பூவுக்குள் பூகம்பம் 1

பூவுக்குள் பூகம்பம் 1

பூவுக்குள் பூகம்பம் – 1

 

பதினேழு ஆண்டுகளுக்குப்பின்…

சிபி தனது இளமருத்துவ படிப்பை நிறைவு செய்துவிட்டு பொது மருத்துப் படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்காக தன்னை தயார் செய்துகொண்டிருந்தான்.

தங்களின் பிளாட்டில் தங்கியிருந்து சிரத்தையெடுத்து படித்துக்கொண்டிருந்தவன் தாயின் வற்புறுத்தலுக்காக வீட்டிற்கு வந்துகொண்டிருந்த வழியில் அச்சிறுவனை சந்தித்தான்.

உடை நலுங்கி கையில் ஒரு குழந்தையை இடுக்கி வைத்துக்கொண்டு அக்குழந்தையைக் காட்டி, “பாப்பாவுக்கு பால் வாங்கணும்.  காசு வேணும்” என டிராஃபிக்கில் நின்று கொண்டிருந்தவர்களிடம் கையை நீட்டி கேட்டபடியே வந்தவன் இறுதியாக சிபியின் அருகே வந்து குழந்தையைக் காட்டி காசு கேட்டான்.

நீண்ட நேரமாக இருவரையும் கவனித்தபடியே இருந்த சிபி சிறுவன் அருகே வந்ததும், “அம்மா அப்பா எங்க?”

கையை விரித்து இல்லையென்றான்.

“வாயத் திறந்து பேசு”

சிபியின் வார்த்தையைச் செவி மடுக்காது மீண்டும் செய்கையில் குழந்தைக்கு பசி என்று செய்கையில் சொல்ல, “உனக்கு பசிக்கும்போது வேளைக்கு சாப்பாடு எல்லாம் தரேன்.  உன் அம்மா அப்பா எங்கனு சொல்லு”

சில நொடிகள் சிபியையே பார்த்தபடி இருந்தவன் என்ன நினைத்தானோ வாயைத் திறந்து, “செத்துட்டாங்க…!”

“எங்கூட வர்றியா…!” சிபி கேட்டதும் மிரண்டு விழித்தான்.

***

இராமேஸ்வரத்திலிருந்து தினசரி கல்லூரிக் கல்விக்காக இராமநாதபுரத்திற்கு பேருந்திலோ அல்லது புகைவண்டியிலோ தனது வசதிபோல வந்து செல்லுவதாகக் கூறி அடம் செய்யும் மகளை தனது வழிக்கு கொண்டு வரும் முயற்சியில் சிரத்தையோடு பேசிக்கொண்டிருந்தார் மதி.

ஆனால் சௌமியோ, “ம்மா… வேற ஊருல காலேஜ் சேத்து விடுங்கன்னு சொன்னாலும் கேக்கலை! இராம்நாடைத் தவிர வேற எங்கேயும் அனுப்பமாட்டேன்னு சதி பண்ணிட்டீங்க…

இப்ப… அம்மாச்சி வீட்டுல தங்கியிருந்து காலேஜ் படீனு சொல்றீங்க!  இங்க இருக்க மாதிரி என்னால அங்க ஃப்ரீயா படிக்க முடியுமா?  சொன்னா புரிஞ்சுக்கங்கம்மா…” விருப்பமின்மையை முகத்தில் ஃபேசியலைப்போல அப்பிக்கொண்டபடி எரிச்சலோடு பேசினாள்.

“வேற ஊருல படிக்கப் போறவ ஒழுங்கா மார்க் எடுத்திருக்கணும்.  அப்டியெடுத்தா உங்கப்பாதான் உன்னை சென்ன்…னையில… சேத்து விடறேன்னு சொன்னாரே… நீ ஏன் எடுக்கலை?” தாயின் அழுத்தமான பேச்சும், கிடுக்குப்பிடி கேள்வியும் செளமியின் இயலாமையை பறைசாற்ற, அதை ஏற்றுக்கொள்ள இயலாமல் சீற்றமானவள்,

“நான் நல்லாத்தான் எழுதுனேன்.  என்ன கருமமோ… நல்ல மார்க் வரலை! திருத்துன ஆளு சரியில்லை…” கோபத்தினை தாயிடம் காட்ட வழியின்றி தங்கு தங்கென கால்களை தரையில் மிதித்து உதைத்தபடி கைகளைக் கொண்டு செய்கையில் மறுப்பு தெரிவித்துப் பேசினாள் சௌமி.

“எப்டியெப்படி…!” நக்கல் சிரிப்போடு மகளை நோக்கிக் கேள்வி எழுப்பிய மதி,

அத்தோடு விடாமல், “உனக்கு மட்டும் நீ எழுதினதுக்கு மார்க் போடாமக் குறைச்சுட்டாங்களா?” நையாண்டித்தனமாக வினவ,

தாயின் கேள்வியில் வெகுண்டு போனவள், “ரீ வேல்யூசன் போடலாம்னு சொன்னேன்.  அதுக்கு நீங்க கேக்கலை.  என்னையே எதுக்கெடுத்தாலும் குறை சொல்லுங்க…” ஙஙன குரலில் தனது குறையை ஒத்துக்கொள்ளாமல் சிணுங்கி தனது பேச்சை நம்ப வைக்கும் முயற்சியில் இருந்தாள் சௌமி.

பணத்தை வீண் விரயம் செய்யக்கூடாது என்பதெல்லாம் சௌமிக்குத் தெரியாது.  தெரிந்தாலும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளமாட்டாள்.

மதி, “அவளுந்தான்… நாங்க சொன்னதைக் கேட்டு அங்க தங்கியிருந்து படிச்சு முடிக்கலையா…? உனக்கு மட்டும் அப்டியென்ன பிடிவாதம்?”

தாயின் இந்தக் கேள்வியில் உக்கிரமான சௌமி, “எதுக்கெடுத்தாலும் அக்காப் புள்ளையவே (அக்காவையே) எங்கூட எதுக்குக் கம்பேர் பண்றீங்க? இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன்.  உங்களுக்கு நான்னா தொக்கா… ஆ… வூன்னா… அவ பெருமையப் பீத்தலைன்னா… தூக்கமே வராதா?” என்றவள்,

அங்கிருந்து விலகிச் சென்று அறைக்குள் நுழைந்து தாழிட்டபடியே, “பேசாம என்னை யாராவது நல்ல மனுசங்களுக்கு தத்து குடுத்துருங்க… எனக்கும் நிம்மதியா இருக்கும்.  உங்களுக்கும் தொல்லை விட்டதுன்னு இருக்கலாம்” தனக்குத்தானே அறையில் இருந்த படுக்கையில் படுத்தபடியே பேசிக்கொண்டிருந்தாள்.

சௌமியின் அகராதியில் இங்கு அவள் குறிப்பிட்ட நல்ல மனுசங்கள் என்பது யாதெனில்… காரும், பங்களாவும், பகட்டும் பதவிசுமாக உள்ள குடும்பத்தில் தன்னை எதற்காகவும் கட்டுப்படுத்தாமல் தனது போக்கில் விட்டுவிட்டு அவரவர் பணியைப் பார்த்துக் கொண்டு இருத்தலாகும்.

சௌமியின் தந்தை செழியனுக்கு ஓரளவு வசதியிருந்தாலும் தனது தொழில் சார்ந்த தேவைகளுக்காக டாடா 407 வண்டி வைத்திருந்தாலும், தனது சொந்தத் தேவைக்கென்று இதுவரை கார் வைத்துக் கொள்ளவில்லை.

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக என்றால் வாடகைக்கு காரை அமர்த்திக்கொள்வார் அவ்வளவே.

 “இது என்ன பழக்கம் சௌமி.  உங்கிட்ட எத்தனை தடவை இப்டி பெரியவங்களோட பேசிட்டு இருக்கும்போது மரியாதைக் குறைவா நடக்கக் கூடாதுன்னு சொல்றது? எப்பத்தான் உனக்கு புத்தியக் கடவுள் குடுப்பானோ! இப்டியே போற இடத்திலயும் பண்ணா நல்லா குத்துதான் வாங்குவ…” மதி கதவினருகில் நின்றபடியே மகளது செயலில் உள்ள தவறைச் சுட்டிக் காட்டிச் சாடினார்.

சட்டெனக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவள், “உண்மையிலேயே நீங்கதான் என்னைப் பெத்தீங்களானே சந்தேகமா வருது!” என்றாள் சௌமி.

“ஏண்டி! தப்பெல்லாம் நீ பண்ணிட்டு! அதைச் செய்யாதேன்னு சொன்னாக்கா… இனி இப்டிச் செய்ய மாட்டேன்மானு சொல்லாம… சம்பந்தமேயில்லாம என்னடீ பேச்சுப் பேசற…!” அடிக்கும் தோரணையில் மகளை நெருங்க,

“அய்யோ…! என்னைக் கொடுமைப்படுத்துறாங்களே… எனக்குன்னு நியாயம் கேக்க இங்க யாருமே இல்லையா?” எனும் சௌமியின் குரல் அருகே உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு கேட்டதோ இல்லையோ, அதே ஊரில் ஏழெட்டுத் தெரு தள்ளி குடியிருக்கும் அத்தையின் மகன் தீர்த்தபதிக்கு கேட்டதுபோல சுற்றுச்சுவர் கதவைத் தாண்டி வேகமாக உள்ளே வந்தான்.

எதேச்சையாக அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தவன் ஆந்தி(எட்டிப் பார்த்தல்) யாரேனும் மாமன் வீட்டு ஆட்கள் வெளியில் தென்படுகிறார்களா என்று பார்த்தபோது எதிர்பாராமல் வந்த சௌமியின் குரலைச் சாக்கிட்டு வீட்டினுள் வந்துவிட்டான்.

இதனைக் கவனத்தில் கொள்ளாத இருவரும் அவரவர் பேச்சினைத் தொடர்ந்திருக்க,

“யாராவது வந்து என்னைக் காப்பாத்துங்களேன்” என்றபடியே சிரித்துக்கொண்டு சௌமியாகவே சென்று அடிக்க வந்த தாயின் கையை பிடித்தபடியே அவளை இறுகக் கட்டிக் கொண்டு சிரித்தாள்.

“கள்ள நாயி…!” மதியும் மகளின் பரிமாணத்தில் சிரித்துவிட்டார்.

இது வழமையாக நடப்பதுதான் என்றாலும் இன்றும் மகளின் செயலில் உண்டான சிரிப்பில் மதியிருக்க, வாயில் கதவில் தனது இரண்டு கைகளையும் நிலைக்கு ஒன்றாக பிடித்து நின்றபடியே இருவரையும் மாறி மாறி ரசனையாகப் பார்த்தபடியே அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான் தீர்த்தபதி.

சட்டென அமைதியைக் கலைத்தாள் சௌமி.

“ம்மா…”

“என்ன!”

“எது நான் சொன்னாலும் ஏம்மா அக்சப்ட் பண்ணவே மாட்டீங்கறீங்க…?” சௌமி.

“உனக்கே ஏன்னு இன்னும் புரியலையா?”

அதற்குள் இடையிட்ட தீர்த்தபதி, “இங்க என்னவோ கொடுமை நடக்குற மாதிரிக் கவி கத்துச்சுனு வந்து பாத்தா, எல்லாம் உல்டாவா நடக்குது அத்தை…” எனும் பேச்சினைக் கேட்டு இருவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

“வா தீர்த்தா… ஏன் வாசல்லயே நிக்குற… உள்ள வா” மதி தனது சிறிய நாத்தனாரின் மகனும் தங்களின் வருங்கால இளைய மருமகனாகப் போகிறவனுமான தீர்த்தபதியை வரவேற்க,

தாயின் வரவேற்பில் புகைந்தவள், தனக்குள் ‘தீர்த்தபதி திருப்பதின்னு ஆளையும் பேரையும் பாரு… இந்த அம்மா வேற… வாப்பா… வந்து இருப்பானு…’ முனகலோடு அவனை பாராமல் வேறு எங்கோ பார்வையைச் செலுத்தியவாறு நின்றிருந்தாள் சௌமி.

தீர்த்தபதியை வாவென அழைப்பதா வேண்டாமா எனும் குழப்பத்தில் வழமைபோல பேசாமல் நின்றிருந்தாள் சௌமி.

மகளின் செயலைக் கண்ணுற்று, கண்ணாலேயே தீர்த்தபதியை வாவென கேள் என மிரட்ட… தாயின் செய்கையைக் கண்டும் காணாததுபோல உள்ளே சென்றாள் சௌமி.

“என்னத்தை… என்ன நடக்குது?” எனக் கேட்டவனிடம், மேலோட்டமாக அவள் இராமநாதபுரத்திற்கு கல்லூரிப் படிப்பிற்காக செல்லவிருப்பதைப் பற்றி மட்டும் கூறிவிட்டு, பேச்சை மாற்றியிருந்தார் மதி.

தீர்த்தபதி அயல்நாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தவன் இரண்டு மாத விடுப்பில் தாய்நாட்டிற்கு வருகை தந்திருக்கிறான்.

சௌமி விலகிச் சென்றாலும் கொக்கிற்கு மதி ஒன்று என்பதுபோல தீர்த்தபதிக்கு அவளைத் தவிர வேறு எதுவுமே பெரிதாகத் தெரியாது.

அவள் பேசாவிட்டாலும் வருந்தியதில்லை.  அது திருமணத்திற்குப்பின் சரியாகிவிடும் என திடமான நம்பிக்கை அவனுக்கு.

மாமன் மகளை தனது ஆசைதீர பார்த்தபடியே அத்தையிடம் பேசிவிட்டு, மனதே இல்லாமல் கிளம்ப ஆயத்தமானான் தீர்த்தபதி.

கவி சௌமியா அவனோடு பேச விரும்புவதில்லை என்பதைவிட வசுமதியும் அதை அனுமதிக்கமாட்டார் எனத் தெளிவாகத் தெரிந்திருந்தமையால் தீர்த்தபதி சற்று அமைதி காக்கிறான்.

சிறிது நேரம் தன்னோடு வாய் பேசினாலும், பார்வையில் மகளையே தொடர்ந்து கொண்டிருந்துவிட்டு தீர்த்தபதி கிளம்பியதும் மகளை அழைத்து, “வீட்டுக்கு வந்தவங்களை வான்னு கேளுன்னு… உங்கிட்ட எத்தனை தடவை சொல்றது சௌமி!” மனவருத்தத்தை மகளிடம் காட்ட,

“வான்னு கேட்டா, அது ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குதும்மா.  அதான்…” அவளுக்கான காரணத்தைக் கூறினாள் சௌமி.

சௌமி கூறாவிட்டாலும், தீர்த்தபதிக்கு செளமியை எந்தளவிற்குப் பிடிக்கும் என்பதை அவ்வவ்போது அவனது தாய் தேன்மொழி… தீர்த்தபதி தனது வருங்கால மனைவிக்காக இதை வாங்கி வந்திருக்கிறான், இதை வாங்குவதாகக் கூறுகிறான் என்று பெருமை பேசுவது வாயிலாக மதிக்கும் தெரிந்திருந்தது.

“அது இதுன்னு எதுக்குடீ சொல்ற?  அவன் உனக்கு அத்தை பையன்.  அத்தான்னு சொல்லு.  இப்டியே சொல்ற வாயிதான் கல்யாணத்துக்கு அப்புறமும் வரும்” மதி உறுதியாகக் கூற,

“ம்மா… உங்ககிட்ட எத்தனை தடவை சொல்றது.  எனக்கு அதையெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சா… கண்ணுக்கு காணாம எங்கேயாவது ஓடிப் போயிருவேன்.  ஆமா சொல்லிப்புட்டேன்” சௌமியின் பேச்சில் உண்மையிருப்பதை உணர்ந்த மதிக்கு மூச்சை அடைத்தது.

மகளின் பேச்சைக் கேட்டு கண்டிக்கும் விதமாக, “வாயில அடி… முதல்ல…” மதி கூறியதும்,

தாமதிக்காது சட்டெனத் தாயின் வாயில் தனது கையால் இலேசாக பொய்யாக அடித்திருந்தாள் சௌமி.

மதி மகளின் செயலைக் கண்டு கண்டிக்க, “சும்மா விளையாட்டுக்குத்தான செஞ்சேன்” சிணுங்கினாள்.

‘அப்பாவும் அத்தையும் ஒரே பிடியில இருக்காங்க.  பையனும் அதே மாதிரி இருக்கான்.  இவ ஒருத்தி மட்டும் எதித்துகிட்டு என்ன செய்யப் போறாளோ’ இப்படித்தான் மதியின் மனதில் ஓடியது.

“அதுக்கு… இன்னும் முழுசா… மூனு வருசம் கிடக்கு!  அதுவரை வாயில வர்றதையெல்லாம் பேசக்கூடாது சௌமி! 

கல்யாணம் நடக்குது! இல்லை நடக்கலை! அது அப்போ பாத்துக்கலாம்.  ஆனா வீட்டு வாசல்ல வந்தவங்களை… எதிரியா இருந்தாலும் வாங்கனு கூப்பிட்டுப் பழகு!” கண்டிப்பாக கூறினார் மதி.

“மனுசங்களை இப்ப வேணும், பொறகு(பிறகு) வேணும்னு… நினைச்சுப் பேசணும்… நடத்தணும்…  அதைவிட்டுட்டு… எடுத்தோம் கவுத்தோம்னு இருந்தா தப்பாப் போயிரும் சௌமி” என்ற மதியை நோக்கி வந்த சௌமி தாயையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவள்,

“எனக்கு அது(தீர்த்தபதி) எப்பவுமே வேணாம்மா!” அத்தனை உறுதியோடு தாயின் கையை இறுகப் பற்றியவாறு கெஞ்சலோடும், கொஞ்சலோடும் தாயிடம் கூறினாள் சௌமி.

மூத்த மகள் கனி சௌமியாவை… வசுமதியின் மூத்த நாத்தானாரின் இளைய மகனுக்குப் பேசி வைத்திருந்ததுபோல… அவள் பட்டக் கல்வி முடித்ததும் சமீபத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.

அதேபோல, இளையவள் பிறந்ததுமே இளைய நாத்தானாரின் மூத்த மகனான தீர்த்தபதிக்கு பேசி வைத்திருந்தார் செழியனின் தாய் பவானி.

அது அங்கு சாதாரணம். 

சிறு வயது முதலே தீர்த்தபதியைக் கண்டாலே சௌமிக்கு ஆகவே ஆகாது.

நிறத்திலிருந்து குணம், செயல் அனைத்திலும் அத்தனை வேறுபாடு இருவருக்கும்.

ஆனால் தீர்த்தபதிக்கு சௌமிதான் அவனது எதிர்காலம் என சிறு வயது முதலே எண்ணி வாழ்ந்து வருகிறான்.

சௌமிக்கு, அஜித், விஜய் போன்று தோற்ற அமைப்பில் கதாநாயகனைப்போல உள்ள ஆணையே திருமணம் செய்யும் எண்ணம்.

நிதர்சனங்களை புரிந்துகொள்ள விரும்பாதவள்.

சினிமாட்டிக் வாழ்க்கையை ரசிப்பவள். எதிர்நோக்குபவளும்கூட.

தீர்த்தபதி குணத்திலும், வேலையிலும் கெட்டிதான்.  கை நிறைய சம்பாத்தியம்.  ஆனால் புறத்தோற்றத்தில் மட்டுமல்லாது வெடுக்கென பிறர் மனம் நோக அவன் பேசுவதும் சௌமிக்குப் பிடிக்காது.  மேலும் அவன் அத்தனை அழகனல்ல.  இவையெல்லாம்தான் சௌமிக்கு தீர்த்தபதியைப் பிடிக்காததற்கான காரணம்.

சௌமியை திருமணத்திற்கு முன்பே இங்கே எதற்காகப் போகிறாய்? அங்கே என்ன பேச்சு? என்பது போன்ற அதிகாரத் தோரணையில் மூக்கை நுழைத்து தன்னை அவனது கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் விதமாக தீர்த்தபதி நடந்து கொள்வதை அறவே வெறுத்தாள்.

அவனது நற்குணம் என்பது தனக்கானவர்கள் என்று வரும்போது ஒரு மாதிரியும், வேண்டாதவர்கள் என்றால் வேறு மாதிரியும் நடந்துகொள்வான்.

உறவுகளுக்கிடையில் இன்றைய நிலையில் அவனைக் குறை சொல்ல முடியாது என்பதான ரகம்.

ஆனால் அதற்காக வீட்டிற்கு வந்தவனை வா என்று அழைக்கக்கூட மாட்டேன் என்றிருப்பவளை எண்ணி சௌமியின் தாய் மதிக்கு அயர்ச்சியாக இருந்தது.

தன் பாட்டி வேதா கூறியதும் மனதில் வந்து கேலி செய்தது வசுமதிக்கு. ‘அத்தனை வருசத்துக்கு முன்னயே பாட்டி சொன்னாங்க… அதே மாதிரித்தான் இவளும் பண்ணுறா’ என்பதாக இருந்தது.

சௌமிக்கு ஐந்து வயது இருக்கும்போது வேதா பாட்டி இறைவனடி சேர்ந்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செழியனின் தாய் பவானியும் மறைந்திருந்தார்.

ஆனாலும் செழியனுக்கும், அவரது தமக்கைக்கும் தாயின் சொல்லை நிறைவேற்றுவதில் அலாதி விருப்பம்.

தன் முகத்தையே வைத்தகண் வாங்காமல் பார்க்கும் மகளைப் பார்த்தபடியே, “சொன்னதை அப்படியே என்னைக்கும்மா நீ பண்ணிருக்க… எல்லாத்துக்கும் எதாவது நொண்டிச் சாக்கு சொல்ற…

எல்லாம் உங்க அப்பா குடுக்கற இடம்… நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்.  இனி வர எதுக்கும் நான் பொறுப்பில்லைன்னு என்னால மூனாம் மனுசி மாதிரி உம்போக்குல விட முடியாது சௌமி.

அதனால அம்மா சொல்றது உன்னோட நல்லதுக்குன்னு புரிஞ்சிட்டு மறுக்காமக் கேளு…” மகளுக்கு புரியும்படி எடுத்துக் கூறிவிட்டு அடுக்களைக்குள் தாய் சென்றதும், யோசனையோடு வீட்டிலிருந்த ஊஞ்சலில் சென்றமர்ந்தாள் சௌமி.

காலால் உந்தி ஊஞ்சலில் ஆடியபடியே யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

நீண்ட நேரத்திற்குப்பின் வெளியிலிருந்து வந்த தந்தையிடம் சென்று காதில் கிசுகிசுத்தாள் சௌமி.

“ப்பா… இந்த அம்மா என்னோட எல்லா ஆசைக்கும் தடா போட்டு வெறுப்பேத்திப் பாக்குறாங்க.  இனி நீங்களாச்சு.  அம்மாவாச்சு.  நான் பஸ்ஸுலயோ, ட்ரையின்லயோ என்னோட விருப்பம்போல டெய்லி காலேஜ் போயிட்டு வருவேன். 

அம்மாச்சி வீட்டுக்குலாம் என்னால போயி தங்கிப் படிக்க முடியாது. அதுக்கு நான் படிக்காம வீட்டுலேயே கூட இருப்பேன். ஆமா… சொல்லிட்டேன்.” திடமாக தந்தையிடம் தனக்கான சலுகையை கேட்டுப் பெறுவதில் குறியாக இருந்தாள் சௌமி.

சௌமிக்கு எதைத் தந்தையிடம் பேச வேண்டும், எதை தாயிடம் பேச வேண்டும் என்பதெல்லாம் தெளிவாகத் தெரியும்.

தீர்த்தபதியை தான் மறுப்பதை தந்தையிடம் கூறும் தைரியம் சௌமிக்கு என்றுமே வராது.  அதேபோல தனது காரியம் ஆகவேண்டிய படிப்பு விசயத்தில் தாயை அணுகவே மாட்டாள் சௌமி.

மேல்நிலைக் கல்வி முடித்து தேர்வு முடிவுகள் வெளிவரும்வரை இலேசாக இருந்த பேச்சு வார்த்தைகள், மதிபெண்கள் குறைந்துபோனது முதலே மிகவும் சூடாக பரிமாறிக் கொள்ளப்பட்டு வந்தது.

சௌமியா தன்னோடு படித்த தோழிகள் சிலர் மதுரை, திருச்சி, சென்னை மற்றும் கோவை போன்ற இடங்களில் கல்லூரிப் படிப்பிற்காக போயிருக்க, தன்னையும் அதுபோல பெருநகரங்களில் படிக்க வைக்கும்படி அடம் பிடித்தாள்.

செழியனோ, “நல்ல மார்க் எடுத்து கவுன்சிலிங்கல எந்த காலேஜ்ல கிடைச்சாலும் அப்பா உன்னை அங்க சேத்து விடறேன்.  அதுக்காக மார்க் எதுவும் இல்லாம பேமெண்ட் சீட்ல உன்னை வெளியூருக்கு அனுப்ப மாட்டேன்.” உறுதி அளித்திருக்க, சௌமியா எடுத்த மதிப்பெண்களுக்கு அவளின் ஆசை கேள்விக்குறியாகி இருந்தது.

சௌமியாவின் அதீத தன்னம்பிக்கையான செயல் அவளை எதாவது அதலபாதாளத்தில் தள்ளிவிடுமோ என்கிற பயம் அவளின் தாய் மதிக்கு.

சௌமிக்கு அவளின் தேவை, விருப்பம், சுகம்தான் முதலில்.  பிறருடைய அசௌகர்யங்களைப் பற்றி எப்போதுமே கருத்தில் கொள்ள மாட்டாள்.

மூத்தவள் தங்கைக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டு பெற்றோரின் வார்த்தைகளை வேத வாக்காகக் கொண்டு நடப்பவள்.

கனி இளஅறிவியலில் பட்டம் பெற்றதும் இரண்டு மாதங்களுக்கு முன் அவளை திருமணம் செய்து கொடுத்து நிறைவாக கடமையைச் செய்திருந்தனர் மதி செழியன் தம்பதியினர்.

அதற்கு முற்றிலும் மாறானவள் சௌமியா. சௌமியாவை நினைத்து மதிக்குத்தான் அச்சம். ‘இந்தப் புள்ளைய ஒழுங்கா ஒருத்தவன் கையில புடிச்சுக் குடுத்தாத்தான் எனக்கு நிம்மதி’ என்பதுதான் சமீபத்திய அவரின் எண்ணம்.

தனிமையில் செழியன் மனைவியிடம், “அது ஆசைப்படறதைச் செய்யறதைவிட நமக்கு என்ன வேலை?”

இடையில் தனது கருத்தைக் கூற வந்த மதியை பேசவிடாமல், “விடுவேன்டீ…  பிடிச்ச மாதிரி பஸ்லயோ ட்ரெயின்லயோ போயிட்டு வரட்டும். இப்ப உன்னால ஆசைப்பட்டாலும் எதாவது செய்ய முடியுதா? இல்லைல்ல…

காலேஜ் முடிச்சதும் பெருச(மூத்தவளை) கல்யாணம் பண்ணிக் குடுத்த மாதிரி இதையும் கட்டிக் குடுத்து வேற வீட்டுக்கு அனுப்பிருவோம். 

அதுவரை… புள்ளை நம்மகிட்ட ஜாலியா இருந்துட்டுப் போகட்டுமே…” செழியன் இளைய மகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியிருந்தார்.

“பேசி முடிச்சிட்டீங்களா…” கணவனை மேலும் கீழுமாகப் பார்த்து முறைத்த மதி,

“மூத்தவளை எங்கம்மா வீட்டுல விட்டுப் படின்னு சொன்னோம்.  ஏன் எதுக்குன்னு கேக்காம… சரின்னு மூனு வருசம் அங்க தங்கியிருந்து படிச்சிட்டு வந்தா…

இவனைக் கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னோம்.  எதாவது மறுத்துச் சொன்னாளா.  இல்லை எதாவது கேட்டாளா?  எதுவுமே பேசாம சரினு பண்ணிக்கிட்டா…

அவளோட போயி யாரைச் சேக்கறீங்க… பொம்பிளைப் புள்ளை வளரும்போதே அது எப்டி என்னானு… பெத்தவளாலதாங்க சரியாக் கணிக்க முடியும்.

இது மூத்தது மாதிரிக் கிடையாது.  உங்கள மாதிரி முட்டிட்டுக் குனியற ரகம்” என்றதுமே முறைத்துப் பார்த்த செழியனை,

“இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.  அவ பிறந்தப்போ நீங்க பண்ண ஒரு விசயம் போதுமே.  உங்களைப் பத்திச் சொல்றதுக்கு…” மதி கணவனது முறைப்பை கண்டுகொள்ளாமல் பேச,

செழியனுக்கு, ‘இதை இவ விடவே மாட்டா போலயே… எத்தனை வருசமாச்சு.  இன்னும் அதையே பேசி மனுசனக் கொலையாக் கொல்லுறா…’ மனதிற்குள் நினைத்தாலும் அவனால் இந்த விசயத்தை மறுத்தோ… இல்லை வேறு விதத்தில் வாக்குவாதமோ செய்ய முடியாத நிலையில் அமைதி காப்பான். 

அதேபோல இன்றும் அமைதியாக ஆனால் மனைவியின் பேச்சை தான் ரசிக்கவில்லை என்பதை முகத்தில் காட்டியவாறு அமர்ந்திருந்தான்.

இதற்கெல்லாம் அசரமாட்டேன் என்பதுபோல மதி அவளது பேச்சைத் தொடர்ந்திருக்க, அவளை வழிக்குக் கொண்டு வர கணவன் பார்வை பார்க்கத் துவங்கியிருந்தார் செழியன்.

பேச்சைத் தொடர்ந்திருந்த மதி, “இன்னும் வேற எல்லாத்தையும் எடுத்துச் சொன்னா உங்களுக்குத்தான் அசிங்கம்” என்றவர்,

கணவனது அமைதியில் அவரது புறமாகத் திரும்பி, “இப்ப எதுக்கு அதெல்லாம்…” கணவனை நிமிர்ந்து பார்க்க,

கணவனது பார்வையின் அர்த்தம் புரிந்ததும், “இன்னும் பத்து மாசத்துல பேரனோ, பேத்தியோ வந்திரும்.  அந்த நினைப்பிருக்கட்டும். 

இன்னும் கவட்டுக்குள்ளயே நினைப்ப வச்சிட்டுருந்தா காரியம் கெட்டுப் போகும். வயசுப் புள்ளைய வீட்டுல வச்சிக்கிட்டுப் பாக்கறதைப் பாரு… போங்க அந்தப் பக்கம்” தன்னை அவருடைய இடையோடு இழுத்தணைத்ததைப் பார்த்து வெகுண்டு பேசியவர்,

கணவனிடமிருந்து தன்னை வலுக்கட்டாமாகப் பிரித்துக்கொண்டு, “சௌமி சொல்றதுக்கெல்லாம் தலையாட்டினா நம்மளை தலை குனிய வச்சிருவா. 

அதனால அவ விசயத்துல ரொம்ப இடங் குடுக்காதீங்க. குட்டுப்பட்டுத்தான் குனிவேன்னு நின்னாக்கா… என்னால என்ன செய்ய முடியும்?

நான் சொல்லும்போதெல்லாம் தட்டிக் கழிச்சிட்டே வந்தா, அவளோட வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிட்டு வந்து நிப்பா.  இதுக்குமேல எனக்குச் சொல்லத் தெரியலைங்க” தனது கருத்தை கணவனிடம் கூறிவிட்டு, அதற்குமேல் தந்தையும் மகளுமாக எதையும் செய்யட்டும் எனும் விரக்தியோடுடனான எண்ணத்தை முகம் பிரதிபலிக்க கணவன் காணாது முகத்தை திருப்பிக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்திருந்தார் மதி.

செழியனுக்கு மதியின் பேச்சு புரிந்தாலும், மகளின் மீது அதீத நம்பிக்கை. தனது நம்பிக்கை கானலாக வாய்ப்பிருப்பதை அவரால் கணிக்கக்கூட இயலாத நிலையில் சௌமியின் விருப்பத்திற்கு இசைந்திருந்தார்.

தீர்த்தபதியும் நம்பிக்கையோடும் கனவுகளோடும் தனது அயல்நாட்டுப் பயணத்தைத் துவங்கியிருந்தான்.

முதலில் இரண்டு மாதங்கள் நன்றாகவே சென்றது. அதன்பிறகுதான் காற்றின் திசை மாறியிருந்தது.

சௌமியின் கடைக்கண் பார்வைக்காக தவமிருந்த முகவைக்காரன் அவளின் கருணை விழிக்குள் அகப்பட்டானா?

***

error: Content is protected !!