நீயாக நான், நானாக நீ

ei2J6BS36982-a33114fb

நீயாக நான், நானாக நீ

 

அத்தியாயம் 7

தூக்கத்தில் எசகுப்பிசகாக படுத்திருந்த இருவரும், அலாரத்தின் ஒலியில் கண்விழிக்க, மற்றவரின் நிலை கண்டு அடித்து பிடித்து எழுந்தமர்ந்தனர்.

“ஹே ஸ்கை ஹை… ஒழுங்கா படுக்க மாட்டீயா… இப்படி தான் பப்பரப்பான்னு படுப்பீயா… இன்னொரு தடவ இப்படி படுத்த அவ்ளோ தான்…” என்று பூமி ‘அவளின்’ மானம் காக்க ஆகாஷிடம் கோபப்பட்டாள்.

“ஓய்… நீயும் அப்படி தான் படுத்துருந்த… என்ன மட்டும் சொல்லாத…” என்று கூறிக்கொண்டே எழுந்தவன் அவனின் அறைக்குச் செல்ல முற்பட, “ஹே நில்லு நில்லு… நேத்து சொன்னது தான் இன்னைக்கும்… ஒழுங்கா கண்ண மூடிட்டு குளிக்கணும்…” என்று பூமி கூறினாள்.

“அதெல்லாம் தெரியும் போடி…” என்று அவளை அவளின் அறைக்குள் தள்ளினான்.

இருவரும் குளித்து வர, முதல் நாள் போலவே அவனை தயாராக சொல்ல, அவனோ முகத்தை அவளிடம் தந்துவிட்டு அமர்ந்து விட்டான்.

பூமி காரியமே கண்ணாக மேக்-அப் செய்து கொண்டிருக்க, ஆகாஷிற்கு தான் அவளின் அருகாமை ஏதோ செய்தது. முதல் நாள் இருந்த பரபரப்பில் இதை சரியாக (!!!) கவனிக்கவில்லை. இன்றோ அவளின் நெருக்கத்தில், அவனிற்கு தான் வியர்த்தது.

“ஹே ஸ்கை ஹை உனக்கு ஏன் இப்படி வேர்க்குது… ஃபேன் ஃபுல்லா தான இருக்கு..” என்று கூறியவாறு துண்டை கொண்டு துடைக்கச் செல்ல, வேகமாக அதை அவளிடமிருந்து பறித்தவன், அவனே துடைத்துக் கொண்டான்.

ஒருவழியாக அவனின் மேக்-அப் முடிய ‘ஒரு நாளுக்கே இப்படியா… இனி தினமும் இத எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலையே…’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான் ஆகாஷ்.

அதன்பின் நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க, அசோக் பூமியை அழைத்துச் செல்ல வந்தான். ஆயிரமாவது முறையாக அவள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினான் ஆகாஷ்.

“ஹே கருவாயா… நிறுத்து நிறுத்து… என்னமோ இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் ஆஃபிஸ் போற மாதிரி இவ்ளோ அட்வைஸ் பண்ற… எனக்கு ஏற்கனவே ரெண்டு மாசம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு…” என்றாள்.

பின், அசோக்கிடமும் அவளை பார்த்துக் கொள்ள கூறிவிட்டு, அவர்களை வழியனுப்பினான்.

பூமி செல்லும்முன், “என்ன மட்டும் சொன்ன… நீயும் ஒழுங்கா உன் ரோல்ல ப்ளே பண்ணு… நல்லா நியாபாகம் வச்சுக்கோ உனக்கு ரெண்டு மாச அனுபவம் தான்… அங்க போய் எக்ஸ்ட்ராடினரியா வேலை செய்யுறேன்னு மாட்டிக்காத…” என்று அவள் பங்கிற்கு அறிவுரை கூறிவிட்டே கிளம்பினாள்.

அசோக் வண்டியை பார்க் செய்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு செல்ல, பூமி ஆகாஷின் அலுவலகத்திற்குள் நுழைந்தாள். அவள் நுழையும் போதே ஆகாஷின் மற்ற நண்பர்கள், அவளை சூழ்ந்து கொண்டனர்.

“ஹே ஆகாஷ்… என்ன மேன் நேத்து லீவ் போட்டுட்ட…”

“அதான எப்பவும் தேவையில்லாம லீவ் எடுக்காதவன், நேத்து சொல்லாம லீவ் எடுத்துட்ட…”

“ஆர் யூ ஓகே…?” என்று ஆளாளுக்கு இடைவிடாமல் பேச, பூமிக்கு அவர்களை சமாளிப்பது சற்று சிரமமாக தான் இருந்தது.

அதில் ஒருவன், அவனை அணைப்பது போல் வர, பூமி பயந்து போய் இரு அடிகள் பின்னால் நகர, மற்றவர்கள் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.

‘அச்சோ இவனுங்க வேற ஒரு மாதிரி பாக்குறாங்களே… இப்போ என்ன சொல்லி சமாளிக்குறதுன்னு தெரிலயே…’ என்று பூமி யோசிக்கும் வேளையில், அவளின் உதவிக்கென அங்கு வந்தான் அசோக்.

“ஹே அவன விடுங்க டா… அவனே உடம்பு முடியாம இருக்கான்…” என்று கூறி ஒருவாறு சமாளித்தான்.

மற்றவர்கள் உள்ளே செல்ல, பூமியை அணைக்க வந்தவன் மட்டும் அவளை குறுகுறுவென பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.

‘இப்போ எதுக்கு அந்த பாடி பில்டர் ஒரு மாதிரி லுக் விட்டுட்டு போறான்…’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, “அதுக்குள்ள உன்ன யாரு உள்ள வர சொன்னா…” என்று அசோக் அவளின் காதருகே முணுமுணுத்தான்.

“நீ வர வரைக்கும் அங்கயே நிக்க சொல்றீயா… அந்த செக்யூரிட்டி வேற ஒரு மாதிரி பாத்தான்… அதான் உள்ள வந்தேன்.. இப்படி மொத்தமா வந்து அட்டாக் பண்ணுவாங்கன்னு கனவா கண்டேன்…” என்று பூமி புலம்பினாள்.

“அவங்க எல்லாரும் எங்க பிரெண்ட்ஸ்…” என்று கூறி அவர்களைப் பற்றிய சிறிய அறிமுகத்தையும் கூறினான்.

“அந்த பாடி பில்டர் பேரு என்ன…” என்று பூமி கேட்கவும், அவள் யாரை கூறுகிறாள் என்று பார்த்தவன் அங்கு நின்று கொண்டிருந்தவனைக் கண்டு, “ஓ அவனா… அவன் பேரு சோனு… ஊரு மும்பை… இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் இங்க ஜாயின் பண்ணான். அவ்ளோவா யாருக்கிட்டயும் பேசாம தனியா இருந்தான்… ஆகாஷ் தான் அவனோட ஃபர்ஸ்ட் பேசினான்… அப்பறம் நாங்களும் பேச, அவனும் இப்போ எங்க கேங்ல ஒருத்தனாகிட்டான்.” என்று கூறினான்.

“ரொம்ப பெருமையான வரலாறு…” என்று உதட்டை சுழித்தாள் பூமி.

அடுத்த சில நிமிடங்களில், அந்த இடமே பரபரப்பாக, பூமி அசோக்கை பார்க்க, அவனும் புரியாமல், அங்கு பதட்டமாக வந்து கொண்டிருந்தவனை நிறுத்தி விசாரித்தான்.

“ஆபத்து இன்னைக்கு ஆஃபிஸ் வந்துருக்கு டா…” என்றான் அவன்.

உடனே அசோக்கும் வேகவேகமாக அவனிடத்தில் அமர்ந்து கணினியை உயிர்பித்தான். பூமியோ எதுவும் புரியாமல் நின்று கொண்டிருக்க, அவளைக் கண்ட அசோக், அவளை அழைத்து, “சீக்கிரம் வந்து சிஸ்டம் ஆன் பண்ணு… அந்த குடுமி மண்டையன் வந்தா, இன்னும் சிஸ்டம் கூட ஆன் பண்ணலையான்னு அரை மணி நேரம் பக்கம் பக்கமா பேசி உசுர வாங்குவான்…” என்றான்.

பூமியும் கணினியை உயிர்பித்தவாறே, “யாரு அது ‘குடுமி மண்டையன்’..?” என்று வினவினாள்.

அசோக், “அது… எங்க மேனேஜர் தான்…” என்று அவரைப் பற்றி கூறி முடிக்கவும், அவனால் ‘குடுமி மண்டையன்’ என்று அழைக்கப் பட்டவர், உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அவர் வந்ததும் அந்த இடமே அமைதியாக இருக்க, அந்த அமைதியை கிழித்துக் கொண்டு வந்தது அந்த சத்தம்.

“மாதத்தில் ஒரு முறை தலையைக் காட்ட வேண்டியது…
கண்ணில் படுபவர்களை எல்லாம் கேள்வி கேட்டு படுத்த வேண்டியது…
இந்த லட்சணத்தில் மாதம் பிறந்தால் லட்சத்தில் சம்பளம் வேறு…
கேட்டால் மேனேஜர் என்று பீற்றிக் கொள்வது…”
என்ற சத்தம் வர அனைவரும் சுற்றிலும் பார்த்தனர்.

அசோக்கும் அவர்களை போலவே பார்த்துக் கொண்டிருக்க, அவனின் தோளைத் தட்டிய பூமி, அவனின் அலைபேசியைக் காட்டினாள்.

“ஐயையோ… இதுலயிருந்து தான் சத்தம் வருதா… எவன் பார்த்த வேலைன்னு தெரியலையே…” என்று அருகிலிருக்கும் நண்பர்களை பார்க்க, அனைவரும் அவனை பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தனர்.

“அட பரதேசிங்களா…” என்று திட்டிக்கொண்டே திரும்பியவன், எதிரில் நின்றிருந்த குடுமி மண்டையனை கண்டு முழித்தான்.

“வாட் தி ஹெல் இஸ் திஸ், அசோக்..?” என்று அந்த ‘குடுமி மண்டையன்’ கோபமாக கத்த, பூமியோ அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை, அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டாள்.

அவளையும் முறைத்தவர், “அசோக் அண்ட் ஆகாஷ் கம் டூ மை கேபின் இம்மிடியட்லி…” என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் அங்கிருந்து சென்றதும், அனைவரும் அசோக் அருகே வந்து, “தேங்க்ஸ் டா அசோக்… இன்னைக்கு நீ தான் எங்கள அந்த ஆளுக்கிட்டயிருந்து காப்பாத்த போற… உன் தியாக மனப்பான்மை யாருக்கும் வராது டா மச்சான்…” என்று ஒவ்வொருத்தரும் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல பேச, “தியாகமெல்லாம் நானா பண்ணனும் டா… என்ன தள்ளிவிட்டிட்டு, அதுக்கு பேரு தியாகமாம்ல… போங்க போங்க எல்லாரும் அவங்கவங்க வேலைய பாருங்க… இன்னைக்கு அந்த குடுமி மண்டையனுகிட்ட மாட்டிட்டு எந்த நிலமைல வெளிய வரப்போறேனோ…” என்று புலம்பியபடி அவரின் அறைக்குச் செல்ல, அவனைத் தொடர்ந்து பூமியும் சென்றாள்.

*****

பூமி எப்போதும் செல்லும் அலுவலக பேருந்திற்காக, அதன் நிறுத்துமிடத்தில் ஆகாஷ் காத்துக் கொண்டிருக்க, அவனை யாரோ உற்றுப் பார்ப்பது போல தோன்றியது. சுற்றிலும் பார்க்க, அங்கு சற்று தொலைவிலிருந்து ஒருவன் அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அப்போது பூமி கூறிய எச்சரிக்கைகள் நினைவிற்கு வர, குனிந்து ஆடை எங்கும் விலகியிருக்கிறதா என்று பார்த்து சரி செய்தான். இப்போதும் அந்த பொறுக்கியின் பார்வையில் மாற்றமில்லாததால், அவனை முறைத்து விட்டு, சற்று தள்ளி அவனின் கண்களுக்கு தென்படாதவாறு நின்று கொண்டான்.

‘ச்சே நிம்மதியா நிக்க விடுறானுங்களா… பொறுக்கிங்க…’ என்று மனதிற்குள் திட்டியவன், ‘ஒரு நாளைக்கே இப்படி இருக்கே, இந்த பொண்ணுங்க எப்படி தான் இப்படி மறைஞ்சு மறைஞ்சு வேலைக்கு போயிட்டு வராங்களோ…’ என்று சிந்திக்கும் போதே அவனின் பேருந்து வந்தது.

முதல் நாளே ரூபாவிடம் அவனும் அதே பேருந்தில் வருவதாகக் தகவல் தெரிவித்ததால், அவன் பேருந்தில் ஏறியதும், ரூபா கையசைக்க, அவனும் அவளின் அருகில் அமர்ந்து கொண்டான்.

இன்னமும் பூமி கூறியதை நம்பாத ரூபா, “உண்மையிலேயே நீங்க பூமி இல்லயா…” என்று அவனிற்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுக்க, லேசாக சிரித்தவன், “நீ வேணா செக் பண்ணி பாரு… உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்சத எங்கிட்ட கேளு… அதுக்கு கரெக்ட்டா பதில் சொல்லிட்டேனா நான் தான் பூமி… இல்லனா நான் பூமி இல்ல… என்ன ஓகேவா…” என்றான்.

“நீங்க வேணும்னே தப்பா பதில் சொன்னா…” என்று ரூபா கேட்க, “இதுக்கு மேல என்னால யோசிச்சு ஐடியா சொல்ல முடியாது மா… என்ன விட்டுடு…”என்று ஆகாஷ் கெஞ்ச, “சரி போனா போகுது ரொம்ப கெஞ்சுறதால விடுறேன் அண்ணா” என்று ரூபாவும் விட்டு விட்டாள்.

ரூபாவின் ‘அண்ணா’ என்ற விளிப்பில் ஆகாஷும் சகஜமாக, இருவரும் அந்த பேருந்து பயணம் முழுவதும் பேசிக் கொண்டே இருந்தனர். ரூபா, அவர்களின் அலுவலகத்தை பற்றியும் கூறினாள். பூமியின் மற்ற தோழிகளின் பெயர்களை கூறியவள், அவர்களை நேரில் அறிமுகப் படுத்துவதாகக் கூறினாள்.

இப்படியே பேசியபடியே அந்த அரை மணி நேரத்தை கடத்தியிருக்க, அவர்களின் அலுவலகமும் வந்தது. இருவரும் இறங்கியதும் அவர்களை சுற்றி வளைத்தனர் அந்த மூவர் கூட்டணி. அவர்கள் யாரென்று தெரியாமல் ஆகாஷ் முழிக்க, ஏதோ சொல்ல வந்த ரூபாவை பேசக் கூட விடாமல், “ஹலோ மேடம், எங்களயெல்லாம் நியாபகம் இருக்கா… இல்ல ஒரே நாள்ல எங்கள மறந்துட்டியா…” என்றாள் ஒருத்தி.

“அது எப்படி நியாபகம் இருக்கும்… அவ லீவு போட்டதே அவ ஆளு கூட டைம் ஸ்பெண்ட் பண்ண தான…” என்றாள் மற்றொருத்தி.

‘ஆளா…’ என்று ஆகாஷ் குழப்பமாக ரூபாவை பார்க்க, அவளோ அவர்களை தடுக்கும் நோக்கத்தோடு ஏதோ சொல்ல வர, அவர்களா அவளிற்கு செவி சாய்ப்பார்கள்…

“ஹே என்ன டி இந்த முழி முழிக்குற… ஒரு வேள உன் மாம்ஸ் ஏதாவது ரொமான்டிக்கா பண்ண விஷயத்த எங்ககிட்ட இருந்து மறைக்குறீயா…” என்று முதலாமாவள் கேட்க, ‘மாம்ஸா… அப்போ இதுங்க என்ன பத்தி தான் பேசுதுங்களா…’ என்று அதிர்ந்து போய் ரூபாவை பார்க்க, அவளோ மனதிற்குள், ‘ஐயோ… அவர அவருக்கிட்டயே கலாய்க்குதுங்களே… இது எங்க போய் முடியப்போகுதோ…’ என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

“ஓய் அங்க என்ன பார்வை… ஒழுங்கா நீயா எங்ககிட்ட சொல்றீயா… இல்ல உன் மாம்ஸ் கிட்ட நாங்களே கேட்டுகவா…” என்று மிரட்டினர்.

என்ன சொல்வதென்று தெரியாமல் திணறிய ஆகாஷ், தங்கள் பெற்றோரிடம் கூறிய அதே காரணத்தை இவர்களிடமும் கூறினான். “அது… ஆகாஷுக்கு ஃபீவர்…” என்று அவன் முடிக்கும் முன்னே, “பாருங்க டி… இத்தன நாள் கருவாயனா இருந்தவரு, இன்னைக்கு ஆகாஷாம்ல…” என்று கிண்டலடித்தனர்.

‘அடிப்பாவி உருண்ட… இவங்ககிட்ட கூடவா கருவாயன்னு சொல்லிருக்க… இருடி உனக்கு இருக்கு’ என்று மனதிற்குள் பூமியை அர்ச்சித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் மேலும் ஏதோ கேட்க வருகையில், அவர்களை அடக்கிய ரூபா, “ப்ச் எதுக்கு இப்போ வாசல்ல வச்சே இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கீங்க… அதான் அவ காரணத்த சொல்லிட்டால… நேரமாச்சு… மத்தத உள்ள போய் பேசிக்கலாம்…” என்று அவர்களை உள்ளே விரட்டினாள். அவர்களும் முணுமுணுத்தவாறே உள்ளே சென்றனர்.

“அண்ணா நீங்க தப்பா எடுத்துக்காதீங்க… அவங்க எப்பவும் பூமிய இப்படி தான் ஓட்டுவாங்க… அதான் இன்னைக்கும்…” என்று ரூபா இழுக்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன், “பூமி ஒன்னும் சொல்ல மாட்டாளா…” என்று வினவினான் ஆச்சரியமாக…

“இந்த மாதிரி கிண்டலுக்கெல்லாம் ஏதாவது பதில் சொன்னா தான் இன்னும் ஓட்டுவாங்கன்னு எதுவும் சொல்ல மாட்டா…” என்றாள் ரூபா.

ஆகாஷிற்கோ, அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து ஓட்டியது, அவன் மனதை குறுகுறுக்க செய்ய, அதற்கான காரணத்தை அவன் அறிய முற்படவில்லை. ஒரு வேளை சற்று சிந்தித்திருந்தால்… இவர்களின் பின்னே சுற்றித் திரியும் க்யூபிட் வேறொரு ஜோடியின் மேல் அம்பெய்ய சென்றிருக்கும்… அதன் விதி இவர்களின் பின் லோலோவென அலைய வேண்டும் என்றிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்!!!

*****

மேனேஜரின் அறைக்குள்ளே சென்ற அசோக்கும் பூமியும், ஒருவரையொருவர் ‘நீ சொல்லு’ என்று கண்களால் ஜாடை காட்டிக் கொண்டிருக்க, “ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க… அசோக் இப்படி தான் ஒரு ப்ரொஃபெஃஷனல் நடந்துப்பாங்களா” என்று கோபமாக வினவினார் ‘குடுமி மண்டையன்’.

“சாரி சார்… அது… யாரோ ஒருத்தன் யாரோ ஒரு மேனேஜர திட்டுன ஆடியோ… என் பிரெண்டு கேட்டான்னு அவனுக்கு ஃ பார்வேர்டு பண்றதுக்கு பதிலா ரிங்-டோன்னா செட் ஆகிடுச்சு சார்… பிலீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ… நா அப்போ கூட அவன்கிட்ட சொன்னேன்… எல்லா மேனேஜரும் இந்த மாதிரி இல்ல… என் மேனேஜர் ஒரு ப்ரைனி… இப்படி இப்படிங்கறதுகுள்ள (கைகளை சொடுக்கியவாறு) வேலைய முடிச்சுடுவாருன்னு சொன்னேன்…” என்று அசோக் ஐஸ் கட்டியை அவர் மேல் வைக்க, அதுவும் உருகி அதன் வேலையை சரியாக செய்ததோ…

அசோக் வைத்த ஐஸில் மனம் குளிர்ந்தவர், “டோன்ட் ரீபீட் திஸ் அகேய்ன் அசோக்..” என்று எச்சரித்து (!!) ஆகாஷிடம் திரும்பினார்.

“அண்ட் யூ ஆகாஷ்… இந்த வாரம் முக்கியமான ப்ரெசென்டேஷன் இருக்குன்னு தெரிஞ்சும் நேத்து லீவ் போட்டுருக்கீங்க… ஹவ் இர்ரெஸ்பான்சிபில்…” என்று திட்டினார்.

‘ஹ்ம்ம் ஒரு நாள் ஆஃபிஸ் வந்துட்டு ரெஸ்பான்சிபிலிட்டிய பத்தி நீ பேசுறியா…’ என்று மனதிற்குள் புகைந்தாள், பூமி.

பூமி என்ன கூறுவது என்று தெரியாமல் திணற, அவளின் உதவிக்கென வந்தான் அசோக். “சார்… அவன் ப்ரொஜெக்ட்ட பெர்ஃபெக்டா முடிச்சுடுவான்… இன்ஃ பேக்ட் ப்ரெசென்டேஷனுக்கு ஒரு நாள் முன்னாடியே எல்லாம் பக்காவா இருக்கும்…” என்று நண்பனின் மேலிருந்த நம்பிக்கையில் கூறினான்.

“ஓ… ஐ சீ… நாளான்னைக்கு தான ப்ரெசென்டேஷன்… அப்போ நாளைக்கே ரெடியா இருக்கும்ல…” என்று நக்கலாக கூறியவர், அவர்களுக்கு பேசவே அவகாசம் கொடுக்காமல், “அப்போ நாளைக்கு எனக்கொரு டெமோ காட்டிருங்க… நவ் யூ போத் மே கோ…” என்று கூறினார்.

‘அச்சச்சோ.. அவசரப்பட்டு வாய விட்டுட்டோமோ…’ என்று சற்று தாமதமாக உணர்ந்தான் அசோக்.

பூமியோ அவனை பார்வையாலேயே எரித்துக் கொண்டிருந்தாள். ‘அவரே ரெண்டு திட்டு எக்ஸ்ட்ரா திட்டிட்டு விட்டிருப்பாரு… இவன் நடுல ஒரு பிட்ட போட்டு அது எனக்கு ஆப்பா திரும்பிருச்சு…’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள்.

அவர்கள் வெளியில் வந்ததும், அசோக்கை திட்டுவதற்குள், “ஹிஹி… பூமி, நான் உனக்கு ஹெல்ப் பண்ண தான் நெனச்சேன்… ஆனா அது வேற மாதிரி ஆகிடுச்சு… நீ ஒன்னும் கவலப்படாத, ஆகாஷ் எல்லாமே பக்காவா முடிச்சுடுவான்…” என்று கூற, பூமியோ அவனை முறைத்துக் கொண்டே கைபேசியில் யாருக்கோ அழைத்தாள்.

*****

ரூபா, “அண்ணா… வாங்க உள்ள போவோம்… அப்பறம் அந்த பச்ச கலர் சுடி ரிஷா, எல்லோ சுடி சினேகா, அந்த பாப் கட் பேரு ஸ்வேதா… ரிஷாவ ரிஷு, சினேகாவ ஸ்னேக், ஸ்வேதாவ ஸ்வே – இப்படி தான் கூப்பிடுவோம்… இத கரெக்டா நியாபகம் வச்சுக்கோங்க… மத்தது நான் சமாளிச்சுக்குறேன்…” என்று கூறியவாறு ஆகாஷை உள்ளே அழைத்துச் சென்றாள்.

அதன்பின் பயிற்சி வகுப்பில் நேரம் செல்ல, மூன்று வருட அனுபவம் உள்ளவனிற்கு அவையெல்லாம் எளிதாகவே இருந்தன. அவனின் ஒரு மனமோ, ப்ரெசென்டேஷன் பற்றியும், பூமி அங்கு எவ்வாறு சமாளிக்கிறாள் என்பதை பற்றியும் யோசித்துக் கொண்டே இருந்தது.

அவளி(னி)ன் கவனம் அங்கில்லை என்பதை உணர்ந்த பயிற்சியாளர், “மிஸ். பூமிகா” என்று அழைத்தார். அப்போதும் சிந்தையிலிருந்து கலையாமல் இருந்தவனை, ரூபா தான் கையில் இடித்து நிகழ்விற்கு கொண்டு வந்தாள்.

அந்த பயிற்சியாளரோ, அவனிடம் கேள்வியைக் கேட்க, ஆகாஷும் அதற்கான சரியான விடையைக் கூறினான். அந்த பயிற்சியாளருக்கு ஆச்சரியமே. அவள்(ன்) வகுப்பை கவனிக்க வில்லை என்பது அவருக்கு நன்றாக தெரிந்தது. இருப்பினும் எவ்வாறு விடை கூறினாள்(ன்) என்பதை யோசித்தார் அவர்.

கால் மணி நேர இடைவேளைக்காக கேண்டீன் சென்றனர் தோழிகள் ஐவரும்.

அப்போது ரிஷா, “ஹே பூமி… எப்படி டி இன்னைக்கு அந்த சிடுமூஞ்சி கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன… ஒரு வேள மாம்ஸ் ட்ரைனிங்கோ…” என்று கூறி கண்ணடித்தாள்.

அவள் மேலும் பேசாமல் இருக்க, “ரிஷு, எனக்கு பசிக்குது… என்கூட வா சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரலாம்…” என்று அவளை பேச விடாமல் இழுத்துச் சென்றாள் ரூபா.

மற்ற இருவரும் ஆகாஷையே குறுகுறுவென பார்க்க, அவனை அவர்களிடமிருந்து காக்க அவனின் அலைபேசி ஒலித்தது. அழைத்தது பூமி என்றதும், அவர்களிடமிருந்து சற்று விலகி நின்று அழைப்பை ஏற்றான்.

“உன் பிரெண்ட போட்டுத் தள்ளுன்னா உனக்கு ஒன்னும் பிரெச்சனை இல்லல…” – ஆகாஷ் அழைப்பை ஏற்றவுடன் இதைத் தான் கூறியிருந்தாள் பூமி.

ஆகாஷோ ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்க, நடந்ததைக் கூறினாள் பூமி.

அதன்பின் தன் பங்கிற்கு ஆகாஷும் அசோக்கை திட்ட, “என்ன டா இது ஒரு பச்சமண்ண ரெண்டு பேரும் இப்படி திட்டுறீங்க… உதவி பண்ணது தப்பா… இதுல கொலை பண்ண வேற பிளான் பண்றீங்க…” என்று அசோக் தனியாக புலம்ப, அவனின் புலம்பலை காதில் வாங்காமல் மற்ற இருவரும் அடுத்து என்ன செய்வது என்பதைப் பற்றி ஆலோசித்தனர்.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!