Mathu…Mathi!-9

mathu...mathi!_Coverpic-cd2b87e0

Mathu…Mathi!-9

மது…மதி! – 9

 “திருநெல்வேலி” இந்தச் சொல்லில் மதுமதியின் மனம் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டது. கெளதம் முகத்தில் மென்னகை.

“என் வாழ்க்கையை தொலைத்த இடத்தில் மீட்டெடுக்க போறேன்” அவன் கூற, அவள் அவனை முறைத்துப் பார்த்தாள். “தொலைத்த இடத்தில்ன்னு சொல்ல கூடாதோ? எனக்கு வாழ்க்கை கிடைத்த…. கிடைத்த இடம், மீண்டும் வாழ்க்கை கொடுக்குமான்னு கேட்க போறேன்” அவன் கூற, அவள் பற்களை நறநறத்தாள்.

“திருநெல்வேலி” என்ற சொல் அவளை சுமார் இருபது வருடங்களுக்கு முன் அழைத்துச் சென்றது.

***

 “அம்மா, பசிக்கி ம்மா” என்றாள், ஒரு பருவ பெண். மதுமதி தான் அந்த பருவப்பெண்.

“எட்டி, கொஞ்சம் நேரந்தேன் பொறுத்துக்கோ. இந்தா இருக்கு ரேஷன் கடை. நான் அரிசியை வாங்கிட்டு வந்து உனக்கு சோறு வடிக்கறேன். அம்மா, என்னடி பண்ணுவேன். இப்ப தான் நான் வேலைக்கு போன இடத்தில் சம்பளம் கொடுத்தாக.” அந்த பருவ பெண்ணின் தாய் கடைக்கு கிளம்பியபடியே கூறினாள்.

“அம்மா, நீ பைய நடக்காம சீக்கிரம் நட. வந்து வடிச்சு கொடு. நான் இப்பதைக்கு தண்ணியை குடிக்கேன்” கூறிக்கொண்டு, மடமடவென்று தண்ணீரை விழுங்கினாள் மதுமதி.

தாமிரபரணி ஆற்று நீர். ருசியாக தான் இருக்கும். ஆனால், பசியை போக்கும் அளவுக்கா? தண்ணீரை குடித்தும் மதுமதியின் பசியடங்கவில்லை.

அவள் வயிறு சுருக்கென்று தைத்தது. மீண்டும் தண்ணீரை குடித்தாள். மடக்மடெக் என்று மேலே எழுந்து இறங்கிய அவள் தொண்டைக்குழி, தாகத்தை தாண்டி அவள் பசியை போக்கவே துடித்தது.

‘எனக்காவது நான் வேலைக்கு போற இடத்தில் காபி கிடைக்கு. ஆனால், என் மகளுக்கு…’ வருத்தத்தோடு கிளம்பினார் அவள் தாய்.

காலையிலிருந்து சாப்பிடாமல், அவள் வயிறு சுருங்கி இருந்தது. அவள் தலை முடி கலைந்து அவள் முகம் சோர்வாக காட்சி அளித்தது.

 அந்த வீட்டில் இருக்கும் அறையில் அமர்ந்தாள். அவள் வயிறு இன்னும் பசியின் பிடியில் துடித்தது. மேலே கிடந்த, துண்டை எடுத்து தண்ணீரில் நனைத்து தன் வயிற்றில் காட்டினாள். ஈரத்துணி, அவள் பசிக்கு தீனி போடுவது போல் பாசாங்கு செய்ய, அவள் சோர்வாக படுத்தாள்.

 அப்பொழுது, “யோவ்… விடுயா என் முடியை…” அலறிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அவள் தாய்.

 கூடவே தள்ளாடியபடி ஒருவன். அவன் முகம், சுருங்கி கண்கள் சிவந்து சொருவி இருந்தது.

 ‘அ…ப்… பா…’ மதுமதியின் இதழ்கள் அவனை அழைக்க மறுத்து இறுக மூடிக்கொண்டது.

 “ஏண்டி பொட்டச்சிருக்கி, நான் துட்டு கேட்டா ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டு, இப்ப சீவி சிங்காரிச்சிட்டு கடைக்கு கிளம்பிட்டியா?” அவன் மதுமதியின் தாயை சுவரோடு தள்ளினான்.

“அம்மா…” தன் தாயை பிடிக்க, தன் குழந்தையை மனதில் கொண்டு, எழுந்தாள் அவள்.

“குடுறீ துட்டை” அவன் அவள் கைகளை இழுக்க, “முடியாது… பாவம் நம்ம புள்ளை. காலையிலிருந்து ஒண்ணுமே சாப்பிடலை. அவளுக்கு அரிசி வாங்கறதை விட, உனக்கு இந்த குடி முக்கியமா போச்சா?”அந்த சிறுமியின் தாய், தன் தலை முடியை கொண்டையிட்ட படி கேட்டாள்.

அவன் அவள் கன்னங்களில் பளார் என்று அறைந்தான்.

“என் குடியை பத்தி பேசுதியா? அதை கேட்க நீ யார் டீ. இவளாம் பள்ளிக்கு என்னத்த கிழிக்க போறா? நாலு வீட்டுல பத்து பாத்திரம் தேச்சி எங்கயாவது தின்ன வேண்டியது தானே?” அவன் நாக்கு குழறியபடி காட்டமாக கேட்டான்.

“ஏன்யா இப்படி ஆயிப்போன நீயீ… இவ பொறந்தப நல்லா தானே இருந்த? பாசமா இருந்த நீயி… இப்படி குடிக்க ஆரம்பிச்சி நாசமா போயிட்டியே…” அந்த சிறுமியின் தாய் தலையில் “படார்…படார்…” என்று அடித்து கொண்டு அழுதாள்.

“ஏய்… சீ… மூடூ வாயை. நீ பணத்தை எடு. நான் குடிக்க போவணும்…” அவன் அவிழ எத்தனித்த லுங்கியை இறுக்கிக்கொண்டு, அவள் கைகளை பிடித்தான்.

“நான் காசு தர மாட்டேன். இந்த காசு எம்பிள்ளைக்கு சோறாக்கி போட…” அவள் தன் கையிலிருந்த ரூபாய் நோட்டை நெஞ்சோடு அணைக்க, அவன் அவள் கைகளை பிடித்து இழுத்து, அந்த ரூபாய் நோட்டை பறிக்க முயல, அந்த சிறுமியின் தாயின் முகத்தில் கீறல்கள்.

அவள் வீலென்ற அலற, அவன் அவளை இன்னும் தாக்க, அந்த சிறுமி பயத்தோடு சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். அந்த சிறுமியின் பசி எங்கோ பறந்திருந்தது.

“நான் இல்லாமல் வந்திருக்குமா டீ உனக்கு பிள்ளை? என் சந்தோஷத்தை விட, உனக்கு பிள்ளை முக்கியமா போய்டுச்சா? உன்னை என்ன பண்றேன் பாரு?” அவன் வீராவேசமாக அவள் மீது பாய, அங்கு அரங்கேறும் காட்சியை காண சகியாமல் அந்த சிறுமி தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

**** **** ****

இல்லை இல்லை நான் இதை எல்லாம் நினைக்க கூடாது. நினைக்க கூடாது. அவள் வெறுத்த தன் சிறு பிரயாயத்து நினைவுகளை மீட்டுக்கொண்டாலும், அவன் மனம் கவர்ந்தனை பற்றிய சிந்தனையிலிருந்து மீட்டுக்கொள்ள முடியவில்லை.

*** *** ***

திருமணத்திற்கு முன் அவர்கள் சந்திப்புக்கு அவள் நினைவு அவளை அழைத்துச் சென்றது.

“என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” மதுமதி தன் உதட்டை சுளித்து கௌதமை பார்த்து கேட்க, “நான் உன்னை விரும்பித் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்.” அந்த, ‘விரும்பி…’ என்ற சொல்லில் அழுத்தம் கொடுத்து குறுங்சிரிப்போடு ரசனை பொதிந்த பார்வையோடு கூறினான் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த கெளதம். ‘என்னை எப்படி இவங்க விரும்ப முடியும்? ஏதோ சொல்றாங்க’ அவள் மேலும் தோண்டித் துருவவில்லை.

எட்டி அவள் அருகே சென்று வெளிப்படுத்த முடியாத அவன் விருப்பத்தை அவன் விழிகள் வெளிப்படுத்தியது. ‘நான் சரியாக இருந்திருந்தால் என் விருப்பத்தை, என் சம்மதத்தை இப்படியா சொல்லிருப்பேன்?’ அவன் விழிகள், அவள் இதழ்களை ஆவலோடு தொட்டு மீண்டது.

அவள் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். ஆனால், அவளுக்கு அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தது போல் தெரியவில்லை. ‘அலையலையாய் கேசம். மாநிறத்திற்கு மேல் நல்ல நிறம். கூர் மூக்கு. வடித்தார் போன்ற முகவடிவு. நடக்க மட்டுந்தான் முடியாது. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி வரைக்கும் நல்லா இருந்த மனிதர். தொண்ணூறு சதவீதம் நடை வந்திருமுன்னு தான் சொல்றாங்க. அப்படி இருக்கும் பொழுது, இவங்க ஏன் என்னை கல்யாணம் செய்துக்கணும்?’ அவளுள் யோசனை மண்டியது.

‘சரி… எல்லாம் நடக்கும் படி நடக்கட்டும்.’ தன் தலை அசைத்து கொண்டு அவள் நடக்க, அவன் தன் சக்கர நாற்காலியை இயக்கியபடி அவளோடு வந்தான்.

“என்ன நான் உங்களுக்கு பொருத்தமான ஜோடியா?” அவள் அவனை பார்த்ததை வைத்து அவன் குறும்பு புன்னகையோடு கேட்டான்

அவள் முகத்தில் மெல்லிய வெட்க புன்னகை. ‘என்ன சொல்லுவா?’ என்ற ஆர்வம் அவனுள்.

“பார்க்கறதை வைத்து சொல்ல முடியுமா? போக போக உங்க குணத்தை வைத்து தான் சொல்லணும்” அவள் மெட்டுவிடாமல் கூற, “நான் சொக்க தங்க குணமாக்கும்.” அவன் தன் சட்டை காலரை உயர்த்த, அவள் சிரித்து கொண்டாள். அவனும் அவளோடு அவள் சிரிப்பில் இணைந்து கொண்டான்.

அவர்கள் இருவரும் அனைவரும் இருக்கும் இடம் நோக்கி சென்றனர்.

அங்கு இவர்களுக்காக காத்து கொண்டிருந்தவர்களின் முகத்தில் அத்தனை மகிழ்வில்லை.

பெண்ணை அழைத்து சென்று பேசியதில் பெண்வீட்டார்க்கு விருப்பமில்லை.

‘கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டு இப்ப ஏன் பேசணும். மதுமதி சுயமாக சம்பாதித்து வாழ்ந்தாலும், அவ ஒரு பொறுப்பு தான். சட்டுபுட்டுன்னு ஒரு கல்யாணத்தை செய்து அவளை அனுப்ப வேண்டும். பொறுப்பை முடிக்க வேண்டும்.’ என்ற பதட்டம் உறவினர்களிடம். மாப்பிள்ளை வீட்டாரின் செல்வ நிலை கண்டு தன் வாயை இறுக மூடிக்கொண்டு இருந்தனர்.

கெளதம் வீட்டாருக்கு இந்த திருமணமே பிடிக்கவில்லை. ‘பெண் ஏழை என்ற காரணம் எல்லாம் இல்லை. மேல் தட்டு வர்க்கத்தில் வளராத ஒரு பெண், அவர்கள் குடும்ப வழக்கத்திற்கு ஒத்து வருவாளா?’ என்ற ஐயம் அவர்களுக்கு.

கௌதமின் சொல்லுக்கிணங்கி அமைதி காத்து கொண்டிருந்தனர். கௌதமின் சொல்லுக்கு, அத்தனை மரியாதை. முக்கியத்துவம்.

விதவிதமான மனநிலையில் பலர் இருந்தாலும், கௌதமை கண்டதும் அவர்கள் முகத்தில் புன்னகை. எழுந்து நடக்காமலே அந்த சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே, தன் முகத்தில் கம்பீரத்தை ஏந்தி முகத்தில் புன்னகையோடு அனைவரையும் தன் பார்வையால் ஆளுமைக்குள் கொண்டு வந்திருந்தான் கெளதம்.

‘சற்று முன் தனிமையில் பேசிய கெளதம் இவன் இல்லை’ என்ற எண்ணம் மதுமதிக்கு வந்தது. ‘கெளதம் என் அருகாமையில் இருக்கையில் எனக்கு எந்த தீங்கும் வராது.’ அவள் மனம் உறுதியாக நம்ப ஆரம்பித்தது அவனே தீங்காய் வருவான் என்றறியாமல்.

மணமகனும், மணமகளும் அவர்கள் எண்ணத்தின் பிடியில் இருக்க, வேலைகள் வேகமாக அரங்கேற ஆரம்பித்தன. அனைவரும் திருமணத்திற்காக திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் நோக்கி பயணித்தனர்.

காரில், அவள் அவன் அருகில் தான் அமர்ந்திருந்தாள். அவன் அப்படி தான் அமரவேண்டும் என்று கூறிவிட்டான். மற்றவர்களுக்கு மறுக்க தைரியமில்லை.

பயணத்தின் பொழுது, அவள் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது. அவள் புன்னகையின் பொருள் புரியாமல், ‘என்ன?’ என்று அவன் புருவம் உயர்த்தினான்.

“நெல்லையப்பர் கோவில், கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருக்கணுமுன்னு வலியுறுத்தும் தலம். அங்க போய், சாமியை கும்பிட்டாலே, கணவனும் மனைவியும் ஒற்றுமையா இருப்பாங்க. நமக்கு, அங்க தான் கல்யாணமே நடக்க போவுது.” அவள் அவனை பார்த்தபடி கூற, அவன் அவள் கைகளை பற்றி கொண்டான் அவள் கூறுவது சரி என்பது போல.

“அட, உங்க நெல்லையாப்பார் கோவில் வேற என்ன சொல்லுது?” அவன் அவள் பேசுவதை கேட்க, ஆர்வத்தோடு பேச்சை வளர்த்தான்.

“என்னை கேலி செய்யரீங்களா?” அவள் கேட்க, “இல்லையில்லை தெரிஞ்சிக்கலாமுன்னு தான் கேட்குறேன்” அவன் கூற, “நெல்லையப்பர் கோவிலை பத்தி நிறைய சொல்லலாம். நம்ம கல்யாணம் முடிந்ததும் பிரகாரத்ததை சுத்தி வரும் பொழுது ஒவ்வொரு இடமா காட்டி சொல்றேன்” அவள் ஆர்வமாக கூறினாள்.

அவர்கள் கோவிலை வந்தடைந்தனர். கௌதமின் வீட்டில் இப்படி கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை தான். இருந்தாலும் அவனுக்காக ஏற்றுக்கொண்டனர். கெளதம் அவள் கழுத்தில் மனமுவந்தே தாலியை கட்டினான். மதுமதியும் விரும்பியே அவன் கட்டிய தாலியை வாங்கி கொண்டாள்.

 ஆனால்… ஆனால்… ஆனால்!

*** ***

திருநெல்வேலி! கசப்பான நினைவுகளோ, நல்ல நிகழ்வுகளோ எனக்கு கண்ணீரை மட்டுந்தான் தரும்.

அவள் இதயம் வேகமாக துடிக்க, அவள் தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவள் சிந்திவிட கூடாது என்று நினைத்த கண்ணீர்த் துளிகள் மடமடவென்று இறங்க அவள் நனவுலகத்திற்கு முழுதாக திரும்பினாள். அவன் தன் கைகளை நீட்டி, அவள் கைகளை அழுத்தமாக பற்றினான். அவள் அவன் கைகளை தட்டிவிட்டாள்.

“நெல்லையப்பர் கோவிலுக்கு போவோமா மதும்மா?” என்று அவன் சாலையை பார்த்தபடி கேட்க, “எதுக்கு?” என்றாள் அவள் ஒற்றை வார்த்தையாக.

“நெல்லையப்பர் நம்ம பிரச்சனையை தீர்த்து வைப்பாரான்னு கேட்கத்தான்” அவன் இதழில் புன்னகையோடு கூற, “மனிதர்கள் செய்ற தப்புக்கு பாவம் தெய்வம் என்ன செய்யும்?” அவள் உதட்டைச் சுளித்தாள்.

 “செய்த தப்புக்கு பரிகாரம் சொல்றாரான்னு பார்ப்போம்” அவன் அழுத்தமாக கூறினான்.

“அப்ப நீங்க போங்க” அவள் வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொள்ள, “காந்திமதி இல்லாமல் நெல்லையப்பர் உண்டா?” அவன் கண்சிமிட்ட, “என்ன பேச்சிது?” அவள் குரலில் கண்டிப்பு இருந்தது.

“அப்ப நீயும் வரேன்னு சொல்லு” அவன் குரலில் பிடிவாதமிருக்க, அவன் தொலைபேசி ஒலித்தது. அந்த அழைப்பு ப்ளூடூத்தில் இணைக்கப்பட்டது.

“சார், உங்களை ஊரு முழுக்க தேடுறாங்க.” அவன் கூற, “தேடட்டும் தேடட்டும் எல்லாம் கொஞ்சம் நேரம் தான். எப்படியும், என் மனைவியை கையெழுத்து போட ஏற்பாடாகியிருக்க ஸ்டேஷனுக்கு கூட்டிகிட்டு போவேன்.” அவன் கூற, “சரி சார்” எதிர்முனை மரியாதையாக கூறி தயங்கி நிற்க,

“என்ன விஷயம் சொல்லுங்க” அவன் கூற, “சார், அன்னைக்கு பீச்சல ஒரு பொண்ண பார்த்தேன்னு சொன்னீங்களே. அந்த பொண்ணு கிட்டயிருந்து ஒரு பில் கொடுத்தீங்க. அந்த பில் வைத்து அந்த பொண்ணு வர்ற கடையை கண்டுபிடித்து, அந்த ஏரியா காரங்களை விசாரிச்சதுல, நம்ம கேசில் சம்பந்தப்பட்ட பொண்ணை அடச்சீ வச்சிருக்கிறதை இவங்க பார்த்திருக்காங்க” அவன் நிறுத்த காரில் ஓர் அமைதி.

“விஷயம் வெளியே போகக்கூடாதுன்னு தான் அந்த பொண்ணை துரதிருக்காங்க. அங்க உங்க மனைவியைப் பார்த்ததும், அந்த பெண் பயந்து ஓடிட்டாங்க.” எதிர்முனை அலைபேசியில் கூற, “ஆக, மதுமதியால் கார் இடித்து கொலை செய்யப்பட்டானு இந்த உலகம் நம்புற மேகனா உயிரோடத்தான் இருக்கா? எங்கோ அடைச்சு வச்சிருக்காங்க. அதைப்பார்த்த சாட்சியும் இருக்கு” கெளதம் நிறுத்தி நிதானமாக கேட்டான்.

“ஆமா, ஆனால்…” அவன் அடுத்து கூறிய செய்தியில், கெளதம் ஸ்ரீனிவாசன் தன் காரின் பிரேக்கை படக்கென்று அழுத்தினான்.

மது… மதி! வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!