நேச தொற்று-6b
நேச தொற்று-6b
“ஆரு “
“ம்ம் சொல்லுங்க ஆதி.”
“நான் விட்ட அம்பு பச்சக்குனு உன் ஹார்ட்ல ஒட்டிக்கிச்சா? என் மேலே காதல் வந்துச்சா? காதல்க்கான காரணத்தை நான் கண்டுபிடிச்சுட்டேனா ஆரு? ” என்று கண்களில் காதலை தேக்கிக் கொண்டு பார்த்தவனை கண்டு ஒரு கணம் தன்னை மறந்து தான் போனாள் அவள்.
அடி ஆழத்தில் புதைந்துப் போன குரலை மீண்டும் மீட்டு எடுத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.
“அது ஆதி. காதலுக்கான காரணத்தை நீங்க கண்டுபிடி” என்று அவள் முழுவதாய் சொல்லி முடிக்கும் முன்பே காதை வந்து எதுவோ துளைத்தது.
வழக்கமாக அடிக்கும் அலாரம் அன்று ஏனோ அபாயசங்கு போல ஒலித்தது அவள் காதுகளில்.
சே என்று கோபத்துடன் எழுந்தவளின் கண்கள் தன் படுக்கையில் பக்கத்தில் படுத்து இருந்த ஆதியைப் பார்த்தது.
கண்கள் விரிய அதிர்ச்சியில் ஆவென்று அலறினாள் அவள்.
அடுத்த நொடியே பக்கத்தில் படுத்து இருந்த ஆதி அதைவிட அதிர்ச்சியாக கத்திவிட்டு எழுந்து அவனறைக்கு ஓடி கதவை சாத்தினான்.
அவன் பின்னாலேயே ஓடி வந்தவள் அவன் அறையின் கதவை தட்டிப் பெயர்த்துக் கொண்டு இருந்தாள்.
“மரியாதையா கதவைத் திறந்திடு. open the door ஆதி ” என்று அவள் கோபத்தில் கத்த இரண்டொரு நிமிடங்களில் கதவு திறக்கப்பட்டது.
சோம்பல் முறித்தவாறு ஆதி கதவைத் திறந்தான்.
அப்போது தான் தூங்கி எழுந்து கொட்டாவி விட்டபடி நின்றவனை கண்டு குழம்பிப் போனாள் அவள்.
“ஏன் ஆரு மனுஷனை தூங்கவிடாம இப்படி கத்தி எழுப்பி விடுற?” என்றான் தூக்கம் கலையாத குரலில்.
“ஆதி நீ ஏன் என் ரூம்க்கு வந்தே?”
“என்ன ஆரு உளருற? நான் இப்போ தான் தூங்கி எழுந்து வெளியே வரேன். ஏதாவது கனவு கினவு கண்டியா?”
“இல்லை ஆதி நீ என் பக்கத்துல தான் படுத்துட்டு இருந்தே. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. பொய் சொல்லாதே. ” என்றாள் ஆராய்ச்சி விழிகளோடு.
“ஐயோ ஆரு! நான் ஏன் அங்கே வரப் போறேன். சரி உன் பக்கத்துல படுத்துட்டு இருந்த அப்போ நான் என்ன ட்ரெஸ் போட்டு இருந்தேன்?”
“நைட்டி போட்டுட்டு இருந்த ஆதி.. “
“இப்போ நான் என்ன ட்ரெஸ் போட்டுட்டு இருக்கேன்?”
“Pant shirt போட்டு இருக்கே… “
“அவ்வளவு தான் ஆரு, mystery solved. நீ கனவு கண்டு இருக்கே. அதுல நான் நைட்டி போட்டு உன் பக்கத்துல படுத்து இருந்து இருக்கேன். பதறி அடிச்சு நீ எழுந்து என்னையும் கதவு தட்டி எழுப்பிட்டே.” என்றவனை நம்பாமல் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தாள்.
“அது உன் பிரம்மை ஆரு. வெறும் கனவு. சரி problem தான் solve ஆகிடுச்சுல. எனக்கு தூக்கம் தூக்கமா வருது. நான் போய் தூங்குறேன்.” என்று படபடவென பேசிவிட்டு கதவை சாத்திவிட்டான் அவன்.
இவள் கலங்கிய குட்டையாக முழுவதுமாய் குழம்பி போய் நின்றாள்.
“அப்போ நான் கனவு தான் கண்டேனா? கனவு இப்படியா தத்ரூபமா இருக்கும்.” என்றவளின் மனம் கேட்ட கேள்விக்கு தலையை சிலுப்பினாள்.
“இல்லையே இல்லையே. இந்த ஆதி பொய் சொல்றான். எப்படியாவது உண்மையை கண்டுபிடிக்கிறேன்.”என்று யோசித்தபடியே கதவையே பார்த்தவள் ஒரு முடிவோடு சமைக்க சென்றாள்.
இரண்டு மணி நேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு ஆதி வெளிப்பட்டான்.
“ஆரு பசிக்குது.. இன்னைக்கு என்ன சமையல்?” என்று சொல்லிக் கொண்டே வந்தவனை திரும்பி தீர்க்கமாக பார்த்தவள் மறுபடியும் லாப்டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்தாள்.
“ஆரு ரொம்ப பசிக்குது. ப்ளீஸ் ” என அவன் கெஞ்ச லாப்டாப்பை கீழே வைத்துவிட்டு ஒரு கயிற்றோடு வெளியே வந்தாள்.
அவளையே புரியாமல் பார்த்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தவனின் கைகள் இரண்டையும் பிடித்தாள் அவள்.
இவன் நிமிர்ந்து அவளது மதி முகத்தையே பார்த்து மெய் மறந்து போய் நின்ற நேரம் சட்டென்று அவனது மூக்கு அரித்தது.
சொறிவதற்காக கையை எடுக்க சென்றவன் கைகளோ எதிலோ தடைப்பட்டு நின்றது.
கீழே குனிந்து பார்க்க கைகள் இறுக்கி கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது.
“ஐயோ ஆரு. ஏன் என் கையை கட்டிப் போட்டே. “
“நீ ஏன் என் பக்கத்துல வந்து படுத்தே? உண்மையை சொல்லு ஆதி… “
“நான் எங்க ஆரு உன் பக்கத்துல வந்து படுத்தேன். அது உன் கனவு ஆரு. “
“அப்போ உண்மையை சொல்ல மாட்ட இல்லை… நீ உண்மையை சொல்ற வரைக்கும் கையிலே கட்டி இருக்கிற கயித்தை அவுக்க மாட்டேன் நான். ” என்றாள் உறுதியாக.
“ஆரு இப்படி நீ என் கையை கட்டிப் போட்டா, நான் எப்படி சாப்பிடுறது?”
“உனக்கு முதலிலே யாரு சாப்பாடு போட போறதா சொன்னா? நீ உண்மையை சொல்ற வரைக்கும் உனக்கு சோறு கிடையாது. “
“ஆரு நான் பாவம்ல. பசி தாங்க மாட்டேன்ல. ப்ளீஸ் சோறு போடு ஆரு”
“சரி பசி தாங்க வேண்டாம். very simple ஆதி. நீ உண்மையை சொல்லிடு. நான் கயிற்றை அவுத்துடுறேன். “
“இல்லை ஆரு நான் சொன்னது உண்மை தான். அது உன் கனவு தான்” என்று மீண்டும் அதே வார்த்தையைப் படிக்க அவள் முகத்தில் கோபத்தின் சிவப்பு.
” உனக்கு கண்டிப்பா சோறே கிடையாது. அப்படியே கிட.” என்று சொல்லிவிட்டு அவளுக்கு மட்டும் உணவை தட்டில் வைத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள்.
“ஹா ஆரு. வாசனையே சூப்பரா இருக்கே. வெஜிடபிள் பிரியாணி செஞ்சியா.
எனக்கும் அப்படியே ஒரு ப்ளேட்ல வெச்சு தாயேன்.” என்றான் கண்களில் ஏக்கத்தை தாங்கியபடி.
“உண்மையை மட்டும் சொல்லு. ஒன்னு என்ன உனக்கு ரெண்டு ப்ளேட்ல உனக்கு வெச்சு தரேன். “
“அது தான் நான் முன்னாடியே சொல்லிட்டேனே ஆரு மா ” என்றவனை கோபத்தோடு முறைத்தாள்.
“நீ அடங்க மாட்டே ஆதி. ஒரு வேளை பட்டினி போட்டு எப்படி தானா உன் வாயிலே இருந்து உண்மையை வர வைக்கிறேனு மட்டும் பாரு. ” என்றவள் தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தாள்.
“ஆரு மா. இந்த குழந்தை சுத்தமா பசி தாங்காது. ப்ளீஸ் டா” என்று ஏகத்துக்கும் கெஞ்ச அவள் கொஞ்சமும் மசிந்தாளில்லை.
“உண்மை வந்தா வெஜ் பிரியாணி தானே உனக்கு வரும்” என்றவளின் உறுதி அவனை அசைத்துப் பார்த்தது.
“சரி சரி உண்மையை சொல்லிடுறேன்.
எனக்கு நேத்து நைட்டு பயங்கரமா ஒரு பேய்க் கனவு வந்துது ஆரு. பதறி அடிச்சு எழுந்துட்டேன். அதுக்கு அப்புறம் தூக்கமே வரல. எங்கே பார்த்தாலும் பேய் சுத்துறா மாதிரியே இருந்தது. ரொம்ப பயமா இருந்தது. சின்ன வயசுல இருந்து எனக்கு ஒரு பழக்கம் ஆரு மா.கெட்டக்கனவு வந்து எழுந்தா நேரா போய் அம்மா பக்கத்துல படுத்துப்பேன். தனியா படுத்தா தூக்கமே வராது ஆரு. அதான் அங்கே வந்து படுத்தேன். believe me baby மா. “என்று சொல்ல ஓ என்று ஒரு வார்த்தையை மட்டும் உதிர்த்தாள் அவள்.
“அதான் உண்மையை சொல்லிட்டேன்ல ஆரு. சோத்தை போடு. கயித்தை அவுத்து விடு.”
“நீ லேட்டா தானே உண்மையை சொன்னே. அதனாலே நான் லேட்டாவே சோறு போடுறேன்.” என்றாள் பசப்பு காட்டியபடி.
“ஆரு இதெல்லாம் உண்மையாவே அநியாயம். ஒரு சின்ன குழந்தைக்கு சோறு போடாமே இப்படி டார்ச்சர் பண்ணக்கூடாது. “
“என்னது நீ சின்னக்குழந்தையா? ஓவரா இல்லை உனக்கே… ஏன்டா இந்த உண்மையை முன்னாடியே சொல்லல? “
“அது நீ என்னை எட்டி மிதிப்பியோனு தான் நான் உண்மையை சொல்லைல.”
“நீ உண்மையை சொன்னாலும் நான் எட்டி தான்டா மிதிச்சு இருப்பேன் உன்னை… ஆனால் ஏற்கனவே இடுப்புல அடிப்பட்டு damage ஆ கிடக்குற. அந்த ஒரு காரணத்துக்காக தான் உன்னை சும்மா விடுறேன்.”
“ஆரு என்னை இன்னும் நாலு மிதி கூட மிதி, நான் தாங்கிப்பேன். ஆனால் சோறு போட்டு அடி. அப்போ தான் energy ஆ அடி வாங்க முடியும். ” என அவன் சொல்ல அவள் இதழோரத்தில் புன்னகை முகிழ்த்தது.
அதை மறைத்துக் கொண்டு கிச்சனுக்குள் சென்றவள் உணவைக் கொண்டு வந்து மேசையின் மீது வைத்தாள்.
அவனருகே அமர்ந்து கயிற்றை அவிழ்த்துவிட்டாள்.
ஆதி வேக வேகமாக சாப்பாடு தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.
அவன் சாப்பிட்ட வேகத்தில் புரை ஏறி இறும தொடங்கியவனுக்கு சட்டென தண்ணீரை எடுத்து கொடுத்து தலையை தடவிவிட்டாள்.
இருமல் அடங்கியவன் தன் அருகில் அமர்ந்து இருந்த அவளையே விழியகலாது பார்த்தான்.
அவளும் அவனையே பார்த்துக் கொண்டு இருக்க வாயில் அழைப்பு ஒலி கேட்க அதில் இருவரும் கலைந்தனர்.
ஆரு எழுந்து கதவை திறக்க சென்றாள்.
ஆதி சாப்பிட்டு முடித்த தட்டோடு கை கழுவ உள்ளே சென்ற நேரம் “ஆதி” என்று அவள் கத்த கைக்கழுவி கொண்டு இருந்தவன் வேகமாக வெளியே வந்தவன் கேள்வியாக அவளைப் பார்த்தான்.
“என்ன ஆச்சு ஆரு?”
“ஏன்டா மேல் தாழ்ப்பாள் போட்ட?” என்றாள் கோபத்தில் சிணுங்கியபடி.
அவள் உயரத்தையும் அந்த மேல் தாழ்ப்பாள் இருந்த இடத்தையும் பார்த்து சிரித்தேவிட்டான் அவன்.
“டேய் ஆதி சிரிக்காதே டா. உன்னை யாரு மேல் தாழ்ப்பாள் போட சொன்னது. ” என்று அவள் கேட்க இவனிடம் கேலி சிரிப்பு.
“இல்லை கொஞ்சம் வளர்ந்து இருக்கலாம். இவ்வளவு குள்ளமா இருக்கியே ஆரு. ” என்றான் சிரித்தபடி.
“ஏன்டா நீ எருமைக் கெடா மாதிரி வளர்ந்துட்டு என்னைய குத்தம் சொல்லாதே. கதவைத் திற டா” என அவள் கத்த சிரித்தபடி கதவைத் திறந்தான்.
வெளியே ஆதவ் இவனை விட பெரிய புன்னகையோடு நின்று கொண்டு இருந்தான்.