முழுசா இருக்கேன் ப்பா.”
தன்னிலும் கேடு நாட்டிலே கோடி என்று துளசி தன் தந்தைக்கு விளக்க முயல ஆதி இறுகிப்போனான். என்ன மாதிரியான விளக்கம் இது?! ஆனால் அது அந்த முதியவரிடம் வேலைச் செய்தது.
“ஐயோ துளசி! அப்பிடியெல்லாம் பேசாதம்மா!”
“அதுதான் ப்பா, நமக்குக் கடவுள் குடுக்கிறதை வெச்சு சந்தோஷப்படணும் ப்பா, கடவுள் ஒன்னை நமக்கிட்ட இருந்து பறிக்கிறார் ன்னா அதுல ஏதோ ஒரு நன்மை கண்டிப்பா இருக்கும்.”
“புரியுதும்மா.”
“நீங்க எதையும் நினைச்சு வருத்தப்பட கூடாது ப்பா, சீக்கிரமா வீட்டுக்கு வந்து சேருங்க, நீங்க இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.”
“வந்தர்றேன் ம்மா, எப்ப வீட்டுக்குப் போகலாம்ணு டாக்டர் கிட்ட இன்னைக்கே கேக்குறேன், நீ வருத்தப்படாதே துளசி, அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது, துணைக்குப் பாட்டியைக் கூட இருக்க சொல்லும்மா.”
“சரிப்பா.”
“ஆதி…” இளையவனிடம் திரும்பினார் சங்கரபாணி.
“அங்கிள்.”
“துளசியை கூட்டிக்கிட்டு நீ கிளம்புப்பா, ரொம்ப லேட் ஆகிடுச்சு.”
“ஓகே அங்கிள், போகலாமா துளசி?”
“ம்…” அப்பாவின் கரத்தை ஒரு தரம் அழுத்திக்கொடுத்த மகள் அவரைத் திரும்பி திரும்பி பார்த்த படி அறையை விட்டு வெளியேறினாள்.
ஆதி நேராக கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான். பெண்ணும் எதுவும் பேசாமல் அவனைத் தொடர்ந்து வந்தது. இப்போது அவன் காரின் முன் கதவை துளசிக்காக திறந்து விட்டான்.
“இல்லை… நான் பின்னாலேயே…” பெண் தடுமாற அவன் விழிகள் இரண்டும் அவளையே சில நொடிகள் பார்த்திருந்தன. அந்த பார்வையைத் தாங்க முடியாமல் காரின் முன் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள் துளசி.
கதவை மெதுவாக மூடிவிட்டு அவன் இருக்கையில் வந்து அமர்ந்தான் ஆதி. ஏறியவுடனேயே காரை கிளப்பாமல் அப்படியே சற்று நேரம் அமர்ந்திருந்தான்.
“என்னாச்சு?”
“நீ ஏன் அப்பிடி பேசினே?” சட்டென்று அவன் கொஞ்சம் பெரிதான குரலில் கேட்க அவள் திடுக்கிட்டாள்.
இன்றைய பொழுது அவன் அவளிடம் கொஞ்சம் உரிமை எடுத்துக்கொள்வதை அவளும் புரிந்துதான் இருந்தாள். ஆனால் இந்த குரல் இன்னும் அதீதமான உரிமையைக் காட்டியது.
“என்ன பேசினேன்?” அவள் நிதானமாக கேட்டாள்.
“உங்கப்பாவைச் சமாதானப்படுத்த நீ அவரை வித்தியாசமா அப்ரோச் பண்ணினது நல்லதுதான், அதுக்காக… அப்பிடியா பேசுவாங்க?”
“நான் எப்பிடி பேசினேன்னு நீங்க இன்னும் சொல்லலியே.” வாழ்க்கையில் பலதையும் பார்த்திருந்த படியால் துளசி திணறுவது அபூர்வம்.
அன்றைய தினம் கொடுத்திருந்த அதிர்ச்சிகள் எல்லாம் இப்போது வடிந்து போயிருக்க துளசி இலகுவாக ஆதியை கையாண்டாள். ஆனால்… இப்போது ஆண் திணறினான்.
“அதை நான் வேற என்னோட வாயால சொல்லணுமா? நான் நல்லாத்தானே இருக்கேன் அது இதுன்னு உங்கப்பாக்கிட்ட உளறினே.” அவன் குரலில் எரிச்சல் இருந்தது.
“அப்பா ஒரு வட்டத்துக்குள்ளேயே உழலுறார், அவரை வெளியே கொண்டு வரணும், அப்பிடி வெளியே கொண்டு வரணும்னா ஏதாவது அதிரடியாத்தான் பேசணும்.”
“ஓஹோ! டீச்சரம்மா கணக்குப் போட்டு வேலைப் பார்த்தீங்களாக்கும்?”
“எங்கணக்கு வர்க்கவுட் ஆகிச்சுதா இல்லையா?”
“ஆகிச்சுதுதான்…” மனமில்லாமல் அவன் ஒப்புக்கொண்டான். அவள் அந்த இருளில் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“ஒரு பொண்ணுக்கு கல்யாணம், புருஷன், வீடு, புள்ளைக்குட்டி… இதுதான் வாழ்க்கைன்னு எல்லாரும் நினைக்குறாங்க.”
“அதுல என்ன தப்பிருக்கு?”
“அப்போ அதைத்தவிர எனக்கு வேற எதுவுமே இல்லையா? இந்த மூடத்தனமான விஷயங்களை நீங்களுமா ஆதரிப்பீங்க?”
“அதென்ன நீங்களுமா? நான் அப்பிடியென்ன விசேஷம்?”
“வெளிநாட்டுல பொறந்து வளர்ந்திருக்கீங்க, அங்கெல்லாம் இப்பிடியா பொண்ணுங்க இருக்காங்க?”
“இல்லைதான்.” அவளை முதன் முதலாக பார்த்த போது அவன் மனதில் தோன்றிய நினைவுகளை இப்போது அவள் பேசவும் அவன் நிதானித்தான்.
“அங்கெல்லாம் இப்பிடி இல்லைதான் துளசி, அதுக்காக நம்ம கலாச்சாரத்தை நான் குறை சொல்லவும் மாட்டேன்.”
“புரியலை.”
“ஒரு பொண்ணுக்கு நீ சொன்ன விஷயங்கள் மட்டுந்தான் வாழ்க்கைன்னு நான் சொல்ல மாட்டேன், ஆனா அதே நேரம்… அதுவும் இருக்கணும் இல்லையா?
“அமையணும் இல்லையா? அதுக்காக கண்ணை மூடிக்கிட்டு குழியிலதான் விழுவேன்னா எப்பிடி?”
“அது நியாயந்தான், ஆனா குழியின்னு தெரிஞ்சதுக்கு அப்புறமாவும் நீங்களும் தலையை ஆட்டித்தானே இருக்கீங்க மேடம்? மறுக்கலையே?”
“அது என் இயலாமை! என்னோட அப்பாவுக்காக நான் தோத்துப்போன இடம்!” சாலையை நேராக வெறித்தபடி அவள் சொல்ல ஆதி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
“ம்…” ஒரு சிறு தலையசைப்போடு காரை நகர்த்தினான். அந்த ப்ளாக் ஆடி பாரதி தெருவை நோக்கி போனது.
***
“ஆதி…” அழைத்த படியே உள்ளே நுழைந்தான் நம்பி.
“மேல வா நம்பி, நான் பால்கனியில இருக்கேன்.” ஆதியும் மேலிருந்த படியே சத்தமாக குரல் கொடுத்தான்.
அதையடுத்து நம்பி தடதடவென படிகளில் ஏறி வரும் சத்தம் கேட்டது.
“ஹாஸ்பிடல் போய் வந்துட்டீங்களா?”
“ஆமா… ராபின் எங்க?”
“என் ஃப்ரெண்ட்ஸோட ரூம்ல தங்க வச்சிருக்கேன்.”
“சேஃபான இடமா நம்பி?”
“பயலை ரூமை விட்டு அசைய விடாதீங்கப்பான்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டு வந்திருக்கேன், மடப்பயல்… இன்னைக்கு அவன் பார்த்த வேலையால…” நம்பி பல்லைக் கடித்தான்.
“சரி விடு, அவன் கோபம் அவனுக்கு.”
“அப்பிடி என்ன கோபம் அவனை அடிக்கிற அளவுக்கு?” நம்பியின் கேள்விக்குப் பதில் சொல்ல தெரியாமல் அமைதியாக நின்றிருந்தான் ஆதி.
ராபினின் கோபத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல தனது கோபம் என்று அவனால் எப்படி நம்பியிடம் சொல்ல முடியும்?!
“பாஸ்போர்ட் விஷயம் என்ன ஆச்சு ஆதி?” நம்பி கேட்க ஆதி நிஜத்திற்கு வந்தான்.
“நாளைக்கு நைட் கிடைச்சிரும் நம்பி.”
“ஓ… அவ்வளவு டைம் ஆகுமா?”
“இன்னைக்கு ஈவ்னிங்தானே சொல்லி இருக்கோம்.”
“புரியுது ப்பா, ஆனா அதுவரை இந்த ராபினை பாதுகாக்கணுமே!”
“கஷ்டந்தான்.”
“உன்னோட ஃப்ரெண்ட் கிட்ட பேசிட்டியா ஆதி?”
“ஆமா, அவன் இருக்கிற இடத்துக்குப் பக்கத்துலேயே ரூம் ஒன்னு பார்க்க சொல்லி சொல்லிட்டேன்.”
“சம்பாதிக்க ஆரம்பிக்கும் வரை இவனோட செலவெல்லாம்…”
“அதெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க நம்பி.” நம்பியின் பேச்சை இடைமறித்தான் ஆதி.
“சிங்கப்பூர் எங்கிறதால வீசா பிரச்சனை இல்லை, இல்லைன்னா இவனை நான் எங்கப்பா கிட்டயே அனுப்பிடுவேன்.”
“அது சரி.” ஆதியின் பேச்சை ஆமோதித்தான் நம்பி.
“ராபின் வீட்டுல என்ன சொல்லப்போறே நம்பி?”
“நடந்ததைச் சொல்ல முடியாது ஆதி.”
“ஏன்?”
“டேவிட் அங்கிள் பயங்கர ஸ்ட்ரிக்ட்.”
“அப்பிடியா?”
“ஆமா, ஒருதரம் நான், ராபின், இம்ரான்… மூனு பேரும் காலேஜ் போற டைம்ல… ஃப்ரெண்ட்ஸ் குடுத்தாங்களேன்னு சும்மா ஒரு ஃபன்னுக்கு சிகரெட் புடிச்சோம்.”
“ம்…”
“மனுஷன் ரோட்ல பார்த்துட்டாரு.”
“ஐயையோ!”
“வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா பெல்ட்டால எங்க மூனு பேரையும் விளாசிட்டாரு.”
“ஹா… ஹா…”
“அடின்னா அடி அப்பிடியொரு அடி.”
“உங்க வீட்டுல ஒன்னும் சொல்லலையா?”
“எங்கப்பாவும் கரீம் அங்கிளும் சேர்ந்துக்கிட்டு, கண்ணை மட்டும் விட்டுட்டு தோலை உரி டேவிட் ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.”
“அடப்பாவமே! ஹா… ஹா…” ஆதி வாய்விட்டு சிரிக்க நம்பி முகத்திலும் புன்னகை அரும்பியது.
“ஃபாரின் போக ராபின் முன்னாடியே கொஞ்ச நாள் ட்ரை பண்ணிக்கிட்டுத்தான் இருந்தான், இப்போ சான்ஸ் கிடைச்சிருக்குதுன்னு சமாளிக்க வேண்டியதுதான்.”
“சந்தேகம் வராதா?”
“வராத மாதிரி பார்த்துக்கணும்.”
“ஃபாரின் போக ட்ரை பண்ணினவன் ஒரு பாஸ்போர்ட்டை எடுத்து வெக்கலையே! பாஸ்போர்ட் கைல இருந்திருந்தா இந்நேரம் ஃப்ளைட்ல இருந்திருப்பான்.”
“சரி விடுப்பா, அவன் ஒரு அவசர குடுக்கை, ஒன்னையும் ஒழுங்கா பண்ண மாட்டான்.”
அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல ஆதி அமைதியாகிவிட்டான்.
ஆனால் இனிமேல்தான் நான் பேசவே ஆரம்பிக்க போகிறேன் என்பது போல ஆதியை பார்த்தான் நம்பி.
“என்ன நம்பி? ஏன் அப்பிடி பார்க்கிறே?”
“இன்னைக்கு ஸ்டேஷன்ல அசால்டா அந்த ரெண்டு லட்சம் என்னோட பொறுப்புன்னு சொல்றே, இப்போ… ராபினோட செலவு எல்லாத்தையும் எதைப்பத்தியும் யோசிக்காம செய்றே.”
“…………….”
“இப்போதைக்கு சிங்கப்பூர்ல இருக்கிற உன்னோட ஃப்ரெண்ட் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாலும், அந்த செலவு அத்தனையையும் அவனோட தலையில கட்டுற அளவுக்கு நீ பொறுப்பில்லாதவன் இல்லை ஆதி, எனக்கு அது நல்லாவே தெரியும்.”
“……………..”
“நீ ஒரு பிஸினஸ் மேன், என்னதான் பணக்காரனா இருந்தாலும் ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் பார்த்த இந்த உறவுகளுக்காக இவ்வளவு பண்ணுறது…”
ஆதியை கூர்ந்து பார்த்தபடி நம்பி பேசிக்கொண்டிருந்தான். ஆனால் ஆதி மறந்தும் வாயைத் திறக்கவில்லை. ஏதோ… பிடிபட்டவன் போல அமைதியாக நின்றிருந்தான்.
“ஆதி…” நம்பி அழைத்தான். ஆனால் சூழ்ந்திருந்த இருளைப் பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தான் ஆத்ரேயன்.
“ஏதாவது பேசுடா? ஏன் அமைதியா இருக்க?” நம்பி கேட்டு முடித்த போது தன் இரு கைகளையும் பான்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு முழுதாக திரும்பி நம்பியின் கண்களை நேராக பார்த்தான் ஆதி.
“என்ன பேசணும் நம்பி?” ஆதியின் குரலில் அத்தனைத் தெளிவு.
“சொல்லு நம்பி, எங்கிட்ட இருந்து என்ன தெரிஞ்சுக்கணும் உனக்கு?”
“உம்மனசுல துளசியை பத்தி என்ன நினைப்பு இருக்கு?”
“மனசு பூரா துளசி நினைப்புதான் இருக்கு.” நிதானமாக சொன்னான் ஆதி.
“டேய்!”
“எதுக்கு இவ்வளவு ஆச்சரியப்படுறே?”
“எப்பிடி… எப்பிடிடா?!”
“எப்பிடின்னா?”
“நீ அவளைப் பார்த்து ஒரு வாரம்தான் ஆகுது!”
“பார்த்த முதல் நொடியே அவளை எனக்கு அவ்வளவு புடிச்சுதுன்னு நான் சொன்னா நீ நம்புவியா?”
“ஆதீ…”
“யாருன்னே தெரியாது, நீ என்னை இதே மாடிக்குக் கூட்டிக்கிட்டு வந்து வீட்டைச் சுத்தி காமிச்சே, அப்போ… இந்த பால்கனியில இருந்து பார்த்தப்போ துளசி கோலம் போட்டுக்கிட்டு இருந்தா.”
“………….” ஆதி சொல்ல வாயைப் பிளந்து கொண்டு கேட்டு கொண்டிருந்தான் நம்பி.
“அந்த செக்கன்ட் அவளைப் பிடிச்சுதுடா எனக்கு.”
“டேய்…” நம்பியின் வாயிலிருந்து
வெறும் காற்றுதான் வந்தது.
“ஆனா நீ… வெள்ளிக்கிழமை எங்க துளசிக்கு நிச்சயதார்த்தம் ன்னு சொல்றே!”
“நான் உள்ளதைச் சொன்னேன்டா.”
“ஆமா, பெருசா உள்ளது! ஏன்டா? அறிவில்லை உங்களுக்கு? பூ மாதிரி இருக்கிற பொண்ணை அந்த நாய்க்குக் கட்டிக்குடுக்க முடிவு பண்ணி இருக்கீங்க! அவ அப்பனுக்கு அறிவில்லை? பொண்ணைக் கட்டிக்குடுத்துட்டா போதுமா? அவ நல்லா வாழ வேணாம்?”
நம்பியின் தலை இப்போது தானாக குனிந்தது. ஆதி சொல்வது நியாயம்தான். அவனுக்குமே அந்த எண்ணம் இருந்தது. ஆனால் சங்கபாணி அங்கிள் மாப்பிள்ளைப் பார்த்து அதற்கு துளசி சம்மதம் சொல்லும் போது அவனால் என்னதான் செய்ய முடியும்?!
“பெருசா துளசி என்னோட தங்கை, என்னோட தங்கைன்னு பீத்திக்கிற, அந்த தங்கைக்காக நீ பார்த்த மாப்பிள்ளை இவன்தானா?”
“இல்லை ஆதி…”
“பேசாதே! நீ பேசாதே… ஏதோ நமக்குக் குடுத்து வெக்கலைன்னு வேலையைப் பார்க்க ஆரம்பிச்சா… இவன் வந்து நிக்குறான்.”
“எவன்?”
“ராபின்… அவனக்கொரு சோகக்கதை, துளசியை நினைச்சு, ஏன்டா… ஒரு மனுஷன் ஒரே நாள்ல எத்தனை இடியைத் தாங்குறது?”
“இப்ப நீ என்னதான் சொல்ல வர்றே ஆதி!”
“துளசி எனக்குங்கிறேன்!” ஆத்ரேயன் சட்டென்று ஓர் ஆங்காரத்தோடு சொன்னான்.
“ஓ…” நம்பி இப்போது திகைத்து போனான். எதிரில் இருப்பவனிடம் என்ன பேசுவதென்று நம்பிக்கு புரியவில்லை. கைக்குழந்தை பொம்மைக்கு அடம் பிடிப்பது போல அவன் அடிக்கும் கூத்தைப் பார்த்த போது நம்பிக்கு சிரிக்கலாம் போல தோன்றியது.
அங்கிருந்த நாற்காலி ஒன்றில் தொப்பென்று அமர்ந்தான் நம்பி. இப்போது என்ன செய்வது? யாரிடம் என்னவென்று பேசுவது? ஆதியை அண்ணார்ந்து பார்த்தான். அவனும் இவனைத்தான் பார்த்தபடி இருந்தான்.
“அப்பிடி எந்த மலையைப் பொளக்க இவ்வளவு யோசிக்குற நம்பி?”
“டேய்! உனக்கு எல்லாம் ஈஸியா இருக்கா? நீ எவ்வளவு பெரிய விஷயத்தைப் பத்தி இப்போ பேசி இருக்கே தெரியுமா?”
“துளசிக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கப்போகுது, அது அவ்வளவு பெரிய விஷயமா நம்பி?”
“இல்லையா பின்னே? துளசிக்கு நீ பார்த்த மாப்பிள்ளை இவன் தானான்னு என்னோட நாக்கைப் புடுங்கிற மாதிரி இப்போ கேட்டியே… ஏன் பார்க்கலை? அந்த காரணம் இன்னும் அப்பிடியேதான் இருக்கு.”
“டேய் டேய் டேய்! பழைய பஞ்சாங்கம்!”
“நான் பழைய பஞ்சாங்கம் இல்லை ஆதி, இந்த தெருவுல இருக்கிற ஒரு பெருசும் இதுக்கு ஒத்துக்காது, அதுங்கதான் பழைய பஞ்சாங்கம்.”
“அதை நான் பார்த்துக்கிறேன் நம்பி, நீ உன்னோட முடிவைச் சொல்லு.”
“அதான் நீ முடிவை எடுத்திட்டயே, இப்ப எதுக்கு எங்கிட்ட போலியா நடிக்கிறே?” நண்பனின் குரலில் ஆத்திரம், ஆதங்கம் என பல உணர்வுகளை உணர்ந்த ஆதி அவன் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான்.
“ஆயிரந்தான் இருந்தாலும் நீ துளசியோட அண்ணன் இல்லையா? இப்ப சொல்லு, உன் தங்கைக்கு நான் பொருத்தமா இருப்பேனா?” ஆதி குறும்போடு கேட்க நம்பி அவனை இறுக கட்டிக்கொண்டான்.
“ஒன்னைவிட எவன்டா என்னோட துளசிக்கு பொருத்தமா இருக்க போறான்?”
“அப்பிடி போடு!” ஆதி அட்டகாசமாக சிரிக்க நம்பியும் அவனோடு இணைந்து கொண்டான்.
***
அன்று ஞாயிற்றுக்கிழமை. துளசி அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு ஒரு டாப்பையும் லெக்கினையும் அணிந்து கொண்டாள்.
ஞாயிறுகளில் அவள் உடை அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். அடுத்த வாரத்திற்குரிய அனைத்து வேலைகளையும் ஞாயிறன்று ஆயத்தம் செய்து வைத்து விடுவாள்.
“எதுக்கு துளசி சிரமப்படுத்திக்குற, அதான் நான் இருக்கேனில்லை, பார்த்துப்பேன்.” அப்பா சொன்னாலும் அவள் கேட்பதில்லை.
பாவம் அப்பா! அம்மா போன பிறகு தனிமை, நோய் என பெரிதும் கஷ்டப்படுகிறார். போதாததற்கு அவள் சுமை வேறு. தன்னால் இயன்ற மட்டும் அப்பாவைத் தாங்குவாள் துளசி.
நேற்று இரவு அப்பா வீட்டுக்கு வந்து விட்டார். அதுவே அவளுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. துணைக்குப் பாட்டி இங்கேயே வந்து அவளோடேயே தங்கி இருந்தாலும் துளசிக்கு அப்பா வந்துவிட்டது பெருத்த நிம்மதியாக இருந்தது.
வாசலுக்கு வந்து நீர் தெளித்தவளுக்கு ராபினின் ஞாபகம் வந்தது. முன்னமே வெளிநாடு போக சிறிது காலம் முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது அமையவில்லை.
ஆனால் நேற்று இரவு திடீரென்று வந்து அவனுக்கு சிங்கப்பூர் போக வாய்ப்பு அமைந்திருப்பதாக சொன்னான். தெருவில் இருந்த அனைவரும் திகைத்து போனார்கள்.
ராபின் எப்போதுமே அப்படித்தான். துளசி இப்போது அப்படித்தான் எண்ணிக்கொண்டாள். கூடவே வளர்ந்திருந்தாலும் நம்பி அண்ணாவைப் போல இம்ரானை போல அவளிடம் அதிகம் பேச மாட்டான். இத்தனைக்கும் தங்கையோடு பிறந்தவன். கூச்ச சுபாவம் போலும் என்று துளசியும் எண்ணி கொள்வாள்.
நீரைத் தெளித்து விட்டு மாவை எடுத்துக்கொண்டு உட்கார போனவள் ஏதோ உறுத்த எதிர்வீட்டு மாடியை அண்ணார்ந்து பார்த்தாள். கையில் காஃபியோடு இவளையே பார்த்தபடி ஆதி நின்றிருந்தான். இவள் பார்க்கவும்,
“ஹாய்!” என்று அங்கிருந்த படியே கையை ஆட்டினான். துளசிக்கு மனது கொஞ்சம் படபடத்து போனது.
பதிலுக்கு இவளும் கையை லேசாக ஆட்டிவிட்டு குனிந்து கொண்டாள்.
தங்கள் தெருவிற்குப் புதுவரவாக வந்திருக்கும் அந்த இளைஞனை துளசி முதலில் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால்… அவள் வாழ்க்கையில் பெரிதான ஒரு இடத்தை அவன் பிடித்துக்கொள்ள முயலுகிறானோ என்று இப்போது சந்தேகம் வந்தது.
துளசிக்கு வயது இருபத்தியாறு. இரண்டு வருடமாக ஒரு பாடசாலையில் ஆசிரியையாக கடமை ஆற்றுகிறாள். வாழ்க்கை இதுவரை நிறைய அவளுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஆதியின் மனதைப் புரிந்துகொள்ள முடியாத அளவு அவள் முட்டாள் அல்லவே!
அவர்களின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி கேட்டை திறந்துகொண்டு அவன் வருவது தெரிந்தது. இரவு ஆடையில் இருந்தான்.
“குட் மார்னிங் துளசி!”
“குட் மார்னிங்.” மலர்ந்த புன்னகையோடு அந்த முகம் காலை வணக்கம் சொன்னபோது துளசியின் வாய் அனிச்சை செயலாக பதில் சொன்னது.
“காலையிலேயே குளிச்சாச்சா?”
“ம்…” புள்ளி வைத்துக் கோலம் போட ஆரம்பித்தது பெண்.
அங்கிருந்த சின்ன கட்டில் உட்காராமல் அவளைச் சுற்றி வளைய வந்து அவள் கோலம் போடுவதைச் சிறிது நேரம் பார்த்திருந்தான். துளசிக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
“காஃபி யாரு போட்டா? நீங்களா?” ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக பேசினாள்.
“ஆமா.”
“போட தெரியுமா?”
“சமையலே பண்ணுவேன்.”
“ஓ…” உண்மையாகவே ஆச்சரியப்பட்டவள் அவனை மீண்டும் அண்ணார்ந்து பார்த்தாள். காஃபியை ஒரு மிடறு விழுங்கியவன்,
“நம்பலைனா இந்த காஃபியை குடிச்சு பாரு துளசி.” என்றபடி கப்பை அவள் புறமாக நீட்டினான். துளசி திடுக்கிட்டு போனாள்.
“இல்லை… பரவாயில்லை…” அவளின் திடுக்கிட்ட முகம் பார்த்து அவன் முகத்தில் சிரிப்பு தோன்றியது.
“நான் முதல் நாள் இங்க வந்தப்பவும் நீ இப்பிடித்தான் கோலம் போட்டுக்கிட்டு இருந்த துளசி.”
“உங்களுக்கு எப்பிடி தெரியும்?!”
“நான் அங்க இருந்து பார்த்துக்கிட்டு இருந்தேன்.” என்றபடி அவன் வீட்டு பால்கனியை சுட்டிக்காட்டினான். அவளும் அவனோடு சேர்ந்து அண்ணார்ந்து பார்த்துவிட்டு அமைதியாக கோலத்தைத் தொடர்ந்தாள்.
“நாளைக்கு ஸ்கூலுக்கு போறியா துளசி?” அவன் சட்டென்று கேட்க அவள் சிறிது நேரம் மௌனம் காத்தாள்.
“இல்லை.”
“ஏன்? ஏற்கனவே ஒரு நாள் லீவ் போட்டிருக்கே இல்லை.” அது எந்த நாள் என்று குறிப்பிட மனமில்லாமல் பொதுவாக கேட்டான் ஆதி.
“ஆமா… ஆனாலும் பரவாயில்லை.”
“எதைப் பார்த்து பயப்படுற துளசி?” சற்று குரலை உயர்த்தி கேட்டான் ஆதி. கோலம் போட்டுக்கொண்டிருந்த அவள் வலது கை சட்டென்று அப்படியே நின்றது. தீர்க்கமாக அவனை அண்ணார்ந்து பார்த்தது பெண்.
“எதைப் பார்த்து நான் பயப்பிடணும்?!” பதில் சொல்லாமல் அவள் எதிர்க்கேள்வி கேட்க அவன் கண்களில் ஒரு மெச்சுதல் வந்து போனது.
“அப்போ ஏன் ஸ்கூலை கட் பண்ணுற?”
“அது வேறொ…”
“யாரு ஆதியா?” அவள் பேசி முடிப்பதற்கு முன்பாக சங்கரபாணியின் குரல் உள்ளேயிருந்து வந்தது. பின் கட்டிலிருந்து ஹாலுக்கு வந்தவர் இளையவனைக் காணவும் உள்ளே அழைத்தார்.
“இதோ வர்றேன் அங்கிள்.” குரல் கொடுத்து கொண்டே உள்ளே போனான் ஆதி. துளசியும் கோலத்தை முடித்துக்கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள்.
“துளசி, எனக்கும் ஆதிக்கும் காஃபி குடும்மா.”
“இப்பதான் குடிச்சேன் அங்கிள்.”
“உங்களுக்கு இப்போ எதுக்குப்பா இன்னொரு காஃபி?”
“சும்மாதான் துளசி, ஆதியோட சேர்ந்து இன்னொரு காஃபி குடிக்கலாமேன்னு நினைச்சேன்…”
“பேசிக்கிட்டு இருங்க, சட்னி ரெடியானதும் சாப்பிடலாம்.” கறாராக அவள் சொல்ல ஆதி அதிசயமாக போகும் பெண்ணைப் பார்த்தான்.
“என்ன அங்கிள்? உங்க பொண்ணு உங்களை இப்பிடி மிரட்டுறா? வீட்டுலயும் டீச்சர்தானா?” இப்போது சங்கரபாணி வாஞ்சையோடு புன்னகைத்தார். கண்கள் பனித்து போனது மனிதருக்கு.
“அவ எம்பொண்ணு இல்லை ஆதி, என்னோட அம்மா.” தழுதழுத்த குரலில் சங்கரபாணி சொன்னபோது ஆதி பேச்சற்று மௌனித்துவிட்டான்.
“ஒரே பொண்ணுன்னு ரொம்ப செல்லமா வளர்த்தோம், அவ அம்மா இருக்கும் வரைக்கும் சமையல் கட்டுன்னாலே துளசிக்கு என்னன்னு தெரியாது, ஆனா இப்போ அத்தனையையும் இழுத்து போட்டுக்கிட்டு பண்ணுறா.”
“……………..”
“வேலைக் கிடைச்சப்போ நான் எதுவுமே சொல்லலை ஆதி, அவளாவே முடிவெடுக்கட்டும்னு விட்டுட்டேன், கொஞ்சம் வெளியே போயி நாலு பேரைப் பார்த்து பழகி பேசினாத்தானே அவளுக்கும் ஆறுதலா இருக்கும்.”
“…………..”
“இல்லைன்னா இந்த அப்பாக்கு முழு நேர நர்ஸா வேலைப் பார்க்க ஆரம்பிச்சிடுவா.”
“அதை விடுங்க அங்கிள், நான் உங்கக்கிட்ட வேற விஷயம் பேசலாம்னு வந்தேன்.” அவர் வருந்திக்கொண்டே போக பேச்சை மாற்றினான் ஆதி.
“சொல்லு ஆதி.”
“அங்கிள், உங்களுக்கு ஊர்ப்பக்கமா நிறைய தோட்டம் இருக்குதாமே, உண்மையா?”
“இருந்துச்சுப்பா, பசுமையா அழகா… இப்பெல்லாம் சும்மா காஞ்சு போய் கிடக்குது.”
“ஏன்?”
“இப்ப யாருக்கு விவசாயம் பண்ண நேரமிருக்கு? எல்லாருக்கும் வெளிநாட்டு மோகம் பிடிச்சிருக்கு ஆதி.”
“ஓ…”
“பார்த்துக்கிட்டே இரு, இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாமே காணாம போயிடும்.” கவலையோடு சங்கரபாணி சொல்ல ஆத்ரேயன் சிறிது நேரம் யோசித்தான்.
“அங்கிள், எம்மனசுல ஒரு ஐடியா இருக்கு, நான் சொன்னா நீங்க அதைத் தப்பா எடுத்துக்கப்படாது.”
“என்னப்பா நீ, வேத்து மனுஷன் மாதிரி பேசிக்கிட்டு, சும்மா சொல்லு.” இவர்கள் பேச்சைக் குறுக்கிட்டு கொண்டு துளசி வந்தாள்.
“அப்பா, வாங்க சாப்பிடலாம், தோசை சூடா இருக்கு.”
“வா ஆதி சாப்பிடலாம்.”
“நீங்க சாப்பிடுங்க அங்கிள், என்னோட ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு இன்னும் நேரமிருக்கு.”
“அட பரவாயில்லை வா, ரெண்டு தோசை சாப்பிடு.” அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே துளசி அவனுக்கும் சேர்த்து ஒரு ப்ளேட்டை மேஜையில் வைத்தாள். அதற்கு மேல் ஆதியால் மறுக்க முடியுமா என்ன?
சூடாக தோசையும் சட்னியும் சுகமாக உள்ளே இறங்கியது. பரிமாறும் கைகளைச் சிலாகித்த படி உணவை உண்டான் ஆதி.
“நிலத்தைப் பத்தி ஏதோ பேசினியேப்பா.” சங்கரபாணி எடுத்து கொடுத்தார்.
“ஆமா அங்கிள், யூகே ல எங்க பிஸினஸே…” என்று ஆரம்பித்து அவர்கள் தொழில் பற்றியும் அதில் அவனுக்கிருக்கும் அனுபவம் பற்றியும் விபரித்தான் ஆதி.
“வெரிகுட்!” உண்மையாகவே பாராட்டினார் சங்கரபாணி.
“அதான் அங்கிள், அதே பிஸினஸை இங்கயும் பண்ணலாம்னு ஒரு ஐடியா.”
“தாராளமா பண்ணு ஆதி, உங்களைப் போல இளைஞர்கள் இப்பிடியெல்லாம் கண்டிப்பா பண்ணணும்.”
“ஃபர்ஸ்ட் டைம் இங்க பண்ணுறதால இப்போதைக்கு நிலத்தை வாங்க வேணாம்னு பார்க்கிறேன் அங்கிள்.”
“ஆமா ஆமா… எதுக்குப்பா? நம்ம கிட்ட இல்லாத நிலமா?”
“குடுக்குறீங்களா அங்கிள்?”
“தாராளமா எடுத்துக்கோ.”
“மத்தவங்களுக்குக் குடுத்தா நீங்க என்ன ரூல்ஸ் ஃபாலோ பண்ணுவீங்களோ அதே ரூல்ஸ்தான் நமக்குள்ளேயும்.”
“ஹா… ஹா… முதல்ல நிலத்தைப் போய் பாரு ஆதி, புடிச்சிருக்கான்னு சொல்லு, மத்ததை அப்புறமா பார்த்துக்கலாம்.”
“ஓகே அங்கிள்.” நான்கு தோசையை அசால்டாக விழுங்கியவன் பெரியவரும் சாப்பிட்டு முடித்திருக்க இருவரது ப்ளேட்டையும் எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் போனான்.
சங்கரபாணி பேப்பரை விரித்துக்கொண்டு சோஃபாவில் அமர்வது தெரிந்தது.
“துளசி, உங்க ஊர் இங்க இருந்து ரொம்ப தூரமா?”
“ஆமா.” ப்ளேட்டை அவனிடமிருந்து வாங்கியது பெண்.
“நாம போகலாமா?” அவன் கேட்க அவள் ஆச்சரியப்பட்டாள்.
“நான் எதுக்கு?!”
“ஏன்? நான் கூப்பிட்டா நீ வரமாட்டியா?” அவன் குரலில் சட்டென்று தோன்றிய பேதத்தை அவள் கவனிக்கவில்லை.
“நம்பிண்ணாவைக் கூட்டிட்டு போங்க.” நிதானமாக சொல்லிவிட்டு ப்ளேட்டை கழுவ ஆரம்பித்தாள் துளசி. ஆதிக்கு அப்படியொரு கோபம் வந்தது.
அவள் பின்புறமாக வந்து அவளை நெருங்கி நின்றான். இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. ஆனால் அதிகம் இல்லை.
“நாம போறோம், நீ எங்கூட வர்றே!” ஆணை போல சொல்லிவிட்டு அவசரமாக வெளியே போய்விட்டான்.
துளசி திடுக்கிட்டு போனாள். கை செய்து கொண்டிருந்த வேலையை மறந்துவிட்டு அமைதியாக நின்றிருந்தது.
என் சிறிய உலகில் நீ யாருமில்லை…
ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே…