மனதோடு மனதாக – 15

682525

மனதோடு மனதாக – 15

15

அதிகாலையிலேயே கண்விழித்த ஆர்யன், பாலை காய்ச்சிவிட்டு, அலுவலக லாப்டாப்பை லாகின் செய்து வைத்து, வெண்ணிலா கிளம்புவதற்காக உணவை தயார் செய்யத் துவங்கினான்..

முன்தினம் அவள் மதிய உணவிற்காக பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டிருக்கவும், அதனை செய்ய அனைத்தையும் தயார் செய்து வைக்க, வெண்ணிலா உறக்கம் களைந்து எழுந்து வந்தாள்.

“குட் மார்னிங் மாமா..” என்று வந்தவளைப் பார்த்து புன்னகை புரிந்தவன்,

“குட் மார்னிங் பட்டு. காபி..” என்று வாயசைக்க, புருவத்தை உயர்த்தி என்னவென்று அவள் கேட்கவும், தனது ஹெட்போன்சைத் தொட்டுக் காட்ட, ‘ஹ்ம்ம்..’ என்று தலையசைத்தவள், அவனுக்கு காபியை கலந்துக் கொண்டு வந்து, அவனது அருகில் அமர்ந்தாள்..

கால் பேசிக் கொண்டே சியர்ஸ் என்று அவளது கப்பில் தட்டிவிட்டு,  குடித்துக் கொண்டே கால் பேசிக் கொண்டிருக்க,  

“என்ன செய்யணும் சொல்லுங்க நான் செய்யறேன்..” அவள் கேட்கவும், அவன் எடுத்து வைத்திருந்த ஸ்ப்ரிங் ஆனியனை காட்டியவனைப் பார்த்தவள்,

“நறுக்கனுமா?” என்று சைகையில் கேட்க, ‘ஆம்’ என்று தலையாட்ட, வெண்ணிலா அதை எடுத்து வெட்டத் துவங்கிய வேளையில், கால் முடித்து எழுந்தவன்,

“பட்டு.. நீ போய் குளிச்சிட்டு கிளம்பு.. நான் பார்த்துக்கறேன்..” எனவும்,

“இல்ல மாமா.. நான் வெட்டித் தரேன்.. நீங்க வேலையைப் பாருங்க.. நான் வெட்டின அப்பறம் நீங்க கிட்சன்க்கு போங்க..” என்றவள், வெட்டத் துவங்கினாள்.               

அவளது கன்னத்தில் இதழ் பதித்தவன், “கை ஜாக்கிரதை..” என்றுவிட்டு, தனது கணினியில் சில நிமிடங்கள் வேலை செய்துவிட்டு, அடுக்களைக்குள் சென்றான். அன்றைய சமையலுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்தவன், சமையலை வேகமாக முடிக்க, வெண்ணிலா கிளம்பித் தயாராகி           வந்தாள்..

“வாவ் மை பொண்டாட்டி.. ரொம்ப க்யூட்டா இருக்காங்க.. மை ஸ்வீட்டி பை..” அவளது கன்னத்தைப் பிடித்து கொஞ்சியவன்,

“சரி.. எல்லாம் டேஸ்ட் பாருங்க.. நான் பாக்ஸ்ல எடுத்து வைக்கிறேன்..” என்றவனை விழிகள் விரியப் பார்த்தவள், அவன் செய்து வைத்திருந்த உணவுகளை ருசி பார்த்து,

“வாவ் மாமா.. சூப்பரா இருக்கு.. கொஞ்சம் எக்ஸ்ட்ரா இருக்கா மாமா.. எல்லாரும் எடுத்தா எனக்கு இருக்காது. அதுவும் நீங்க செய்தீங்கன்னு சொன்னா கண்டிப்பா எல்லாருமே எடுப்பாங்க..” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவளைப் பார்த்தவன், சிரித்து,

“இன்னொரு பாக்ஸ் வைக்கிறேன்.. அது ஷேர் பண்ணிக்கோ.. இப்போ வா.. தோசையும் சட்னியும் செய்திருக்கேன்.. சாப்பிட்டு கிளம்பலாம்..” எனவும், வெண்ணிலாவிற்கு குற்ற உணர்வில் முகம் சுருங்கியது..

அவளது முகம் மாறவும், தட்டை எடுத்து அதில் இரண்டு தோசைகளை போட்டுக் கொடுத்து அவளைப் பார்த்தவன், “என்னடா?” என்று கேட்க,

“இல்ல மாமா.. நான் செய்யாம எனக்கு நீங்க எல்லாம் செஞ்சிக்கிட்டு இருக்கீங்க? ஒரு தோசை கூட நான் உங்களுக்கு செய்யலையே.. நான் சீக்கிரம் எல்லாம் கத்துக்கறேன் மாமா.. ஐம் சாரி..” என்றவளின் வாயில் தோசையைத் திணித்து,

“எல்லாம் மெல்ல கத்துக்கலாம்டா வெண்ணி.. சரியா.. இப்போ சாப்பிடு.. நான் போய் குளிச்சிட்டு வரேன்.. எப்படியும் நான் ஆபிஸ் போனா நீ தான் கொஞ்சம் லஞ்ச்க்கு ரெடி பண்ணிக்கறா போல இருக்கும்.. நான் ரொம்ப காலையிலேயே செஞ்சா மதியத்துக்கு அது கெட்டுப் போயிடும்.. அதுக்கு வழி யோசிக்கணும்..” என்றவன், தனது துவாலையை எடுத்துக் கொண்டு குளிக்கச் செல்ல, வேகமாக இரண்டு தோசைகளை உண்டு முடித்தவள், அவன் வைத்திருந்த இன்னொரு தோசையையும் உண்டு விட்டு, தனது மொபைலை எடுத்து வைத்து, அதில் சொல்லி இருந்த செய்முறை விளக்கத்தைப் பார்த்து, மெல்ல தோசையை ஊற்றத் துவங்கினாள்..

இரண்டு தோசைகள் பிய்ந்து வர, அதைத் தனது தட்டில் போட்டுக் கொண்டவள், அடுத்தது சரியாக வரவும், “ஹே.. நான் செஞ்சிட்டேன்..” என்று அவள் குதிக்கும் நேரம் ஆர்யன் குளித்து விட்டு, அவசரமாக அங்கு வந்தான்.

“என்ன பண்ணிட்டு இருக்க?” அவன் கேட்க,

“மாமா.. சக்சஸ்புலா தோசை சுட்டுட்டேன்.. வாங்க.. வாங்க.. சாப்பிடுங்க.. நான் முதன்முதலா செய்யற தோசை.. உங்களுக்கு தான் கொடுத்து வச்சிருக்கு..” என்றவள், அவனுக்கு ஒரு தட்டில் வைத்துக் கொடுக்கவும், தலையை அசைத்தவன்,

“சொன்ன பேச்சை கேட்கறாளா பாரு..” என்று முணுமுணுத்தாலும், தனக்காக அவள் செய்ய வேண்டும் என்று யோசித்ததே மனதில் இன்பமாய் இருக்க,

“சூப்பரா இருக்குடா என் செல்லப்பட்டு..” என்றபடி, அங்கேயே நின்று அவள் தோசை சுட்டுத் தரத் தர, வேகமாக உண்டு முடித்தான்..

“போதும்.. நீ வேர்வை வழிய காலேஜ்க்கு கிளம்ப வேண்டாம்.. டிபன் பாக்ஸ் எடுத்து பேக்ல வச்சுக்கோ.. கொஞ்சம் ஃபேன்ல உட்காரு.. நான் ரெடி ஆகிட்டு வரேன்..” என்றவன், மீதியை எல்லாம் மூடி வைத்து விட்டு, ப்ரிட்ஜில் போட வேண்டியதை போட்டுவிட்டு, அடுப்பை அமர்த்திவிட்டு, அனைத்தையும் ஒருமுறை சரி பார்த்து, வேகமாக கிளம்பி வந்தான்..  

“ரெடியா போகலாமா? பேக் எடுத்துக்கோ.. வீட்டோட இன்னொரு சாவி இருக்குள்ள.. போன் எடுத்துக்கிட்டயா?” என்று கேட்டுக் கொண்டே தனது சாவியை எடுத்துக் கொண்டு, ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டே, அவன் தனது செருப்பை மாட்டிக் கொண்டிருக்க, வேகமாக அவனது அருகில் சென்றவள், எம்பி அவனது கன்னத்தில் முத்தமிட்டு, அவன் சுதாரிப்பதற்கு முன்பே, நெஞ்சம் படபடப்பில் அடித்துக் கொள்ள, வேகமாக லிஃப்ட்டில் அருகே சென்று நின்றாள்.  

அவள் தந்த இன்ப அதிர்ச்சியில், அவசரமாக அனைத்தையும் எடுத்துக் கொண்டவன், “வெண்ணி நில்லு.. நில்லு.. நானும் வரேன்..” அவள் பின்னோடு வீட்டைப் பூட்டிக் கொண்டு லிப்டின் அருகே ஓடினான்.. லிஃப்ட்டின் வெண்ணிலா தனியாக இருப்பாள் என்று அவன் நினைத்திருக்க, அங்கே இரு குழந்தைகளுடன் ஒரு பெண்மணி நின்றுக் கொண்டிருக்கவும், ஆர்யன் அவளைப் பொய்யாக முறைத்து நின்றான்.

வெண்ணிலா உதட்டைக் கடித்து தனது சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க, லிப்ட் வரவும் வெண்ணிலா குழந்தைகளுடன் உள்ளே செல்ல, அவனும் அவளுடன் லிப்டில் சென்று புகுந்தான்..               

அவள் தன்னை மறந்து செய்த செயலின் படபடப்பு இன்னும் அவளிடம் மிச்சமிருக்க, அவனது முகத்தை பார்க்காமல் நிற்கவும், அவளது கையுடன் தனது கையைக் கோர்த்துக் கொண்டவன், லிப்ட் நிற்கவும், அந்த பெண்மணியை இறங்க விட்டு, சட்டென்று அவளது கன்னத்தில் இதழ் பதித்தவன், அவளை அழைத்துக் கொண்டு, தனது பைக்கின் அருகில் சென்றான்..

அவள் இரண்டு பக்கமும் கால் போட்டு அமர்ந்துக் கொள்ள, “ஆர்யா வண்டியைக் கிளப்பு.. விசில் போடு.. மன மன மெண்டல் மனதில்” என்று பாடிக் கொண்டே விசில் அடித்து வண்டியை முறுக்க, அவனது தோளில் அடித்த வெண்ணிலா,

“ரொம்ப லொள்ளு மாமா உங்களுக்கு..” என்றபடி, அவனது தோளைப் பிடித்துக் கொண்டாள்.. இதுவரை கல்லூரிக்கும், வெளியில் சில இடங்களில் பலமுறை திலீபனுடன் சென்றிருந்தாலும், இன்று ஆர்யனுடன் வண்டியில் வருவது புது அனுபவமாய்.. கையை விரித்து பாட்டு பாட வேண்டும் என்று எழுந்த ஆவலில், தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டாள்.  

கல்லூரி வாயிலில் சென்று அவன் வண்டியை நிறுத்த, “மாமா.. நான் ஒரு பாட்டு பாடவா?” அவன்புறம் சாய்ந்து அவள் கேட்க, ஹெல்மட்டைக் கழட்டிவிட்டு,   

“என்ன பாடப் போற?” ஆவலாக கேட்டவனின் காதில் அருகில் குனிந்து,

மன மன மன mental மனதில்

லக்க லக்க லக்க பொல்லா வயதில்

டக்க டக்க டக்க கொட்டும் இசையில்

ஓ கே என் மாமனின் பைக்கில்

Like a Like my லைலா லைலா

என்றும் நாமே king and queen ஆ

என்று பாட, ஆர்யன் அவளைத் திரும்பிப் பார்த்து, அவளுடன் சேர்ந்து பாடி,

“ஆனா.. நான் தான் ஃபர்ஸ்ட் வண்டியை கிளப்பும் போதே பாடிட்டேன்..” என்றுவிட்டு,

“ராட்சசி.. இப்படி பப்ளிக்ல பாடி என்னை டெம்ப்ட் பண்றடி.. வீட்ல பாடி இருக்கணும்..” அவன் பல்லைக் கடிக்க, வெண்ணிலா அவனது தோளிலேயே முகத்தைப் புதைத்துக் கொள்ள, கல்லூரி வரவும் அவன் வண்டியை நிறுத்த,

“நான் காலேஜ்க்கு போறேன்ப்பா.. காலேஜ் வந்திருச்சு..” என்றவள் பைக்கில் இருந்து இறங்கினாள்.. வெண்ணிலாவின் தோழிகள் அவளுக்காக கல்லூரி வாயிலேயே காத்திருந்தனர்.. திலீபனும் அவளது வருகையை எதிர்ப்பார்த்து வாயிலில் காத்திருக்க, ஆர்யனைப் பார்த்ததும், திலீபன் அவன் அருகில் வந்தான்.

“ஹாய் திலீப்..” ஆர்யன் அவனைப் பார்த்து கையசைத்து, தனது ஹெல்மட்டில் தாளம் போட்டுக் கொண்டிருக்க, அவனது அருகில் நின்ற வெண்ணிலா,

“டேய் அண்ணா.. உன்னை விட மாமா சூப்பரா பைக் ஓட்டறார் தெரியுமா? சும்மா அவ்வளவு ஸ்மூத்தா வண்டி வந்துச்சு.. நீயும் தான் ஓட்டுவியே.. இப்படி அப்படி ஆட்டி ஆட்டி என்னைத் தள்ளறா போல..” அவள் கேலி செய்யவும், ஆர்யன் திலீபனைப் பார்த்து சிரிக்க, திலீப் அவளை முறைத்தான்..

“வெண்ணி பேபி அப்படி எல்லாம் சொல்லாத.. மச்சானை நாம பகைச்சிக்க கூடாது.. அப்பறம் நான் ஆபிஸ் போற அன்னைக்கு உன்னை கூட்டிட்டு வர மாட்டேன்னு சொல்லிடப் போறான்.. அப்பறம் நமக்கு தானே கஷ்டம்?” என்று கேட்டுச் சிரிக்க,

“ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு என்னை ரொம்ப கிண்டல் செய்யறீங்க.. ஆனா.. நல்ல ஐடியா மாமா.. நான் அதை மைன்ட்ல வச்சுக்கறேன்.” என்றபடி வெண்ணிலாவைப் பார்க்கவும்,

“இப்போ நீங்களே அவனுக்கு பாயிண்டை எடுத்துக் கொடுப்பீங்க போல இருக்கே மாமா.. இதெல்லாம் நல்லா இல்ல.. அண்ணா நீ வேற மாதிரி சூப்பரா ஓட்டுவ.. மாமா ஒரு மாதிரி சூப்பரா ஓட்டறார்ன்னு சொல்ல வந்தேன்.. தப்பா சொல்லல.. என் செல்ல அண்ணா இல்ல..” என்று அவள் சிணுங்கவும், ஆர்யன் சிரிக்க, வெண்ணிலாவின் தோழிகள் அவனை விழிகள் விரியப் பார்த்தனர்..

அவர்களது பார்வையைக் கண்டவள், “மாமா ஹெல்மட்டை போடுங்க.. சீக்கிரம்..” என்று அவசரப்படுத்தவும், அவர்களும் அவள் அருகில் வரத் துவங்கினர்.  

“ஹே வெண்ணிலா.. எப்படி இருக்க? ஹாப்பி மேரீட் லைஃப்டி..” என்றபடி அவர்கள் மூவரும் வெண்ணிலாவின் அருகில் வருவதற்குள், அவர்கள் அருகில் ஓடிச் சென்றவள்,

“ஹாய் நான் நல்லா இருக்கேன்.. தேங்க்ஸ் மக்கா.. நீங்க எப்படி இருக்கீங்க? அதோ அவர் தான் எங்க மாமா..” வெண்ணிலா சற்று தொலைவிலேயே நிறுத்தி அவர்களை அறிமுகப்படுத்தி,

“மாமா.. இவ மீனா. இவ சக்தி.. இவ திவ்யா.. நான் சொல்லி இருக்கேன் இல்ல என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்..” அவளது தோழிகளை அறிமுகப்படுத்தவும்,

“ஹாய் சிஸ்டர்ஸ்.. உங்களை பார்த்ததுல சந்தோசம்.. வெண்ணிலா உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்கா..” ஆர்யனின் பதிலில் வெண்ணிலா குறும்பாக ஆர்யனைப் பார்க்க, ஆர்யன் வெண்ணிலாவைப் பார்த்து கண்ணடித்தான்..  

வெண்ணிலாவின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.. இருவரின் கண் பாஷைகளை பார்த்த திலீபன், வெண்ணிலாவை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்க, “ஹாய் சார்.. எப்படி இருக்கீங்க?” அவளது தோழிகள் கோரசாகக் கேட்கவும்,   

“சூப்பரா இருக்கேன்மா..” அவர்களுக்கு பதில் சொன்னவன்,  

“டைம் ஆச்சு வெண்ணிலா.. பெல் அடிச்சிறப் போறாங்க.. உள்ள போங்க.. நானும் கிளம்பறேன்..” எனவும், ‘பை சார்..’ என்று அவர்கள் நகர, வெண்ணிலா ஆர்யனின் முகத்தைப் பார்த்தாள்..        

அவளது முகத்தில் ஒருவித தவிப்பு.. அவனைப் பார்த்துக் கொண்டு அவள் நிற்க, “பைடா வெண்ணி.. டேக் கேர்..” ஆர்யன் கையசைக்கவும், ஒரு தலையசைப்புடன் மனமே இல்லாமல் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டு செல்ல, அவளது முகத்தைப் பார்த்த திலீபனுக்கு சிரிப்பு பொங்கியது..

“என்ன மாம்ஸ்.. இங்க என்ன நடக்குது? மேடம் அவங்க ப்ரெண்ட்ஸ் பார்த்தா ஹெல்மட்டை மாட்ட சொல்றாங்க..” கேலியாக திலீபன் கேட்கவும்,

“அது வந்து அவங்க எல்லாம் என்னை மாம்ஸ்ன்னு தான் கூப்பிடுவேன்னு சொன்ன உடனே அவளுக்கு பொசசிவ் ஆகிடுச்சு.. அது நேத்து இருந்தே புலம்பிக்கிட்டு இருந்தா. இப்போ அவங்க பார்க்கறாங்கன்னு தான் ஹெல்மட் போட சொல்றா..” ஆர்யன் சிரிக்க, திலீபன் அவனை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்..

“இது என்ன லுக்கு?” அவனது பார்வையைக் கண்டுக் கொண்டவன் கேட்க,

“இல்ல மாமா.. என்கிட்டே வந்து அண்ணா என் கிளாஸ்ல ஒரு பொண்ணு உன்னை சைட் அடிக்கிறா.. உன்னைப் பத்தி விசாரிச்சா.. பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.. உனக்கு இன்ட்ரோ பண்ணவான்னு கேட்பா? இப்போ என்னடான்னா உங்களை பார்த்ததுக்கே உங்களை ஹெல்மட் போடச் சொல்றா? இதெல்லாம் என்ன செயல் மாமா?” புலம்பலாக அவன் கேட்க, ஆர்யன் சிரிக்கத் துவங்கினான்..

“டேய்.. நீ அண்ணா.. நான் புருஷன்.. அது தான் அவளது செயலுக்கான காரணம்..” கேலியாக சொல்ல, அவனது கையைப் பிடித்துக் கொண்ட திலீபன்,

“நல்ல புருஷன்.. நல்ல பொண்டாட்டி..” என்று கேலி செய்தாலும், 

“மாமா.. ரொம்ப ஹாப்பியா இருக்கு மாமா.. உண்மையைச் சொல்லணும்ன்னா அவ இந்த திடீர் கல்யாணத்தை எப்படி எடுத்துக்கப் போறான்னு ஒரு ஓரமா பயம் இருந்துக்கிட்டே இருந்துச்சு.. ஏன்னா அவ எங்க வீட்ல எல்லாருக்குமே அவ்வளவு செல்லம்.. கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி வரை குழந்தையா துள்ளிக்கிட்டு இருந்தவ இல்லையா? இப்போ அவ உங்களை விட்டு காலேஜ் உள்ள போகவே மனசு வராம போகறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. சோ ஹாப்பி ஃபார் யூ போத் மாமா..” என்ற திலீபனின் கண்கள் கலங்க, அவனது கையைத் தட்டிக் கொடுத்தவன்,  

எனக்காக பொறந்தாளே எனதழகி

இருப்பேனே மனசெல்லாம் பேர் எழுதி

          

என்று பாடவும், திலீபனுக்கு புன்னகை அரும்பியது..

“பாட்டாவே படிச்சிட்டீங்க?” என்று கேலி செய்ய, முதல் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது..

“சரி டைம் ஆச்சு.. நீ போ திலீப்.. ஹேவ் எ நைஸ் டே..” என்றபடி வண்டியைக் கிளப்ப,

“நான் போய் அவ டிபன் பாக்சை கபளீகரம் பண்றேன்.. பை பை மாமா..” என்றவன், கல்லூரிக்குள் செல்ல, ஆர்யன் புன்னகையுடன் வீட்டிற்கு வந்தான்.

மாலையில், சரியான நேரத்தில் அவளை அழைத்துச் செல்வதற்காக கல்லூரியின் வாயிலில் நின்றவன், தனது தோழிகளுடன் வெளியில் வந்தவளைப் பார்த்து கையசைக்க, வெண்ணிலா வேகமாக அவன் அருகில் ஓடி வந்தாள்..

“ஹாய் பட்டு.. ஹவ் வாஸ் யுவர் டே.. லஞ்ச் சாப்பிட்டியா?” என்று கேட்டுக் கொண்டே அவளது பையை வாங்கி தனது வண்டியின் முன் பக்கம் வைக்க, திலீபன் அவர்கள் அருகில் வந்தான்.

“மாமா.. லஞ்ச் செமயா இருந்தது.. செம டேஸ்டி மாமா.. இந்த பூரணிக்கு இப்படி எல்லாம் செய்யத் தெரியாது..” அவள் வாயடித்துக் கொண்டே, தனது துப்பட்டாவைப் பின் பக்கம் கட்டிக் கொண்டிருக்கவும், அதைக் கேட்டுக் கொண்டே வந்த திலீபன்,

“அடிப்பாவி.. இரு நான் சித்திக்கிட்ட சொல்றேன்.. சித்தி சமையல் நல்லா இல்லையா? நொப்பு கொட்டி டிவி பார்த்துக்கிட்டே கேட்டது எல்லாம் மறந்துட்டியா?” என்று கேட்க,

“நீ ஒண்ணும் போய் சொல்ல வேண்டாம்.. நானே போட்டோ போட்டு மதியம் சொல்லிட்டேன்.. அம்மா சூப்பர்ன்னு சொன்னாங்க..” என்றவளைப் பார்த்த திலீபன்,

“நான் சொன்னேன் இல்ல.. பாரு.. பாரு.. நீ மாறிட்ட..” அவளை வம்பு வளர்க்கவும், வெண்ணிலாவின் முகம் சுருங்கியது.. அதுவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன்,

“திலீபா போதும்.. அவளும் சும்மா தானே வம்பு வளர்க்கறா.. இப்படி எல்லாம் சொல்லாதே. அவ ஒண்ணும் மாறல.. நான் முதல்தடவை அவளுக்கு லஞ்ச் செஞ்சி கொடுத்திருக்கறதுனால சொல்றா.. வேற ஒண்ணும் இல்ல..” திலீபனிடம் சொல்லவும், வெண்ணிலா முகம் சுளிக்க,

“சரி.. சரி.. சாரிடி என் நிலாக்குட்டி.. நான் சும்மா உன்னை வம்பு வளர்த்தேன்.. எங்க சிரி பார்க்கலாம்.. நானும் தானே மாமா கைப் பக்குவத்தை ருசிச்சேன்.. தனி டேஸ்ட்டா தான் இருந்தது..” என்று அவளை சமாதானப்படுத்தவும், வெண்ணிலா ஈ என்று சிரிக்க, அவளது கன்னத்தைத் தட்டியவன்,

“சரி.. மாமா ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்காரு பாரு.. அங்க வேற பஸ்ஸ்டாண்ட்ல இருந்து நிறைய கேர்ள்ஸ் பார்த்துட்டு இருக்காங்க..” திலீபன் சொல்லி முடிப்பதற்குள், திரும்பிப் பார்த்தவள்,

“அவங்க பார்த்தா என்ன? எனக்கு ஒண்ணும் இல்ல.. என் மாமாவுக்கு என்னைத் தவிர எல்லாருமே சிஸ்டர்ஸ் தான்.. அப்படி தானே மாமா..” என்றவள் சிரித்து,

“சரி.. மாமா பாவம்.. காலையில நாலரை மணிக்கு எழுந்தது.. நான் சீக்கிரம் வீட்டுக்கு போய் மாமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கறேன்..” என்றவள், வண்டியில் ஏறிக் கொண்டே, திலீபனிடம் இருந்து விடைப்பெற, தலையசைத்துக் கொண்டே ஆர்யன் வண்டியைக் கிளப்பினான்..             

வீட்டிற்குச் சென்றதும் அவள் முகம் கழுவி வருவதற்குள் ஆர்யன் பாலை சூடு செய்யத் துவங்க, உடை மாற்றி வந்தவள், “மாமா.. இதெல்லாம் நான் தான் இனிமே செய்வேன்.. நான் தான் காபி போடுவேன்.. நீங்க சமையல் மட்டும் செய்ங்க மாமா.. மீதி எல்லாம் நான் பார்த்துக்கறேன்..” என்றவள், அவனைப் பிடித்து நகர்த்தி விட்டு, காபியை போடத் துவங்க, அவளை பின்னால் இருந்து மென்மையாக அணைத்தவன், அவளது கன்னத்தில் இதழ் பதிக்க, ‘மாமா..’ அவளது குரல் காற்றாகி வெளி வந்தது.. 

அவளது கன்னத்தைத் தட்டியவன், “நான் போய் வாஷிங் மெஷின் போடறேன்..” என்று நகர, தலையை அசைத்துக் கொண்டு, நாணப் புன்னகையுடன், அவனுக்கு காபியைக் கலந்துக் கொண்டு வந்தாள்..

அதற்குள் அவன் முன்தினம் உளர்த்தி இருந்த துணிகளை எடுத்து மடிப்பதற்காக போடவும், “மாமா காபி குடிச்சிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து மடிக்கலாம்..” எனவும், அவளது கையில் இருந்து கப்பை வாங்கிக் கொண்டு, எம்பி மறுகையால் அவளது கையைப் பிடித்து அவளது கப்பில் இருந்த காபியை உறிஞ்சியவன், அவள் விழிகள் விரியப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதே,

“ஹப்பாடா இப்போ தான் காபி குடிச்ச ஃபீலே வருது..” என்றபடி, தனது கப்பை குடிக்க போகும் பொழுது, தனது கப்பை கீழே வைத்தவள், அவனது கையைப் பிடித்து,

“நானும் குடிப்பேன்.. குடுங்க..” எனவும், புன்னகையுடன் தனது கப்பை அவளது வாயின் அருகே எடுத்துச் செல்ல, அதைக் குடித்தவள், அவன் சொன்னது போலவே சொல்லிக் காட்டி, அவனது தோளில் சாய்ந்தபடி காபியைக் குடிக்க, ஆர்யனின் மனது நிறைவாய் இருந்தது..

காபியைக் குடித்து முடித்து இருவருமாக துணிகளை மடித்து முடித்து, அந்த நான்கு நாட்களின் விடுமுறைப் பாடத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தவள், அந்த நோட்டையே பார்த்துக் கொண்டு, கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தாள்..

இரவு உணவை தயார் செய்துக் கொண்டே அவளைப் பார்த்தவன், “என்னடா பட்டு கண்ணால முறைச்சே டைரெக்ட்டா உள்ள ஏத்தறியா?” என்று மூளையைத் தட்டிக் காட்ட,

“இல்ல மாமா.. இந்த வாரம் புது சாப்டர் ஆராம்பிச்சு இருக்காங்க.. எனக்கு அது புரியவே இல்ல.. அது தான் பார்த்துட்டு இருக்கேன்..” என்றவளின் அருகே அமர்ந்தவன், அவளது புத்தகத்தையும் நோட்டையும் வாங்கி பார்த்து,

“வா.. என்ன புரியல சொல்லு.. நான் சொல்லித் தரேன்..” எனவும்,

“என்ன? நீங்க சொல்லித் தரீங்களா? நீங்க பெரிய படிப்ஸ்சா? இப்படி பார்த்த உடனே சொல்லித் தரேன்னு சொல்றீங்க?” கண்களை விரித்து கேலியாகக் கேட்டவளிடம்,

“அப்படி எல்லாம் பெரிய படிப்ஸ் இல்லம்மா.. ஏதோ என்னால முடிஞ்சது பி.ஈ.ல ரெண்டு கோல்ட் மெடல் வாங்கி இருக்கேன்.. கூடவே எம்.சி.ஏ.ல ஒரு என்பது மார்க் வாங்கி இருக்கேன்.. அவ்வளவு தான் என் அறிவு.” அவன் சொல்லவும்,

“என்னது? கோல்ட் மெடலிஸ்ட்டா?” அவள் கண்களை விரிக்க, அவளை நெருங்கி அவளது இமைகளில் இதழ் பதித்தவன்,

“இங்கப் பாரு.. புரியலைன்னா கேளு திரும்ப சொல்லித் தரேன்..” என்றவன், அந்தக் கணக்கில் கவனம் பதித்தான். அவளுக்கு சொல்லித் தர, உடனேயே அவள் கற்றுக் கொள்ளவும், ஆர்யன் அவளது தலையை செல்லமாகக் கலைத்து விட்டான்..

“செம மாமா.. நீங்க இப்படி சொல்லித் தந்தா நான் யுனிவர்சிட்டி ரேன்க் வாங்கிடுவேன்.. தேங்க் யூ..” என்றவள், அந்த நான்கு நாட்களின் பாடத்திலும் எழுத வேண்டியதை எழுதிக் கொண்டிருக்க, அவளுக்கு நேரத்தை வீணாக்காமல், இரவு உணவை அவளுக்கு ஊட்டி விட, அதை உண்டு கொண்டே, எழுதி முடித்தாள்..

அடுத்த வந்த வார இறுதி  இரண்டு தினங்களும், அடுத்த வாரத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்குவதிலும், வீட்டைச் சுத்தம் செய்வதிலும், பூரணியைச் சென்று பார்த்துவிட்டும் வந்தனர்.. அந்த வாரத்திற்கான மாவை அவர் அரைத்து வைத்திருக்க, அதை வாங்கிக் கொண்டு, இரவு வரை அங்கு இருந்து விட்டு வந்தவர்கள், அடுத்து வரும் நாட்களை எதிர்நோக்க மகிழ்ச்சியுடன் தயாராகினர்..

error: Content is protected !!