பூந்தளிர் ஆட… 14

பூந்தளிர் ஆட… 14

பூந்தளிர்-14

வீட்டு மாப்பிள்ளை, மகன், மருமகள், உறவென்று யாரையும் மனதில் நிறுத்திக் கொள்ளாமல், தனது உறுதியான முடிவினை தீர்மானமாக கூறிவிட்டு உள்ளே சென்றார் பரிமளவல்லி.

அவருக்கான நியாயத்தை அலசிப் பார்த்ததில், ‘இனி இப்படித்தான்!’ என்று தனக்குள் உறுதி எடுத்துக் கொண்ட பிறகே மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

கிருஷ்ணாவின் வீட்டில் இருந்து வந்து பேசியிருக்கா விட்டாலும், வரும் வாரத்தில் அனைவரையும் அழைத்து வைத்து தனது முடிவினை எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தார். அது சற்று முன்னரே நடந்து விட்டதில் அவருக்கு வருத்தம் ஒன்றுமில்லை.

என்ன ஒரு சங்கடமென்றால்… தனது முடிவினைக் கூறிவிட்டு மகனின் முகத்தை தான் அவரால் பார்க்க முடியவில்லை. அரவிந்தன் அவருக்கு மகன் மட்டுமல்ல… அவரது ஒட்டு மொத்த இயக்கத்தின் துடிப்பு அவன்.

அவன் சொல்லாமல் எதையும் தொட்டுக்கூட பார்க்க மாட்டார். அப்படியிருக்க, ‘அவனையே ஒதுக்கி வைக்கும்படியான முடிவினை எடுக்க வேண்டியதாகி விட்டதே!’ என்று மனதோடு புலம்பித் தவித்துப் போனார்.

அதிலும் தனது முடிவினைக் கேட்டதும் பேச்சின்றி, ஆற்றாமையுடன் அரவிந்தன், தாயின் முகத்தைப் பார்த்த நிமிடங்கள் அத்தனை கொடுமையானவை. ‘இத்தனை சுயநலவாதியாக  என்னை நினைத்து தவிர்க்கத் தொடங்கி விட்டாயா?’ மகன் கேட்காமல் கேட்ட கேள்வியில் துடித்தே போனார் பரிமளம்.

“மனசுல ஏகத்துக்கும் குழப்பத்தை வச்சுட்டு என்னென்னமோ பேசுறீங்க அத்தே! கொஞ்சம் அமைதியா இருங்க!” கிருஷ்ணா சமாதானமாகச் சொல்லியும் மறுத்துவிட்டு,

“நான் தெளிவா யோசிச்சுதான் இந்த முடிவு எடுத்திருக்கேன். இதுல மாற்றம் இல்ல!” மீண்டும் தனது முடிவை வலியுறுத்தி கூறிவிட்டே தனது அறைக்குள் சென்றார்.

குழந்தைகளை பார்த்துக் கொள்ளச் சொல்லி வேலைக்காரப் பெண்ணிடம் ஒப்படைத்து விட்டு வந்ததும் நினைவில் வர, கவனத்தை அவர்களின் மீது திருப்பி விட்டார்.

நியாயம் கேட்க வந்தவர்கள் மேற்கொண்டு பேச முடியாமல் அமைதியாகி விட்டனர். கோமளவல்லியோ சூழ்நிலையின் கணம் தாளாமல் அழவே ஆரம்பித்து விட்டார்.

“தாயையும் பிள்ளையையும் பிரிக்கிற எண்ணத்தோட சத்தியமா நான் வரல தம்பி! கிருஷ்ணாவோட நல்லதுக்கு மட்டுமே பேச வந்தேன். எப்படியாவது அம்மாவை நிதானப்படுத்துங்க!” கோவர்தனன் மன்னிப்பு கோரும் பாவனையில் வேண்டி நின்றார்.  

“மாமியாரை பக்கத்துல இருந்து பார்த்துக்கோ கிருஷ்ணா! ரொம்பவே மனசொடிஞ்சு பேசுறாங்க!” என தங்கள் பெண்ணிடம் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பினர்.

“இந்த வீட்டு வாரிசுன்னு பார்த்து அத்தை எடுத்த முடிவெல்லாம் சரிதான். அதுக்காக பெத்த புள்ளைங்க, சொந்தபந்தம் வேணாம்னு ஒதுங்கிப் போறது நியாயமா படல…  இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுத்தா இத்தன வருசமா இவங்களுக்காக பாடுபட்டு குடும்பத்தை தோள்ல சுமந்துட்டு நின்ன புள்ளைக்கு என்ன மதிப்பு கொடுக்கப் போறீக? வளரப் போற குருத்துகளுக்காக வளந்து நிக்கிற மரத்தை வெட்ட நெனைக்கிறது எந்த ஊரு நியாயம்? எடுத்து சொல்லுங்க பெரிம்மா!” தன் மனதில் சரியெனப்பட்டதை சொல்லிவிட்டு சென்றார் கதிரவன்.

இத்தனை பேச்சிலும் எந்தவொரு விருப்போ வெறுப்போ இன்றி பதில் பேசாமல் சிலையாக அமர்ந்திருந்தான் அரவிந்தன். “நான் கிளம்புறேன் மாப்புள!” கதிரவன் அவனது தோளினை உலுக்கி கூறவும்தான் சுயமடைந்து தலையசைத்தான்.

“தங்கச்சி, மேற்கொண்டு எதுவும் பேசாம சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கச் சொல்லும்மா! ரொம்ப சோர்வா தெரியுறான்.” அக்கறையாக கூறிச் சென்றவரை நன்றியோடு பார்த்தாள் கிருஷ்ணா.

யாரை விலக்குவது, யாரை ஏற்றுக் கொள்வது என்று புரிபடாத சூழ்நிலையில் ஒவ்வொரு நிமிடமும்  அழுத்தத்தோடு நகரத் தொடங்கியது. இரட்டை தளிர்களின் அழுகைச் சத்தமும் சிரிப்பும் தான் அந்த வீட்டில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர வைத்தது.

அரைகுறையாக மதிய உணவை முடித்துக்கொண்டு மனைவியின் சொல்பேச்சு கேளாமல் வெளியே கிளம்பி விட்டான் அரவிந்தன். என்றுமில்லாத இறுக்கம் அவனிடத்தில் குடி கொண்டிருந்தது.

‘ஒருவேளை இரவு வந்து மொத்தமாய் இறக்கி வைப்பானோ? உன் வீட்டு மனிதர்களின் பேச்சால் வந்த வினையைப் பார்த்தாயா என்று தன்னை கேள்விகாளால் குத்திக் கிழிப்பானோ?’ என்றெல்லாம் நினைத்து கிருஷ்ணா கவலையுடன் நடமாடினாள். சமீப நாட்களாக கணவனும் கோபமூர்த்தியாக வலம் வருவதில் மனைவியின் கணிப்புகள் இப்படியாகி இருந்தன.  

இரவு வீட்டிற்கு வந்தவனின் அமைதி கண்டு உணவை மேலே கொண்டு வந்துவிட்டாள் மனைவி. “அன்னைக்கு கோபத்துல இங்கே கொண்டு வந்து சாப்பிடப் போயிதான் அம்மா என்னை பிரிச்சு பாக்க ஆரம்பிச்சுடுச்சோ?” வருத்தத்துடன் கூறியவனின் முகத்தில் பல யோசனைகள்.

“நீ கீழே கொண்டு போ! சாப்பிட்டு, அப்படியே பேசிட்டு வருவோம்!”

“ரெண்டுபேரும் இப்பதான் மாத்திரை போட்டுட்டு தூங்குறாங்க ரவி! ரெண்டுநாள் போகட்டும். அவங்களுக்கும் குழப்பம் குறைஞ்சிருக்கும். அப்போ நிதானமா பேசலாம். கொஞ்சம் ஆறப்போடுங்க!” கிருஷ்ணா சொன்னதையும் ஏற்றான்.

உள்ளத்தின் வேதனை பெருமூச்சுகளாக வெளிப்பட அமைதியாகவே உணவை உள்ளே தள்ளினான். அவனது பேச்சற்ற பாவனை மனைவிக்கே கலக்கம் கொள்ளச் செய்தது. ஆறுதலாக பேச்சு கொடுத்து பாரத்தை இறக்கி வைக்க முயன்றாள்.

“எங்க வீட்டாளுங்க மேல கோபம் இல்லையா ரவி?”

“எதுக்கு சாலா?”

“இல்ல, அவங்க வந்து பேசப்போயி தானே இன்னைக்கு இவ்வளவு பிரச்சனை!”

“அவங்க வீட்டுப் பொண்ணுக்காக இதைக்கூட செய்ய மாட்டாங்களா? நான் இதைவிட அதிகமாக சுமதி வீட்டுல போயி கேள்வி கேட்டுருக்கேன்!” என்றதும் இருவரின் மனநிலையும் சற்றே இயல்பிற்கு திரும்பியது.

“பாருடா… அந்த சந்திராம்மா உங்கள கேள்வி கேக்க விட்டுட்டாங்களா?” ஆர்வத்துடன் கேட்க, அதே மனநிலையில் பதிலளித்தான்.

“பொண்ணு கொடுத்தவன் கேக்கிற கேள்விக்கு சரியான  பதில் சொல்லலன்னா, அவன் நல்லா வாழலைன்னு அர்த்தம். இதை எனக்கு சொன்னதே சந்திரா அத்தைதான். அதை விடாம பிடிச்சுட்டு சுமதிக்கு கல்யாணமான புதுசுல நம்ம குட்டிக்கு அங்கே எல்லாம் பொருந்திப் போகுதா? எப்படி பழகுறான்னு நேரடியா அவங்ககிட்ட கேட்டுட்டு, அப்புறமாதான் சுமதிகிட்ட பேச ஆரம்பிப்பேன்.” என்றவன் அப்பொழுதைய கலாட்டாக்களை சொல்ல ஆரம்பிக்க, சற்றே அவனது மனமும் தெளிந்தது.

“பேச்சு, பழக்க வழக்கம் எல்லாம் கடுசா இருந்தாலும் மருமகள, மகளா தாங்குறதுல அவங்களை அடிச்சுக்க ஆள் இல்ல… தாயே சரணம்னு கால்ல விழுந்துட்டா, நமக்கு முதல் மரியாதையை பண்ணி ராஜாவாட்டம் கவனிப்பாங்க! எங்கம்மாவும் ஒன்னும் குறைஞ்சவங்க இல்ல சலா… ஆனா என்ன கஷ்டமோ என்னை ஒதுக்கிப் வைக்க நினைக்கிறாங்க!” என்றவனின் குரலும் முகமும் சுருங்கிப் போனது.  

வண்டாய் குடையும் மனதின் அழுத்தங்கள் எப்படி பேசினாலும் வெளிப்பட்டு, தனது ஆதங்கங்களை கொட்டி விடுகிறது. சராசரி மனித இயல்பு இது. இதில் கரை கண்டு தவநிலையை அடைய வேண்டும், இல்லையென்றால் அழுத்தம் தாளாமல் மனக்கிலேசத்தில் கிறுக்கு பிடித்து அலைய நேரிடும்.

“என் மேல வைச்ச நம்பிக்கை எங்கம்மாவுக்கு விட்டுப் போச்சா? அந்த அளவுக்கு மோசமாவா என் நடவடிக்கை இருந்திருக்கு? நான் என்ன தப்பு பண்ணினேன்னு எனக்கே தெரியல!” அவனது குமுறல்கள் பலத்த சிந்தனைகளாகிப் போயின.

“அவங்க ஏதோ அவசரத்துல முடிவெடுத்து இருக்காங்க ரவி! நீங்களும் அதையே நெனைச்சுட்டு இருக்க வேணாம்.”

“இத்தனை வயசுக்கு அப்புறமும் ரெண்டு பிள்ளைகள வளத்து ஆளாக்குறேன்னு நெஞ்சை நிமித்திட்டு நிக்கிறாகளே! அதே நிமிர்வோட இதுதான்டா முடிவு, இதுக்கு சரின்னு சொல்லுன்னு என்கிட்டே சட்டமா பேசி இருக்கலாம். இல்லன்னா, என்னோட முடிவு உனக்கு சம்மதமான்னு கூட கேட்டு இருக்கலாம். ஏன் அப்படி கேக்கல? அப்போ அவங்க மனசுல நான் எந்த இடத்துல இருக்கேன்?” இப்படி பலவிதமாய் புலம்ப ஆரம்பித்தான் அரவிந்தன்.

சிறுவயதில் தனது தாய்பட்ட கஷ்டங்கள், அவனை குடும்பத் தலைவைனாய் ஏற்றுக்கொண்டு காரியமற்றிய காலங்கள், ‘என் குடும்பத்தின் ஆணிவேர் இவன்!’ என்று பரிமளம் எல்லோரிடத்திலும் பெருமையாய் மகனை நிறுத்திய தருணங்களை நினைவு கூர்ந்தான்.  

“அப்படியெல்லாம் தூக்கி வச்சு கொண்டாடிட்டு, ஏன் இப்ப பிரிச்சு பாக்கறாங்க?” ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

“அடடா… போதும் மாஸ்டர். சின்ன குழந்தையவிட அதிகமாக உடைஞ்சு போறீங்க! உங்களை பேசிட்டு அவங்களும் எப்படி இருக்காங்களோ, யாரு கண்டா? உங்களைவிட அதிகமாக கூட தவிச்சுட்டு இருக்கலாம். அது நமக்கு தெரியக்கூடாதுன்னு தான் அத்தை என்கிட்டே பேசக்கூட இல்ல போல?”

“ஏன்? ஏன், உன்கிட்ட பேசல? நீ என்ன பண்ண?”

“இப்படி அவசரப்பட்டு பேச வேண்டாமே! யார் என்ன பண்ணினான்னு கேள்வி கேட்டு அடுத்த பஞ்சாயத்தை கூட்ட வேண்டாம் ரவி! உங்க மனசுல இருக்கிறதையும் குத்தமா கேட்டு அவங்களை சங்கடப்பட வைக்காதீங்க… தனிக்குடித்தனம் பத்தின பேச்சு இனிமே வராத மாதிரி ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க! பேசிட்டே இருந்தா தீர்வு கிடைக்காது. பிரச்சனைக்கான முடிவு இதுதான்னு வேலையை முடிச்சிட்டு வந்து பேசுங்க, எல்லாரும் அமைதியாவாங்க!” முடிவாகக் கூறிய கிருஷ்ணாவை யோசனையாகப் பார்த்தான்

“நீ என்ன சொல்ல வர்ற?”

“உங்க வருத்தமும் அத்தையோட தவிப்பும் முடிவுக்கு வரணும். அதுக்கு என்ன செய்யணுமோ செய்யுங்கன்னு சொல்றேன்!” கூறிவிட்டு உறங்கிப் போனாள்.

அவர்கள் பேசிக் கொண்டபடி அடுத்த யோசனையை உடனே செய்வதற்கு வாய்ப்பு அமையவில்லை. நேரமும் கிடைக்கவில்லை. மறுநாள் காலையே சுமதிக்கு பிரசவலி கண்டுவிட்டதென தகவல் வந்து சேர்ந்தது.

உடனே பரிமளம், மனோன்மணியை அழைத்துக் கொண்டு அரவிந்தன் சோழவந்தான் கிளம்பிச் சென்றான். குழந்தைகளை முன்னிட்டே கிருஷ்ணாவை வீட்டில் நிறுத்தி விட்டு வர வேண்டியிருந்தது.

சுமதியின் விஷயம் தெரிந்ததும் கிளம்புவதற்கான ஏற்பாட்டினைச் செய்து, எப்போதும் போல பேச்சுக் கொடுத்துக் கொண்டே காரினை எடுத்து விட்டான் அரவிந்தன்.

பரிமளத்திற்கு தான் மகனின் முகம் பார்த்து பேச முடியவில்லை. ‘மகனுக்கு துரோகம் செய்கிறாய்!’ என அவரின் மனசாட்சியே அவரை கேட்டு குத்திக் குடைந்தது. எதையும் மனதில் கொள்ளாமல் அந்த நேரத்திற்கு தேவையானதை செய்து கொண்டிருந்தான் அரவிந்தன்.

“என்ன அக்கா? வீட்டு மருமவள காணோம்!” காரணத்தை தெரிந்து வைத்தே குத்தலாக கேட்ட சந்திராவை வருத்தத்துடன் பார்த்தார் பரிமளம்.

அன்று மதியமே சுமதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதிகம் சிரமமில்லாத சுகப்பிரசவம் தான். கையோடு, ‘ட்யூபெக்டோமி’ (குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை) செய்துவிட்டால் நல்லதென்று சுதர்சன் கூற, “அதுக்கு இப்ப என்ன அவசரம். இன்னொரு பிள்ளை பெத்துக்கட்டுமே!” என்று தடைவிதித்தார் சந்திரா.

“இதான் மச்சான் எனக்கு பிடிக்க மாட்டேங்குது. என் பொண்டாட்டி, புள்ள விசயத்துல கூட, என் இஷ்டத்துக்கு எதுவும் சொல்லக்கூடாது செய்யக்கூடாதுன்னா எப்படி?” சுதர்சன் கடுகடுக்க ஆரம்பிக்க, சந்திராவும் தனது பங்கிற்கு எகிறினார்.

“இவேனுக்கு என்ன தெரியும்னு இப்ப பேசுறான்? இவேனக் கேக்காம என் மருமவ, பேரபிள்ளையை கூட்டியாந்துட்டேன்னு இன்னும் என்னென்னனு என்னை சொல்லுவியான்?” மருத்துவமனை என்றும் பாராமல் பதிலுக்கு பதில் பேசினார்.

எத்தனை விதமாய் காலங்கள் மாறி இருந்தாலும் பெரியவர்கள் தங்களின் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் வீம்பு பிடித்து விடுகின்றனர்.

“ஆத்தா, நான் ஒன்னுஞ் சொல்லல, செய்யல! வாய் தவறி கூட நான் பேசிடக்கூடாதா? என்னமும் பண்ணிக்கோ! அவங்களோட நீயே மனம் கோணாம வாழ்ந்துக்கோ! நான் சந்நியாசம் வாங்கிட்டு போறேன்! அடுத்த பேரப்புள்ள வானத்தில இருந்து குதிக்கட்டும்.” சுதர்சனின் விரக்தியான பேச்சில் சந்திரா அதிர்ந்து நின்றார்.

“அட என்ன மாப்புள? அம்மாகிட்ட போயி சரிக்கு சரியா நிக்கிறீக? விடுங்க… அத்தே நீங்களும் அமைதியா இருங்க. பொறவு முடிவெடுப்போம்!” அரவிந்தன் தான் இருபக்கமும் நின்று அமைதிபடுத்த வேண்டியிருந்தது.

மகனை எப்போதும் தனது கண்ணசைவில் நிறுத்தி கொள்வதையே விரும்புவார் சந்திரா. அது திருமணமான பிறகும் தொடர்கதையாகிப் போகவும்தான் சுதர்சன் சுதாரித்தான். திருமணமான இரண்டு வருடத்திலேயே மதுரையில் வேலையை அமைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் வந்து விட்டான்.

அப்படி தனியாக வந்து கஷ்டப்பட்டு ஜீவனம் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்றாலும் தனது மனைவி மகனோடு தனித்து இருக்க விரும்பியே வீம்பு பிடித்து தனிக்குடித்தனம் வந்திருந்தான் சுதர்சன்.

மகனது இந்த முடிவில் ஆடித்தீர்த்து, அவனது அதட்டலில் அடங்கிப் போனாலும் அவ்வப்பொழுது காரண காரியத்தை சொல்லிக்கொண்டு மருமகளையும் பேரனையும் தானே வந்து கிராமத்திற்கு அழைத்துச் சென்று விடுவார் சந்திரா.

மாமியார் வந்து அழைக்கும்போது மறுப்பு சொல்லாமல் கிளம்பி விடுவாள் சுமதி. “வாய் சாவ்டாலு, வாய்க்கா தகராறு எல்லாம் அம்மாவும் புள்ளையோட மட்டுமே நிக்கட்டும். நீ எதுக்கும் வாயை தொறக்காதே! யார் எந்த பக்கம் இழுத்தாலும் போயிட்டும் வந்துட்டும் இரு! கொஞ்சநாள்ல தானா சரியா போயிரும்.” அம்மாவும் அத்தையும் மாற்றி மாற்றி சொன்ன அறிவுரையில் தலையாட்டும் பொம்மையாகிப் போனாள் சுமதி.

இப்பொழுதும் அதே போன்று அம்மாவும் பிள்ளையும் முட்டிக்கொண்டு நிற்க, சந்திராவின் பெண் நீலவேணி, தம்பியின் பக்கமே சார்ந்து பேசவும்தான் பிரச்சனை முடிவிற்கு வந்தது.

“எந்த காலத்துல இருக்கேம்மா நீ? அவேன் குடும்பத்தை அவனை பாக்க விடுன்னு எத்தனை தடவதான் சொல்றது? உன்னோட அக்கறை, பாசம், பஞ்சாமிர்தம் எல்லாத்தையும் மூட்டை கட்டி வை!” வேணியின் பேச்சில் சற்றே அடங்கிப் போனார் சந்திரா.

“தங்கச்சிய வீட்டுக்கு அனுப்பி வைங்க அத்தே! இங்கே அவ்வளவா வசதி பத்தாது. கோபத்தை காமிக்க இப்ப நேரமில்ல… சுமதி எழுந்து நடக்க ஆரம்பிச்சதும் நல்லநாள் பார்த்து சொல்லுங்க! மதுரைக்கு கூட்டிட்டு போயி அங்கேயே வச்சு பார்த்திடுவோம்!” அரவிந்தன் கூறியதில் அனைவருமே சம்மதிக்க, சந்திராவும் தலையாட்ட வேண்டியிருந்தது.

“சரின்னு சொல்லிடு ஆத்தா… இல்லன்னா உம் மவேன் அம்மாவும் வேணாம், ஆட்டுக்குட்டி வேணாம்னுட்டு சாமியாரா போயிடுவான். அப்புறம் உம் மருமவ பொல்லாப்புக்கு நீ பதில் சொல்ல முடியாது.” நீலவேணி பேசிய தினுசில் சோர்வாய் இருந்த சுமதியுமே சிரித்து விட்டாள்.

சரியாக இரண்டு வாரங்கள் கழித்து மதுரையில் அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்வதென முடிவெடுக்கப்பட, குழந்தையையும் சகோதரியையும் பார்த்து விட்டு அரவிந்தன் மதுரைக்கு திரும்பி விட்டான்.

தன்னுடன் மனோன்மணியை அழைத்துகொண்டு வந்து விட்டான். பரிமளம், மகளை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்கென அங்கேயே தங்கிக்கொண்டார்.

“பெரியவங்க பக்கத்துல இருந்து பாத்திக்கிறது தானே மதினி?” சந்திரா தடுத்து நிறுத்தப் பார்க்க, வாகாக நழுவினார் மனோன்மணி.

“வீட்டுல அம்புட்டும் போட்டது போட்டபடி கெடக்கு சந்திரா! உன்ன மாதிரி யாராவது கட்டு செட்டா பாக்கிறதுக்கு இருந்தா நான் ஏன் போகப் போறேன்? அங்கே நான் போகலன்னா எந்த வேலையும் ஆகாது. மருமவ பொண்ணுக்கும் வேலையெல்லாம் இன்னும் சரியா பழக்கமாகல!” கூறிய பிறகே அவரை போகச் சம்மதித்தார்.

வந்தவர்களுக்கு தக்க முறையில் கவனித்து சிறப்பாக உபசரித்து அனுப்பினார். ஆனாலும் வீட்டு மருமகள் வந்திருக்க வேண்டுமென்று குறைபாட்டை பாடிப்பாடியே ஒய்ந்தார் சந்திரா.

அடுத்த ஒருவாரம் இரட்டையர்களின் கவனிப்பு, வீட்டு நிர்வாகம் எல்லாமே கிருஷ்ணாவின் தலைமையில் தடையின்றி நடந்தது. அரவிந்தனும் தனது தொழில் நிமித்தங்களை உடனுக்குடன் முடித்துக் கொடுக்கும் அவசரத்தில் ஓய்வின்றி அலைந்தான்.

“புள்ள பெத்தவள போயி பார்த்துட்டு வந்துடு ஆத்தா! இல்லன்னா சோழவந்தான்காரி வாய என்ன முட்டு கொடுத்தும் அடைக்க முடியாது. அரைநாள்ல போயிட்டு வர்ற மாதிரி காரெடுத்துட்டு கிளம்புங்க… நான் இங்கே இருக்கறவளுகளை வச்சு சின்னதுகளை பார்த்துக்கறேன்!” மனோன்மணி வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.

சுதாமதி, சாருமதி குடும்பம் தனியாகச் சென்று குழந்தயை பார்த்துவிட்டு வந்திருந்தனர்.

“கழுதைங்க, அம்மா வீட்டுல சீராட மட்டும் இளிச்சிட்டு வந்துருவாளுக… எந்நேரமும் வேலை நடக்கிற வீடாச்சே? அம்மா இல்லாத நேரம் வேலை எப்படி ஓடுது? யாரு என்ன பண்றான்னு விசாரிக்ககூட ஒருத்திக்கும் துப்பில்ல!” முதியவளின் வாயில் இரண்டு சகோதரிகளும் விழாத நாளில்லை.

“அந்த சிறுக்கிக ரெண்டும் வரட்டும், குமட்டுல குத்தியே சடைஞ்சுபுடுறேன்!” கோபத்தில் வெடித்துக் பேசியவரை சமாதானப்படுத்துவதே பெரும்பாடாக இருந்தது.

இத்தனை களேபரத்தில் இரட்டையர்களின் மழலைமொழியும் தளிர்நடையும் அழகாக வளர்ச்சி அடைந்திருந்தன.

வேலையாட்களை, ‘க்கா, ட்டி’ என அழைத்தே தங்களை தூக்கிக் கொள்ளச் சொல்லி மயக்கினர். கிருஷ்ணா பத்து நிமிடம் இல்லையென்றாலும், ‘ம்மா!’ என குரல் கொடுத்தே வீட்டினை ஒரு சுற்று சுற்றி வந்து அலசி விடுவர்.

பிள்ளைகளின் அழைப்பில் மனம் மகிழ்ந்தாலும் அவளால், அதை வெளியே சொல்ல முடியவில்லை. குடும்பமே வேண்டாமென்று நிராகரிக்கும் பிள்ளைகள், தன்னை அம்மா என்று அழைக்கின்றதென கணவனிடம் சொன்னால் இன்னும் மலையேறி நிற்பான் என்ற ஆதங்கத்தில் வாயை இறுக்க மூடிக் கொள்வாள்.

பெரியவர்களின் அமைதி சிறியவர்களுக்கு கிடையாதே! அரவிந்தன் வீட்டினுள் வரும்போதே, ‘ப்பா வா’ என ஒரு பிள்ளை அழைக்க, அதன் ஜோடியும் பின்னோடு அழைத்து, அவனை நோக்கி துள்ளிக் கொண்டு ஓடிவரும்.

தங்களை தூக்கிக் கொள்ளச் சொல்லி கைகளை விரித்து நிற்கும்போது அமைதியான சிரிப்போடு அவர்களின் முன் மண்டியிட்டு அமர்வான் அரவிந்தன்.

“உடம்பெல்லாம் அழுக்கா இருக்கு. அப்புறமா தூக்கிக்கிறேன் சாமி!” மேம்போக்காக சமாதானம் சொல்லிவிட்டு ஓடி விடுவான். அதன் பிறகு வந்தும் தூக்கிக் கொள்ளமாட்டான். அதற்கு பதிலாக உணவு உண்ணும் நேரத்தில் அருகில் அமர்த்திக்கொண்டு அவர்களுக்கும் ஊட்டி விடுவான்.

“அம்முடா, அப்புடா!” என பிள்ளைகளை அழைத்து, அவர்களின் கையில் ஓரிரண்டு பருக்கையை வைத்து உண்ண வைக்கும் பெரும் வேலையை சிரமமின்றி மேற்கொள்வான். பிள்ளைகளுக்கும் அவனோடு அப்படி விளையாடுவதில் அத்தனை குஷி! அடங்காமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விடுவர்.

“லூசு பிள்ளைகளா, அவேன்தான் பிடிக்கலன்னு நழுவிப்போறானே! எதுக்கு அவன் முன்னுக்கே போயி நிக்கிறீங்க?” மனோன்மணி செல்லமாய் மழலைகளின் கன்னம் கிள்ளுவார்

“அப்பான்னு கூப்பிட வைக்காதேனு இதுவரைக்கும் சொல்லாம இருக்காரே பாட்டி! அது மட்டுக்கும் சந்தோசம்படுவோம். இல்லன்னா, அதுக்கும் மூஞ்சியை தூக்கி வைச்சு, இந்த மாஸ்டர் வீட்டை ரெண்டாக்கிடுவார். இவரை மலையிறக்கிற வித்தை எனக்கு தெரிய மாட்டேங்குது.” கிருஷ்ணா புலம்பும்போது சிரிக்கவே செய்வார் மனோன்மணி.

“எங்க வீட்டு பெருமாளு, அம்புட்டு சுளுவா உன் சாமரத்துக்கு கண் அசந்துருவானா? நீ கொஞ்சநாள் வீசிறுற மாதிரி வீசு கண்ணு! அப்புறம் பொழுதுக்கும் உனக்கு அவன் கொடை பிடிப்பான் பாரு!”

“ஆமாமா… அவர் குடை பிடிச்சுதான் என் உடம்பு பன்னீர்ரோஜாவா சிவக்கப் போகுது. அட போங்க பாட்டி! இப்ப எல்லாம் ரொம்ப முசுடா மாறிட்டே வர்றாரு! இவர் வார்த்தைய எண்ணி எண்ணிப் பேசறதும் இல்லாம, என்னையும் அப்படியே பேச வைக்கிறாரு! இவர்கிட்ட பேசவும் ரொம்ப யோசிக்க வேண்டியதா இருக்கு.” மனதில் இருக்கும் ஆதங்கத்தை பெரியவளிடம் கொட்டி விட்டாள் கிருஷ்ணா. அவளுக்கும் வேறு வழியில்லை

இவள் பிறந்த வீட்டினருடன் பேசுவதும் வெகுவாய் குறைந்து விட்டது. அப்படியே பேசினாலும் இவளுக்கு அறிவுரைகள் தான் வருமே ஒழிய, இவளது ஆதங்கங்களை யாரும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். தற்சமயம் இவளது உற்ற தோழைமை இரட்டை குழந்தைகளும், முதியவளும் மட்டுமே!

***

பரிமளத்தின் முடிவினை தமக்கைகளின் வாய்மொழியில் சுமதிக்கு தெரியவர, மூன்று மகள்களும் தாயை நிற்க வைத்தே கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

“ஏன் ஆத்தா உனக்கிந்த வீராப்பு?”

“ரத்த சொந்தமா நினைக்கிறதுக்கு கூடவா நாங்க அருகதை இல்லாம போயிட்டோம்? இப்படியொரு முடிவெடுத்திருக்கே!” சுதாமதி, சாருமதி ஒன்றாகச் சேர்ந்து தாயை குற்றம் சாட்டினர்.

“அம்மா அப்படி பேசினாலும் இவேன் அம்மாவை சமாதானப்படுத்தாம தேமேன்னு உக்காந்துட்டு இருந்தானாம்! அவதான் நல்லவளாட்டம் குழப்பத்துல முடிவெடுக்காதீங்க அத்தேன்னு சால்ஜாப்பு பேசியிருக்கா! இதெல்லாம் எங்கே போயி முடியப்போகுதோ?” சுதாமதி வழக்கம் போல இருபக்கமும் குற்றம் கூற சுமதிக்கு பொறுமை பறந்து போனது.

“யக்கோவ்… வந்த இடத்துல உன் வேலையை காட்டாதே! நீ யாரத்தான் நல்ல மாதிரி பாத்திருக்க? உனக்கு யார் செய்யுறதுதான் நியாயமாபடும்? வேளைக்கு ஒரு பேச்சு, பொழுதுக்கும் ஒரு குத்தம் சொல்லிட்டு திரியுற! உனக்கெல்லாம் என் மாமியா மாதிரி ஒரு ஆள் வந்து வாய்ச்சிருக்கணும். கண்ணு முழிய அசைக்ககூட விடாம நொண்டி எடுத்திருப்பாக!”

“அப்ப எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு அமைதியா இருக்கச் சொல்றியாடி?”

“இல்லன்னாலும் நீ பொறுப்பா வந்து கேக்குற ஆளுதான்!” என உதடு பழித்தாள் சுமதி.

“பிரச்சனை, கௌரவக் குறைச்சல்ன்னு வந்ததும் அம்மா வீட்டையே மறந்து போனவங்கதானே நீங்க? என் பிள்ளைய பாக்க வந்தியா, நாலு வார்த்தை விசாரிச்சிட்டு போனியான்னு இரு! இல்லாத பேச்செல்லாம் பேசி என் வீட்டை சண்டைக் காடாக்கதே!” தமக்கைகளின் பேச்சிற்கு அணைகட்டினாள் சுமதி.

‘இவர்கள் ஒன்று பேச ஆரம்பித்தால் இவளின் மாமியார் நூறாக்கி முடிப்பாரே! அதை தொட்டு கணவன் எகிறிக் குதிப்பானே! அந்த பஞ்சாயத்தை யாரை வைத்து தீர்ப்பது?’ போன்றவைகளை நினைத்து சுதாரித்தாள்.

அதோடு தேவையில்லாத பேச்சுகளை கேட்கவோ பேசவோ சுமதி எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் தாயின் முடிவில் இருக்கும் பாதகத்தை உணர்த்தியே ஆகவேண்டும் என்கிற முடிவில் இருந்தாள்.

“யோசிச்சுதான் இந்த முடிவை எடுத்தியாம்மா? இந்த காலத்துல புள்ளைகளை வளக்கிறது அவ்வளவு ஈசின்னு நினைச்சியா?” தமக்கைகள் கிளம்பியதும் தாயை பார்த்து கேட்டாள் சுமதி.

“அஞ்சு பிள்ளைகளை பெத்து வளத்தவடி! எனக்கு நீ புத்தி சொல்லாதே!”

“பெத்தேன்னு சொல்லு… அடுத்த காரியமெல்லாம் அண்ணனும் மணி அத்தையும் தான் பார்த்துகிட்டாக! நான் ஸ்கூல் படிச்சதுல இருந்து காலேஜ் முடிக்கிற வரைக்கும் பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு அண்ணன் தான் வந்து நிக்கும். துணைக்கு வான்னு கூப்பிட்டா கூட நீ வரமாட்டே! அம்புட்டு ஏன்? எனக்கு நல்லா இருக்கும்னு ஒத்த புடவையோ, தாவணியோ எடுக்கத் தெரியுமா உனக்கு?” உண்மையை போட்டுடைக்க, சங்கடமாக தலைகுனிந்து கொண்டார் பரிமளம்.

“உன்னை சுத்திலும் நல்லவங்களா இருக்கப் போயி, உம் பொண்ணுகளும் எந்தவொரு குறையுமில்லாம வளந்துட்டோம். ஆனா இப்ப எல்லாரையும் ஒதுக்கி வைச்சு பிள்ளைகளை வளத்துக்கிறேன்னு தைரியமா சொல்லிட்டு நிக்கிற! அது சரியா வருமான்னு யோசிச்சு பார்த்தியா?

பணப் பிரச்சனையை விடு, எப்படியாவது மாத்திபோட்டு நீ சரி கட்டிடுவ! ஆனா உன் அறியாமையில ரெண்டு பிள்ளைகளும் இந்த உலகத்தை எப்படி பாக்கும்? உறவுகளை எல்லாம் எதிராளியா பாக்க வச்சு நீ அவங்களை வளக்க முடிவெடுத்திருக்க!

சொந்தபந்தத்தோட அருமை தெரிஞ்சு வளந்த உன் பிள்ளையே கெட்டு குட்டிச்சுவரா போயிட்டான். பெரியவங்கள பார்த்து வளர்ற பிள்ளைகளோட நிலைமை எப்படின்னு இந்த காலத்துல நல்லாவே பார்த்துட்டு இருக்கோம். யோசி மா! என் அண்ணேன் மனசை உடைக்கிற மாதிரி இனிமேட்டு எந்த பேச்சும் பேசிடாதே!” குறையாத கோபத்தோடு தாயிடம் சண்டையிட்டபடி சொல்லி முடித்தாள் சுமதி.

மீண்டும் பெரிதாய் ஒரு குழப்பம் பரிமளத்தின் மனதில் வேர்விட ஆரம்பித்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!