பொன்மகள் வந்தாள்.23🌹
பொன்மகள் வந்தாள்.23🌹
PMV.23
“என்னம்மா நீங்க பாட்டுக்கு அவள தனியா விட்டுட்டு, எங்கூட வர்றேன்னு கெளம்புறீங்க.” அடுக்களையில் காஃபிக்காக பாலை சூடு செய்து கொண்டே பவானி கேட்க,
“இன்னும் கொஞ்ச நேரத்துல மனசு கேக்காம, உன் தம்பி எப்படியும் வந்துருவான். பொண்டாட்டிய அவன் பாத்துக்குவான்.” என்றவாறு,
“இப்ப பாரு.” என மகனுக்கு ஃபோனில் அழைப்பு விடுத்தவர்,
“எங்க சக்தி இருக்க?” என்றார்.
“வீட்டுக்கு தாம்மா வந்துட்டு இருக்கே.” என்றான் ப்ளூடூத்தை ஆன் பண்ணி பேசியவன். வண்டியில் வருபவனிடம் இதற்குமேல் எதுவும் பேசவேண்டாம் என அழைப்பை துண்டித்தார்.
“பாத்தேயில்ல… கெளம்பு, நாம போலாம். நம்ம இருந்தா பொண்டாட்டி கால்ல விழுக உன் தம்பி சங்கடப்படுவான்.” அவர்களுக்கு தனிமை கொடுக்க விரும்பி மகளையும் சேர்த்து கிளப்பினார்.
“ஆத்தாளும், பொண்டாட்டியுமா சேந்துகிட்டு ரொம்ப தான் எந்தம்பிய படுத்துறீங்க ம்மா.” என கேட்டுக்கொண்டே, பொம்மிக்கும் காஃபியோடு, இருவரும் அடுக்களை விட்டு வெளிவந்தனர்.
காஃபியைக் கொடுக்க அந்நேரத்திற்கு அவளுக்கும் அது தேவைப்பட்டது. காஃபி மணத்தோடு சூடாக தொண்டையில் இறங்க சற்று இதமாக இருந்தது.
“பொம்மி… எங்க அம்மா, எனக்கு சொன்னது. அரிசி அரிக்கும்போது வர்ற புருஷன் பொண்டாட்டி சண்ட, அரிசிய உலையில போட்டு வடிக்கறதுக்குள்ள சரியாகிறணும். வளறவிடக்கூடாது. நீ எறங்கி வர்றியா, நான் எறங்கி வர்றேனான்னு வீம்பு புடிச்சா குடும்பம் நொந்த சோறா கொலஞ்சு போகும்.” என மருமகளிடம் கூற, (இப்ப யாரும் அரிசில கல் அரிக்கறது இல்ல. ஆனாலும் ஊர்ப்பக்கம் படிக்காத அனுபவசாலிக சொன்னது)
“ம்மா… நீ எனக்கு இத சொல்லவே இல்ல.” என மகள் கேலி செய்ய,
“எனக்கு என் தம்பியப் பத்தி தெரியும். அதான் சொல்லல.” என்றவர் மருமகளைப் பார்த்து,
“பொம்மி… நான் பவானி கூட கெளம்புற. இப்படியே உக்காந்திருக்காம எந்திரிச்சு குளி.” எனக் கூறிவிட்டு மகளோடு கிளம்பினார். மகன் வந்து கொண்டிருப்பதைக் கூறவில்லை.
ஏனோ மனம், கறந்த பசுவின் மடியாக வெகுவாகக்கனம் குறைந்து துவண்டு இலகுவாகியது. தெளிந்த நீரோடையாய் மனம் தெளிவு பெற, குளிக்க எழுந்தாள்.
நாத்தனார் கொடுத்த புடவைக்கு தன்னிடம் இருந்த கோல்டு கலர் ஜாக்கெட்டே மேட்ச் ஆக, புதுப் புடவையே கட்டிக் கொண்டாள். (மேட்சிங் முக்கியமுங்கோ) ஈரத்தலையை காயவைக்க மாடியின் வெளிக்கதவை திறந்து கொண்டு வெளியே வர… ஊஞ்சலில், இருபக்கமும் கை ஊன்றி தரையை வெறித்தவாறு சலனமற்று அமர்ந்திருந்தான் மங்கையின் மணாளன். கீழே பூட்டியிருக்க, வெளிப்படி வழியாக ஏறி வந்திருக்கிறான்.
வீடுவந்தவன் காலிங்பெல்லை அழுத்த, இவள் மேலே குளியலறையில் இருந்ததால் கேட்கவில்லை. அம்மாவிற்கு ஃபோன் செய்தான். அழைப்பை ஏற்ற காவேரி, மகளோடு வந்துவிட்டதைக் கூறியவர், மருமகளின் குழப்பத்தையும் கூறினார். கூடவே கைநீட்டியதற்கான வெகுமதிகளும் அன்னையிடமிருந்து ஃபோனின் வழியாகவே கிடைத்தது மகனுக்கு.
எங்கு தவறினோம் என யோசனை மனதில் ஓடிற்று. இத்தனை குழப்பங்களோடு தவித்தவளை தன்னிடம் மனம் திறக்க விடாமல் செய்தது எது? அந்த நம்பிக்கையை அவளுக்கு உருவாக்கவில்லையா? அவளை திருமணம் செய்து கொண்டாலே நம் காதல் புரிந்து விடும் என நினைத்தது தவறா? என அவன் மனம் தவித்துக் கொண்டிருந்தது.
முகம் கோபத்தில் கருத்திருந்தது.
அவனைப் பார்த்தவளது கால்கள் சற்று தயங்கியது. அம்மாவும் அக்காவும் இருக்கவும் எதுவும் பேசாமல் வெளியேறிவிட்டான். இப்பொழுது தனியாக சிக்கப்போகிறோம், எனும் நினைப்புவர, மனதை பயம் கவ்விக் கொண்டது.
மல்லிப்பந்தலின் நிழல் சல்லடையாக பரவியிருக்க, அந்த நேரத்து வெயில் கூட உரைக்காமல் அமர்ந்திருந்தான். அவளுக்கும் மனம் சுட்டது. தயக்கமும், பயமும் துணைக்கு வர, அவனிடம் சென்றவள் அருகில் அமர்ந்து கொண்டாள். அவனிடம் சிறுசலனம் கூட இல்லை. மாமியார் கூறியதை, மனதில் கொண்டு இவளே மௌனத்தைக் கலைத்தாள். எச்சிலை கூட்டிமுழுங்கிக் கொண்டு, தொண்டையைச் செறுமியவள்,
“எனக்கு… கோபம் வந்தா, என்ன பேசறேன்னு தெரியாம பேசுவேன்னு… இதே இடத்துல தான… சொன்னே.” என வாயே திறக்காமல் வாய்க்குள்ளேயே முனங்க, வெறுமையாய் திரும்பிப் பார்த்தான். பேச்சுதான் தயக்கமாக வந்ததே ஒழிய இம்முறை முகம் பார்த்துப் பேசினாள்.
“உனக்கு வந்தது கோபம் இல்ல. எம்மேல நம்பிக்கை இல்லாததால வந்த குழப்பம். கோபம்னா சண்ட போட்டுருப்ப. தேவையில்லாம வார்த்தையை விட்டுருக்க மாட்ட.” என அடிக்குரலில் குமுறியவன், பெருமூச்சு விட்டான். இரு கை கொண்டு முகத்தை மூடிக்கொண்டு… அழுந்த புருவம் நீவி முகம் துடைத்தவன்,
“உன்னோட குழப்பம் தீராதுன்னு தான், உன்னோட சம்மதம் கேக்காமலே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினே. அப்படியும் உனக்கு எம்மேல நம்பிக்கை வரலல்ல. தடால்னு அப்படி பண்ணினது தப்போனு இப்ப தோணுதுடீ. விட்டா உன்ன புடிக்க முடியாதுன்னு தான் அப்படி முடிவெடுத்தே. என் காதல புரிய வச்சிருக்கணும். ஏதோ பரிதாபத்துல வாழ்க்க கொடுத்ததா நெனச்சுட்ட இல்ல. என் காதல் புரியல உனக்கு. உனக்காக எங்க அம்மாகிட்டயும், அக்காகிட்டயும் அவ்வளவு போராடினே தெரியுமா? நம்ம குடும்பத்துக்கு வந்தா அவ சந்தோஷமா இருப்பான்னு உறுதியா சொன்னே. அதுக்கு நல்ல பலன் காமிச்சுட்ட. அவங்க முன்னாடி என்னய தலை குனிய வச்சுட்ட.” வெப்பமாய் வார்த்தைகள் வந்து விழ, அவ்வெப்பத்தில் விழுந்த புழுவாய் மனது சுருண்டது அவளுக்கும். அவர்கள் முன், தான் கணவனை விட்டுக் கொடுத்துவிட்டது இப்பொழுதுதான் புரிந்தது. தனக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் யோசித்து முடிவு செய்தவனை எப்படி ஒரு இக்கட்டில் நிறுத்தி இருக்கிறோம் என புரிய, அவளது வார்த்தை அவளுக்கே, ச்சே என இருந்தது.
“செகன்ட் ஹேன்ட்…..னு தா….ன் மனசு ஒப்….பலையோ…ன்னு…. அதனால தான் இன்னும் விலகி இருக்கீங்களோனு…” தயக்கமாய் தனது மனதிலுள்ள குழப்பத்தை மென்று முழுங்கி வெளிப்படுத்த,
“இன்னொரு கன்னமும் பழுக்கப்போகுது பாரு.” என்றான் சீற்றமாய்.
“செகன்ட் ஹேன்ட் காருங்றதால தான், வேணாம்னு சொன்னதா கருப்பட்டி சொன்னானே?” என்றாள் படபடவென. அவசரமாய். தனக்கு எங்கு சந்தேகவிதை விழுந்தது என்பதைக்கூறி அவனிடமே விளக்கம் கேட்டாள். இதை இனி வளறவிடக்கூடாது… எதுவானாலும் இன்றோடு பேசிப் பார்த்துவிடுவது என இறங்கிவிட்டாள்.
தான், அவளை கனியவைக்க காலம் தாழ்த்த, அவளோ உள்ளுக்குள் வெம்பிக் கொண்டு இருந்திருக்கிறாள் என புரிந்தது. அவளது நம்பிக்கைக்கு உத்திரவாதம் தேவைப்பட்டிருக்கிறது.
காதல் என்ன கடைப்பொருளா? இத்தனை வருஷமென கியாரண்டி, வாரன்டி எல்லாம் கொடுக்க. அது காலவரையரையற்ற, உயிர்மூச்சு நிற்கும் வரை உடன்வரும் ஒப்பந்தம். இதை இவளுக்கு எப்படி புரியவைப்பது?
“ஏன்டீ… காரும், நீயும் ஒன்னா? அவன் ஏதோ அனுபவம் இல்லாம, நமக்கு லாபம்னு நெனச்சு சொல்லிட்டான். பழைய காரவச்சுட்டு கடைவீதில சுத்த முடியுமா?” எனக் கேட்க…
”ஏன்… அதனால என்ன? நமக்கு ஒரு ரெண்டு லட்சம் லாபம் தான?” எனக் கேட்டாள் புத்திசாலியாக.
“சில விஷயங்கள்ல காச கணக்குப் பாக்கக் கூடாதுடி. ரெபுடேஷன் போயிரும். காரே இல்லாமக்கூட இருக்கலாம். ஆனா பழையகாரு பிசினஸ் வட்டாரத்துல மரியாதையைக் கெடுத்துரும்.” என்றான் தேர்ந்த வியாபாரியாக.
சிறந்த வியாபாரிக்கு பணத்தைப் பெருக்கவும் தெரிய வேண்டும். பெருக்கிய பணத்தை காபந்து பண்ணவும் தெரிய வேண்டும். பூதம் காவல் காத்தமாதிரி இல்லாமல், அதற்கு தகுந்த மரியாதையை உருவாக்கவும் தெரியவேண்டும். உருவாக்கியதை அனுபவிக்கவும் தெரியவேண்டும். இது சக்திமாறனுக்கு நன்றாகவே வந்தது.
‘இன்னும் நாம வளறனும் போலயே.’ என நினைத்துக் கொண்டாள்.
“கார் வாங்க முடியாம இல்லடி. அப்ப தேவைப்படல. பல லட்சத்த கார்ல போட்டு முடக்காட்டி என்னன்னு நெனச்சே. அன்னைக்கி குடும்பத்தோட வெளிய போனப்பதான் தோணுச்சு. இனிமே கார் அவசியம்னு.” எனக் கூறியவனிடம்,
“சரி கிளம்புங்க. போய் டெலிவரி எடுத்துட்டு வரலாம். வெள்ளிக்கிழமை… பத்தரை பன்னென்டு ராகு காலம் முடிஞ்சுறுச்சு. வாங்க போலாம்.” என்றவள் எழுந்து கொண்டு, அவனைக் கைபிடித்து எழுப்பினாள்.
“இல்ல, வேண்டாம். வேற கார் செலக்ட் பண்ணிக்கலாம்.” என்றான், எழுந்திரிக்காமல் ஆர்வமின்றி.
“ஐயோ!!! அப்படி எல்லாம் இந்தக் கார விடமுடியாது. எனக்கு இது எவ்வளவு ஸ்பெஷல் கார் தெரியுமா?” என்றாள் விடாப்பிடியாக மீண்டும் அவனருகில் அமர்ந்து கொண்டு.
“எவ்ளோ ஸ்பெஷல்லாம்?” என்றான் காலையில் அவள் கேட்டது போலவே நக்கலாக. அவன் அப்படிக் கேட்டதும் அவளுக்கு என்னவோ போல் ஆயிற்று. எனினும் சுதாரித்துக் கொண்டாள்.
“எம்புருஷன், அவரோட காதல, ஓங்கி அடிச்சு சொல்ல வச்ச காராச்சே. யம்ம்மாஆ… என்னா… அடி? காது சவ்வு கிழிஞ்சுச்சுனு தான் நெனச்சே. அப்படி ஆகியிருந்தா உங்க நெலமைய நெனச்சு பாருங்க. செவுட்டுப் பொண்டாட்டிய வச்சுகிட்டு அவஸ்தைப்பட்டிருப்பீங்க.” என கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கூற, குளிர்ச்சியற்ற புன்னகை ஒன்று வீசிச் சென்றது அவன் முகத்தில்.
அவளது பக்கமாக திரும்பி அமர்ந்தவன், அவளது கையை எடுத்துவிட்டு, கன்னம் தாங்கி, மெதுவாக சிவந்த கன்னத்தை வருடியவன், “ரொம்ப வலிக்குதாடீ?” என்றான். குரல் கனத்திருந்தது. இப்பொழுது கோபம் குறைந்து மனைவி மேல் கரிசனம் வந்துவிட்டதாக்கும்.
‘இந்த பொழப்புக்கு…’ என மனசாட்சி பீப் வார்த்தைகளைப் போட… அது எங்கே இந்த ரெண்டுக்கும் காதில் ஏறியது.
“அடிச்சவருக்கு தெரியலியா? ஒரு அடினாலும் இடி மாதிரில.” எனக் கூறிவிட்டு, அவனது கையில் தலை சாய்த்து சிறுபிள்ளையென சிரித்தவளை, இழுத்து அணைத்துக் கொண்டான். பேசத் தெரியாமல் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டாளே என ஆயாசமாக இருந்தது அவனுக்கு.
“சாரிடீ…” என முடிக்கும் முன் அவன் வாயை பொத்தினாள்.
“அநாவசியமா ஒரு சாரிய வீணாக்காதீங்க. அது நான் கேக்க வேண்டியது. அந்த வார்த்தை எந்த அளவுக்கு உங்கள காயப்படுத்தி இருக்குனு நல்லாவே தெரியுது. நமக்குதான் வாய்ல வாஸ்து சரியில்ல.”
“அடிச்சா ஊமையாகுற மாதிரி ஏதாவது டெக்னிக் இருக்கானு பாக்கணும். செவுட்டு பொண்டாட்டிக்கி ஊமை பொண்டாட்டி உத்தமம்.” எனக்கூறி சிரித்தான். அவளுக்கும் அப்பாடா என இருந்தது, அவனது முகமாற்றமும் மனமாற்றமும் பார்த்து.
“என்னைய கேட்டது கூட வலிக்கலடி. ஆனா… உன்னையவே நீ இன்னும் தாழ்த்திக்கறீயோன்னு நினச்சாதான் வருத்தமா இருக்கு. இப்ப, நீ இந்த சக்திமாறனோட பொண்டாட்டி. அத நல்லா ஞாபகம் வச்சுக்கோ. அவ எந்தவிதத்திலும் தாழ்ந்து போக்ககூடாது. அப்ப… நான் அவ்ளோ மெனக்கெட்டதுக்கு என்ன அர்த்தம்.” எனத் தவிப்பாக கேட்க, அவனது தவிப்பு அவளையும் தொற்றிக் கொண்டது, ஒட்டுவார் ஒட்டி போல.
“செகன்ட் ஹேன்ட்னு பாத்தா, அப்பாகிட்ட இருந்து நம்மள வாங்கி, வயித்துல பத்து மாசம் வச்சிருந்து, அதுக்கு பின்னால பூமிக்கு வர்ற நம்ம எல்லாருமே செகன்ட் ஹேன்ட் தான்டீ.” என்றான்.(தத்துவம் நம்பர் தொள்ளாயிரத்து தொன்னூத்தி ஒன்பது!!! ரீடர்ஸ் மைன்ட் வாய்ஸ் நல்லாவே கேக்குது ஃப்ரன்ட்ஸ் what I do😌)
“அட…அட…அடா!!! என்னா… ஒரு தத்துவம். இன்னைக்கி குடும்பத்துல ஆளுக்கொரு தத்துவம் சொல்லணும்னு கங்கனம் கட்டியிருப்பீங்க போலயே. வாங்க போலாம். டைம் ஆயிருச்சு.” என அவனை இழுத்துக் கொண்டு ஷோரும் கிளம்பினாள்.
கொட்டித்தீர்த்த வானமாக பளிச்சென இருந்தது அவளது மனம்.
“ஏன்டி! இப்படியே போனா அசிங்கமா இருக்குமே?” என கன்னம் காட்டி சங்கோஜமாகக் கேட்க,
“அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். அதுக்குனே எத்தன மேக் அப் ஐட்டம் இருக்கு.” என கூறி சிரித்தாள்.
*****************
“என்னடா! அதுக்குள்ள கால்ல விழுந்துட்டியா.” என கேலியாக கேட்டுவிட்டு, மனைவியோடு வீட்டிற்கு வந்தவனை அக்கா வரவேற்க,
“மாமாவ விட நாங்க கொஞ்சம் லேட்டுதான்.” என்று கூறிக்கொண்டே, உள்ளே வந்தனர்.
“டேய்… அக்கா புருஷன்னு ஒரு மட்டுமரியாதை இல்லாம பேசுற? அவரு உன்ன மாதிரி எல்லாம் இல்ல. பப்ளிக்கா எல்லாம் கால்ல விழுக மாட்டாரு. ரூமுக்குள்ள கூட்டிப்போயி யாருக்கும் தெரியாமதான் விழுவாரு. இல்ல மாமாஆஆ…” என இழுவையாய் விஷ்ணுவைப் பார்க்க,
“ஆமா பொம்மி… இங்க நானே அடியும் வாங்கிட்டு, நானே கால்லயும் விழுகணும் ம்மா.” என விஷ்ணு கூறியதைக் கேட்டு உருட்டி விட்ட சோழியாய் சிரித்தாள்.
“ஹேப்பி பெர்த் டே மா. உன்னைய சிரிக்க வைக்க வாங்காத அடிய வாங்கினதா சொல்ல வேண்டியிருக்கு.” என்க,
“மாமா… கீழ விழுந்தாலும் மீசைல மண்ஒட்டல…” என்றான் மச்சான்.
“மாப்ள… நமக்கும் மீசை இருக்கு நாமலும் ஒருநாள் கீழ விழுவோம். நெனப்பு இருக்கட்டும்.” என்று வாரினான் மாமான்.
“சரி… சரி… அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் மாமா.” என சரண்டர் ஆனான். கலாய்ப்பது என்றால் தான் மாமனும் மச்சானும் தரைமட்டத்துக்கு இறங்கி பேசுவது. மற்ற இடங்களில் மாமனுக்குரிய மரியாதையில் இருந்து இம்மியும் பிசகமாட்டான்.
“ரொம்ப தாங்க்ஸ் ண்ணா.” என்றாள்.
“எதுக்கு மா… மீசைல மண் ஒட்டாம கீழ விழுந்ததுக்கா?”
“அய்யோ அண்ணா!! சான்சே இல்ல. ஐ ஆம் லக்கி. இப்படி ஒரு சொந்தங்களோட பிறந்த நாள கொண்டாடினதே இல்ல.” என சிரிப்போடு சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள,
“ஆமாமா!! வாழ்நாள்ல மறக்க மாட்டா.” என சக்தியும் சேர்ந்து கூற, அங்கு கலகலப்பு அடங்க சற்று நேரமானது.
காரை எடுத்தவன் நேராக அக்கா வீட்டிற்கு தான் வந்தான். அனைவரையும் கிளப்பி கூட்டிக் கொண்டு தாயுமானவர் கோவிலுக்கு புதுக்காரில் சென்றுவிட்டு பூஜைபோட்டு வந்தனர். இரவு சாப்பாட்டை அக்கா வீட்டிலேயே முடித்துக் கொண்டு கிளம்பினர்.
************************
இஸ் ஆஆ நான்
ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல ………..
அம்மி மிதிச்சும்
நேக்கு எதுவுமில்ல அந்த
கவல நோக்கு புரியவில்ல…
“என்னடீ பாட்டெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு…” உடையை மாற்றிக் கொண்டே கேட்க,
“ஏமச்சானுக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள்னு நினைக்கிறே. அதான் நாமலே செல்ஃப் ஸ்டார்ட் பண்ணலாஆஆ…மேனு…” என இழுக்க,
“வேணா… நானும் கவனிச்சுட்டே தான் இருக்கே. இன்னைக்கி நீ சரியில்ல.” என்றான் கண்களை உருட்டி.
“கவனிக்கிறமாதிரி தெரியலியே… மா…ம்மா…” என நீட்டி முழக்கி விட்டு, அடுத்த பாடலை தட்டினாள்.
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
……………
வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே
“அடியேய்… ஒரேடியா முருங்கக்கா சமாச்சாரமா இருக்கே. ஆமா அது என்ன புதுசா மாமாங்கற… மச்சாங்கற?” என கேலி செய்து சிரித்தான்.
“அதுவா… எங்கிட்ட ஒரு மாங்கா மாக்கா, நாலு வருஷத்துக்கு முன்னாடியே, என்னைய அண்ணேனு கூப்பிடாதேனு சொல்லிட்டு, அம்னீஷியாவுக்கு போயிருச்சு. அதான் மாமான்னு கூப்பிட்டு ஞாபகப்படுத்துறே.” என்றாள் குசும்பாக.
“உன்னைய யாருடி அவசரப்பட்டு கல்யாணத்துக்கு சம்மதிக்க சொன்னது?”
“ஹோஓஓ… இவரு ரோட்டுல பாத்த சின்னபுள்ளைகிட்ட காத்திருக்க சொல்லுவாராம். நாங்களும் காத்திருக்கிறேன் ராஜகுமாரானு தேவுடு காக்கணுமாம்.”
அவளை புரிகிறது… குற்ற உணர்வில் அதை அவளே வலிய சரிக்கட்ட முயல்கிறாள் என்று. இன்று அதிகமாகவே அவனுடன் இழைகிறாள்.
காரில் முன்சீட்டில் அமர்ந்தவளின் சீண்டல், அதிகமாகவே இருக்க, குறும்பாக திரும்பிப் பார்த்தான். அவன் பார்க்காத வரைக்கும் தான் தைரியமாக சீண்டல் எல்லாம். திரும்பிப் பார்த்தால் சங்கடமாக சுருங்கி கொள்கிறாள்.
“அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்கணு சொல்றது சரியாத்தான்டி இருக்கு.” எனக் கேலி பேச, அவளுக்கு தான் வெக்கமாகப் போய் விட்டது.
அக்கா வீட்டிலும், கோவிலிலும் சற்று அடக்கி வாசித்தாளே ஒழிய, அவனை விட்டு விலகவில்லை.
தனக்காக யோசித்து, தனக்காக பேசி, தனக்காக என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவனுக்கு தானும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ற உந்துதலில் இப்படி இறங்கிவிட்டாள்.
வீடு திரும்பியவர்கள், மேலே தங்கள் அறைக்குள் வர, புடவை மாற்ற சென்றவளை கைபிடித்து நிறுத்தினான். சட்டென அவன் கைபிடித்து இழுத்ததில் நெஞ்சு தடதடக்க… திரும்பியவளை. கண்களால் வா வென அழைத்தவன், இழுத்து மென்மையாக அணைத்து உச்சிமுத்தம் வைத்தான்.
“ஹேப்பி பெர்த் டே லட்டூ.” என்றான். அவனது லட்டு என்ற அழைப்பிலேயே அவனது கோபம் குறைந்து விட்டதை ஊகித்தவள்,
“அவ்ளோ தானா? வேற கிஃப்ட் எதுவும் இல்லையா மா…மா…?” என சினுங்கலாகக் கேட்டு, சீண்ட ஆரம்பித்தாள்.
“நீ இப்படி கேக்கும் போது இல்லைனு எப்படிடீ சொல்றது?” எனக் கேட்டுக் கொண்டே தனது சட்டை பையிலிருந்த செயினை எடுத்து, கழுத்தில் பூட்டினான். அதில் எஸ்.பி. என எழுத்துக்களுடன் கூடிய சிறு டாலர் தொங்கியது. பொடிகற்கள் பதித்து அழகாய் மின்னியது.
பூட்டியவன் கைகளை எடுக்க விடாமல் கழுத்தோடே பின்னிக் கொண்டவள், தனது கரங்களையும் மாலையாக அவன் கழுத்தில் கோர்த்துக் கொண்டாள். உள்ளுக்குள் தானே முதல் அடி எடுத்து வைப்பதில் சற்று உதறல் தான். எனினும் இன்று ஏனோ அவனை விலகவும், விலக்கவும் மனம் ஏற்கவில்லை.
எப்படி திருமணத்திற்கு முன் இவனை விட்டு விலக முடிவு செய்தோம் என நினைக்க, மனம் படபடவென அடித்துக் கொண்டது. அப்படி ஏதாவது நிகழ்ந்திருந்தால் தனது வாழ்க்கை மீண்டும் சூன்யமாகி இருக்கும் என உரைத்தது.
தங்களுக்குள் பார்த்துக் கொண்டு மௌனமாக நின்றவர்களை ஃபோன் அழைத்து மோனநிலையைக் கலைத்தது. எடுத்துப் பார்த்தவன், அழைப்பை ஏற்று,
“இதோ கெளம்பிட்டே குமாரு. மூட்டைய எல்லாம் எண்ணி வைங்கடா.” எனக் கூறிவிட்டு, மில்லுக்கு கிளம்பிக்கொண்டு இருப்பவனைத்தான் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறாள், கட்டிலில் படுத்துக் கொண்டு.
“ஆந்திராவுக்கு லோடு அனுப்பணும்டி. லாரி வந்துருச்சாம். நான் கெளம்புறே.” என கூறிவிட்டு பேன்ட் சட்டையை மாற்றிக் கொண்டு, டீசர்ட், சார்ட்ஸ் ல் கிளம்பினான்.
“யோஓஓவ்வ்.” என கட்டிலில் படுத்திருந்தவள் குரல் கொடுக்க, திரும்பாமல் சிரித்துக் கொண்டே கண்ணாடி முன் நின்று தலை சீவியவன்,
“யோவ்வ்… வா? என்னாடீ மரியாதை யெல்லாம் தூள் பறக்குது.” என்றான் அடக்கிய சிரிப்போடு.
“ஆமாய்யா… இப்படியே இருந்தா இன்னும் கொஞ்ச நேரத்துல என்னென்ன பறக்கும்னு எனக்கே தெரியாது.” கையை தலைக்கு முட்டுக் கொடுத்து படுத்தவாறே சட்டமாக அவனை வம்பிழுக்க,
“வேணான்டீ… தேவையில்லாம வாயக்கொடுத்து உடம்ப புண்ணாக்கிக்காத.”
“அதையும் தான் பா….க்கலா…மே… எப்படித்தா….ன் புண்ணாகுதுன்னு.” என்றவள் தான், தனது கைபேசியில் பாடலை ஒலிக்க விட்டு சீண்டிகொண்டிருக்கிறாள்.
“வேண்டா… ஏதோ கில்ட்டியா ஃபீல் பண்ணிக்கிட்டு ஓவர் பெர்ஃபாமன்ஸ் பண்ற. அப்பறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல.” என கண்ணாடியில் அவளைப் பார்த்துக்கொண்டே எச்சரிக்க,
“ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம். ஒம்போது பொண்டாட்டி கேக்…” என முடிக்கவில்லை,
“அடிங்க…” என்றவாறு வேகமாக கட்டிலிற்கு தாவியவன், உருண்டு வந்து அவளை இழுத்து தன்மேல் போட்டிருந்தான். முதல் அணைப்பு தடாலடியாக. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராமல் சீண்டிக் கொண்டிருந்தவளுக்கு, நெஞ்சுக் குழிக்குள் தம்தம்மென முரசுகொட்ட, பேந்த பேந்த முழித்தாள். அவளது தடுமாற்றம் பார்த்து வாய்விட்டு சிரித்தவன்,
“இது தான்டி நீ. வெறும் வாய்ச்சவடால் தான்.” இப்பொழுது சீண்டுவது இவன் முறையாயிற்று.
“என்ன… இப்பவும் சின்னபிள்ளைனு சொல்ல போறீங்களா?” என கோபம் தலைகாட்ட,
“ம்ம்கூம்ம்…” என பார்வை சில்மிஷம் காட்ட, விஷமப் புன்னகையொடு, அவன் பார்வை சென்ற திக்கைப் பார்த்தவள், சங்கட்டமாக கைகளை குறுக்கே கொண்டு வந்தாள்.
“லட்டூ… நம்மளோட முதல் அனுபவம் இப்படி வேணான்டி. இது ஏதோ… சண்ட போட்டுக்கிட்ட சின்னபிள்ளைக சாக்லேட் கொடுத்து ஒருத்தருக்கொருத்தர் சமாதானம் பண்ற மாதிரி இருக்கு டீ. அதுவா இயல்பா நடக்கும்.”
“அப்ப இன்னும் உங்க மேல எனக்கு காதல் வரலைனு நினைக்கிறீங்களா? நீங்க ஏமனசுக்குள்ள வந்து நாலு வருஷமாச்சு மாறன்.” குரல் கமற, தன் மனதை முதன்முதலாக மன்னவனிடம் திறக்கிறாள்.
“தெரியும். உம்மனசுபூரா நாந்தான் இருக்கேனு எப்பவோ தெரியும். அதனால் தான் என்னவிட்டு விலகிப்போக நெனச்சேங்கறதும் தெரியும். அதனாலதான் சொல்ற. காதலோட, இயல்பா… அது தானா நடக்கும்.” எனக் கூறிவிட்டு அவள் இதழில் மென்மையாக இதழ் பதித்தான். முதல் முத்தம்… அதுவும் சிறு ஒற்றல். விலகியபின்னும் மீசையின் குறுகுறுப்பு நீங்கவில்லை மேலுதட்டில். அதற்கே பித்தம் கொண்டது பேதை மனது.
அவளை விலக்க மனமின்றி அவனும் விலக, விருப்பமேயின்றி விலகியவளும்… அவன் நகர்ந்துவிட்ட தைரியத்தில், தலையணையை தூக்கி அவன் மீது எரிந்தவள்,
“உனக்கெல்லாம் முப்பது என்ன… நாப்பது வயசானாலும் நீ கன்னிப் பையன் தாய்யா. கடைசி வரைக்கும் மூட்டைகளோடயே குடும்பம் நடத்தப் போற. பொண்டாட்டி சாபம் சும்மா விடாது. சொல்லிட்டே.” என்றாள் மிதப்பாக.
“ஏன்டீ… நாங்கூட என்னென்னமோ பறக்கும்னுல்ல எதிர்பார்த்தே. கடைசில வெறும் தலகாணி தான் பறக்குது.” எள்ளல் துள்ளியது பேச்சில்.
“நீங்க என்ன எதிர்பாத்தீங்க.” என்றாள் உள்வாங்கிய குரலில்,
“பாக்யராஜ் படத்துல இருந்து பாட்ட மட்டும் தான் சுட்டயா. சீன் லாம் சுடலயா?”
“என்ன சீன்னு.”
“எங்க சின்ன ராசா படம் பாரு. அதுல ஹீரோவ சரிக்கட்ட ராதா என்னவெல்லாம் பறக்க விடுவாங்கனு தெரியும். இன்னும் சின்னபிள்ளையாவே இருக்கேடி.” எனக் கேட்டுவிட்டு, இம்முறை நேரடியாகவே தலையணையால் அடி வாங்கினான்.
கிளம்பும் பொழுது, “படம் பாக்க மறந்துறாத.” என மேலும் கடுப்பேற்றி விட்டே சென்றான்.
காட்டு பயலே…
கொஞ்சி போடா…
என்ன ஒருக்கா நீ…
மொரட்டு முயல…
தூக்கி போக…
வந்த பயடா நீ…
கரட்டு காடா கெடந்த என்ன…
திருட்டு முழிக்காரா…
பொரட்டி போட்டு இழுகுறடா நீ…
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து…
சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ…
என் முந்தியில சொருகி வைச்ச…
சில்லறைய போல நீ…
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ…
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட…
என்ன வித்த வைச்சிருக்க நீ…
யான பசி…
நான் உனக்கு யான பசி…
சோளப் பொரி…
நீ எனக்கு சோளப் பொரி…