IRULMAI – IRAVU NILAVU

photo-1595171694538-beb81da39d3e

இருள்மை – சிறுகதைத் தொகுப்பு [THRILLER]


இரவு நிலவு

ஒரு நாள் இரவு நேரம்!

நிலா ஒளிர, இரவு ஒன்பது மணிக்கு மேல் ஊரடங்கும் பொழுதில்… இல்லை அடங்கிவிட்ட பின்! மனசெல்லாம் படபடக்க, சட்டென மூளை வேலை நிறுத்தம் செய்ய, ஆள் அரவமற்ற ஒரு சாலையில் எப்படித் தப்பிக்கவென தெரியாமல் உயிருக்குப் பயந்து தாறுமாறாக ஒரு பெண் ஓடி ஓடிக் களைத்துக் கொண்டிருந்தாள்.

இந்த உயிர் பயம் எதற்கு? யாரால் இந்த பயம் வந்தது?

காரணம்… அவளைக் கொடூரமாக கொன்று போட வேண்டுமென்று கொலை வெறியுடன் ஒருவன் துரத்திக் கொண்டு வருவதால்!

நேரம் இரவு 10:00

பெரிய பெரிய இடைவெளியில் நின்ற சாலையோர விளக்கு கம்பத்தின் ஒளி பட்டு, அவன் கையிலிருந்த கூர்மையான பெரிய கத்தி பளபளத்தது. ஓடுபவளுக்கும் துரத்துபவனுக்கும் இடையே தூரம் குறையும்போது, அவன் கையிலிருந்த கத்தியால் அவள் முதுகின் மீதி சில கீறல்களைப் பதித்தான்.

கீறல்களால் உண்டான காயத்திலிருந்து ‘சிவப்பு வியர்வை’ கசியத் தொடங்கி, ஏற்கனவே வியர்வையால் நனைந்த அவள் ஆடையை மேலும் நனைத்தது! இருந்தும் அவன் கையில் மாட்டிவிட கூடாதென்ற பயத்தில் அவள் வேகம் இருமடங்கானது!!

மருண்ட அவளது கண்ணில், ‘யாராவது… இவனிடமிருந்து காப்பாற்றி விடமாட்டார்களா?’ என்ற நப்பாசை வெகுவாக தெரிந்தது. சிலசமயம் பயத்தில் இமைகளை மூடியபடி பாதை தெரியாமல் தலைதெறிக்க ஓடினாள்.

கொடூரத்துடன் இருந்த அவனுடைய கண்களோ, அவள் மரணத்தைக் காண வேண்டி தன் இமைகளைத் திறந்தே வைத்திருந்தன! அப்படியே துரத்திக் கொண்டு போனான்!!

நேரம் இரவு 10:30

கன்னாபின்னாவென ஓடி வந்தவள் ஒரு கிளைச் சாலையில் திரும்பினாள். அங்கொன்றும் இங்கொன்றுமாக தள்ளுவண்டி கடைகள். அவை எல்லாமே பிளாஸ்டிக் தாள்கள் போட்டு மூடப்பட்டிருந்தது. ‘யாரும் உதவி செய்ய இருக்கிறார்களா?’ என்று அவள் கண்கள் தேடிக் கொண்டும், கால்கள் ஓடிக் கொண்டும் இருந்தன.

யாருமில்லை! அதற்குமேல் ஓட அவளுக்குத் திராணியும் இல்லை. சோர்வுடன் இருக்கவும் ஒளிந்து கொள்ள இடமிருக்காவென சுற்றிலும் பார்த்தாள். பராமரிப்பற்ற நிலையில் ஒரு பூங்கா இருந்தது.

உடனே அதன் இரும்புக் கம்பிகளைத் தாண்டி உள்ளே குதித்தாள். எங்கே ஒளிய என்று பார்த்தவளுக்கு, ஒரு இடமும் ஏற்றதாகவே தெரியவில்லை. வேறு வழியில்லாமல் ஓடிச் சென்று ஒரு மரத்தின் பின்னே மறைந்து நின்று… கொஞ்சம் இளைப்பாறினாள்.

சற்று நேரத்திற்குப் பின்… அந்த ஒருவனும்… அதே கிளைச்சாலையில்… வந்து நின்றான்.

குரூரமான அவன் கருவிழிகள் நாலாபக்கமும் அவளைத் தேடின.

‘கண்டுபிடிச்சிடுவானோ, கண்டுபிடிச்சிடுவானோ’ என பயத்தில் அவள் உதடு அசைத்து எச்சிலை முழுங்கி, இரு கைகளால் வாயை மூடினாள்.

அவன் கண்ணில் அவள் தென்படவில்லை. அந்நேரம், ‘அவளைத் தவற விட்டேனா?’ என்ற கடுங்கோபம் அவன்மீதே அவனுக்கு வந்தது. உடனே அதை வெளிக்காட்டும் வண்ணம் காலால் சாலையில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.

இல்லை அவளைத் தவறவேவிடமாட்டேன். அவள் ரத்தத்தில் குளிக்காமல் தன் கத்தி ஓயப் போவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டான். ஒவ்வொரு தள்ளுவண்டி கடையிலும் தேடினான். அவள் இல்லையென்று தெரியவும்… அவன் பார்வை பூங்காவிற்குத் தாவியது.

‘இங்கதான் இருப்பா’ என்று சரியாக கணித்து உள்ளே குதித்தான்!

அவள்… மரத்தின் பின்னே மறைந்து நின்றவள்… உடலை குறுக்கிக் கொண்டு, கண்களை மட்டும் சாய்த்து… அவனது செயல்களைப் பார்த்தாள். கிளைச் சாலை விளக்கொளியால் ஓரளவு வெளிச்சத்துடன் இருந்த பூங்காவின் சீசா பலகை… ஊஞ்சல்… சறுக்கு மரம் என்று ஒவ்வொரு இடத்திலும் தேடினான்.

இன்னும் பத்து மீட்டர் தூரம்தான்… அவன் நிற்கும் இடத்திற்கும், இவள் மறைந்து நிற்கும் இடத்திற்கும்! அவன் முகத்தில் தெரியும் கோபத்தைப் பார்த்தவளின் மனம், ‘ஓடிக் கிட்டே இருந்திருக்கணும். இப்ப மாட்டிக்கிவேன்’ என்று புலம்பி அழுதது.

நேரம் இரவு 11:10

அவள் கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். ஏனெனில் அவன் இப்போது இந்தக் கிளைச்சாலையில் இல்லை. இதற்கு இணையாக இருந்த சாலையில் ஏதோ சத்தம் கேட்டதால் பூங்காவின் இன்னொரு வழி மூலம் அங்கே சென்று விட்டான். அதனால்தான் அவளுக்கு இந்த ஆசுவாசம்!

எனவேதான் பூங்காவிலிருந்து வெளியே குதித்து கிளைச்சாலையில் நிற்கிறாள்.

அக்கணம் சைரன் ஒலியுடன் காவலர் வாகனம் வரும் சத்தம் கேட்டது. அவள் முகத்தில் அப்படியொரு நிம்மதி… தப்பிக்க வழி கிடைத்திருக்கே என்பதால்!

அந்த ஒலி எந்தப் பக்கமிருந்து வருகிறதென காதை தீட்டி வைத்துக் கொண்டு கேட்டாள். எங்கிருந்து வருகிறதென தெரிந்து கொண்டவள், சத்தம் பக்கத்தில் கேட்டதும் சட்டென்று மறைவிலிருந்து வெளியே வந்தாள்.

விரைவாக காவலர்களின் உதவியை நாடி விட வேண்டுமென்று அரக்க பரக்க ஓடினாள். இடையிடையே அவன் வருகிறானா? என்று பார்த்துக் கொண்டாள்.

அவன் வரவில்லை!

நேரம் இரவு 11:30

கிளைச் சாலையின் முனையில் வந்து எட்டிப் பார்த்தாள். இரவுநேர காவலர் வாகனம் நின்றது. தப்பியாயிற்று… அவனிடமிருந்து தப்பியாயிற்று! அவளது முகத்தில் ஒருசிறு மகிழ்ச்சி… பெரிய நிம்மதி தெரிந்தது. உயிர் பயம் குறைந்தது.

இரண்டரை மணி போராட்டம் முடிவிற்கு வந்தது!

காவலர்கள் எங்கே என்று பார்க்க ஒரு அடி முன்னே எடுத்து வைத்த போது, அவளுடைய தலைமுடியை பிடித்து தரதரவென்று பின்னோக்கி இழுத்து… அவளது முன்னங்கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு… அவன் நின்றான்.

அவள் மாட்டிக் கொண்டாள்!

தன் கத்தி ரத்தம் பார்க்க போகிறது என்ற கொடூர திருப்தி அவன் முகத்தில்!

அவள் முகத்தில் மீண்டும் மரண பயம்!!

.

.

.

.

நேரம் இரவு 10:00

சட்டென இருள் பரவி… ஒரு நிசப்தம் நிலவியது. அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் ஒரு தடுமாற்றம்!

நிகழ்கணத்தில் ஒரு குரல்!

“க்கும் இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு. திடிர் திடிர்னு கரென்ட எடுத்துறானுங்க. ஒரு படத்தை பார்க்க விட்றானுங்களா!?” என்று இருட்டில் ஓர் பாட்டி துழாவித் துழாவி தன் கைபேசியை எடுத்து ஒளிர செய்தார்.

காற்று வேண்டி கதவைத் திறந்து வெளியே வந்தார். இரவு வானில் அழகு நிலா ஒளிர்ந்து கொண்டிருந்தது. மணி பத்தரையைக் கடந்திருக்கும். ஊரடங்கிவிட்டது.

அவரது மூளைக்குள், ‘அந்தப் பொண்ணுக்கு என்னாயிருக்கும்? அவ கழுத்தில கத்தியால குத்தியிருப்பானோ? போலீஸ் அவளை காப்பாத்திருப்பாங்களோ?’ இல்லைனா அவளே தப்பிச்சி போயிருப்பாளோ?’ என இத்தனை விடை தெரியாத கேள்விகள் வந்தன.

எழுந்த கேள்விகளுக்கான விடையை யோசிக்காமல் அவரது மூளை வேலை செய்வது நிறுத்திவிட்டது.

கடைசியில், “ஆங்ங்… அந்த டிவி காரன்தான… நூறுநாள் டிவியிலயே படத்தை ஓட்டுவான். இன்னொருநாள் பார்த்துக்கலாம்” என்று ஒருவிதமாக தன்னைச் சமாதனப்படுத்திக் கொண்டு, அலைபேசியில் பாட்டு போட்டுவிட்டார்.

பபப பப்பாப பப்பாப பாபப

பபப பப்பாப பப்பாப பா….

பபப பப்பாப பப்பாப பாபப

பபப பப்பாப பப்பாப பா….

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…

ஜொலிக்கும்…

சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது…

கால்களில் தாளம் போட்டபடி இரவு நிலவு பாடலை ரசித்தார் அந்தப் பாட்டி!

********************** END ************************