மனதோடு மனதாக – 16

மனதோடு மனதாக – 16
16
ஆர்யன் வெண்ணிலாவின் நாட்கள் அழகாக நகர்ந்துக் கொண்டிருந்தது. இருவரும் மெல்ல ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு, தங்களது நாட்களை இனிமையாக கடத்தினர்.. தனது காதலை வார்த்தையில் வடிக்காமல், உணர்வு பூர்வமாக ஆர்யன் வெண்ணிலாவிற்கு உணர்த்த, அவளது மனதில் அவன் மேல் மொட்டு விட்டிருந்த காதல், மெல்ல விருட்சமாக வளரத் துவங்கி இருந்தது.. அவன் என்னவன், தனக்கே உரியவன் என்று அவளது சொல்லும் செயலும் உணர்த்த, ஆர்யனின் மனது சிறகின்றியே பறந்தது.
மெல்ல ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு, தங்களது இல்லறத்தை நல்லறமாக மாற்றும் முயற்சியில், அவர்களது நாட்கள் மாதங்களாக உருண்டோடி இருக்க, அன்று வழக்கம் போல அலுவலகத்தில் இருந்து நேராக அவளை அழைக்க ஆர்யன் கல்லூரிக்கு வந்திருந்தான்.. அன்றைய வேலை அவனை நெட்டி முறித்திருக்க, சோம்பலுடனும், சோர்வாகவும் அவளது கல்லூரி வாயிலில் நின்றுக் கொண்டிருந்தான். தனது தோழிகளுடன் பேசிக் கொண்டே வந்த வெண்ணிலாவை மீனா நிறுத்தி,
“ஹே உங்க மாமா பார்மல்ஸ்ல செம சூப்பரா இருக்காங்கடி நிலா.. செம பெர்சனாலிட்டி.. இப்படி எங்களை எல்லாம் சிஸ்டர்ன்னு சொல்லி சைட் அடிக்க முடியாம செஞ்சிட்டாங்களே.. ரொம்ப மோசம்டி..” அவளது தோழி புலம்ப, அவனைத் திரும்பிப் பார்த்தவள், மனதினில் அவனைப் பார்த்து ரசித்துக் கொண்டே,
“போங்கடி.. உங்க அண்ணாவை அப்படி எல்லாம் பார்க்க கூடாது.. அவரு எங்க மாமா.. சரி பை.. நாளைக்கு பார்க்கலாம்.. மாமா ரொம்ப டயர்டா இருக்கற மாதிரி இருக்கு.. பாவம் காலையில சீக்கிரம் எழுந்துட்டார்..” என்றவள் ஓடிச் சென்று காரில் ஏறி, “மாமா..” என்று அழைக்கவுமே அவனது சோர்வு இருந்த இடம் தெரியாமல் போனது..
“ஹாய் வெண்ணி பேபி.. இன்னைக்கு காலேஜ் எப்படி போச்சு?” புன்னகை முகத்துடன் கேட்டுக் கொண்டே வண்டியை எடுக்க,
“கிளாஸ் எல்லாம் நல்லா தான் போச்சு.. அடுத்த வாரம் மாடல் டெஸ்ட் ஸ்டார்ட் ஆகுது மாமா.. அது முடிச்சு பத்து நாளுல ப்ராக்டிகல்ஸ் இருக்கும்ன்னு சொல்லி இருக்காங்க.. அனேகமா இந்த மாச கடைசியில எக்ஸாம் ஆரம்பிச்சிடும்ன்னு சொன்னாங்க மாமா.. கொஞ்சம் படிக்கணும்.. இப்போவே படிச்சிட்டா ஈசியா இருக்கும்..” என்றவள்,
“அப்பறம் மாமா இன்னைக்கு மதியம் க்ரேவி ஒரு மாதிரி இருந்துச்சு.. நான் காலையில நல்லா தான் மாமா ஓவன்ல வச்சு சூடு செஞ்சேன். என்ன ஆச்சுன்னு தெரியல.. ஆனா.. சப்பாத்தி நல்லா இருந்துச்சு.. நான் அப்படியே வெறுமன சக்தி கொண்டு வந்த ஊறுகாய வச்சு சாப்பிட்டேன்..” முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு வெண்ணிலா சொல்லிக் கொண்டே வர, அவளது முகத்தைத் திரும்பிப் பார்த்தவன்,
“நான் நாளைக்கும் ஆபீஸ் போகனும்.. நாளைக்கு நான் பேசாம உனக்கு லஞ்ச் டைம்க்கு சாப்பாடு வரது போல ஏதாவது செஞ்சிடறேன்டா பட்டு.. ஐம் சாரி.. எனக்கு என்ன செய்யறதுன்னு நிஜமாவே தெரியல.. வெய்ய காலம்ல.. அது தான் கெட்டுப் போகுது போல.. காலையில எழுந்து செஞ்சாலும் அதுவும் அப்படித் தான் இருக்கும். என்ன செய்யறதுன்னு யோசிக்கிறேன்..” என்று வருந்த, அவனது முகத்தைப் பார்த்தவள்,
“நான் வேணா நீங்க ஆபிஸ் போற அன்னைக்கு அம்மாவை, அண்ணாகிட்ட எனக்கு மதியம் டிபன் பாக்ஸ் கொடுத்து அனுப்பச் சொல்லவா? நீங்களும் சீக்கிரமும் எழ வேண்டாம். நைட்கும் யோசிச்சு செய்ய வேண்டாம்ல..” யதார்த்தமாக அவள் கேட்கவும், ஆர்யன் யோசனையுடன் அவளைப் பார்த்தான்..
“என்ன மாமா?” அவனது பார்வை புரியாமல் அவள் கேட்கவும்,
“ஒரு நாள் எனக்கு டைம் தரியா? நான் என்ன செய்யறதுன்னு பார்க்கறேன்..” என்றவன், அமைதியாக காரை ஓட்டத் துவங்க, சில நிமிடங்களில் அவனது அமைதி அவளை உறுத்தத் துவங்கியது..
காரில் பாடல் மட்டுமே ஒலிக்க, நேராக ஒரு காஃபேவில் சென்று காரை நிறுத்தவும், “என்னாச்சு மாமா?” அந்த காஃபேவைப் பார்த்து புரியாமல் அவள் கேட்கவும்,
“வா.. ஒரு காபி குடிச்சிட்டு வீட்டுக்கு போகலாம்.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. வீட்டுக்குப் போய் காபி போட்டு குடிக்கிற அளவுக்கு எனக்கு பொறுமை இல்ல.. பசிக்குது வேற.. உனக்கு என்ன ஸ்நாக்ஸ் வேணும்ன்னு சொல்லு..” என்றவன், அவள் சொல்லவும், காபியுடன் ஸ்நாக்ஸ்சை ஆர்டர் செய்துவிட்டு, தனது மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, வெண்ணிலாவிற்கு அவனது அமைதி தொண்டையடைக்கத் துவங்கியது..
அவளும் அமைதியாக தனது மொபைலை சிறிது நேரம் பார்த்தாள். அந்த சில நிமிடங்கள் கூட அவனது அமைதி பொறுக்காமல், “மாமா என் மேல கோபமா? ஏன் எதுவுமே பேசவே மாட்டேங்கறீங்க? நான் நல்லா தான் சூடு செஞ்சேன்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டுடலாம்ன்னு பார்த்தேன்.. முடியல.. ஒரு மாதிரி இருந்துச்சு..” அவளது பதிலில்,
“ச்சே.. ச்சே.. அதெல்லாம் இல்லம்மா.. ஏதோ யோசிச்சிட்டு பார்த்துட்டு இருக்கேன்.. வேற ஒண்ணும் இல்ல..” என்றவன், தனது மொபைலில் ஆழ்ந்து போக, அவனது கையில் இருந்த மொபைலைப் பிடுங்கியவள்,
“நான் என் மேல கோபமான்னு கேட்டுட்டு இருக்கேன் மாமா.. நீங்க என்னவோ மொபைலைப் பார்த்துட்டு இருக்கீங்க? என்னை விட உங்களுக்கு அந்த மொபைல் ரொம்ப முக்கியமா?” கோபமாக அவள் கேட்க,
“ஒண்ணும் இல்லம்மா.. சும்மா தான்..” என்றவன், காபி வரவும், அதை அவளிடம் நகர்த்தி,
“குடி வெண்ணிலா.. இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.. வீட்டுக்குப் போகலாம்..” என்று சொல்லவும், அவனது மொபைலைப் பார்த்தாள். அதில் அவன் சுருதியுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனை முறைத்தாள்..
அவனது கையில் போனை டப்பென்று வைத்தவள், “நான் இங்க கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீங்க ஸ்ருதி கூட பேசிக்கிட்டே இருக்கீங்க? இப்போ நான் பேசறதை விட ஸ்ருதி கூட நீங்க பேசறது முக்கியமா? ஏன் திடீர்ன்னு சைலென்ட் ஆகிட்டீங்கன்னு கேட்டேன்?” அவள் கோபமாகக் கேட்க, அவன் அவர்களுக்காகத் தருவித்திருந்த ஃப்ரெஞ்சு பிரைஸ் ஒன்றை எடுத்துக் கடித்தபடி,
“அதுல என்ன பேசிட்டு இருந்தேன்னு நல்லா பாரு.. உனக்காக தான் கேட்டுட்டு இருக்கேன்.. அவ ஆபிஸ்க்கு லஞ்ச்க்கு ஒரு இடத்துல இருந்து ஆர்டர் செய்வா.. அங்க வீட்டு சாப்பாடு போல நல்லா இருக்கும்.. அவங்க கிட்ட சொன்னா உனக்கும் மதியம் தருவாங்களான்னு கேட்டுட்டு இருக்கேன்..” என்றவன், காபியை உறிஞ்சத் துவங்கினான்.. அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த சம்பாஷணைகளைப் பார்த்தவள், அவனை கேள்வியாகப் பார்க்க,
“உனக்கு எந்த விதத்துலையும் குறை வைக்காம உன்னை நான் நல்லா பார்த்துக்கணும்ன்னு நினைக்கிறேன்.. உனக்கு எல்லாம் நான் தான் செய்யணும்ன்னு நினைக்கிறேன். அதுல ஏதாவது தப்பு இருக்கா என்ன? இன்னைக்கு சாப்பாடு கெட்டுப்போச்சு சரி.. வெய்யில் அப்படி இருக்கு.. நான் ஒத்துக்கறேன்.. உடனே அம்மாக்கிட்ட கொடுத்த அனுப்பச் சொல்லவான்னு கேட்கற? ஏன் நான் வேற ஏற்பாடு செய்ய மாட்டேனா?” சிறுபிள்ளை போல அவளிடம் கோவித்துக் கொள்ள, வெண்ணிலா அவனை கலக்கமாகப் பார்த்தாள்..
“மாமா. நான் உங்களை ஹர்ட் பண்ணிட்டேனா? நீங்களும் எனக்கு பிடிக்கும்ன்னு தானே மாமா வகை வகையா செஞ்சித் தரீங்க? நல்லா சுட வச்சும் இப்படிக் கெட்டுப் போச்சுன்னா நாம என்ன செய்யறது? அதுக்கு தான் கேட்டேன் மாமா.. உங்களை குறை சொல்றதுக்கு இல்ல..” முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அவள் சொல்லவும், அவளது முகத்தைப் பார்த்தவன்,
“இல்லம்மா.” என்று தொடங்கவும்,
“முதல்ல ஒழுங்கா எப்பவும் போல என்னைக் கூப்பிடுங்க.. அப்பறம் இதைப் பத்தி பேசலாம்.. என்ன வாம்மா போம்மான்னுகிட்டு.. யாரையோ கூப்பிடறது போல இருக்கு..” அவனது அழைப்பு அவளுக்கு வித்தியாசமாய் இருக்க, முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அவள் சொல்லவும், அவளது முகத்தைப் பார்த்த ஆர்யனின் இதழ்களில் சிரிப்பு பொங்கியது..
“பட்டு.. என் தேனு பட்டு.. என்ன கோபம் வருது உனக்கு? ஆனா.. கோபத்துல தான் நீ இன்னும் ரொம்ப அழகா இருக்கடி..” அவன் சிரித்துக் கொண்டே அவளது மூக்கின் நுனியை விரல் வைத்து தட்ட,
“உங்களுக்கும் தான் இவ்வளவு கோபம் வருது.. கோபம் வந்தா யாரோ போல முழ நீளத்துக்கு பேரைக் கூப்பிடுவீங்களா? அப்பறம் அது என்ன பேசாம அமைதியா இருக்கறது?” வெண்ணிலா பதிலுக்குக் கேட்க, ஆர்யன் அவளது கையை அழுத்தினான்..
“சாரிடா தேனு.. நீ அப்படி அம்மாவை தந்து விடச் சொல்லவான்னு கேட்கவும், எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு. அது தான். உன்னை நான் பத்திரமா, பொக்கிஷமா பார்த்துக்க நினைக்கிறேன்டா மை டியர் தேனுப் பட்டு.. உன் லஞ்ச்க்கு நான் ஏதாவது ஏற்பாடு செய்யறேன்.. அத்தையை எல்லாம் தொல்லை செய்ய வேண்டாம் என்ன?” அவன் சொல்லி முடிப்பதற்குள், அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க,
“அது முன்ன அவங்க பொண்ணுக்கு செஞ்சாங்க.. இப்போ நீ என் பொண்டாட்டி.. அதனால உனக்கு எல்லாம் நான் தான் செய்வேன்.. இப்போ நான் ஸ்ருதி கிட்ட கேட்டு ஏதாவது ஏற்பாடு செய்யறேன்.. ஆபீஸ் போற நாட்களுக்கு மட்டும் தானே..” என்றவன், அவள் விழிகள் விரிய அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,
“நீ மட்டும் என் மேல பொசசிவ் இல்லடி.. நானும் தான்.. உனக்கான சின்னச் சின்ன விஷயம் கூட நான் தான் செய்யணும்ன்னு ஆசைப்படறேன்..” என்றவன், முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு காபியைக் குடிக்கத் துவங்கவும், வெண்ணிலா அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்..
“என்ன உன் மாமா அழகா இருக்கேனா?” காபியை குடித்துக் கொண்டே அவன் கேட்கவும்,
“அதெல்லாம் என்னோட மாமா செம ஸ்மார்ட் தான்.. ஆமா.. உங்களுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா? எப்போ இருந்து மாமா?” வெண்ணிலாவின் கேள்விக்கு, காபி கப்பை கவனமாக கீழே வைத்துக் கொண்டே,
“சொன்னா ரொம்ப க்ரேசியா இருக்கும்.. பைத்தியக்காரத்தனமாவும் இருக்கும்.. ஏன் நீ ரொம்ப ஷாக் கூட ஆவ.. ஆனா.. உண்மை என்ன தெரியுமா? உன்னை முதல்முறையா பார்த்ததுல இருந்து..” என்றவன், பில்லை கொண்டு வரச் சொல்லி கைக்காட்ட, வெண்ணிலா புரியாமல் விழிக்கத் துவங்கினாள்..
“மாமா..” அவள் திகைப்புடன் துவங்க,
“பட்டு.. அதை ஒருநாள் உனக்கு நான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. சீக்கிரம் காபி குடிடா.. வீட்டுக்கு போகலாம்.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. தலை வேற ரொம்ப வலிக்குது.. தூங்கினா போதும் போல இருக்கு..” சோர்வாக ஆர்யன் சொல்லவும், வெண்ணிலா அவசரமாக காபியை குடிக்கத் துவங்கினாள்..
இருவரும் கிளம்பியதும், “மாமா நைட்டுக்கு நான் தோசை செய்யறேன்.. நீங்க ரெஸ்ட் எடுங்க.. முகமே சரியா இல்ல..” வெண்ணிலா சொல்லவும்,
“ஹ்ம்ம்.. கொஞ்ச நேரம் அப்படியே சோபால படுக்கறேன்.. நீ படிச்சு முடி.. அப்பறம் சீக்கிரம் சாப்பிட்டு ரெண்டு பேருமே தூங்கிடலாம்.. நாளைக்கும் ஆபிஸ் போகணும்..” என்றவன், வீட்டிற்குச் சென்றதும், உடையை மாற்றிக் கொண்டு, சோபாவில் சரிந்து, சிறிது நேரம் அவள் படிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அப்படியே உறங்கி விட, படித்துக் கொண்டிருந்த வெண்ணிலா அவனைத் திரும்பிப் பார்த்தாள்.. வாயைப் பிளந்த நிலையில், குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்த வெண்ணிலாவிற்கு பாவமாக இருந்தது..
அவன் உறங்கியதும் வீடே அமைதியைத் தத்தெடுக்க, அவனது தலை முடியை மெல்லக் கோதிக் கொடுத்தவள், “எப்படி மாமா என்னை பார்த்த முதல் தடவையே பிடிக்கும்? எப்படி? எப்போ என்னைப் பார்த்தீங்க?” குழப்பத்துடன் உறங்கும் அவனைக் கேட்க, அவள் விரும்பிய பதில் தான் கிடைக்காமல் போனது.
இரவு உணவை தயார் செய்து முடித்து, துணிகளை மடித்து வைத்த பிறகு, உண்பதற்காக அவனை எழுப்ப, கண் விழிக்காமல் முனகினானே தவிர, எழுந்துக் கொண்டான் இல்லை.
“மாமா.. கொஞ்சமா சாப்பிட்டு படுங்க..” என்றபடி அவனது வாயில் தோசையைப் பிட்டுக் கொடுக்க, அதை மெல்லாமல் வாயிலேயே வைத்துக் கொண்டு, கண்களைத் திறக்காமலேயே அறைக்குள் சென்று படுத்துக்கொள்ள, வெண்ணிலா செய்வதறியாது திகைத்தாள்..
அவன் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது புரிய, அவசரமாக உண்டு முடித்தவள், அனைத்தையும் எடுத்து ப்ரிட்ஜில் வைத்து, சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு, கவனமாக அவன் செய்வது போல வீட்டை பூட்டி, விளக்குகளை அனைத்துவிட்டு, அறைக்குச் சென்று வழக்கம் போல அவனது தோளில் சாய்ந்து படுத்துக் கொள்ள, அந்த உறக்கத்திலும் அவளை அணைத்துக் கொண்டவன், தனது உறக்கத்தைத் தொடர்ந்தான்..
வெண்ணிலாவின் மனதினில் இன்னமும் அவன் கூறிய முதல் தடவை குறுகுறுத்துக் கொண்டிருந்தது.. அதற்கு பதில் சொல்ல வேண்டியவனோ நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, உறக்கம் வராமல் அவனது முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவளது மனதினில் திருமணம் முடிந்து பிருந்தாவுடன் ஊருக்குச் சென்றிருந்த பொழுது பிருந்தாவும் சேகரும் பேசிக் கொண்டது நினைவிற்கு வந்தது..
திருமணம் முடிந்து பிருந்தாவுடன் ஊருக்குச் சென்றிருந்த பொழுது, பிருந்தா அவர்களை அமர்த்தி சந்தோஷத்துடன் பாலும் பழமும் கொடுத்து, இருவரையும் ஓய்வெடுக்க அனுப்பி விட்டு, அன்று மாலை நடக்கவிருக்கும் திருமண விருந்திற்காக ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் உறங்கி எழுந்தவள், ஆர்யன் அறையில் இல்லாமல் போகவும், அறையை விட்டு வெளியில் வந்தவள், பிருந்தாவின் குரலைக் கேட்டு அப்படியே நின்றாள்..
“சேகர்.. ஆரி சந்தோஷமா இருக்கானா? உன்கிட்ட கோபமா ஏதாவது சொன்னானா? அவனை இந்தக் கல்யாணத்துக்கு நான் ரொம்ப கட்டாயப்படுத்திட்டேனா?” கவலையாகக் கேட்க,
“ஏன்க்கா உனக்கு இப்படி ஒரு நினைப்பு? அவன் நேத்தே அவன் பொண்டாட்டி பர்த்டேவ அவ்வளவு விமரிசையா கொண்டாடி இருக்கான்.. காலையில அவனோட டவலை அவ எடுத்த பொழுது கூட அவன் ஒண்ணுமே சொல்லலையே. இதுல இருந்தே உனக்குத் தெரியலையா? அவனுக்கு அவளைப் பிடிச்சு இருக்குன்னு..” சேகர் அவருக்கு ஆறுதல் சொல்ல, பிருந்தா பெருமூச்சுடன் சேகரைப் பார்த்தார்.
“அவனை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கவே பெரும் பாடுபட்டோம்.. இப்போ கல்யாணம் நின்னு, இந்த சந்தர்ப்பத்தைத் தவற விட்டா இவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டானோன்னு நான் ரொம்ப பயந்துட்டேன்.. அவன் வெண்ணிலாவ சின்னப் பொண்ணு அது இதுன்னு சொல்லவும், வேண்டாம்ன்னு சொல்லிடுவானோன்னு பயமா போச்சு.. நல்லவேளை அவன் நான் சொன்னதைக் கேட்டான்.. அவளும் ரொம்ப நல்ல பொண்ணு.. ரெண்டு பேருமே சந்தோஷமா இருக்கணும்.. அது தான் எனக்கு வேணும்..” பிருந்தாவின் பதிலில் சேகர் சத்தமாக சிரித்தான்..
பிருந்தா கேள்வியாகப் பார்க்க, “ஹையோ அக்கா நீ இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கியே.. யாரு இவனா வெண்ணிலாவை வேண்டாம்ன்னு சொல்றவன்? ஆளைப் பார்த்தியே.. என்ன இப்போ சின்னப் பொண்ணுன்னு கல்யாணம் பண்ணத் தயங்கி இருந்தாலும், இன்னும் ஒரு வருஷத்துல அவ படிப்ப முடிச்ச உடனே, இவளே தான் உன் மருமகளா வந்திருப்பா.. சார் அதெல்லாம் கரக்ட்டா பிளான் பண்ணி இருப்பான்..” கேலியாகச் சொல்லவும், பிருந்தா குழப்பத்துடன் பார்க்க,
“அக்கா.. கவலைப்படாம நான் சொல்றதை நல்லா கவனி.. உன் விஸ்வாமித்திர பையன மயக்க வந்த மேனகை நம்ம வெண்ணிலா தான்.. இந்த ஜென்மத்துல வெண்ணிலா தான் என் பொண்டாட்டின்னு உன் பையன் முடிவு பண்ணி தான் தாலி கட்டவே மேடைக்கு வந்தான்.. வெண்ணிலா மேடையில கொஞ்சம் பதட்டமா இருந்த பொழுது கூட பார்த்துப் பார்த்து அவளை அமைதிப்படுத்தினான் தெரியுமா? உன் பையனுக்கு அவ மேல இஷ்டம் இல்லன்னா அவன் மேடைக்கு வந்திருப்பான்னு நீ நினைக்கிற? உன் பையன பத்தி இன்னும் உனக்கு முழுசா தெரியல..” கேலியாக சொன்னவனை விழிகள் விரிய பிருந்தா பார்க்க,
“ஆமாக்கா நிஜம்.. நான் சொல்றதை நம்புவ இல்ல..” சேகர் சொன்னதை வெண்ணிலா குழப்பத்துடன் கேட்டுக் கொண்டே நின்றுக் கொண்டிருக்க, அதற்குள் ஆர்யன் ‘வெண்ணிலா..’ என்று அழைக்கவும், அவள் அங்கிருந்து நகர்ந்தது அவளுக்கு நினைவு வந்தது..
‘அப்போ அவர் சொன்ன முதல் தடவ எப்போ? எப்படி இது சாத்தியம் ஆகும்?’ குழப்பத்துடன் அவள் யோசித்துக் கொண்டிருக்க, ஆர்யனின் கை அவளது இடுப்பைச் சுற்றி விழுந்தது..
மெல்ல அவனது கன்னத்தைத் தனது விரல் கொண்டு வருடி, “மாமா.. மாமா.. நான் ஒண்ணு கேட்கறேன்.. சொல்லுவீங்களா?” அவனது காதின் அருகே கேட்க,
“ஹ்ம்ம்.” அவனது முணுமுணுப்பு மட்டும் கேட்க, அவனது முகத்தை கூர்ந்துப் பார்த்தவள்,
“என்னை எப்போ மாமா முதல் முறை பார்த்தீங்க?” அவளது கேள்விக்கு,
“வயலட் கலர் பாவாடை.. பிங்க் கலர் ப்ளவுஸ்.. அதே கலர் தாவணி போட்டு.. தலை நிறைய மல்லிகைப் பூ வச்சிக்கிட்டு.. கையில செக்கச் சிவக்க ஹார்ட் டிசைன் மெஹந்தி.. அவ்வளவு அழகு.. என் வெண்ணிலா..” என்றவன், மறுபுறம் திரும்பி உறங்கத் துவங்க, வெண்ணிலா அதிர்ந்து போனாள்..
“நான்.. நான் இந்த டிரஸ் கல்யாணத்துக்கு இவர் வந்த பொழுது ஆரத்தி எடுத்த அப்போ தானே போட்டேன். அப்போ எப்படி? அதும் அவளை கல்யாணம்..” என்று யோசிக்கத் துவங்கியவள்,
“இல்ல.. என்னோட மாமா எனக்கு தான்..” என்று மனதை ஜீவிதாவிடம் கொண்டு செல்லாமல், மீண்டும் ஆர்யனை மெல்லத் தன் பக்கம் திருப்ப, அவள் பக்கம் திரும்பியவன், கண்களைத் திறக்க முடியாமல் திறந்துப் பார்த்தான்.
“என்னடா தேனு பட்டு.. என்னடா வேணும்?” ஆர்யனின் கேள்விக்கு,
“மாமா.. எப்படி மாமா முதல் தடவை பார்த்த பொழுதே என்னைப் பிடிச்சது? சரி அன்னைக்கு ஜீவிக்கா என்ன டிரஸ் போட்டு இருந்தா?” அவளது கேள்வியில்,
“யாருக்குத் தெரியும்?” என்ற பதிலுடன் அவளது இதழ்களில் அழுந்த முத்தமிட்டவன், அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டு, அவளது கழுத்தின் அருகே முகத்தைப் புதைத்துக் கொண்டு, தனது உறக்கத்தைத் தொடர, அவனது இறுகிய அணைப்பில், அவனது இதழ் ஒற்றலில் திகைத்திருந்தவள், மெல்ல அவனது அணைப்பில் கட்டுண்டு, அவன் கூறிய பதிலில் திளைத்து, உறங்கத் துவங்கினாள்..
மறுநாள் காலையில் உறக்கம் களைந்து உற்சாகமாக எழுந்தவன், அலுவலகம் செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருக்க, சோம்பலாக போர்வைக்குள் இருந்து முகத்தை வெளியில் நீட்டி, கண் திறந்துப் பார்த்தவள், “குட் மார்னிங் மாமா..” என்று வாழ்த்துச் சொல்ல, அவளது குரலில் அவளைத் திரும்பிப் பார்த்தவன், அருகே சென்று அவளது நெற்றியில் இதழ் பதித்து,
“குட் மார்னிங் மை டியர் பட்டு.. நல்லா தூங்கிட்டு எழுந்து காலேஜ் கிளம்பு என்ன? எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பறேன்டா. லஞ்ச் டைம்க்கு உன் கைக்கு கரக்ட்டா சாப்பாடு வந்திரும்.. உன் மாமா உனக்காக ஜீபூம்பா போட்டு வச்சிட்டேன்.. பிடிச்சிருக்கான்னு பாரு.. நான் ஆபிஸ் போற அன்னைக்கு நாம அதையே ஏற்பாடு செய்துக்கலாம்.. அப்பறம் சட்னி சூப்பர். காலையில எழுந்ததும் செம பசி.. காபியோட நீ செய்து வச்சிருந்த தோசையை சாப்பிட்டேன்..” என்றவன், மீண்டும் அவளது நெற்றியில் முத்தமிட்டு, அவளது முகத்தினை கைகளில் தாங்கி,
“லவ் யூ சோ மச் டா தேனு.. பை.. ஈவெனிங் பார்ப்போம்..” என்றபடி, அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு ஷூவை மாட்டிக்கொண்டு கிளம்ப, அவன் படபடவென்று பேசுவதை அரைத் தூக்கத்தில் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது இறுதி வாக்கியத்தில் இதழ்களில் புன்னகை பூசிக் கொள்ள, அந்த ஏசி குளிரில் சுகமான உறக்கத்தை இழக்க மனமில்லாமல் மீண்டும் உறங்கத் துவங்கினாள்.
அவளது உறக்கம் சிறிது நேரத்தில் தெளிய, அவளது மனதினில் மீண்டும் அந்தக் குழப்பங்கள் சுழலத் துவங்கியது.. அதே குழப்பத்தினூடே அவளது காலைக் கடன்களை முடித்துவிட்டு, குளித்துத் தயாராகி, கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்க, அவளை அழைத்துச் செல்ல, திலீபன் வந்து சேர்ந்தான்..
கார்ன்ப்ளேக்சை வைத்துக் கொண்டு அவள் ஏதோ யோசனையுடன் உண்டுக் கொண்டிருக்க, “என்ன என் பூனைக் குட்டி இல்லாத மூளையைத் தட்டி யோசிச்சிட்டு இருக்காங்க?” கேலியாக அவன் கேட்க,
“டேய் அண்ணா.. எனக்கு ஒரு சந்தேகம்.. நேத்து இருந்தே எனக்கு மூளை குழம்பிக்கிட்டு இருக்கு.. உனக்குத் தெரியுமா? இந்த மாமா நேத்து ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.. அவருக்கிட்ட அதைப் பத்தி ஒழுங்கா பேசக் கூட முடியாம நல்லா தூங்கிப் போயிட்டார்.. நானும் தூக்கத்துல எழுப்பி கேட்டதுக்கு அவரு சொன்னதைக் கேட்டு எனக்கு இன்னும் குழப்பமா போச்சுண்ணா.. எனக்கு ஏதாவது ஒரு வழி சொல்லேன்..” என்று தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவள் புலம்ப, திலீபன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டான்..
“என்னடா அண்ணா? ஏன் இப்படி பார்க்கற?” திலீபனின் முகத்தைப் பார்த்து அவள் கேட்க,
“நீ சொல்றதை ஒழுங்கா சொல்லு நிலாக் குட்டி.. இப்போ நீ சொன்னது எனக்கு தலையும் புரியல வாலும் புரியல.. ஆனா.. நீ என்னவோ ரொம்ப குழப்பமா இருக்கன்னு மட்டும் தெரியுது.. சொல்லுடா.. மாமா அப்படி என்ன சொன்னார்?” அவளது குழப்ப மனநிலை புரிந்து இதமாக அவன் கேட்க, அவனது அருகில் வந்து அமர்ந்தவள்,
முதலில் நேற்று நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்து, “நான் அம்மாவை சாப்பாடு கொடுத்து அனுப்பச் சொல்லவான்னு கேட்டேன்.. அதுக்கு அவருக்கு அவ்வளவு கோபம்.. அப்போ நான் அவருக்கிட்ட என்னை எப்போ இருந்து பிடிக்கும்ன்னு கேட்டேன்.. அதுக்கு அவரு.. முதல் தடவை பார்த்ததுல இருந்துன்னு பதில் சொன்னாரு. நானும் திரும்ப அந்த முதல் தடவ எப்போன்னு அவரு தூங்கும் போது அவருக்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் சொன்ன பதில் தான்டா அண்ணா எனக்கு ஷாக்கா இருக்கு.. குழப்பமா இருக்கு..” அவளது குழப்பமான மனநிலை புரிந்தவன், அவளது கையை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தாலும், அவனது மனதினில் யோசனைகள் ஓடத் துவங்கியது..
“என்னடா அண்ணா பேசாம இருக்க?” வெண்ணிலா கேட்க,
“எப்போன்னு சொன்னாரு? அவரை தான் நீ கல்யாணத்துக்கு வர வரை பார்த்ததே இல்லையே.. ஒருவேளை உன்னை அதுக்கு முன்னாலேயே வெளிய எங்கயாவது பார்த்து பிடிச்சதுன்னு சொன்னாரா?” மனதினில் தோன்றிய சாத்திய கூறுகள் அனைத்தையும் யோசித்துக் கொண்டே அவன் கேட்க,
“இல்ல.. இல்ல.. அப்படிச் சொல்லல.. ஆனா.. அந்த முதல்முறை எப்போன்னு கேட்ட பொழுது, எங்க கல்யாணத்துக்கு அவரு வந்த பொழுது, நான் போட்டு இருந்த டிரஸ் கலர்ல இருந்து, என் கையில இருந்த மருதாணி டிசைன் வரை அவ்வளவு சரியா சொல்றார்டா. முதல் முறை பார்த்த பொழுதுன்னா.. நான் அவரை ஆரத்தி எடுக்கும்பொழுது தானே முதல்முறை பார்த்தேன்.. அப்போ அவரும் அப்போ தானே என்னைப் பார்த்து இருக்கணும்? அதுக்கு முன்னால பார்த்து இருந்தாருன்னா சுடிதார்ல, ப்ராக்ல்ன்னு இல்ல ஏதாவது சொல்லி இருக்கணும்? அவரு என்னைத் தாவணியில பார்த்தேன்னு தானே சொன்னார்? அதுவும் அன்னைக்கு எப்படி?” என்றவள், திலீபனின் முகத்தைப் பார்க்க, அவள் சொன்ன வாக்கியங்கள் ஒவ்வொன்றும் திலீபனின் மனதினில் எதிரொலித்துக் கொண்டிருந்தது..
‘எங்க கல்யாணத்துக்கு அவரு வந்தபொழுது.. ஹ்ம்ம்.. என் அன்புத் தங்கையே.. அப்படியா? உங்க கல்யாணத்துக்கா?’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவனுக்கு, மனதினில் மகிழ்ச்சி பொங்கினாலும், ஒரு ஓரத்தில், ஆர்யனின் பதிலில் சிக்கிக் கொண்டிருந்தது..
‘அப்போ மாமாவும் இஷ்டமில்லாம தான் இந்த கல்யாணத்துக்கு வந்தாரா? ஜீவிதா மேல இஷ்டத்தோட வந்திருந்தா.. இவளை எப்படி அவ்வளவு மனசுல பதியற அளவுக்கு கவனிச்சு பார்த்து இருப்பார்? அதுவும் கல்யாணம் செய்ய இருந்தவ வேற இல்ல?’ என்று யோசித்துக் கொண்டிருக்க,
“ஆனா.. மாமா எங்க ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு இதுக்கும் மேல ஜீவிதா பத்தி முதலும் கடைசியுமா நாம பேசி முடிச்சிடலாம்ன்னு சொன்னாருண்ணா.. அவரு அந்த கல்யாணத்துக்கே டைலமால தான் கிளம்பி வந்தேன்னு சொன்னார்..” அவள் சொல்லவும், திலீபனுக்கு உள்ளுக்குள் திகைப்பு விரவியது..
“என்னடி பூனைக் குட்டி சொல்ற? நீ கேட்டதை ஒழுங்கா தான் கேட்டியா? அவரு அப்படியா சொன்னாரு? ஒருவேளை ஜீவி லவ் பண்ற விஷயத்தை அவருக்கிட்ட சொல்லி இருப்பாளோ?” திலீபன் குழப்பத்துடன் கேட்க,
“இல்லண்ணா. கண்டிப்பா இல்ல.. அவரு ஜீவிக்கா கிட்ட பேசினதே இல்ல.. ஏன்னா அவரு அன்னைக்கு பேசும்போதே இதைச் சொன்னாருண்ணா.. அதோட ஜீவிக்காகிட்ட நான் ஒருதடவ மாமாக்கிட்ட பேசினயான்னு கேட்டதுக்கு கூட அவ அவரு ரொம்ப பிசி அதனால நான் பேசலைன்னு சொன்னா. அப்படி இருக்க அவருக்கிட்ட அவ லவ் பண்ற விஷயத்தை எங்க சொல்லி இருக்கப் போறா? அதோட அன்னைக்கு எங்க கல்யாணம் முடிச்சு அங்க ஊருல எங்க வீட்டுக்கு போனோம்ல.. அங்க சேகர் அண்ணா அத்தைக்கிட்ட இப்போ இந்த கல்யாணம் நடக்கலைன்னாலும் இன்னும் ஒரு வருஷத்துல இவ படிச்சு முடிச்ச அப்பறம் இவளே தான் உன் மருமகளா வந்திருப்பான்னு சொன்னாரு..” என்று சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு அவன் கூறிய ‘லவ் யூ சோ மச் டா தேனு..’ என்ற சொற்கள் மனதினில் வந்து மோத, அவளது இதழ்கள் புன்னகையை தத்தெடுத்தது.
அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த திலீபனுக்கு, வெண்ணிலாவின் மனது தெள்ளத் தெளிவாய் புரிந்தது.. அந்த நேரம் வழக்கம் போல வெண்ணிலாவின் மொபைலுக்கு ஆர்யனின் கால் வந்து குதித்தது..
“ஹலோ.. மாமா.. ஆச்சு நாங்க கிளம்பிட்டோம்.. ஹான் அண்ணா வந்துட்டான்..” அவள் சொல்லவும்,
“சரிடா பட்டு.. ஒழுங்கா கிளாஸ் கவனி.. சாயந்திரம் பார்ப்போம்..” என்றவன், போனை வைத்துவிட, அனைத்தையும் சரிபார்த்து தனது பையை எடுத்துக் கொண்டு, கதவைப் பூட்டிக் கொண்டு அவள் கிளம்ப, திலீபனின் செல்லுக்கு ஆர்யனிடம் இருந்து மெசேஜ் வந்தது..
“நான் வெண்ணிலாவுக்கு மதியத்துக்கு லஞ்ச்க்காக ஒரு இடத்துல இருந்து வாங்கிட்டு வரச் சொல்லி ஆர்டர் செய்து இருக்கேன்.. அவங்கக்கிட்ட உன் நம்பரைத் தான் தந்திருக்கேன்.. அவங்க லஞ்ச டைம்க்கு சரியா உனக்கு கால் பண்ணுவாங்க.. நீ தான் சாப்பாடு வாங்கி அதை அவகிட்டக் கொடுக்கனும்.. ப்ளீஸ் திலீபா.. எனக்காக ஹெல்ப் பண்ணு..” என்று மெசேஜ் செய்திருக்க, அதை அவளிடம் காட்டியவன், உதட்டைப் பிதுக்கி,
“இங்கப் பாரேன்.. அவருக்காக ஹெல்ப் பண்ணணுமாம்ல.. ரொம்ப தான் இந்த மாமா பண்றாருடி பூனைக் குட்டி.. ஒரே தி உருகல்ஸ் தான் அவரோட வெண்ணி பேபி மேல..” என்று கேலி செய்தவனிடம்,
“தேனு பட்டு..” என்று வெண்ணிலா திருத்த, அவளது தலையை மென்மையாகக் கலைத்தவன், அவளை கல்லூரிக்கு அழைத்துக் கொண்டு சென்றான்.
மதிய இடைவேளையில் ஆர்யன் ஆர்டர் செய்த இடத்தில் இருந்து, ஒரு உணவு டெலிவரி நிறுவனத்தின் சேவையான, ஜீனியின் உதவியுடன் சரியாக அவர்களது உணவு இடைவேளைத் துவங்கிய சில நொடிகளில் திலீபனிடம் சேர்ப்பிக்கப்பட்டது. அதே நேரம் ஆர்யன் அவனுக்கு போன் செய்யவும்,
“இதோ வாங்கிட்டேன் மாமா.. அவக்கிட்ட கொண்டு கொடுத்துடறேன்..” என்ற திலீபனுக்கு, ஆர்யன் வெண்ணிலாவின் மேல் வைத்திருந்த அன்பு மெய் சிலிர்த்தது..
திலீபன் உணவைக் கொண்டு கொடுக்கவும், அதைப் பார்த்த வெண்ணிலாவின் தோழிகள் அவளைக் கிண்டல் செய்ய, “போங்கடி.. சும்மா இருங்க.. எனக்கு பசிக்குது.. நான் சாப்பிடப் போறேன்..” என்று அவர்களை அடக்கியவள், அந்த உணவை சந்தோஷமாக உண்டு விட்டு, அதன் ருசி குறித்து அவனுக்கு மெசேஜ் செய்து, இதய எமொஜியை அனுப்பி விட்டு, மாலை அவனைப் பார்க்கும் நேரத்திற்காக காத்திருந்தாள்…