நிலா பெண் final

நிலா பெண் final

அந்த வாரம் முழுவதும் ஆதி மிகவும் பிஸியாக இருந்தான். துளசியை அவனோடு யூகே அழைத்துக் கொண்டு போக தீர்மானித்திருந்தான்.
 
சங்கரபாணியை எவ்வளவோ வருந்தி அழைத்தும் வர மறுத்துவிட்டார் மனிதர். துளசி கூட கெஞ்சிப் பார்த்தாள்.
 
“இங்க தனியா உக்கார்ந்து என்னப்பா பண்ணப் போறீங்க?”
 
“அப்பிடி இல்லைம்மா, முதல் முதலா நீ உன்னோட மாமியார் வீட்டுக்குப் புருஷன் கூட போகும் போது நானும் கூட வந்தா நல்லா இருக்காது.”
 
“இதுல என்னப்பா இருக்கு?” துளசிக்கு அப்பாவின் வாதத்தில் இருந்த நியாயம் பிடிபடவில்லை.
 
“பிடிவாதம் பிடிக்கக் கூடாது துளசி, இந்தத் தடவை நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா போய்ட்டு வாங்க, கண்டிப்பா அடுத்த தடவைப் போகும் போது நானும் கூட வருவேன்.”
இப்படிப் பேசும் மனிதரிடம் என்னவென்று விளக்குவது! துளசி ஆதியிடம் தந்தை சொன்னவற்றை அப்படியே வந்து சொன்னாள்.
 
ஆதி கூட சங்கரபாணியிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தான். மனிதர் மசியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அவனும் விட்டு விட்டான்.
 
“சரி விடு துளசி, ஏதோ நமக்குத் தொல்லையா இருக்கும்னு அங்கிள் நினைக்கிறாங்க போல இருக்கு, அடுத்த முறைக் கண்டிப்பா கூட்டிக்கிட்டுப் போகலாம்.”
தந்தையின் மறுப்பைப் பாட்டியிடமும் நம்பியிடமும் துளசி முறைப்பட்ட போது, அவர்களும் சங்கரபாணியின் முடிவுதான் சரியென்று சொன்னார்கள்.
 
“அப்பா சொல்றதும் சரிதான் துளசி, நீயே இப்பதான் போறே, உனக்கு அங்க எல்லாம் கொஞ்சம் பழகிடுச்சுன்னா அப்பாவைக் கூட்டிக்கிட்டுப் போய் கவனிக்க ஈஸியா இருக்கும், வெதரும் இப்போ அங்க கொஞ்சம் சில்லுன்னுதான் இருக்காமே!” நம்பியின் விளக்கம் கொஞ்சம் ஏற்புடையதாக இருந்தது துளசிக்கு.
 
“பாருங்க பெரியம்மா, என்னையும் கூட கூட்டிக்கிட்டுப் போகப் போறாங்களாம்.” சங்கரபாணி சொல்லிச் சிரித்த போது பாட்டியும் கூடச் சேர்ந்து சிரித்தார்.
 
“ஏதோ ஆசையில கூப்பிடுறாங்க சங்கரபாணி.”
 
“அதுக்காக? நானும் கூடப் போனா நல்லாவா இருக்கும்?”
 
“இல்லைதான், நீ சரியான முடிவுதான் எடுத்திருக்கே, சின்ன வயசு… அவங்க சந்தோஷமா போய்ட்டு வரட்டும்.” சொல்லிவிட்டு கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்தார் பாட்டி.
 
“என்னாச்சு பெரியம்மா?!” பதறினார் சங்கரபாணி.
 
“இந்த ஆதி இருக்கானில்லை சங்கரபாணி?”
 
“ஆதிக்கு என்ன பெரியம்மா?”
 
“அவன்… துளசியை நேக்குக் கட்டிக் குடுங்கன்னு சிதம்பரத்துல வெச்சுக் கேட்டப்போ… எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கலை.” பாட்டி மனம் திறந்து பேச ஆரம்பித்தார்.
 
“ஆதி மேலயா?”
 
“ஆமா… இந்தக் காலத்துப் பசங்களுக்கு எடுத்ததுக்கெல்லாம் இப்போ காதல்தானே, இவனும் அப்பிடித்தான் பினாத்துறானோன்னு நேக்கு ஒரு சந்தேகம்.”
 
“ம்…”
 
“ஆனா அப்பிடியில்லைடா சங்கரபாணி… நம்ம துளசி மேல அவன் உயிரையே வெச்சிருக்கான்.” சொல்லும் போதே பாட்டியின் குரல் கம்மியது.
 
“ஆமா பெரியம்மா.” இப்போது சங்கரபாணியும் கலங்கினார்.
 
“என்னடா, பெரியம்மா இப்பிடிப் பேசுறாளேன்னு நீ தப்பா எடுத்துக்காதே சங்கரபாணி.” 
 
“சொல்லுங்க பெரியம்மா.”
 
“துளசியை விட்டு அவனோட பார்வை அங்க இங்க நகர மாட்டேங்குது, நீ எதுக்கு எப்பப் பாரு இங்க வந்து எங்களைத் தொல்லைப் பண்ணுறேன்னு எம்மேல பாயுறான்னா பாரேன்!” பாட்டி சொல்ல இருவரும் இடி இடியென்று சிரித்தார்கள்.
 
“என்னோட மாமனாருக்கு பேரன், பேத்தி எல்லாம் வேணுமாம்… அதாலதான் உன்னோட தொல்லை இல்லாத இடத்துக்கு நாங்க ரெண்டு பேரும் போறோம்னு எங்கிட்டயே சொல்றான்னாப் பார்த்துக்கோயேன்!” மீண்டும் பெரியவர்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
 
“நம்ம துளசி குடும்பம் நடத்துற அழகைப் பார்க்க உன்னோட ஆத்துக்காரி இல்லையேங்கிற கவலைதான் நேக்கு சங்கரபாணி.”
 
“ம்…” சங்கரபாணி இப்போது விம்மினார்.
 
“கவலைப்படாதேப்பா, நாமெல்லாம் எதிர்பார்த்ததை விட நம்ம பொண்ணு சந்தோஷமா இருக்கா, இதுக்கு மேல எதுவும் வேணாம் சங்கரபாணி.”
 
“ஆமா பெரியம்மா.” 
அதன்பிறகு ஆதியோ துளசியோ சங்கரபாணியை வற்புறுத்தவில்லை. துளசிக்கு வீசா எடுப்பதில் ஆதி மும்முரமாக ஈடுபட ஆரம்பித்திருந்தான்.
 
அவசியமான டாக்குமெண்ட்ஸை ஒரு லாயர் மூலமாக உறுதிப்படுத்தி சுந்தரமூர்த்தியை அங்கிருந்து அனுப்பச் சொன்னான்.
 
அவையெல்லாம் கைக்கு வந்து சேர்ந்து விடவே இந்தியாவில் இருக்கும் தூதுவர் ஆலயத்தின் வீசா பிரிவில் அனைத்தையும் ஒப்படைத்தான்.
 
அலைச்சலுக்கே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. நமது அரச அலுவலகங்களில் வேலை நடக்கும் அழகைப் பார்த்துவிட்டு துளசியிடம் சொல்லிச் சொல்லிச் சிரித்தான்.
 
“அங்கெல்லாம் பிரைம் மினிஸ்டர் ட்ரெயின்ல போறாரு, மேயர் சைக்கிள்ல வர்றாரு, இங்க என்ன நடக்குது துளசி?” துளசிக்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை, வெட்கித் தலை குனிவதைத் தவிர.
 
கணவனின் பேச்சு, சிரிப்பு எல்லாவற்றையும் ஒரு சுவாரஸ்யத்தோடு இப்போது கவனிக்கலானாள் மனைவி. சுயநலமற்ற அன்பு அவனுடையது.
 
அன்கண்டிஷனல் லவ் என்பார்களே, அது போல இருந்தது அவன் நேசம். பெற்றவர்கள் மட்டும்தான் தங்கள் குழந்தைகள் மேல் இப்படியொரு நேசத்தைக் காண்பிக்க முடியுமா? இல்லையென்று நிரூபித்தான் கணவன்!
 
அன்று காலையிலேயே ஆதி ஏதோ முக்கியமானதொரு வேலை இருந்ததால் வீட்டை விட்டுக் கிளம்பி விட்டான். அன்று நம்பியும் லீவ் போட்டுவிட்டு வீட்டில் இருந்ததால் இருவரும் இணைந்தே போயிருந்தார்கள்.
 
வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு வந்த துளசி சமையலில் இறங்கி விட்டாள். ஆதியே பெரும்பாலான நேரங்களில் சமையலில் ஈடுபடுவதால் அவளுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது. 
 
ஆனால், அதுவே தொடர்ந்ததால் தனக்குச் சமையல் மறந்தே போய்விடும் என்று எண்ணிப் பயந்து இன்று களத்தில் குதித்து விட்டாள். 
 
எண்ணத்தை ஆதியின் வீட்டு மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். கை தன் பாட்டில் வேலை செய்து கொண்டிருக்க, வரப்போகும் இந்த ஒரு மாதகால வாழ்க்கையும் எப்படி இருக்கும் என்று சிந்தனை ஓடியது.
 
கணவனின் பெற்றோர் மிகவும் அன்பாகவே நடந்து கொண்டார்கள். அதிலும் தனது மாமனார்… ஒரு இந்திய மருமகளுக்காக வெகுவாக ஏங்கி இருந்திருப்பார் போலும்!
 
அது அமைந்து போனதில் அவருக்கு அத்தனைக் குதூகலம். துளசியோடு வெகுவாக ஒன்றிப் போனார். அவளோடு பழங்கதைப் பேசுவதிலேயே பாதி நேரம் போயிருந்தது சுந்தரமூர்த்திக்கு.
 
வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவும் சிந்தனை அறுபட கையிலிருந்த கத்தரிக்காயை வைத்துவிட்டு முன்னே போனாள்.
 
‘கணவனுக்கு அதற்குள் வேலை முடிந்துவிட்டதா?! அப்படியே இருந்தாலும் காலிங் பெல்லை எதற்காக அடிக்கிறான்? உள்ளே வருவதுதானே?!’ எண்ணமிட்ட படி வெளியே வந்தவள் திடுக்கிட்டு நின்றாள்.
 
ஏனென்றால்… வாசலில் நின்றது அருண் குமார்! அவனை அப்போது அங்கே சற்றும் துளசி எதிர்பார்த்திருக்கவில்லை.
 
ஆனாலும் தன் திகைப்பை நொடிக்குள் சமாளிக்கப் பெண்ணுக்குத் தெரிந்தது. தன்னை வெகு சீக்கிரத்தில் மீட்டுக் கொண்டவள் மெல்ல புன்னகையை வருவித்துக் கொண்டாள்.
 
“வாங்க… வாங்க மிஸ்டர் அருண் குமார்.” அந்த மிஸ்டரில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாள் துளசி.
 
“உள்ள வாங்க, உட்காருங்க.” அவள் உபசரிப்பு பலமாக இருக்கவே ‌வந்தவன் மகிழ்ந்து போனான்.
 
“எப்பிடி இருக்கீங்க துளசி?”
 
“ரொம்ப நல்லா இருக்கேன், நீங்க எப்பிடி இருக்கீங்க?” புன்னகை முகத்தோடான குசல விசாரிப்பு.
 
“இன்னும் இந்த வீட்டிலேயே இருக்கீங்களே துளசி?” கவலையில் தோய்த்து, அக்கறைக் கலந்து வந்தது அருண் குமாரின் குரல். இப்போதும் துளசி அமைதியாக புன்னகைத்தாள்.
 
அந்த மந்தகாசப் புன்னகை அருண் குமாரின் எரியும் உள்ளத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டியது. இது தனக்கு வந்திருக்க வேண்டிய விருந்து!
 
வைக்கோல் போர் நாய் தான் உண்பதும் இல்லை, மற்றவரை உண்ண விடுவதும் இல்லை. இப்போது அருண் குமாரின் நிலை அதுவாகத்தான் இருந்தது!
 
துளசி என்ற ஒரு சாதாரண பெண்ணை இழப்பது அவனுக்கு ஒன்றும் பெரிய காரியமாக அப்போது தோன்றவில்லை.
 
ஆனால் அதே துளசி இப்போது வளமான ஒரு வாழ்க்கை வாழ்கிறாள் என்று அறிந்த போது அவனால் அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
 
அப்போது பார்த்து ஆதி நடக்க இருந்த திருமணத்தை நிறுத்த நடத்திய நாடகம் தெரிய வந்தபோது, அதை வாகாக பயன்படுத்திக் கொண்டான்.
 
நேராக ஆதி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வந்து துளசியிடம் அனைத்தையும் கொட்டி இருந்தான். விஷயத்தைக் கேட்டபோது அதிர்ந்த அவள் முகமே தனக்குப் பெருத்த வெற்றி என்று அருண் குமாருக்கு அறிவித்தது.
 
குதூகலித்த படிதான் அடுத்து வந்த நாட்களில் அவர்களைக் கண்காணித்தான். நம்பியின் திருமணத்தின் போது புதுமண தம்பதிகள் காட்டிய அன்னியோன்யம் அவனுக்கு அவ்வளவாக ருசிக்கவில்லை.
 
தனக்குக் கிடைத்த ஆதாரங்களை இன்னும் கொஞ்சம் ஊர்ஜிதம் செய்து கொண்டு மீண்டும் கிளம்பி வந்து விட்டான். ஆதி இப்போதும் வீட்டிலில்லை என்பது அவனுக்குத் தெரியும்.
 
“நான் அவ்வளவு சொன்ன பிறகும் இந்த வீட்டிலேயே இருக்கீங்கன்னா…” அருண் குமார் இப்போது பேச்சை நிறுத்தி எதிரில் இருப்பவளின் முகத்தை ஆராய்ந்தான். துளசி அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. புன்னகை மாறாத முகத்தோடு அப்படியே அமர்ந்திருந்தாள்.
 
“நம்ம ரெண்டு பேருக்கும் நடக்க இருந்த கல்யாணத்தை அந்த ஆதி திட்டம் போட்டுக் குலைச்சிருக்கான் துளசி.”
 
“ம்… புரியுது அருண் குமார்.” அந்த நிதானமான பதில் அவனுக்கு எதைச் சொன்னதோ, சட்டென்று தனது ஃபோனை எடுத்தான்.
 
“நீங்க என்னை இன்னும் முழுசா நம்பலைன்னு நினைக்கிறேன் துளசி, இதைக் கொஞ்சம் பாருங்க.” அவன் நீட்டிய ஃபோனில் ஒரு மனிதன் பேசிக்கொண்டிருந்தான்.
ஆத்ரேயன் தன்னை வந்து சந்தித்தது, பணம் கொடுத்தது, அருண் குமாரின் வீட்டார் வந்த வாகனத்தில் மோதச்சொன்னது… அத்தனையும் அங்கே ஆதார பூர்வமாக விளக்கப்பட்டது.
 
“இப்போ சொல்லுங்க துளசி… அந்த ஆதி நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையில எப்பிடி விளையாடி இருக்கான் பார்த்தீங்களா?”
 
“இதை எங்கிட்ட மட்டும் சொன்னாப் போதாதா அருண் குமார்? எதுக்கு அப்பாக்கிட்டப் போய் சொன்னீங்க?” என்னவோ சங்கரபாணிக்கு இந்த விஷயம் தெரிந்ததுதான் இப்போதைய தன்னுடைய மிகப்பெரிய கவலை என்பது போல கேட்டாள் துளசி.
 
“உங்கப்பாக்கும் இதெல்லாம் தெரியணும் துளசி.”
 
“எதுக்கு? எங்கப்பா செத்துப் போறதுக்கா?”
 
“ஐயையோ! என்ன வார்த்தைச் சொல்றீங்க?! சங்கரபாணி அங்கிள் நூறு வயசு வரை வாழணும்!”
 
“அன்னைக்கு இந்த அக்கறை உங்களுக்கு வரலையே அருண் குமார்!” துளசியின் குரலில் இப்போது லேசாக பிசிறடித்தது.
 
“என்னைக்கு?”
 
“நிச்சயதார்த்தத்தைச் சுலபமா நிறுத்திட்டுப் போனீங்களே…‌ அன்னைக்கு, அப்போ என்னோட அப்பா நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு விழுந்தாரு, அது உங்களுக்கும் தெரியும்.” குற்றம் சாட்டும் குரல் அது.
 
“அப்போ நான் துடிச்சுப் போயிட்டேன் துளசி.”
 
“துடிச்ச மாதிரி தெரியலையே!”
 
“நீங்க என்னோட நிலைமையையும் கொஞ்சம் சிந்திச்சுப் பார்க்கணும் துளசி, இந்தக் கல்யாணமே வேணாம்னு என்னோட குடும்பமே எதிர்க்கும் போது… என்னால என்னதான் பண்ண முடியும்?”
 
“அதான் உங்களால எதுவும் பண்ண முடியாதுன்னு விலகிட்டீங்க இல்லை, இப்போ எதுக்கு திரும்பத் திரும்ப வர்றீங்க?” அந்த வார்த்தைகளில் தொனித்த எரிச்சலை அருண் குமார் புரிந்து கொள்ள மறுத்தான்.
 
“அந்த ஆதி கெட்டவன்னு நீங்க புரிஞ்சுக்கணும்.” இப்போது சாத்தான் வேதம் ஓதியது.
 
“புரிஞ்சு? புரிஞ்சு என்னப் பண்ணணும் அருண் குமார்?”
 
“இந்த வாழ்க்கை உங்களுக்கு வேணாம் துளசி, என்னைக் கொல்லத் துணிஞ்சவனுக்கு உங்களைக் கொல்ல ரொம்ப நேரம் ஆகாது.”
 
“ஹா… ஹா… சமயத்துக்கு நீங்க கூட நல்லா காமெடி பண்ணுறீங்க அருண் குமார்.”
 
“துளசி?!”
 
“உங்களை வீட்டுக்குள்ள அழைச்சு உட்கார வெச்சு எதுக்காக இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்கேன் தெரியுமா?”
 
“…………….” இப்போது அருண் குமாரின் கண் இடுங்கியது. துளசியின் முகத்திலிருந்த புன்னைகையும் மறைந்து போக முகம் தீவிர பாவத்திற்குப் போனது.
 
“அந்த ஆதி நல்லவன்னு சொல்லப் போறீங்களா துளசி?” தன் மோனநிலைக் கலைய எதிரே இருந்தவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள் பெண்.
 
“இல்லைன்னு சொல்றீங்களா அருண் குமார்?” இத்தனை அழுத்தமாக துளசிக்கு பேச வருமா?!
 
“கண்டிப்பா இல்லை, ஏன்னா அவன் பார்த்த வேலை அப்பிடி! அதுக்கு எங்கிட்ட ஆதாரம் இருக்கு.”
 
“கொஞ்சம் மரியாதையா பேசலாமே அருண் குமார்.” கண்டிப்போடு சொன்னாள் ஆதியின் மனைவி.
 
“எனக்கு அப்பிடித் தோணலைங்க, எவ்வளவு ரௌடித்தனம் பண்ணி நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கான்? இந்நேரம் நீங்க நான் கட்டின தாலியோட என்னோட மனைவியா என் வீட்டுல இருந்திருக்கணும்!” 
 
துளசியின் முகம் இப்போது ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டது போல கசங்கிப் போனது. அந்த வார்த்தைகள் கூட அவளுக்கு வலித்தது.
 
“இந்த உண்மைகளை எல்லாம் நான் உங்கக்கிட்ட சொன்னப்போ உங்களுக்குக் கோபம் வரலையா துளசி? உண்மையைச் சொல்லுங்க.”
 
“நிறைய வந்துது.”
 
“ஆங்! வந்துதில்லை… அதைத்தான் நானும் சொல்லுறேன், அவன் மகா கெட்டவன், ரௌடி, அவனோட தேவையைப் பூர்த்தி செய்றதுக்காக எந்த எல்லைக்கும் போக தயங்க மாட்டான்.”
 
“ஆனா நீங்க சொல்ற அதே ரௌடித்தனத்துக்குப் பின்னாடி, எம்மேல ஒரு மிகப்பெரிய பாசம் இருக்குதே அருண் குமார், எங்கண்ணுக்கு அது மட்டுந்தான் இப்போத் தெரியுது.”
 
“புரிஞ்சுக்காம பேசுறீங்க துளசி நீங்க!”
 
“இல்லவே இல்லை… ஒரு வாரம் நிறுத்தி நிதானமா யோசிச்சு நான் புரிஞ்சுக்கிட்டது இது.”
 
“மண்ணாங்கட்டி! உங்க வாழ்க்கையையே அழிச்சிருக்கான் அந்த ராஸ்கல்!”
 
“போதும் நிறுத்துறீங்களா! உங்களுக்கு… ஏன் இந்த உலகத்துக்கே அவர் கெட்டவரா இருக்கலாம், ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் அப்பிடி இல்லை.”
 
“உங்க வாழ்க்கையையே கெடுத்திருக்கான் அந்த ஆதி.”
 
“அது அவரால முடியாது, அவரா எனக்கு அநியாயம் பண்ணணும்னு நினைச்சாக் கூட அவரால அது முடியாது.”
 
“ரொம்பத் தப்பான முடிவு எடுத்திருக்கீங்க துளசி.”
 
“இல்லை அருண் குமார், இப்பதான் சரியான முடிவு எடுத்திருக்கேன், சொல்லப்போனா… உங்களுக்குத்தான் அதுக்கு நான் தான்க்ஸ் சொல்லணும்.”
 
“புரியலை.”
 
“நீங்க இந்த விஷயத்தை எல்லாம் எங்கிட்டச் சொல்லாம விட்டிருந்தா எல்லாரையும் போல நானும் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்திருப்பேன், அவரோட அன்பு எனக்குப் புரியாமலேயே போயிருந்திருக்கும்.”
 
“…………”
 
“ஆனா இப்போப் புரியுது, அவங்க பண்ணினது தப்பாவே இருந்தாலும் கூட… அந்தத் தப்புக்குப் பின்னாடி மறைஞ்சிருக்கிறது எம்மேல அவங்களுக்கிருக்கிற அன்பு மட்டுந்தான்!”
 
“துளசி நீங்க…”
 
“அதான் துளசியே தெளிவா சொல்றாளே அருண் குமார்.” நம்பியின் குரலில் பேசிக்கொண்டிருந்த இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.
 
வாசற் கதவிற்குச் சற்று அப்பால் நம்பி நின்றிருக்க, அவனுக்கு அருகே ஆதி நின்றிருந்தான். நம்பியின் முகத்தில் தெரிந்த கோபத்தின் சாயல் கூட ஆதியின் முகத்தில் தெரியவில்லை. நிதானமாக நின்றிருந்தான்.
 
“இதுக்கு மேல உங்களுக்கு அவளால விளக்க முடியாது.” இப்போது கேலியாக நம்பி சொல்ல சோஃபாவில் இருந்த இருவரும் எழுந்து நின்று விட்டார்கள். 
 
இருவரது மனநிலையும் வேறு வேறாக இருந்தது. அருண் குமார் ஆதியை கொலை வெறியோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
 
துளசிக்கு மனது திக்கென்றது!
 
இவர்கள் எப்போது வந்தார்கள்?! இவனையெல்லாம் எதற்காக வீட்டில் உட்கார வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறாய் என்று கணவன் சண்டைப் போடுவானோ?
இவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே நம்பி உள்ளே வந்தான். அருண் குமாரின் அருகே போனவன் குரலைத் தணித்துப் பேச ஆரம்பித்தான்.
 
“இங்கப் பாருங்க அருண் குமார், கெட்டவன் கெட்டவன்னு வார்த்தைக்கு வார்த்தைச் சொன்னீங்க, ஆமா… அவன் ரொம்பக் கெட்டவந்தான், அந்தக் கெட்டவன் இப்போ கொலை வெறியில இருக்கான், அதுக்குள்ள நீங்க சீக்கிரமா கிளம்பிடுங்க.”
 
“நம்பி, இங்க என்ன நடக்குதுன்னு…”
 
“அட ஆண்டவா! இவன் திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கிறானே!” அருண் குமாரை குறுக்கிட்ட நம்பி அவன் தோள் மேல் கையைப் போட்டு அவனை வெளியே அழைத்துக் கொண்டு போனான்.
 
ஆதியை கடந்து செல்லும் போது அருண் குமாரின் கண்கள் கோபத்தோடு அவனை முறைத்தது.
 
“சரி சரி வாங்க பாஸ்…” அருண் குமாரை இழுத்துக் கொண்டு நம்பி வீதிக்குப் போய்விட்டான்.
 
ஆதி நிதானமாக வீட்டுக்குள் வந்தவன் கையிலிருந்த ஃபைலை காஃபி டேபிளில் போட்டான். துளசிக்கு லேசாக நடுங்கியது.
 
இப்போது கணவனுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது அவள் கடமை அல்லவா?
 
“நான்… வந்து…”
 
“என்ன?”
 
“இல்லை… மனசுல இருக்கிறதைச் சொல்லிட்டா…”
 
“அதுக்காக?” அவன் கோபமாக இடைமறிக்க, துளசி பயந்து போனாள்.
 
“எங்கிட்டச் சொல்ல வேண்டிய டயலாக்கை எல்லாம் அவங்கிட்டச் சொல்லுவியா நீ?!”
 
“டயலாக்கா?!” திருதிருவென விழித்த மனைவி அடுத்த நொடி ஆதியின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.
 
“இப்பதான் உனக்கு இந்த ஆதியை புரிஞ்சுதா? என்னோட லவ் ஐப் புரிஞ்சுக்க உனக்கு இவ்வளவு நாள் ஆச்சா?” ஒவ்வொன்றாக‌ கேட்டபடி அவளை இன்னும் இறுக்கினான் ஆதி.
 
“இல்லை… அப்பிடி…”
 
“பேசாதடி! கொன்னுடுவேன்!”
 
“நான் சொல்றதைக் கொஞ்…”
 
“நீ பேசினதெல்லாம்‌ போதும்!” அவளை மேற்கொண்டு பேச விடாமல் அவளோடு சோஃபாவில் சரிந்தான் ஆதி.
 
“இல்லைங்க…” வேகத்தோடு அவள் கழுத்தில் புதைந்த அவன் இதழ்கள் அவள் பேச்சைப் பாதியில் நிறுத்தின. 
 
அந்த சங்குக் கழுத்தில் கிடந்த தாலிச்சரடு அவனுள் இன்னும் ஆசைத் தீயை மூட்டி விட ஆதி இன்னும் அவளுக்குள் புதைந்தான். அதே நொடி…
 
“ஆதீ…” பாட்டியின் குரல்! அத்தனையும் மொத்தமாக வடிந்து போக சட்டென்று எழுந்து உட்கார்ந்தான் ஆதி. வாய் பொத்திச் சிரித்த மனைவி அவசர அவசரமாக மாடிக்கு ஓடி விட்டாள்.
 
***
 
ப்ரிட்டிஷ் ஏர்வேஸுக்கு சொந்தமான அந்த விமானம் லண்டன் ஹீத்ரோவை நெருங்கிக் கொண்டிருந்தது. 
 
அதுவரை ஆட்டோபைலட் மோடில் இருந்த விமானத்தை இப்போது முழுதாக தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தான் அந்த இளம் விமானி.
 
கட்டுப்பாட்டு மையம் சுறுசுறுப்பாக அந்த விமானத்தற்குரிய ஓடு பாதையில் ஏற்கனவே அந்த விமானத்தை வழிநடத்தி இருக்க, மெதுமெதுவாக தன் உயரத்தைக் குறைத்துக் கொண்டது விமானம்.
 
“தௌசன்ட்… செக்ட், ஃபைவ் ஹன்ட்ரட்… செக்ட்.” கட்டுப்பாட்டு மையம் விமானம் பறக்கும் உயரத்தைப் படிப்படியாக குறைக்க, அதைத் தான் சரிவர செயற்படுத்திக் கொண்டிருப்பதை ‘செக்ட்’ என்று கூறுவதன் மூலமாக உறுதிப்படுத்திக் கொண்டிருந்தான் விமானி.
 
“மினிமம்… செக்ட், ஹன்ட்ரட்… ஃபிஃப்டி… ஃபோர்ட்டி… தெர்ட்டி… ட்வென்ட்டி… டென்…” படிப்படியாக நிலமட்டத்தில் இருந்த தன் உயரத்தைக் குறைத்துக் கொண்ட விமானம் சர்ரென்று தரையைத் தொட்டது.
 
ஒரு குலுக்கலோடு தரையைத் தொட்ட விமானத்தை கண்கள் பிரமிக்க பார்த்திருந்தாள் துளசி.
கைகள் ஆதியின் கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டன.
 
முதல் விமானப்பயணம். அதுவும் கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமான பிரயாணம்.
துளசி களைத்துப் போனாள். இதமாக அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்ட கணவன் அவள் உச்சியில் முத்தம் வைத்தான்.
 
“டெர்மினல்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வீட்டுக்குப் போகலாம் துளசி.”
 
“ம்…” 
 
ஃப்ளைட் லான்ட் ஆன பிறகும் விமானம் அங்குமிங்கும் ஒரு பதினைந்து நிமிடங்கள் அலைந்து திரிய துளசி பொறுமை இழந்தாள்.
 
“எதுக்குங்க இவ்வளவு டைம் எடுக்கிறாங்க?”
 
“பார்க் பண்ண இடம் கிடைச்சிருக்காதுடா.”
 
“என்ன?!” அவள் கேட்ட தினுசில் சிரித்தான் ஆதி.
 
“நம்ம வீட்டுக்கு முன்னாடி பார்க் பண்ணச் சொல்லுங்களேன், நமக்கும் ஈஸியா இருக்கும்.” குறும்பாக அவள் சொல்ல, அதை அங்கு நின்றிருந்த ஏர் ஹாஸ்டஸை அழைத்துச் சொன்னான் ஆதி. பரிவோடு துளசியை பார்த்துச் சிரித்த பெண்,
 
“சாரி மேடம்.” என்று ஆங்கிலத்தில் மிழற்றியது.
அன்றைய லண்டனின் வானிலை துளசிக்கு சாதகமாக இருந்தது.
 
மிதமான குளிரோடு சுள்ளென்ற இளங்காலைச் சூரியன் உடம்பைத் தாக்க கணவனோடு நன்றாக ஒட்டிக் கொண்டாள். 
 
மனைவியை ஓரிடத்தில் ஓய்வாக உட்கார வைத்துவிட்டு அனைத்து ஏர்போர்ட் சம்பிரதாயங்களையும் முடித்தான் ஆதி.
 
“ஒரு கப் காஃபி குடிக்கிறயா துளசி?”
 
“வேணாங்க, வீட்டுக்கே போயிடலாம்.” 
தாமஸ் காரோடு வந்து தனது பாஸிற்காக காத்திருந்தான். கையில் பூங்கொத்து வேறு. துளசியை பார்த்தவுடன் அவன் முகமன் கூறி வரவேற்க அழகாகப் புன்னகைத்தது பெண்.
 
“மேடம் ரொம்ப அழகா சூப்பரா இருக்காங்க பாஸ்!” ஆதியின் காதில் கிசுகிசுத்த தாமஸின் குரலில் கொள்ளை மகிழ்ச்சி. ஆதியும் சிரித்துக் கொண்டான்.
 
“என்னவாம்?” இது துளசி. 
 
“மேடம் ரொம்ப அழகா இருக்கீங்களாம்.” சத்தமாக ஆதி சொல்ல தாமஸ் வெட்கத்தோடு சிரித்தான்.
 
“தான்க் யூ தாமஸ்.” இயல்பாக பெண் நட்புக்கரம் நீட்ட, தன்னோடு பேசுவார்களா மாட்டார்களாம் என்ற தயக்கத்தில் இருந்த தாமஸ் அதன் பிறகு நிறுத்தாமல் பேச ஆரம்பித்து விட்டான்.
 
“உங்களுக்குத் தெரியாது மேடம், பாஸ் இங்க இருந்து கிளம்பும் போது எவ்வளவு சங்கடத்தோட கிளம்பினாங்க தெரியுமா? ஆனா அப்போ இப்பிடியெல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியாதே?!”
 
“எப்பிடி நடக்கும்னு?” இதுவரை ஆதியின் அருகே நடந்து வந்த தாமஸ் துளசியின் பக்கமாக வந்து விட்டான். அவளோடு பேச அதுதான் இலகுவாக இருந்தது அவனுக்கு.
 
“எங்க பாஸுக்குன்னு பொறந்த தேவதையை மீட் பண்ணத்தான் எங்க பாஸ் இன்டியாக்கு போறாங்கன்னு!” தாமஸின் பேச்சில் ஆதி மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான்.
 
“உங்களுக்கு ஏத்த ஆள்தான்.” துளசியின் பதிலில் ஆண்கள் இருவரும் சிரித்தார்கள்.
 
“ட்ரைவ் பண்ணுறீங்களா பாஸ்?”
 
“இல்லை தாமஸ், நீயே பண்ணு.”
 
“ஓகே பாஸ்.” தாமஸ் அந்த ப்ளாக் ஆடியை நகர்த்த மனைவியோடு பின் சீட்டில் அமர்ந்து கொண்டான் ஆதி.
ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து கென்ட் அறுபது மைல் தொலைவில் இருந்தது. ஒரு மணி நேரப்பயணம். தாமஸும் துளசியும் பேசியபடி இருக்க, ஆதி சீட்டில் தலையைச் சாய்த்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
 
வீடு இவர்களின் வருகைக்காக கோலாகலமாக தயாராகி இருந்தது. சுந்தரமூர்த்தி இவர்களுக்காக வாசலிலேயே காத்திருந்தார். 
 
மார்க்ரெட் கூட மூத்த மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு வந்து வீட்டிலேயே காத்திருந்தார்.
தாமஸ் காரை நிறுத்தியதுதான் தாமதம், ஆதேஷ் அவசரமாக வந்து தன் தம்பியைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
 
“கன்கிராட்ஸ் டா! கல்யாணத்துக்கு வரமுடியலை, சாரி ஆதி.”
 
“இட்ஸ் ஓகே.” தன் அண்ணாவிடமிருந்து இப்படியொரு வரவேற்பை எதிர்பார்க்காத ஆதி திகைத்தே போனான். தாமஸ் திறந்த வாயை மூடவில்லை!
 
“ஹலோ துளசி.”
 
“ஹலோ.” துளசிக்கும் ஆதேஷின் செய்கைக் கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள். 
 
உறவு என்ற வார்த்தைக்கு ஒரு நிலையான அர்த்தத்தை வரையறுக்க முடியாது போலும்! காலத்துக்குக் காலம் அதன் வர்ணத்தை மாற்றிக் கொள்கிறதே!
 
அன்றைக்கு முழுவதும் ஆதேஷும் அவன் மனைவியும் பெற்றோர் வீட்டில்தான் இருந்தார்கள்.
 
ஆதேஷின் மனைவியால் பேசக்கூட முடியவில்லை. அங்கே இருந்த அந்த சொற்ப நேரத்தில் இரண்டு முறை வாந்தி எடுத்தாள். துளசிக்கே பரிதாபமாக இருந்தது.
சுந்தரமூர்த்தியை கையால் பிடிக்க முடியவில்லை. ஆதியும் துளசியும் வந்துவிட்ட சந்தோஷத்தில் அவர் சத்தம் வழமையை விட இன்னும் கொஞ்சம் அதிகரித்திருந்தது.
 
விஸ்வநாதனை அழைத்து விவரம் சொன்னார். துளசிக்கு வீட்டையும் பின்னால் இருந்த கார்டனையும் சுற்றிக் காட்டினார்.
 
“நம்ம ஃபார்ம் கொஞ்சம் தூரத்துல இருக்கு துளசி, அதை ஆதி இன்னைக்குக் கூட்டிட்டுப் போய் காட்டுவான்.”
 
“சரி மாமா.” 
 
“டயர்டா தெரியுற, போய் ரெஸ்ட் எடும்மா.” மாமனார் சொன்னதுதான் தாமதம், கணவன் காட்டியிருந்த அறைக்கு வந்து விட்டாள் துளசி. இதுவரை கணவனின் அறையாக உபயோகத்தில் இருந்தது, இனிமேல் அவர்களது.
 
ஆதி எங்கோ வெளியே போயிருந்தான். கட்டிலில் சாய்ந்தவள் களைப்பு மிகுதியால் உறங்கிவிட்டாள். அதன் பிறகு ஆதேஷ் மனைவியோடு கிளம்பிவிட அவர்களோடு மார்க்ரெட்டும் இணைந்து கொண்டார்.
 
அந்திப் பொழுதில் மனைவியை அழைத்துக்கொண்டு அந்தப் பெரிய ஃபார்மை சுற்றிக் காட்டினான் ஆதி. துளசி பிரமித்துப் போனாள். 
 
இத்தனைப் பெரிய தொழிலையா தன் கணவன் அத்தனைச் சுலபமாக தாரை வார்த்தான்?!
 
இத்தனையையும் விட்டுவிட்டா தனக்காக அங்கே வந்து ஒன்றுமில்லாமல் உட்கார்ந்திருக்கிறான்?! 
 
துளசியின் கண்கள் கலங்கிப் போக ஆதி புன்னகைத்தான். இத்தனைக்கும் இப்போது அவர்கள் பார்த்தது பாதி ஃபார்ம்தானாம்.
 
“எனக்கு இதெல்லாம் உன்னைவிட பெருசில்லை துளசி.” சாதாரணமாக கணவன் சொன்னாலும் துளசியால் அவன் இழப்பின் அளவைப் புரிந்துகொள்ள முடிந்தது.
 
இன்றைக்கு இரவு இதைப்பற்றி கணவனிடம் கட்டாயம் பேச வேண்டும் என்று முடிவு கட்டிக்கொண்டாள். அவள் எதிர்பார்த்த இரவும் வந்தது. 
 
“ஹேய் துளசி… திஸ் இஸ் மை ரூம்.” அவளைக் கட்டியணைத்தது இரு கரங்கள். காதோடு கொஞ்சியது ஒரு குரல். 
 
“இந்த ரூம்ல துளசியோட ரொமான்ஸ் பண்ணணும்னு ரொம்ப நாளா ஆசை.” 
 
“பண்ணுங்களேன்… ஆனா அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசணும்.” துளசி இத்தனை கறாராக பேசி ஆதி இதுவரைக் கேட்டதில்லை.
 
“என்ன துளசி?”
 
“சிதம்பரத்துல நாம வாங்கி இருக்கிற இடம் பத்தாது, இன்னும் நிறைய வாங்கணும்.”
 
“எதுக்குடா? முதல்ல சின்னதா…”
 
“இல்லையில்லை… இன்னும் நிறைய இடம் வாங்கி பெருசா பண்ணணும், உங்கக்கிட்ட இருக்கிற பணம் பத்தலைன்னா என்னோட நகை, சென்னையில இருக்கிற வீடு எல்லாத்தையும் வித்துடலாம்.”
 
“ஏய்! என்ன ஆச்சு உனக்கு?!” இப்போது துளசியின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
 
“எதுக்கு துளசி இப்போ அழுறே?”
 
“எனக்கு அவ்வளவு வருத்தமா இருக்கு! எப்பிடி இருக்க வேண்டிய நீங்க, அங்க வந்து… எனக்கு காலெல்லாம் பிடிச்சு விட்டு…” பேச முடியாமல் விம்மினாள் பெண்.
 
“ஏய்! இங்க இருக்கிறது பிஸினஸ், அங்க இருக்கிறது பொண்டாட்டி, ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கும்மா.”
 
“நீங்க என்ன வேணா சொல்லுங்க, இது உங்களுக்கு வேணாம், ஆனா அங்க கண்டிப்பா‌ பெருசா பண்ணணும், இதைவிட பெருசா பண்ணணும்.”
 
“பண்ணிட்டாப் போச்சு, இதுக்குப் போய் யாராவது அழுவாங்களா?”
 
“நான் அழலை.” 
 
“நல்லதாப் போச்சு.”
 
“பேசி முடிச்சுட்டேன், இனி நீங்க ரொமான்ஸ் பண்ணலாம்.”
 
“ஹா… ஹா… இப்ப பண்ணலாமா…” மனைவியை இறுக அணைத்துக் கொண்டவன் மனம்விட்டுச் சிரித்தான்.
 
“பாட்டி வரமாட்டாங்களே துளசி?”
“மாட்டாங்க.” அவன் கேள்வியில் துளசியும் சட்டென்று சிரித்து விட்டாள்.
 
“இந்த ஆதி உன்னோட நிச்சயதார்த்தத்தை நிறுத்தினது தப்பில்லையா துளசி?” ஒரு கூரிய பார்வையோடு வந்த கணவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் இதழ்களில் லேசாக முத்தம் வைத்தாள் துளசி!
 
“அந்த தப்பைப் பண்ணின ஆதி மேல உனக்குக் கோபம் வரலையா துளசி?” இப்போதும் பதிலாக இன்னொரு இதழ் முத்தமே கிடைத்தது!
 
“அன்னைக்கு மட்டும் உங்கப்பாக்கு ஏதாவது ஆகி இருந்திருந்தா?” மீண்டும் ஒரு முத்தம்!
 
“நான் தப்பானவனா துளசி?” மீண்டும் முத்தம்!
 
“இந்த ஆதி சுயநலவாதியா துளசி?” இன்னுமொரு முத்தம்!
 
முத்தம்… முத்தம்… முத்தம்!
 

Leave a Reply

error: Content is protected !!