மயங்கினேன் பொன்மானிலே – 12

பொன்மானிலே _BG-2733e83e

மயங்கினேன் பொன்மானிலே – 12

அத்தியாயம் – 12

பத்மப்ரியா கேக்கை வெட்ட, ஆரம்பிக்க மிருதுளாவின் முகத்திலோ தீவிர சிந்தனை.

‘அண்ணி, வம்சிக்கு கேக்கை கொடுத்திட்டா?’ மிருதுளாவின் நெஞ்சோரத்தில் மெல்லிய பயமும் எட்டி பார்த்தது.

‘வம்சிக்கு புரிய வைக்க ரொம்ப கஷ்டம். மிருதுளா உன் பாடு ரொம்ப திண்டாட்டம் ஆகிரும்’ அவளுள் மெல்லிய பதட்டம்.

‘ஆனால், அப்படி நடக்காது. அண்ணி வம்சிக்கு கொடுக்க மாட்டாங்க’ ஏதோவொரு உள்ளுணர்வு கூற, மிருதுளா தன் கணவனை பார்த்தாள்.

‘அப்புறம் வைக்கிறேன் கச்சேரி…’ அவள் பார்வை வம்சியின் மீதே இருந்தது.

வம்சி, தன் மனையாளை பார்த்தான். ‘இவ பார்க்குற பார்வையே சரி இல்லையே? பங்காரு சொல்ற மாதிரி இருந்தா, அக்கா எனக்கு தான் கொடுப்பா. கொடுத்தா, மாமா வருத்தப்பட்டிருவாங்களோ?’ அவன் இதயம் அவன் அக்காவுக்காக துடித்தது.

சட்டென்று சுதாரித்து கொண்டான் வம்சி.

‘மாமாவுக்கு நான் அக்காவுக்கு செய்யணும். சிந்துவுக்கு வாங்கி கொடுக்கணும். வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யணும். ஆனால், உரிமை எடுத்துக்கிட்டா பிடிக்காதே’ அவன் யோசனை பலவாறாக ஓடியது.

‘அக்கா என் மேல் பாசமா தான் இருக்காங்க. அதுக்காக நான், அக்காவை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கணுமா? இதனால், அக்கா மனவருத்தப்பட்டுட்டா?’ மனம் அக்காவுக்காக துடித்தாலும், அவன் மூளையோ வேகவேகமாக சிந்தித்தது.

‘மாமா புரிந்து கொள்ளமாட்டாங்க.  ஆனால், பங்காரு என்னை புரிந்து கொள்ளுவாள்’ அவன் சட்டென்று இயங்கினான்.

“அக்கா, என்ன பண்ணிட்டு இருக்க? மாமாவோட கண் முழுக்க உன் மேல தான் இருக்கு. நீ எப்ப கேக் கொடுப்பன்னு? மாமா கேக் மேல ஆர்வமா இருக்காங்களா இல்லை நீ கொடுக்கறதில் ஆர்வமா இருக்காங்களானு தெரியலையே.” வம்சி கேலி செய்ய, “அட வம்சி நீ சும்மா இரு.” உதய் மீசையை முறுக்கி கொண்டு கம்பீரமாக சிரித்தார்.

‘அக்கவுக்குனா மட்டும் இவங்க மூளை எப்படி எல்லாம் வேலை செய்யுது. ஆனால், எனக்குன்னா மட்டும் மந்தமாகிறது’ மிருதுளா முகத்தில் வருத்தம் தொனித்த நமட்டு சிரிப்பு. பத்மப்ரியா முகத்தில் வெட்க புன்னகை சூழ்ந்து கொண்டது.

“சும்மா இரு தம்பி” பத்மப்ரியா வெட்கம் கொள்ள, “அக்கா, எடு எடு கேக்கை. மாமாவுக்கு ஊட்டு” வம்சி, அவன் தமக்கையை சிந்திக்க விடாமல், அவன் முடிவை அவள் மீது திணித்து, பத்மப்ரியாவின் எண்ண ஓட்டத்தை வெளியே தெரியவிடாமல் செய்துவிட்டான்.

அதே நொடியில், “அக்கா, நான் எல்லாருக்கும் கேக் கொடுக்கறேன்.” சட்டென்று அங்கிருந்து விலகியும் விட்டான்.

கொஞ்சம் கூட்டமும் வந்திருந்தது.

மிருதுளா, அங்கிருந்து சென்று அவர்கள் தோட்டத்தில் இருக்கும் மாமரத்தின் கீழ் சாய்வாக வளர்ந்திருந்த கிளையில் அமர்ந்தாள். அடர்ந்திருந்த மரத்தின் கிளைகள் அவளை மறைத்துக்கொண்டது.

‘என் திட்டம் தோற்றுவிட்டது என்று நான் வருத்தம் கொள்ளவா? இல்லை வம்சியை நான் சிந்திக்க வைத்துவிட்டேன் என்று பெருமை கொள்ளவா?’ அவள் மரத்தோடு சாய, மரத்தின் கடினமான பகுதி அவள் முதுகை உரசாதப்படி அங்கு ஒரு வலுவான கை நீண்டது.

அந்த கரங்கள் முதுகை தீண்ட, அவள் பட்டென்று நிமிர்ந்து அமர, அங்கு வம்சி புன்னகையோடு நின்று கொண்டிருந்தான்.

“பங்காரு, இந்த கம்பு உன் முதுகை கிழிச்சிடாதா?” அவன் அக்கறையோடு கேட்டான்.

இந்த அக்கறைக்கெல்லாம்  நான் ஏமாற மாட்டேன், என்று அவள் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்

“உங்க அக்கா கேக்கை மாமாவுக்கு கொடுத்துட்டா, நான் சண்டை போடுவேன். உங்களுக்கு கொடுத்திட்டா, உங்க மாமா வருத்தப்படுவார். ஸோ… நீங்க பயங்கர புத்திசாலித்தனமா செயல் பட்டுடீங்க?” மிருதுளா, அவன் தனிமையில் எப்பொழுது சிக்குவான் என்று காத்திருந்தவள், தன் மனக்கிலேசத்தை கேள்வியாக கேட்டாள்.

“இதுல புத்திசாலித்தனம் என்ன இருக்கு பங்காரு. அக்கா எனக்கு தான் கொடுப்பா. நீ சொல்றதை வைத்து பார்த்தால், மாமா வருத்தப்படுவாங்க. மாமா வருத்தப்பட்டிட கூடாதில்லையா? மாமா வருத்தப்பட்டா, அக்கா பாவம் தானே?” அவன் கேட்க, அவளிடம் மௌனம்.

“ஆமா, உங்க அக்கா ரொம்ப பாவம் தான்” அவன் எள்ளல் இழையோட கூறினாள்.

“ஆமா, உங்க அக்கா ரொம்ப பாவம் தான்” அவள் எள்ளல் இழையோட கூறினாள்.

“அதே தான்…” அவன் ஆமோதிக்க,  அவள் எள்ளல் அவனுக்கு புரிந்ததா, இல்லை புரியவில்லையா என்று அவள் தான் குழம்பிப் போனாள்.

“வழக்காம, நான் இப்படி எல்லாம் பக்கத்தில் நிற்கவே மாட்டேன் பங்காரு. எனக்கு வேலை இருக்கும். அக்கா சந்தோஷமா இருக்கிறதை எதிர்பக்கமா இருந்து பார்த்துட்டு போய்கிட்டே இருப்பேன் பங்காரு. நான் அக்கா கிட்ட எனக்கான உரிமையை எல்லாம் எதிர்பார்க்கறதில்லை. என் அக்காவை பத்தி எனக்கு தெரியாதா?” அவன் அவளை பார்த்து புன்னகையோடு கேட்டான்.

“நீங்க உங்க அக்கா வாழ்க்கையை பத்தி மாமாவை பத்தி இவ்வளவு யோசிக்கும் பொழுது, உங்க அக்கா உங்க வாழக்கையை பத்தி யோசிக்கலாம் இல்லையா?” அவள் கேட்க,

“அக்கா என்ன யோசிக்கலை?” அவன் புரியாமல் கேட்டான்.

“அன்னைக்கு ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை. நீங்க புதுசா கல்யாணம் முடிந்த ஜோடி. கேக்கை  அவளுக்கு முதலில் கொடுன்னு உங்க அக்கா சொல்லிருக்கலாமே? இத்தனை வருஷம் கழித்தும்  உங்க மாமாவுக்கு கொடுக்கனுமுனு உங்களுக்கு சொல்ல தெரியுது. உங்க அக்காவுக்கு ஒரு வார்த்தை சொல்ல தெரியலையே” மிருதுளா கேட்க,

“பங்காரு… பங்காரு…” அவன் சிரித்துக் கொண்டான்.

“அக்கா, பாவம். அவளுக்கு உலகமே தெரியாது” அவன் கூற, அவள் அயர்ந்து போனாள்.

அவள் அருகே அவனும் அதே மரக்கிளையில் ஏறி அமர்ந்து அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

அவள் விலக எத்தனிக்க, அவன் புன்னகையோடு தன் பிடியை கூட்டிக் கொண்டான்.

“யாராவது வரப்போறாங்க” அவள் சிடுசிடுக்க , “என் பொண்டாட்டியோடு நான் உட்காந்திருக்கேன். யார் என்ன சொல்ல முடியும்?” அவன் கெத்தாக கேட்டான்.

“உங்க அக்கா வீட்டில் வேலை இல்லையா?” அவள் முகத்தை திருப்ப, “பங்காரு…” அவன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.

“இத்தனை வயசில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் முக்கியமா?” அவள் கேட்க, “பிறந்தநாள் மட்டும் இல்லை பங்காரு. அக்கா, குழந்தை உண்டாக்கிருக்காங்க இல்லை. அதுக்கு பழம் போடுற ஃபங்க்ஷன் போல. அதையும், இதையும் ஒண்ணா வச்சிட்டாங்க” அவன் கூற,

“ஓ…” அவள் குரல் இறங்கியது.

“இரண்டவது குழந்தைக்கு கூட இதெல்லாம் பண்ணுவாங்களா?” அவள் கேட்க, “சிந்துவை அக்கா உண்டானப்பா, நாங்க எதுவுமே பண்ண முடியலை. அது தான் இந்த பிள்ளைக்கு எல்லாம் தடபுடலா நடக்கு” அவன் பெருமையோடு கூறினான்.

“ம்… என் குழந்தைக்கு சமாதி கட்டிட்டு” அவள் கண்கள் கலங்கியது.

அவள் வார்த்தையில், அவன் அவளை சீற்றமாக பார்க்க, அவள் கண்ணீரில் அவன் சீற்றம் சட்டென்று மறைந்தது.

“பங்காரு…” அவன் அவளை கண்டிப்போடு அழைத்து, அவள் கன்னம் பிடித்து அவள் கண்ணீரை துடைத்தான்.

‘எதுக்கு இப்படி வருத்தப்படுறா?’ அவன் இதயம் அவளை வாஞ்சையோடு பார்க்க, அவன் கண்கள் அன்பை தேக்கி கொண்டு பார்த்தது.

“நமக்கும் குழந்தை பிறக்கும். இதெல்லாம் பண்ணுவோம் பங்காரு” அவன் கூற,  “அதெல்லாம் பிறக்காது.” அவள் பட்டென்று எரிந்து விழுந்தாள்.

“பங்காரு…” அவன் இப்பொழுது கோபமாக அழைத்தான்.

“இப்படி கூப்பிட்டா நான் பயப்படணுமா? நீங்க பேசாம உங்க அக்கா, அக்கா குடும்பமுன்னு இருந்திருக்கலாமில்லை? ஏன் கல்யாணம் செய்தீங்க?” அவள் கடுப்போடு கேட்டாள்.

அவன் இப்பொழுது பெருங்குரலில் சிரித்தான்.

“நீ என்னை சரியா புரிஞ்சிகிட்ட பங்காரு. நானும் அப்படித்தான் உன்னை  மாதிரியே யோசிச்சேன்.” அவன் கூற, அவள் அவனை திக் பிரமை பிடித்தவள் போல் பார்த்தாள்.

“கல்யாணம் எல்லாம் வேண்டாம். அக்கா, அக்கா குடும்பமுன்னு இருந்திடலாமுன்னு யோசிச்சேன். ஆனால், அக்கா விடவே இல்லையே. கண்டிப்பா கல்யாணம் பண்ணியே ஆகணும்னு சொல்லிட்டாங்க” அவன் இயல்பாக கூறினான்.

“அக்காவுக்கு என் வாழ்க்கை மேல அவ்வளவு அக்கறை. நான் கல்யாணம் செய்யாமல் இப்படியே இருத்திடுவேனோன்னு பயந்துட்டாங்க. அதுவும் நான் சிந்துவை கூட வச்சிக்கிட்டு சுத்துவேனா, என் குழந்தை மாதிரி… அது தான் அக்காவுக்கு ரொம்ப பயம் கொடுத்து போச்சு” அவன் தன்னை பற்றி தன் மனைவியிடம் உரிமையாக பகிர்ந்து கொண்டான்.

‘எதுக்கு என் வாழ்க்கையை கெடுக்கவா?’ அவள் சிந்தை சிந்தித்தாலும், அவள் மனம், “அப்ப, அக்காவுக்காத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க” கூர்மையாக கேட்டது.

“அங்க ஒரு சின்ன கரெக்ஷன். ” அவன் கூற, ‘என்ன?’ என்பது போல் அவனை பார்த்தாள்.

“கல்யாணம் பண்ணணுமுன்னு முடிவு பண்ணது எங்க அக்கா பேச்சு கேட்டு தான். ஆனால், உன்னை கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணது நான் தான்” அவன் முகத்தில் பெருமையும், கம்பீரமும், காதலும் குடிகொண்டது.

“அக்கா, பார்த்த எந்த பெண்ணும் எனக்கு பிடிக்கலை. ஆனால், பங்காருவை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. அவளை காலம் முழுக்க என் உள்ளங்கையில் வச்சி தாங்கணுமுன்னு முடிவு பண்ணிட்டேன்” அவன் கூற,

“எனக்கு என் அக்காவை பிடிக்கும். அதை நான் மறுக்கலை. அக்காவுக்காக நான் எதுவும் செய்வேன். அதையும் நான் மறுக்கலை” அவன் நிறுத்தினான்.

“ஆனால், என் பங்காரு. நான் தான். என்னுள் என் பங்காரு அடக்கம். அவளை நான் எங்கையும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.” அவன் அவள் முகம் நிமிர்த்தி ஆழமான குரலில் கூறினான்.

“நான் செய்ற எதுவும் எனக்கு தப்பா தெரியலை. நான் செய்தது தப்புன்னு எனக்கு தோணுச்சுன்னா, நான் என் பங்காரு கிட்ட எப்படி வேணும்ன்னாலும் மன்னிப்பு கேட்பேன்.” அவள் இடையை தன்னோடு சேர்த்துக்கொண்டு, அவளை அவன் மார்பில் சாய்த்து கொண்டு அவள் முகம் நிமிர்த்தி கூறினான்.

அவன் கண்கள், அவள் கண்களை உற்று நோக்கின. அவள் கண்களில் விலகல் தன்மையும், கோபமும் வருத்தமும் மட்டுமே இருந்தன. அவன் கண்களில் அன்பும், பாசமும், தவிப்பும், ஏக்கமும் இருந்தன.

“என் பங்காரு கிட்ட மன்னிப்பு கேட்க எனக்கு என்ன டீ வெட்கம். நான் தப்புனா  நான் மன்னிப்பு கேட்பேன் பங்காரு. ஆனால், நான் தப்பு பண்ணவே இல்லை பங்காரு. இருந்தாலும், நான் செய்ததுக்காக வருத்தப்படுறேன்” அவன் கண்களிலிருந்து கண்ணீர் அவள் விழிகளை தொட்டது.

“நான் ஏன் வருத்தப்படுறேன் தெரியுமா?” அவன் குரலும், விழியும்  அவளிடம் கெஞ்ச, அவன் அருகாமை அவன் தேக ஸ்பரிசம் அவளை ஏதோ செய்ய, தன் விழிகளை மூடிக் கொண்டாள் அவள்.

“என்னை பாரு பங்காரு” அவன் தன் ஆள் காட்டி விரலால் அவள் மூடிய இமைகளை வருட, அவன் தீண்டலை விலக்க அவள் தன் கண்களை திறந்தாள்.

“என் பங்காரு வருத்தப்படுறாளேன்னு நானும் வருத்தப்படுறேன். உன் வருத்தம் என்னை பாதிக்கும். நீ இவ்வளவு வருத்தப்படுவேன்னு நான் நினைக்கவே இல்லை” அவள் நெற்றியில் அவன் இதழ் பதித்தான்.

“பங்காரு… உன்னை நான் சந்தோஷமா வைக்கணும்னு தான் நினைக்குறேன். ஆனால், நீ சந்தோஷமாவே இல்லை” அவன் கூற, அவள் பேசவில்லை.

அவன் மேலும் பேச ஆரம்பிக்க, “உள்ள ஃபன்க்ஷனுக்கு நேரமாக போகுது. போவோமா?” அவள் கேட்டாள்.

அவன் கொண்டு வந்து அவர்கள் அருகே இருந்த திண்டில் வைத்திருந்த கேக்கை எடுத்தான், அவளுக்கு ஊட்ட ஸ்பூனில் எடுத்து அவளுக்கு நீட்டினான். அவள் வாங்கவில்லை.

“அன்னைக்கு நடந்தது தப்பு தான் பங்காரு” அவன் கூற, அவள் அவனை திடுக்கிட்டு பார்த்தாள்.

‘இந்த மாமரம் போதி மரம் ஆகிவிட்டதா?’ என்ற அதிர்ச்சி அவள் கண்களில்.

“அன்னைக்கு உன் எதிர்பார்ப்பை என்னால் புரிஞ்சிக்க முடியலை. இன்னைக்கு நீ என்னை அவங்க கூட நிற்க சொல்லும் பொழுது எனக்கு அதில் உள்ள அசௌகரியம் புரிஞ்சிது. மாமா வருத்தப்படுவாங்கன்னு தோணுச்சு” அவன் கூற, அவள் கண்களில் மின்னல்.

“உங்களை மாதிரி உங்க அக்காவும் எனக்காக யோசிச்சிருக்கனுமில்லையா?” அவள் கேட்க, “அக்காவுக்கு இவ்வளவு எல்லாம் யோசிக்க தெரியாது பங்காரு” அவன் கூற, அவள் எதுவும் பேசவில்லை.

“ஆனால், நான் யோசிச்சிருக்கணும். நான் தானே உனக்காக யோசிக்கணும்.  நீ அங்க வேறு படுத்தப்பட்டிருக்கனு நான் யோசிச்சிருக்கணும். ” அவன் கூற, அவள் அவனை கூர்மையாக பார்த்தாள்.

“அக்காவுக்கு உலகம் தெரியாது. மாமாவுக்கு தெரியும். ஆனால், மாமா புரிஞ்சிக்க மாட்டாங்க. என் பங்காரு என்னை புரிஞ்சிப்பான்னு நினைச்சேன் பங்காரு. நான் உன் மேல வச்சிருக்கிற பாசமும், அன்பும் உனக்கு தெரியலையா பங்காரு? அன்னைக்கு நான் கொடுக்காத கேக் தான் என் அன்பை தீர்மானிக்குமா பங்காரு?” அவன் ஆழமான குரலில் கேட்டான்.

“அந்த கேக் உங்க அன்பை தீர்மானிக்கலை. ஆனால், என் குழந்தை உங்க அன்போட அளவை காட்டிருச்சு” அவள் வருத்தமான குரலில் கூறினான்.

“நீ என்னை புரிஞ்சப்பன்னு நினைத்து தான்…” அவன் ஆரம்பிக்க, “எப்பப்பாரு நான் தான் உங்களை புரிஞ்சிக்கணுமா? நீங்க என்னை புரிஞ்சிக்கவே மாட்டிங்களா?” அவள் மரக்கிளையிலிருந்து குதித்து இறங்கி வீட்டிற்குள் செல்ல எத்தனிக்க,

வம்சி கோபமாக செல்லும் தன் மனைவியை இயலாமையோடு பார்த்தான்.

‘என் அன்பை இவள் புரிந்து கொள்ள மாட்டாளா? இவளுக்கு எதுக்கு இத்தனை பிடிவாதம்.’ அவன் மனம் வருந்தியது.

முன்னெல்லாம் மிருதுளாவின் மீது அவன் கோபப்படுவான். ஆனால், குழந்தை விஷயத்திற்கு பிறகு அவள் காட்டும் விலகல் தன்மையில் அவன் வருந்தினான்.

‘பங்காரு சொல்றதை கேட்டுத்தான் நான் நடக்கிறேன். ஆனால், அவள் கோபம் கிஞ்சித்தும் குறையவில்லையே?’ அவன் மேலும் சிந்திக்க தெரியாமல் நின்றான். அங்கு பத்மப்ரியாவின் மாமியார் நின்று கொண்டிருந்தார்.

“எம்மா, மிருதுளா நீ இங்கையே இரு. உள்ள நலுங்கு வச்சிக்கிட்டு இருக்காங்க. நீ போக வேண்டாம். என் மருமகளுக்கு கண்ணு பட்டிரும்.” அவர்  கூற,  அவள் பிடிவாதமாக நின்றாள்.

சில நிமிடங்களில், அங்கு வம்சி வர, “வம்சி நீ உள்ள போ… உங்க அக்கா உன்னை தேடுறா… மிருதுளா என்கிட்டே பேசிட்டு இருப்பா” அவர் கூற, “இல்லை அத்தை, மிருதுளா என்கூட வரட்டும். அப்புறம் உங்க கூட பேசுவா” தன் மனைவியின் கைகளை பிடித்து, அவளையும் விழாவுக்கு அழைத்து சென்றான்.

மிருதுளா பத்மப்ரியாவின் மாமியாரை பார்த்து வெற்றி புன்னகை புரிந்து கொண்டு தன் கணவனோடு உரிமையாக நடந்து செல்ல, அவர் கண்களில் க்ரோதம் தெரிந்தது.

மயங்கும்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!