பொன்மகள் வந்தாள்.26🌹(final)
பொன்மகள் வந்தாள்.26🌹(final)
PMV.26
“லட்டூ.”
“ம்ஹ்ம்ம்…”
“இந்த இடம் ஞாபகம் இருக்கா?” உடன் நடந்து வந்தவளைப் பார்த்து புன்னகையோடு கேட்க,
“மலரும் நினைவுகளா மாறன்? ம்ம்ம்… இந்த இடத்துக்கு வரும்போதெல்லாம் நினச்சுப்பே.” என்றாள்.
“கீழே விழுந்துட்டு, திருட்டு முழி முழிச்சியே… இன்னும் நல்லா ஞாபகம் இருக்குடி.” எனக்கேட்டு அவனும் சிரிக்க,
“ஆமா… அடிபட்டது கூட அன்னைக்கி வலிதெரியல. அம்மாகிட்ட மாட்டப்போறோம்னு தான் பயம் வந்துச்சு.” என அன்றைய நினைவில் சிரித்தாள் அவளும்.
நடந்து கொண்டிருந்தவர்கள் இருவரும், அருகில் இருந்த பாலத்தில் அமர்ந்தனர்.
ஓடையின் சலசலப்பை பின்னனி இசையாகக்கொண்டு, மாலைநேரக் காற்று இதமாக இசைந்து வீச… தன்னவனின் வலக் கையோடு சேர்த்து கோர்த்துக் கொண்டாள்.
பழைய நினைவுகளைப் பேசி சிரித்துக் கொண்டு இருந்தவர்கள் முன், வாக்கிங் ஸ்டிக் ஊன்றியவாரு ஒற்றைக்கால் தெரிய, இருவரும் நிமிர்ந்து பார்த்தனர்.
எதிரே நின்றிருந்தவனது பார்வை அவளது வயிற்றின் மீதே இருக்க, படபடப்பாக வேகமாக துப்பட்டா கொண்டு வயிற்றை மூடினாள் பொம்மி.
இப்பொழுதும் அவனைப் பார்க்கையில், அருவருத்த உணர்வில் முகம் சுழித்தவளைப் பார்த்தவன்,
“என்னோட குழந்தையா இருந்திருக்க வேண்டியது.” என்றான் ஒருபக்கமாக இழுத்த கேவலமான இழிப்பொடு. ஈனமானவன் வாயிலிருந்து, ஈனமான வார்த்தைகள்.
அவனைப் பார்த்தவுடன் பொம்மியிடம் படபடப்பை உணர்ந்தான் சக்தி. அவனது வார்த்தைகள் சக்திக்கும் சினமூட்டினாலும், பொறுமையாகவே…
“அடிபட்ட நாய் குலைக்கதான் செய்யும். மாறுகை மாறுகால் வாங்கியும் உனக்கு வாய்மட்டும் அடங்கல இல்ல.” என்றான் கோபத்தை அடக்கியவனாக.
“..…..”
“எம்பொம்மிய தொட்டது கை மட்டும்கறதாலதான் ஒரு கையையும் ஒரு காலையும் ஒடிச்சு விட்டே. ஏன்னா… எனக்கு செத்த பாம்ப அடிச்சுப் பழக்கமில்லை. ஒருகைய மட்டும் விட்டு வச்சதே நீ திங்கறதும், கழுவறதும் ஒரே கைல பண்ணனும்னு தான்.” என சக்தி அவனிடம் அமைதியாகவே தான் பதில் கொடுத்தான்.
“ரொம்ப பேசுற… நான் தொட்டது என் பொண்டாட்டிய. என்னமோ இவகிட்ட நான் பாக்காதத பாத்த மாதிரியும், நான் தொடாதத தொட்ட மாதிரியும் ரொம்ப துள்ற.” என சக்தியை ஏளனப்பார்வை பார்க்க, அதைக் கேட்டவளுக்கோ, சுளீர் என பழுக்க காய்ச்சிய கம்பியால் தன் உடம்பில் சூடு இழுத்தது போல் இருந்தது. சிறிது நேரம் தனது செவிகள் செவிடாகி இருக்கலாம் என மனம் தவித்தது. இது தன்னவனுக்கு எவ்வளவு பெரிய அவமானம். ஒரு ஆணாக இதை எப்படி சகித்துக் கொள்வான் என நினைக்கையிலேயே நெஞ்சம் குமைந்தது அவளுக்கு. தனது அந்தரங்கம் இருவர் முன்னும் அசிங்கப்படுவதை விரும்பாமல், அங்கே நிற்கப் பிடிக்காமல் வேகமாக எழுந்து அவ்விடத்தை விட்டு நகர முனைந்தவளை, கைபிடித்து நிறுத்தினான் சக்தி.
அவளது உணர்ச்சித் தடுமாற்றத்தை அவனது கை உணர்ந்தது. அவளது கண்கள் கலங்கி சிவந்து அழுகைக்குத் தயாராக… உதட்டைக் கடித்து அதை அடக்கினாள்.
“ஏன்டி!! இவன்லாம் ஒரு ஆளுன்னு… இவன் முன்னாடி அழுது என்னைய அசிங்கப்படுத்துற. இவன் மட்டும் தான் உன்னையப் பாத்தானா?” என கோபமாகக் கேட்க, விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் கரைஉடைத்த கண்ணீரோடு.
அவனது பேச்சைக்கேட்டும் பொறுமை காத்தவன், இவளது கண்ணீரை கண்டு பொறுமை இழந்திருந்தான். அவன் பேசியதை விட அவனது பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வந்த அவளது கண்ணீர்தான் சக்தியை கோப்படுத்தியது. இவன் என்ன சொல்கிறான் என குழப்பத்தோடு பார்த்தாள் பொம்மி,
“உங்க அம்மாவுக்கு சிசேரியன் பண்ணின டாக்டர் நீ ஆணா பொண்ணானு கண்ண மூடிட்டா பாத்துருப்பாரு? உனக்கு அரச இலையோட, இடுப்புல அரணாகொடிகட்டி சீரு செஞ்ச தாய்மாமா… இது பொம்பளப் புள்ளயாச்சே… இன்னொருத்தன் பாக்க வேண்டியதாச்சேனு கண்ண மூடிக்கிட்டு கட்டிவிட்டாரா? இல்ல… உங்க அப்பா பட்டுப்பாவாடை கட்டிவிட்டு உனக்கு அழகு பாக்கயில மகளாச்சேனு கண்ண மூடிக்கிட்டாரா? இத்தனபேரு பாத்தத, தெருவுல நீ போகும்போது, கல்தடிக்கி விழுந்தப்ப, பாவாடை ஒதுங்கினத சாக்கா வச்சு, ஓரமாப் படுத்துருந்த சொறிநாயும் பாத்துருச்சு. உடனே நானும் பாத்தேனு கொலச்சா, அதக்கேட்டுட்டு நீ அழுதுட்டு நிப்பியா? கால்ல கெடக்கறத கழட்டிட்டு அடிக்கவேணாம்.” என ஆவேசமாக கேட்க, எட்டி நின்றிருந்தவனை இவ்வளவு தான் உனக்கு மரியாதை எனும் விதமாக அற்பபுழுவைப் போல் திரும்பி பார்த்தாள். இதற்கு மேல் என்ன வேண்டும் அவளுக்கு. அவனது பேச்சில் சுடுமணலாய்க் கொதித்த மனது, தன்னவன் பேச்சில் மார்கழி பனியாய் குளிர்ந்தது. நெஞ்சுவிம்ம, உள்ளம் பூரிக்க, தன்னவனைப் பார்த்தவள்,
“யோவ்வ்வ்…” என குழைவாக அழைத்துக்கொண்டே சக்தியின் டீசர்ட்டைப் பிடித்து இழுத்தாள்… புறங்கையால் கண்ணீரை துடைத்துக் கொண்டே.
கோபமாக இருந்தவன், அவளது குழைந்தகுரலில் சற்று கோபம் தனிய,
“என் லட்டு ஃபார்ம்க்கு வந்துட்டா. இப்படியே நின்னு ஃப்ரீ ஷோ பாக்கறதுன்னா பாத்துட்டுப் போ.” என எதிரில் நின்றவனிடம் கூற,
“கொஞ்சம் குனிய்யா. சின்னப்புள்ளைக்கி சொல்ற மாதிரி தெனமும் சொல்ல வேண்டியிருக்கு. அதுதான் வயிறு இடிக்குதுன்னு தெரியுதுல்ல.” எனக் கடிந்தவளிடம், சிரித்துக் கொண்டே வழக்கம்போல குனிந்து கன்னத்தைக் காமிக்க, அவளோ வழக்கத்துக்கு மாறாக… கழுத்தோடு சேர்த்து இழுத்து, முகத்தைத் திருப்பி இதழைக் கவ்வியிருந்தாள் அவன் முன்னே.
இனிமேலும் அங்கு நிற்பானா என்ன? அவளது செயல் செருப்பால் அடித்ததைவிட பலமடங்கு அவமானமாக இருக்க, கைத்தடியை ஊன்றிக் கொண்டே வேகமாக நகர்ந்து விட்டான் நாகராஜன்.
ஒன்பதாம் மாதம் நிறைவயிற்றோடு, குழைதள்ளிய வாழைமரமாய் வயிறுசரிந்து நின்றவளை கண்களில் ஆசைபொங்க பார்த்துக் கொண்டிருந்தான் அவளது மாறன்.
வளைகாப்பு முடித்து, பிறந்த வீட்டிற்கு மனையாளை அனுப்பி வைத்திருக்கிறான்.
திருச்சி வீட்டிலேயே இருக்கலாம் என கூறியவளை… அதெல்லாம் முடியாது என மல்லுக்கட்டி தஞ்சை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார் சொர்ணம்.
இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது, ஏன் அப்படி செய்தார் என்று. அவளை சற்று நேரம்கூட உட்கார விடாமல் வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.
முன்தினம் இரவுதான் சக்தி வந்திருந்தான். காலை எழுந்ததிலிருந்து பொம்மியையும், சொர்ணத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இருவரும் எலியும் பூனையுமாக வம்பளத்துக் கொண்டிருந்தனர்.
மாலையில் சக்திக்கு காஃபியை கொடுத்த சொர்ணம், அண்ணன் மகளிடம் ஆரம்பித்துவிட்டார்.
“இப்படியே சப்பறம் மாதிரி உக்காறாத பண்டு. எந்திரிச்சு வாசல கூட்டுவிடு.”
“நானா சப்பறம் மாதிரி உக்கார்றே. நீதான் உரலுக்கல்லாட்டம் அசையாம உக்காந்துகிட்டு என்னைய வேல வாங்கிட்டு இருக்க. கொஞ்சமாச்சும் தாயில்லா புள்ளயாச்சேனு பாவம் பாக்குறியா?” என வராத கண்ணீரை துடைக்க,
“இந்த பம்மாத்தெல்லாம் உன் மாமியாகிட்ட வச்சுக்கோ. அங்க இருந்தா காவேரிய ஏச்சுருவேன்னு தான உன்னய இங்க கூட்டிட்டு வந்ததே.” என அத்தை நொடித்தார்.
“இப்ப தான தெரியுது. ஏன் உம் மருமகளுங்க எல்லாம் உன்னைய எத்தன நாள் ஆனாலும்கூட கண்டுக்குற மாட்டேங்குறாங்கனு?”
“அவளுக எதுக்குடி என்னையக் கண்டுக்கணும். பொன்னா வெளையுற என் புருஷவீட்டு நெலம் இருக்கு. ஒவ்வொரு அறுப்பு முடியவும் அவளுக தான் என்னைய தேடி வந்தாகணும். பேச்ச மாத்தாத. அப்படியே களத்த சுத்தி கொஞ்சம் நடந்துட்டு வா. காலத் தொங்கப்போட்டு உக்காந்தே நீர் எறங்கியிருக்கு பாரு.”
“இப்பதான வாசல கூட்டுனு சொன்ன. அடுத்து உடனே நடக்க சொல்ற. கொஞ்சமாவது கேப்விடுறியா?”
இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே… சக்தி, காஃபி குடித்துக் கொண்டிருக்க, சிதம்பரம் முருங்கைக் கீரையோடு வந்தார்.
“இந்தா… கொண்டு வந்துட்டாருல்ல. ஆட்டுக்கு இலதழைய போடுற மாதிரியே எப்ப பாத்தாலும் கீரையவே போடவேண்டியது.” என அதற்கும் அலுத்துக் கொள்ள,
“வாயக்கட்டினவளுக்கு தான்டி புள்ள. முருங்கக்கீரைக்கு தான் நல்லா நீர் இறங்கும் பண்டூ. அப்ப தான் கால்வீங்காது. நடந்துட்டு வா. சூப் போட்டு வக்கிறே.” என அத்தை அவளை நடக்கவைப்பதிலேயே குறியாக இருந்தார்.
என்னதான் அத்தையிடம் வம்பு பண்ணினாலும் அத்தை சொல்வதை எல்லாம் தட்டாமல் செய்து கொண்டிருந்த மனையாளைப் பார்க்கவும் பாவமாக இருந்தது.
“வா பொம்மு… போலாம்.” என காஃபியை குடித்துவிட்டு எழுந்தவன், அவனும் அவளுடன் செல்ல தயாராக,
“இங்க களத்துலயே தாம்ப்பா நடக்கப் போறா. நீ எதுக்கு?” என்க,
“இல்ல பெரிம்மா. அப்படியே ஓடக்கரையோரமா நடந்துட்டு வர்றோம்.” என மனைவியை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
“சரி, கருக்கல்ல ரொம்ப தூரம் போகாமா… சீக்கிரமா வாங்க. சுடுதண்ணி போட்டு வைக்கிறே. வந்ததும் இடுப்போட சூடா ஊத்தினா தான் நல்லா இருக்கும். கையில எலுமிச்சம்பழம் வச்சுக்க பண்டூ.” என சொல்லி அனுப்பினார்.
தேராக அசைந்துவரும் மனைவியை பார்த்துக் கொண்டே நடந்து வந்தவன், அவளைப் பார்த்து சிரிக்க,
“என்னயப் பாத்தா சிரிப்பா இருக்கா. குழந்தை பொறக்கவும் இருக்கு அத்தைகெழவிக்கு. இதையெல்லாம் சேத்துவச்சு நானும் எம்புள்ளயும் செஞ்சுறுவோம்ல.” எனக் கூறியவளிடம்,
“நான் அதுக்கு சிரிக்கல லட்டூ.” என்க,
“பின்ன எதுக்காம்?” என்றாள்.
“இந்த குழந்தை உருவாகுறதுக்குள்ள நீ பண்ணின அலும்பு இருக்கே… அத நெனச்சே… சிரிச்சே…” என்றான்.
அந்த நாட்களின் நினைவில், “போய்யா…” என முகம் திருப்பிக் கொண்டவளைப் பார்த்து… வாய்விட்டு மந்தகாசமாய் சிரித்தான் அவளது மாறன்.
இன்னமும் சிறுபிள்ளையாக அத்தையிடம் வம்பளப்பவள் தான், இரண்டு மூன்று மாதங்களாக குழந்தை நிற்காமல் தள்ளிப் போனதற்கே மூஞ்சியைத் தூக்க ஆரம்பித்தாள்.
“இவ என்னடா. ரெண்டு மூனு மாசத்துக்கே இப்படி ஆயிட்டா.” என காவேரிகூட அலுத்துக் கொள்ள,
“இல்ல த்தே. எங்க அம்மாவுக்கு காலம் போன கடைசிலதான் நான் பொறந்தே. அத நெனச்சாதான் பயமா இருக்கு.” என்று மாமியாரிடம் தனக்கிருக்கும் பயத்தைக் கூறி வருத்தப்பட்டவள்,
“இனிமே, ரைஸ்மில்லு அதுஇதுன்னு ராத்திரில போய்ப்பாருங்க. உங்களுக்கு இருக்கு.” என தனிமையில் கணவனை மிரட்டவும் தயங்கவில்லை.
அடுத்து இரண்டு மாதங்களில் கரு உருவானது உறுதியாகிவிட, மாமியாரைக் கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள்.
பிறகு என்ன… மசக்கை அவளைப் படுத்த, மற்றவர்களை இவள் படுத்தி எடுத்து விட்டாள். நான்கைந்து மாதங்களில், காவேரியின் கவனிப்பும், தாய்மையின் பூரிப்பும் அவளை தங்கச்சிலையாய் மின்ன வைத்தது.
ஒன்பதாம் மாதம் ஆரம்பத்திலேயே வளைகாப்பு போட்டு இங்கே அழைத்து வந்துவிட்டார் சொர்ணம்.
“இங்கயே இருந்தா உன்னைய ஏச்சுருவா காவேரி. நீயும் அவள வேல வாங்கமாட்ட.” எனக் கூற,
“இல்ல க்கா. அவ தான் வீட்டு வேலையெல்லாம் பாக்குறா.” என்றார்.
“இங்க இருந்தான்னா வீட்டுக்குள்ளேயே தான் சுத்துவா காவேரி. அங்க வந்தான்னா காலார நடப்பா. உடம்புக்கும் நல்லா இருக்கும். தஞ்சாவூர்ல இல்லாத ஆஸ்பத்திரியா… நாம்பாத்துக்கற.” என அழைத்து வந்துவிட்டார். அவருக்கு அண்ணனின் அடுத்த வம்சம் பூர்வீக வீட்டில் தவழ வேண்டும்.
இருவரும் ஓடைக்கரையோர சாலையில் நடந்து கொண்டே வர, ஓரிடத்தில் வந்ததும் அவனது கால்கள் நின்றன. அவளை முதன்முதலாக பார்த்த நினைவில், பாலத்தில் அமர்ந்து இருவரும் பேசி சிரித்துக் கொண்டிருந்தவர்களிடம் தான், வலியவந்து அவமானப்பட்டு போகிறான் நாகராஜ்.
“இவனோட கால்கைய ஒடிச்சது நீங்க தானா?” அவன் சென்றபிறகு கோபமாக சக்தியைப் பார்த்து கேட்க,
“ஆமா… நீதான சொன்ன. போலிஸு, கேசுன்னு போனா பொம்பள தான் அசிங்கப்படணும்னு. இப்ப ஃபோன கையில வச்சுருக்கவனுக எல்லாம் மீடியானு வேற சுத்துறானுங்க. அதான் வெளிய தெரியாம வேலைய முடிச்சே.”
“ஏன் மாறன்… உங்களுக்கு இந்த வேண்டாத வேலை. அத்தை அவனை யாரோ தோப்பு வீட்லயே வச்சு அடிச்சு போட்டுட்டாங்கனு சொன்னப்பவே எனக்கு சந்தேகம் வந்துச்சு. ஏன்னா… அப்பதான் நீங்களும் அண்ணனும் நெல்லு வாங்க போறோம்னு கிளம்பி இருந்தீங்க. கரெக்டா?” எனக் கேட்க,
“அறிவுடி உனக்கு. கரெக்டா கெஸ் பண்ணியிருக்க. பொம்மிய தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணின மருதைவீரனையே மாறுகால் மாறுகை வாங்கியிருக்காங்க. என்னோட பொம்மிய தொட்டவன சும்மா விடச்சொல்றியா? நீ சொன்னதெல்லாம் கேட்டுட்டு எப்படி இவன சும்மா விடுறது. அதான் அவனுக்கு கொஞ்சம் சுளுக்கெடுத்து விட்டே.”
“அவன் ஏதாவது உங்கள பண்ணிட்டான்னா என்ன பண்றது மாறன். அடிபட்ட பாம்பு சும்மா இருக்குமா?” அவளுக்கிருக்கும் பயத்தைக் கூற,
“இப்ப, அவன் அடிபட்ட பாம்பு இல்லடி. பல்லு புடிங்கின பாம்பு. அவன் பிடி என்கைல. அதனால வாலாட்ட மாட்டான்.”
“அப்படினா?” என புருவம் சுருக்க,
“அவனோட செல்ஃபோன் எங்க கைல. அதுல அவனையே பொண்ணுகளோட இருந்தத… விதவிதமா, ஐயா… வீடியோ எடுத்து வச்சுருக்கான். அதுல அந்தக் கவிதா பொண்ணோட வீடியோவும் இருந்துச்சு பொம்மு. அந்தப் பொண்ணு குளிக்கறது, ட்ரெஸ் மாத்தறதெல்லாம் எடுத்து வச்சுருக்கான். இதெல்லாம் சைபர் க்ரைம்ல கொடுத்து உள்ள தள்ளிருவோம்னு மிரட்டி வச்சுருக்கோம். அதுவுமில்லாம இவன் தெரு நாய்டி. அவன் தெருவைத்தான்டி வாலாட்ட தைரியம் வராது.” எனக் கூறியவனிடம்,
“இது எதுவுமே தெரியாம அந்த வீட்ல நடமாடிட்டு இருந்துருக்காங்க இல்ல. பாவம் தான் அந்த அக்கா.” என ஆற்றாமையாகக் கேட்டவளிடம்,
“அதெல்லாம் டெலிட் பண்ணியாச்சு.” என்றான் ஆறுதலாக.
**************************
“மாறன், ப்ளீஸ்… வெளிய போயிருங்க. தெரியாத்தனமா உங்கள உள்ள விட்டுட்டே.” என்றாள் பாவமாக.
“அதெல்லாம் ஒன்னும் இல்லடி. நான் தைரியமாத்தா இருக்கே.” என்று பதிலுரைத்தான்.
“எப்ப பாத்தாலும் என்னைய சின்னப்புள்ளனு சொல்ல வேண்டியது. இப்ப உங்க கண்ணுதான் சின்னப்புள்ள மாதிரி கலங்கியிருக்கு. இதுல சக்திமாறன் பொண்டாட்டி அழக்கூடாதுன்னு பெருசா அல்டாப்பு வேற.” அந்த நிலையிலும் தன்னவனைப் பார்த்து கேலி செய்ய,
“இப்பவும் வாய் கொறையலடி உனக்கு. சக்திமாறன் பொண்டாட்டி தான் அழக்கூடாது. ஆனா மாறன், அவனோட பொண்டாட்டிக்காக அழலாம்.” என்றான் லேபர் வார்டில் பிரசவ உடையில் படுத்திருந்தவளிடம்.
“நீ இதெல்லாம் தாங்க மாட்ட. வெளிய போயிறுய்யா.” வாய்தான் அடிக்கடி அவனை வெளியே போகச் சொல்கிறதே ஒழிய, கையோ இறுகப் பிடித்த பிடியை விலக்கவில்லை. அவனுக்கும் உள்ளுக்குள் பயம் தான். அக்காவின் பிரசவம் சிக்கலானதை அறிந்தவன் ஆயிற்றே.
“இல்லடி… நம்ம குழந்தைய நான்தான் முதல்ல கையில வாங்கணும்.” எனப் பேச்சுக் கொடுத்தே, அவளை திசைதிருப்ப, அடுத்தடுத்து அவனது குழந்தை சுழற்சி கொண்டு, தாயையும், தந்தையையும் தவிக்கவிட்டு, தலைநீட்டியது.
தாயிடம் தொப்புள்கொடி உறவை முறித்துக் கொண்டு, தந்தையின் பாசக்கொடியில் பிண்ணிப்பிணைய தந்தை கைசேர்ந்தது.
விரல்பட்ட இடமெல்லாம் சிவக்க, மாந்தளிராய் மின்னியது… அவன் கைகளில் அவனது குட்டிதேவதை.
பூமிக்கு பொக்கிஷம் எடுத்து வந்ததைப் போல… கைகளை இறுகமூடி, அழும் பொழுதெல்லாம் பால் அருந்தும் அதரங்கள் நடுங்க, முகம் கன்றி சிவந்ததை… பார்த்த பொழுதெல்லாம், மகவை கை ஏந்திய தந்தையாக மனதில், ஆனந்தம் அலைமோதியது.
“அதுசரி… இனி நானெங்க கண்ணுக்குத் தெரியப்போற. புள்ள வந்ததுல இருந்து பொண்டாட்டி பக்கம் தலகூட திரும்பல.” என குழந்தையின் அழுகுரல் கேட்டு எழுந்தவள், குறைபட்டுக் கொண்டே கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள்.
ஒருவாரம் மருத்துவமனை வாசம் முடித்து வீடு திரும்பியிருந்தனர். மகளுக்கே அறையை, இளவரசி அறைபோல அமைத்துத் தந்த சிதம்பரம், பேத்தி வீடு வருவதற்குள் வீட்டையே அரண்மனையாக மாற்றியிருந்தார்.
“அழுற பிள்ளையக்கூட ரசிப்பீங்களா? இங்க கொடுங்க, பசியமத்தணும்.” என கையேந்தியவளிடம், குழந்தையை கொடுத்தான்.
கண்கூட திறக்காமல், மார்தேடி… தனது செப்பு அதரங்கள் திறந்து, பசியாறிக் கொண்டிருந்த மகவையே வைத்தகண் வாங்காமல் பார்த்தான்.
அவன் வாசித்த பெண்மைப் புத்தகம் தான். அதே பக்கங்கள் தான். ஆனால் அன்று கற்றுக் கொடுத்த பாடம் வேறு. இன்று கற்பிக்கும் அர்த்தம் வேறு. பார்த்துக் கொண்டிருந்தவன் நெஞ்சுக்குள்ளும் தாய்மை சுரந்தது ஈரமாக.
முழுதாக மூன்று மாதங்கள் கூட விட்டுவைக்கவில்லை. மனைவியையும் குழந்தையையும் பிறந்த வீட்டில் இருந்து, திருச்சிக்கு அழைத்து வந்துவிட்டான்.
சொர்ணம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், அவரையும் உடன் அழைத்து வந்துவிட்டான் மனைவிக்கு கைவைத்தியம் பார்க்க.
*********************
“எங்கடி!! அந்தத் திருட்டுப்பய?”
“…….”
“என்னடி மொறைக்கிற. உங்கூட கூட்டணி வச்சுக்கிட்டு என்னைய ஏச்சுட்டு வந்த பயதான?”
“அய்யே… பிள்ளைய பெத்தவரு பேசுற பேச்சப்பாரு… சத்தமா சொல்லாதீங்க. வெளிய கேட்டா சிரிக்கப்போறாங்க.” என கணவனை கடிந்தவள்,
“இப்ப அதனால உங்களுக்கு என்ன நட்டமாகிப்போச்சு. பெரியவங்க கைகால் நடமாட்டத்தோட இருக்கப்பவே நாமலும் குழந்தைகளப் பெத்து வளத்துட்டோம்ல. இப்ப பாருங்க நமக்கு கஷ்டமே இல்லாம ஆளும்பேருமா சேந்து வளத்து விட்டுட்டாங்க.” என அலட்டிக் கொண்டவளிடம்,
“எப்ப இருந்துடி… இவ்வளவு புத்திசாலி ஆன” எனக்கேலி செய்ய,
“உங்க கூட சேந்ததுல இருந்துதான்.” என்றவளை இழுத்து மடியில் போட,
“அப்பாஆ…” எனக் கட்டிலுக்கு அடியில் இருந்து எட்டிப் பார்த்தான் அவனது தவப்புதல்வன். கீழே மகளிடம் வம்பிழுத்துவிட்டு வந்த மூன்று வயது மகனைத்தான், கோபமாகத் தேடி மேலே வந்தான் சக்தி.
முதல் குழந்தை பிறந்ததுமே ஒன்றே போதும் என முடிவாகக் கூறிவிட்டான். ஒருவருடத்திற்குள்ளேயே இரண்டாவது குழந்தை தங்கிவிட, சக்தியிடம் மூன்று மாதங்கள் கழித்தே கூறினாள்.
“ஏன்டி… குட்டிம்மாவுக்கே இப்பதான் ஒரு வயசு முடிஞ்சுருக்கு. அதுக்குள்ள இன்னொன்னா. உடம்பு என்னத்துக்கு ஆகும்.” என கோபப் பட்டவனை,
“உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கு. நான் என்னமோ உங்களுக்கு தெரியாம வரம் வாங்கிட்டு வந்தமாதிரி பேசுறீங்க.” எனத் திருப்பி கேட்க,
“நீ பாக்யராஜ் பாட்ட போட்டு, யோவ்வ்னு… குழையும் போதே நான் உஷார் ஆகியிருக்கணும்டி.” என சிரித்தான்.
“பெரியவங்க நல்லா இருக்கும் போதே குழந்தைகள பெத்து வளத்துக்கணும் மாறன். இப்ப பாருங்க, எங்க அப்பாவெல்லாம் பேத்தி பொறந்த பின்னால, என்பது வயசுலயும் மார்க்கண்டேயர் மாதிரி எப்படி இருக்கார்னு.” எனக் கூறி அவன் வாயை அடைத்துவிட்டாள்.
அவள் கூறியது போலத்தான், பிரித்விக்குப் பிறகு நெடுநாள் கழித்து வீட்டில் அடுத்தடுத்து குழந்தைகள் எனவும், அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.
பெற்றதோடு என் வேலை முடிந்தது என்பது போல் பெரியவர்களே பிள்ளைகளை வளர்த்து விட்டனர்.
பிள்ளை வளர்ப்பு ஒன்றும் ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் விளம்பரத்துல வர்றமாதிரி ஜாலியான விஷயமில்லைங்க. தனியாக கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகம்.
*********************
“யார்கிட்ட நகை வாங்கினாலும், தெரிஞ்சவங்க கடைல மட்டும் நகை வாங்கக்கூடாது பவானி.” என அலுத்துக் கொண்டான் விஷ்ணு.
“என்ன ண்ணா, ஆச்சு?” என கேட்டுக் கொண்டே வீட்டிற்கு வந்த நாத்தனாருக்கும், அவளது கணவனுக்கும் காஃபி எடுத்து வந்தாள் பொம்மி. சக்தியும் அவர்களோடு தான் அமர்ந்திருந்தான். அவர்கள் கையில் இருந்த புதுப்பையை பார்த்தவள், “வேற நல்ல கடைக்கிப் போக வேண்டியது தான ண்ணா? இந்தக் கடைக்கா போனீங்க. செய்கூலி ஓவரால்ல போடுவாங்க.” என்றாள் கிண்டலாக.
“அதெல்லாம் இல்லம்மா. சேதாரம் தான் போட்டு தீட்டிட்டானுக.” என்றான் விஷ்ணுவும்.
“அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் நக்கல் ஓவராத்தான் போச்சு. ஏதோ சொந்தமாச்சேனு செய்கூலி கூட போடல. சேதாரமும் கொறச்சுதான் போட்டுருக்கு. இதுல, இவ என்னடான்னா வேற கடைக்கி போகச்சொல்றா. நீங்க என்னடான்னா சேதாரம் ஓவரா போச்சுங்கறீங்க.” என்றான் சக்தியும்.
“இவன் பிள்ளைகளுக்கு சீர்செய்ய தான நகை எடுக்கறோம் பவானி. கொஞ்சம் கூட கொறைக்கவே இல்லடி. வேற கடைக்கி போயிருந்தாலாவது அஞ்சோ பத்தோ கொறச்சுருப்பானுக. மச்சான் கடைனு போனதுக்கு இந்த பை தான்டி மிச்சம்.” என மனைவியிடம் புலம்பியவனைப் பார்த்து பவானியும் சிரிக்க,
“மாமா!! எம்பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னயே சொல்லி இருக்கா. வியாபாரம் வேற… சொந்த பந்தம் வேற… ரெண்டையும் போட்டு குழப்ப கூடாதுனு.” என்றவனிடம்,
“மாப்ள… பத்திரிகையில தாய்மாமன்னு எம்பேரத்தான போட்டிருக்க. இதையே ஆதாரமா காமிச்சு, சிதம்பரம் பெரியப்பாகிட்ட பாதி சொத்த எழுதி வாங்கறே பாரு.”
“நீங்க முழு சொத்தையும் வேணும்னாலும் எழுதி வாங்கிக்கோங்க மாமா. எனக்கு அதப்பத்தி கவலையில்லை.” என்றான் சக்தி.
மாமனைப்பற்றி தெரியாதா என்ன? காவேரியின் தாய் வீட்டு சீதனமாக வந்த நிலத்தில் அரிசிமில் வைத்திருப்பதால், லாபத்தில் பவானிக்கும் ஒருபங்கு தருவதாகக் கூற, அதையே அக்காவும் மாமனும் மறுத்துவிட்டனர். எனினும் சக்தி அப்படியே விட்டுவிடவில்லை. உங்களுக்கு வேண்டாம்னா விட்டுறுங்க. அதை நான் பிரித்விக்கு கொடுத்து விடுகிறேன் என அவனது பெயரில் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவான்.
அடுத்த வாரம் சக்தியின் பிள்ளைகளுக்கு காதுகுத்து வைத்திருக்கிறான். அதற்கு தாய்மாமன் சீராக நகை எடுக்க பொம்மி ஜ்வெல்ஸ் சென்று வந்த மாமன் தான் வீட்டிற்கு வந்து மச்சானை வம்பிழுத்துக் கொண்டிருக்கிறான்.
மகள் பிறந்த வருடமே பொம்மி ஜ்வெல்ஸ் அன்ட் டெக்ஸ்டைல்ஸ் ஆரம்பித்தான் சக்தி.
அதற்கும் பொம்மி தான் காரணம் எனக் கூறினான்.
“நீயும் உங்க அத்தையும் நம்ம கடைக்கு வந்துட்டு நகை எடுக்கணும்னு போனீங்கள்ல… அன்னைக்கு தான் தோணுச்சு. நம்ம கடையிலதான் எல்லாமே இருக்கே. இவங்க வேற என்ன வாங்க போறாங்கனு. அப்ப தான்டி நகைக்கடை வைக்க ஐடியா வந்துச்சு. அப்ப இருந்தே அதுக்கான ஏற்பாட்டை ஆரம்பச்சுட்டே. என் தங்கக்குட்டி பொறக்கவும் அதுக்கான நேரமும் கூடி வந்துருச்சு.” என தனது அதிர்ஷ்ட தேவதைகளின் புகழ் பாடினான் சக்திமாறன்.
*******************
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே ஏஏ..
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
பாடல் செல்லில் ஒலித்துக் கொண்டிருக்க… ஊஞ்சலில், முழுநிலவு வெளிச்சத்தில், மனைவியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தான் மாறன்.
மங்கையின் கை, மன்னவன் தலை கோதிக் கொடுக்க, கோதிய கையை இழுத்து முத்தம் பதித்தான் மாறன்.
“லட்டூ…”
“ம்ம்ம்…”
“பொண்டாட்டி வர்ற நேரம்னு எதச் சொல்றாங்க தெரியுமா?”
(கதை முடியப்போற நேரத்துல தத்துவம் ஏதாவது சொல்லிப் பாருங்க, ரீடர்ஸ் சார்புல ரைட்டர நானே போட்டுத் தள்ளிர்றே!!! பொம்மியின் மைன்டு வாய்ஸ்.)
“அதான் ஆரம்பிச்சுட்டீங்களே. அதையும் நீங்களே சொல்லிருங்க.”
“பொண்டாட்டி வர்ற நேரம், அதிர்ஷ்டம் கொட்டும்னு தேமேன்னு முகட்டப் பாத்துக்கிட்டு உக்காந்தா பொத்துக்கிட்டு கொட்டாதுடி. நம்ம பொண்டாட்டிய நாலுபேரு முன்னாடி எப்படி தலைநிமிர்ந்து நடக்க வைக்கிறதுங்கறதுல தான்டி எல்லாமே இருக்கு.”
“……….”
“உன்னைய பாத்தப்பவே இப்படி ஒரு பொண்ணக் கட்டணும்னா… இன்னும் நம்ம தகுதிய உசத்திக்கணும்னு நெனச்சே. அதைத் தொட்டு ஒன்னொன்னா நடந்துச்சு. உன்னாலதான் நகைக்கடை யோசனை வந்துச்சு. நம்ம குட்டிம்மா பொறந்த பின்னால தான் ஜவுளிகடை யோசனை வந்துச்சு. அதுக்கு தான்டி பொம்பளப்புள்ள வேணும்கறது. அப்ப தான் அப்பனுகளுக்கு பொறுப்பு வரும். அந்தப் பொறுப்பு வர்ற நேரம்தான் மகாலக்ஷ்மி வர்ற நேரம்.” என பட்டியல் போட,
“அப்ப நம்ம பையன் பொறந்தப்ப ஒரு யோசனையும் வரலையா?”
“மகன விட்டுக்கொடுக்க மாட்டியே!! அதுதான் சொல்ல வர்ற. அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி.”
“என்ன யோசனை வந்துச்சு?”
“புள்ளைகள படிக்க வைக்கணும்ல.”
“அதுக்கு…”
“ஸ்கூல் ஆரம்பிக்லாம்னு இருக்கோம்.”
“இருக்கோம்னா…”
“அக்காவும் பி.எட் முடிச்சுருக்கு. அக்காவுக்கு பிரித்வி பொறக்குறதுக்கு முன்னால ஸ்கூல்ல வேலபாத்த அனுபவம் இருக்கு. நீயும் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படி. நீங்க ரெண்டு பேரும் தான் பார்ட்னர்ஸ்.”
இவ்வளவு நேரமும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள்,
“யோஓவ்வ்.” என அதட்டி அழைக்க,
“என்னடி சவுண்ட் ஒசறுது.”
“பின்ன… நானெல்லாம் ஒரு டிகிரி வாங்கினதே பெரிய விஷயம். இதுல மேனேஜ்மென்ட் கோர்ஸ் வேறயா?”
“உன்னால முடியும் லட்டூ. மாமாவும் அக்காவ எம்.எட் படிக்க சொல்லி இருக்காரு.”
“என்னங்கய்யா இது. புள்ளகுட்டிகள படிக்க வைக்க சொன்னா, நீங்க ரெண்டு பேரும் பொண்டாட்டிகள படிக்க சொல்றீங்க.”
“ஆமாடி. நீங்க ரெண்டு பேர்தான் ஸ்கூல் நடத்தப் போறீங்க. உனக்கு, உங்க அப்பா ஸ்பான்சர். அக்காவுக்கு, அதோட மகன் தான் ஸ்பான்சர். அவன் பேர்ல பேங்க்ல போட்ட பணம் இருக்குல்ல.”
“இந்த ஐடியா யார் கொடுத்தது.” அடிக்குரலில் மிரட்டி கேட்க,
“நான் தான். நீ தான சொன்ன… புள்ளைகளப் பாத்துக்க பெரியவங்க இருக்காங்கன்னு. அதை நாமதான் யூஸ்பண்ணிக்கணும். அதனால நீ படிக்கிற.” என முடிவாகக் கூறிவிட்டு எழுந்து கொண்டான்.
“யோவ்வ்… இதெல்லாம் நல்லா இல்ல. நீ என்னைய ரொம்ப எதிர்பாக்குற. அதுக்கெல்லாம் நான் வொர்த் இல்ல.” அழுது விடுபவள் போல் முகம் மாற,
“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ படிக்கிற வேலையமட்டும் பாரு. ஸ்கூலுக்கு இடமெல்லாம் பாத்தாச்சு.”
“நீ லட்டு, பூந்தினுட்டு சம்பந்தா சம்பந்தமில்லாம கேள்வி கேக்கும்போதே நெனச்சேய்யா. என்னமோ இருக்குனு.”
“நாளைக்கி சக்திமாறன் பொண்டாட்டினு வெளிய பெருமையா சொல்லும் போது…” என இழுக்க,
“போயிரு… செம கடுப்புல இருக்க.” விரல் நீட்டி எச்சரிக்க,
“அத எப்படி சரிபண்ணனும்னு எனக்கு தெரியும்.” என, வீம்பு பிடித்தவளை கைகளில் அள்ளிக் கொண்டவன்,
“அடியேய்… அம்பது கிலோ மூட்ட, அறுபது கிலோ ஆயிருச்சுடி.” என்றான்… சிரித்துக் கொண்டே.
செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜானாக
இன்பத்தின் மணத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக
திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம்
மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖