மனதோடு மனதாக – 18

th (1)

மனதோடு மனதாக – 18

18

ஆர்யனும் வெண்ணிலாவும், பூரணி, சுபத்ராவைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்தனர். ஞாயிறு வழக்கம் போல, திலீபனுடனும் அவனது நண்பனுடனும், மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாட கிளம்பிக் கொண்டிருந்தான்.

“மாமா ரொம்ப நேரம் விளையாடாம சீக்கிரம் வாங்க.. இப்போ தான் உடம்பு சரியா போயிருக்கு.. நேத்து கூட நைட் அவ்வளவு டயர்டா இருந்தீங்க.” என்றவளிடம் தலையசைத்துவிட்டு ஆர்யன் மாடிக்குச் செல்ல, வெண்ணிலா, சுபத்ராவிடமும், பூரணியிடமும் பேசிக் கொண்டிருந்தாள்..

விளையாட்டின் நடுவில், “ஏன் திலீப் நீ உங்க அக்காக்கிட்ட பேசினயா?” திடீரென்று ஆர்யன் கேட்கவும், பந்தைப் போட வந்த திலீபன் ஆர்யனைத் திகைப்புடன் பார்த்தான்..

“மாமா..” ‘ஆர்யன் ஏன் திடீரென்று அவளைப் பற்றிக் கேட்கிறான்? வெண்ணிலாவின் காதில் விழுந்தால் என்ன ஆகும்?’ என்று நினைத்த திலீபன், புரியாமல் அவனைப் பார்க்க,

“ஏன் திலீபா ஷாக் ஆகுற? உங்க அக்காக்கிட்ட பேசினயான்னு தானே கேட்டேன்? நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. அவங்க கிட்ட பேசி எப்படி இருக்காங்க என்னன்னு கேட்டியா?” அக்கறையாக ஆர்யன் கேட்க, வெண்ணிலா அன்று குழப்பத்துடன் சொன்னது நினைவு வந்தது..

அந்த உண்மையை இப்பொழுது கண்டுபிடிக்கும் பொருட்டு, “உங்களுக்கு அவ அப்படி போனது வருத்தமா இல்லையா மாமா?” என்று கேட்க, ஆர்யன் தோளைக் குலுக்கினான்.

அவனது இதழ்கள் புன்னகையில் துடிப்பது போல திலீபனுக்குத் தோன்றியது.. “எனக்கு அத்தை மாமாவைப் பார்க்கும்போது தான் மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது.. ஜீவிதா முன்னாலேயே அவங்கக்கிட்ட சொல்லி இருக்கலாமோ? அட்லீஸ்ட் என்கிட்டயாவது அவங்க லவ் பண்ற விஷயத்தையோ இல்ல கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு கூட சொல்லி இருக்கலாமேன்னு தோணிச்சு.. மத்தப்படி எனக்கு எந்த வித வருத்தமும் இல்ல.. இப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. நீ பேசினயா?”  ஆர்யன் தனது பதிலைச் சொல்லிவிட்டு, அவனை மீண்டும் கேட்கவும்,

“இல்ல மாமா.. பேசல.. எனக்கும் அவ செஞ்சது மனசுக்கு கஷ்டமாவும், ஏமாற்றமாவும் இருந்தது. அம்மா எத்தனை நாளைக்கு அவளை நினைச்சு அழுதிருக்காங்க தெரியுமா? இதுல அவ கல்யாணம் பண்ணிக்கிட்டு அம்மாவுக்கு போட்டோவை அனுப்பி இருந்தா.. அடிக்கடி அந்த ஆளோட..” திலீபன் சொல்லிக் கொண்டே வர,

“மாமா..” என்று திருத்திய ஆர்யன்,

“அவரும் மாமா தான்.. மாமான்னு சொல்லு திலீப்.. யாரோ போல ஆளுன்னு எல்லாம் சொல்ற?” என்று கேட்க, திலீபன் உதட்டைச் சுழித்தான்..

திலீபன் அவனைப் பார்த்து, “எங்க குடும்பத்தோட மானத்தையே வாங்கினவங்களை நான் எப்படி மாமான்னு சொல்றது? அவர் வந்து தானே ஜீவிதாவைக் கூட்டிக்கிட்டு போயிருக்கணும்? அவர் வராம இருந்திருந்தா?” ஆர்யன் திருத்தவும், கோபத்தில் கேட்டவனைப் பார்த்தவன்,  

“வராம இருந்திருந்தா?” கூர்மையுடன் கேட்க, திலீபனுக்கே அவனது கேள்வியே அபத்தமாய் இருந்தது..

“ம்ப்ச்.. முன்னாலேயே அவ வீட்ல சொல்லி போராடி இருக்கலாம்ன்னு எனக்கு கோபம் தான் மாமா.. அட்லீஸ்ட் அவர் வந்து எங்க வீட்ல பேசி பொண்ணு கேட்டு இருக்கலாம்ல..” இறங்கிய குரலில் அவன் கேட்க, ஆர்யன் அவனது அருகில் வந்தான்.   

“தினமும் அவரு ரொம்ப நல்லவருன்னு சொல்ல அம்மாவுக்கு ஏதாவது சொல்லி மெசேஜ் செஞ்சிடுவா.. ‘அங்க போனேன் இங்க போனேன்.. அவரு இதை சமைச்சாரு.. நான் இதை செஞ்சேன்’னு தினமும் அவரு கூட போட்டோ வரும்.. அதைப் பார்த்து அம்மா அழுதுட்டு இருப்பாங்க.. அவங்களுக்கு வெண்ணிலா தான் ஆறுதல்.. அவ சந்தோஷமா இருந்தா தான் அவங்களுக்கும் சந்தோசம்..” வருத்தமாக அவன் சொல்ல,

“ஹ்ம்ம்.. அது தெரிஞ்சு தானே அன்னைக்கு அப்படி சொல்லிட்டு போனாங்க..” ஆர்யன் வாய்த் தவறி முணுமுணுக்க, அது திலீபனின் காதில் தெள்ளத் தெளிவாக விழுந்தது. 

அதைக் கேட்டதும் மேலும் திகைத்தவன், “மாமா.. இப்போ என்ன மாமா சொன்னீங்க? சொல்லிட்டு போனாங்களா? யாரு?” திலீபன் கேட்க, ஆர்யன் கண்களை இறுக மூடித் திறந்தான்.

அவனது அமைதி திலீபனைக் கலவரப்படுத்த, “மாமா.. ஜீவிதா போனது உங்களுக்குத் தெரியுமா மாமா? அவ உங்கக்கிட்ட சொல்லிட்டு தான் போனாளா? எப்போ சொன்னா மாமா? முன்னாலவா? இல்ல அப்பறமா?” திகைப்புடன் திலீபன் கேள்விகளை அடுக்க, ஆர்யன் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்தான்.

“சொல்லுங்க மாமா.. ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க? உங்களுக்கு அவ லவ் பண்ற விஷயம் முன்னவே தெரியுமா? ஏன் எங்ககிட்ட எல்லாம் சொல்லவே இல்ல.. உங்களுக்கு வருத்தமா இருந்ததுனால சொல்லலையா? மாமா ப்ளீஸ் சொல்லுங்க.. நீங்க இப்போ சொன்னதை நான் கேட்டுட்டேன்..” அவனது குரல் பதட்டத்தில் நடுங்கியது..

“அவங்க ராம் கூட கிளம்பிப் போகும்போது நான் பார்த்தேன்.. எவ்வளவோ உள்ள வந்து அத்தை மாமாக்கிட்ட பேசிட்டு போங்கன்னு சொல்லிப் பார்த்தேன்.. அவங்க கேட்கவே இல்ல.. ராம் கூட போயே தீருவேன்னு நிக்கறவங்களை கையைக் காலை கட்டி இழுத்துட்டா வர முடியும்? என்னோட மனநிலையையும் சொல்லி நான் உள்ள வந்து எதுக்கும் ஒருமுறை அத்தை மாமாக்கிட்ட பேசச் சொன்னேன்.. கேட்கவே இல்ல.. அதுக்கும் மேல நான் என்ன செய்யறது?” என்று கேட்க,

“என்ன? அவ கேட்கவே இல்லையா? உங்க மனநிலைன்னா? என்ன சொல்ல வரீங்க மாமா? எனக்குப் புரியல..” திலீபன் அதிர்ந்து கேட்கும் பொழுதே,

“உண்மையைச் சொல்லணும்னா எனக்கும் அந்தக் கல்யாணத்துல அவ்வளவு இஷ்டம் இல்ல திலீபா.. அம்மா சொன்னாங்கன்னு தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.. ஜீவிதாவ பார்த்து தனியா பேசணும்ன்னு சொன்ன பொழுது கூட ஒண்ணும் பெருசா பேசிக்கல.. நான் அவங்க எங்க வர்க் பண்றாங்கன்னு தெரிஞ்ச கேள்வியையே கேட்டேன்.. அதுக்கு ‘ஏன் உங்க வீட்டுல சொல்லலையா?’ன்னு கேட்டாங்க. அவ்வளவு தான் அப்போ பேசினதும்.. நான் எங்க அம்மாக்கிட்ட ‘வீட்டுல போய் பேசிட்டு சொல்றோம்’ன்னு சொல்லிட்டு கிளம்பிடலாம்ன்னு நினைச்சிட்டு வந்தா.. எங்க அம்மா நிச்சயத்துக்கு நாள் பார்த்து குறிச்சிட்டு இருக்காங்க. அதுக்கும் மேல நான் எதுவுமே பேசல.. எங்க அம்மாவோட ஆசைன்னு விட்டுட்டேன்..

ஆனா.. ஏதோ ஒரு சஞ்சலம் மனசுக்குள்ள இருந்துக்கிட்டே இருந்தது.. ஏனோ மனசுல கல்யாணம் எப்படியாவது நின்னுடனும்ன்னு ஒரு வேண்டுதல் இருந்துக்கிட்டே இருந்தது.. எனக்கு சரியா சொல்லத் தெரியல.. என்ன எல்லாம் கிறுக்குத் தனம் செஞ்சேன்னு எனக்குத் தான் தெரியும். அம்மாவுக்காக மண்டபம் வரை வந்துட்டேன்.. அப்போ கூட அதே எண்ணம் தான்.. அப்படியே கல்யாணம் நடந்தாலும் கோ வித் தி ஃப்லோன்னு மனசை தேத்திட்டு இருந்தேன்..

ஆனாலும் மனசுல ஒரு அலைப்புறுத்தல்.. இப்படியே மனசு குழம்பிட்டு இருந்த பொழுது, ராத்திரி தூக்கம் வராம நான் வெளிய நடக்கப் போனேன்.. உனக்குத் தெரியுமான்னு தெரியாது.. எனக்கு இடம் மாறினா தூக்கம் வராது.. தூக்கம் வராம யோசனை எங்கெல்லாமோ போகவும், சரிப்படாதுன்னு வெளிய சுத்திட்டு வரலாம்ன்னு போனேன்.. அப்போ தான் அவங்களைப் பார்த்தேன்..” ஆர்யனின் பதிலில்,

“ஏன் மாமா அவங்களைத் தடுத்து நிறுத்தல? உள்ள அவளை இழுத்துட்டு வந்து..” ஆதங்கமாக கேட்கத் தொடங்கியவன், ஆர்யனின் பார்வையில் பாதியிலேயே நிறுத்தினான்.

“வந்து? கையைக் காலைக் கட்டி எனக்கு கல்யாணம் செஞ்சித் தருவீங்களா? யோசியேன் திலீப்.. ஒருவேளை உங்க வீட்ல உள்ளவங்க மேல இருந்த பாசத்துல அந்தப் பையன மறக்க முடியாம இந்தக் கல்யாணமும் நடந்திருந்தா? எங்க மூணு பேரோட வாழ்க்கையைப் பத்தி யோசிச்சு பார்த்தியா? அவங்க அந்த நேரத்துல போனது தப்புத் தான்.. நான் இல்லைன்னு சொல்லலை.. ஆனா அதுல மூணு பேரோட வாழ்க்கை?

எனக்கு தெளிவா சொல்லத் தெரியல.. ஏன்னா நான் அந்த நேரம் அந்த மனநிலையில தான் இருந்தேன். ஒருவேளை நானே கடைசி நேரத்துல என் மனசு கேட்காம கல்யாணத்தை நிறுத்தி இருப்பேனோ? அதுவும் தெரியல.. எனக்கே புரியல திலீப். ஒரு மாதிரி எங்கயோ சிக்கிக்கிட்ட மாதிரி குழம்பி சுத்திட்டு இருந்தேன்..” ஆர்யன் சொல்லி முடிக்க,

“ஏன் மாமா? நிலாக் குட்டியைப் பிடிச்சதுனாலையா?” திலீபனின் கேள்வியில் ஆர்யன் திகைத்துப் போனான்.   

“வெண்ணிலாவாலயான்னு எல்லாம் என்னால அறுதியிட்டு சொல்ல முடியாது திலீப்.. ஏன்னா நான் தேனுவ அப்போ தான் முதல்முறையா பார்த்தேன்.. கல்யாண புடவை எடுக்கப் போகும் போது ப்ரியா சொன்னதை வச்சு தான் எனக்கு ஜீவிதாவுக்கு தங்கை இருக்குன்னே தெரியும்.. மே பி என்னோட டைலமாவுக்கு தூபம் போட்டது வேணா மை தேனம்மாவா இருக்கலாம். ஆனா முன்னால இருந்தே எனக்கு கல்யாணம் நடக்க வேண்டாம்.. அவ்வளவு தான்..” என்றவன், திலீபன் அவனைக் கூர்மையுடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,

“ஜீவிதாவை நான் உங்க வீட்ல பேசிட்டு போங்கன்னு சொல்லச் சொல்லக் கேட்கவே இல்ல. நீங்க என்ன வேணா செய்ங்க.. நான் போகத் தான் போறேன்னு கிளம்பவும், நான் என்ன செய்வேன்? ஆனா.. உண்மையைச் சொல்லணும்ன்னா மனசுல அப்படி ஒரு நிம்மதி.. நான் முன்ன சொன்னா மாதிரி, ஜீவிதா போகாம இருந்தா, மனசுல அன்னைக்கு இருந்த குழப்பத்துல நானே கல்யாணத்தை நிறுத்தி இருப்பேனோ என்னவோ? எனக்கு புரியாத புதிர். அதுக்கான பதிலை எனக்கு கண்டிப்பா சொல்லத் தெரியல. போய் படுத்தவன் தான் நல்லாத் தூங்கிட்டேன். கல்யாணம் நின்னுடுச்சு.. காலையில எழுப்பி வீட்டுக்கு போகலாம்ன்னு சொல்லிடுவாங்கன்னு தான் நான் நினைச்சிட்டுப் படுத்தேன்..

ஆனா.. காலையில அம்மாவும் மாமாவும் என்னை எழுப்பி வெண்ணிலா தான் பொண்ணுன்னு சொன்னாங்க. எனக்கு எப்படி இருந்ததுன்னு நிஜமாவே சொல்லத் தெரியல.. இது கனவா நினைவான்னு குழம்பிட்டு இருந்தேன்.. அந்த நேரம் நான் தூக்கம் வராம சுத்தினது என் தேனுவாலையா? தேனுவே எனக்கு மனைவியா கடைசி நிமிஷத்துல முடிவானது என் நல்ல நேரமா? நானும் அதுக்கான பதிலை பலநாள் யோசிச்சு இருக்கேன்.. அதோட முடிவு, எனக்கே சரியா தெரியாம, புரியாம இருந்ததுனால நான் அதை அப்படியே விட்டுடுவேன்..” என்ற ஆர்யன், தான் சொன்னவற்றை உள்வாங்கிக் கொண்டு அமைதியாக நின்றிருந்த திலீபனைப் பார்த்து,

“ஐ லவ் மை தேனு எ லாட்.. என் உயிர் அவ தான்.. விந்தை என்ன தெரியுமா? ஜீவிதாவ கல்யாணம் பண்ணிக்க முரண்டின என் மனசு, வெண்ணிலா தான் பொண்ணுன்னு சொன்ன உடனே எந்த வித எதிர்ப்பையும் காட்டல.. உள்ளுக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம் இருக்கவே செய்தது..” என்றவன், திலீபனைப் பார்த்து,

“ராம் நல்லவன் தான்.. நான் அவரைப் பத்தி எனக்கு தெரிஞ்ச வட்டத்துல எல்லாம் விசாரிச்சிட்டேன்.. அவரோட ஆபீஸ்ல வர்க் பண்ற ஒரு சீனியர் ஆர்கிடெக்ட் என்னோட ஃப்ரெண்ட் தான்.. அவரை விட்டு நான் ராமோட டீம்லையும், அவரோட ஃப்ரெண்ட்ஸ் கிட்டையும் நல்லா விசாரிக்க சொன்னேன்.. எல்லாருமே நல்லவிதமா தான் சொன்னாங்க.. அண்ட் அவருக்கு ஜீவிதான்னா ரொம்ப உயிராம்.” ஆர்யன் சொன்னத் தகவலைக் கேட்டு திலீபன் திகைத்து நின்றான்.

“நான் ஜீவிதாக்கிட்ட கண்டிப்பா ஒரு நல்ல ப்ரெண்டா இருப்பேன்.. எந்த ஹெல்ப்னாலும் தயங்காம கேளுங்கன்னு சொல்லி தான் அனுப்பினேன்.. அதை நான் காப்பாத்தவும் செய்வேன்.. செஞ்சிக்கிட்டு தான் இருக்கேன்..” என்ற ஆர்யன், திகைப்பு விலகாமல் திலீபன் நிற்கவும், அவனது தோளைத் தட்டி,

“சாரி திலீப்.. ஆனா அவங்க அந்த முடிவை எடுக்கவும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.. ரொம்ப அழுதாங்க. அவங்க அம்மாவை மிஸ் பண்றதைத் தவிர ராம் அவங்களை சந்தோஷமா பார்த்துக்கறார்.. இதெல்லாம் ராம் என்கிட்டே சொன்னது.. ராம் தான் அப்பப்போ வீடியோ கால்ல கூப்பிடுவார்.. இல்ல மெசேஜ் செய்வாரு.. பாவம் ரெண்டு பேருக்குமே வீட்ல அக்ஸப்ட் பண்ணிக்கல.. அதுனால என்கிட்டே பேசறாங்க போல..” ஆர்யன் சொல்லிவிட்டு, ஒரு பெருமூச்சுடன் திலீபனைப் பார்க்க,

அதுவரை அமைதியாக இருந்த அவனது நண்பன் ஆர்யனிடம், “ஒருவேளை அப்போ வெண்ணிலாவை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு இவங்க சொல்லாம, கல்யாணம் நின்னு இருந்தா என்ன மாமா செஞ்சு இருப்பீங்க?” என்று கேட்க,

“கொஞ்ச நாள் கழிச்சு அவளை காலேஜ்ல போய் மீட் பண்ணி பேசி இருப்பேன்.. இந்தக் கல்யாணம் அடுத்த வருஷம் நடந்து இருக்குமா இருக்கும்.” என்ற ஆர்யன், திலீபன் திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, சிறிது நேரம் நின்றுப் பார்த்துவிட்டு,

“நாங்க வீட்டுக்கு கிளம்பறோம் திலீப்.. நாளைக்கு ஆபிஸ் இருக்கு.. பை டா..” என்றபடி தோளைத் தட்டிவிட்டு அங்கிருந்து படிகளில் இறங்க, வெண்ணிலா அவனை அழைப்பதற்காக படிகளில் ஏறிக் கொண்டிருந்தாள்.

“மாமா.. நீங்களே வந்துட்டீங்களா? இப்போ தான் உடம்பு சரியா போயிருக்கு.. ரொம்ப விளையாடாதீங்கன்னு சொல்லி கூட்டிட்டு போக வந்தேன்.. நாம வீட்டுக்குப் போகலாமா மாமா? நாளைக்கு எக்ஸாம் வேற இருக்கு..” என்றவள், ஆர்யன் அருகில் வரவும், அவனது முகத்தைத் துடைத்து விட, ஆர்யன் அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

அவனது அப்போதைய மனநிலையில் அவனுக்கு அவளது அருகாமைத் தேவைப்பட்டது. வீட்டிற்கு வந்ததும் அவளது எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு இறுக அணைத்தவன், அவள் கேள்வியாகப் பார்க்கும்பொழுதே, பதில் சொல்லாமல் தனது ப்ளே ஸ்டேஷனுடன் அமர்ந்தான்.

விளையாடினாலும், அவனது கவனம் அதில் இல்லாமல் போகவும், அதனை வைத்துவிட்டு, யோசனையுடன் சுற்றிக் கொண்டிருக்க, படிக்கும் மும்முரத்தில் இருந்த வெண்ணிலா, அவனது அமைதியை கவனித்தாலும் அதைப் பற்றி கேட்காமல் போனாள்.   

மறுநாள் காலையில் வெண்ணிலா கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்க, காலிங் பெல் அடிக்கும் சத்தத்தில் கதவைத் திறந்தவள், அங்கு நின்றுக் கொண்டிருந்த திலீபனைப் பார்த்து கண்களை விரித்தாள்.

“டேய் அண்ணா. என்ன நீ வந்திருக்க? மாமா வரச் சொன்னாரா?” கேட்டுக் கொண்டே திரும்பி டைனிங் டேபிளில் அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யனைப் பார்த்தாள்.

“மாமா வரச் சொல்லல.. நான் தான் மாமாவைப் பார்க்க வந்தேன்.. வழி விடு..” என்றவன், கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யனின் அருகில் சென்று,

“மாமா.. ஐம் சாரி மாமா..” என்று கட்டிக் கொள்ள, வெண்ணிலா இருவரையும் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள்.  

“அடேய்.. என்னடா ஆச்சு? ஏன் இப்போ வந்து கட்டிப்பிடிக்கற? அங்க உன் தங்கச்சி உன்னை முறைக்கிறா பாரு.. ரெண்டு பேரையும் அப்படியே பால்கனி வழியா தொங்க விட்டுடுவா.” என்று கேலி செய்ய, திலீபன் திரும்பிப் பார்க்கவும், வெண்ணிலா அதே போலவே இருவரையும் முறைத்துக் கொண்டிருக்க,

“ஹிஹிஹி சாரி மாமா..” என்று விட்டு நகர்ந்து அமர்ந்தான்.         

“என்ன நடக்குது இங்க? ஏன் இவன் வந்து இப்போ கட்டிப்பிடிக்கறான் ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா? அது தான் நேத்து எல்லாம் முகம் அப்படி இருந்ததா?” இருவரையும் பார்த்து கேள்வி கேட்க, இருவரும் மறுப்பாக தலையசைத்து ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்ள, இருவரையும் அடித்தவள்,

“போங்கடா நீங்களும் உங்க விளையாட்டும்.. நான் போய் கிளம்பறேன்..” என்று சொன்னவள், ஆர்யனை முறைக்க, அவன் புறம் சாய்ந்த திலீபன்,

“நான் நேத்து நைட் ஜீவிக்கு மெசேஜ் பண்ணினேன்.. அவ உடனே கால் பண்ணிட்டா.. நாம பேசினது எல்லாம் சொன்னேன்.. அவ நீங்க சொன்னதே தான் சொன்னா.. அதோட நீங்க அவ உங்களுக்கு செட் ஆக மாட்டான்னு சொன்னீங்க போலவே..” திலீபன் சொல்லிவிட்டு நக்கலடிக்க, ஆர்யன் தோளைக் குலுக்கினான்..  

“ஆமா.. உங்க லவ்வை இந்த நிலாக் குட்டி கிட்ட சொல்லிட்டீங்களா?” என்று கேட்க,

“என் தேனு பட்டு கிட்ட அப்போ அப்போ அவ தூங்கும்போதோ, இல்ல அரைத் தூக்கத்துல இருக்கும்போதோ சொல்லுவேன்.. இந்த அரையடி ஆழாக்கு என்னை கவுத்து படுத்தி எடுக்கறா..” சிரித்துக் கொண்டே சொன்னவனைப் பார்த்து புன்னகைத்த திலீபன்,

“எப்படி எப்படி நிலாவை அப்பறம் மீட் பண்ணி லவ் பண்ணி இருப்பீங்களா?” கேலி செய்ய,

“ஆமா.. ஆமா.. நான் காலேஜ் படிக்கும்போது செய்யாததை எல்லாம் இப்போ செஞ்சி இருப்பேன்.. அவ பின்னால சுத்தி வந்து லவ் பண்ணி இருப்பேன்..” என்று கண்ணடித்தவன், திலீபன் நக்கலாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே,

“பாடிகார்ட்டா நீ அவ கூட வந்து போனாலும்.. உன்னை மீட் பண்றது போல மீட் பண்ணி அவளை கரக்ட் பண்ணி இருப்பேன்.. அவளை மேல நானே படிக்க வச்சுக்கறேன்னு சொல்லி கல்யாணம் பண்ணி இருப்பேன்..” என்று கண்ணடிக்க,

“அடப்பாவி மாமா.. இப்படி பக்காவா ஸ்கெட்ச் போட்டு வச்சிருக்கீங்களே.. இந்த விஷயம் எல்லாம் அவளுக்குத் தெரிஞ்சா?” திலீபன் வாயில் விரல் வைத்துக் கொள்ள, அந்த நேரம் கல்லூரிக்கு கிளம்பி நின்றவளை இருவரும் திரும்பிப் பார்த்துவிட்டு, தங்களது பேச்சைத் தொடர்ந்தனர்.   

அதில் கடுப்பானவள், “யாரு என்னைக் கூட்டிட்டு போகப் போறீங்க? இல்ல நான் கால் டாக்சில போகவா?” என்று மிரட்டவும், ஆர்யன் எழுந்துக் கொள்ள,

“நீங்க இருங்க மாமா.. நான் காலேஜ்க்கு தானே போறேன்.. நானே கூட்டிட்டு போறேன்.. சும்மா எதுக்கு நீங்க அலைஞ்சிக்கிட்டு இருக்கீங்க?” திலீபன் சொல்லவும், வெண்ணிலாவின் பார்வை ஆர்யனை தீண்ட, அவளது முகத்தைப் பார்த்தவன்,

“இல்ல திலீப் நானே அவளை கொண்டு விடறேன்..” திலீபனுக்கு பதில் சொன்னவன்,  

“வாடா தேனு நான் கூட்டிட்டு போறேன்.. இரு நான் டீம்ல சொல்லிட்டு வரேன்..” என்றவன், மெசேஜ் போட்டுவிட்டு சாவியை எடுக்க, மகிழ்ச்சியுடன் அவனது கையைக் கோர்த்துக் கொண்டவள், அவனுடன் கல்லூரிக்குச் செல்ல, திலீபனின் மனம் நிறைவதாய்..

மதியம் பரீட்சை முடித்து திலீபனுடன் வீட்டிற்கு வந்த வெண்ணிலாவின் முகத்தைப் பார்த்த ஆர்யனின் பார்வை திலீபனை நோக்கித் திரும்பியது. அவன் ஒரு காலில் பேசிக் கொண்டிருக்க, அவனது ஸ்க்ரீனை எட்டிப் பார்த்து, அவனைக் கேள்வியாகப் பார்க்க,  

“எஸ்.. ஐ வில் பி தேர் பை நெக்ஸ்ட் வீக்.. யா வில் கெட் ரெடி டு ஃப்ளை பை நெக்ஸ்ட் வீக் என்ட்..” என்று பேசிக் கொண்டே அருகில் நின்று அவனையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலாவின் முகத்தைப் பார்த்தான்.   

திலீபனும் குழப்பத்துடன் அவனைப் பார்க்க, ‘சாப்பிட்டு வாங்க..’ இருவரைப் பார்த்து சைகைக் காட்டிய ஆர்யன், தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, அதைக் கேட்டுக் கொண்டே உண்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

அவன் பேசுவதில் இருந்தே அலுவலக விஷயமாக அவன் எங்கோ செல்லப் போகிறான் என்று புரிய, வெண்ணிலாவின் முகம் சுருங்கத் துவங்கியது.. கண்கள் கலங்க, பரிதாபமாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளது முகத்தைப் பார்த்த திலீபன், அவளது கையை அழுத்தினான்..

கால் பேசி முடித்து அவன் ஹெட்போன்சை கழட்டவுமே, “என்ன மாமா? என்னை விட்டுட்டு எங்க போகப் போறீங்க?” படபடவென்று வெண்ணிலா கேட்க, ஆர்யன் அவளது கையைப் பிடித்துக் கொண்டான்..

“தேனு.. என்னை க்ளையன்ட் அங்க வரச் சொல்றாங்கடா.. அடுத்த வாரம் கிளம்பச் சொல்லி ஆபிஸ்ல சொல்றாங்க.. அது தான் பேசிட்டு இருந்தோம்..” ஆர்யன் சொல்லி முடிப்பதற்குள்,

“எப்போ போகணும்? எத்தனை நாளைக்கு போகணும்? எங்கப் போகணும்?” கண்களில் கண்ணீர் முட்ட கேட்டவளின் கன்னத்தைத் தாங்கியவன்,   

“ஆஸ்ட்ரேலியாவுக்கு தான் போகணும்.. அடுத்த வீக் எண்ட் கிளம்பணும்.. ரெண்டு மாசத்துக்குடா தேனுபட்டு..” அவன் சொல்லி முடிப்பதற்குள், அவனது மனையாட்டியோ அவன் தோளில் சாய்ந்து தேம்பத் துவங்கினாள்..

“ரெண்டு மாசம் உங்களை விட்டு நான் எப்படி இருப்பேன் மாமா? இல்ல என்னை விட்டு உங்களால தான் இருக்க முடியுமா?” அழுகையினூடே அவள் கேட்க, அவளது முகத்தை நிமிர்த்தி கண்களைத் துடைத்தவன்,

“இல்லடா என்னாலயும் இருக்க முடியாது.. ஆனா.. இன்னும் பதினஞ்சு நாள்ல உனக்கு கராக்டா எக்ஸாம் இருக்கேடா செல்லம்மா.. உன்னால எப்படி என் கூட வர முடியும்? எக்ஸாம் உனக்கு முக்கியம்மில்லையா?” என்று கேட்டவன், அவளது முதுகை வருடி,

“அடுத்த மாசம் ஸ்ருதி வருவா.. உனக்கு எக்ஸாம் முடியற அன்னைக்கு டிக்கெட் புக் பண்ணற மாதிரி பார்த்துக்கறேன். நீ அவ கூட வா.. உனக்கும் எக்ஸாம் முடிஞ்சு லீவ் விட்டுடும்.. நாம ஒரு மாசம் அங்க இருந்து சுத்திப் பார்த்துட்டு, ரெண்டு பேரும் சேர்ந்து திரும்ப வந்துடலாம். என்ன சொல்ற?” ஆர்யன் கேட்கவும், பட்டென்று நிமிர்ந்துப் பார்த்து,

“நானும் வரேனா?” என்று கண்களை விரிக்க, தலையை ‘ஆம்’ என்பது போல அசைத்தவன்,

“ஆமாடா.. நான் உனக்கு ஸ்ருதி கூட டிக்கெட் புக் பண்ணச் சொல்றேன்.. சரியா?” என்றவன், அருகில் இருந்த திலீபனைப் பார்க்க, திலீபன் கை கழுவுவது போல எழுந்துச் சென்றான்.         

“நாம ஹனிமூன் போகலாமா?” அவளது காதில் ரகசியமாகக் கேட்க, அதுவரை அழுது கொண்டிருந்தவளின் முகம் நாணத்தில் சிவந்தது..

அவனது தோளிலேயே முகத்தைப் புதைத்துக் கொள்ள, “உன்னோட பாஸ்போர்ட் எங்க இருக்கு? நான் மத்த வேலை எல்லாம் பார்க்கறேன்.. நான் ஊருக்கு கிளம்பும்போதே உனக்கும் சேர்த்து பெட்டி பேக் பண்ணிடலாம்..” ஆர்யன் தனது திட்டத்தைச் சொல்ல, வெண்ணிலா இப்பொழுது அவனைப் பாவமாகப் பார்த்தாள்..

“எக்ஸாம் இல்லாம காலேஜ் மட்டும்ன்னா லீவ் போட்டு கூட்டிட்டு போயிடுவேன்டா.. எக்ஸாம் இருக்கு.. மிஸ் பண்ண முடியாது.. அதும் என் தேனு சூப்பரா படிச்சு இருக்கற எக்ஸாம் எல்லாம் எப்படி மிஸ் பண்ணுவா?” என்று சமாதானம் செய்ய,

“ஏன் மாமா உங்களுக்கு என்னை விட்டுட்டு போறது கஷ்டமா இல்லையா மாமா? ஜாலியா என்னை சமாதானம் செய்துட்டு இருக்கீங்க? நான் தான் இங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்.. உங்களுக்கு என் மேல பாசமே இல்ல.. போங்க.. ஜாலியா கிளம்பிப் போங்க..” அவள் மீண்டும் அழ,

“எனக்கு மட்டும் ஜாலியாடா தேனு? உன்னை இங்க விட்டுட்டு போனாலும் என் மனசு உன்கிட்ட தானேடா இருக்கும். ஒரே மாசம் தான்.. எக்ஸாம் முடிச்சு ஓடி வந்திரு.. உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்..” அவன் சமாதானம் செய்துக் கொண்டிருக்கும் பொழுதே, மீண்டும் அவனுக்கு அழைப்பு வர, வெண்ணிலா நகர்ந்துக் கொள்ள, திலீபன் அவளைச் சமாதானம் செய்யத் துவங்கினான்..           

error: Content is protected !!