பூந்தளிர் ஆட… 12

பூந்தளிர் ஆட… 12

பூந்தளிர்-12

நடந்த அனைத்திற்கும் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டு அன்றைய தினமே விடை பெற்றிருந்தார் ஹக்கீம். விரும்பியோ விரும்பாமலோ இத்தனை நாட்கள் தனது வீட்டில் வளர்ந்த மழலைகளை உச்சி முகர்ந்து, “இன்ஷா அல்லாஹ்! எங்கே இருந்தாலும் நோய்நொடி இல்லாம நூறு வருஷம் நல்லா இருக்கணும். அல்லா பாத்துப்பான்!” மனம் நிறைந்து ஆசிர்வதித்து விட்டே கிளம்பினார்.

அவரின் மனமெல்லாம் மகளுக்கான நலன் மட்டுமே என்கிற சுயநலம் ஓங்கி நின்றாலும் அவரது மனிதாபிமானம் இறுதியில் எட்டிப் பார்த்து இரட்டை தளிர்களுக்காக தொழுது கொண்டது.

அவர் சென்றதும் கதிரவனும் தன் பங்கிற்கு பேசிவிட்டு கிளம்ப ஆயத்தமானார். “யாருகிட்டயும் யோசனை கேட்டுடாதே மாப்ள! பலரும் பலவிதமா சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. தூரமா இருக்கற ஏதாவது ஒரு ஆசிரமத்துல கொண்டு போயி இதுக ரெண்டையும் விட்டுட்டு வந்துடு. அப்பனோடு புள்ளைகளயும் சேர்த்து குடும்பமே ஒட்டு மொத்தமா தலைமுழுகுங்க!” வேண்டா வெறுப்பாக குழந்தைகளைப் பார்த்து பேசி முடித்தார்.

அதற்குப் பிறகான நாட்கள் மிகக் கடினமாகவே நகரத் தொடங்கின. இளையமகனின் தான்தோன்றித் தனத்தினாலும், உரிமையான உறவாக கொஞ்சி மகிழ முடியாத பேரப்பிள்ளைகளை நினைத்தும் ஆற்றாமையில் உள்ளுக்குள் குமுற ஆரம்பித்தார் பரிமளவல்லி.

மனோன்மணிக்கோ ஆதங்கங்களும் அங்கலாய்ப்புகளும் சொல்லியே ஓயவில்லை. கிருஷ்ணாவின் பிறந்த வீட்டில் விசயம் கேள்விப்பட்டு எதுவும் சொல்ல முடியாமல் அமைதி காத்தனர்.

“அவன் விதைச்சதுக்கு நீங்க அறுவடை பண்றீங்களா பரிமளம்?” கிருஷ்ணாவின் பாட்டி அழுத்தமாக கேட்டு அமைதியானார். பேத்தியின் மேல் பொறுப்புகள் சுமத்தப்பட்டு விடுமோ என்ற ஆற்றாமையை கொட்டி முடித்தார்.

தேனிலவின் இனிமை எல்லாம் பொய்யோ எனும்படியாக இறுக்கமுடனே நடமாட ஆரம்பித்தான் அரவிந்தன். குழந்தைகளுக்காக அடுத்து மேற்கொள்ள வேண்டிய முடிவினை குடும்பத்தினரின் முன்வைத்தான்.

“நீயா பார்த்து என்ன செய்யணுமோ செய் அரவிந்தா! யோசனை பண்ணி முடிவு சொல்ற அளவுக்கு எங்க மனசுல வலு இல்ல.” பெருமூச்சொடு அனைவரின் சார்பாக பேசி முடித்திருந்தார் பரிமளவல்லி.

குழந்தைகளைப் பற்றிய பொறுப்பான பதில்களைத் தராமல் பின்னடைவதில் அனைவருமே முதன்மையாக இருந்தனர். சட்டென்று பதில் பேசும் சுமதியும் கூட, “உனக்கு எப்படித் தோணுதோ, அப்பிடியே செய்யிண்ணே!” ஒற்றை வார்த்தையில் ஒதுங்கிக் கொண்டாள்.

வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த வந்த மருமகளிடம் குழந்தைகளின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்கினார் பரிமளம்.

“குழந்தைங்க இங்கே இருக்கிற வரைக்கும் அதுகள பார்த்துக்கற பொறுப்பு உன்னோடது கிருஷ்ணா… முடியாதுன்னு சொல்லி என்னை சங்கடப்படுத்திடாதே!” மீறமுடியாத குரலில் பரிமளம் கூறும்போது, அவளால் தட்ட முடியவில்லை.

பிள்ளைகளை பாவமாகப் பார்க்கவும் முடியாமல், பாசமாக அரவணைக்கவும் வழியில்லாமல் குடும்பத்தளை அவரை நாலாபுறமும் கட்டிப் போட்டிருந்தது. வீட்டுப் பெண்கள், மாப்பிள்ளை பரிவாரங்களை மூச்சாக நினைக்கும் பெண்மணியின் மனதும் பெருமளவு குழம்பித் தவித்தது.

வீட்டின் சூழ்நிலை இப்படியிருக்க சுமதியின் மாமியார் சந்திரா அந்த வாரத்தில் வந்தார். அடுத்து நடக்கப் போகும் உட்பூசலுக்கு துவக்கப்புள்ளியாகவே அவரது வருகை அமைந்தது.

சோழவந்தானில் நெல்லோடு, வாழையும் கரும்பும் பயிர் செய்து வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர். மகன் சுதர்சனை, அவனது விருப்பம் போலவே நகரத்தில் குடித்தனம் செய்ய அனுப்பிவிட்டு, விவசாயத்தை கைவிட மனம் வராமல் மகளோடு தனது ஜாகையை கிராமத்தில் அமைத்துக் கொண்டவர்.

வெகு கறார் பேர்வழி. துடுக்குத்தனமாக பேசும் சுமதியும் சுதர்சனும் சற்றே வாய் அடங்குவது அவரிடத்தில் மட்டுமே! குடும்ப கௌரவத்தை உயிர் மூச்சென மார்தட்டிக் கொள்ளும் ஆளுமைப் பெண்மணி, தனது இறுதிப்பேச்சே அனைவரின் முடிவாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்.

மனோன்மணி வரவேற்பளித்த ராஜமரியாதையில் அகமகிழ்ந்து அனைவரையும் குசலம் விசாரித்து முடித்தார் சந்திரா.

“அதென்னமோ சந்திரா… உன்னப் போல இந்த காலத்துல யாரையும் பாக்க முடியுறதில்ல. மாமியா கூட ஒத்தாசையா இருந்து பண்ணையம் பண்ணக் கத்துக்கோன்னு உன் மருமவள சொன்னா, அவ, உன் புள்ளய சாக்கு சொல்லிட்டு இங்கேயே திரியுதா, கழுத!” பேச்சுவாக்கில் சுமதிக்கு கொட்டு வைத்து ஜால்ரா தட்டினார் மனோன்மணி.

“நீங்க சொல்றதும் சரிதேன் க்கா… அதேன் வெரசா கெளம்பி வந்துட்டேன். கையோட, அவளையும் என் பேரனையும் கூட்டிட்டு போகலாம்னு முடிவுல இருக்கேன்.” அதிராமல் பேச ஆரம்பித்தார் சந்திரா.

“இந்த வயசுல உனக்கு குறும்பு கேக்குதா? நெறமாசக்காரி. இன்னும் பத்துநாள்ல குழந்தை தலை இறங்க ஆரம்பிச்சுடும். பேசாம நீயும் இங்கனயே தங்கி பிரசவத்தை முடிச்சிட்டு போ தாயீ!” மனோன்மணியின் கட்டளையான பேச்சினை சந்திரா ரசிக்கவில்லை.

“ரெண்டாவது பிரசவம் நாம எடுத்து செய்யுறதுதான் மொற. ஒன்னும் சொல்லாம அனுப்பி வைங்க க்கா!” சட்டென்று காரமாகப் பேசினார்.

“எதுக்கு இத்தனை கடுசா பேசுறீக மதினி? என்ன நடந்துச்சு?” தயக்கத்துடன் பரிமளவல்லி கேட்க, வந்த வேலையை கனஜோராய் ஆரம்பித்தார் சம்மந்தி அம்மாள்.

“என்னத்த சொல்லச் சொல்றீக? பெரிய குடும்பம், பேரெடுத்த பரம்பரைன்னு நினைச்சு பெருமையா பொண்ணெடுத்த என் பவுசுல மண்ணு விழுந்து போச்சு! குலம், கோத்திரம், ஊருபேரு தெரியாத சிறுக்கி பெத்தெடுத்த குழந்தையை வீட்டுக்கு வாரிசா கொண்டு வந்து வளக்க ஆரம்பிச்சுருக்கீக!

இந்த அசிங்கத்துல என் பேரப்புள்ளய இந்த வீட்டுலயே பொறக்கட்டும்னு விட்டு வைச்சா, என் வீட்டு வாரிசுக்கும் அதுகளுக்கும் வித்தியாசம் இல்லாம போயிரும். எம் மருமவளுக்கு பொறந்த வீடும் உறவும், அனுபவிச்ச மட்டுக்கும் போதும். நான் ஊருக்கு கூட்டிட்டு போறேன்!” கறாராய் பேசியவரை அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

“அத்தே, ஏன் இப்படி பேசுறீக?” அதிர்வுடன் சுமதி கேட்க,

“இந்த வீட்டு அசிங்கத்தை பேச எனக்கு வாய் கூசுது ஆத்தா! நீ மனசுல எதுவும் வச்சுக்காம நம்ம வூட்டுக்கு வந்துடு!”

“இது என் அம்மாவீடு அத்தே!”

“ரெண்டாவது புள்ளைய பெத்துக்க போற… இன்னும் என்ன ஆத்தா வீடு வேண்டிக் கெடக்கு? இனிமேட்டு உன் மூச்சும் பேச்சும், உன் புருஷன் வீட்டு மனுஷ மக்க, உன் புள்ளைகள மட்டுமே நினைச்சு பாக்கணும். கிளம்புறதுக்கு வழியப் பாரு த்தா!” மருமகளை விரட்டியவர், கிருஷ்ணாவை பார்வையாலேயே அழைத்தார்.

அவரின் பார்வையில் அந்த வீட்டு மருமகளாக சிலபடிகள் இறங்கிப் போயிருந்தாள் கிருஷ்ணா. ‘இவளைப் போல படித்த, அன்னிய குடும்பத்துப் பெண்தானே முறையான உறவில்லாமல் பிள்ளையை பெற்றுவிட்டு இங்கே இறக்கி வைத்து சென்றிருக்கிறாள்.’ என்கிற நினைவே அவ்வீட்டு மற்றொரு மருமகளை இறக்கிப் பார்க்க வைத்தது.

கிருஷ்ணா முறையோடு, ஊர் உறவோடு வந்தவள் என்பதை மறந்தே போயிருந்தார் சந்திரா. தனதருகில் வந்தவளிடம் இருந்த குழந்தைகளை உற்றுப் பார்த்து விட்டு பெருமூச்செறிந்தார்.

“தங்க விக்கிரகமாட்டம் பொறந்து என்ன பிரயோசனம்? வந்த வழி சரியில்லையே!” நொடித்துக் கொண்டே மழலைகளை நெட்டி முறித்தார்.

அடிக்காமல் வலிக்கப் பேசி மருமகளையும் பேரனையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார். சுமதியால் மறுப்பு சொல்ல முடியவில்லை. ‘மாமியார் சொல்வதை கேட்டு நட!’ என்ற வீட்டுப் பெரியவர்களின் அறிவுரை அவளை ஊமையாக்கி விட்டிருந்தது.

சோழவந்தான் புயல் உண்டாக்கிய சேதாரமாக, சுமதி சென்ற அடுத்தநாளே மற்ற இரண்டு பெண்களும் தங்களது முணுமுணுப்பைக் காட்டத் தொடங்கினர்.

“இன்னும் எத்தன நாள் வீட்டுலயே வச்சு தாங்கப் போறீக? காலாகாலத்துல இதுகள எங்கேயாவது கொண்டு போயி விட்டுட்டு வரச் சொல்லும்மா!” சுதாமதி வலியுறுத்த ஆரம்பிக்க பரிமளம் திகைத்தார்.

“அந்த புள்ளைங்க இருக்கிற வரைக்கும் உங்க மாப்பிள்ளைங்க நம்ம வீட்டுக்கு வரமாட்டேன்னு உறுதியா நிக்கிறாக! சந்திராம்மாக்கு மட்டுமில்ல நமக்கும்தான் மானக்கேடுன்னு சொல்றாக! எங்களையும் அம்மா வீட்டுப் பக்கம் எட்டிப் பாக்கக்கூடாதுன்னு கடுசா பேசிட்டாக!”

சாருமதியின் முடிவான பேச்சில் பேதலித்து, தனது தலைவிதியை நினைத்து நொந்துபோனார் அன்னை. இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாயாக இருந்தாலும் கௌரவம், பெருமைக்கு பின்னால் அன்பும் அக்கறையும் ஒளிந்து கொண்டு காணாமல் போய்விடுகிறது.

மகள்களின் பேச்சுகளை தடுக்க முடியாமல் செவிடாக மாறிக் கொண்டார் பரிமளவல்லி. சொன்னபடியே அவர்களின் வருகையும் நின்றுபோனது. மனம் விட்டுச் சொல்ல முடியாத வருத்தங்கள் எல்லாம் அழுத்த ஆரம்பிக்க, தினசரி வேலைகளில் அவரது நடவடிக்கை சுணங்கிப் போகத் தொடங்கியது. ஏற்கனவே மழலைகளின் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணாவிடம் கூடுதலாக வீட்டு நிர்வாகமும் வந்து சேரத் தொடங்கின.

பிள்ளைகளை ஆசிரமத்தில் சேர்க்கும் விசயத்தில் ஹக்கீம் எதிர்கொண்ட தடைகளை அரவிந்தனும் சந்தித்தான். அதையும் மீறி ஏதாவது ஒரு விடுதியில் விட்டு விடலாமென்றால் வீட்டுப் பெரியவர்கள் மனப்பூர்வமான ஒப்புதலை அளிக்கவில்லை.

“அந்த ஆசிரமம் எத்தனை வருசமா இருக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டியா அரவிந்தா? புள்ளைக வளந்தப்புறம் என்ன பண்ணுவாகளாம்?” பரிமளத்தின் கேள்வியில் தவிப்பு தெரிந்தது.

“திருட்டு கும்பலா இருந்துடாமய்யா… புள்ளைகள எதுவும் செய்துட மாட்டாகளே! பொம்பளப்புள்ளய பாக்க வேண்டியிருக்கே தம்பி!” மனோன்மணியின் தொலைநோக்கு பார்வை கேள்வி கேட்டது.

“வேணும்ங்கிற காசு கொடுத்தா, புள்ளைகள நல்லவிதமா வளத்துடுவாகள்ல?” இப்படியான பாசப் பரிவான ஆற்றாமைக் கேள்விகளே அரவிந்தனுக்கு பெரும் முட்டுக் கட்டைகளாக இருந்தன.

நாளுக்குநாள் அவனுக்கு ஏற்பட்ட குழப்பத்தில் காதலும், மனைவியின் அருகாமையும் மறந்தே போகத் தொடங்கியது. ஏதோ ஒரு கசப்பில் அந்த மழலைகளை பற்றி எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆவல் இல்லாமல் இருந்தான்.

இருபது நாட்கள் கழிந்த நிலையில் அன்றைய தினம் அதீத தலைவலியுடன் விரைவாக வீட்டிற்கு வந்திருந்தான் அரவிந்தன். மழலைகளோடு வீட்டில் நடமாடிக் கொண்டிருந்த மனைவியை ஆசையோடு பார்க்கும்போது அழுத்திக் கொண்டிருந்த தலைபாரமும் வெகுவாக குறைவதைப் போலத் தோன்ற, அவனது பார்வை அன்றைய இனிய இரவிற்காக கனவு காணத் தொடங்கியது.

உணவை முடித்துவிட்டு மனைவியையும் சீக்கிரமே வந்து சேருமாறு ஜாடையாக சொல்லிவிட்டு அவளின் முகம் பார்த்தான்.

“குட்டீஸ் தூங்கினதும் வர்றேன்!” கிசுகிசுப்பான மனைவியின் பதிலில் என்றுமில்லாத கோபம் வந்தது கணவனுக்கு!

“அதான், பொழுதுக்கும் தூக்கிச் சுமக்கிறியே! அது பத்தலையா? அப்படியென்ன அவங்க உனக்கு முக்கியமா போயிட்டாங்க!” சட்டென கேட்டுவிட அவளின் முகம் கசங்கிப்போனது.

இத்தனை நாட்களில் மழலைகளை அவசரத்திற்கும் அவசியத்திற்கும் கூட தொட்டுத் தூக்கி இருக்கவில்லை அரவிந்தன்.

தொழில், குடும்ப அழுத்தங்களை தூக்கிச் சுமப்பவனுக்கு இளைப்பாறுதலை தேடி அமைதி கொள்ளும் வழிவகை தெரியாமல் போய்விட, மனைவியிடம் கடுமையை காட்டத் தொடங்கினான்.

“குழந்தைங்க பொறுப்பு தானா வந்து சேர்ந்தது. நான் தட்டிக் கழிக்க முடியாது. நீங்க போங்க, சீக்கிரம் வர்றேன்!” வெட்டிவிட்ட வார்த்தைகளில் கணவனை மேலே அனுப்பி வைக்க, பரிமளம் அமைதியாக கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்

இப்பொழுதெல்லாம் அடிக்கடி இவர் அழுவதைப் பார்க்க முடிகிறது. குடும்பச் சூழ்நிலை, வீட்டிற்கு வந்து செல்பவர்களின் விசாரிப்பு, அதோடு மகள்களின் பாராமுகம் என அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாமல் தன்னையும் மீறி கண்ணீரில் கரைந்து விடுகிறார்.

“எந்நேரமும் வேலைன்னு அலையுறவன் மனசு ஒருநேரம் போல ஒருநேரம் இருக்காது பரிமளம். அவனுக்கு என்ன அழுத்தமோ இங்கே இறக்கி வைச்சுட்டு போறான்! எல்லாம் சரியாகிடும்.” ஆறுதல் கூறிய மனோன்மணி,

கிருஷ்ணாவைப் பார்த்து, “நீ வெரசா போ ஆத்தா! நான் சின்னதுகள தூங்க வைச்சுக்கறேன்.” எனக் கூற,

“பரவாயில்ல பாட்டி… இன்னும் ஒருமணி நேரம்தானே! புள்ளைங்க தூங்கட்டும். அப்புறம் போறேன். ரெண்டும் தோள்ல போட்டு உலாத்தலன்னா தூங்க மாட்டேங்கிதுங்க!” கிருஷ்ணா சொல்வதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை.

இவளோடு மட்டுமே ஒட்டி உறவாடத் தொடங்கிய பிஞ்சுகள், சமீப நாட்களாய் உறங்கும் பொழுதிலும் இவளையே தேட ஆரம்பித்து விடுகின்றனர். எல்லாம் தங்களது விளையாட்டுத் தளபதி சஞ்சய் பிரிந்து சென்றதின் தாக்கம்!

அவனை வீடெங்கும் தேடத் தொடங்கி, பேச வந்திருந்த ஒன்றிரண்டு வார்த்தையில், ‘ச்யி, ச்சி’ என அழைத்து தவழ்ந்தபடியே வீட்டினை அலசிய பொழுது பெரியவர்களுக்கும் கண்ணீர் தளும்பி விட்டது.

அந்தத் தவிப்பினை, வெளியே வேடிக்கை காட்ட அழைத்துச் சென்று சில நாட்களாக மறக்க வைத்திருந்தாள் கிருஷ்ணா. அதனைத் தொட்டே எந்நேரமும் ஒட்டிக்கொள்ள அவளின் மடியையும் தோளினையும் தேட ஆரம்பித்து விடுகின்றனர்.

“வீடே பத்திட்டு எரிஞ்சாலும் மகாராணிக்கு அவங்க வேலைதான் முக்கியம்!” அறைக்குள் நுழையும்போதே கடுப்பை காட்டத் தொடங்கினான் அரவிந்தன்.

“எதுக்கு இவ்வளவு கோபம்?”

“நேரத்தை பாருடி! நான், உன்னை எப்போ வரச் சொன்னேன்?” கண்ஜாடையில் கடிகாரத்தை காண்பிக்க அது பத்தரையை தாண்டியிருந்தது.

இந்த நிலையில், ‘என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.’ என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டு, “டைம் பாக்கச் சொல்ற நேரத்துல, மாஸ்டர் வேலையில இறங்கலாமே?” வெட்கம் விட்டு நேரடியாகவே அழைத்தாள்.

“ஏன், உனக்கு அவசரமோ? அடுத்து செய்யுறதுக்கு என்ன வேலை வச்சிருக்க?”

“ம்ஹூம்… நீங்க இன்னைக்கு நிதானமா இல்ல. என்னாச்சும்மா? வெயில்ல அதிகமா அலைஞ்சீங்களா?”

“இந்த அக்கறை எல்லாம் அந்த சில்வண்டுகளோட நிறுத்திக்கோ! இப்ப எனக்கு தூக்கம் வருது.” சிடுசிடுப்புடன் கவிழ்ந்து படுத்துக் கொண்டான்.

கோபம் வந்தாலும் கணவனின் நிலை மனைவிக்கு பரிதாபத்தை வரவழைக்க, அவளாகச் சென்று முதுகில் முகம் பதித்தாள்.

“ஏய்… ஏய், எந்திரி!” அரவிந்தனின் அலறலில் சட்டென்று எழுந்து பார்க்க, முதுகெல்லாம் சிவந்து ஆங்காங்கே தடித்தும் போயிருந்தது.

“என்ன ஆச்சு ரவி? இப்படி சிவந்து போயிருக்கு? பூச்சி எதுவும் கடிச்சதா? பனியனை கழட்டுங்க!” சொன்ன வேகத்தில் அவனது பதிலை எதிர்பாரமல் ஆடையை கழற்றி இருந்தாள் கிருஷ்ணா.

“எரியுது சாலா… தொடாதே!”

“எங்கேம்மா போனீங்க? எப்படி ஆச்சு?” பதைப்புடன் கேட்டதில், இவனும் கோபம் அகன்று இயல்பு நிலைக்கு வந்து விட்டான்.

“பெருசா எதுவும் இல்லடா, இன்னைக்கு ஆறுமணிக்கு மேல இருபது மிளகா மூட்டை வந்தது. இறக்கி வைக்க ஆள் இல்லன்னு நானே இறக்கி வைச்சுட்டு, அப்படியே காயப் போட்டுட்டும் வந்தேன். அது சேரல.”

“ஓவர்கோட், கிளவுஸ், மாஸ்க் எதுவுமே போடாம வேலை பாத்தீங்களா! ஏன் இப்படி?”

“அவசரத்துல மறந்து போச்சுடி! அப்போ பிடிச்ச எரிச்சல்ல தான் தலைவலியே வந்து தொலஞ்சது.”

“வந்ததும் சொல்லி இருந்தா மருந்து தடவி விட்டுருப்பேனே ம்மா… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! பாட்டிகிட்டே கை வைத்தியம் கேட்டு மருந்து கொண்டு வர்றேன்!” வேகமாக செல்லத் தொடங்கியவளை இழுத்து கட்டிலில் போட்டான்.

“கடுப்ப கிளப்பாதேடி! உன்னை ஆசையா பார்த்தா, வந்த தலைவலியும் பறந்த போகுதேன்னு கூப்பிட்டா. முறுக்கிட்டு எனக்கே ஆர்டர் போடுறியோ?” கடிந்து கொண்டவனின் செய்கைகள் எல்லாம் வேகத்தோடு வீரியமெடுத்து இருந்தன.

காதலில் மிதவாதத்தை மட்டுமே கற்றுக் கொடுத்தவன், இன்று தீவிரவாதியாகி இம்சை செய்யத் தொடங்கினான்.

“மாஸ்டர்!” என்று சுதாரிக்கும் முன்பே அவள் பேச்சினை இதழோடு மென்று தின்று முடித்திருந்தான்.

மூச்சு முட்ட கணவனைப் பார்த்தவள், “ஏன்ம்மா இவ்வளவு வேகம்?” என்றவளின் சங்குக் கழுத்தில் சங்கமித்து அவனது உதடுகள் அவளை சொர்க்கத்திற்கு நேர்வழிப் பாதையாக அழைத்துச் சென்றது.

“ரவி…” தடுமாறி தத்தளித்தவளின் குரல், அவனது வேகத்தில் கரையுடைத்து பொங்கியது.

“இன்னைக்கு உன்கிட்ட இருக்குற புதையலை கொள்ளையடிக்கமா விடப் போறதில்ல!” என்றவனின் ஆக்கிரமிப்புகள் எல்லாம் அவளை உயிரோடு தித்திக்கச் செய்தன.

தன்னுடலின் மீது எறும்பாய் ஊறும் அவனது உதடுகளின் குறுகுறுப்பு தாங்க முடியாமல் அவனை இழுத்து தனக்குள் அடக்கிக் கொள்ள, அதுவே வினையாகிப் போனது. மலர் பெட்டகத்தில் பள்ளி கொண்டவன் மரகத் குவியலில் புதைந்து எழுந்தே தாகம் தீர்த்துக் கொண்டான்.

“இப்ப மருந்து போட்டு விடவாம்மா?” கலைந்த தோற்றத்தில் அக்கறையோடு கேட்டவளை தன்மேல் அள்ளிப் போட்டுக் கொண்டான்.

“அதென்னடி என்னையும் வார்த்தைக்கு வார்த்தை கொஞ்சித் தள்ளுற?”

“அதான், நீங்க டீ போடுறீங்களே? அதுக்கு காம்பன்செட் பண்ணத்தான்!”

“ச்சோ… என் செல்லத்துக்கு கோபம் போல.” செல்லம் கொஞ்சி கன்னத்தை கடிக்க,

“குட்டீசுகளோட பேசிப்பேசி அதுவே உங்களுக்கும் வந்துடும்மா! நான் என்ன செய்ய?” பாவமாக கூறியவளை மீண்டும் களையத் தொடங்கினான்.

அந்த நேரத்தில், ‘வீல்’ என்ற அழுகைக் குரல் ஸ்பஷ்டமாக அறையில் கேட்க, இருவரின் செயலும் நின்று போனது. நொடிநேரம் நிதானித்து மீண்டும் காரியத்தில் இறங்க அதே அழுகை குரல் ஒலித்து சூழ்நிலையின் பரவசத்தை தடை செய்தது.

“என்னன்னு பார்த்துட்டு வந்துடவா ரவி?”, ‘மீண்டும் கோபித்துக் கொள்வானோ?’ என தயக்கத்துடன் கேட்டாள் கிருஷ்ணா.

“அதான், ரெண்டுபேரு இருக்காங்கல்ல… பார்த்துப்பாங்க சாலா!”

“இல்ல ரவி… உள்ளே ரூமுல இருந்தா சத்தம் கேக்காது. குழந்தைகளை ஹால்ல கொண்டு வந்து வச்சுட்டு இருக்காங்க போல, கொஞ்சம் இருங்களேன்! பார்த்துட்டு வந்துடுறேன்!” கெஞ்சல்குரலில் கூறியவள் அவனது பதிலை எதிர்பாராமல் விரைந்து குளியறைக்குள் புகுந்தாள்.

அவசரமாய் உடலுக்கு தண்ணீரை ஊற்றிக் கொண்ட நேரத்தில் கீழிருந்து வரும் அழுகை சத்தம் இரட்டிப்பாகி இருந்தது.

“சீக்கிரமா வா சாலா!” அரவிந்தனே அழைத்து விட்டான். நைட்டியை மாட்டிக்கொண்டு அவள் கீழே செல்ல, அரவிந்தனும் உடன் வந்தான்.

அம்மு வீறிட்டு அழுது கொண்டிருந்தாள். அவளின் அழுகுரலில் பயந்தே அப்புவும் தேம்ப ஆரம்பித்து இருந்தான். மனோன்மணியும் பரிமளமும், அழுபவர்களை மடியில் வைத்துக் கொண்டு விளையாட்டு காட்டி, தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தியும் அழுகை நிற்கவில்லை.

“எதுக்கு பாட்டி ரெண்டும் அழுது?” கேட்ட கிருஷ்ணாவை இமைக்காமல் பார்த்தார் மனோன்மணி.

“தெரியல கிருஷ்ணா… அம்மு கீழே தலை வச்சு படுக்க மாட்டேங்குது. கை மருந்து குடுத்துப் பார்த்தாச்சு. சின்னப்பயலும் இந்த கலவரத்துல முழிச்சுட்டான்.” பதைப்புடன் கூறிய பரிமளம், குழந்தையை தட்டிக் கொடுக்க அதுவோ கிருஷ்ணாவிடம் தாவியது.

வேண்டாமென்று அவர் திரும்பி நிற்க, “குளிச்சுட்டு வந்துட்டேன் அத்தே, குடுங்க!” சாதரணமாகக் கூறி கிருஷ்ணா, குழந்தையை வாங்கிக் கொள்ள மனோன்மணியின் பார்வைக்கு அப்போதுதான் அர்த்தம் புரிந்து கொண்டார் பரிமளம்.

சட்டென்று தளும்பிய கண்ணீரில் மருமகளுக்கு பார்வையால் நன்றி கூறினார். மகனைப் பார்க்க அவனோ தாயை பார்த்துக் கொண்டிருந்தான்.

கோபமாக முறுக்கிக் கொண்டாலும் மனைவிக்கு துணையாக இறங்கி வந்திருக்கிறானே என்கிற ஆறுதல் அந்த அன்னைக்கு!

எத்தனையோ செய்தும் அழுகை நிற்கவில்லை. குழந்தை மூச்சை இழுத்துக் கொண்டு அழுவதாகத் தோன்றியது. சற்று நேரத்தில் அழுகை தொடராமல் தலையை மேல்நோக்கியே புரட்ட ஆரம்பிக்க பதட்டமடைந்தாள் கிருஷ்ணா

“ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிடுவோம் பாட்டி! அழறதுக்கும் கஷ்டபடுது!” பலமுறை வலியுறுத்தி சொன்ன பிறகே சம்மதித்தார்கள்

அந்த இடைவெளியில் அரவிந்தனும் குளித்துவிட்டு வந்திருந்தான். பெரியவர்களிடம் அப்புவை விட்டுட்டு அவனது புல்லட்டில் கிளம்பினர்

வாடைக்காற்று, அலர்ஜி, இடமாற்றம் என எல்லாம் சேர்ந்து குழந்தைக்கு இளைப்பு வந்திருப்பதாக கூறினார் மருத்துவர்.

அந்த நேரத்து சிகிச்சையாக நெபுலைசர் வைத்து விட்டு, மருந்துகளை எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்தார். நடுநிசியைத் தாண்டிய நேரத்திலும் மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்கியதில் பிள்ளையைப் பற்றிய பயம் அகன்றது.

பணம் கட்டச் சென்ற இடத்தில், “பேபி நேம் சொல்லுங்க சார், பில் போடணும்.” மருத்துவமனை ஊழியர் கேட்கும் போது சங்கடத்துடன் நின்றான் அரவிந்தன். ‘அப்பு, அம்மு.’ அழைப்பினைத் தவிர வேறு பெயரே வைக்காதபோது என்னவென்று சொல்வான்?

ஒரு வயது முடியப் போகும் குழந்தைக்கு பெயர் வைக்கவில்லை என்று கூறினால் முதலில் சிரித்து, பின் ஏன் எதற்கு என்று ஆராய்ச்சியாக விசாரிப்பார்கள்.

என்ன செய்வதென்றே குழப்பத்தில் மனைவியைப் பார்த்தான். அழுகை குறைந்த குழந்தையை தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். கணவன் பார்ப்பதை பார்த்து, அங்கே வந்து நின்றாள்.

“பணம் கட்டியாச்சா?”

“இல்ல… பேர் கேக்குறாங்க!” தயக்கத்துடன் சொல்லவும்

“ஒஹ்!” என அவனது முகம் பார்த்தவள்,

“பாப்பா பேரு வைணவி. பத்து மாசம் ஆகுது.” என்று சட்டென்று கூறி வேலையை முடித்தாள்.

“பேரன்ட் நேம் அன்ட் அட்ரஸ் சொல்லுங்க மேம்!” மேற்கொண்டு கேள்வி தொடர,

“அரவிந்தலோசனன், விசால கிருஷ்ணாக்ஷி” எனத் தொடர்ந்து சரளமாகக் கூறி முடித்து பணம் கட்ட வைத்தாள்.

வீட்டிற்கு வந்ததும் பெரியவர்களை அப்புவை மட்டும் வைத்துக்கொண்டு தூங்கச் சொல்லி விட்டாள்.

“அடுத்த குழந்தைக்கும் இன்ஃபெக்ஷன் ஆகிடும்னு சொல்லி இருக்காங்க அத்தே! அம்மு எங்க ரூமுல இருக்கட்டும்.” அவரது பதிலை எதிர்பராமல் குழந்தையை எடுத்துக் கொண்டு அவர்களின் அறைக்கு சென்றாள்.

கிருஷ்ணாவின் செயலை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. எதுவம் சொல்லாமல் அரவிந்தனும் அவளோடு வந்துசேர்ந்தான்.

“சுமதியும் நானும் சேர்ந்துதான் பேர் பார்த்து செலக்ட் பண்ணோம். ஒரு நல்லநாள்ல எல்லாருகிட்டயும் சொல்லலாம்னு முடிவெடுத்து இருந்தோம். எல்லாம் மாறிப்போச்சு!” அறைக்குள் வந்ததும் கணவன் கேட்கும் முன்பே சொல்லி முடித்தாள்.

“வைணவி, வைபவ். பேரு நல்லா இருக்கா ரவி?” எனக் கேட்க,

“உன் மனசுல என்ன முடிவெடுத்திருக்க சாலா?” கண்டிப்பான கேள்வியில் அவளின் பதிலை எதிர்பார்த்து நின்றான் அரவிந்தன்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!