நேச தொற்று-6a

நேச தொற்று-6a

கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்ட ஆதி, ஆதவ்வையும் அவன் கைகளில் சிக்கிக் கொண்டு இருந்த ஆருஷாவையும் மாறி மாறிப் பார்த்தான்.

அவன் பார்ப்பதைப் பார்த்ததும் ஏனோ அவள் பட்டென்று ஆதவ்வின் கைகளில் இருந்து விடுப்பட்டு நின்றாள்.

ஆதவ்வையும் ஆருவையும் பார்த்தபடி அவர்களை நோக்கி நடந்து வந்தான் ஆதி.

அவன் வரும் வேகத்தைப் பார்த்தால் கண்டிப்பாக கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண போகிறான். இல்லை என்றால் ஒரு யுத்தத்தை தொடங்கப் போகிறான். இல்லை என்றால் கோபமாக திட்டுவான் என்று ஆருஷாவின் இதயத்தில் பல எண்ணங்கள் ஓட அதை எல்லாம் தரைமட்டம் ஆக்கும்படி இருந்தது ஆதியின் செயல்.

வேகமாக வந்தவன் சட்டென்று ஆதவ்வை கட்டிப்பிடித்து கைகளை குலுக்கினான்.

“ரொம்ப தேங்கஸ் ஆதவ். ஆருவை கீழே விழாம பிடிச்சதுக்கு. ” என்றவனை இமைக்க மறந்து பார்த்தாள் ஆரு.

“ஆரு உனக்கு ஒன்னும் அடிப்படலையே. are you alright?” என்றவனின் கேள்வியில் கவனம் கலைந்தது அவள் மனது.

“எனக்கு ஒன்னும் இல்லை ஆதி. உங்களுக்கு இப்போ இடுப்புவலி எப்படி இருக்கு?” பதில் கேள்வி கேட்டாள் அவள்.

“இப்போ பரவாயில்லை ஆரு. ” என்றவன் ஆதவ்வின் பக்கம் திரும்பினான்.

“வாங்க.. உள்ளே வந்து உட்காருங்க ஆதவ்.” என்று ஆதி வெளியே நின்று கொண்டிருந்தவனை வரவேற்ற பிறகே வந்தவனை உபசரிக்க வேண்டும் என்றே ஆருவுக்கு தோன்றியது.

சட்டென்று முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டவள், “காப்பி டீ ஏதாவது சாப்பிடுறீங்களா ஆதவ்?” என்று இன்முகமாக கேட்டாள்.

“இல்லை பரவாயில்லை ஆருஷா அதெல்லாம் வேண்டாம்.” என்று சொல்லியவனின் முகத்தில் மெல்லிய தயக்கம்.

அதைப் படித்தவள் “எனி ஹெல்ப்?” என்றாள் கேள்வியாக.

இதற்காகவே காத்து இருந்ததைப் போல ஆதவ்விடம் ஆமோதிப்பு.

“யெஸ். நாங்க மூனு நாள் முன்னாடி தான் இந்த ப்ளாட்டுக்கு குடி வந்தோம். அதுக்குள்ளே லாக் டவுன் போட்டுட்டாங்க. வீட்டுக்கு தேவையான சமான் வாங்க முடியல சோ. கொஞ்சம் oats மட்டும் இருந்தா தர்ரீங்களா? இந்த மூனு நாள் adjust பண்ணிப்போம்.” என்றவனோ ஆருஷாவின் மௌனத்தைப் பார்த்துவிட்டு சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தான்.

“Wednesday  கடையை open பண்ணிடுவாங்க. அதுக்கு அப்புறம் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். இந்த மூனு நாள் மட்டும் என் தொல்லையை பொறுத்துக்க முடியுமா? இந்த ப்ளாட்ல உங்களை தவிர வேற யாரையும் எனக்கு தெரியாது. மலையாளமும் தெரியாது.  அதான் உங்களை தொல்லைப் பண்ண வேண்டியதா போச்சு.” என்று மேலும் விவரிக்க ஆருஷாவின் முகத்தில்  புன்முறுவல்.

“இதுல என்னங்க தொல்லை பண்ண இருக்கு… கண்டிப்பா தரேன். ஆனால் மூனு நாளைக்கு oats  மட்டும் வெச்சு எப்படி சமாளிப்பிங்க? நான் இந்த மூனு நாளைக்கு உங்களுக்கும் சேர்த்து சமைச்சு தரேன்.” என்றாள் பெருந்தன்மையாக.

“இல்லைங்க பரவாயில்லை. உங்களுக்கு எதுக்கு சிரமம்? “

“அட சிரமம்லாம் இல்லைங்க.  எந்த உதவினாலும் தயங்காம கேளுங்க. ”  ஆருவின் வார்த்தைகளில் நட்புக்கரம்.

“ரொம்ப தேங்க்ஸ் ஆரு… ” என்றவன் மயக்கும் புன்னகையோடு அவளைப் பார்த்தான்.

அவன் புன்னகையைப் பார்த்தவள் ஒரு நிமிடம் அடுத்து என்ன பேசுவது என்று தயங்கினாள்.

பின்பு தன்னை சமன்படுத்திக் கொண்டு சின்ன புன்னகையை பதிலாக தந்தாள்.

“ஓகேங்க அப்புறமா பார்க்கலாம். போயிட்டு வரேன்.” என்று ழுந்து கொண்ட ஆதவ் கதவு வரை  சென்று மீண்டும் ஆருவை ஒரு முறை பார்த்துவிட்டு திரும்பிய நேரம்  அவனின் மீது ஒரு தோள் உரசியது.

தடுமாறி விழப் போனவளை தாங்கிப் பிடித்தான் ஆதவ்.

அவனையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்தாள் தர்ஷி.

“பார்த்து வாங்க. ” என்று அவளைப் பார்த்து சொன்னவன் சட்டென நாக்கைக் கடித்து கொண்டான்.

நான் பாட்டுக்கு தமிழ்ல பேசிட்டேனே இந்த பொண்ணுக்கு புரியுமானு தெரியலயே என்று யோசித்தபடி தட்டுத்தடுமாறி மலையாளத்தில் பேசினான்.

“சூசை வெச்சு வரணும் மோலே.. ” என்று சொல்ல ஆருவின் உதடுகளில் பெருஞ்சிரிப்பு.

“என்ட கொச்சு மோலே ஆ ஆளு பரைஞ்சதே கேட்டில்லோ… சூசை வெச்சுட்டு இங்கோட்டு வா” என்றாள் சிரிப்போடே

“ஐயோ ஆரு எனக்கு ஒன்னுமே புரியல. முதலிலே அந்த சூர்யா டிவியை ஆப் பண்ணிட்டு சன் டிவியை போடு. “

தர்ஷினி பேசிய தமிழ் வார்த்தைகளை கேட்ட ஆதவ், “என்னங்க அப்போ நீங்களும் தமிழ் தானா? ”
என்றான் நிம்மதி பெருமூச்சுவிட்டபடி

“ஆமாங்க… ” என்று தர்ஷி சொல்லி கொண்டு இருந்த நேரம் அபியும் நிவியும் அங்கே ஓடிவந்து நின்றனர்.

“சூப்பர் அங்கிள். நான் சொன்னா மாதிரி வீட்டை கண்டுபிடிச்சுட்டிங்களா? கீழே கொஞ்சம் கேம்ல பிஸியா இருந்தேன். அதான் உங்க கூட வந்து வீட்டை காமிக்க முடியல அங்கிள். “

“அட நிவி செல்லம் பரவாயில்லை… அங்கிள் கரெக்டா வீடு தேடி கண்டுபிடிச்சுட்டேன் தேங்க்ஸ். ” என்று நிவி கன்னத்தில் தட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ஆதவ்.

“ஆரு அக்கா அந்த அங்கிள் நல்லா ஸ்மார்ட்டா இருக்காருல.” என்று நிவி கேட்க ஆமாம் என்று தலையாட்டிவிட்டு ஆதியின் முகபாவனைகளையே உற்றுப் பார்த்தாள்.

அவன் கோபப்படுவான் என நினைத்தாள்.

ஆனால் அதற்கு மாறாக ஆதி சிரித்துக் கொண்டே, ” ஆமாம் நிவி.. அந்த காதோரம் விட்ட கிரிதா இன்னும் ஆதவ்க்கு சூப்பரா இருக்கு “என்றான்.

இவன் என்ன டிசைனா இருப்பான்?

நியாயப்படி பார்த்தா இந்நேரத்துக்கு கோபப்பட்டு தானே இருக்கும்.

ஆனால் தேங்க்ஸ் சொல்றான்.

சிரிக்கிறான்.

பாராட்டுறான் என்று அவளின் தலையில் நிறைய கேள்வி முடிச்சுகள் பின்னியது.

“ஆதி அங்கிள் கொஞ்சம் குனியுங்களேன்” என்று நிவி கெஞ்ச,

“என்னடா நிவிமா “என்ற கேள்வியோடு அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்.

“சாரி அங்கிள். உங்களுக்கு முதுகுல அடிப்பட்டது எங்களுக்கு தெரியாது. அதான் மேலே ஏறி விளையாடிட்டோம். ஆரு அக்கா தான் உங்களுக்கு அடிப்பட்டுச்சுனு சொன்னாங்க. என் அப்பாவா இருந்தா இந்நேரத்துக்கு துரத்தி துரத்தி அடிச்சு இருப்பாங்க.. ஆனால் நீங்க பொறுமையா எடுத்து சொன்னீங்க அங்கிள். சோ ஸ்வீட்… ” என்று சொல்லி
அவள் ஒரு கன்னத்தில் முத்தமிட அபி மறுகன்னத்தில் முத்தமிட்டான்.

அவர்களின் பாசமழையில் ஆதி தொப்பலாய் நனைந்து கொண்டு இருந்த நேரம் மீண்டும் நிவி பேசினாள்.

“அங்கிள் நீங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குறதாலே இனி உங்களை ரவுண்டு கட்டி அடிக்கலாம்னு நானும் அபியும் முடிவு பண்ணிட்டோம்.” என்று நிவி சொல்லி முடித்த அடுத்த நொடி ஆதி அவளை துரத்தி ஓட முயன்றான்.

அதற்குள் ஓடிச் சென்று கதவை மூடிக் கொண்டது அந்த வாண்டுகள்.

“மாட்டாமவா போவீங்க..அப்போ பார்த்துக்கிறேன் உங்களை. ” என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தவன் விழிகளில் ஆருஷா விழுந்தாள்.

சிந்தனையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவளின் முன்பு  வந்து சொடுக்கிட்டு அழைத்தான்.

திரும்பி அவனைப் பார்த்தாள்.

“என்ன ஆச்சு மேடம்க்கு. வாயைத் திறந்தாலே பட்டாசு மாதிரி வெடிப்பீங்க. இப்போ இவ்வளவு அமைதியா இருக்கீங்க.” என்றவனை நிமிர்ந்து பார்த்தவளது வார்த்தைகள் கூர்மையாக வந்து விழுந்தது.

“ஆதி do you really love me?   பொண்ணு பார்க்க வந்த பொண்ணுன்றதாலே ஒரு attraction வந்து என் கிட்டே லவ் சொன்னியா? இல்லை உண்மையா என்னை காதலிக்கிறியா?” 

“ஏன் மேடம்க்கு திடீர்னு இப்படி ஒரு சந்தேகம் வந்துச்சு?” 

“இல்லை லவ் பண்ற பொண்ணை வேற எவனாவது தாங்கிப் பிடிச்சதை பார்த்தானா கண்டிப்பா அந்த லவ்வர் கோபப்படுவான். ஆனால் நீ கோபமேப்படல. உனக்கு என் மேலே உரிமையே தோணலயா ஆதி. நீ அப்போ சும்மா தான் லவ் சொன்னீயா?” என்றாள் அவனை நோக்கிக் கேள்வியாக

“ஐயோ ஆரு… தெளிவா பேசிட்டு இருந்த நீ, ஏன்  இந்த விஷயத்துல மட்டும் இப்படி குழம்புற? உன்னை கீழே விழாம காப்பாத்துனவன் மேலே நான் ஏன் கோபப்படணும்னு நினைக்கிற?” என்றான் நேராக.

“இல்லை நீ காதலிக்கிற பொண்ணை இன்னொருத்தன் தாங்கி பிடிச்சா உனக்கு கோபம் வரணும் தானே?” மீண்டும் அதே கேள்வி மையத்தில் நின்றாள் அவள்.

“சப்போஸ் நான் அப்படி கோப்பட்டு இருந்தேனா, என் காதலி கீழே விழுந்தாலும் பரவாயில்லை ஆனால் வேற ஒருத்தன் அவளை தாங்கிப் பிடிச்சு காப்பாத்தக்கூடாதுனு நான் நினைக்கிறா மாதிரி ஆகிடும். அது தான் உண்மையான காதலா ஆரு?” என்றான் கேள்வியாக. இந்த கேள்விக்கு ஆருவிடம் பதிலிளில்லை. மௌனமாக அவனை வெறித்தாள்.

ஆனால் ஆதியிடம் அந்த மௌனம் இல்லை. மீண்டும் தொடர்ந்தான்.

“என் காதலிக்கு அடிப்பட்டாலும் பரவாயில்லை அவளை வேற ஒருத்தன் வந்து காப்பாத்திடக்கூடாதுனு நினைக்கிறதுக்கு பேரு காதலா? காப்பாத்துறதுக்காக நடந்த இந்த ஒரு சின்ன தொடுதல் உன்னை கண்டிப்பா சலனப்படுத்தாதுனு  தெரிஞ்சும் என் லவ்வரை நீ ஏன் டா காப்பாத்துன அப்படியே கீழே போட்டு இருக்கலாம்லனு நான் சொல்றது அபத்தம். புரியுதா ஆரு.. ” என கேட்க அவனையே விழியகலாது பார்த்தாள் அவள்.

இந்த கேள்விகள் நியாயமானது. வித்தியாசமானது.

இந்த ஆதி அவளுக்கு வித்தியாசமானவள்.

அந்த வித்தியாசமான ஆதியையே விழியகலாமல் உள்வாங்கிக் கொண்டு இருந்தாள் அவள்.

அவள் விழிகளில் பல ரசாயன மாற்றங்கள்.

ஒருவேளை காதல் வேதியியலின் விளைவோ!

Leave a Reply

error: Content is protected !!