மனதோடு மனதாக -12

மனதோடு மனதாக -12
12
மறுநாள் காலையில், ஆர்யன் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, கண் விழித்து அவனைப் பார்த்தவளுக்கு, இதழ்களில் புன்னகை விரிந்தது. இரவு அவன் காட்டிய அன்பும் அக்கறையும், அதைத் தாண்டி, ஒரு மனைவியாக அவன் தனக்குத் தந்த மரியாதையையும் நினைத்துப் பார்த்தவள், புன்னகையுடன் குளிக்கச் சென்றாள்..
குளித்துவிட்டு சொட்டச் சொட்ட ஈரத்துடன் நைட்டியை அணிந்து வந்து, தனது பெட்டியைக் குடைந்தவள், ‘அம்மா.. டவல் வைக்கவே இல்ல..’ என்று சிணுங்கிக் கொண்டே, என்ன செய்யலாம் என்று யோசித்தவள்,
‘அலமாரில மாமாவுது இருக்குமே எடுத்துக்கலாம்..’ என்று நினைத்தவள், தலையை துவட்டுவதற்காக அங்கிருந்த அலமாரியைத் திறந்து, அதில் இருந்து ஒரு துவாலையை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டு,
‘சுடிதாரா? புடவையா?’ பூரணி கொண்டு வந்திருந்த பெட்டியை திறந்து வைத்துக் கொண்டு யோசித்து
‘புடவையே கட்டுவோம்.. மாமா ஊருக்கு வேற போகணும்ன்னு சொன்னாரே..’ என்று யோசித்தவள், புடவையை மாற்றிக் கொண்டு, அந்த இரவு விளக்கின் ஒளியிலேயே பொட்டிட்டுக் கொண்டு வெளியில் வந்தவளைப் பார்த்த பிருந்தா,
“வாடா ராஜாத்தி.. என்ன அதுக்குள்ள எழுந்துட்ட? உனக்கும் புது இடம்ன்னு தூக்கம் வரலையா?” என்று கேட்க,
“எப்பவுமே அம்மா கூட இந்த நேரத்துல முழிச்சிடுவேன் அத்தை.. அது தான் முழிப்பு வந்திருச்சு..” அவள் சொல்லிக் கொண்டிருக்க,
“பிலேட்டட் ஹாப்பி பர்த்டே வெண்ணிலா..” என்றபடி சேகர் கைக் கொடுத்தான்.
“தாங்க்ஸ் அண்ணா..” என்றவளின் கையில் காபியைக் கொடுத்தவர்,
“உனக்கு பிறந்த நாளாம்மா? உங்க அம்மா சொல்லவே இல்லையே?” யோசனையோடு பிருந்தா கேட்க, முகத்தில் சிறு நாணமும் மகிழ்ச்சியும் ஒட்டிக் கொள்ள,
“ஆமா அத்தை.. நேத்து தான்.. எனக்கே மறந்து போச்சு.. அண்ணா தான் மாமாவுக்கு மெசேஜ் பண்ணி சொல்லி இருக்கான்.. மாமா சப்ரைசா ராத்திரி கேக் வாங்கி கட் பண்ணச் சொன்னார்.. மீதியை ப்ரிட்ஜ்ல வச்சிருக்கார் அத்தை.. காபி குடிச்சிட்டு சாப்பிடலாம்..” காபியை உறிஞ்சிக் கொண்டே சொன்னவளின் கன்னத்தைத் தட்டியவர்,
“சந்தோஷமா நல்லா இருடா ராஜாத்தி..” என்று வாழ்த்தவும்,
“தேங்க்ஸ் அத்தை.. காபி சூப்பரா இருக்கு..” என்று குடித்துக் கொண்டிருந்தவளை நிறைவாய் பார்த்த பிருந்தா,
“காபி குடிச்சிட்டு விளக்கை ஏத்தும்மா.. அவனையும் எழுப்பு.. நேரத்தோட சாப்பிட்டு ஊருக்கு கிளம்பணும்.. சாயந்திரம் நம்ம மில் ஆளுங்களுக்கு எல்லாம் விருந்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கு..” என்றபடி காலை உணவை கவனித்தார்..
கண் விழித்த ஆர்யன், சோம்பல் முறித்துக் கொண்டே அருகில் வெண்ணிலாவைத் தேட, அங்கு அவளைக் காணாமல், “ஓ.. மேடம் அதுக்குள்ள எழுந்துட்டாளா?” என்று யோசித்து, வெளியில் எட்டிப்பார்த்தான். தனது அன்னைக் கொடுத்த காபியை அவள் உறிஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்த்து புன்னகையுடன் குளிக்கச் சென்றான்..
குளித்துவிட்டு வெளியில் வரும் நேரம் விஷ்ணுப்ரியாவும் குளித்து தயாராகி வந்தவள், வெண்ணிலாவைப் பார்த்து திகைப்புடன் பிருந்தாவை சுரண்டினாள்.
“என்னடி? வேலை இருக்கு..” அவர் திரும்ப,
“ம்மா.. அவ ஆரியோட டவலை தலையில கட்டி இருக்கா.. அவன் வந்து ஏதாவது சொல்லிடப் போறான்..” அவள் பதற, பிருந்தா அவளைக் கவலையுடன் பார்த்தார்..
ஆர்யனுக்கு தனது டவலை மற்றவர் பயன்படுத்துவது பிடிக்காது.. அவனும் மற்றவர் டவலை பயன்படுத்த மாட்டான்.. அதில் மட்டும் சிறு வயதில் இருந்தே ஏதோ ஒதுக்கம்.. ப்ரியா எடுத்தாலும், அவளை கோவித்துக் கொள்வான்.. இப்பொழுது வெண்ணிலா அவனது டவலை தலையில் கட்டி இருக்கவும், ப்ரியாவிற்கும் பிருந்தாவிற்கும் சிறிது பதட்டம் தொற்றிக் கொண்டது..
“வெண்ணிலா.. இன்னும் எவ்வளவு நேரம் இப்படி ஈரத் தலையோட இருப்ப.. தலையை நல்லா துவட்டிக்கிட்டு டவலை வாஷிங்மெஷின்ல போட்டுடு.. நாளைக்கு வந்து துவைச்சுக்கலாம்..” அவன் வருவதற்குள் அந்த டவலை மறைத்துவிட அவர் நினைக்க, சரியாக அந்த நேரம் ஆர்யன் வரவும், இருவருமே அவனைப் பார்த்து பேந்த விழித்தனர்..
பிருந்தா சொன்னது போல விளக்கை ஏற்றிவிட்டு, அங்கிருந்த ஊதுபத்தியை அவள் ஏற்றி பொருத்திக் கொண்டிருக்க, அங்கு வந்தவனோ, சாதாரணமாக அவளது தலையை தொட்டுப் பார்த்து,
“தலையை ஒழுங்கா துவட்டலையா? இவ்வளவு ஈரமா இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே அவளது தலையில் இருந்து துவாலையை உருவி, ஊதுபத்தியை வாங்கி அதன் ஸ்டாண்ட்டில் பொருத்திவிட்டு, அவளது கையில் அந்த டவலைக் கொடுத்து,
“போ.. போய் ஒழுங்கா துடைச்சிட்டு காய வை.. சளி பிடிச்சுக்கப் போகுது.. லீவ் போட என்ன எல்லாம் பிளான் பண்றாடா..” என்று கேலி செய்ய, வெண்ணிலா அவனுக்கு அழகு காட்டிவிட்டு பால்கனிக்குச் செல்ல, அவனை விநோதமாக பார்த்துக் கொண்டே காபியை நீட்டிய பிருந்தாவிடம் இருந்து கப்பை வாங்கிக் கொண்டவன், வெண்ணிலாவின் பின்னால் பால்கனிக்குச் சென்றான்..
“என்னம்மா இவன் இப்படி மாறிட்டான்? அவளை ஏதாவது சொல்லிடப் போறான்னு பார்த்தா.. தலையை துவட்டுன்னு அவ கையிலேயே டவலைக் கொடுக்கறான்?” ப்ரியா வாயைப் பிளக்க, நிறைவாக புன்னகைத்த பிருந்தா,
“போடி.. போய் வேலையைப் பாரு.. வந்துட்டா என் பிள்ளையை குறை சொல்லிக்கிட்டு..” எனவும், பழிப்புக் காட்டிவிட்டு தனது காபியுடன் ப்ரியா நகர, புன்னகையுடன் பிருந்தா சமையல் வேலையை முடித்தார்..
வெண்ணிலாவின் பின்னோடு பால்கனிக்குச் சென்றவன், “குட் மார்னிங் பொண்டாட்டி.. என்ன சீக்கிரம் எழுந்து குளிச்சிட்ட? தூக்கம் வரலையா?” அவனது கேள்வியில் அவனைத் திரும்பிப் பார்த்தவளின் கூந்தல், அவளது முகத்தில் ஒட்டிக் கொள்ள, காபியை உறிஞ்சிக் கொண்டே அவளது முகத்தில் இருந்த கூந்தலை எடுத்து விட்டவனின் பார்வையை சந்திக்க முடியாமல் வெண்ணிலா தலையைக் குனிந்துக் கொள்ள, அவளது நாடியைப் பிடித்து நிமிர்த்தியவன்,
“ஒழுங்கா தூங்கினையா? இடம் வசதியா இருந்ததா?” என்று கேட்க,
“நல்லா தூங்கிட்டேன் மாமா.. எப்பவும் எழர டைம்க்கு விழிப்பு வந்திருச்சு..” எனவும், அவளது கன்னத்தை வருடியவன்,
“நாளைக்கு ஒரு நாளைக்கு தேவையான திங்க்ஸ் மட்டும் எடுத்துக்கோ.. நாளைக்கு மதியம் கிளம்பி வந்துடலாம்.. அங்க ஒரு பேக் எடுத்து வச்சிருக்கேன்.. அதுல உனக்கு தேவையானதை எடுத்து வச்சிடு.. சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பலாம்.. அம்மாவுக்கு போன் செய்து சொல்லிடு..” என்றவன், சேகர் வரவும், அவளிடம் தலையசைத்து விட்டு, அவனுடன் பேசச் சென்றான்.
உணவை முடித்த பிறகு, வெண்ணிலாவையும் ஆர்யனையும் அழைத்துக் கொண்டு, பிருந்தா மகிழ்ச்சியுடன் தனது ஊருக்குப் புறப்பட்டார்.
சேகர் காரை எடுக்க, ஆர்யனின் அருகே வெண்ணிலாவை அமர்த்தி விட்டு, அவளது அருகே பிருந்தா அமர்ந்துக் கொள்ள, கவின், “நான் மாமா மடியில உட்காருவேன்..” என்று அடம் செய்துக் கொண்டு, அவனது மடியில் அமரவும்,
“என் மடிக்கு வாடா.. நாம கதை பேசிக்கிட்டே வரலாம்..” என்ற வெண்ணிலா, அவனைத் தனது மடியில் அமர வைக்க முயன்றாள்..
அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்துக் கொண்டு, அவள் புறம் சாய்ந்தவன், “இறங்கும் பொழுது உன் புடவையை கையில அள்ளிப் பிடிச்சுக்கிட்டு தான் இறங்கனும்.. ஆடி ஆடி புடவையை கழட்டி விட்டிருவான்.. அதனால தான் ப்ரியா உஷாரா சுடிதார் போட்டு வரா.” என்று சிரித்துக் கொண்டே சொல்ல,
“ஹான்..” என்று அவனைப் பார்த்தவள், ஆர்யன் சிரிக்கவும்,
“சரி.. அப்போ உங்க மடியிலேயே வச்சிக்கோங்க.. நான் அவன் கூட பேசிட்டு வரேன்..” என்றவள், கவினுடன் பேசிக் கொண்டே வர, சிறிது நேரத்திலேயே கவின் உறங்கியும் போனான்..
“அம்மாவுக்கு பேசிட்டயா?” ஆர்யன் மெல்லிய குரலில் கேட்கவும்,
“ஹையோ மறந்துட்டேன்..” என்றவள், தனது அன்னைக்கு அழைத்தாள்..
தனது அன்னைக்கு அழைத்தவள், அவர் எடுத்தும், “ஹலோ.. அம்மா..” எனவும்,
“நிலாக்குட்டி… என்னடா செய்யற? ராத்திரி தூங்கினயா? சாப்பிடயா?” அன்பாக பூரணி கேட்க,
“அம்மா.. நான் அத்தை கூட மாமாவோட ஊருக்கு போயிட்டு வரேன்மா.. மாமா போகலாமான்னு கேட்டாங்க.. நான் சரின்னு சொல்லிட்டேன்.. நாளைக்கு கிளம்பி நம்ம வீட்டுக்கு வரோம்..” என்று அவர்களுடன் ஊருக்கு செல்லும் விஷயத்தைச் சொல்லிவிட்டு,
“ஹான்.. தூங்கினேன்மா.. சாப்பிட்டேன்.. அத்தை சூப்பரா சமைக்கிறாங்க.. ரொம்ப நல்லா இருந்துச்சு..” என்று சொல்லவும், அவளது பதிலைக் கேட்ட பிருந்தா அவளை புன்னகையுடன் பார்த்தார்..
பூரணிக்கோ அவளது குரலைக் கேட்டு நிம்மதி பிறந்தது.. இரவில் அவளைத் தனித்து விட்டு வந்ததில் இருந்து, இருந்த கவலை மொத்தமாக பறந்து போனதில் நிம்மதி கொண்டார்..
“சரிடா கண்ணா.. பத்திரமா போயிட்டு வாங்க.. நேத்தே அண்ணி என்கிட்டே சொல்லிட்டாங்க.. அங்க போய் சமத்தா இருக்கணும் என்ன?” பூரணி கேட்கவும்,
“ஹ்ம்ம்.. இருக்கேன் மா.. போட்டோ எல்லாம் பார்த்தீங்களா?” வெண்ணிலா கேட்க,
“இல்லடா.. ராத்திரி பெரியம்மா கூட இருந்தேன்.. இப்போ தான் நம்ம வீட்டுக்கு வந்தேன்..” பூரணியின் பதிலில், தனது பெரியன்னையை நினைத்து கவலைப் பிறந்தது..
“பெரியம்மாவும் பெரியப்பாவும் எப்படிம்மா இருக்காங்க? இன்னும் பெரியம்மா அழுதுட்டு இருக்காங்களா?” கவலையாக அவள் கேட்க,
“எப்படி நிலா அழாம இருப்பாங்க.. அவ நேத்து கல்யாணம் பண்ணிக்கிட்ட போட்டோவ அக்காவுக்கு அனுப்பி இருக்கா. அதைப் பார்த்ததுல இருந்தே அக்கா ஒரே அழுக.. பெரியப்பா உடைஞ்சே போயிட்டார்.. அவ ஏற்கனவே விசா, ப்ளைட் டிக்கெட் எல்லாம் ரெடியா எடுத்து வச்சிருக்கா நிலா.. இன்னைக்கு அந்தப் பையன் கூட துபாய்க்கு போறாளாம். அந்த அளவுக்கு அவ ப்ளான் பண்ணி இருக்கா.. அது தான் உங்க பெரியப்பாவுக்கு ரொம்ப தாங்கல நிலா.. பாவம். ராத்திரி அவங்க மூணு பேருமே சாப்பிடவே இல்ல.. பெரியம்மாவுக்கு உன்னை நினைச்சு வேற கவலை.. இவளோட சுயநலத்துனால எதிரே பார்க்காம அந்தச் சின்னப் பொண்ணுக்கு கல்யாணம் செய்யும்படியா ஆச்சேன்னு. அவ எப்படி திடீர்ன்னு குடும்ப பாரத்தை சமாளிக்கப் போறாளோன்னு அதும் சேர்த்து புலம்பிட்டாங்க.. இப்போ தான் அவங்களை சமாதானப்படுத்தி டிபன் சாப்பிட வச்சி, மாத்திரை கொடுத்து தூங்க வச்சிட்டு உன்னோட திங்க்ஸ் எல்லாம் பாக் பண்ண வந்தேன்.. நீ நாளைக்கு வரும்போது கொடுத்து விடணும் இல்ல.. அதோட மாப்பிள்ளை நம்ம வீட்டுக்கு முதல்முதல்ல வரார்ல.. கொஞ்சம் ஒழிச்சு வைக்கிறேன்..” பூரணி வழமை போல வெண்ணிலாவிடம் புலம்பவும், வெண்ணிலா ஆர்யனை திரும்பிப் பார்த்தாள்.
அவன் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க, மறுப்பாக தலையசைத்தவள், “அம்மா.. மாமா அத்தை எல்லாம் என்னை நல்லா பார்த்துக்கறாங்க.. பெரியம்மாவை கவலைப்பட வேண்டாம்ன்னு சொல்லும்மா.. நான் அனுப்பின போட்டோவ அவங்க கிட்ட காட்டு..” தனது அன்னையை சமாதானம் செய்தாள்.
“சரிடி.. எனக்கு வேலை இருக்கு.. முதல்ல நான் உன்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைக்கணும். அப்பறம் தான் பார்க்கணும். திலீபனுக்கு அனுப்பினையா?” அவளிடம் பேசிக் கொண்டே,
“திலீபா.. மேல இருந்து அந்த பெட்டியை எடுத்துக் கொடு..” என்ற குரல் கேட்க, மீண்டும் மீண்டும் அவரது கவனம் முழுவதும் அவளது பொருட்களை பேக் பண்ணுவதிலேயே இருக்க, தொண்டையடைக்க,
“சரிம்மா.. பார்த்துட்டு மெசேஜ் போடு.. நான் போனை வைக்கிறேன்..” என்றவள், ஆர்யனைப் பார்க்க, அவளது மனநிலை புரிந்தார் போல, அவளது விரலோடு விரல் கோர்த்து அழுத்திக் கொடுத்தான்..
“அம்மா என்ன சொல்றாங்க? குழந்தையை விட்டு இருக்க முடியலையா?” வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சேகர் கேலி செய்ய,
“நீங்க வேற.. அதெல்லாம் சொல்லவே இல்ல.. நாளைக்கு எனக்கு கொடுத்து அனுப்ப என் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைக்க வந்தாங்களாம்.. அவங்களுக்கு நான் பேசறதுல கவனமே இல்ல..” என்றவள், ஆர்யனின் முகத்தைப் பார்த்து,
“இந்த அம்மாங்களையே புரிஞ்சிக்க முடியல மாமா. முன்ன எல்லாம் நான் அண்ணா கூட படம் பார்த்துட்டு அங்கேயே தூங்கறேன்னு சொன்னா கூட, ‘என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியாது. இங்கயே வந்திடு’ன்னு சீன் போடுவாங்க.. இப்போ பாருங்க.. திங்க்ஸ் பேக் பண்றாங்களாம்..” என்று சொல்லச் சொல்ல, அவளது கண்கள் கலங்க, ஆர்யன் அவளது கையை தட்டிக் கொடுத்தான்..
அதற்கு என்ன பதில் சொல்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க, “அட நீ வேற ஏன் வெண்ணிலா.. நான் ப்ரியாவை கல்யாணம் பண்ணி அதே வீட்டுக்கு தான் கூட்டிட்டு வரேன். எங்க அக்கா கல்யாணத்துக்கு போறதுக்கு முன்னயே ப்ரியாவோட திங்க்ஸ் எல்லாம் யோசிச்சு யோசிச்சு எடுத்து மாடியில கொண்டு வந்து வச்சிட்டாங்க தெரியுமா? அதுக்கே இனிமே நான் உன் பொண்ணு இல்லையாம்மான்னு இவ என்ன அழுக அழுதா தெரியுமா?” சேகர் பெரிதாக சொல்லவும், வெண்ணிலா புரியாமல் ஆர்யனைப் பார்க்க,
அவன் சிரித்து, “மாமா.. எங்க அம்மாவோட தம்பி.. என் தாய் மாமா.. ப்ரியா கல்யாணம் பண்றதுக்கு முன்னாலையும் அதே வீட்ல தான் இருந்தா.. கல்யாணம் பண்ணியும் அதே வீட்ல தான் இருக்கா.. என்ன மாடியில இருக்கா.. அவ்வளவு தான்.. அதுக்கே எங்க அம்மா திங்க்ஸ் பேக் பண்ணிட்டாங்க… இவ திங்க்ஸ் எல்லாம் கொண்டு அங்க மாடியில வச்சிடாங்கன்னு அவ்வளவு அலப்பறை பண்ணினா..” இருவரும் அவளுக்கு சிரிப்பை மூட்டி சிரிக்க வைப்பதாக நினைத்து, அவளது மனத்தாங்களுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்க, பிருந்தா அதை புரிந்துக் கொண்டார்.
“டேய் ரெண்டு பேரும் சும்மா இருங்கடா..” என்று இருவரையும் அடக்கியவர்,
“அது அப்படி இல்லம்மா.. அம்மாங்களுக்கு எல்லாம் பிள்ளைங்க கூட இருக்கற வரை தான் குழந்தைங்க.. எப்போ கல்யாணம் செய்துக் கொடுத்துட்டாங்களோ அப்போவே அவ இன்னொரு வீட்டை நிர்வகிக்கப் போற பொண்ணு.. அவளோட பொறுப்பை ஒருத்தர் கையில பிடிச்சுக் கொடுத்த அப்பறம் மனசுல ஒரு பெரிய விஷயம் சாதிச்ச உணர்வு வரும்.. அவங்க ஏன் உன்னோட பொருள் எல்லாம் எடுத்து வைக்கணும்ன்னு அவ்வளவு கவனமா இருக்காங்கன்னா.. நீ சின்னச் சின்னப் பொருள் கூட இல்லாம புது இடத்துல தடுமாறிடக் கூடாதுன்னு தான்..
இப்போ தானே கல்யாணம் செய்து ஒரு புது இடத்துக்கு வந்திருக்க.. ஏதாவது தேவைன்னா உனக்கு அவன்கிட்ட கேட்க கஷ்டமா, தயக்கமா இருக்கும் இல்லையா? அதனால கொஞ்ச நாள் நீ இங்க செட் ஆகற வரை நீ எதுக்கும் தடுமாறிடக் கூடாதுன்னு அவங்களுக்கு இருக்கும் இல்லையா? அது தான்.. எல்லாமே உனக்காக தான்மா..” அவளது தலையை வருடிக் கொண்டே சொன்னவர்,
“அவங்க மனசுல இப்போ ஆயிரம் விஷயம் ஓடும்.. உன்னை விட்டுட்டு அவங்க என்ன ஜாலியா இருப்பாங்கன்னு நினைக்கிறயாடாம்மா? அதெல்லாம் அம்மாவா ஆகும் போது தான் உங்களுக்குப் புரியும்..” பிருந்தா சொல்லச் சொல்ல, அவளது அருகில் இருந்த அவரது தோளில் சாய்ந்தவள்,
“முடியாது அத்தை.. நான் பிறந்ததுல இருந்தே எனக்காக வாழ்ந்தவங்க அவங்க.. இப்போ கொஞ்சம் கூட ஃபீல் பண்ணாம என்னோட திங்க்ஸ் எல்லாம் பாக் பண்றேன்னு சொல்லவும் ஒரு மாதிரி ஆகிடுச்சு..” என்று சொல்லவும், பிருந்தா அவளது கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார்.
சிறிது நேரத்திலேயே அவள் உறங்கியும் போக, உறக்கத்தில் ஆர்யனின் தோளில் வாகாக சாய்ந்துக் கொண்டவளைப் பார்த்த சேகர், கண்ணாடியின் வழியாக ஆர்யனைப் பார்க்க, ஒரு புன்னகையுடன் அவன் வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான்.
ஊருக்குச் சென்று சற்று ஓய்வெடுத்ததும், சுபத்ரா அவளுக்கு திருமணத்திற்காக எடுத்திருந்த புடவையை அணிந்துக் கொண்டு விருந்திற்கு அவள் தயாராகி இருக்க, அவளை ரசித்துக் கொண்டே ஆர்யன் விருந்தை கவனித்துக் கொண்டான்..
‘தம்பிக்கு இந்த பொண்ணு பொருத்தமா இருக்கா.. ஜோடிப்பொருத்தம் ப்ரமாதம்.. நம்ம தம்பி போலவே அழகா சிரிச்ச முகமா இருக்கும்மா..’ வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அதையே சொல்ல, பிருந்தாவின் மனதினில் அவ்வளவு திருப்தி..
சிலர் ஆர்யனிடமே வந்து, “தம்பி மனசுக்கு ஏத்த மகராசியா வந்திருக்கா.. ரெண்டு பேர் முகத்தையும் பார்க்கும்போதே சந்தோஷமா இருக்கு. பிள்ளைக் குட்டிங்களோட சந்தோஷமா இருங்க..” என்று வாழ்த்திவிட்டுப் போகவும், அதை பிருந்தாவின் அருகில் இருந்து கேட்ட வெண்ணிலாவின் முகம் சிவக்க, அவனது மனதோ நிறைவாய் இருந்தது..
விருந்து முடிந்ததும், தனது அன்னை பூரணியைச் சுற்றி வருவது போல பிருந்தாவுடனும், ப்ரியாவுடனுமே வெண்ணிலா சுற்றிக் கொண்டிருக்க, சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த ஆர்யன், அவளது கண்களில் படாமல் நழுவிச் சென்றான்..
வேலை செய்பவர்கள் விருந்து நடந்த இடத்தை சுத்தம் செய்ததும், அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் நிறைவாக, புதுத் துணிகளை கைகளில் கொடுத்து அனுப்பிய பிறகு தான் அனைவருக்குமே உடலின் சோர்வு தெரிந்தது..
“அம்மா.. கவின் தூங்கிட்டான்.. நான் அவனைத் தூக்கிட்டு மாடிக்கு போறன்.. காலையில பார்க்கலாம்.. பேசாம அப்படியே வச்சிட்டு படுங்க.. இழுத்து விட்டுக்கிட்டு எதுவும் செஞ்சிட்டு இருக்காதீங்க.. காலையில நான் ஹெல்ப் பண்றேன்..” பிருந்தாவிடம் சொன்னவள்,
“வெண்ணிலா.. நீயும் போய் படு.. நாளைக்கு மறுபடியும் ஊருக்கு வேற போகணும்.. மெதுவா எழுந்திருங்க போதும்.. அவனையும் கூப்பிடு.. இல்ல அவரோட விடிய விடிய பேசிக்கிட்டு நின்னுட்டு இருப்பான்.. குட் நைட் வெண்ணிலா..” என்றபடி அவள் கவினைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு ஏறிச் செல்ல, வெண்ணிலா அங்கு ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்த சேகரின் அருகில் சென்று தயங்கி நின்றாள்.
“அண்ணா.. அவரு எங்கண்ணா?” அவளை திரும்பி கேள்வியாக பார்த்த சேகரிடம் கேட்க,
“தெரியலையேம்மா.. அவன் உள்ள தானே இருந்தான்..” என்ற சேகர், அவனுடன் பேசிக் கொண்டிருந்தவனை அனுப்பிவிட்டு, அவளுடன் உள்ள வந்து பிருந்தாவிடம் கேட்க, அவரும் உதட்டைப் பிதுக்கினார்.
“அவன் ரூம்ல இருப்பான் பாரும்மா..” என்றவர், பாலை சூடு செய்யத் துவங்க, வெண்ணிலா யோசித்து,
“அத்தை.. அவரு ரூம்ல இல்ல.. கவின் கூட விளையாடிட்டு இருப்பாரோ?” என்று கேட்க,
“கவின் தூங்கிட்டான்னு இப்போ தானேம்மா ப்ரியா தூக்கிட்டு போனா? நீயும் இங்க தானே இருந்த?” அவர் கேட்கவும்,
‘ஆமா..’ என்று தலையசைத்தவள், “சரிங்கத்தை.. நான் எதுக்கும் மறுபடியும் ரூம்ல பார்க்கறேன்..” என்றவள், அவர்களது அறைக்குச் சென்று பார்க்க, அந்த அறையும் வெறுமையாக இருக்க, அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது..
“என்னம்மா அங்க அவன் இருக்கானா?” சேகர் கேட்கவும்,
“இல்லண்ணா அவரை இங்க காணும்..” அவளது குரலில் பதட்டம் தொற்றிக் கொள்ள, சேகர் யோசனையுடன் அவளைப் பார்த்தான்..
“அவன் என்னைத் தாண்டி வெளிய போகலைம்மா.. நான் வெளிய தானே நின்னுட்டு இருந்தேன்..” அவன் சொல்லிக் கொண்டிருந்த நேரம், மொட்டை மாடியில் எதுவோ சத்தம் கேட்கவும், அதை உணர்ந்த சேகர்,
“அவன் மொட்டை மாடியில இருக்கான் போல.. சத்தம் கேட்குது..” வாக்கியத்தை முடிப்பதற்கு முன்பாகவே வெண்ணிலா சிட்டாக மொட்டை மாடிப்படிகளில் ஓடத் துவங்க, சேகர் பிருந்தாவை அர்த்தமாக பார்க்க, பிருந்தா புன்னகையுடன் தலையசைத்துவிட்டு, பாலை கப்பில் ஊற்றி அவனது அறையில் வைத்துவிட்டு,
“நீ தூங்கப் போகலையா?” என்று கேட்க,
“ரெண்டும் மேல போயிருக்குதுங்களே.. கீழ வரட்டும் அப்பறம் நான் போறேன்..” சேகர் சிரிக்கவும்,
“சரி.. அவன் வந்தா அவனுக்கு பால வச்சிருக்கேன்னு சொல்லிடு.. கூட கொஞ்சம் அவளுக்கும் சேர்த்து வச்சிருக்கேன்னு சொல்லிடு.. பிடிக்கும்ன்னு முழுசையும் அவனே குடிச்சிடப் போறான்..” என்றுவிட்டு, தனது அறைக்கு உறங்கச் சென்றுவிட, சேகர் ஹாலில் இருந்த மீதி பொருட்களை ஒதுக்கி வைக்கத் துவங்கினான்..
மாடியில் நடைப்பயின்றுக் கொண்டிருந்தவனின் முன்பு மூச்சு வாங்க வந்து நின்றவளைப் பார்த்தவனுக்கு சிரிப்பு பொங்கியது.. அவளைத் தாண்டிக் கொண்டு அவன் நகர முற்பட, அவனது கையைப் பிடித்துத் தடுத்தவள், “எங்க மாமா இங்க வந்து நின்னுட்டு இருக்கீங்க? நான் கீழ எல்லாம் உங்களைத் தேடிட்டு இருக்கேன்..” ஒரு பெருமூச்சை வெளியிட்டு அவள் சொல்லவும்,
“ஓ.. மேடம் என்னை தேட எல்லாம் செய்யறாங்களா? பார்டா” என்று கேலி செய்தவன், மீண்டும் நடப்பதற்காக நகர,
“இல்ல.. புரியல.. என்ன சொல்றீங்க? நான் தேடாம வேற யாரு தேடுவா?” அவள் புரியாமல் கேட்கவும், அவளைப் பிடித்து சுவரில் சாய்த்தவனின் திடீர் செயலில் அவள் கண்களை விரிக்க, அந்தக் கண்களில் தன்னைத் தொலைத்தான்..
அந்த இரவின் நிலவின் வெளிச்சத்தில், வெள்ளியில் வார்த்த சிலை போல நின்றுக் கொண்டிருந்தவளின் முகத்தின் அருகே குனிய, அவ்வளவு அருகே அவன் வருவும், பதட்டத்துடன் ‘மாமா..’ என்று அவள் தடுமாற, தன்னை சுதாரித்தவன், அவளது தலையில் சூடி இருந்த மல்லிகைப் பூவை வாசமிழுத்து விட்டு, அவளது விரலுடன் விரல் கோர்த்துக் கொண்டு,
“அது தான கேட்கறேன்.. ஏன் இத்தனை நேரம் தேடல? நானும் இங்க வந்ததுல இருந்து பார்க்கறேன்.. என்னவோ அம்மா பின்னாலயும் அக்கா பின்னாலயுமே சுத்திட்டு இருக்க? நான் என்ன ஊறுகாயா இப்போ வந்து தேடறதுக்கு.. போ.. போய் உங்க அத்தை கிட்டயே பேசு.. நான் எதுக்கு உனக்கு?” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவனது முகத்தையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..
என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நின்றிருந்தவள், தலையை உலுக்கிக் கொண்டு, “அத்தை தான் அவங்க எல்லாம் வரும்போது என் கூடவே நில்லுன்னு சொன்னாங்க மாமா.. அது தான் அவங்களோடவே இருந்தேன். உங்களை நான் பார்க்கலைன்னு உங்களுக்குத் தெரியுமா? நீங்க தான் என்னைப் பார்க்காம வந்தவங்க கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தீங்க?” குறையாக அவள் சொல்ல, சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளது முகத்தைத் திரும்பிப் பார்த்தவன், உதட்டைப் பிதுக்கி,
“நீ கொடுத்து வச்சவன் ஆர்யா.. உன் பொண்டாட்டி உன்னையும் தேடறாங்க பாரேன். இப்படி புருஷனைத் தேடற பொண்டாட்டி கிடைக்க நான் எவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும்?” என்று பெருமை கொள்ள, இடுப்பில் கையை வைத்து அவனை முறைக்கவும், சிரித்துக் கொண்டே,
“நான் உன்னை சும்மா வம்பு வளர்த்தேன்.. நீ என்னைத் தேடறியான்னு பார்க்க கண்ணா மூச்சி விளையாடினேன்.. பரவால்ல சீக்கிரமே தேடிட்டா.. நான் கூட விடிய விடிய இங்க நிக்கணுமோன்னு பயந்துட்டேன்..” மேலும் கேலி செய்ய,
அவன் சொன்னது புரியாமல் “என்ன?” வெண்ணிலா திகைக்க,
“சும்மம்ம்ம்ம்மாடி என் பட்டு.. உன் கூட கொஞ்சம் விளையாடலாம்ன்னு பார்த்தேன்..” என்றவன் படிகளில் இறங்கி ஓட,
“விளையாடினீங்களா? நான் இங்க மூச்சைப் பிடிச்சிட்டு உங்களைப் பார்க்க மேல ஓடி வந்தேன் தெரியுமா? இருங்க.. நில்லுங்கன்னு சொல்றேன் இல்ல.. இது என்ன உங்களுக்கு விளையாட்டா இருக்கா?” வெண்ணிலா அவனை அழைத்துக் கொண்டே ஓடவும்,
“நிக்க மாட்டேன்.. உனக்கு நான் வேணும்ன்னா வந்து பிடிச்சிக்கோ..” என்றவன், தரைத் தளத்திற்கு வந்ததும், அங்கிருந்த சேகரைப் பார்த்து,
“மொட்டை மாடியை பூட்ட மறந்துட்டேன் மாம்ஸ்.. கொஞ்சம் மேல போகும்போது பூட்டிருங்க..” சொல்லி விட்டு நகர முற்பட, அதற்குள் கீழே வந்த வெண்ணிலா,
“அண்ணா.. அவரை பிடிங்க.. பிடிச்சு நிறுத்துங்க..” சேகரை உதவிக்கு அழைக்கவும், சேகர் ஆர்யனைப் பார்க்க,
“மாம்ஸ் பிடிக்கக் கூடாது. இதெல்லாம் போங்காட்டம்.. அவளையே வந்து பிடிக்கச் சொல்லுங்க..” சேகரின் பின்னால் நின்று வெண்ணிலாவிற்கு போக்கு காட்ட, அருகில் வந்தவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே,
“உன் கைக்கு சிக்க மாட்டேனே..” என்று சீண்டிக் கொண்டே வேகமாக அறைக்குள் நுழைந்தான்..
“உங்களைப் பிடிங்கன்னு சொன்னேன் இல்லண்ணா.. போங்க..” சேகரிடம் மூச்சு வாங்க கேட்டவள், கட்டிலுக்கு பின்னால் சென்று நின்று, டான்ஸ் ஆடி அவளை வெறுப்பேற்ற,
“அங்க நின்னு டான்ஸ் வேற.. நில்லுங்கன்னு சொல்றேன் இல்ல.. புடவையில ஓட முடியல மாமா.. நான் உங்களை ஒண்ணும் சொல்ல மாட்டேன்..” என்றபடி பின்னோடு கட்டிலைச் சுற்றி அவனைத் துரத்திக் கொண்டிருக்க, இருவரையும் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட சேகர்,
“டேய் அம்மா உங்க ரெண்டு பேருக்கும் பால் வச்சிருக்காங்களாம்.. குடிச்சிட்டு படுப்பீங்களாம்..” என்று சொல்ல, அவனது குரல் காற்றோடு தான் கரைந்து போனது..