மகிஷவர்த்தினி 3

மகிஷவர்த்தினி 3

கோயம்புத்தூரில் புகழ் பெற்ற மால்கள் என்றால் அது ஃபன் மால் மற்றும் ப்ரூக்ஃபீல்ட் தான். இப்பொழுது மகிஷாவும் ஆதித்யாவும் புகழ்பெற்ற மால்களில் ஒன்றான ஃபன் மால்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

“ஆதி நான் தயார். நீ தயாராகிட்டா நாம போகலாம்.” ஆதியின் அறையின் வெளியே இருந்து மகி ஆதித்யாவிடம் வினவினாள்.

“ஒரு ஐந்து நிமிஷம் மகி, வந்துடுறேன்.” உள்ளே இருந்து ஆதித்யா குரல் கொடுக்க,

“சரி அப்போ நான் கீழே இருக்கிறேன். நீ சீக்கிரம் வந்துடு.” மகி கூறிவிட்டுத் திரும்ப, எதிரில் தன் அலைபேசியைப் பார்த்தபடி வந்த விஷ்வேஷ்வரன் மீது மோதி விட்டாள் மகி. அதில் அவனது அலைபேசி கீழே விழுக, மகி சாதாரணமாக,”சாரி தெரியாமல் மோதிட்டேன்.” என்று கூறிவிட்டு அவனது பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து நகர, விஷ்வேஷ் அவளைப் பார்த்து,”இடியட். கொஞ்சம் கூட மேனேர்ஸே இல்லை.” அவளுக்குக் கேட்கும் படி கூற, மகிஷாவிற்கு கோவம் வந்துவிட்டது.

“யாரைப் பார்த்து இடியட்னு சொல்ற? அதான் சாரி கேட்டேன்ல! அப்புறம் என்ன டாஷ்கு நீ என்னிடம் இப்படி பேசுற?” மகிஷாவும் பதிலுக்கு அவனிடம் எகிற,

“ம்ப்ச் உன்னிடம் பேச எனக்குச் சுத்தமா இஷ்டமில்லை. இங்கிருந்து போயிடு இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது.”

“என்ன செய்வ நீ? ஹான் உன்னிடம் பேச எனக்கு மட்டும் இஷ்டம்னு நினைக்கிறாயா? அதான் சாரி சொல்லிட்டேன் ல? (சிறு வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு பின் கூறினாள்) ஓ இப்போ புரிகிறது. உனக்குக் காது கேட்காதா! அதான் இப்படி பேசுறியா!” இகழ்ச்சியாகக் கூற, விஷ்வேஷ்வரனின் கோபம் அதிகமாகியது.

“ஏய் என்ன திமிரா? இதெல்லாம் வேற யாரிடமாவது வைத்துக் கொள். என்னிடம் வேண்டாம். அப்புறம் நீ தாங்கிக் கொள்ள முடியாது.” எச்சரிக்கையாக விஷ்வேஷ் கூற,

“அப்படி என்ன பண்றனு நானும் பார்க்கிறேன். என்னை என்ன சாதாரண பொண்ணுனு நினைத்தாயா? நீ மிரட்டினதும் நான் பயப்பட?” கோபமாக மகிஷா கேட்க, விஷவேஷ் ஏதோ கூற வருவதற்குள் ஆதித்யா தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர, அவர்கள் இருவரையும் அங்குப் பார்த்து,”என்ன இரண்டு பேரும் இங்கே நின்றுக் கொண்டிருக்கிறீர்கள்?”

“இங்கப் பார் ஆதி உன் தோழியை அமைதியாக இருக்கச் சொல். அப்படி இருக்க முடியாதுனா அப்புறம் நடக்கிற எதுவும் என் பொறுப்பு இல்லை.” தெளிவாக விஷ்வேஷ் கூற,

“நானும் பார்த்துட்டே இருக்கேன் அப்போதிலிருந்து நடக்கிற எதற்கும் நான் பொறுப்பாக முடியாதுனு சொல்லிட்டே இருக்க. அப்படி என்ன பண்ணுவனு நான் கண்டிப்பாகத் தெரிந்து கொண்டே ஆகனும். சொல்லு என்ன பண்ண போற?”

“இங்கப் பார் அவளும் இதே தான் சொல்லிட்டு இருக்கா. என்னைப் பத்தி உனக்கும் தெரியும் ஆதி. அவளை வாயை மூடிக் கொண்டு போகச் சொல்.”

மகி ஏதோ கூற வர, ஆதித்யா அவளைப் பேசவிடாமல், அவனே கேட்டான்,”ஹேய் இங்க என்ன நடக்குது? எதற்கு நீங்கள் இரண்டு பேரும் சண்டை இட்டுக் கொள்கிறீர்கள்?”

“ஆதி நான் உன்னிடம் கீழே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டுத் திரும்பும் போது அவரை இடித்துவிட்டேன். அதற்குத் தான் அவர் இவ்ளோ கத்துறார். பேச்சு மட்டும் தான், செயலில் ஒன்றுமில்லை.” ஏளனமாக அவனைப் பார்த்து மகிஷா கூற,

“இங்கப் பார் ஆதி இது தான் அவள் என்னிடம் கடைசியாகப் பேசும் வார்த்தையாக இருக்க வேண்டும். எவ்ளோ பெரிய விஷயத்தை நான் எனது அலைபேசியில் பார்த்துட்டு வந்தேன் தெரியுமா? ம்ப்ச் இவளால் எல்லாம் போச்சு.”

“என்னால எல்லாம் போச்சா! அதான் ஒன்றுக்கு இரண்டு கண்கள் அந்த கடவுள் உனக்குக் கொடுத்திருக்கார் அல்லவா அதை உபயோகப்படுத்தி எதிரில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து வர வேண்டியது தானே?” என்று மகிஷா கேட்க, விஷ்வேஷிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் மேலும் தப்பிருக்கிறது. ஆனால் அவனுக்கு மகிஷாவை முதல் பார்வையிலே பிடிக்கவில்லை. அதான் அவளிடம் எரிந்து விழுந்தான். இப்போது எதுவும் சொல்லாமல் அவளை முறைத்து மட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

“பார்த்தியா அவன் மேல் தப்பிருக்கப் போய் தான் அமைதியாகச் சென்றுவிட்டான்.” மகிஷா கூறியது கேட்டாலும் விஷ்வேஷ் அமைதியாகச் சென்றுவிட்டான். அவனுக்கு அவளுடன் பேசி நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை. அவனுக்கு முக்கிய வேலை ஒன்று இருந்தது அதனால் சென்றுவிட்டான்.

“சரி விடு மகி. அவன் எப்பவும் இப்படி தான். நீ வா நாம போகலாம்.” ஆதி அவளைச் சமாதானப்படுத்தி கீழே அழைத்துச் சென்றான்.

துர்கா ஆதியும் மகிஷாவும் வருவதைப் பார்த்து,”ஆதி வெளியே போறீங்களா?”

“ஆமா அம்மா. சும்மா மால்கு போய்விட்டு வரலாம்னு.”

“சரி ராஜா பார்த்துப் போய்விட்டு வாருங்கள்.”

“அம்மா நாங்க அங்க ஃபுட் கோரட்லயே சாப்பிட்டுக்கிறோம். எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம் அம்மா.”

“சரி ராஜா.” துர்கா கூற, இருவரும் வெளியே வந்தார்கள்.

“ஆதி உன் பெயர் ஆதித்யா தானா? அப்புறம் ஏன் உன்னுடைய அம்மா ராஜானு கூப்பிடுறாங்க?”

“ஹேய் அது அம்மா செல்லமா அப்படி தான் கூப்பிடுவாங்க. இந்த தங்கம், செல்லம் அப்படி.”

“ஓ ஓ அப்படியா! சரி.” மகி கூற, இருவரும் காரில் ஏறி ஃபன் மால் நோக்கிச் சென்றனர்.

ஃபன் மால் முன் மகியை இறக்கி விட்டுவிட்டு காரை பார்க் செய்ய ஆதி சென்றுவிட்டான். அப்பொழுது அவளது அலைபேசி ஒலியெழுப்ப எடுத்துப் பார்த்தாள். வாட்ஸப்பில் பென் அழைத்திருந்தான்.

“ஹேய் பென் சொல்லு.” உற்சாகமாகக் கேட்டாள் மகி.

“நான் நல்லா இருக்கிறேன். ஹன்னாவை பார்க்க வந்தேன். அவள் உன்னிடம் பேச வேண்டும் என்று கூறினாள். அதான் உன்னை அழைத்தேன்.”

“குடு குடு.” மகி கூற, பென் அலைபேசியை ஹன்னாவிடம் கொடுத்தான்.

“மகி என்னைப் பார்க்காமல் ஏன் இந்தியா போன?”

“நான் அதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டுத் தான் வந்தேன். இப்போது இப்படிக் கேட்டால் என்ன அர்த்தம்?”

“சரி விடு. நீ எப்போ வருவாய்?”

“நான் வந்த வேலை முடிந்துவிட்டாள் சீக்கிரமாக வந்துவிடுவேன்.” மகி சமாதானப்படுத்த,

“நான் உனக்காகக் காத்திட்டு இருப்பேன். சீக்கிரம் நீ வேலையை முடித்துக் கொண்டு வந்துரு.” என்று ஹன்னா கூறவும், பின் சிறிது நேரம் அவளது நண்பர்களுடன் பேசி முடிக்கவும் ஆதி வரவும் சரியாக இருந்தது.

“என்ன ஆதி இவ்ளோ தாமதம்? நீ வருவதற்குள் நான் ஜெர்மனில் இருக்கும் என் நண்பர்கள் அனைவருடனும் பேசிவிட்டேன்.”

“பார்க்கிங்கில் சிறிது கூட்டம் மகி. அதான் வருவதற்கு தாமதமாகி விட்டது. சரி வா போகலாம்.” என்று ஆதி கூறி அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

இருவரும் பேசியபடியே ஃபன் மால் ஐ சுற்றிப் பார்த்தார்கள்.

“உன் நண்பர்கள் என்ன சொன்னாங்க மகி.”

“அவங்க என்னை மிஸ் பண்ணறாங்களாம்.”

“ஓ! உன் நண்பர்கள் பத்தி சொல்லேன்.” ஆர்வமாக ஆதித்யா கேட்க,

“நாங்க ஏழு பேர். சின்ன வயசுல இருந்தே நாங்க நண்பர்கள் தான். இப்போ எல்லாரும் சேர்ந்து ஒரு உணவகம் அங்க வைத்திருக்கிறோம். அதுவும் இந்திய உணவகம். நாங்கள் ஒருவரை ஒருவர் என்றும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இப்போ நான் அவங்களை ரொம்ப மிஸ் அவங்களும் தான்.”

“நண்பர்கள் நம்ம கூட இருக்கும் போது எப்பவும் ஜாலியாக இருக்கும்ல?”

“ஆமா. ஏன் ஒரு மாதிரி சோகமா சொல்ற?”

“அது ஒன்றுமில்லை. சில பிரச்சனைனால என்னால என்னுடைய நண்பர்களோட தொடர்பு வைத்துக் கொள்ள முடியவில்லை.”

“ஓ என்ன பிரச்சனை?”

“நான் காலேஜ் படிக்கும் போது நடந்தது. ஒரு பிரச்சனை, அதுல நான் காலேஜ் மாற வேண்டிய சூழ்நிலை. அதே போல் என்னுடைய நண்பர்களுடன் தொடர்பும் விட்டுப் போயிடுச்சு.”

“ஓ! சரி விடு ஆதி. நீ ஏன் அவங்களை தேடலை?”

“தேடலைனு இல்லை. நான் முயற்சி பண்ணேன். ஆனால் முடியலை. சரி விடு மகி பார்த்துக்கலாம் நாம இப்போ வெளில வந்தது சந்தோஷமாக இருக்க. அதை மட்டும் செய்வோம்.” பேச்சை மாற்றும் விதமாக ஆதித்யா கூற, மகியும் புரிந்து கொண்டு வேறு பேசினாள்.

அவர்களை ஒரு ஜோடிக் கண்கள் கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்க்காமல் அவர்கள் இருவரும் சந்தோஷமாக அடித்துப் பேசிக் கொண்டே சென்றனர்.

“சரி ஆதி போதும் சுத்துனது. எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிடலாமா?”

“சூயர் வா நாம ஃபுட் கோர்ட் போகலாம்.” ஆதி அவளை அழைத்துக் கொண்டு சென்றான். அந்த நபரும் இவர்களின் பின்னாலே சென்றார்.

ஆதியும் மகியும் தங்களுக்குத் தேவையான உணவை ஆர்டர் செய்து வாங்கி வந்தனர். பின்னர் இருவரும் அதை ஒருவருக்கு ஒருவர் ஷேர் செய்து சாப்பிட்டதையும் அந்த நபர் பார்த்துக் கொண்டு இருந்தார். அது மட்டுமில்லை அவர்களின் ஒவ்வொரு அசைவையும் தன்னுடைய அலைபேசியில் படமாகவும் எடுத்துக் கொண்டிருந்தார். இது எதுவும் அறியாமல் இருவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் சுற்றிப் பார்த்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினர்.

வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் மகியும் ஆதியும். துர்கா இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அவரைப் பார்த்ததும் ஆதி அவரிடம் வந்து,”என்ன அம்மா இன்னும் தூங்கலையா நீங்க?”

“இல்லை ராஜா. உனக்காகத் தான் உட்கார்ந்திருக்கிறேன்.”

“என்ன அம்மா நீங்க? நான் தான் சொன்னேன்ல வர தாமதமாகும்னு. அப்புறம் எதற்கு எனக்காக நீங்க காத்துட்டு இருக்கீங்க?”

“நீ சாப்பிட்டியா இல்லையானு தெரியாமல் எப்படி ராஜா நான் தூங்குவேன்.”

“அம்மா நான் சாப்பிட்டேன். நீங்க போய் தூங்குங்க. மாத்திரை எல்லாம் சாப்பிட்டீங்களா?”

“சாப்பிட்டேன் ராஜா. சரி போய் இரண்டு பேரும் தூங்குங்க.” துர்கா கூற, இருவரும் அவருக்கு இரவு வணக்கம் கூறிவிட்டு தங்களது அறைக்குச் சென்றனர்.

“சரி மகி காலைல பார்க்கலாம்.” ஆதி அவளிடம் கூற,

“நாளைக்குக் காலைல எதாவது வேலை இருக்கா உனக்கு?” மகி கேட்க,

“நாளைக்கு எதுவும் இல்லை, காலைல எழுந்து பக்கத்துல இருக்கிற பார்க்ல ஜாக்கிங் போவேன். அதுக்கு அப்புறம் நாளைக்கு எனக்கு எந்த வேலையும் இல்லை. மதியம் தான் போகனும்.”

“அப்போ நானும் வரேன் ஆதி ஜாகிங் போக. மறக்காமல் என்னைக் கூப்பிட்டு போ.” என்று மகி கூற, ஆதி சரியென்று தலையாட்டி விட்டு அவனது அறைக்குச் சென்றான். மகியும் அவளது அறைக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு படுக்கையில் படுத்தாள்.

பத்து வயது ஸ்ரீயுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் பத்து வயது மகிஷா. அப்பொழுது அங்கு வந்தனர் பென், எல்சா மற்றும் ஜோனஸ்.

“எங்களையும் விளையாட்டுக்கு சேர்த்துக்குவீங்களா?” பென் கேட்க,

“அதலாம் முடியாது.” என்று மகிஷா கூற,

“கிஷூ அவங்களும் நம்ம கூட விளையாடட்டும் எனக்காக ப்ளீஸ்.” என்று ஸ்ரீ இவளிடம் கேட்க,

“சரி என் ஸ்ரீ சொல்றனால உங்களைச் சேர்த்துக்கிறேன்.” என்று பெரிய மனது செய்து மகிஷா கூற, அவர்கள் மூவரும் இவர்கள் இருவருடன் சேர்ந்து அன்றைய தினத்தில் இருந்து சேர்ந்து விளையாடினர்.

தீடிரென கதவு தட்டப்படும் சத்தத்தால் தன் தூக்கம் கலைந்து எழுந்த மகிஷாவிற்கு அப்பொழுது தான் புரிந்தது அது எப்பொழுதும் போல் வரும் கனவு என்று.

“இது சரிவராது. உன்னை நான் நினைக்கக் கூடாதுனு எவ்ளோ யோசித்தாலும் நீ என் கனவுல வந்துட்டே இருக்க. இதற்கு ஒரே தீர்வு நான் இந்தியா வந்த வேலையை முடித்துக் கொண்டு ஜெர்மன் போறது மட்டும் தான்.” தீர்மானமாக முடிவு எடுத்துக் கொண்டு, தன்னை சரிப்படுத்திக் கொண்டு எழுந்து சென்று கதவைத் திறக்க எதிரில் ஒரு பெண் நின்றிருந்தாள். அவள் இவளைக் கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

-வருவாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!