பூந்தளிர் ஆட… 3

பூந்தளிர் ஆட… 3

பூந்தளிர்-3

விசால கிருஷ்ணாக்ஷி அந்த வீட்டின் மிகப் பெரிய மனுஷி(!) பத்துவயது சாத்விகாவுடன் உள்ளறைக்குச் செல்ல, அவளின் பின்னோடு அரவிந்தனும் உள்ளே வந்து ஷோஃபாவில் அமர்ந்தான். பத்து நிமிட சந்திப்பிற்கு இப்படியும் ஒரு பாதுகாப்பு!

“கொஞ்சம் தள்ளி உக்காருங்க அங்கிள்!” சிறுமி சொல்லவும்

“ஏன் சாமி?” புரியாமல் கேட்டான் அரவிந்தன்.

ஒரு ஆள் அமரும் குஷன் ஷோஃபா மற்றும் ஒரு கட்டில் மட்டுமே அந்த அறையில் அமர்வதற்காக இருந்தது. இதில் ஷோஃபாவில் தன்னோடு சிறுமியையும் ஒட்டிக்கொண்டு அமரவைத்துக் கொள்ள இவனுக்கே சங்கடம் ஏற்பட்டது.

“எங்கப்பா உங்க பக்கத்துலயே இருக்க சொல்லி இருக்காங்க!” என்றவுடன் இவனுக்குள் இருந்த உற்சாகம் சட்டென்று வற்றிப் போனது.

“அதனால என்ன சாமி? நீங்க உங்க அப்பாரு சொன்னாப்புலயே உக்காருங்க!” என்றவன் சிறுமியை ஷோஃபாவில் அமர வைத்து விட்டு பக்கத்தில் இருந்த ஸ்டூலில் இவன் அமர, இப்பொழுது கிருஷ்ணா அவஸ்தையாக உணர்ந்தாள்.

இவள், சாத்வியை, ‘மாற்றி உட்கார்!’ எனச் சொல்லும் முன்பே சிறுமி அடுத்து பேச ஆரம்பித்திருந்தாள்.

“உங்களுக்கு இந்த ஆஸ் கலர் சர்ட் நல்லாவே இல்ல அங்கிள், டார்க் புளூ போடுங்க!”

“ஏன் சாமி?”

“அது…” வெகுளிப் பார்வையில் சித்தியை பார்க்கவும், “சாத்வி!” என்றழைத்து பார்வையால் கிருஷ்ணா கண்டிக்கவும் சரியாக இருந்தது.

“அது தெரியல அங்கிள்!” நொடியில் பின்வாங்கினாள் சாத்விகா.

“புள்ள ஏதோ சொல்ல வருது. என்னன்னுதான் கேப்போமே டீச்சர்!”

“அவ விளையாட்டுத்தனமா ஏதாவது சொல்லுவா மாஸ்டர்!”

“உங்களுக்கும் நான் மாஸ்டரா?”

“எல்லாரும் அப்படித்தான் கூப்பிடுவாங்கன்னு சுமதி சொன்னாங்க, அதான்…” இவள் இழுத்த இழுவையில்

“கஷ்டம்டா சாமி!” முணுமுணுத்துக் கொண்டான்.

அந்த நேரத்தில் சுமதியின் மகன் சஞ்சய் அங்கே துள்ளிக் கொண்டு ஓடிவர, “நீயும் வா சாமி!” அவனையும் எந்தவித சுணக்கமும் இன்றி அறைக்குள் அழைத்துக் கொண்டான் அரவிந்தன்.

அடுத்த நொடியே சாத்விகாவோடு சிறுவன் அங்கேயே விளையாட ஆரம்பித்து விட்டான். நம்பிக்கையான இடங்களுக்கு சென்று விட்டால் பிள்ளை எங்கு, என்ன செய்கிறான் என ஊடுவிப் பார்ப்பதை பெற்றோர் தவிர்த்து விடுவர்.

அப்படியே சுமதியும் மகனைப் பார்க்காமல் அவன்போக்கில் விட்டு விட்டாள். இங்கே தனியாகப் பேச வந்த இருவருமே குழந்தைகளின் செயலை இடையூறாக நினைக்கவில்லை.

“எல்லாருமே சாமிதானா?” கிருஷ்ணா கேட்க,

“வேலை பாக்கற பசங்களுக்கும் நம்ம வீட்டு பசங்களுக்கும் வித்தியாசம் தெரிய வேணாமா டீச்சர்?” அரவிந்தனின் பதில்!

“ஷப்பா… எனக்கு ஸ்கூல்ல நிக்கிற நெனைப்புதான் வருது ஓயாம டீச்சர், டீச்சர்னு…” இறங்கிய குரலில் குறைபட்டாள் கிருஷ்ணா.

“பொதுவா லேடீசை, அக்கா, அம்மான்னு முறையோட கூப்பிட்டுத்தேன் பழக்கம். சட்டுன்னு பேரு சொல்ல வர மாட்டிக்கு!“

“அங்கிள், நாங்க விளையாட வெளியே போகவா? சஞ்சு என்னை இழுக்குறான்!” சாத்விகா இடையிட்டு கேட்கவும் இருவரின் பேச்சும் தடைபட்டது.

முறையானதொரு பேச்சு வார்த்தை என்பது இருவருக்குள்ளும் கேள்விக்குறியே! அதைக் குறையாக எண்ணிக் கொள்ளவும் அவர்களுக்கு நேரமில்லை.

“போங்க சாமி!” அரவிந்தன் உடனே வழிவிட்டான்.

அந்த நேரத்தில் அவனது பேன்ட் பாக்கெட்டை தடவிய மூன்று வயது சஞ்சு, “சாக்கி குடு மாமா!” அதிகாரமாய் கேட்க, அதற்குமே முகம் சுழிக்காமல் அதட்டாமல் சாக்லேட்டை எடுத்துக் கொடுத்தான்.

“இன்னும் உங்ககிட்ட எத்தனை சாக்லேட் இருக்கு?”

“அது இருக்கு டீச்சர் நெறைய… உங்களுக்கும் வேணுமா?”

“ரொம்ப முக்கியம். இப்ப இதுங்க போனதும் பாக்கி இருக்கிற அரை டிக்கெட் எல்லாம் லயன் கட்டி வரும், அதுகளுக்கு கொடுக்கத்தேன்! சாத்விகிட்டயே கொடுத்து விடுங்க!” அலுப்போ சலிப்போ இல்லாத சற்றே கண்டிப்பான தோரணை.

அவள் சொன்னதைப் போலவே சில சாக்லேட்டுகளை எடுத்துக் கொடுக்கும் பொழுது பேண்ட் பாக்கேட்டில் இருந்த பத்து ரூபாய் நாணயம் கைதவறி கட்டிலுக்கு கீழே உருண்டோடியது.

பிள்ளைகளை அழைத்து எடுக்கச் சொல்வதற்குள் அவர்கள் வெளியே ஓடி இருந்தார்கள். அப்பொழுதே குனிந்து எடுக்க இருவருமே சங்கடமாக உணர்ந்தனர்.

“பரவாயில்ல டீச்சர், நீங்க மெதுவா எடுத்து வைங்க!” இவனது அழைப்பிற்கு அலுப்பாய் உருட்டு விழித்தாள் கிருஷ்ணா.

“இப்படி கூப்பிட்டா நானும் அப்படியே ப்ளே பண்ண வேண்டி இருக்கும்.” என்றதும் மலர்ந்த புன்னகை அரவிந்தனிடத்தில்.

‘புதியவனுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.’ என்ற தயக்கம் கிருஷ்ணாவிற்கு சிறிதும் இல்லை. அதுவே அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

“டீச்சர்ன்னு கூப்பிட்டதுக்கு சலிச்சுட்டு, நீங்க டீச்சராவே நடந்துக்குறீக!” அரவிந்தனின் பேச்சில் தனது தடையகன்ற செயலை நினைத்து மெலிதாய் சிரித்துக் கொண்ட கிருஷ்ணா,

“எங்கேயும் தயங்கி நின்னு பழக்கமில்ல!” பிசிறில்லாமல் தெளிவாகவே பதிலளித்தாள்.

“நீங்க பாக்கற வேலை அப்படி!”

“பிளஸ் டூ படிக்கிறப்பவே டியூசன் எடுக்க ஆரம்பிச்சு, அப்புறம் ஸ்கூல் டீச்சர்ன்னு பிள்ளைங்க கூட எந்நேரமும் பேசி இப்படியே பழகிப் போயிடுச்சு எனக்கு!”

“நம்மள தவிர்த்து வேற எல்லா விசயமும் பேசுறோம்னு நினைக்கேன்!” விளையாட்டாக அரவிந்தன் கூறியதும்,

நாக்கைக் கடித்துக் கொண்டு சிரித்தவள், “எஸ்… சொல்லுங்க, எங்கிட்ட என்ன கேக்கணும்?” கிருஷ்ணா நேரடியாகவே கேட்டாள்.

“அதுதான் தெரியல. நீங்க சொல்லுங்க, படிக்காத என்னை கட்டிக்க உங்களுக்கு சம்மதமா?”

“படிப்புக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்மந்தம் மாஸ்டர்?”

“நான் என்னத்த கண்டேன்! ஊரெல்லாம் இனம் இனத்தோடு, படிப்பு படிப்போடுன்னு தானே முடிச்சு போட்டு வைக்குறாக!”

“படிப்பறிவை விட அனுபவப்பட்டு தெரிஞ்சுக்கிறதுதான் காலத்துக்கும் கை கொடுக்கும். அந்த வகையில நீங்க ஏற்கனவே மாஸ்டர் பட்டம் வாங்கிட்டீகளே! பின்ன எதுக்கு படிக்காதவன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கீக!”

“அதுக்கில்ல டீச்சர், படிப்பு விசயத்துல சட்டுன்னு ஒரு தயக்கம் வந்து உக்காந்துடுதே!”

“எம்.எஸ்,சி. எம்.எட் படிச்சும் நான் கைநீட்டி சம்பளம் வாங்குற இடத்துல இருக்கேன். நீங்க ஸ்கூல் படிப்போட இருந்தாலும் பல குடும்பங்களுக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளியா இருக்கீங்க! இப்ப சொல்லுங்க. இங்கே முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா?”

“என்ன டீச்சர் திடீர்னு கம்யூனிசம் பேசுறீக?”

“உங்க வழியில புரிய வைக்க முயற்சி பண்ணேன், தட்ஸ் ஆல் மாஸ்டர்!”

“எனக்கு இந்த பாடம் வேணாம் டீச்சர். ரொம்ப அலர்ஜியா இருக்கு!” சிரிப்புடன் கூறிய நேரத்தில் சாத்விகா இவர்களை அழைக்க வந்து விட்டாள்.

இப்பொழுது இவளின் பின்னே நான்கைந்து குழந்தைகளும் உள்ளே நுழைந்தன. அனைவரும் அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள்.

“இந்த மதுரை மாமாதான் எனக்கு சாக்கி கொடுத்தாரு, இவர்கிட்ட கேளுங்க!” என அனைவரையும் அரவிந்தனிடம் கோர்த்துவிட்ட சாத்விகா,

“சித்தி, மாமாவை கூட்டிட்டு வெளியே வருவியாம், லேட் ஆகுதாம்!” தகவலை ஒலிபரப்பு செய்திட,

“யாருடி இவ்வளவு தெளிவா சொல்லி அனுப்பினா?”

“அம்மாவும், உன்கிட்ட பேர் கேட்டாங்களே அந்த ஆன்ட்டியும் தான்!” என்று சுதாமதியையும் கோமளவல்லியையும் குறிப்பிட்டாள் சாத்விகா.

அந்த நேரத்தில் இருக்கும் சாக்லேட்டுகளை கொடுத்து முடித்து சிறுவர்களை அனுப்பி வைத்தான் அரவிந்தன்.

“இப்பவே கண்ணை கட்டுற ரேஞ்சுல இருக்கு. எப்படி இவுக எல்லாரையும் சாமாளிச்சு…” முணுமுணுப்போடு கிருஷ்ணா அறையை விட்டு வெளியேறும் நேரத்தில்,

“வீட்டுல என்னன்னு சொல்ல டீச்சர்?” அரவிந்தனின் கேள்வியில் நின்றாள்.

“உங்களுக்கு என்ன தோணுது?” இவளும் சகஜமாகவே கேட்க,

“பெரிய குடும்பம். கல்யாணம் முடிஞ்ச பொறவு நம்ம வீட்டுல சொல்றத பொறுத்துதான் நீங்க வேலைக்கு போறதும் இருக்கு.” தயக்கமாய் அரவிந்தன் கூறினான்.

“பெரிய குடும்பமா இருந்தா நல்லதுதானே! இந்த ஏப்ரல் வரைக்கும் நான், என் வேலையில கட்டாயமா இருந்தே ஆகணும் மாஸ்டர். அதுக்கு பிறகு நம்ம சௌகரியம்தான்!” கிருஷ்ணா தெளிவாய் சொன்னதில் மனம் நிறைந்து போனது.

“ரொம்ப சந்தோசம்! மதுரை வெயிலையும் போக்குவரத்தையும் பழக்கிக்க நீங்க தயாராகிக்கோங்க!” புன்னகை முகமாய் கூறியவனை நேருக்குநேராக மலர்ந்த முகத்துடன் பார்த்தாள் கிருஷ்ணா.

“இந்த வருஷம் வீரபாண்டித் திருவிழாக்கு எங்க வீட்டு மாப்பிள்ளையா வர நீங்களும் ரெடியாகிக்கோங்க மாஸ்டர்!” சிரிப்போடு கூறினாள்.

“உங்க வீட்டுல சரின்னு சொல்லிட்டங்களா?”

“அவங்களுக்கு திருப்தியான பிறகுதானே பொண்ணு பாக்கவே கூப்பிட்டது!” உடைத்து சொன்னவள்,

“அங்கே எப்படி?” அதே தோரணையில் கேட்டாள்.

“பரிசம் போடுற வேகத்துலதான் எல்லாரும் வேன் பிடிச்சுட்டு வந்துருக்காக!” பிள்ளைகளின் நடுவில் இருவரின் சம்மதங்களும் தயக்கமின்றி பகிர்ந்து கொண்ட நேரத்தில் சுமதி அங்கே வந்து நின்றிருந்தாள்.

“என்ன சின்னக்குட்டி? நீ என்ன நினைக்கிற!” அரவிந்தனின் கேள்விக்கு,

“அதேன், நீ சொல்லிட்டியே ண்ணே! பின்ன என்ன எங்கிட்ட கேட்டுகிட்டு?” என்றபடியே வரவேற்பறையை அடைய அனைவரின் பார்வையும் இருவரை மட்டுமே மொய்த்தது.

“இப்ப கெளம்புறோம் கோவர்த்தன். போயி தாக்கல் சொல்லி விடுறோம்.” கதிரவன் விடைபெற்றுக் கொள்ள ஆரம்பிக்க, கிருஷ்ணாவின் பார்வை அரவிந்தனை ஆராய்ச்சியாய் பார்த்தது. அவனுக்கோ நேரடியாக பதில் பேசுவதற்கும் இப்போது பெரும் தயக்கம்.

வீட்டின் மூத்தவராக சபையில் அமர்ந்திருக்கும் அக்கா கணவரின் பேச்சினை மீறி ஒருசொல் வந்தாலும் மானப் பிரச்சனை, கௌரவக் குறைச்சல் என்று அதையே கொடிபிடித்து ஆட ஆரம்பித்து விடுவார் கதிரவன்.

‘என்ன செய்வது?’ என்று யோசித்த நேரத்தில் சாத்விகா, சஞ்சுவை அங்கே கொண்டு வந்து விட்டாள்.

“நெக்ஸ்ட் எப்ப வருவ சஞ்சு?” குழந்தையை பார்த்து கேட்டவள்,

“சோ க்யூட்பாய்! இவனை, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க மொபைல் நம்பர் தாங்க அங்கிள். நான் வீடியோ கால்ல பேசறேன்!” சாத்விகா அரவிந்தனிடம் கேட்க, உள்ளுக்குள் குளிர்ந்தே போனான்.

“இனிமேட்டு அடிக்கடி வருவோம் பாப்பா… உன் நம்பரை சொல்லு, நான் மிஸ்டு கால் குடுக்கேன். அடிக்கடி பேசலாம்!” என்றபடி ஜாடையாக கிருஷ்ணாவை பார்த்தான்.

“மாப்ள என்ன பழக்கம் இது?” கதிரவனின் பேச்சில்,

“சின்னபுள்ள ஆசையா நம்பர் கேக்குது மாமா… அடுத்தடுத்து என்ன ஏதுன்னு தாக்கல் சொல்ல ரெண்டு வீட்டுக்கும் ஒரு கனெக்சன் வேணுமில்ல?”

“அதுக்கு கோவர்த்தன் கிட்ட நான் நம்பர் கேட்டுக்கறேன் அரவிந்தா!”

“மாமா, சின்ன புள்ளக பேசிக்க நான் நம்பரை வாங்குறேன். செத்தநேரம் கம்மின்னு இருங்க!” என்றவன், சாத்வியின் முகத்தை பார்க்க, சுமதியிடம் அலைபேசி எண் எழுதிய துண்டுச் சீட்டு ஒன்று நீட்டப்பட்டது.

“ஸ்கூல் டைம்ல கூப்பிடாதீக! சாயந்திரம் டியூசன் முடிச்சு ஏழு மணிக்கு மேல ஃப்ரீயா இருப்பா, அப்போ கூப்பிடுங்க!” சுமதியிடம் தகவலாகச் சொன்னாள் கோமளவல்லி.

“இது பொண்ணோட வெவரமா, இல்ல புள்ளையோட வெவரமான்னு தெரியலயே?” முணுமுணுத்த சுமதி புன்சிரிப்போடு அலைபேசி எண்ணைக் குறித்துக் கொள்ள,

“சாத்வியோட படிப்பு விசயமெல்லாம் கிருஷ்ணாதான் பாத்துக்கறா! ஸ்கூல்ல கூட அவ நம்பரைத்தான் சாத்வி நம்பர்னு கொடுத்திருக்கோம்!” என்றதும் அடுத்தநொடி அந்த துண்டுச்சீட்டு சுமதியின் கையை விட்டு பறந்து, அரவிந்தனின் கையில் தஞ்சம் அடைந்திருந்தது.

சாத்விகாவிடம் ஜாடையாக பேசியே வாங்க வைத்திருந்தான். இதை பார்த்து பெரியவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டதில் இளையவர்களும் இணைந்து கொண்டனர்.

“ஏன் மணி, இன்னமும் போயி தாக்கல் சொல்லி விடுற முடிவுலதான் இருக்கீகளா?” கிருஷ்ணாவின் பாட்டி விசாலம் கேட்க,

“பெரிய மருமகேன் செரின்னு சொன்னா, நிச்சயத்துக்கு நாள் பார்த்துடலாம் விசாலம்.” மனோன்மணி ஏற்றி விட்டு, கதிரவனின் முகம் பார்க்க,

“பின்ன என்ன ண்ணே? பாக்க சொல்லிடலாம் ல்ல!” முகிலனின் பின்பாட்டில் கதிரவன் ஆமென்று தலையசைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.

“மாமாக்கு சம்மதம்ந்தேன் அத்தே… சட்டுன்னு விசேசம் வரைக்கும் போகணுமான்னு யோசிக்கிறாக!” அரவிந்தன் மேற்கொண்டு ஜால்ரா அடித்ததில்,

“நிச்சயத்துக்கு நாள் குறிச்சுடலாம் பெரிம்மா! திரும்ப எல்லாருமா கலந்து பேச வந்துட்டு போயின்னு எதுக்கு ரெண்டு செலவு?” பொறுப்பானவராக காரியத்தில் இறங்கினார் கதிரவன்.

நிச்சயத்திற்கு நாள் குறித்துவிட்டு இரவு உணவையும் அங்கேயே முடித்துக் கொண்டு மதுரைக்கு வந்த சேர்ந்த நேரத்தில் பின்னிரவும் கடந்து விட்டிருந்தது.

சுதாமதி, சாருமதி குடும்பத்தை ஆலங்குளத்தில் உள்ள அவரவர் வீட்டில் இறக்கி விட்டு, சுகமாய் கூடல்நகருக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

இவர்களின் வீட்டினை கடந்து இரண்டு தெரு தாண்டி சுமதி வீடெடுத்து தங்கியிருந்தாள். சமீபத்திய கணவனின் தொழில் மாற்றமும், தனிக்குடித்தன ஜாகையும் சேர்ந்துகொள்ள, தாயின் வீட்டிற்கு அருகிலேயே சுமதி குடிவந்து விட்டாள்.

அண்ணனின் தொழிலுக்கு வலதுகையாக இவள் இருக்க, குழந்தையை பார்த்துக் கொள்ளவென அம்மா வீட்டின் உதவி சுமதிக்கு நிரம்பவே வேண்டியிருந்தது.

அன்றைய தினம் இரவு நேரம் கடந்துவிட, அவள், தன் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்கி விட்டாள். அன்றிரவு சஞ்சுவை மடியில் வைத்துக் கொண்ட அரவிந்தன், ‘சாத்வியிடம் பேசுவோம்.’ என ஆசைகாட்டி அலைபேசியை கையில் எடுக்க, குட்டிப்பயலும் மாமனின் பேச்சிற்கு மகுடி வாசித்தான்.

“அண்ணே இதெல்லாம் ரொம்ப ஓவரு. இந்நேரத்துக்கு ஃபோனு போட்டா அவுக வீட்டுல என்னன்னு நினைப்பாக?” சுமதி கண்டிப்பு காட்டிய நேரத்தில், அவனது அலைபேசி, ‘சாலா’ என்ற பெயரில் இசைத்தது.

“இப்ப என்ன சொல்ற சின்னகுட்டி?” புருவம் உயர்த்தி அரவிந்தன் கேட்க,

“நீ நடத்துண்ணே!” மெச்சுதலாகக் கூறிவிட்டு தன் வேலையைப் பார்க்க சென்று விட்டாள் சுமதி.

இவர்கள் அனைவரும் பத்திரமாய் வந்து சேர்ந்த விவரத்தை கேட்கவென எண்ணிய நேரத்தில், விசாலமே முன்வந்து, “சாத்வி குட்டிய விட்டு கேளுடா அச்சும்மா!” என்று பச்சைக்கொடி காட்டிவிட, அடுத்தநொடியே சிறுமியுடன் தனதறைக்குள் அடைந்து கொண்டு அலைபேசியை சொடுக்கி விட்டாள் கிருஷ்ணா.

அழைத்து விட்டாளே தவிர தானாகப் பேசுவதற்கு கிருஷ்ணாவிற்குள் மெல்லிய தயக்கம் வந்திருந்தது! ‘இதென்ன புது அனுபவம்?’ என தனக்குத்தானே கேட்டுக் கொண்டு குழந்தையை பேச வைத்தாள்.

அரவிந்தன் அழைப்பை ஏற்றதும் சாத்விகா முதலில் பேசினாள்.

“அங்கிள், சஞ்சு தூங்கிட்டானா?”

“இல்லையே சாமி… ஏன் அவன்கூட பேசணுமா? வீடியோகால் போடவா?” கேட்டதும் அந்தப் பக்கம் சற்றே சலசலப்பு.

“உங்க டீச்சர் சித்தி என்ன சொல்றாங்க பாப்பா?”

“அது… சஞ்சுக்கு குட்நைட் சொல்லத்தான் ஃபோன் பண்ணேன்!” சொல்லிவிட்டு கிளுக்கிச் சிரித்தாள் சாத்விகா.

“சித்தப்பான்னு கூப்பிடு சாமி.. இன்னும் என்ன அங்கிள்?” என்று கூறியவன், “அந்த பக்கம் யார் இருந்தாலும் ஃபோனைக் குடு சாமி, நானும் குட்நைட் சொல்லணும்!”

“அது யாருமில்லன்னு சொல்லச் சொல்றாங்க!” எனக் கூறிவிட்டு, சன்னக் குரலில், “அய்யய்யோ!” என சிரிப்போடு அலறி, “இல்ல, இல்ல… யாருமில்ல!” அவசரமாய் பதில் கூறினாள் சாத்விகா.

“ஆஹான், அப்போ சரி! கீழே விழுந்த சித்தப்பாவோட பத்துரூபா காசை எடுத்து வச்சாங்களான்னு கேட்டுச் சொல்லு பாப்பா! நாளைக்கு நான் மறுக்கா ஃபோன் பண்றேன்!” என்ற நேரத்தில்

“பொல்லாத காசு! அதை தனியா எடுத்து வச்சு வேற பத்திரப்படுத்தணுமா மாஸ்டர்?” சட்டென்று குறுநகையுடன் கிருஷ்ணாவின் குரல் ஒலிக்க, உள்ளுக்குள் குதூகலித்தான் அரவிந்தன்.

“என் ஞாபகார்த்தமா வச்சுக்கோங்க டீச்சர்!”

“அடடா… இந்த பெரிய ஆசை எனக்கில்லையே மாஸ்டர்! எப்பவோ அந்த காசை எடுத்து எங்கம்மா உண்டியல்ல போட்டு வைச்சுட்டேன். இப்ப அதுல உங்க காசு எதுன்னு எப்படி தனியா தேடி எடுக்கறது?” கறாராகப் பேசியவளின் உள்ளங்கையில் அந்த பத்து ரூபாய் நாணயம் புதைந்திருந்தது.

இவர்கள் சென்றதும் விரைந்து வந்து காசினை எடுத்துக் வைத்துக் கொண்டவள், அதை எங்கே பத்திரமாக வைப்பது என்று சிறுபிள்ளையாக யோசித்து, தற்சமயம் தனது கைக்குள் பொதித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அதைச் சொல்லாமல் துடுக்காக பதிலளித்து, தனது பேச்சு சற்று அதிகப்படியோ என மனதிற்கு பட சட்டென்று அமைதியானாள் கிருஷ்ணா.

“அச்சோ… என் சார்புல சாக்லேட் வாங்கிச் சாப்பிடச் சொல்லலாம்னு நினைச்சேனே, அதுக்கு வாய்ப்பில்லையா?” அரவிந்தன் பொய்யாய் வருத்தம் தெரிவித்தான்.

“எதுக்கு சாக்லேட்?”

“நமக்கு ஃபிக்ஸ் ஆனதை கொண்டாட வேணாமா டீச்சர்!”

“டீச்சர்ன்னு கூப்பிட்டா டியூசன் மட்டுமே எடுக்க முடியும் மாஸ்டர்!”

“எனக்கும் மாஸ்டர்னு கூப்பிட்டா, கெடுபிடியா மட்டுமே பேசத் தோணும்!”

“அய்யோடா… இத்தனை நேரம் நீங்க கெடுபிடியாத்தான் பேசுறீகளாக்கும்?”

“அதெல்லாம் என்னோட ஏழாம் அறிவு சம்மந்தப்பட்ட விஷயம் சாலா. அந்த அறிவை யூஸ் பண்ண நான் விரும்புறதே இல்ல!”

“சோ ஸ்வீட் ரவி, நீங்க!” மனம் திறந்து அழைத்தவள், “இப்படி கூப்பிடலாம் தானே?” தயக்கத்துடன் கேட்டாள்.

“ஹஹா… தப்பில்ல சாலா! ஆனா பெரியவங்க முன்னாடி மாஸ்டருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும்னு தோணுது. அடுத்து உன் பிரியம்தான்!”

“இனிக்க இனிக்க பேசுவீகளோ?”

“இந்த சக்கரகாரன் எம்புட்டு இனிப்புன்னு போகப்போக நீயே தெரிஞ்சுக்கலாம். இவன் உனக்கே சொந்தமாகப் போறத நினைச்சு இப்பவே ஸ்வீட் செஞ்சு கொண்டாடு! நான் கொடுத்த பையில சேமியா பாக்கெட் இருக்கு.” உரிமையாக அழைத்துச் சொன்னவிதம் அவளின் உள்ளத்தை நெய்யாய் உருக்கி இனிக்க வைத்தது.

“பேய் நடமாடுற நேரம் மாஸ்டர். நாளைக்கு காலையில ஸ்வீட் செஞ்சு குடும்பமாவே இந்த சக்கரைத்தேவன் வரவை கொண்டாடுறோம். இப்ப குட்நைட்!” இவள் சொல்லி முடிக்க,

“ஸ்வீட் ட்ரீம்ஸ்!” சொல்லி இவனும் பேச்சை முடித்தான்.

அடி பேரழகே

உன்னை சேர்ந்திடவே

இந்த நாணயம் ஓர் சாட்சி!

இருக்கும் உயிரும் உனக்கே

உபயம் எதற்கு ஆராய்ச்சி?

இந்த நாணயத்தில்

உன்னை பார்த்திருப்பேன்

பிறர் பார்க்கவும் விடமாட்டேன்

கடவுள் வந்த கேட்டால் கூட

காணிக்கை இட மாட்டேன்!

அடி பேரழகே

உன்னை சேர்ந்திடவே

இந்த நாணயம் ஓர் சாட்சி!

இருக்கும் உயிரும் உனக்கே

உபயம் எதற்கு ஆராய்ச்சி?

இந்த நாணயத்தில்

உன்னை பார்த்திருப்பேன்

பிறர் பார்க்கவும் விடமாட்டேன்

கடவுள் வந்த கேட்டால் கூட

காணிக்கை இட மாட்டேன்!

Leave a Reply

error: Content is protected !!