ப்ரியங்கள் இசைக்கின்றனவே!09

IMG-20220603-WA0000

ப்ரியங்கள் இசைக்கின்றனவே!09

ப்ரியங்கள் இசைக்கின்றனவே!

ப்ரியம் 09

நிசப்த இரவில் வானில் இருந்த நிலவை கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையில் பலத்த காற்றுடன் மெல்ல மெல்ல சாரல்கள் மண்ணில் விழத் தொடங்கிய நேரமது.

வீட்டினுள் நுழைகையிலே கௌதமின் மனதில் சொல்லொணா வலி அவனுள் ஊடுருவியது.

வீடு இருந்த நிலையை கண்ட கௌதம் அங்கேயே நின்றுவிட்டான். மின்சாரம் தாக்கியது போல் அப்படியே நின்றான்.

வீட்டிலிருந்த பொருட்கள் எல்லாம் உடைந்து சிதறி கிடப்பதை பார்த்த கௌதமின் கண்கள் இறுதியில் ஓரமாய் வெறித்த நிலையில் கால்கள் மடக்கி அமர்ந்திருந்த ரோஷினியை கண்டு பதறியடித்து அவளருகே அந்த வலியிலும் ஓடி வந்தான்.

“ரோஷி! ரோஷினி மா…என்ன ஆச்சு டா? ஏன் வீடு இப்படி இருக்கு?” பயத்துடனே கேட்க,

அவளோ எதுவும் பேசாது அசையாது அமைதியாய் சுவற்றை வெறித்த நிலையிலே இருந்தாள்.

கௌதம் அச்சம் கொண்டான். இப்படி ஒருநாளும் ரோஷினி இருந்து அவன் பார்த்ததில்லை.

என்னமோ நடக்க காத்திருக்கிறது என அவனின் உள்ளுணர்வு உரைத்தப்படியே இருந்தது.

“ரோஷினி!!!” என அவள் இடக்கரத்தை தொட்டதும் தான் தாமதம், இதுவரை அமைதியாய் இருந்தவள் வெகுண்டு எழுந்தாள்.

பாண்டியன் பேசியது எல்லாம் நினைவில் வந்து போக கௌதமை மேலிருந்து கீழ் பார்த்தவள், அவனை விட்டு தள்ளி நின்றாள்.

“ரோஷினி…” அவன் நெருங்க, அவள் பின்னே அடியெடுத்து வைத்தாள்.

“ரோஷினி மா…”அவன் குரல் பெண்ணின் நிலையை கண்டு பரிதவித்தது.

“இங்க இருந்து போயிடுங்க கௌதம்” அவனை வெளியேற்ற முயன்றாள்.

இரண்டு நாட்களாய் உண்ணாமல் இருந்தது வேறு ஒருவித தலை சுற்றலை கொடுக்க, அதனுடனே கௌதமிடம் பேசினாள்.

“ரோஷினி மா… என்ன நடந்துச்சு? ஏன் வீடு இப்படி இருக்கு? யாரோ வீடு புகுந்து வந்து மிரட்டிட்டு போனதா பங்கஜம் ஆண்டி சொன்னாங்க. பேசு மா…”

“உங்களை இங்க இருந்து போக சொன்னதா ஞாபகம்” என்னும் போதே பார்வை மங்கலாய் தெரிய, பிடிமானத்திற்கு சுவற்றை பிடித்தாள்.

“என்ன மா..?என்ன பண்ணுது ரோஷினி..?” அவன் அச்சத்துடன் வினவி அவளை நெருங்க, அவனை எட்டவே நிறுத்தினாள் பெண்.

தன்னை அவன் நெருங்க அவள் விடவில்லை. அவன் தூரம் இருக்கும் வரை தான் தனக்குள் ஏதோ ஒரு மூலையில் ஒட்டி கிடக்கும் தைரியம் வேலை செய்யும் என புரிந்தது.

“இப்போ வெளிய போகப் போறீங்களா இல்லையா” ஆக்ரோஷமாய் கத்த, அதையெல்லாம் கண்டு கொள்ளாதவன், அவளின் உடல்நிலையில் கவனம் வைத்தான்.

கொஞ்ச நேரம் நின்றதற்கே கால்கள் இரண்டும் கிடுகிடுக்க தொடங்கியது அவனுக்கு.

அத்தனை வலியிலும் அவனின் பெண் தான் அவளுக்கு முதன்மையாய் தெரிந்தாள்.

“நீ சாப்பிடியா இல்லையா? பாரு உடம்பு எப்படி நடுங்குதுன்னு. உன்னால நிக்கவே முடியல. முதல்ல வந்து உக்காரு” அவளை பிடித்து அமர வைக்க பார்க்க, அவனின் கைகளை தட்டிவிட்டவள், மனதை கல்லாக்கி கொண்டு அவனை காயப்படுத்த ஆரம்பித்தாள்.

திடிரென ரோஷினி தள்ளிவிடவும், கீழே விழப்பார்த்த கௌதம் கால்களுக்கு அழுத்தம் கொடுக்க வலி இரண்டு மடங்கானது.

இருவருக்குமே உடலளவிலும் உள்ளத்து அளவிலும் சோர்ந்து போய் தான் இருந்தனர். இருந்தும் அதனை இருவருமே வெளியே காட்டிக்க விரும்பவில்லை.

இருவருக்குமே அடுத்தவரது உடல்நிலை தான் முக்கியமாக பட்டது. வேறு எதுவும் கருத்தில் கொள்ள வில்லை.

அவனை காயம் கொள்ள செய்தால் தனக்கும் காயம் என தெரிந்தே அதனை செய்ய துணிந்தாள் பெண்.

“நீ எதுக்கு டா எங்க வாழ்க்கை குள்ள வந்து இப்படி எங்களை சித்திரவதை பண்ற..? உனக்கு அப்படி நாங்க செய்தோம் எங்க உயிரை எடுக்கிற?  உனக்கு பொண்ணு சுகம் தான் கேக்குத்துன்னா, ஊரு உலகத்துல வேற பொண்ணே இல்லையா? தனியா இருக்கிற பொண்ணு தானே கேட்க ஆளில்லைன்னு தானே என் வாழ்க்கையை நாசம் பண்ண பாக்குற? **** அங்க போய் காசை கொடுத்தா தானா வர போறாளுங்க. எதுக்கு டா என்னைய அப்படி பயன்படுத்திக்க பாக்குற ” அவனின் சட்டை காலரை பிடித்து உச்சஸ்தாயியில் கத்தினாள்.

ரோஷினி உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை சுக்குநூறாய் உடைய செய்தது. உடைய வைத்தாள் பெண். இன்னும் என்னவெல்லாமோ பேசி அவனை காயப்படுத்தினாள்.

தன்னை இவள் என்னவென்று நினைத்து விட்டாள். நான் அப்படியா இவளிடன் பழகினேன். எப்போதும் எட்ட நின்றே காதலித்த தன்னை இத்தனை கீழாக பேசி விட்டாளே மனம் ஊமையாய் கதறியது.

இருப்பினும் அவள் உடல்நிலையில் அக்கறை கொண்டு அவள் பேசியதை ஒதுக்கி வைத்தான்‌.

“ரோஷினி! இப்போ எதுவும் பேச வேணாம் மா. பாரு உன்னால நிக்கவே முடியல” அவளை நெருங்கி தாங்க முயல,

“உன் வாயால என் பேரை கூப்பிடாத. அதுக்கெல்லாம் உனக்கு தகுதியே கிடையாது. பாசம் காட்ற மாதிரி நடிச்சதெல்லாம் போதும். முதல்ல இங்கிருந்து வெளியே போ. உன் முகத்தை பார்க்க கூட எனக்கு சுத்தமா விருப்பமில்லை. உன்னை பார்க்க பார்க்க அப்படியே உடலெல்லாம் எரியுது.” வெஞ்சினம் கொண்டு கத்தினாள்.

அவள், அவள் நிலையிலே இல்லை.

அவளின் பேச்சில் மேலும் மேலும் உடைய, இப்போது அவனுக்கு ஒரு விடயம் மட்டும் தெரிய வேண்டி இருந்தது.

“உனக்கு என் மேல ஒரு முறை கூட காதல் வரலையா ரோஷினி?” ஒருவித நப்பாசை கலந்த பயத்துடனே கௌதம் கேட்க,

“நான் உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது. எனக்கு உங்க மேல எந்த விருப்பமும் கிடையாது. இப்போன்னு இல்ல எப்பவும் வராது. நான் உசுரோட இருக்கும் வரைக்கும் நான் உங்களுக்கு இல்லை” ஆக்ரோஷத்துடன் அதே நேரம் அழுத்தம் திருத்தமாய் சொன்னாள்.

அவளின் கூற்றில் நொறுங்கி போய் அப்படியே நின்றுவிட்டான் கௌதம்.

ரோஷினியுடனான தன் வாழ்க்கை பற்றிய கனவுகளை எல்லாம் கோட்டையாய் கட்டி வைத்திருக்க, அதையெல்லாம் வார்த்தை என்னும் புல்டோசர் கொண்டு தரமாட்டமாக்கினாள்.

அவனின் கண்கள் கலங்கி விட்டது. இதயம் இப்போதே துடிப்பை நிறுத்திவிட கூடாத என்று இருந்தது.

இருவருக்குமான தனிமையை வழங்கி வெளியே நின்றிருந்த இருவருக்குமே பேச்சு அங்கு தடிப்பது புரியவும் சற்று தள்ளி நின்றவர்கள், இறுதியில் ரோஷினியின் கத்தலில் உள்ளே நுழைந்திருந்தனர்.

வெற்றி நண்பனை தாங்கி கொண்டான்.

“ரோ…” என உள்ளே வந்த இனியாவை கண்டவள், அலட்டி கொள்ளவெல்லாம் இல்லை.

கற்சிலை போல் நின்றாள். நிற்கும் நிலை அவளது. கௌதமின் ஓய்ந்து போன முகத்தை காண சுகிக்கவில்லை பெண்ணிற்கு.

இருந்தும் என்ன செய்ய அவனின் உயிர் அவளுக்கு முக்கியமாயிற்றே.

“நீ என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறியா டி? நீயா இப்படி பேசுன…?” தன் தோழியா இது என அதிர்ச்சியில் வினவினாள்.

“நானே தான்…”

“அண்ணா உன்னைய உண்மையா காதலிக்குது டி. அது ஏன் உனக்கு புரியலை”

“ஒருத்தர் காதலை மறுத்த பின்பும், நீ என்னை காதலிக்கனும் வற்புறுத்தினா அதுக்கு பேர் அது தான் டி. உண்மையா காதலிச்சிருந்தா, நான் வேணாம்னு மறுத்த பிறகும் என் பின்னாடி வந்திருக்க மாட்டாங்க. ஆனா இங்க அப்படியேதும் நடக்கலையே” ரோஷினி பேச பேச கல்லாய் சமைந்து நின்றான் கௌதம். அவனின் உடல் இறுகி விரைத்தது.

அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட இனியா,” வாய்ன்னு ஒன்னு இருக்குன்னு பேசாத. என் அண்ணனோட காதல் கிடைக்க நீ கொடுத்து வச்சியிருக்கணும். ஷாஜகான் இறந்து போன மனைவிக்காக தாஜ்மகால் கட்டினாருன்னா, உன்னோட பாதுக்காப்புக்காக உனக்குன்னு ஒரு வீடு இருக்கனும்ன்ற நல்ல எண்ணத்துல அந்த வீட்டை வாங்கி போட்டாரு.

உன்னோட பாதுகாப்பு தான் அவருக்கு முக்கியம். தனியா பெண் குழந்தையை வச்சியிருக்கிற பொண்ணை எவனும் தப்பான பார்வை பார்த்திட கூடாதுன்னு, உனக்காக எல்லாமே பார்த்து பார்த்து செய்த வரையா நீ இப்படி பேசுற. மனசாட்சின்னு ஒன்னு இருக்கா உனக்கு” தோழியை விளாசி விட்டாள்.

அவள் பேச பேச கேட்டிருந்த ரோஷினி, தெனாவெட்டாய் நின்றாள்.

“இதெல்லாம் நான் கேக்கலையே. என்னைய நாலு பேர் தப்பா பாக்குறாங்க, எனக்கு பாதுகாப்பு கொடுங்கன்னு உங்க அண்ணன் கிட்ட வந்து நான் நிக்கலயே. அப்போ அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்”

இருவரின் பேச்சுவார்த்தைகளும் கௌதமை உடைய வைப்பது புரிந்து, மனைவியை அங்கிருந்து அகற்ற முயற்சி செய்தான்.

“இனியா… போதும் நிறுத்து. அவங்க அவங்களோட முடிவை சொல்லிட்டாங்க. நாம  கட்டாயப்படுத்தி கொடுக்க இவங்க குழந்தை இல்லை. ஒரு குழந்தைக்கு அம்மா. உன் அண்ணனை பார்ப்போம் முதல்ல…” மனைவியை அமைதிப் படுத்தினான் வெற்றி.

சாரலாய் தொடங்கிய மழை இவர்களின் காரசாரத்தில் இப்போது கனமழையாக பேய்ந்தது.

“எங்களை மன்னிச்சிடு மா. இவனோட இந்த பைத்தியக்காரத்தனமான காதல் உன்னை காயப்படுத்தி இருந்தா அவனுக்கு பதில் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். இனி கௌதம் உங்களை தொந்தரவு செய்ய மாட்டான். அதுக்கு நான் பொறுப்பு”

“ரொம்ப சந்தோஷம்.சனியன் விட்டது…”சொல்ல, அடிப்பட்ட பார்வையை ரோஷினி மீது வீச, முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இனியா தோழியை முறைத்து விட்டு இருவருடன் வெளியேறியிருந்தாள்.

மூவரும் கேட்டை கடக்கும் வரையில் திடமாய் நின்றவள், அப்படியே மண்டியிட்டு விட்டாள்.

கௌதம் என்ற நல்லவனை உயிரோடு கொன்றதற்காக சத்தமில்லாமல் கண்ணீர் சிந்தினாள்.

*******

வீட்டிற்குள் வந்ததும் நண்பனை அமர வைத்த வெற்றி, கால்களை வைப்பதற்கு ஒரு டேபிளை எடுத்து போட்டு அதில் கால்களை வைக்க உதவி செய்தான்.

வெளியில் வேறு மழை வலுவூட்டியது. இடியின் சத்தம் காதை கிழித்தன. ஆனால் அந்த வீட்டிலோ நிசப்தம் தான் ஆட்சி புரிந்தது.

இனியா தோழி பேசிய பேச்சினில் இருந்து இன்னும் வெளி வரவில்லை. அனைத்தையும் ஒதுக்கி வைத்த வெற்றி நண்பன் பக்கத்தில் அமர்ந்தான்.

“மச்சான்…”என்ற கௌதம் நண்பனின் தோளில் சாய்ந்து கண்ணீர் சிந்தினான்.

“டேய்!!!” பதறி விட்டான் வெற்றி.

“என்ன பண்ற நீ?”

“என்னால முடியல மச்சான். நான் நான் அந்த மாதிரியான ஒரு எண்ணத்தோட அவக்கிட்ட பழகல டா. கிட்ட தட்ட அவளுக்கு என்னைய ரெண்டு வருஷம் மேலயே தெரியுமே டா. அப்படி இருந்தும் இப்படி சொல்லிட்டாளே மச்சான்” ரோஷினி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவனை உயிரோடு கொன்று போட்டது.

“மச்சான், தங்கச்சிக்கு உன் காதல் புரியலை டா?” சொல்லும்போதே அங்கே வந்த இனியா கணவன் பேச்சை இடைமறித்தாள்.

“என்ன பேசுறீங்க நீங்க? அவ அங்க என்னென்ன பேசினான்னு கேட்டுட்டு தானே இருந்தீங்க, இருந்தும் எப்படி உங்களால இப்படி பேச முடியுது” கோபமாக கேட்க,

“அந்த பொண்ணோட சூழ்நிலை என்னென்னு தெரியாம நாம பேசக்கூடாது இனியா. அங்க வீடு இருந்த நிலை பார்த்த தானே ” இருவருக்குள்ளும் அங்கே ரோஷினி கௌதமை முன்னிறுத்தி பேச்சுக்கள் தடிக்க தொடங்கியது.

“எவ்வளவு பெரிய சூழ்நிலையா இருந்தாலும், ஒருத்தரை பொய்யான காரணத்தை காட்டி அக்யூஸ் பண்ணகூடாது வெற்றி.There is limit for everything. She Crossed that ” இருவரது வாக்குவாதமும் நீண்டு கொண்டே போனது. கூடவே மழையும்.

கௌதம் இதை எதையும் கண்டுக் கொள்ளவில்லை. அவனின் மனம் எல்லாம் அவள் சொல்லியதையே மேலும் மேலும் அசைப்போட்டு ரணமாக்கி கொண்டிருந்தது.

பித்து பிடித்தாற் போல் அமர்ந்திருந்தான். அவனால் இப்போதும் நம்ப முடியவில்லை தன் ரோஷினியா தன்னை இப்படி பேசியதென்று.

மனம் சொல்லொணா வலியில் துடியாய் துடித்தது.

தனது ப்ரியத்தை அவள் புரிந்து கொள்ளவில்லையே என வேதனைப்பட்டான் கௌதம்.

அடுத்து வந்த ஒருவாரம் உடல்நிலையின் காரணமாக விடுமுறை எடுத்தவன், வீட்டிலே அடைந்து கொண்டான்.

கௌதம் இங்கேயே இருந்தால் அது அவனிற்கு  ரணமாக தான் இருக்கும். அது அவனை எப்படியான நிலைக்கும் தள்ள வாய்ப்பிருக்கிறது என்று தோன்றியமையால் அவனை அழைத்து கொண்டு ஊருக்கு சென்றிருந்தாள் இனியா. அவளுடனே வெற்றியும் மகனும்.

அவர்கள் கிளம்புவதை உள்ளிருந்து பார்த்தவளுக்கு அப்போது தான் நிம்மதியான மூச்சே விட முடிந்தது. மகளின் புகைப்படத்தை இறுக்கணைத்து கொண்டாள்.

அவர்கள் மூவரையும் விட்டுட்டு ஊர் திரும்பி விட்டான் வெற்றி. இப்போது கௌதமின் நிகழ்ச்சியையும் அவனே பார்க்க வேண்டியதாகி போய்விட்டது.

பாண்டி கொடுத்த அவகாசம் முடிந்திருந்த நிலையில் மகளுக்காக அவளின் ஊருக்கு கிளம்ப ஆயத்தமானாள்.

ஆனால் அது கடவுளுக்கே பிடிக்கவில்லை போலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக மாறி வட தமிழகத்தை ஒரு புரட்டு புரட்டி எடுத்தது.

சென்னை, கடலூர், காஞ்சிபுரம் போன்ற ஊர்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்திருக்க, மகளை பிரிந்த துயரத்தில் காய்ச்சல் வந்து படுத்து விட்டாள் ரோஷினி.

கௌதமின் காதல் நிலை?

error: Content is protected !!