பூவுக்குள் பூகம்பம் 11
பூவுக்குள் பூகம்பம் 11
பூவுக்குள் பூகம்பம் – 11
சௌமி, கனி சௌமியாவின் திருமணத்திற்குபின் வானதி தற்போது வசிக்கும் வீட்டிற்கு வந்திருக்கிறாள். சௌமியின் சகோதரி கனி மற்றும் காமேஸ்வரன் திருமணம் பற்றி முடிவெடுத்ததும், வானதி அப்போது வசித்த வீடு அத்தனை வசதியில்லை என தற்போது வசிக்கும் வீட்டிற்கு குடிமாறியிருந்தனர்.
திருமண பரபரப்பில் வந்து சென்றது. அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்களையெல்லாம் கவனிக்கும் நிலையிலோ, தெரிந்துகொள்வதிலோ ஆர்வம் காட்டியதில்லை சௌமி. தற்போதும் அப்படியே.
அதனால் அவளுக்கு மாலினி குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் அவளின் திருமணத்திற்காக மாலினியும், மகேந்திரனும் தங்களின் உறவினராக இராமேஸ்வரம் வந்திருந்தபோது வானதி அத்தையின் அறிமுகத்தால் ஜெயமாலினியை மட்டுமே பார்த்த நினைவு சௌமிக்கு.
அதனால்… வந்த இரண்டு நாள்களுக்கிடையே சௌமி வெளியே வரும்போது எதிர்பட்ட மாலினியைப் பார்த்ததும், சின்னதாக ஒரு சிரிப்பு என்றளவில் முதல் முறை கடந்து போயிருந்தார் மாலினி.
கனி கைக்குழந்தையோடு சென்னை திரும்பியதைப் பார்த்து குழந்தையைக் காண பல்லவன் ஆவல் கொண்டாலும் வானதியின் சிடுசிடுப்பான முகபாவனையில் அந்தப் பக்கமே வரமாட்டான்.
அன்று மாலையில் எதிர்பட்ட மாலினி, “நல்லா இருக்கியாடா? என்ன படிக்கப் போற? எந்த காலேஜ்?” இப்படி சில கேள்விகளோடு சௌமியின் முதுகில் தட்டி, “தைரியமா இருக்கணும். எதுக்கும் ஒரு சொலுயூசன் இருக்கும். அதனால அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது” என்றெல்லாம் பேசினார்.
சௌமிக்கு புரிந்தது. அவர்கள் தான் நடந்து கொண்டதை எண்ணி, தன்னிடம் அவ்வாறு பேசுகிறார் என்று சரியென்று ஆமோதித்தவள் விடைபெற்று வந்திருந்தாள்.
தான் படிக்க வந்திருப்பதெல்லாம் இவருக்கு தெரிந்திருக்கிறது என்றால், அங்கும் தன்னைப் பற்றி பேசியிருப்பது புரிய வந்தது சௌமிக்கு.
மாலினிக்கு மட்டுந்தான் தன்னைப் பற்றித் தெரியுமா? இல்லை இங்கு இருக்கும் மூன்று வீடுகளிலும் குடியிருப்பவர்களுக்கும் தன்னைப் பற்றி கூறியிருக்கிறார்களா? இப்படி சௌமிக்குத் தோன்றத்தான் செய்தது.
மாலினியைத் தெரிந்தாலும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் யார் யார், எத்தனை நபர்கள் வீட்டில் என்றெல்லாம் சௌமிக்கு இன்னும் தெரிந்திருக்கவில்லை.
அவளின் சகோதரியிடம் கேட்டால் சொல்லுவாள்தான். ஆனால் அதில் சௌமிக்கு ஆர்வம் இல்லை.
புதிய இடம். புதிய கல்லூரி. அக்காவின் கணவனும் அத்தை மகனுமான காமேஸின் உதவியால் அவள் செல்ல வேண்டிய கல்லூரியின் வழித்தட பேருந்துகள் மற்றும் இதர விசயங்களைக் கேட்டறிந்து கொண்டு காலையில் கல்லூரிக்குக் கிளம்பிச் சென்றிருந்தாள் சௌமி.
திரும்பியபோதும் காமேஸ்வரன் சொன்ன விசயங்களை மனதில் நிறுத்தி அதன்படி வீட்டை நெருங்கியவளின் கண்ணில், மகேந்திரனைக் கண்டதும் நடை தயங்கியிருந்தது.
‘அவந்தானா இது. இல்லை… அது மாதிரியே வேற யாரோவா…’ தயங்கிவாறு ஆனால் வீட்டை நெருங்கினாள் சௌமி.
மாலினியின் வீட்டைச் சுற்றி மரம் செடிகள் அதிகமிருக்கும். இடைவெளிவிட்டு இரண்டு வீடுகள் ஒன்று சேர்ந்தாற்போல வாடகைக்கு விட்டிருந்தனர்.
அங்கு அதிகம் மரஞ்செடிகள் எதுவும் இல்லாமல் இருந்தது. மூன்று வீடுகளும் ஒரே சுற்றுச் சுவருக்குள் இருந்தது.
முதல் வீட்டின் கீழ்தளத்தில் வங்கியில் பணி புரியும் ஒருவர் தனது குடும்பத்தோடு வாடகைக்கு இருந்தார். அவர்களின் மாடியில் வேறு ஒரு குடும்பம் குடியிருந்தது.
இரண்டாவது வானதி அவர்களின் வீடு. கீழே வானதி, அவர் கணவர் மற்றும் இளைய மகனான காமேஸ் குடும்பம் இருந்தது. மாடியில் மூத்த மகன் மகேஸ் குடும்பம் குடியிருந்தது.
இரு வீடுகளும் மிக அருகாமையில் இருந்தது.
அடுத்து கார் பார்க்கிங்கிற்கான இடம் நீண்டிருந்தது. அடுத்து மரஞ்செடிகள். வீட்டுத்தோட்டம். அதைத்தாண்டி மாலினி அவர்களின் வீடு.
சுற்றுச் சுவரில் இரண்டு வாயில்கள். ஒன்று மாலினி குடும்பம் மட்டுமே பயன்படுத்தக்கூடியது. மற்றொன்று வாடகைக்கு குடியிருப்போர் பயன்படுத்த ஏதுவாக ஒன்று.
தங்களின் வாயிலுக்குள் மகி நுழைவதைப் பார்த்ததும் தயங்கியவள், ‘பக்கத்துல இருக்கற வீட்டுல குடியிருக்காங்களோ’ என நினைத்தவாறே மெதுவாக வீட்டை நெருங்கியவள், தங்களின் வீட்டு வாயிலில் நின்று வானதியிடம் பேசிக்கொண்டிருந்தவனைக் கண்டதும்,
‘யாரிது? இதுதான் நான் குடியிருக்க வீடுன்னு இவனுக்கு எப்டித் தெரிஞ்சது?’ என்பதுபோல சிந்தனை ஓட,
‘அத்தைகிட்ட என்ன விசாரிக்கிறான்?’ மனதிற்குள் யோசனையோடு வானதி அங்கே இருக்கும் தைரியத்தில் நெருங்கியிருந்தாள் சௌமி.
“இதோ அவளே வந்துட்டா…” சௌமியைப் பார்த்து மகியிடம் பேசிய வானதியின் முகத்தில் அத்தனை சிரிப்பு.
அது இயல்பான சிரிப்பல்ல. ஒட்டவைத்த சிரிப்பு என்பது சௌமிக்குத் தெரியும்.
திருதிருவென விழித்தபடியே அத்தையின் சிரிப்பு உணர்த்திய செய்தியில் தன்னைச் சமாளித்துக் கொண்டு, “என்ன அத்தை?” என்றாள் சௌமி.
“இது மகி… நம்ம ஹவுஸ் ஓனர் பையன்.” சௌமிக்கு அறிமுகம் செய்துவைத்ததோடு, “நீ படிக்கற அதே காலேஜ்லதான் மகியும் படிக்குதுன்னு வந்து சொல்லிக்கிட்டு இருந்துச்சு.” சிரிப்பு.
“உனக்கு மகியத் தெரியலைபோல. அது மட்டும் அன்னைக்கு இல்லைன்னா…” என்று வானதி துவங்க,
“இதையெல்லாம் எதுக்கு ஆண்ட்டி அவங்களுக்கு சொல்லிட்டு… லீவ் இட் ஆண்ட்டி” வெடுக்கென்று கூறினான் மகி பெருந்தன்மையாக.
“ம்ஹ்ம்…” என்ற வானதி, “ஆனா… மகிக்கு அப்ப உன்னைத் தெரியும்ல… அதான் உன்னைப் பாத்து சிரிச்சுச்சாம். நீ முறைச்சியாம்.” சிரிப்பு.
“ஏன் ஆண்ட்டி… வீட்டுக்கு வந்த கெஸ்ட்டை இப்டி மறைச்சு வச்சீங்கனு வந்து எங்கிட்டக் கேக்குது தம்பி… ஹி… ஹி…” நீளமாக நடந்த விசயங்களை பொய் சிரிப்போடு வானதி பேச, சௌமிக்கு மூச்சு விடுவதில் சிரமமாக உணர்ந்தாள்.
‘இன்னைக்கு நான் இப்டிக் கஷ்டப்படறதுக்கு இந்த லூசுதான் காரணமா’ ஏறிட்டு தலை முதல் கால் வரை நிதானமாக மகேந்திரனைப் பார்த்தாள்.
சௌமியின் பார்வையில் இருந்த விரக்தி மகிக்கு ஏதோ செய்தி சொன்னதோ…
அவளின் நினைவுகளிலிருந்து அறுபட்டு மீண்டு வர பேருதவி புரியும் நோக்கில், “ஹாய்! நான் மகேந்திரவர்மன்! வீட்ல மகி! யுஜி ஃப்ரண்ட்ஸ்கு வர்மா! இங்க இனிதான் எப்டினு தெரியும்!” வசியச் சிரிப்போடு தன்னிடம் கைகுலுக்கலுக்காக கை நீட்டியவனது கையையே பார்த்தபடி… வானதியை எதேச்சையாகப் பார்ப்பதுபோல பார்வையைத் திருப்பி மகியிடம் பார்வையை கொண்டு வந்தவள் கரங்குவித்து… “வணக்கம்” என்று கூறினாள் சௌமி.
“உனக்கு ரூட் சரியா தெரியலைங்கறதால வரதுக்கு லேட்டாகிருச்சோனு வந்து கேட்டுது தம்பி. நானும் ஆமானு சொல்லிக்கிட்டிருந்தேன்” என்ற வானதி,
“ரொம்ப டயர்டா தெரியற…! உள்ள போ!” சௌமிக்கு வீட்டினுள் செல்ல வழியை விட்டபடியே, மகியோடு சௌமி அடுத்துப் பேசும் வாய்ப்பை முறியடித்து உள்ளே அனுப்பியிருந்தார் வானதி.
சௌமிக்கு அத்தையின் நடவடிக்கையில் எல்லாம் புரிந்தது. அதில் அவளுக்கொன்றும் வருத்தமில்லை. ஆனால் மகிக்கு வானதியின் நடவடிக்கையில் இருந்த விசயம் பிடிபடவில்லை.
சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவன், “அவங்க ரொம்ப ஷையா ஃபீல் பண்ற மாதிரித் தெரியுது ஆண்ட்டி. என்ன ஹெல்ப்னாலும் ஹெசிடேட் பண்ண வேணாம்னு சொல்லுங்க!
அந்த விசயம் எல்லாம் அவங்களே மறந்ததை நாம எதுக்கு ரிமைன் பண்ணிக் கஷ்டப்படுத்திட்டு… சோ… இனி அதைப்பற்றி பேச வேண்டாம் ஆண்ட்டி” என்றுவிட்டு அவர்கள் வீடு இருந்த பக்கம் செல்லலானான் மகி.
மகியின் பேச்சு வானதிக்கு எரிச்சலைத் தந்தது. ‘ஒரு பொட்டைப் புள்ளையப் பாத்துட்டா… புத்தனாகிறானுங்க எல்லாம்!’ நினைத்தவாறு உள்ளே சென்றார்.
தனித்து சௌமி அமர்ந்திருந்த வேளை அருகே வந்த வானதி மெல்லிய குரலில், “ஆம்பிளைங்க எப்டியிருந்தாலும் அவங்களுக்கு ஒன்னும் பெரிசா பிரச்சனைங்க வரதில்லை.
ஆனா… பொண்ணுங்க படிக்கப் போறேனு இப்பல்லாம் நிறைய மாறிட்டு வருதுங்க. கலிகாலத்துல… எதையும் சொல்ற மாதிரி இல்லை.
உங்கப்பன் உன்னை இங்க என்னை நம்பி விட்ருக்கான். என்னையக் கேள்வி கேக்கற மாதிரி வச்சிராதத்தா!” என்றிருந்தார்.
சௌமிக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தது. ஆனால் இதயம் முழுவதும் ரணமாக வலித்தது.
முன்னெச்சரிக்கையாக எண்ணி வானதி தன்னிடம் கூறினாலும், தப்பு செய்த மனமல்லவா! அதனால் தனது தவறு இன்னும் தன்னை என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறதோ என்கிற கலக்கம் சௌமிக்குள்.
தன்னோடு சம்பந்தப்பட்ட ப்ருத்வி வேறொரு வாழ்க்கையை ஏற்று மனைவியோடு சந்தோசமாக வலம் வருகிறான். ஆனால் தான் இத்தனை துன்பங்களைக் கடக்க வேண்டி இருக்கிறதே என்று சோர்ந்து வந்தது. இது இன்னும் எவ்வளவு காலம் தன்னைத் தொடருமோ என்று உள்ளுக்குள் கலங்கினாள் சௌமி.
***
சௌமி கல்லூரியிலும் ஒதுக்கமாகவே இருந்தாள். தானுண்டு தனது படிப்புண்டு என்று. அவளின் ஒதுக்கத்திற்கான காரணம் மகிக்கு தெரிந்திருந்தமையால் அவனோடு படிக்கும் சில நண்பர்கள் அவளை கிண்டல் செய்தபோது, “செளமி என்னோட ரிலேட்டிவ்தான்” என்று கூறிட, அதற்குமேல் அவனது பார்வையில் படும்படியாக சௌமியை யாரும் எதையும் பேசவில்லை.
ஒரு நாள், “டேய் மகி. சௌமி உன்னோட ரிலேட்டிவ்னு சொன்ன… யாருகிட்டயும் பேச மாட்டீங்கறா. அதைவிடு… உங்கிட்டகூட பேசிப் பாக்கவே இல்லை? என்னடா… என்ன விசயம்?” கேண்டீனில் நின்றிருந்தபோது தோழர் கூட்டம் விசாரிக்க,
“ரிசர்வ்ட் டைப். அதான் அப்டியிருக்கா…ங்க… மற்றபடி தேவைன்னா நல்லா பேசுவாங்க” சமாளித்தான்.
அவனது மரியாதையான விளிப்பைப் பார்த்து ஆயிரம் கேள்விகள் கேட்டனர். அதன்பின் அவனாகவே ஒருமைக்கு பேச தன்னை கஷ்டப்படுத்தி மாற்றியிருந்தான் மகி.
பெண்களோடுகூட அதிக பேச்சுவார்த்தை கிடையாது. அவளிடம் யாராவது வந்து பேசினால் பதில் பேசினாள். அவளாக யாரோடும் பேச, பழக முனையவில்லை.
மற்றவர்களின் கேள்வியை விரும்பாதவன், அவனாகவே சௌமியிடம் சென்று பேசுவது. எதாவது வாங்கினால் அவளுக்கும் சேர்த்து வாங்குவது என மாறியிருந்தான் மகி.
மகிக்கு அவளின் விசயம் ஓரளவு புரிய வந்திருந்தது. வானதியின் புலம்பல்களைக் கொண்டு மாலினி யூகித்ததை கணவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மகி கேட்க நேர்ந்திருந்தது.
மகி அவனாகவே வந்து அவளுக்கு வேண்டியதை கல்லூரியில் இருக்கும்போது பார்த்து பார்த்து செய்தான். அதை விரும்பாதவள், “தேங்க்ஸ். பட் எதுக்கு உங்களுக்கு கஷ்டம். எனக்கு வேண்டியதை நானே பாத்துப்பேன்” என்று சௌமி மறுத்துக் கூற,
“எனக்கும்… நீங்க உங்களைப் பாத்துப்பீங்கனு தெரியும். உங்களுக்காகன்னு நான் தனியா மெனக்கெடலை. நான் போனேன். அப்போ உங்களுக்கும் சேத்து வாங்கிட்டு வந்தேன். அவ்ளோதான்” சாதாரணமாக தோளைக் குலுக்கிக் கூறிவிட்டு அகன்றிருந்தான் மகி.
மற்ற மாணவர்கள் எல்லாம் அவளை வா போ என்று அழைக்க மகியின் மரியாதையான பேச்சு அவளுக்கு வித்தியாசமாக இருந்தது. ஆனால் அதைப்பற்றிக் கேட்க, பேச அவளுக்கு சற்று பயம். அதனால் அதனை தன் மனதோடு வைத்துக்கொண்டாள்.
மற்றவர்கள் முன் ஒருமையில் பேசினாலும், அவளிடம் மரியாதையாகவே பேசினான். அது ஏன் என்று அவனுக்குமே விளங்கவில்லை.
வீட்டிற்கு வந்ததும் தனது கல்வித் தேவைக்காக சௌமியைத் தேடி மிகவும் அரிதாக மகி சென்றால்… வானதியின் நடவடிக்கையில் இருந்த மாற்றங்கள் முன்பைக் காட்டிலும் கடினமாக மாறத் துவங்கியிருந்தது.
அவன் கேட்டதை எடுத்துக் கொடுத்து அனுப்புவது என்ற அளவில்தான் இருவருக்கிடையே பேச்சுகள். மகி அங்கு இருக்கும் வரை சிரித்து சிரித்து சமாளிக்கும் வானதி, அவன் சென்றதும் சௌமியிடம், “ஒரு தடவைப் பட்டும் புத்தியக் கடங் குடுத்துட்டுத் திரிஞ்சா ஆம்பிளைகளுக்கு என்ன நஷ்டம். எல்லாம் பொண்ணுங்களுக்குத்தான்னு இன்னும் புரியலைன்னா என்ன செய்யறது?” என குத்தலாகப் பேசியிருந்தார்.
தினசரி எதாவது சாக்குச் சொல்லி வந்து நிற்பவனல்ல மகி. வந்ததற்கு இன்றுதான் முதன் முதலாக வந்து, அதுவும் தயக்கத்தோடு சௌமியை அழைக்கச் சொல்லி வானதியை வைத்துக்கொண்டு கேட்டான்.
அப்படியிருந்தும் வானதி இப்படிப் பேசினால், சௌமிதான் என்ன செய்வாள்?
வானதிக்கு, தங்கை தேன்மொழியின் மகனான தீர்த்தபதிக்கு சௌமியை பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருந்து தாரை வார்க்கும் பொறுப்பு மறைமுகமாக ஒப்படைக்கப்பட்டிருந்தது.
தேன்மொழி சகோதரியிடம், “ஊசி இடங் குடுத்தாத்தான் நூல் நுழையும்னு தெரிஞ்சிட்டே… காங்குறவன் கைக்கு கிடைக்கிற மாதிரி நாமளும் ஊசிய வைக்கக் கூடாதுல்லக்கா…” பீடிகையோடு துவங்கியவர்,
“இன்னும் இரண்டு வருசம் வீட்லயே சௌமிய வச்சிட்டு இருக்க முடியாதுன்னு யோசிக்கிறான்போல… ஆனா… தீர்த்தா என்னைத் திட்றான். எதுக்கு படிக்க வச்சிட்டுனு.
பெத்தவுக எடுக்கற முடிவுல நாம போயி என்ன சொல்ல முடியும். நம்மள மாதிரி அவன் இல்லைக்கா… எதுக்கெடுத்தாலும் எகனைக்கு மொகனையா யோசிச்சுப் பேசுறான்.
இங்கன இராம்நாடு போயிட்டு நம்ம கண்ணு முன்ன தெரிஞ்ச புள்ளை இம்புட்டுப் பண்ணிருச்சு. அங்க கண்ணு காணாத எடத்துல எந்த நம்பிக்கையில கொண்டுபோயி உந்தம்பி சென்னையில விடுறாருன்னு கேக்குறான்” என புலம்பிய தேன்மொழி,
“ஆசப்பட்டதைத் தவிர வேற தப்பு எதுவும் பண்ணிருக்க மாட்டானு சொன்னா… நான் என் தம்பி மகளுக்கு ஏத்துக்கிட்டு மகனை இப்பவே ஒதுக்கறேனு பேசுறான்.
இதை செழியங்கிட்டப் போயி பேசுங்கறான். அவன் இதுவரை பிடிகுடுக்காமத்தான் இருக்கான். மகளும், பொண்டாட்டியும் என்ன நினைக்கிறாகளோ அப்டி பண்ணிக்கலாம்னு யோசிக்கற மாதிரி பேசறான்.
இதை தீர்த்தாகிட்டச் சொன்னா, என்னை திட்டியே தீத்துருவான்.” மகன் தனக்குத் தரும் நெருக்கடிகளைப் பேசிவிட்டு,
“சௌமிய மேல படிக்க வைக்க அங்க கொண்டு வந்து சேத்து… காலேஜ் ஹாஸ்டல்லயே தங்கிப் படிக்க விடலாம்னு செழியன் சொன்னான்.
அது தெரிஞ்சதுல இருந்து இவன் எங்கிட்டக் கத்துறான். அதான் உனக்குப் பேசி, உன் வீட்ல தங்கிப் படிக்கற மாதிரிப் பண்ணுவோம்டானு சொல்லிருக்கேன்” வானதியிடம் தனது வேண்டுதலை அவரிடம் எப்படிப் பேசினால் வேலைக்கு ஆகுமோ அப்படிப் பேசி வைத்திருந்தார் தேன்மொழி.
தேன்மொழி வாயிலாக அவரின் மகன் தீர்த்தாவின் விரும்பமும் வானதி அறிந்ததே. முதலில் விசயம் தெரியாமல் இருந்தது. சௌமியின் தற்கொலை முயற்சிக்குப்பின் அனைத்தையும் தங்கையின் வாயிலாகத் தெரிந்துகொண்டிருந்தார் வானதி.
அதனால் சௌமியை அடைகாத்து பத்திரமாக ஒப்படைக்க வானதி இதுபோன்ற செயல்களில் ஈடுபடத் துவங்கியிருந்தார்.
சௌமிக்கு தீர்த்தாவின் அலைபேசி அழைப்பின் வாயிலாக உள்ள பிரச்சனைகள் போதாததற்கு தற்போது பெரிய அத்தையின் பேச்சும் கிறுகிறுக்க வைத்தது.
தீர்த்தா அழைத்து ரெண்டொரு வார்த்தை சௌமியின் நலனைப் பற்றிப் பேசிவிட்டு, “அப்புறம்…” என தயங்குவதுபோல துவங்கி,
“அந்த அவன்…”
“எவன்?”
“அதுதான்… ராம்நாட்ல பாங்க்ல வேல பாக்கறானே…”
சௌமி அமைதியாக இருப்பாள்.
“ஹலோ… என்ன அவன் நினைப்பாவே இன்னும் இருக்கா?” தீர்த்தாவின் இந்த வகையான பேச்சுகள் சௌமிக்கு எரிச்சலைத் தரும்.
தான் மறக்க நினைப்பவற்றை, ஒப்பிட்டு நோக்க விரும்பாததை இவனாகவே வழியச் செய்ய வைப்பதுபோல தீர்த்தாவின் செயல் இருப்பதாகத் தோன்றும் சௌமிக்கு.
இல்லையென்றால், “நீ பொய் சொல்ற” என்பான்.
அமைதியாக இருந்தால், “ரொம்பக் கஷ்டமா இருக்கோ… இன்னும் அவனோட நினைப்பாவே இருக்கியா…” என்பான்.
சில நாள்கள்,
“பாக்க… அவன் எப்டி இருப்பான்?” என ஆரம்பித்து,
“அவனோட எங்கல்லாம் போன… அவன் உங்கிட்ட என்னவெல்லாம் பேசுவான். அங்க போகும்போது பைக்ல போனீங்களா? இல்லை… வேற எப்டி அங்க போனீங்க?
அவனோட எதுலலாம் போன? என்னல்லாம் அவன் உனக்கு வாங்கிக் குடுத்தான். என்ன பேசுவீங்க?
பைக்ல போகும்போது அவங்கூட எப்டி உக்காந்திருப்ப… ரெண்டு காலப் போட்டு உக்காருவியா? இல்லை ஒரு பக்கமா உக்காந்து போனீயா?
பின்னாடி உக்காந்து போகும்போது அவனோட தோளைப் புடிச்சுக்குவியா? இல்லை இடுப்பைப் புடிச்சிக்கிட்டியா? இடுப்பை… எப்டிப் புடிச்சிருந்த…
அப்ப அவன் என்ன மாதிரி உன்னோட பேசுவான்?
பீச்சுக்கு போயி என்ன பண்ணுவீங்க? அங்க ரிசார்ட்லாம் இருக்காமே… அதுல போயி தங்குவீங்களா? அவன் உன்னை எங்கல்லாம் தொட்டுருக்கான்.
உனக்கு அவன் முத்தமெல்லாம் குடுத்திருக்கானா? முத்தம் குடுக்கலையா? பொய் சொல்லாத… இவ்ளோ தூரம் சுத்திட்டு… அவன் உன்னை சும்மாவா விட்டான்… நம்புற மாதிரி இல்லையே…
எத்தனை தடவை அவன் உனக்கு முத்தம் தந்திருப்பான்? நீ எத்தனை குடுத்த?
அவன் குடுக்கும்போது உனக்கு எப்டி இருந்துச்சு? நீ அவனோட கன்னத்துல குடுத்தியா? இல்லை… உதட்டுலயா?
வேற என்னவெல்லாம் பேசுவீங்க? ஏன் உன்னை அவன் வேணானு சொல்லிட்டான்? உன்னை யூஸ் பண்ணிட்டதால வேணானு போயிட்டானோ…” இப்படியெல்லாம் கேட்டு வதைப்பான்.
தனக்கு படிக்க வேண்டும், வேறு வேலை என்று வைத்தாலும், அடுத்த முறை பேசும்போதும் இதையே மாற்றி வேறு மாதிரி சௌமியிடம் கேட்பான் தீர்த்தா.
இதையே எதுக்குத் திருப்பித் திருப்பிக் கேக்குறீங்க? என்று சௌமி ஒரு முறை கேட்டபோது, “வேற எதுக்கு? தெரிஞ்சிக்கத்தான்…” என்பான்.
“இதைத் தெரிஞ்சிட்டு என்ன செய்யப் போறீங்க” என்று கேட்டால்,
“என்ன செய்ய…” வருத்தமாக கூறிவிட்டு, “எல்லாம் இப்டித்தான் நடக்கணும்னு இருக்குன்னா அப்டித்தான நடக்கும்” பொடி வைத்துப் பேசுவான்.
அவனது பேச்சைக் கேட்டதும் அப்செட்டாகி அமர்ந்துவிடுவாள். அழுகையாக வரும் சௌமிக்கு. இவனைப் போயி கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுமைக்கும் நான் என்ன பண்ணப்போறேனோ தெரியலையே என தனக்குள் குமுறுவாள்.
இப்படி அவளின் பூகம்பமான நாள்களுக்குள் புதிய பூகம்பமாக அவளின் வானதி அத்தையும் அவரின் வார்த்தைகளை எரிமலையாக்கி சௌமியின் மீது உக்கிரக் கனலை வீசத் துவங்கினார்.
கனிக்கு தனது வீட்டில் வானதி அத்தை மூலமாக நடக்கும் விசயம் அனைத்தும் தெரிந்தாலும், தங்கைக்கு ஏற்றுக்கொண்டு அத்தையிடம் கேட்க முடியாத நிலை.
கணவனிடம் இதைப்பற்றிப் பேசுவது அத்தனை சரியாக அவளுக்குத் தோன்றவில்லை. தாய் தன்னிடம் பேசும்போது, வானதி வீட்டில் இல்லாத நேரத்தில் இதைப்பற்றி லேசாகப் பேசிவிட வேண்டும் என நினைத்திருந்தாள் சௌமியின் அக்கா கனி.
ஒரு மாதங்கள் நிறைவுபெறப் போகும்போது புதிய பிரச்சனை ஒன்றை எதிர்கொண்டாள் சௌமி.
அது கல்லூரியில் அவளது துறையில் படிக்கும் சீனியர் ஒருவன் தனது காதலை வந்து சௌமியிடம் கூறியிருந்தான்.
“அந்த மகி உனக்கு ரிலேட்டிவ்வா?” இப்படித்தான் அழைத்து விசாரித்தான்.
அவளும் ஆமாம் என்றிருந்தாள். “எப்டி?” அத்தோடு விடாமல் தொடர்ந்தான்.
என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல், “அது எங்க பர்சனல்”
“ஓஹ்” என்றவன், “அது எப்டி வேணா இருந்துட்டுப் போகட்டும். நான் உன்னை லவ் பண்றேன்” என தடாலடியாக அவளின் தலையில் இடியை இறக்கியிருந்தான் ரஞ்சன்.
‘என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டானுங்கபோல’ மனதிற்குள் வருத்தம் மிக, “சாரி. அல்ரெடி ஐ கமிட்டட்” என்றுரைத்திருந்தாள் சௌமி.
அவன் அதோடு விடவில்லை. அவன் யாரென்று கூறு… இல்லை அவனது படத்தைக் காட்டு என்று நின்றான்.
‘கல்யாண ஆசையே விட்டுப்போயி உக்காந்திருக்கறவளை… வருசையா வந்து டார்ச்சர் பண்றானுங்க’ மனம் முழுவதும் வேதனை அப்பிக் கிடந்தது சௌமிக்கு.
அவளுக்கு வேறு வழி தெரியாமல் இரண்டு நாள்கள் சோகமே உருவாக இருந்தாள். அவளின் மாற்றம் கண்டவன், “என்னாச்சு ஹேங்கி மேடம்?” என மகி கேட்டான்.
அவனாகவே வந்து கேட்டதும் யோசிக்காமல் அனைத்தையும் கூறிவிட்டாள் சௌமி. அவளின் நிலை அப்படி. எதையும் யாரோடும் பகிர்ந்துகொள்ள பயமாக இருந்தது.
தாயிடம் மட்டும் எதையும் மறைக்காமல் இருக்கப் பழகியிருந்தாள் சமீபமாக. ஆனால் சீனியர் விசயத்தைத் தாயிடம் கூறப் போக, அது படிப்புக்கு தடையாகிவிடுமோ என்கிற பயத்தால் அமைதி காத்திருந்தாள்.
தற்போது மகியிடம் சொன்னது பாரம் குறைந்தாற் போன்றிருந்தது.
மகி யோசியாமல், “உங்க நம்பர் சொல்லுங்க…”
அதிர்ந்து போனவள், “எதுக்கு?”
“சொல்லுங்க… நான் ஒரு பிக் அனுப்பறேன். அதை சீனியர்கிட்ட காட்டுங்க. பிராப்ளம் சால்வ்ட்” என்றுரைக்க,
“அது… தப்பு” எனத் தயங்கினாள் செளமி.
“அதுக்குமேல உங்க விருப்பம்” நகர்ந்தவனை பரிதாபமாகப் பார்த்தாள் சௌமி.
“எனக்குத் தெரிஞ்ச வழிய நான் சொன்னேன். வேற இப்டிப் பார்த்தா பிராப்ளம் எப்டி சால்வ் ஆகும். இல்லையா… உங்க சொந்தக்காரவன் எவனோட போட்டோவாவது இருந்தா… அதைக் காட்டி எஸ்கேப் ஆகுங்க” கூலாகக் கூறியவன், அத்தோடு தனது வேலை முடிந்தது என்று கிளம்ப ஆயத்தமாகியிருந்தான் மகேந்திரவர்மன்.
சௌமியின் பிரச்சனையிலிருந்து எவ்வாறு மீண்டாள்?
***