காலையில் ஐந்தரை மணிப்போலவே அலாரம் வைத்து எழுந்து கொண்டவன், வேக வேகமாய் எழுந்து பல்துலக்கி, முகம் கழுவி கண்ணாடியின் முன்பு நின்றான்.
தன்னை கண்ணாடியில் ஒன்றிற்கு இரண்டு முறை பார்த்துக்கொண்டவன், தலையை மட்டும் சரிசெய்து விட்டு வேகமாய் வீட்டின் முன்பு கதவருகில் நின்றுக் கொண்டான்.
தினமும் இது நடப்பது தான் என்றாலும் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் எதிர் வீட்டு வாசலை எதிர் நோக்கி எதிர்ப்பார்ப்புடனே வழி மேல் விழி வைத்து காத்திருந்தான்.
நொடிகள் செல்ல செல்ல கௌதமின் இதயம் வேகமாய் துடித்தது.
அதற்குள் அவனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பங்கஜம் கோலம் போடவென வெளியே வந்தவர், கௌதம் நிற்பதை கண்டு,” ஏன்டா உனக்கு இந்த வேண்டாத வேலை. பாவம் டா அந்த பொண்ணு உன்னால அதிகமா வெளிய வரவே பயப்படுது”சொல்ல,
“ஏது அவ பயப்படுறவளா, போங்க ஆண்டி காமெடி பண்ணிக்கிட்டு” சொன்னவனுக்கு அவளிடம் அன்று வாங்கிய அடி இன்றைக்கும் வலிப்பது போல் தோன்ற, தானாகவே அவனின் வலக்கரம் அவன் கன்னத்தை தொட்டது.
“இதெல்லாம் சரியில்லை. அவளுக்கு ஒரு பொண்ணு இருக்கு. உன்னோட செயல்கள் அந்த பொண்ணை பாதிச்சிட கூடாது. பார்த்துக்கோ” சொன்னவர் தண்ணி தெளித்து கோலம் போட ஆரம்பித்து விட்டார்.
இவனை சைட்டடிப்பதற்காகவே அந்த தெருவில் வசிக்கும் இளம் பெண்கள் எல்லாம் கோலம் போடுகிறேன் என வாசலுக்கு வந்துவிட்டனர்.
அதில் சிலர் எதையாவது உருட்டுகிறேன் என்ற பேர்வழி வெளியே வந்துவிடுவர்.
இங்கு இவனை காண அந்த தெரு பெண்கள் இருக்க, இவனோ யாருக்கோ வந்த விருந்து போல் அவனின் ப்ரியமானவளுக்காக மட்டுமே காத்திருந்தான்.
சரியாக பதினைந்து நிமிடங்கள் கழித்து,எதிர் வீட்டில் வெளி விளக்கு எறிய பட, இவனின் முகத்திலும் ஒரு தேஜஸ் மின்னியது.
மெதுவாய் கதவை திறந்து வெளியே வந்தவளின் கைகளில் வாசலிற்கு கோலமிடுவதற்காக வாளியில் தண்ணீர், இன்னொரு கையில் வெளக்கமாறு சகிதமாக வர, பார்த்திருந்தவனின் கண்ணில் காதல் கசிந்துருகியது.
அவளுக்காகவே அந்த நேரம் தோன்றிய பாடலை இசைக்க விட்டிருந்தான் கௌதம்.
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
பாடல் காதில் விழுந்தாலும் கண்டு கொள்ள வில்லை.
என்றும் போல இன்றும் புடவை தான் அணிந்திருந்தாள்.சாதாரண காட்டன் புடவையிலே அவளை பேரழகியாய் காண்பித்து அவனை இம்சித்தது.
‘கொல்றாளே!’ மனம் நினைத்து பெரு மூச்சு விட்டது.
தலைக்கு ஊற்றியிருப்பாள் போலும், இன்னும் அவிழ்த்து துவட்டாமல் துண்டை கொண்டு கூந்தலை கொண்டையிட்டிருந்தாள்.
தலையின் ஈரம் அவளின் முகத்தில் சொட்டுக்களாய் விழ, பார்த்தப் படி நின்றிருந்தான் கௌதம்.
குப்பைகளை கூட்டி அள்ளி குப்பை தொட்டியில் போட்டவள், தண்ணீர் தெளித்து அழகான கோலம் ஒன்றை போடவும், கேட்டை திறந்து அவளை நோக்கி மெல்ல வந்தான்.
“இங்க முடிச்சிட்டு அப்படியே எதிர் வீட்டுக்கும் ஒரு அழகான கோலத்தை போடுறது” காலையிலே அவளை சீண்டி விளையாட,
“எதுக்கு வேற ஒரு ஆளை பார்த்துக்கிட்டு நீயே எப்படி போடுறதுன்னு சொல்லி கொடுத்தா, நம்ம ரெண்டு வீட்டுக்கும் சேர்த்து நானே போட்டுடுவேன்” வெட்கமே இல்லாமல் அவனும் பதில் பேச, அவனை கண்களால் பஸ்பமாக்க முயன்றாள்.
“இப்படியெல்லாம் பார்த்து வைக்காத அழகி. உன்ன தள்ளி நின்னு கையை கட்டிப்போட்டு கஷ்டப்பட்டு பார்த்ததுட்டு இருக்கேன். இப்படியெல்லாம் பார்த்து வச்சி அதுக்கு பங்கம் செஞ்சிடாத” என்றான்.
“உங்களை எல்லாம் திருத்தவே முடியாது. மனிசனா நீங்க?”
“பொண்டாட்டியா வந்து என்னை திருத்த முயற்சி செய்யலாமே?” அவள் பேசுவதை வைத்தே அவளுடன் கதை வார்க்க பார்க்க, இந்த மூன்று மாதத்தில் அவனை பார்த்து அறிந்து கொண்டதில் அவன் தன்னிடம் பேச்சு வளர்க்க பார்க்கிறான் என புரிந்து கொண்டவள் வாளியை எடுத்து கொண்டு உள்ளே சென்று விட்டாள்.
அவள் உள்ளே சென்று கதவை அடித்து சாற்றும் வரை அவளையே பார்த்திருந்தவன், விசில் அடித்தப்படி அவனின் வீட்டிற்கு செல்ல அடியெடுத்து வைக்க, இளவட்டங்கள் அவனை சூழ்ந்து கொண்டது.
“என்ன வேணும் உங்களுக்கு?” அத்தனை நேரம் இருந்த மென்னை இப்போதில்லை.
“நாங்களும் உங்களை பார்க்கிறது உங்களுக்கு தெரியுதுல. அப்படி என்ன அவகிட்ட இருக்குன்னு அவ பின்னாடியே சுத்துறீங்க?” ஒருத்தி தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்க,
அந்த பெண்ணை முறைத்தவன்,” மரியாதை ரொம்ப முக்கியம்”என எச்சரிக்கை விடுக்க, சட்டென அந்த பெண் வாயை மூடிக்கொண்டாள்.
“சின்னு பொண்ணுங்க நீங்க, படிக்கிற வேலையை பார்த்தா நல்லா இருக்கும். அதை விட்டுவிட்டு அடுத்தவங்க விஷயத்துல தலையிடுறது அத்தனை நல்லது இல்ல” சொல்லி நகர்ந்து விட்டான்.
போகும் அவனை ஒரு முறை முறைத்த சிறுசுகள், ஏக்கமாகவும் பார்த்து வைத்தனர்.
வீட்டிற்குள் வந்தவனுக்கு கோவமாய் வந்தது. சின்ன பிள்ளைகள் தான் என்றாலும் அவர்கள் பேசியது பெரிது. அந்த ‘அவ’ என்ற வார்த்தையின் பின்னான அர்த்தம் கூட தெரியாத, கூமுட்டையா அவன்.
இவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்றால், அவர்கள் வீட்டில் இதனை பற்றி பேசாமலா இருந்திருப்பார்கள்? அவரவர் குடும்பத்தில் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், மற்றவர் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று நோட்டம் விடுவதையே முதல் வேலையாக வைத்திருக்கிறார்கள்.
நாலு பேரா நாலு விதமாக பேசுகிறார்கள்? லட்ச கணக்கில் கோடி கணக்கில் அல்லவா பேசுகிறார்கள்.
அதனைபற்றி நினைக்கும் போதே, ரோஷினியை நினைத்து மனம் கலங்கியது. இவள் இந்த மாதிரி எத்தனை விதமான பேச்சுக்களை எல்லாம் வாங்கியிருப்பாள்.
அந்த நேரம் எப்படியெல்லாம் துடித்திருப்பாளோ, மனம் அவனின் நாயகிக்காக வேதனையுற்றது. இருந்தும் கடந்து போனதை பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு இனி வரும் காலங்களில் அவளுக்கு துணையாய் தூணாய் இருந்து பாதுகாக்க எண்ணினான்.
அந்த எண்ணத்தை செயல்படுத்த வேண்டுமானால் அதற்கு ரோஷினியின் இதயம் அவனுக்காய் செவி சாய்க்க வேண்டும்.
அதை தான் பெரிய பூட்டாக போட்டு பூட்டி வைத்திருக்கிறாளே. அவள் திறவுகோல் போட்டு திறக்கும் அந்த நாளுக்காய் தான் இவன் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறான்.
அவளுக்காக வேண்டி தான் கிண்டியிலிருந்து தன் வாசத்தை வேளச்சேரிக்கு இடம் மாற்றியதே.
ஓரிரு முறை அவன் கவனித்ததில், ரோஷினியை சிலர் நோட்டம் விடுவதை போல் தோன்ற, அவளின் பாதுகாப்பிற்காக பிறந்ததிலிருந்து இதுநாள்வரை சேர்த்து வைத்திருந்த பணத்தை கொண்டு அந்த வீட்டை வாங்கியிருந்தான்.
எல்லாம் அவளுக்காக பார்த்து பார்த்து செய்ய, அதனை அவள் எப்போது புரிந்து கொள்வாள் என்று தான் தெரியவில்லை.
அப்போது அவனின் நினைவுகளை எல்லாம் கலைக்கும் பொருட்டு, அவனுக்கு அழைப்பு வர மற்றதை எல்லாம் கிடப்பில் போட்டவன் மொபைலை தேடி எடுத்து பேசலானான்.
இங்கு வீட்டிற்குள் வந்த ரோஷினிக்கு கௌதமை கொலை செய்திடும் வெறி.
ஆனால் என்ன செய்ய, அவனை ஒன்றும் செய்ய முடியாத நிலையல்லவா அவளது.
இரண்டு வருடமாய் தன்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டு நிற்பவனிடம் எத்தனையோ முறை தன் மறுப்பை வேறு வேறு விதமாய் கூட கூறிவிட்டாள்.
ஏன் அவனை அடிக்கவும் செய்திருக்கிறாள். ஆனாலும் தான் தான் வேண்டும் என்று நிற்பவனிடம் என்ன சொல்ல? அமைதியாய் அவனை கடக்க பார்த்தாலும் அவன் விடுவதில்லை.
முதலில் அமைதியாய் இருந்தவன் இப்போதெல்லாம் தினமும் தன்னை வம்பிழுத்து, வாங்கி கட்டி கொள்வதை ஒரு வேலையாய் வைத்திருக்கிறான்.
அதிலும் தான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடிவரவும் ஒரு நொடி திகைத்த நிலை தான்.
கண்களை எல்லாம் கசக்கி கொண்டு பார்க்க, அவன் சிரித்த முகத்துடன் பால் க்ளாஸை நீட்டவும் ஈ, அவள் அடைந்த அதிர்விற்கு அளவே இல்லை. ஆனால் அதற்கெல்லாம் மாறாக அவளின் பெண்ணிற்கு துள்ளல் தான்.
‘கௌவு ப்பா…கௌவு ப்பா…’ என்று அவன் பின்னாலே சுற்றியது குட்டி.
சஷ்விக்கும் கௌதமிற்கும் இருக்கும் வேவ்லெந்தை காண்கையில் ஆச்சரியம் கொள்வாள் பெண்.
யாரிடமும் அதிகம் ஒட்டாத குழந்தை, கௌதமிடம் மட்டும் சீக்கிரமே ஒட்டிக்கொண்டது.
அதிலும் ‘ப்பா’ என்று தானாகவே அவள் அழைத்தது எல்லாம் ஆச்சரியத்தின் உச்சகட்டம் தான்.
இப்போதெல்லாம் தான் கூட அவளுக்கு தேவையில்லை. அவன் ஒருவன் அவளுடன் இருந்தால் போதும் அவள் உலகமே சிரிப்பொலியால் நிறைந்திருக்கும்.
சில நேரங்களில் இதனை காணும் போது கடுப்பாய் இருக்கும்.
குழந்தைக்கு என்ன தெரியும். என்னவென்று சொல்லி அவளை தடுப்பது? தடுத்தாலும் கேட்கும் வயதா குழந்தைக்கு?
அவளை அப்படியே விட்டுவிட்டாலும், அதற்கெல்லாம் சேர்த்து வைத்து கௌதமை வாங்கிவிடுவாள்.
அனைத்தையும் அமைதியாய் கேட்டுக் கொள்வான். ஆனால் எதையும் கடைபிடிக்க மாட்டான்.
அதிலும் இங்கே வந்ததிலிருந்து கௌதம் தன்னை காண்பது இந்த தெருவிற்கே தெரிந்திருக்க, வெளி வரவே பயந்து நடுங்கினாள்.
எதையும் அந்த தெருவில் உள்ளவர்கள் அவளிடம் நேர் பட பேச்சு கொடுக்கவில்லை என்றாலும், அவளின் பின்னால் பேச தானே செய்வார்கள்.
அதிலும் அவன் பேசியதை நினைக்கையில் அவள் உடல் விறைத்தது.
இப்படியே அவனை நினைத்து சில நேரங்களை ஓட்டியவள், குழந்தை எழுந்துவிட்டாளா என பார்க்க சென்றாள்.
அவள் இன்னும் தூங்கி கொண்டிருக்க, அதற்குள் கூந்தலை உலர்த்தி இடைவரை நீண்டிருந்த கூந்தலை கிளிப் போட்டு அடக்கியவள், தெரு முனையில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு சென்று வந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் வேகமாய் மதியத்திற்கு சமையல் செய்ய போய்விட, அனைத்தையும் வேகமாய் செய்தாள்.
காலை நேரப் பரபரப்புடன் வேலைக்கு அவசர அவசரமாய் கிளம்பி கொண்டிருந்த ரோஷினி, மகளை கவனிக்க தவறி விட,
குழந்தை சஷ்வித்தாவோ தனது பிஞ்சு போன்ற கால்களை கொண்டு மெல்ல மெல்ல நடக்க, அப்படியே வாசல் வரையும் வந்தவள் படிக்கட்டுகளில் இறங்க தெரியாமல் கால்களை தடுமாறி வைத்த குழந்தை கீழே விழுந்திருந்தாள் “ப்பா” என்ற கதறலோடு.
உள்ளுக்குள் இருந்து வேலை செய்து கொண்டிருந்ததால் மகளின் சத்தம் ரோஷினிக்கு கேட்காமல் போக, எதிர்த்த வீட்டிலிருந்து அப்போது தான் வெளியே வந்த கௌதம் மகளின் அழுதிடும் குரலில் ஓடோடி வந்தான்.
“பாப்பு!” பதறியடித்து ஓடி வந்தவன் கண்களில் தேம்பி தேம்பி அழும் மகளை கண்டவனுக்கு ரோஷினியின் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
இருப்பினும் இப்போது மகளை காக்க வேண்டி கேட்டினை திறக்க முயல, அதுவோ உள்பக்கமாக பூட்டை கொண்டு பூட்டி இருந்தது.
ஒரு நொடி தான் யோசித்தது எல்லாம். உடனே சுவற்றை பிடித்து குரங்கு போல் ஏறியவன் குதித்தான்.
அதற்குள் கௌதமை கண்ட சஷ்வி,” ப்பா… ப்பா…”என வலி தாங்காது வீரிட்டு அழுதது.
அவளை நெருங்கி வந்தவன் மகள் அழுதிடும் சத்தத்தில் அவனுமே கலங்கினான்.
அவளை தூக்கி வீட்டிற்குள் அழைத்து வந்து,” ரோஷினி”என சத்தமாக அழைக்க, கௌதமின் குரலில் திடுக்கிட்டு வெளிவந்தாள்.
வெளியே வந்தவளுக்கு மகள் அழுவது தெரிய, அவளிடம் வேகமாய் வந்தாள்.
குட்டியோ வலி தாங்காமல் அழுத படியே இருக்க, இது தெரியாத ரோஷினியோ கௌதமினால் தான் அழுகிறாள் என நினைத்து அவனை கத்த தொடங்கினாள்.
“என் பொண்ணை என்ன பண்ணீங்க நீங்க?” ஆக்ரோஷமாய் கேட்க,
அதை விட பன்மடங்கு அதிக கோபத்தில் இருந்தவன்,” குழந்தையை கூட கவனிக்காத அளவுக்கு அப்படி என்னத்தை உள்ளுக்குள்ள கிழிச்சிட்டு இருந்த? இங்க வெளிய குட்டி விழுந்து அழுகிறது கூட உனக்கு கேக்கலல”கோபத்தில் வீடே அதிரும் அளவிற்கு சத்தம் போட, பயத்தில் குழந்தை உடல் நடுங்கியது.
அவளின் நடுக்கம் அவன் கைகளால் உணர பட, தன்னை நிதானித்தான்.
“முதல்ல குழந்தையை கவனி” என அவள் பொறுப்பில் குழந்தையை கொடுத்தான்.
குழந்தையை வாங்கிய ரோஷினி, ஏதும் அடிப்பட்டு இரத்தம் கசிந்திருக்கிறதா என்று பார்க்க, அப்படியேதுமில்லை.
“எங்க வலிக்குது பாப்பு?” குழந்தையிடம் கேட்க, அவளுக்கு சொல்ல தெரியவில்லை.
ஆனாலும் குழந்தையின் அழுகையை வைத்து பார்க்கையில் உள்காயம் ஏதாவது இருக்குமோ என அவள் எண்ண, அதற்குள் வெளியே வந்த கௌதம் வண்டியை எடுத்து வந்திருந்தான்.
“ரோஷினி” என வாசலில் நின்று அழைக்க,
உள்ளிருந்து வெளியே எட்டி பார்த்தவள், அவன் வண்டியோடு நிற்கவுமே புரிந்து கொண்ட பெண்ணவளின் கண்களில் ஒருவித பயம் தொற்றிக் கொண்டது.
“இல்ல, நான் ஆட்டோ வரவழைச்சி அதுல போய்கிறேன்”சொல்லும் அவளை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் பார்த்து வைத்தான்.
அவனின் தீப்பார்வையில், இது சிந்தித்து செயல்படும் நேரமல்ல. குழந்தையை தான் முதலில் பார்க்க வேண்டும் என்ற எண்ணி வீட்டை பூட்டிவிட்டு அவனுடன் வண்டியில் ஏறினாள்.
அடுத்த கால்மணி நேரத்தில் ஒரு பெரிய மருத்துவமனையின் முன் வண்டி நிற்க, குழந்தையை மருத்துவரிடம் காட்டியவர்கள் அவர் என்ன சொன்னாரோ, ஒரு தாயாய் கண்ணீர் சிந்தினாள் ரோஷினி.
மகளுடன் சேர்ந்து இப்போது அன்னையையும் சமாதானம் செய்யும் வேலையில் ஈடுபட்டான் கௌதம்.