பூந்தளிர் ஆட…4

பூந்தளிர் ஆட…4

பூந்தளிர்  4

காதலின் செய்திகள் கண்களில் உள்ளது

அதை நான் படிக்க மொழி கிடையாது

காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது

இனிமேல் உலகில் தடை கிடையாது

நாணம் கொண்டதே என் பூவனம்

பெண்மை ஒன்றுதான் என் சீதனம்

அடடா. ஆ. ஆ. ஆ.

அடடா இதுதான் ஆலிங்கனம்!

ஒரு வாரம் மிக வேகமாய் கழிந்திருந்தது. இனிக்கும் காலையில் தொடங்கி இனிய இரவு வரை அன்றாடங்களை பகிர்ந்து பேசியே, ‘சாலா. ரவி.’ யின் நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தன.

“டீன் ஏஜ் பசங்க மாதிரி பீஹேவ் பண்ண வைக்கிறீங்க சக்கர சார்! ரொம்ப சைல்டிஷா ஃபீல் பண்றேன்!” நொடிக்கொரு முறை குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு சலித்தும் கொள்வாள் கிருஷ்ணா. பாட இடைவேளை நிமிடங்களில் காதல் முன்னோட்டங்கள் குறைவில்லாமல் ஓடின.

“நாம ஒன்னும் நரை அள்ளி முடிஞ்ச நூத்துக் கிழடுகளும் இல்லையே சாலா! சொல்லப்போனா ரெண்டுங்கெட்டான் வயசுல கல்யாணம் பண்ணிக்கப்போற சின்னஞ்சிறுசுக… காதுல வச்ச ஃபோனை எடுக்காம பேசுறதை விட்டுட்டு, டைப்பிங்ல பேசிட்டு இருக்கோம்!” தனது தொழில் நிமித்த இடைவேளைகளில் பெண்ணின் ஆதங்கத்திற்கு அணைகட்டுவான் அரவிந்தன்.

“பேசாம, வேற என்னதான் செய்யணுமாம்? மாஸ்டர் பெரிய பிளான் போடுறார் போலேயே!”

“என்ன பிளான் போட்டாலும் இப்போதைக்கு இனிக்க இனிக்க பேச மட்டுமே முடியும். இதுக்கு மேல நோ கமெண்ட்ஸ்!”

“இப்படி சொன்னா என்ன அர்த்தம்?”

“சொல்ல வேண்டியதை செயல்ல காட்டுவோம்னு அர்த்தம் சாலா!”

“யூ நாட்டி பாய்!”

“அஃப்கோர்ஸ் டீச்சர்!” இனிக்கும் நிமிடங்கள் மேலும் மேலும் இனிமைகளை வாரி இறைத்துச் சென்றன.

ஒருவாரம் கழிந்த நிலையில் கதிரவன் அடுக்கடுக்கான கேள்விகளோடு காரியங்களையும் முன்வைத்துக் கொண்டு வீட்டு மாப்பிள்ளையாக தனது பதவிசை காண்பிக்க வந்து விட்டார்.

நாற்பத்தியைந்து வயதைக் கடந்த மனிதர். ரியல் எஸ்டேட் தரகு போன்றவற்றில் கரைகண்டு சம்பாத்தியம் பார்ப்பவர். கல்லூரிக்கு செல்லும் இரண்டு ஆண் பிள்ளைகளின் பொறுப்பான தந்தை.

தன் குடும்பம், மாமனார் வீட்டுக் குடும்பம் என்கிற பாகுபாடு பார்க்காமல் எல்லா பொறுப்புகளையும் தலையெடுத்து தாங்குபவர் எனும் அடையாளத்தோடு அனைத்திலும் நுழைந்து உட்பூசலை உண்டாக்குவதில் கதிரவனுக்கு நிகர் அவரே!

“நிச்சய ஏற்பாடு எல்லாம் எந்த அளவுல இருக்கு பெரிம்மா? நீங்களா சொல்லிட்டு வருவீங்கன்னு பார்த்தா என்னை வரவைக்கிறீங்க!” குறைபாட்டோடு பேச்சை ஆரம்பித்தார்.

“உங்களை கலந்துக்காம இங்கே தூசி கூட தட்டுறது இல்ல மாமா! அத்தே ரெண்டு நாளைக்கு முன்னாடியே அக்காவையும் மாமாவையும் ஃபோன் போட்டு வரச்சொல்லுன்னு சொல்லச் சொன்னாங்க. நான்தான் வேலை பிசியில மறந்துட்டேன்!” அரவிந்தன் கூறவும் அமைதியானார் கதிரவன்.

‘நாள் நெருங்கி வரும்போது இவரை அழைத்துப் பேசலாம், சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுக்க வேண்டாம்’ என்று தாயோடு அத்தையும் சேர்ந்தே கூறிவிட, அதற்கேற்றபடி ஒத்துப்பாட்டு பாடி முடித்தான் அரவிந்தன்.

இதே பதிலை வீட்டுப் பெண்கள் பேசியிருந்தால் இவரது பதில் வேறாய் இருந்திருக்கும். கதிரவனும் தனது மச்சானிடம் சற்றே தணிந்து போவார். மாமனாரின் இடத்தில் இருந்து ஒற்றை ஆண்மகனாக பெண்களுக்கு வேண்டியதை செய்பவனுக்கு அதே மரியாதை கொடுப்பார். அதில் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை. இவரை பின்பற்றியே மற்ற இரண்டு மாப்பிள்ளைகளும் அரவிந்தனிடத்தில் அடக்கியே வாசிப்பர்.

அது மட்டுமில்லாமல் மச்சானை அன்பாகப் பற்றிக் கொண்டால் மலையையும் எளிதாக புரட்டி விடலாம் என்கிற நம்பிக்கை உடையவர். அப்படி பல நேரங்களில் புரட்டியும் இருக்கிறார் கதிரவன்.

தொழில் நிமித்தமாக கை கொடுக்கவில்லை என்றாலும் அரவிந்தன் மீதான அக்கறையில் என்றும் இவர் குறை வைப்பதில்லை. அவனுக்கென பார்த்துப் பார்த்து செய்வதில் இவர் தனிரகம்.

அரவிந்தனுக்கு பெண் அமையாமல் வரன் தட்டிப் போன சமயங்களில் எல்லாம், “எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா யோசிக்காம உனக்கு கட்டி வச்சுருப்பேன் மாப்ள… ஆண்டவன் இந்த வகையில என்னை சோதிச்சுட்டான்!” என வெகுவாக குறைபட்டுக் கொள்ளும் மனிதர்.

ஆனாலும் தனது சேவையாக குட்டையை குழப்பி விடுவதில் வல்லவர். அதில் மீன் சிக்கினாலும் சிக்காவிட்டாலும் குழப்பியது குழப்பியது தானே!

இப்போதும் மெதுவாக பேச்சை ஆரம்பித்து மனோன்மணியின் வாயில் இருந்து தனக்கு வேண்டியதை கேட்டுத் தெரிந்து கொண்டார் கதிரவன்.

“நிச்சயத்துக்கு இன்னும் நாள் கெடக்கே தம்பி, முகூர்த்தம் தான் ஆறு மாசம் கழிச்சு புள்ளைங்க லீவுல வைக்கலாம்னு பேசியிருக்கோம் ப்பா!” மனோன்மணி கூற, அதை மாற்றியே தீர வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்.

“நம்ம மாப்பிள்ளைக்கு வர்ற பிப்ரவரியோட முப்பத்திமூனு முடியுது. ரெட்டைபட வயசுல கல்யணம் வைக்கிறது அவ்வளவு நல்லதில்ல. உங்களுக்கு தெரியாததா பெரிம்மா!” பெரிதாக ஆட்சேபிக்க,

“பொண்ணுக்கு அந்த நேரம் வேலை அதிகமா இருக்கும் மருமகனே!” பரிமளம் எடுத்துக் கூறினார்.

கிருஷ்ணாவின் வேலை நிமித்தத்தை முன்னிட்டே திருமணத்தை தள்ளி வைத்திருப்பதாக பெரியவர்கள் கூறவும் கதிரவனின் வீம்பு மேலும் ஏறிப் போனது.

“எப்படியும் வேலைக்கு அனுப்பப் போறதில்லன்னு முடிவாகிப் போச்சு! பின்ன என்னத்துக்கு இதையெல்லாம் பார்த்துகிட்டு? இப்பவே எழுதி குடுத்துட்டு வரச் சொல்லுங்க அத்தே! காலத்துக்கும் வாழப்போற வாழ்க்கைக்கு இதெல்லாம் பெரிய விசயமா பார்த்தா ஆகுமா?” அலட்சியமாகப் பேசிவிட, மூத்த பெண்மணிகளுக்கு தர்மசங்கடமாகிப் போனது.

பெண்களை எப்போதும் வீட்டோடு மட்டுமே வைத்து பார்த்து வரும் ஆணின் அகந்தை, ஒரு பெண்ணின் பொருட்டு திருமணம் தள்ளிப் போவதை சரியென்று எடுத்துக் கொள்ள மறுத்தது.

பெண் வீட்டில் அனைத்திற்கும் சம்மதிக்க வைத்து திருமணத்தை உடனே நடத்தி வைப்பது தனது பொறுப்பு என்று கூறி, தேனிக்கு தனது பெரிய சகலை முகிலனோடு கிளம்பி விட்டார் கதிரவன்.

மதிய உணவை முடித்துக் கொண்டு கிருஷ்ணாவின் வீட்டிற்கு போய் சேர்ந்த நேரத்தில் கோவர்த்தனன் அங்கே இல்லை. தனது வீட்டின் முன்னால் ரூப்டாப் போட்டு மோட்டார் வொர்க்ஷாப் சொந்தமாக நடத்தி வருபவர். முப்பத்தியைந்தை தாண்டிய வயது.

மாமியார் வீட்டிற்கு மிக அருகிலேயே வீடெடுத்து குடும்பத்தோடு தங்கி இருப்பவர். இதன் காரணமே உடனே அழைத்து பேசி விடலாமென்ற முடிவோடு முன்கூட்டி சொல்லாமலேயே மதுரையில் இருந்து கிளம்பி வந்திருந்தனர்.

அந்த நேரத்தில் பள்ளி முடிந்து கிருஷ்ணாவும் வந்து சேர்ந்திருக்கவில்லை. கோமளவல்லி அலைபேசியில் கோவர்த்தனை அழைத்து கதிரவன் வந்திருக்கும் விசயத்தை சொல்ல,

“வண்டி டெலிவரி விட இப்பதான் கெளம்பி வந்தேன் வள்ளி… உடனே திரும்ப முடியாது. வெரசா வரப் பாக்குறேன். அதுக்குள்ள காபி பலகாரம் கொடுத்துட்டு பேசிட்டு இருங்க!” என்று பேசி முடித்து அழைப்பை துண்டித்தார்.

காபி முடித்து அரைமணி நேரமாகியும் கோவர்த்தனன் வீட்டிற்கு வந்து சேரவில்லை. “என்னடா இந்த பய ரொம்ப பண்றான்!” கதிரவன் முணுமுணுக்க,

“நாம மட்டும் எதுல குறை வச்சோம் ண்ணே? சொல்லாம கொள்ளாம வந்துட்டு இப்ப அவருக்கு கழுத்துக்கு கத்தியா உக்காந்திருக்கோம். வீட்டுப் பொம்பளைங்க தேமேன்னு நம்ம முகத்தை பாவமாக பார்த்துட்டு இருக்காக!” பதிலுக்கு முகிலனும் கிசுகிசுத்தான்.

“அப்படி எதுக்கு தேமேன்னு பார்த்து வைக்கணும்? இருடா பேச வச்சுருவோம்!” என்ற கதிரவன், பாட்டி விசாலத்தை பார்த்து, பேச ஆரம்பித்தார்.

“அப்புறம் பாட்டி… உங்க அங்காளி பங்காளி, உங்க சம்மந்தகாரவுக எல்லாரும் எங்கன இருக்காக? விசேசத்துக்கு பக்கத்துல இருந்து காரியம் எல்லாம் செய்ய வந்துடுவாகளா?” விசாலத்திடம் கேட்க,

“அட என்ன தம்பி? என்கூட வளந்த மணிய பெரியம்மான்னு கூப்பிட்டு, என்னை பாட்டின்னு கூப்பிடுறீக?” என பெரிதாய் சங்கோஜப்பட்டார் பாட்டி.

தன்னை காட்டிக் கொடுக்கும் குறுகுறுப்புகள் எல்லாம் எத்தனை வயதானாலும் அடங்குவதில்லை என்பதற்கு விசாலம் பாட்டி சாட்சி!

“கெழடு தட்டின காலத்துல பெருசுக்கு வெசனத்த பாரு!” முகிலன் கிசுகிசுக்க,

“சும்மா இரு தம்பி!” அடக்கிய கதிரவன்,

“அட இதுல என்ன பாட்டி இருக்கு? என் வீட்டம்மா முறைக்கு அவுகளை பெரிம்மான்னு கூப்பிடுதேன். இங்கே என் மாப்பிள்ள முறைக்கு உங்களை பாட்டின்னு கூப்பிடுதேன். எல்லாம் செரியா வரும்!” என சமரசமாக முடித்தார்.

“தம்பி ரொம்ப நல்லாவே பேசுதீக!” பாராட்டிய விசாலம்,

“எனக்கு பங்கஜம் ஒரே பொண்ணு தம்பி, சொந்தத்துல கட்டிக் கொடுத்ததால சுத்தி சுத்தி நம்ம ஆளுங்கதான்!” எடுத்துச் சொல்ல,

“பெரிய பொண்ணைக் கூட சொந்தத்துலதான் கொடுத்திருக்கு தம்பி!” பங்கஜமும் விளக்கினார்.

“ஹாங்… அது தெரியும் சித்தி!”

“நம்ம கிருஷ்ணா பிடிவாதமா படிப்புலயே நின்னுட்டதால கொஞ்சம் தாமசமாகிடுச்சு! சொந்தத்துல தேடி வந்த ரெண்டு மூனு வரனும் இவ வளத்தியா இல்லைன்னு சொல்லியே தட்டிப் போச்சு! வெளியே இருந்து வந்தவுகளும் இதையே சொல்லி தட்டிக் கழிக்கவும் இவ படிப்பு உத்தியோகம்னு ஒரே இடத்துல நின்னுட்டா!” விசாலம் கூற,

“அதது வேலை வந்தா, தானா நடக்கும் பாட்டி. கோவர்த்தன் மாப்பிள்ளையும் இன்னும் காணல… நான் வந்த விசயத்தை சொல்லி முடிச்சுடுறேன்!” என்ற கதிரவன்,

“நிச்சயத்தை தேனில வச்சுப்போம். கல்யாணத்தை சிம்பிளா மீனாட்சியம்மன் கோவில்ல முடிச்சிட்டு, சாயந்திரம் வரவேற்பு கிராண்டா பெரிய மண்டபத்துல வச்சுடலாம், சரிதானே!” பெருமிதமாகச் சொல்ல பெண்கள் அனைவருக்கும் மனம் நிறைந்து போனது.

“நிச்சயத்துக்கு குறிச்ச தேதியில இருந்து சரியா ஒரு மாசத்துல ரெண்டு மூனு முகூர்த்தநாள் குறிச்சிட்டு வந்துருக்கோம். உங்க தோது பார்த்து சொல்லுங்க, முன்ன பின்ன முகூர்த்தம் பார்த்து ஃபிக்ஸ் பண்ணிடுவோம்!” என்றதும் பெண்களின் மனம் துணுக்குற்றது.

“ஆறு மாசம் கழிச்சு தானே கல்யாணம் வைக்கிறதா பேச்சு தம்பி?” விசாலம் கேட்டதும்,

“அப்ப பேசினோம்தான். அப்படி தள்ளி வைச்சா, மாப்பிள்ளைக்கு ஒரு வயசு தட்டிப் போயிடுது. ரெட்டபடையில கல்யாணம் வைக்கிறது எங்க பக்கம் வழக்கமில்ல. அதான் உடனே முகூர்த்தம் பார்த்துட்டோம் பாட்டி!”

“இது கிருஷ்ணாவுக்கு சரிவராதே ண்ணே… ஸ்கூல், டியூசன்னு எதையும் பாதியில விட முடியாதே!” கோமளவல்லி எடுத்துக் கூற,

“எப்படியும் கல்யாணம் முடிஞ்ச பொறவு பொண்ணை வேலைக்கு அனுப்ப போறதில்லன்னு முடிவெடுத்தது தானே! அப்புறம் ஏன் இத்தனநாள் தள்ளி பார்த்துகிட்டு? யாராவது ஏதாவது சொல்லத்தான் செய்வாங்க. அதையெல்லாம் மனசுல நிறுத்தாம எழுதி குடுத்துட்டு வரச் சொல்லுங்க!” கதிரவன் நீளமாக பேசி முடித்த நேரத்தில் கிருஷ்ணாவும் பள்ளியில் இருந்து வந்து விட்டாள்.

அவளிடமும் கதிரவன் தனது முடிவை கூறிவிட, அதை சற்றும் ஏற்றுக் கொள்ளவில்லை கிருஷ்ணா.

“நீங்க சொல்றதுல எனக்கு துளி கூட சம்மதமில்லைண்ணே!” எடுத்ததும் அவள் சற்று காறாராகப் பேச,

“இப்படி கடுசா பேசக்கூடாது கண்ணு!” விசாலம் தடுத்தும் அவளால் தனது கோபத்தை வெளிகாட்டாமல் இருக்க முடியவில்லை.

“நான் வேலையை தான் விடுறேன்னு சொன்னேனே தவிர என் தகுதியை குறைச்சுக்கிறேன்னு சொன்னதே இல்ல! நாளபின்ன இந்த தகுதிய வச்சுதான் என்னை பாப்பாங்க. என்னால ஏனோதானோன்னு பொறுப்பை தட்டிக் கழிச்சுட்டு வர முடியாது!” கண்டிப்பாய் பேசினாள் கிருஷ்ணா.

“அப்போ வேலைக்கு போற முடிவுலதான் தங்கச்சி இருக்காப்புல… அப்புறம் வேலையை விட்டுறேன்னு சொன்னதெல்லாம் தண்ணியில எழுதி வைக்கவா சொன்னது? இப்பவே இத்தன பொய் புரட்டா இருக்கே!” கதிரவன் வெறுப்பாக பேசி முகம் சுழிக்க, முகிலனுக்கோ பெரும் அவஸ்தையாகிப் போனது.

இவர் இப்படி பேச ஆரம்பித்தார் என்றால் பிரச்சனை நிச்சயமென்று இத்தனை நாள் சகவாசதோசத்தில் அறிந்து வைத்திருந்த ஒன்று.

“அண்ணே… அவுக வீட்டுல கலந்து சொல்லட்டும். இப்ப பொறப்படுவோம்!” தன்மையாக முகிலன் சொன்னாலும் வீம்பாய் இருந்தார் கதிரவன்.

“இரு முகிலா… தங்கச்சி மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுட்டு போயிடுவோம். பின்னாடி நம்ம மாப்பிள்ளை கஷ்டப்படக்கூடாது பாரு!” என்றபடி கிருஷ்ணாவை கூர்மையாகப் பார்க்க, அவளும் சலிக்காமல் எதிர்பார்வை பார்த்தாள்.

“எந்த காலத்துலயும் வேலை போனாலும் படிப்பு வீணாப் போறதே இல்ல. என் படிப்பு பயனில்லாம போற அளவுக்கு எதையும் அவசரப்பட்டு செய்ய மாட்டேன். அந்த எண்ணத்துலதான் வேலையை விட்டுறேன்னு சொன்னேன்! உங்களுக்கு எதிரா பேசணும்ங்கிறது என் நோக்கமில்ல. இதுக்கு மேல வற்புறுத்தாதீக!” கிருஷ்ணா நிமிர்வாக பேசியதில் அங்கிருந்த அனைவருக்குமே பெருத்த சங்கடத்தை தந்தது.

வந்திருந்தவர்களின் முகம் பார்க்காமல் எடுத்தெறிந்து பேசியதில் சற்றே உஷ்ணப்பட்டுதான் பதில் கொடுத்தார் கதிரவன்.

“இந்தா பொண்ணு, நீ சொல்றதைப் பார்த்தா கல்யாணம் முடிஞ்சதும் புருஷனை கைக்குள்ள போட்டுக்கிட்டு உன் இஷ்டத்துக்கு இருக்கலாமுனு நினைக்கிற போல! அதுக்கெல்லாம் என் மாப்ள சரிபட்டு வரமாட்டான் தங்கச்சி! பெரியவங்க நெறஞ்ச வீட்டுல வாக்கப்பட போறவ கொஞ்சம் சூதானாம நறுவிசா பேசக் கத்துக்கோ! அதான் உனக்கும் நல்லது.”

“என்ன, மிரட்டி பாக்குறீகளா?” கிருஷ்ணா குரலை உயர்த்த, பேத்தியை அடக்கினார் விசலாம்

“நம்மள மதிச்சு வீட்டுக்கு வந்தவரை எதுத்து பேசுறது என்ன பழக்கம்டி? நீ பேச ஆரம்பிக்கும் போதே உன் வாயில ரெண்டு போட்டு உள்ளே அனுப்பி இருக்கணும். செய்யாம விட்டது என் தப்பு. மொதல்ல அவுககிட்ட மன்னிப்பு கேளு!” அதட்டல் போடவும் அந்த இடமே இறுக்கம் சூழ்ந்து கொண்டது.

முகிலன் எதுவும் வேண்டாமென்று கூறிவிட தவித்தான் ஆனால் கதிரவனை மீறி பேச முடியவில்லை. அவர்களின் பக்கம் தளர்ந்து இவரை விட்டுக் கொடுத்து பேசியதாகி விடுமே என்று தயங்கி நின்றான்.

“நாலெழுத்து படிச்சுட்டாலே பொம்பளை புள்ளகளுக்கு இந்த திமிரும் தெனாவெட்டும் தானா மனசுக்குள்ள வந்து உக்காந்துடு பாட்டி. வேற என்னத்த சொல்ல? ஆம்பளை இல்லாத வீட்டுக்கு என் மாப்ள பக்கபலமா வந்து நின்னாதான் நீங்களும் உங்க பொண்ணும் காடு போயி சேருற வரைக்கும் சுகமா இருக்க முடியும். எடுத்துச் சொல்லுங்க, உங்க பேத்திகிட்ட!” விசாலத்திடம் அழுத்தமாகக் கூறிய கதிரவன்,

“நான் சொல்லாம எந்த இடத்துலயும் என் மாப்ள கை நனைக்க மாட்டான். அத்தனை மரியாதை என்மேல! கடைசி காலத்துல உங்கம்மாவை உங்கூட வச்சு கஞ்சி ஊத்தனும்னா கூட என்கிட்டே வந்து உத்தரவு கேட்டுட்டு நிப்பான். அப்பேற்பட்ட என்னையே நீ எடுத்தெறிஞ்சு பேசுறியா தங்கச்சி? முடிஞ்ச வரைக்கும் உன்னை மாத்திக்கப் பாரு! அத விட்டு உன்னை மாத்துற யோசனையை எங்களுக்கு கொடுத்துடாதே!” தெனாவெட்டாகக் கூறி புறப்பட்டு விட்டார்.

கதிரவனின் அகங்காரப் பேச்சினை கேட்டு அனைவருமே முகம் சுழித்தனர். தங்கள் வீட்டிற்கே வந்து தங்கள் பெண்ணை பேசுகிறாரே என்கிற கோபம் பெண்களிடம் எழத்தான் செய்தது. ஆனால் சட்டென்று கேட்க முடியாத இடத்தில் நின்றிருந்தனர்.

சடுதியில் ஆண்பிள்ளை இல்லாத குடும்பம் என்ற ஒற்றைப் பேச்சில் அவர்களை மட்டம் தட்டுவதாக நினைத்து வார்த்தையை விட்டு விட்டார் கதிரவன். இந்த காலத்திலும் இப்படி பேசிக்கொண்டு தங்களை உயர்வாய் நினைத்திடும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களை தடுத்த நிறுத்த யாரும் முன்வர மாட்டார்கள்.

காரணம், ‘நம் இனத்திற்கே நாம் புத்தி சொல்வதா?’ என்கிற ஆண்களின் மனோபாவம் ஒருபுறம். ‘எங்கேயாவது ஓரிடத்தில் ஆண்களின் தயவு அத்தியாவசியத் தேவையாகிப் போகிறது என்பதும் உண்மைதானே!’ என சால்ஜாப்பு பேசும் பெண்களின் கூட்டம் மறுபுறம்! ஆக கதிரவனைப் போன்றோர் திருந்த இன்னுமொரு நூற்றாண்டு காலமெனும் ஆகுமென்பதை மனதில் நிறுத்திக் கொள்ளலாம்.

வீட்டின் மற்ற பெண்கள் நயந்து பேசி எது சொன்னாலும் கதிரவன் காதில் ஏற்றுக் கொள்ளவில்லை. பாட்டியின் வார்த்தைகளை மதித்து கிருஷ்ணாவும் மன்னிப்பு கேட்கத் தயாராய் இல்லை.

இவர்கள் புறப்பட்ட சமயத்தில் வந்து நின்ற கோவர்த்தனிடமும் தன்னால் முடிந்தவரை கதிரவன் ஏற்றிவிட்டுச் சொல்லி முடிக்க, அவருமே கிருஷ்ணாவை தான் குறை கூறினார்.

“ஒரு பொண்ணுக்கு இம்புட்டு வேகம் ஆகாது. படிச்சிருந்தா வாயில வர்றதை பேசிடணுமா? கதிர் அண்ணனை, மாப்ள வீட்டுல எப்படி பாக்கறாங்கன்னு அன்னிக்கே பாத்தே தானே கிருஷ்ணா?” கதிரவன் முன்னிலையிலேயே கோவர்த்தன் கடிந்து கொள்ள, அனைவருக்குமே எதிராளி ஆகிப் போனாள் கிருஷ்ணா.

“அவர் மறைமுகமா மிரட்டுறார் மாமா, அதைக் கேட்டு என்னால ஊமையா இருக்க முடியாது.” அவள் குரலை உயர்த்தவும், மனைவியை முறைத்தான் கோவர்த்தனன்.

அந்த முறைப்பில் தங்கையை வம்படியாக உள்ளே அழைத்து சென்றாள் கோமளவல்லி.

“எதையும் மனசுல வச்சுக்காதீக அண்ணே. ஏதோ சகுனம் சரியில்ல போல. ரெண்டுநாள் கழிச்சு நானே மதுரைக்கு வாரேன். உங்க வீட்டு அட்ரஸ் கொடுங்க ண்ணே!” தன்மையாக கதிரவனிடம் கேட்டு வாங்கிக் கொண்டார்.

“இதுதான் தம்பி வயசுக்கு தக்கன பேச்சுனு சொல்றது! உங்களுக்கு இருக்கற நிதானம் நம்ம தங்கச்சி பொண்ணுக்கு இல்ல. கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வைங்க. நானும் கோபத்துல வார்த்தையை விட்டுட்டேன்! நீங்க நேருல வாங்க. மேற்கொண்டு நடக்க வேண்டியதை பேசி முடிவு பண்ணிக்குவோம்!” சமாதானமாகக் கூறிச் சென்றவரின் முடிவை அனைவரும் அறிந்தே இருந்தனர்.

இந்த திருமணத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தனது அலட்டலும் மிரட்டலும் இல்லாமல் கிருஷ்ணாவால் நிம்மதியாக நாட்களை கடத்த முடியாது என்பதை மறைமுகமாக கதிரவன் சொல்லி விட்டுச் சென்றதை எல்லோரும் அறிந்தே இருந்தனர். இனி?!

Leave a Reply

error: Content is protected !!