மனதோடு மனதாக – 19

மனதோடு மனதாக – 19
19
வெண்ணிலாவின் அழுகையை திலீபன் சமாதானப்படுத்த, ஆர்யன் செய்வதறியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. சிறிது நேரம் அவளிடம் செல்ல முடியாத அளவிற்கு அவனுக்கு கால் மேல் கால் வந்துக் கொண்டிருக்க, அவனது அருகில் இருந்த வெண்ணிலாவின் கையை எடுத்து தனது கையில் வைத்து பொத்திக் கொண்டான்.
தேம்பிக் கொண்டே அவனது முகத்தைப் பார்க்க, தனது லாப்டாப்பின் நோட்பேடை ஓபன் செய்து, அவன் எதுவோ டைப் செய்ய, வெண்ணிலாவின் பார்வை கண்ணீருடன் அந்தப் பக்கம் திரும்பியது.. அவளது கண்களைத் துடைத்தவன், ‘இங்கப் பாரு.’ என்று சைகை காட்ட, அதில் அவன் எழுதி இருந்ததைப் பார்த்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது..
“ஐ லவ் யூ தேனு.. நீ அழுதா நானும் அழுவேன்.. விட்டுட்டு போறதுக்கு சாரி.. மீ பாவம்..’ என்பதையே அவன் பலமுறை எழுதி இருக்க, அவனது தோளில் செல்லமாக அடித்து, தோளில் முட்டி,
“அப்படியே ஒரு தடவ அடிச்சுட்டு இவ்வளவு தடவ காபி பேஸ்ட் பண்ணிட்டீங்க போல..” என்று கேலியாகக் கேட்க, அவள் கேட்ட விதத்தில் கண்ணடித்துச் சிரித்தவன், அவளது கையை எடுத்து தனது இதழ்களில் ஒற்றிக் கொண்டு, மீண்டும் தனது பணியைத் தொடர, திலீபன் அவன் வரும்வரை அமைதியாக வெண்ணிலாவுடன் அமர்ந்தான்.
ஒருவழியாக கால் பேசிவிட்டு ஆர்யன் தனது ஹெட்போன்சை எடுத்த உடனேயே வெண்ணிலாவை தனது அணைப்பிற்குள் கொண்டு வந்தவன், அவளது தலையை மென்மையாக வருடிக் கொடுத்தான்.
அவள் தலை நிமிர்ந்துப் பார்க்க, “எனக்கு மட்டும் உன்னை விட்டுட்டு போறது ஜாலியா இருக்கா என்ன? எக்ஸாம் இல்லைன்னா நான் உன்னை கூடவே கூட்டிட்டு போயிடுவேன்டா தேனு. உன்னை விட்டுட்டு என்னால ஒரு நிமிஷம் இருக்க முடியாது..” என்றவன், அவளது நாடியைப் பிடித்து நிமிர்த்தி,
“உனக்கு எக்ஸாம் இருக்கு… உன் எக்ஸாம் முடிஞ்ச உடனே நாம சேர்ந்து போகலாம்ன்னா அங்க வேலை அது வரை நிறுத்தி வைக்க முடியாது. ரொம்ப முக்கியமானதுனால தான் உடனே வர சொல்லி இருக்காங்க. நான் போகாம இருக்க முடியாது இல்ல..” என்றுக் கேட்கவும், வெண்ணிலா தலையை மேலும் கீழுமாக அசைக்க, அவளது நெற்றியில் இதமாக முத்தமிட்டவன்,
“இப்போ எக்ஸாம் மிஸ் பண்ணிட்டு நீ அடுத்த செம்ல எழுதி பாஸ் பண்ணிட்டா கூட.. அந்த அரியர் உன்னோட ஹையர் ஸ்டடீஸ்க்கோ, இல்ல ஜாப்க்கு சேரவோ இடைஞ்சலா இருந்துடக் கூடாதுடா பட்டு.. நான் உன் படிப்பு கெட்டுப் போகாம பார்த்துக்கறேன்னு உங்க பெரியப்பாவுக்கு ப்ராமிஸ் பண்ணி இருக்கேன்.. நாம ஜாலியா சுத்தறதுனால அந்த ப்ராமிசை நிறைவேத்த முடியலைன்னா எனக்கு மனசு கஷ்டமா இருக்கும்.. ரொம்ப குற்ற உணர்வா இருக்கும். நான் மனசு கஷ்டப்பட்டா அது உனக்கும் கஷ்டம் தானே.. என்னோட க்ரைம் ரேட்டை ஏத்திக்கிட்டே போகாதே தேனு.. மீ பாவம்..” சீரியசாக சொல்லிக் கொண்டே வந்தவன், இறுதியில் கேலியாக முடிக்க, அதன் அர்த்தம் புரிந்த திலீபன் சிரித்துவிட, வெண்ணிலா அவனை புரியாமல் பார்த்தாள்.
“பின்ன என்னடா தங்கம் செய்யறது? என் க்ரைம் ரேட் இப்படி கூடிக்கிட்டே போச்சுன்னா உன் மாமன் என்ன செய்வேன் சொல்லு? ஒரே ஒரு மாசம் தான்.. நாம டிஸ்டன்ஸ்ல இருந்து லவ் பண்ணலாம்.. அப்பறம் நீ வந்த உடனே, ரெண்டு பேரும் கையைக் கோர்த்துக்கிட்டு ஆஸ்ட்ரேலியாவை சுத்திப் பார்க்கலாம். சரியா?” என்று பேசி, மெல்ல அவளைச் சமாதானம் செய்தவன்,
“எனக்கு பேக் பண்ணும்போதே உனக்கும் சேர்த்து ஷாப்பிங் பண்ணி பேக் பண்ணிடலாம்.. சரி.. இப்போ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு படி.. நாளைக்கு ஷாப்பிங் போகலாம்..” என்றவன், சோம்பல் முறிக்க, வெண்ணிலா அவசரமாக தனது புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர, அவளது கையில் இருந்த புக்கை எடுத்து வைத்தவன்,
“உன்னை ரெஸ்ட் எடுத்துட்டு படிக்கச் சொன்னேன்.. இப்போவே படிக்க வேண்டாம்..” என்றபடி அவளது கன்னத்தைத் தட்டி,
“திலீப்.. வா.. நாம பிஎஸ்ல கேம் விளையாடலாம்..” என்று அவனை அழைக்கவும்,
“நானும் வரேன்.. நானும் வரேன்..” என்றவள், ஆர்யனின் மேல் சாய்ந்து அமர்ந்து, அவனது கையில் இருந்த கண்சீலரை பிடுங்கி, இருவருடனும் சேர்ந்து விளையாட, வெண்ணிலா ஓரளவிற்கு ஆர்யனின் பயணத்தை மறந்து இயல்பாகத் துவங்கினாள்.
அடுத்த இரண்டு நாட்களும் வெண்ணிலாவிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் நேரம் கழிய, அவனது கையைப் பிடித்துக் கொண்டு தனக்காக அவன் வாங்கும் துணிகளையும், பொருட்களையும் பார்த்தவள், அவனது அன்பில் கரைந்தே போனாள்..
“மாமா.. ரொம்ப மாடர்ன் ட்ரெசா வாங்கிட்டு இருக்கீங்க? இதெல்லாம் உங்க அத்தை பூரணி பார்க்கணும்.. பத்திரகாளி ஆகிடுவாங்க..” அவள் கேலி செய்ய,
“என் பொண்டாட்டிக்கு நான் போட்டு அழகு பார்க்கறேன்.. இதுல அவங்களுக்கு என்ன? அவங்க பொண்ணுக்கு வேணா வாங்கித் தர வேண்டாம்..” என்றவன், அனைத்தையும் ரசனையுடன் அவளுக்கு வாங்கிக் குவித்தான்.
அவன் ஊருக்கு கிளம்பும் நாளிற்கு முந்தய நாள் பிருந்தா, சேகர், ப்ரியா, அவனை வழியனுப்ப வந்திருந்தனர்.. வெண்ணிலா ப்ராக்டிகல் தேர்விற்கு சென்றிருக்க, அவளுக்குத் தேவையான பொருட்களை ஆர்யன் தனியாக எடுத்து வைக்கத் துவங்கினான்..
“என்னடா பண்ணிட்டு இருக்க?” சேகர் கேட்க,
“வெண்ணிலாவோட புக்ஸ் எல்லாம் எடுத்து வைக்கிறேன் மாமா.. எக்ஸாம் இருக்கு இல்ல.. எதையாவது மிஸ் பண்ணிட்டா அவ இங்க வந்து எடுக்கணும்.. டிரஸ் எல்லாம் கூட அங்க இருக்கு. புக்ஸ் எதுவுமே மிஸ் பண்ணக் கூடாது இல்ல..” என்றபடி, ஒவ்வொன்றையும் பார்த்து எடுத்து வைக்கவும், அதைக் கேட்டுக் கொண்டு வந்த பிருந்தா,
“ஏண்டா அவளோட புக்ஸ் எல்லாம் உனக்கு எது வேணும்.. வேண்டாம்ன்னு தெரியுமா? என்னவோ தெரிஞ்சா மாதிரி செய்யற?” என்று கிண்டலாகக் கேட்க,
“எனக்குத் தெரியாமையா? அவ படிக்கும் போது நானும் கூட இருப்பேனே.. அதனால தெரியும்மா..” என்றவன், அவளுக்கான பொருட்களை பார்த்துப் பார்த்து எடுத்து வைக்க, பிருத்தா அவனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் ஊருக்குச் செல்லும்பொழுது அவளை பூரணியிடம் விட்டுச் செல்வதாக இருவரும் பேசி முடிவெடுத்திருந்தனர்..
அவன் எடுத்து வைக்கும் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிருந்தா, அவனது தலையை வருடி, “ஆரி..” என்று மென்மையாக அழைக்க,
“என்னம்மா..” என்றவன், அவரை நிமிர்ந்துப் பார்த்தான்.
“சந்தோஷமா இருக்கியா ராஜா?” அவர் கேட்கவும், அவரது இரண்டு பக்க கன்னத்தையும் கைகளில் தாங்கியவன்,
“ரொம்ப சந்தோஷமா இருக்கேன்மா. ஏன் இப்படி கேட்கறீங்க?” என்று கேட்கவும்,
“இல்லடா.. திடுதிப்புன்னு வெண்ணிலாவோட கல்யாணத்தை நடத்திட்டோம்.. உனக்கு பிடிச்சிருக்கா? என்ன ஏதுன்னு கேட்கறேன்?” அவர் இழுக்க, ஆர்யனின் இதழ்களில் புன்னகை அரும்பியது.
“அம்மா.. எங்களுக்கு கல்யாணம் நடந்து நாலு மாசம் ஆகுது. இப்போ வந்து இந்தக் கேள்வி கேட்கறீங்க?” சிரித்துக் கொண்டே கேட்க,
“இல்ல.. அவளுக்குத் தேவையானதை எல்லாம் பார்த்துப் பார்த்து நீ எடுத்து வைக்கிறது பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. எனக்கு உன் வாயால கேட்கணும் ஆரி.. சொல்லுடா.. சந்தோஷமா இருக்கியா?” பிருந்தா அவனது வாயில் இருந்து வரும் வார்த்தைக்கு ஆவலாய் காத்திருக்க, அவரது மடியில் தலை சாய்த்துக் கொண்டான்.
அவனது தலையை அவர் ஆறுதலாக வருட, “நானும் வெண்ணிலாவும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்மா..” என்றவன், அவரது முகத்தை நிமிர்ந்துப் பார்த்து,
“அவளை இந்த ஒரு மாசமே விட்டுட்டு போறது எனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு.. அவளோட முகத்தைப் பார்க்காம, அந்த நாள் எனக்கு துவங்கறது ரொம்ப கஷ்டம் தான்.. அன்னைக்கு நீங்க செஞ்ச நல்ல காரியம் அது தான்..” அவன் பீடிகைப் போடவும்,
“எது?” பிருந்தா கேலியாக கேட்க,
“துரை அவளை கல்யாணம் செஞ்சு வச்சதை தான் சொல்றாரு.. அவ பின்னால திரியற வேலையை மிச்சம் செஞ்சு இருக்க இல்ல..” சேகர் கேலியாகச் சொல்லவும், ஆர்யன் அவனைப் பார்த்து கண்ணடித்தான்..
“ஆமாம்மா.. அவளை கரக்ட் பண்ண அவ பின்னால சுத்தணும்.. அவக்கூட பாடிகார்ட் போல வர அவ அண்ணனை நான் சரி பண்ணனும்.. அப்பறம் அவ மனசுல இடம் பிடிக்கணும்.. அப்பறம் கல்யாணம் பண்ணனும்.. நீ செஞ்ச வேலைல எனக்கு எவ்வளவு வேலை மிச்சமாகி இருக்கு பாரு. இப்போ டைரக்ட்டா எனக்கு சீட் கன்ஃபார்ம் பண்ணிட்டீங்க இல்ல.. அதுக்கு உங்களுக்கு ஒரு உம்மா..” என்று அவரது கன்னத்தில் முத்தமிடவும், அவனது தலையில் நறுக்கென்று கொட்டியவர்,
“போடா.. அதெல்லாம் உன் பொண்டாட்டிக்கு கொடுடா எரும மாடு..” என்றவர் சந்தோஷமாக எழுந்து செல்ல,
“நான் போய் என் பொண்டாட்டியை கூட்டிட்டு வரேன்.. அவ வெயிட் பண்ணிட்டு இருப்பா..” என்ற ஆர்யன் வெண்ணிலாவை அழைக்கக் கிளம்பினான்.
வீட்டிற்குத் திரும்பியவளின் குரல், வாசலிலேயே பிருந்தாவிற்கு தெளிவாகக் கேட்டது. “மாமா.. அந்த ப்ரோக்ராம் நீங்க சொல்லிக் கொடுத்தா மாதிரியே செஞ்சேன்.. ரொம்ப ஈசியா இருந்தது. அப்பறம் மாமா.. புக்ஸ் எல்லாம் எடுத்து வைக்கணும் இல்லையா? பேசாம இந்த எக்ஸாமை எல்லாம் ஆன்லைன்ல வச்சா நல்லா இருக்கும் இல்ல.. நான் உங்க கூடவே வருவேன். அங்க இருந்தே எக்ஸாம் எழுதுவேன்.. அப்படி எல்லாம் நம்ம ஊர்ல எதுவும் இல்லையா? நான் மேல படிக்கிற போது அப்படி ஒரு காலேஜ்ஜா பார்த்து சேரணும்.. அப்போ தான் நீங்க எங்க போனாலும் உங்க கூடவே வரலாம்..” ஆர்யனிடம் வம்பு வளர்த்துக் கொண்டே கதவைத் திறக்க, ஹாலில் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த பிருந்தாவும் சேகரும்,
“அப்படி ஒரு காலேஜ் வேணும்னா உன் மாமனையே கட்டித் தரச் சொல்லு..” என்று குரல் கொடுக்கவும், அதைக் கேட்டு திகைத்து விழித்தவள்,
“அத்தை.. அண்ணா.. டேய் கவினு.. ப்ரியா அண்ணி.. வாங்க வாங்க.. நீங்க எல்லாம் எப்போ வந்தீங்க? இந்த மாமா நீங்க வரதை சொல்லவே இல்லையே..” கேட்டுக் கொண்டே அவரது அருகில் சென்றவளின் உச்சி முகர்ந்தவர்,
“நாங்க காலையில வந்தோம்டா ராஜாத்தி.. இன்னைக்கு எக்ஸாம் எப்படி இருந்தது?” பிருந்தா விசாரிக்கவும்,
“சூப்பரா பண்ணி இருக்கேன் அத்தை.. மாமா இருக்க பயம் ஏன்? இந்த மாமா பேசாம டீச்சரா போயிருக்கலாம்.. எல்லாமே செமையா சொல்லித்தரார்..” என்றவளைப் பார்த்து விட்டு, அவனது முகத்தைப் பார்த்த சேகர்,
“பேசாம அவங்க காலேஜ்க்கே போயிடேன்டா..” வம்பு வளர்க்க,
“ஹையோ.. அண்ணா.. என் பிழைப்பையே கெடுக்கறீங்களே.. அப்பறம் நான் இவரைக் காப்பாத்தறதுக்கு சண்டை போட்டே என் நேரம் சரியா போயிடும்.. என்னை ஒரு பேட்டை ரவுடியா ஆக்கிட்டு தான் மறுவேலை பார்ப்பீங்க போல.. வேண்டாம் வேண்டாம்.. என் மாமா எனக்கு மட்டும் டீச்சரா இருந்தா போதும்.. இந்த வேலைல இருந்தா தான் அப்படியே ஆஸ்ட்ரேலியா, யூ.எஸ்., யூ.கே.ன்னு சுத்திப் பார்க்கலாம்.. மாமா அடுத்த ப்ராஜக்ட்டு ப்ரான்ஸ்ல கேட்டு வாங்குங்க.. நாம ஜாலியா சுத்தி பார்த்துட்டு வரலாம்..” ஆர்யனை வம்பு வளர்க்க, அவளது கன்னத்தில் தட்டியவன்,
“பசிக்குதுன்னு சொன்ன இல்ல.. வா.. வந்து சாப்பிடு.. இன்னைக்கு உனக்கு ப்ராக்டிகல் முடிஞ்சது இல்ல.. அதை நாம செலிபரேட் செய்ய நைட் ஷோ போகலாம்.. நீ ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தது..” எனவும்,
“ஹை. நாம எல்லாரும் போகப் போறோமா? சூப்பர் மாமா..” என்று ஆர்பரிக்க,
“ஆமா.. அத்தை.. நாம போகப் போறோம்.. பாப்கார்ன் சாப்பிடலாம்..” என்று அவள் அருகில் வந்த கவினின் கன்னத்தில் முத்தமிட்டவள், ஆர்யனைப் பார்க்க,
“ஆமாடா.. எல்லாரும் தான் போகப் போறோம்.. அம்மா வரலைன்னு சொல்லிட்டாங்க.. இப்போ வந்து சாப்பிடு..” என்று அவளை அழைக்கவும், அவனுடன் சென்றவள், அன்றைய நாளின் கதையை அளக்கத் துவங்க, இருவரின் புரிதலில் பிருந்தா நிம்மதியுற்றார்..
இரவு சினிமா பார்த்துவிட்டு வந்த அனைவரும் உறங்கச் செல்ல, உடை மாற்றிக் கொண்டு வந்து வழக்கம் போல அவனது தோளில் சாய்ந்தவளின் கன்னம் பற்றி, “தேனு.. நாளைக்கு நைட் ஃப்ளைட்டா.. உன்னைக் காலையில வீட்டுல கொண்டு விடனும்.. அம்மா சாயந்திரம் விளக்கு வச்சு உன்னை கொண்டு போய் விடக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க..” எனவும், கண்கள் கலங்க அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்க்க,
அவளது நெற்றியில் இதழ் பதித்தவன், “நீ திலீப் கூட ஏர்போர்ட்டுக்கு கிளம்பறதுக்குள்ள வந்திரு என்ன? கரக்ட்டா வந்திரு..” எனவும்,
“இல்ல மாமா.. நீங்க ஊருக்கு போன உடனே நான் அடுத்த நாள் காலைல போறேனே.. எனக்கு நாளைக்கு உங்க கூட இருக்கணும்.. காலையிலேயே அங்க போயிட்டு நான் என்ன செய்யறது? என்னால உங்களை விட்டு போக முடியாது.. ப்ளீஸ் மாமா.. அத்தைகிட்ட சொல்லுங்களேன்..” என்று சொன்னவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன்,
“ஐ வில் மிஸ் யூ தேனு..” என்றபடி, மெல்ல தனது இதழ்களை அவளது முகத்தினில் உறவாட விட, வெண்ணிலா அவனை அணைத்து கொண்டாள்.
“தேனு.. பட்டு.” ஒவ்வொரு இதழ் தீண்டல்களுக்கும் அவளது பெயரை முணுமுணுத்தவன், அவளது இதழ்களை நெருங்கி, அதில் தனது முதல் முத்தத்தைப் பதித்து, அவளது இதழ்களில் புதைந்தான்.. நொடிகள் நிமிடங்களாக கரைய, மூச்சிற்கு பிரிந்த இதழ்களில் மீண்டும் அழுந்த முத்தமிட்டு,
“ஐ லவ் யூடா தேனு..” என்று அவளை அணைத்துக் கொள்ள,
“ஐ லவ் யூ சோ மச் மாமா..” என்றவள் அவனது இதழ்களில் இதழ் கொண்டு உரசவும்,
“ஹே.. என்ன சொன்ன? என்ன சொன்ன? எனக்கு காது சரியா கேட்கல..” சந்தோஷத்தில் அவளது முகத்தை நிமிர்த்த, நாணத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டு, அவனது மார்பில் புதைய, அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
“ஐம் சோ ஹாப்பி மை தேனு..” என்றவன், மீண்டும் அவளது இதழ்களை சிறை செய்தவன், மகிழ்ச்சியுடன் அவளை அணைத்துக் கொண்டு உறங்கத் துவங்கினான்.
மறுநாள் அவன் ஏர்போர்ட் செல்வது வரை அவனுடனேயே சுற்றிக் கொண்டிருந்தவளைப் பார்த்த பிருந்தாவிற்கு கண்கள் நிறைந்து போனது. காரில் செல்லும் பொழுதும், அவனது கையோடு கை கோர்த்துக் கொண்டு, அவனது தோளில் சாய்ந்து ஏதோ பேசிக் கொண்டு, அவனுக்குத் தெரியாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்க, “தேனு.. ஒழுங்கா தூங்கு.. நேரத்துக்கு சாப்பிடு.. அம்மா ஆபிஸ் போனாலும் டைம்க்கு சாப்பிடணும் என்ன? நான் ஆபிஸ்ல இருந்து வந்ததும் உன்கிட்ட வீடியோ கால்ல பேசறேன்..” ஆர்யன் அவளை சமாதானம் சொல்ல,
“ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..” என்று கேட்டுக் கொண்டே வந்தவள், ஏர்போர்ட் வந்ததும், அவனது கையை இறுகக் கோர்த்துக் கொண்டாள்.
அவர்களை இறக்கி விட்டு, சேகர் காரை பார்க்கிங்கில் போடச் செல்ல, அதோ இதோவென்று கண்களில் கண்ணீர் முட்ட ஆர்யனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள். திலீபனுடன் பூரணியும் பார்த்திபனும் அவனை வழியனுப்ப வந்திருந்தனர். பிருந்தா அவர்களுடன் பேசிக் கொண்டிருக்க, ஆர்யன் அவளது தலையை மெல்ல வருடினான்..
அவனது கையை மீண்டும் பிடித்துக் கொண்டவள், “மாமா..” தொண்டையடைக்க பரிதாபமாக அவனைப் பார்க்க, அவளது பார்வையில் அவன் நொந்தே போனான்.
“பட்டு.. அழுதா எனக்கு கிளம்பவே மனசு வராது சொல்லிட்டேன்.. அழாம எனக்கு டாட்டா சொல்லு.. உன் சிரிச்ச முகம் தானே எனக்கு ஒரு மாசத்துக்கு டானிக்? இப்படி கண்ணு வீங்கற அளவுக்கு அழுது என்னை அனுப்பினா நான் என்ன ஆவேன்?” தனது துன்பத்தையும் மறைத்துக் கொண்டு அவன் சொல்லவும், மண்டையை அசைத்தவள்,
“டேக் கேர் மாமா.. எனக்கு போன உடனே மெசேஜ் பண்ணுங்க.. இந்த ஒரு மாசம் எனக்கு எப்படி போகப் போகுதுன்னே தெரியல மாமா..” என்றவளை தோளோடு அணைத்துக் கொண்டவன்,
“நான் ட்ரான்சிட்ல இருக்கற டைம்மும் உனக்கு மெசேஜ் செய்யறேன்டா.. இப்போ டைம் ஆச்சு.. உள்ள போய் செக்கின் பண்ணனும். எனக்கு சிரிச்சிக்கிட்டே டாட்டா சொல்லு.. பைடா பட்டு..” என்றவன், அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு, அவளது கையை தனது இதழ்களில் ஒற்றிக் கொள்ள, அவனது கையைத் தனது இதழ்களின் அருகே எடுத்துச் சென்றவள், அதில் இதழ் பதித்து,
“ஒழுங்கா சாப்பிடுங்க.. நான் இல்லைன்னு அங்க ஆட்டம் போடாதீங்க..” அவனை மிரட்டிக் கொண்டிருக்க, பார்த்திபன், திலீபன் என்று அனைவரும் அவர்களது அருகில் வரவும்,
“நான் போயிட்டு வரேன்.. டைம் ஆச்சு.. அம்மா உடம்பை பார்த்துக்கோங்க.” பிருந்தாவிடம் விடைப்பெற்றவன்,
“திலீப் தேனுவைப் பார்த்துக்கோ.. நான் அவ வரதுக்கு எல்லாமே ரெடியா எடுத்து வச்சிட்டேன்.. ப்ளைட் டிக்கெட் வந்த உடனே ப்ரின்ட் மட்டும் எடுத்துக் கொடு. மத்தப்படி அவளை ஸ்ருதி கிட்ட விட்டுட்டா அவ பார்த்துப்பா..” எனவும், திலீபன் தலையசைக்க, மீண்டும் அவளது கன்னத்தை வருடியவன்,
“சரி.. டைம் ஆச்சும்மா.. பை..” என்றவன், ஒரு பெருமூச்சுடன் அனைவரிடமும் விடைப்பெற்று, அவளைப் பார்த்துக் கொண்டே உள்ளே செல்ல, வெண்ணிலாவோ அவன் கண்ணை விட்டு மறையும் வரை கண்ணீர் வழிய கையசைக்க, பூரணி அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டார்..
அவன் ப்ளைட் ஏறும் வரையிலுமே அவளிடம் மெசேஜ்களின் வாயிலில் பேசிக் கொண்டிருக்க, பிருந்தாவிற்கு அவளைப் பார்த்து மகிழ்ச்சியும், நிறைவுமாய் இருந்தது..
வீட்டிற்குச் சென்றவளுக்கு அந்த அறையே வெறுமையாய் இருந்தது.. “ஐ மிஸ் யூ மாமா.. அன்ட் ஐ லவ் யூ சோ மச்..” அவனது போட்டோவை வைத்துப் புலம்பியவளுக்கு தூக்கம் வெகு தூரமாய்.. காலையில் ஊருக்குக் கிளம்புவதற்கு முன், பிருந்தாவும் சேகரும் பூரணியிடம் விட்ட பிறகே தங்களது ஊருக்குப் புறப்பட்டனர்..
அவளது மனநிலை உணர்ந்து பூரணி இரண்டு நாட்களுக்கு விடுமுறை எடுத்திருக்க, அவளோ அந்த வீட்டிலும் அவன் இல்லாமல் வெறுமையை உணர்ந்தாள்.. அவன் சென்று சேர்ந்து போன் செய்த பிறகும் உறக்கம் வராமல் தடுமாறியவளைக் கண்ட பூரணிக்கு, அவளை நினைத்து சிரிப்பு வந்தது.
காலையில் அவனுடன் பேசுவதற்காக அதிகாலையிலேயே விழித்துக் கொண்டவள், அவனுடன் பேசிவிட்டு, படித்துக் கொண்டிருக்க, “நிலாக்குட்டி.. சாப்பிட வாம்மா..” சுபத்ரா அவளை அழைக்க,
“இல்ல பெரியம்மா.. எனக்கு பசிக்கல. கொஞ்ச நேரம் ஆகட்டும்..” என்றவளின் முகத்தைப் பார்த்தவர், அவளது தலையை வருடி,
“நீ இப்படி சாப்பிடாம இருந்தேன்னா மாப்பிள்ளை கேட்டா என்ன பதில் சொல்லுவ? அவரு மனசே இல்லாம கண்ணு கலங்க விட்டுட்டு போயிருக்கார்.. நீ சாப்பிடலைன்னு சொன்னா அவருக்கு இன்னும் கஷ்டமா இருக்கும் இல்ல.. வந்து சாப்பிடு..” என்றபடி உணவை பிட்டு வாயில் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டவள்,
“ஆமா.. அதெல்லாம் நான் சாப்பிடலைன்னா நல்லா கண்டு பிடிச்சு கேட்பார். ஆனா.. என்னை தனியா மட்டும் விட்டுட்டு ஜாலியா கிளம்பி போவார்.. இது எந்த ஊர் நியாயம்ன்னு உங்க மாப்பிள்ளையைக் கேளுங்க..” என்று புலம்பியவளைப் பார்த்தவருக்கு சிரிப்பு பொங்கியது..
அவரது மனதினில், பெண் பார்த்த பிறகு, திருமணம் நிச்சயத்திற்கு முன்பு ஜீவிதாவிடம் அவன் ஒரு வார்த்தை கூட ஆஸ்திரேலியா செல்வதாக சொல்லாததும், அவன் செல்வதாக பிருந்தா அவளிடம் சொன்ன பொழுது ஜீவிதா அதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், ‘போனா இப்போ என்ன? நான் ஏர்போர்ட் போய் வழியனுப்பனுமா?’ என்று கேள்வி கேட்டதும் நினைவு வந்தது..
அதை விட அவன் திரும்பி வந்த பொழுது, திருமணத்திற்கு வெறும் பதினைந்து நாட்களே இருந்த பொழுதும், ‘மாப்பிள்ளை நாளைக்கு காலையில வராராம்.. நீ ஏர்போர்ட் போகப் போறியா?’ சுபத்ரா கேட்டதற்கும்,
‘ஓ.. அப்படியா? ஏன் அவர் நான் போய் மாலை போட்டு மரியாதை செஞ்சாதான் வருவாராமா?’ என்று இடக்காக கேட்டதும் நினைவு வர, அவரிடம் இருந்து ஒரு பெருமூச்சு வெளி வந்தது..
வெண்ணிலா கேள்வியாகப் பார்க்கவும், “சீக்கிரம் சாப்பிட்டு மாப்பிள்ளை போன் செய்யறதுக்குள்ள படி.. அப்பறம் அவர்கிட்ட பேசணும் இல்ல..” என்றவரின் போனிருக்கு அழைப்பு வரவும், அதில் ஒளிர்ந்த பெயரை கவனிக்காமல் போனை எடுத்தவர், அதில் கேட்ட குரலில், ‘ஜீவி..’ என்று திகைத்துப் போனார்..