பூந்தளிர் ஆட-18

பூந்தளிர் ஆட-18

பூந்தளிர்-18

‘ஸ்வீட் சர்பிரைஸ்’ கொடுப்பதாக நினைத்து சத்தமில்லாமல் வரவேற்பறையை தாண்டி, உணவு மேஜை வரையில் வந்து தோரணையாக நாற்காலியில் அமர்ந்து கொண்டான் ராம்சங்கர்.

சுமதியின் திருமணத்தை முடித்த கையோடு வெளிநாடு சென்றவன், இப்போதுதான் திரும்பி வருகிறான். அங்கே சென்ற ஆரம்ப நாட்களில் குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்களை இணையத்தின் மூலமாக அனுப்புவான். ஆனால் பணமாக குடும்பத்தின் தேவைக்கு இதுவரையிலும் ஒரு ரூபாய் கூட அனுப்பியதில்லை.

“சம்பளத்தின் ஒரு பகுதியை அனுப்பி வைக்கிறேன்.” என்று ராம் சொல்லியும் கூட அரவிந்தன் மறுத்து விட்டான்.

“அங்கே நீ சௌரியமா இருந்துக்க என்ன தேவையோ அதை வாங்கிக்கோ ராம், உன்னை கஷ்டபடுத்திக்காதே!” அன்போடு சொல்லியிருக்க, அன்றிலிருந்து இவனது வருமானத்திற்கு இவனே ராஜா இவனே மந்திரி!

பரிமளம் சற்றே கறார் காட்டி பணம் அனுப்பி வைக்கச் சொன்னாலும், “விடும்மா, சின்ன பையன் ஆசைப்படி கொஞ்சநாள் தான் இருக்கட்டுமே!” அரவிந்தனே அவனுக்கு ஆதரவாகப் பேசியது வினையாகிப் போயிற்று.

அன்றிலிருந்து, தான், தன்னலம், தன்தேவை என்றளவில் மட்டுமே வாழ்ந்து பழகிக் கொண்ட ராமின் குணமும் மனமும், இந்த ஏழு வருடங்களில் சுருங்கிப் போயிருந்ததை யாரும் அறியவில்லை.

ஆறரை அடி உயரத்தில் வெளிநாட்டு வாழ்க்கையின் மலர்ச்சியோடு வீட்டிற்கு வந்து நின்றவனை கவனிக்க ஆளில்லாமல் போக, பெரிதாய் தொண்டையைச் செருமினான்.

தன்னைப் பார்த்ததும் ஓடிவந்து வரவேற்பார்கள் என்று இறுமாந்து வந்தவனுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். ‘என்ன இவன் வந்து நிக்கிறான்?’ எல்லோரிடமும் ஒரே கேள்விப்பார்வை தான் வந்ததே ஒழிய, வா என்று அழைக்க யாருக்கும் வாய் வரவில்லை.

பரிமளமும் மகனைக் கண்டு நொடிநேரம் உண்பதை நிறுத்திவிட்டு, மீண்டும் காரியமே கண்ணாகினார். அரவிந்தனோ ஒருபடி மேலே சென்று, “சாலா, சாப்பிட்டு மேலே வா!” என்றவாறு அந்த நேரமே எழுந்து செல்ல ஆரம்பிக்க,

“பாதி சாப்பாட்டுல போகாதே அரவிந்தா!” அதட்டி அமர வைத்தார் மனோன்மணி. இதைப் பார்த்ததும் வந்தவனுக்கு கொதித்துப் போனது.

“என்னை வான்னு கூட கூப்பிட மாட்டீங்களா?” வெறுமையாக கேட்டான் ராம்.

முகத்தில் அடித்தாற்போல முன்னர் இவன் பேசிய பேச்சுகள் கண்முன் வந்து நிழலாட, சொந்த வீட்டில் சகஜமாய் பேசவும் இவனுக்கு சங்கோஜமாய் போனது.

“கூடப் பொறந்தவங்கள தூரமா நிறுத்தி பாக்க நினைக்கிறவனை, தூரமா நின்னு விசாரிக்கிறது தானே முறை?” அமைதியாக, குத்தலாக கேட்டார் பரிமளம்.

“அம்மா, எப்ப இருந்து இப்படி மாறிப் போன? நான் உன் புள்ளங்கிறது கூட உனக்கு மறந்து போச்சா?” எரிச்சலுடன் கேட்டான்.

“அப்படியா சாமி? இதை அப்பப்ப சொல்லி நீயும் ஞாபகப்படுத்திக்கோ ராசா!” மூக்கை உடைத்தது மனோன்மணியின் பேச்சு.

வீட்டு மருமகள் கிருஷ்ணாவின் முன், தான் காட்சிப்பொருளாக அமர்ந்திருப்பதே பெருத்த அவஸ்தையை கொடுத்தாலும், ‘இந்த வீட்டில் தானும் ஒரு தவிர்க்க முடியாத அங்கம் தான்.’ என்பதை எல்லோருக்கும் உணர்த்திவிடும் வேகம் அவனை உசுப்பேற்றியது.

“டைனிங் டேபிள் வரை வந்து உக்காந்தும், சாப்பிடுன்னு சொல்ல யாருக்கும் தோணல. அப்படியென்ன நான் கொறைஞ்சு போயிட்டேன்? எனக்கு நானே செர்வ் பண்ணி சாப்பிடப் போறேன். இது என் வீடு!” என்றவன் வேகமாய் அங்கிருந்த தட்டினை எடுத்து வைத்துக் கொள்ள, கிருஷ்ணா வாழையிலையை அவன் முன் வைத்தாள்.

“தேவையில்ல, எனக்கு தட்டு போதும்.” வீட்டு மனிதனாக முறுக்கிக் கொண்டவன், வரிசையாக உணவுப் பதார்த்தங்களை தட்டில் பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்க, அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டே அனைவரும் உண்டு முடித்தனர்.

இடையிடையே தனது இரட்டை சகோதரி சுமதியைத் தான் ஏவினான். “சிக்கன் எடு, ரசம் ஊத்து, பொரியல் வை!” அதட்டலாக சொல்லிக் கொண்டே இருக்க, வேண்டாவெறுப்பாய் செய்து கொண்டிருந்தாள்.

“பாவம்டி, பசியோடு வந்திருக்கான் போல.” சுதாமதி முணுமுணுக்க,

“வீட்டுக்கு கூட்டிட்டு போயி விருந்து வையி!” சுமதி கடித்தாள்.

“ஏதோ ரோசம் பாக்காம சாப்பிடுறானே… இல்லன்னா, நமக்கில்ல வயிறு வலிச்சிருக்கும்.” சாருமதி கிசுகிசுக்க, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் கிருஷ்ணா.

ராம்சங்கர் உண்டு முடித்த நேரத்தில் கதிரவனும் எழுந்து வந்திருந்தார். எல்லாம் மனையிவின் உபயம். ‘இப்ப எதுக்கு வந்திருக்கனாம்?’ பார்வையில் கேட்க, ‘யாருக்கு தெரியும்?’ என கையை விரித்தார் சுதாமதி.

தனது அறைக்கு செல்லக் கிளம்பிய அரவிந்தனையும் இழுத்துப் பிடித்து அமர வைத்திருந்தனர். வயிறு நிறைய உண்டு முடித்ததும் முன்னறைக்கு வந்த ராம், ஆயாசமாக அமர்ந்தான்.

“நீங்களும் இங்கேதான் இருக்கீங்களா மாமா? எல்லாரும் ரொம்ப மாறிட்டாங்க… வந்தவனை வான்னு கூட கூப்பிடல!” மனத்தாங்கல், அவனது ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்பட்டது. ஆனால் கதிரவனிடம் இருந்து பதில்தான் வரவில்லை. இவனுமே எதிர்பார்க்கவில்லை.

அண்ணனின் பார்வையை நேருக்குநேராய் சந்திக்கவோ, நயந்து பேசவோ தம்பி தயாராக இல்லை. தாயின் பதிலடிக்கு பிறகு பெண்களிடம் பேசுவதே வீண் என்ற முடிவிற்கு வந்திருந்தான். அனைவரையும் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான்.

பின் கதிரவனைப் பார்த்து, “என் குழந்தைங்க எங்கே இருக்காங்க மாமா? நான் அவங்களைப் பார்க்கணும்.” மிக சாதரணமாய் விசாரிக்க, அருவெறுப்பான பார்வையை அவன்மேல் படரவிட்டார்.

“உனக்கு கல்யாணமாகி, பிள்ளைங்க இருக்கா என்ன? சொல்லவே இல்ல!” நக்கலாய் கேட்டாள் சுமதி.

“நான் மாமாகிட்ட பேசுறேன், நீ பதில் பேசாதே!”

“உன்கிட்ட இறங்கி வந்து பேசுற அளவுக்கு இங்கே யாரும் சொரணை செத்துப் போயி கெடக்கல!” சுமதியும் குரலை உயர்த்த,

“அண்ணன்ங்கிற மரியாதையோட பேசப் பழகுடி!” பல்லைக் கடித்தான் ராம்.

“போடா வெண்ண… உன்னை மாதிரி ஒரு நொண்ணன் எனக்கு தேவையே இல்ல!” தர்க்கத்தில் சூடு ஏற ஆரம்பிக்க,

“சுமதி, பேச்சை நிப்பாட்டு. இவன் கேட்டு வந்த யாரும் இங்கே இல்லன்னு சொல்லி அனுப்பு!” கண்டிப்பான குரலில் இருவரையும் அடக்கிய அரவிந்தன்,

“மாமா, வாங்க, மேலே போகலாம்.” என்றழைக்க, இருவரும் படியேற ஆரம்பித்தனர்.

“எனக்கு பதில் சொல்லாம போறீங்க!” கோபத்தில் ராம் வெடித்த நேரத்தில், உள்ளிருந்து குழந்தை சிணுங்கும் குரல் கேட்டது.

பரிமளத்தின் அறைக்குள் படுத்திருந்த பிரணவி, முழிப்பு தட்டி அழைக்க, கிருஷ்ணா அங்கே விரைந்தாள். அரவிந்தனும் தம்பிக்கு பதில் சொல்ல விரும்பாமல் சுமதியையே பார்க்க,

“அதேன் அண்ணேன் சொல்லிட்டாரே… இன்னும் கேக்க என்ன இருக்கு?” பதில் கொடுத்தாள்.

“என்ன மாமா, நீங்களும் இவளை பேசவிட்டு வேடிக்கை பாக்குறீங்களா?” கதிரவனை நேரடியாக குற்றம் கூறிய நேரத்தில்,

“நாங்க எல்லாம் உனக்கு பிக்கல் பிடுங்கல் தானே தம்பி! உன் பஞ்சாயத்துக்கு அவரை ஏன் கூப்பிடுறே?” சுதாமதி முந்திக் கொண்டார்.

இவன் முன்னர் ஏவிய வார்த்தை ஏவுகணைகள், இவனையே திருப்பி வந்து தாக்கும் என கனவா கண்டான். ராம் மொத்தமாய் நொந்து போனான்.

பரிமளத்தை பார்த்து, “நீயாவது சொல்லேன் மா!” பாவமாய் கேட்க,

“தப்பை உணந்து திருந்தி வந்திருக்கியோன்னு நினைச்சு சந்தோசப்பட்டேன் சின்னவனே… என்னவோ போ, வீராப்பு பேசி முட்டிட்டு நிக்கிற!”

“நான் சரியாதான் இருக்கேன். எதுக்காக திருந்தணும்? அதான் பிள்ளைகளைக் கேட்டு வந்துருக்கேனே, பதில் சொல்லுங்க!”

“பெரியவனுக்கு தான்யா தெரியும். அவேன்கிட்ட கேட்டுக்கோ! அவனுக்கும் உனக்கும் என்ன பகையா? நேரடியா அவன்கிட்ட பேச எதுக்கு யோசிக்கிற?” தாயின் அதட்டலில் வாயடைத்தான்.

அந்த நேரத்தில் குழந்தையோடு வெளியே வந்த கிருஷ்ணாவை பார்த்தான். தூக்கம் கலைந்த குழந்தை பிஞ்சுக் கையால் கண்ணைக் கசக்கி, செப்பு வாயால் கொட்டாவி விட்டதே அவனது மனதை இளக்கம் கொள்ள வைத்தது. கண்ணெடுக்காமல் ரசித்தான். 

ஒரு நிமிடம், ‘இதுதான் என் குழந்தையோ?’ என ஆர்வக்கோளாறில் யோசித்தவன், ‘இல்ல, இல்ல. அவங்களுக்கு எப்படியும் ரெண்டு வருசமாவது முடிஞ்சிருக்கும். வளந்திருப்பாங்க!’ மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டான்.

சிரித்த முகத்துடன் கிருஷ்ணாவின் அருகில் வந்து குழந்தையை சொடக்கு போட்டு அழைக்க, அதுவும் கன்னம் குழி விழச் சிரித்தது.

“உங்களை மாதிரியே இருக்கா, பாப்பா!” என்றவனின் எண்ணம் மீண்டும் அவனது குழந்தைகளிடம் சென்றது.

‘ஆண் ஒன்று, பெண் ஒன்று என சொன்னாளே! பெண் குழந்தை ஹனியாவைப் போல் இருந்தால், ஆண் குழந்தை என்னைப் போல இருக்குமா?’

நினைவே சுகமாய் இருக்க, தனது பிள்ளைகளைப் பார்க்கும் ஆவல் கூடியது. ஆசையுடன் கையை விரிக்க, அழகாய் சித்தப்பனிடம் தாவினாள் குழந்தை.

“பாப்பா பேரென்ன?” கிருஷ்ணாவிடம் நேரடியாவே கேட்க,

“பிரணவி.” என்றாள்.

“ஒரு வருஷம் ஆகிடுச்சா?”

“இல்ல.”

“ரொம்ப சுட்டியா இருக்கால்ல லட்டுகுட்டி?”

“ம்ம்” இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தவளிடம், “நீங்களாவது சொல்லுங்க, என் குழந்தைங்க எங்கே இருக்காங்க?” காரியமாக கேட்டு நின்றான்.

குழந்தை அவன் தோள்களில் இருந்து பின்னால் இருந்த தகப்பனை, அத்தையை பார்த்து வாவென அழைத்து சிரித்தது.

“சொல்லுங்க அண்ணி!” என அழுத்திக் கேட்டவனின் அணைப்பு குழந்தையை கெட்டியாகப் பிடித்திருக்க, ‘ஏதாவது பேசி அனுப்பேன்.’ என கணவனை தவிப்புடன் பார்த்தாள் கிருஷ்ணா.

அவனோ பிடிவாதத்திற்கு பிறந்தவனாக, “சுமதி, குழந்தைய வாங்கிக்கோ. அவனை வெளியே போகச் சொல்லு!” கறாராய் கூற,

“மாட்டேன், எனக்கு என் குழந்தைங்க வேணும்.” சற்றே குரலை உயர்த்தி விட்டான் ராம்.

“சாக்லேட் வேணும்னு சொல்ற மாதிரி சாதரணமா பிள்ளையை கேக்குற… சரி, உன் பிள்ளைங்களை பார்த்து நீ என்ன பண்ணப் போற? அதை சொல்லு மொதல்ல!” கதிரவன்தான் பேசினார்.

“நான் கூட்டிட்டு போயி வளக்கப் போறேன்.” தடலாடியாக வந்திருந்தது பதில்.

ராம்சங்கர் இங்கே வரும்போது இந்த முடிவோடு வரவில்லை. பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்கிற ஆசை, உந்துதல் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இங்குள்ள அனைவரும் இவனை ஒதுக்கமாய் பார்த்த பிறகு, தனக்கான உரிமையான உறவுகள் வேண்டுமென மனது தேடியதோ என்னவோ, தன்னையும் மறந்து குழந்தைகளை தான் வளர்க்கப் போவதாக கூறி விட்டான்.

‘இது தற்போதைய ரோசத்தில் வந்த வார்த்தையா, அல்லது இவனது உறுதியான முடிவா?’ என்பது இவனுக்கே வெளிச்சம். இவனது பேச்சில் மெலிதாய் சிரித்துக் கொண்டார் கதிரவன்.

“சாப்பிட்டவன் கொஞ்சநேரம் தூங்கி எந்திரி சின்னவனே, தெளிவா பேசுவ!” அறிவுறுத்திய கதிரவனை கோபமாய் பார்த்தான்.

“ஒஹ்… சின்ன மாப்ளன்னு கூட கூப்பிட மாட்டீங்களோ? என்ன மாமா ஒரேடியா அண்ணேன் பக்கமே சாயுறீங்க! என் பிள்ளைகளை பத்தி நான் கேக்க கூடாதா? எனக்கு பதில் வாங்கிக் கொடுங்க!” கறாராக கேட்க, வேட்டியை மடித்துக் கொண்டே தம்பியிடம் வந்து நின்றான் அரவிந்தன்.

“என்னடா பெரியவர்ங்கிற மட்டு மரியாதை இல்லாம அவரையே கேள்வி கேக்குற? அன்னைக்கு குடும்பம் வேணாம், சொந்தபந்தம் எல்லாம் கழுத்துக்கு கத்தின்னு எங்களைத் தானே சொன்னே! இப்ப என்ன புதுசா வந்து நிக்கிற?

எங்களை தள்ளி நிறுத்தி பார்த்த மாதிரி, நாளைக்கு நீ வளக்கிற பிள்ளைகளையும் தள்ளி நிறுத்தி பாக்கத் தோணும். பிள்ளைங்கள வளக்கிறது எல்லாம் உனக்கு சரிபட்டு வராது. வந்ததுக்கு சாப்பிட்டாச்சுல… அதுவரைக்கும் போதும், கிளம்பு நீ!” உத்தரவாக கூறிக்கொண்டே, அவன் கையில் இருந்த மகளையும் வாங்கிக் கொண்டான்.

“அதெப்படி நீ சொல்லலாம்? நீ மட்டும் பத்து புள்ளைகளை வளத்து பார்த்துட்டு தான் பெத்துகிட்டியா?” ஹனியாவிடம் பேசிய அதே எகத்தாளத்தை கையில் எடுக்க, கொதிப்படைந்த அரவிந்தன் தம்பியின் சட்டையை பிடிக்க வந்த நேர்த்தில் கிருஷ்ணா பேசி விட்டாள். 

“வார்த்தையை அளந்து பேசுங்க ராம்… பிள்ளை வளர்ப்பெல்லாம் நீங்க நினைக்கிற அளவுக்கு ஈசி புரொசீஜர் இல்ல!” கிருஷ்ணாவின் குரல் முதன்முறையாக வெகு அழுத்தமாக வந்தது.

“மொதல்ல, குடும்பத்துல உங்களை சரி பண்ணிக்கோங்க! அப்புறமா உங்க பிள்ளைகளை பத்தி யோசிக்கலாம்.” தன்மையாக கூறியதையும் ராம் ஏற்றுக் கொள்ளவில்லை. 

“வீட்டு மருமக பொறுப்பை எங்கம்மாவோட நிறுத்திக்கோங்க… எனக்கு அட்வைஸ் பண்ற இடத்துல நீங்க இல்ல!” 

“இவனை அடிச்சு துரத்துற வரைக்கும் இவன் அடங்க மாட்டான் மாமா!” பொறுமையிழந்த அரவிந்தன் குழந்தையை அருகில் நின்றிருந்த சாருமதியிடம் ஒப்படைத்து விட்டு தம்பியை அடிக்க விரைந்தான்.

“ரவி, கொஞ்சம் பொறுமையா இருங்க!” 

“தம்பி பொறுமை இல்லாம பேசுறான் அரவிந்தா, நீயும் கோபப்படாதே!” கிருஷ்ணாவும், சுதாமதியும் தடுக்க முன்வந்த நேரத்தில், 

“என்ன அடிச்சிருவியா நீ? பொண்டாட்டிய பேசினதும் ரோசம் வருதோ!” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசியவனை கன்னத்தில் சராமாரியாக அறைந்துவிட்டே ஓய்ந்தான் அரவிந்தன்.

“பொண்டாட்டிய பேசும்போது ரோசம் வரலன்னா அவன் ஆம்பளையே இல்லடா! இதெல்லாம் உன்னை மாதிரி தெருவுக்குதெரு நாக்கை தொங்கப் போட்டுட்டு போற சொறி நாய்களுக்கு தெரியாது. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ… உன் பிள்ளைகளை உன்னோட கூட்டிட்டு போகலாம்னு நினைக்கிற நினைப்பை அழிச்சுடு!

அதுதான் உனக்கு நல்லது. அந்த பிள்ளைகளுக்கும் நல்லது. இதுக்கு மேலே ஒரு நிமிஷம் இருந்தாலும் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிடுவேன்டா ராஸ்கல்!” பல்லைக் கடித்துக் கொண்டு பேசியவனை பார்த்து ஓவென்று கதறி அழுதார் பரிமளம்.

அத்தனை சீக்கிரத்தில் கோபம் கொள்ளமாட்டான் அரவிந்தன். அப்படியே கோபம் இருந்தாலும் பொறுமையை எந்த நிலையிலும் கை விடமாட்டான். ஆனால் இன்றைக்கு மகன்களின் இடையில் எல்லாமே எல்லைமீறிப் போயிருந்தது.

சகோதரர்கள் இருவரும் முட்டிக் கொண்டு நிற்கும்போதே பரிமளத்தின் கண்களில் தன்னால் குளம் கட்டிக் கொண்டு விட்டது. பெரியவனின் விருப்பம் இல்லாமல் குழந்தைகளின் விவரத்தை கூற அவருக்கும் வெகுவான தயக்கமே!

தனது நேரடிக் குழந்தைகளாக அவர்களை காண்பிக்க அரவிந்தன் மேற்கொண்ட முயற்சிகளை எல்லாம் அறிந்தவராக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக நின்று விட்டார். மற்றவர்களுக்கும் அதே நினைவே!

கணவனோ, மனைவியோ மனமுவந்து சொன்னால் ஒழிய பிள்ளைகளை பற்றிய விவரங்கள் ராமிற்கு தெரிய வர வாய்ப்பில்லை. சகோதரர்களை விரோதிக்க வைத்த இந்த சூழ்நிலையை எவ்வாறு மாற்றுவது என்று அனைவருமே புரியாமல் நின்றனர்.

“என்ன மாப்ள? அவன்தான் வெவரம் இல்லாம பேசுறான்னா, நீயும் கையை நீட்டிட்டு இருக்க?” அரவிந்தனை கண்டித்த கதிரவன்,

“இந்தா சின்னவனே… நீ கிளம்புய்யா! இப்போ சூழ்நிலை சரியில்ல.” ராமிடம் கூறிவிட்டு மறந்தும் கூட, ‘பிறகு வா, பார்க்கலாம்.’ என்ற வார்த்தையை விடவில்லை.

அதை நன்றாகவே கவனித்த ராம், “அப்ப நீங்களும் சொல்ல மாட்டீங்கள்ல… நான் போலீஸுக்கு போவேன். என் பிள்ளைகளை கொண்டு போயி வித்துட்டாங்கன்னு உங்க எல்லார் மேலயும் கேஸ் ஃபைல் பண்ணுவேன்.” கோபத்தில் வாயில் வந்ததை உளறிக் கொட்டினான்.

“இவ்ளோ சொல்லியும் அடங்குறானா? இவனை எல்லாம்.” எகிறிய அரவிந்தனும், “இங்கே நின்னு பேசிட்டு இருக்காதே… என்ன தோணுதோ செய்! நானும் அந்த தஞ்சாவூர் கிழவனை கூட்டிட்டு வர்றேன். உன்னை பார்த்து ஊர் சிரிக்கட்டும். அப்புறம் உன்னை கோர்ட்டுல பாக்கணுமா இல்ல, அடக்கம் பண்ண இடம் பாக்கணுமான்னு அந்த பாய் முடிவு பண்ணட்டும்!” சற்று அதிகப்படியாகவே பேசிவிட்டான்.

“இப்ப வாய மூட மாட்டீங்களா ரெண்டுபேரும்? பொம்பளை பிள்ளைகளை வச்சிட்டு, வீட்டுல பேசுற பேச்சாடா இது? உன்கிட்ட இதை எதிர்பார்க்கல அரவிந்தா!” கதிரவனும் கோபத்துடன் கண்டித்தார்.

“அவேன் மட்டும் எதுல கொறை வச்சான் மாமா? அண்ணன சொல்றீங்க!” சுமதி இடையில் வர, 

“வாயை மூடு சுமதி, நேரம் காலம் தெரியாம பேசாதே!” அவளை அதட்டிய கதிரவன்,

“யப்பா ராமா… நீ மொத இங்கே இருந்து கிளம்பு!” வம்படியாக அவனது கையைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றார்.

“மாமா, இது சரியில்ல!”

“…” 

“என்னை எல்லாருமா சேர்ந்து ஏமாத்துறீங்க!”

“…” 

“ஏதோ நடந்திருக்கு, என்னனு சொல்லிடுங்க!”

“… “

“என் பிள்ளைகள எங்கே வச்சுருக்கீங்க? என்ன பண்ணீங்க?” ராம் கேட்டுக்கொண்டே வர, எதற்கும் பதில் பேசாமல் வந்தார் கதிரவன்.

“கோபத்துல உளறிட்டு இருக்க சின்னவனே… எங்கே தங்கி இருக்கே? சொல்லு, நான் ஆட்டோ பிடிச்சு அனுப்புறேன்!” என்று தோள் அணைத்தவரை சட்டென்று தட்டிவிட்டான்.

“எனக்கு போகத் தெரியும், விடுங்க மாமா!” விருட்டென விலகிக் கொண்டு நடந்தான் ராம். 

‘உண்மையை அவனிடம் சொல்லி விடலாமா?’ என கதிரவனும் ஒருநொடி யோசித்தார். பின்னர் முடிவினை மாற்றிக் கொண்டார்.

‘பிள்ளைகளின் வளர்ப்பில் இருவரின் அர்ப்பணிப்பும் குழந்தைகளிடம் அவர்கள் காட்டும் அன்னியோன்யத்தையும் இவனால் கொடுத்து விட முடியுமா? அவசரக்காரன் பொறுமையின்றி எதையாவது செய்து பிள்ளைகளின் வாழ்வையே நாசமாக்கி விடுவான்.’ என்ற பயமும் சேர்ந்து அவரின் வாய்க்கு பூட்டினை போட்டது.

ஏதேதோ யோசனையுடன் இவர் வீட்டிற்கு வரும் நேரத்தில் அரவிந்தன் கொதித்துக் கொண்டிருந்தான். எக்காரணம் கொண்டும் பிள்ளைகளைப் பற்றி யாரும் அவனிடம் சொல்லக்கூடாது என்ற தடை உத்தரவை போட்டுவிட, மீறமுடியாமல் அனைவரும் சரியென்று தலையசைத்தனர்.

“கொஞ்சநாள் குழந்தைங்க இங்கே இருக்க வேணாம்னு யோசிக்கிறேன் மாமா!” சொன்னவனை அனைவரும் யோசனையாகப் பார்த்தனர்.

“எப்படியும் ரொம்பநாள் இவன் இங்கே தங்கமாட்டான். அங்கே இருக்கிற சொகுசுக்கு ஏங்கி பறந்து போயிடுவான். அது வரைக்கும் பிள்ளைகளை அவன் கண்ணுல காட்டக்கூடாது. இப்ப வந்த மாதிரி எப்போனாலும் வந்துட்டு போறதுக்கு சான்ஸ் இருக்கு. அதான் யோசிக்கிறேன்!” என்றவனை ஆழமாய் பார்த்தார் கதிரவன்.

ஒன்றரை வருடமே வளர்த்தவன் என்றாலும் குழந்தைகளின் மீதான பாசத்தில் துடித்துக் கொண்டிருக்கிறான் அண்ணன். தனதுரிமை, தன்பிள்ளை என்று சட்டமாய் வந்து நின்று கேட்டுக் கொண்டிருக்கிறான் தம்பி. யாரைப் பரிந்து கொண்டு, யாரை விலக்கி வைப்பது? இதற்கு எப்படி தீர்வு காணமுடியும்?

“தப்பா எடுத்துக்காத மாப்ள… நடந்ததை அவன்கிட்ட சொல்லி புள்ளைங்க முகத்தை காட்டுனா தான் என்ன?” அமைதியாக பொறுமையுடன் கேட்டார் கதிரவன்.

“அதெல்லாம் வேண்டாம்ண்ணே! நிதானமில்லாம முடிவெடுத்து பிள்ளைகள அலைகழிக்க வைச்சிடுவாரோன்னு தோணுது.” அவரசரமாக மறுத்தாள் கிருஷ்ணா. அவளைத் தொடர்ந்தே அரவிந்தனும் மறுப்பு தெரிவித்தான்.

“இவன் இருக்கிற நிலமையில பிள்ளைகளை இங்கே இருந்து கூட்டிட்டு போயிடுவான் மாமா! அப்புறம் என்ன செய்வான்னு தெரியாது. சுத்த அர கிறுக்கனா இருக்கான்.” என பல்லைக் கடித்தான்.

“இங்கேதான் இருப்பாங்கன்னு கண்டீசனோட காட்டினா என்ன தம்பி?” மனோன்மணி கேட்க,

“புரிஞ்சுக்க மாட்டான் த்தே! நம்மளதான் தப்பா பேசுவான். பாத்தீங்கள்ல… கொஞ்ச நேரத்துல எப்படி பேசினான்னு?”

இப்படி பல யோசனைகள் முன்வைத்தும் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போடப்பட்டது. எப்படியாவது குழந்தைகளை பத்திரப்படுத்த வேண்டுமென்று பரபரத்தான் அரவிந்தன்.

“சுமதி, பசங்களை கூட்டிட்டு ரெண்டு வாரம் போல உன் மாமியார் வீட்டுல போயி தங்கிட்டு வா! நான் கொண்டு போய் விடுறேன். இப்ப ஆறு மணிக்கு போல கிளம்பலாம்.” அரவிந்தனின் முடிவினை யாரும் பரிசீலிக்கும் நிலையில் இல்லை.

“சரிண்ணே… ஆனா நீ டீலர் பார்த்து பேச இன்னைக்கு நைட் பெங்களூர் போகணும்னு சொன்னியே?”

“டிரெயின் கேன்சல் பண்ணிட்டு வேன்ல போயிட்டு வர்றேன். உங்களை அப்படியே கொண்டு போய் விட்டுட்டே பெங்களூர் கெளம்புறேன். நீ மாப்பிள்ளைக்கு ஃபோன் போட்டு உடனே வீட்டுக்கு வரச் சொல்லு. நான் விவரம் சொல்றேன்” என்றவன்,

மனைவியிடம் திரும்பி, ”நீ அப்புக்கும் அம்முக்கும் ட்ரெஸ் பேக் பண்ணி வை சாலா! அப்படியே மருந்து, சிரப், பொம்மை எல்லாம் டிராலில போட்டு விடு! வேன்லதானே. அள்ளிட்டு போவோம்.” முடித்துவிட்டு தாயிடம் வந்தான்.

“என்னம்மா, என் முடிவு சரியா? உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே? நாளபின்ன என்னை கலந்துக்காம அனுப்பி வச்சுட்டடான்னு சொல்லக்கூடாது.” சன்னச் சிரிப்போடு கேட்க அமைதியாக மறுத்தார் பரிமளம். 

குழந்தைகள் தத்தெடுப்பினை தன்னிடம் முன்கூட்டியே சொல்லாமல் செய்து முடித்ததை சுட்டிக்காட்டியே சிறிது நாட்கள் மகனிடம் பேசாமல் முகம் திருப்பிக் கொண்டு நடமாடிக் கொண்டிருந்தார் பரிமளம்.

அன்றைய தினத்தில் மனதில் இருந்த பாரத்தை மகனிடம் இறக்கி வைத்து விட்ட பிறகு, இது விஷயமாய், மகனை வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார்.

“எந்த காரியமா இருந்தாலும் வீட்டுல சொல்லிட்டு செய்யுறதுக்கு என்ன? உன்னை யாரு தடுக்கப் போறாங்க!” என்று பெற்றவளாக பிள்ளையை கடிந்து கொள்ள, வாயைமூடி வாங்கிக் கொண்டான் அரவிந்தன்.

“இந்த பிரசாதம் கொடுக்க ஆளில்லையேன்னு தான் நானும் கவலைபட்டுட்டு இருந்தேன். வெல்டன் அத்தே!” கிருஷ்ணாவும் சேர்ந்து கொண்டதில் வீட்டில் இவனது லட்சார்ச்சனை முடிவிற்கு வர பல நாட்கள் தேவைப்பட்டது.

அதை மனதில் வைத்து இப்போது அரவிந்தன் கேட்க, பரிமளத்திற்கும் அந்த நேரத்து இறுக்கத்தை தாண்டி மெலிதான சிரிப்பு தொற்றிக் கொண்டது.

“உனக்கு எது சரின்னு தோணுதோ அதை செய் அரவிந்தா… அவங்க உன் புள்ளைங்கய்யா!” என்ற வார்த்தையில் சாந்தமடைந்தான்.

அவனது ஏற்பாட்டினை சுதர்சனிடம் கூறிவிட, அவனும் சோழவந்தானில் உள்ள தனது தாயிடம் தெரிவித்து விட்டான்.

“உம் பேத்தி உன்ன பத்தியே கேட்டுகிட்டு இருக்கா ஆத்தா… அவ பேசுறத பார்த்து அம்முவும் கேக்குறா! பசங்களை எல்லாம் கூட்டிட்டு வர்றேன். உன் காட்டு வேலைய ஒரு வாரத்துக்கு ஒதுக்கி வை!” என்றதும் அகமகிழ்ந்து போனார் சந்திராம்மா.

மகன் குடும்பத்தை தாங்கிக் கொள்வதில் என்றும் சுணக்கம் காட்டாத சந்திராவிற்கு அப்பொழுதே தீபாவளி வந்து விட்டதை போல இருந்தது. தடபுடலாக வீட்டினை ஒதுக்கி வைத்து நிறைந்த மனதோடு பேரப்பிள்ளைகளை வரவேற்க ஆயத்தமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!