மயங்கினேன் பொன்மானிலே – 25

பொன்மானிலே _BG-e13ab020

மயங்கினேன் பொன்மானிலே – 25

அத்தியாயம் – 25

“டாக்டர் என்னை பதட்டமில்லாம நிதானமா கொஞ்சம் மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க” என்று மிருதுளா பேச, வம்சி அவளை வைத்த கண் வாங்கமால் பார்த்துக் கொண்டிருந்தான். “உங்களுக்கு என்ன ஆச்சு?” அவள் தன் வலது கையை அவன் கன்னத்தில் கை வைத்து கேட்க, அவன் கண்ணீர் துளி அவள் கைகளை தொட்டது.

அவள் பதற, “பங்காரு…” அவன் அவளை நிதானிக்க செய்து, விஷயத்தை பகிர்ந்து கொண்டான். அவள் அதிர்ச்சியாக அமர்ந்துவிட்டாள். “பங்காரு, நீ இப்ப ஹாஸ்ப்பிட்டல்ல இருக்க வேண்டாம். வீட்டுக்கு கிளம்பு. இங்க இருக்கவும் இடமில்லை. அக்கா மாமியார், சிந்து எல்லாரும் வருவாங்க. நீ இங்க என்ன பண்ண போற?” அவன் கூற, அவளும் தன் தாய் தந்தையோடு வீட்டிற்கு திரும்பினாள்.

‘இப்ப தானே எல்லாம் சரியாகி நல்லா வந்தாங்க. இது என்ன திரும்ப சோதனை? நான் நிம்மதியா வாழ கூடாதுங்கிறது என் தலை எழுத்தா? எத்தனை பேர் வயாசன பிறகு குழந்தை பெத்துக்கிறாங்க?எல்லாருக்கும் நல்லா தானே குழந்தை பிறக்குது. எங்க வீட்டில் மட்டும் ஏன் இப்படி?’ அவள் சிந்தனையில் இருக்க, “மிருதுளா” தாயின் அழைப்பில் நனவுலகத்திற்கு திரும்பினாள்.

“மாப்பிள்ளை அக்கா எப்படி?” மிருதுளாவின் தாய் கேட்க, “பணத்துக்கெல்லாம் ஆசை பட மாட்டாங்க. நம்ம வீட்டுக்கு வந்து என்னை அதிகாரம் எல்லாம் பண்ண மாட்டாங்க. தம்பி தம்பின்னு உருகுவாங்க. இவங்களும் அக்கா அக்கானு உருகுவாங்க. பாசமலர் சிவாஜி, கிழக்கு சீமையிலே விஜயகுமார் எல்லாரும் உடன்பிறப்பு பாசத்தில் இவங்க முன்னாடி தோத்து போய்டுவாங்க. என்ன இருந்தாலும், இவங்க என் மேல் ரொம்ப ரொம்ப பாசமா இருப்பாங்க” அவள் முகத்தில் பெருமிதம்.

***

மணித்துளிகள் நாட்களாக மாறிக்கொண்டிருந்தன.

பத்ம ப்ரியா மருத்துவமனையில்  மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தாள். ஆப்ரேஷன் என்ற உடல் உபாதை ஒரு பக்கம் என்றால், குழந்தை இழப்பு என்ற வலி மறுபக்கம். அவளால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவள் இரத்த அழுத்தம் ஏற மருந்தின் பிடியில் சுயநினைவில்லாமல் இருந்தாள் என்றால் சிந்துவின் அழுகையும் பிடிவாதமும் மறுபக்கம்.

“பாப்பா வருமுன்னு சொன்னீங்க. நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? இப்ப பாப்பா என்ன  தப்பு பண்ணுச்சு? சாமி ஏன் பாப்பாவை எடுத்துகிட்டாங்க? எனக்கு பாப்பா வேணும்” சிந்து மருத்துவமனையில் பிடிவாதமாக அழுது கொண்டிருந்தாள். “அம்மாவும் கண் முழிக்கவே மாட்டேங்குறாங்க?” அவள் கேட்க, பத்மப்ரியாவின் மாமியார் தான் அவளை சமாதானம் செய்ய முயற்சித்து தோற்று கொண்டிருந்தார்.

“பாட்டி, அத்தை மோசம். அது தான் குழந்தை வரலைன்னு சொன்னீங்க. இப்ப, அத்தைக்கு ரெண்டு பாப்பா வர போகுதாம். நான் மாமாவும் அத்தையும் பேசுறதை கேட்டேன். நாம என்ன தப்பு பண்ணினோம்?” சிந்து, பத்மப்ரியாவின் மாமியாரிடம் கேட்க, வம்சி விழுக்கென்று நிமிர்ந்து அவர்களை பார்த்தான். எதுவும் பேசாமல் மௌனித்துக் கொண்டான். இப்பொழுது வம்சிக்கும், உதய்க்கும் குழந்தை நினைப்பு சிறிதும் இல்லை. ‘பத்மப்ரியா நல்லபடியாக பிழைத்து வர வேண்டும்.’ என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது.

அவர்களை இன்னும் ஓரிருநாள் காக்க வைத்துவிட்டு, பத்மப்ரியா கண்விழித்துவிட்டாள்.

“அழக்கூடாது… அழக்கூடாது…” என்று பலர் கூறினாலும், முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதாள் பத்மப்ரியா.

“சிந்து தனியா இருக்கா. அவள் குணம் மாறுது. பிடிவாதம் அதிகம் ஆகுது. அவளுக்கு துணையா குழந்தை  வேணுமுன்னு நினச்சேன். அவளும் எவ்வளவு ஆசையா இருந்தா. வீட்டில் ஒரு குழந்தை தவழுமுன்னு நினைத்தேன். இனி நடக்காதே. இனி குழந்தை பெத்துக்கவும் முடியாது” பத்மப்ரியா தலையில் அடித்து கொண்டு அழ, “அக்கா…” அவள் கைகளை பிடித்தான் வம்சி.

“ஏன் அக்கா, சிந்து தனியா இருக்கா போறா? நாம எல்லாரும் இருக்கோம். என் குழந்தை வந்தால், நம்ம காலத்துக்கு அப்புறம், அவங்க சிந்துவுக்கு துணையா இருக்க போறாங்க?” அவன் தன் தமக்கையை சமாதானம் செய்ய, “நான் என்ன பாவம் பண்ணேன் தம்பி. என்னை விடு. வயிற்றில் இருந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு? அதுக்கு ஏன் இந்த தண்டனை? அந்த சிசுவால், யாருக்காவது தீங்கு நடந்திருக்குமா?” பத்மப்ரியா தன் புலம்பலை தொடங்க, வம்சி அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.

மிருதுளா அவள் குழந்தையை இழந்த பொழுது பேசிய பேச்சுக்கள் அனைத்தும் அவன் காதில் இப்பொழுது சாட்டையடியாக ஒலிக்க, ‘நான் செய்த பாவம் தான், இப்படி விடிந்துவிட்டதோ, அவன் உடல் சற்று நடுங்கியது.

“நீ என்ன பாவம் பண்ண பத்மா. அதெல்லாம் இல்லை, சிலர் பார்வை ஏக்கமா இருக்கு. அவங்க பார்வை பட வேண்டாமுன்னு சொன்னேன். நீயும் உன் தம்பியும் கேட்கவேயில்லை. உன்னை ஏக்கமா ஏக்கமா பார்த்தா, இப்ப பாரு அவளுக்கு இரட்டை பிள்ளையாம்” அவர் பேச,

‘இது என்ன தேவை இல்லாம, பங்காருவை இழுக்கறாங்க?’ வம்சி அவரை திடுக்கிட்டு பார்த்தான்.

“அம்மா, இப்படியே பேசிட்டு இல்லாம, நீங்க சிந்துவை கூட்டிகிட்டு கிளம்புங்க.” உதய் சிடுசிடுக்க இருவரும் கிளம்பினர். பத்மப்ரியா எதுவும் பேசவில்லை. தன் வயிற்றை ஏக்கமாக தடவியபடி விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தாள்.

“சிந்துவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? சிந்து எப்படி தாங்குவா?” பத்மாவின் புலம்ப, “அதெல்லாம் தாங்கி தானே ஆகணும் பத்மா. நாள் போக்கில் ஏத்துப்பா. எல்லாருக்கும் கஷ்டம் தானே. நீ இப்படியே யோசிச்சி உன் உடல்நிலைக்கு ஏதாவது ஆகிட்டா, சிந்து என்ன பண்ணுவா?” பத்மப்ரியாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ,என்று யோசித்து கொண்டிருந்த உதயின் குரல் இப்பொழுது சற்று கண்டிப்போடு ஒலித்தது.

அவன் குரல் அவள் மனதை தொடவில்லை, அவள் திடிரென்று “தம்பி, உனக்கு இரட்டை பிள்ளையா?” என்று கேட்க, “ஆமா, அக்கா. டாக்டர்ஸ் அப்படி தான் சொன்னாங்க” அவன் கூற, “அக்காவுக்கு ஒன்னை கொடுக்கறியா? நான் அந்த குழந்தையை உன்னை வளர்த்த மாதிரியே பாசமா வளர்க்குறேன்” பத்மப்ரியா, கண்களில் ஏக்கத்தோடு தன் தம்பியை பார்த்து ஆசையாக கேட்க, வம்சி அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.

“நான் ஒரு குழந்தை நம் வீட்டில் வருமுன்னே ஏக்கத்தோடு இருந்துட்டேன். சிந்துவும் அப்படித்தான். நான் வேற யார் கிட்டையும் இப்படி கேட்க மாட்டேன். உன்கிட்ட தான். என் தம்பி பிள்ளை தானே? உங்க வீட்டில் வளரத்துக்கு என் வீட்டில் வளர போகுது. நீயும், மிருதுளாவும் தினமும் வந்து பார்த்துட்டு போங்க.” அவள் பேச,

“பத்மா, உன் பேச்சு முட்டாள்தனமா இருக்கு” உதய் இப்பொழுது சற்று கோபமாக கண்டித்தான். “நீங்க எனக்கும் என் தம்பிக்கும் இடையில் வர வேண்டாம். அவன் தானே சொன்னான், சிந்து தனியாள் இல்லை. அவன் குழந்தை துணையா இருக்குமுன்னு. தள்ளி இருக்கிறதுக்கு, ஒரு பிள்ளை சேர்ந்தே நம்ம வீட்டில் இருக்கட்டுமுன்னு கேட்குறேன். அவங்களுக்கு வயசு இருக்கு. இன்னொரு குழந்தை பெத்துக்க போறாங்க” பத்மப்ரியா பேச, வம்சியின் உலகம் தட்டாமாலை சுற்றியது.

‘இது என்ன புது பிரச்சனை. பங்காரு நல்லவ தான். ஆனால், ஏமாளி இல்லை. அவ என்னையே விட்டுக்கொடுக்க மாட்டா. இதுல அவ பிள்ளையை கேட்டா, அவ்வளவு தான் எல்லார் சங்கையும் நெரிச்சிருவா?’ அவன் இதயம் துடிக்க மறந்து அரண்டு போனது. “அக்கா, இப்ப எதுக்கு தேவை இல்லாத பேச்சு? நீ முதலில் ரெஸ்ட் எடு” வம்சி தன்மையாக கூறினான்.

“உன் அக்காவுக்கு தரமாட்டா. அப்படித்தானே? ஏண்டா, நான் என்ன உன் காசு பணமா கேட்குறேன். எடுத்துக்கிட்டு அனுபவிக்க, பாசத்தை கொடுக்க பிள்ளையை தானே கேட்குறேன். உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீங்க தான் அம்மா, அப்பா. ஆனால், என் வீட்டில் வளரட்டுமுன்னு சொல்றேன். இந்த அக்காகிட்ட சரின்னு சொல்லணும்னு உனக்கு தோணலைல?” அவள் ஏக்கமாக பேச ஆரம்பித்து வம்சி சம்மதம்  சொல்லாத ஏமாற்றத்தில் ஆக்ரோஷமாக பேச, அவள் இரத்த துடிப்பு ஏறி அவள் மூச்சு மேலும் கீழும் ஏறி இறங்க, வம்சி பயந்துவிட்டான்.

“அக்கா… அக்கா…” அவன் கண்கள் கலங்க, உதய் மருத்துவர்களை அழைத்து வர சென்றுவிட்டான். “போடா…  எ…ல்லாம் ந…டிப்பு நடிப்பு. உனக்கு என் மேல் பாசமே இ…இல்லை… முன்னெல்லாம் அக்கா கேட்குறதுக்கு முன்னாடியே கொடுப்ப… இப்பல்லாம்…” அவள் பல மூச்சுகளோடு கூற, அவன் தன் சகோதரியின் கைகளை பிடித்தான்.

“அக்காவுக்கு இல்லாமல், என் வாழ்க்கையில் என்ன அக்கா இருக்கு. ஒரு குழந்தை தானே? நான் தரேன் அக்கா. என் கிட்ட வளர்ந்தா என்ன? உன் கிட்ட வளர்ந்தா என்ன? நீ டென்ஷன் ஆகாம, நல்ல படியா வீடு வந்து சேர்ந்தா எனக்கு அதுவே போதும்” அவன் அவள் கை மீது தன் கையை வைத்து சத்தியம் செய்து கொடுத்தான்.  பத்மப்ரியாவின் முகத்தில் புன்னகை மலர, உள்ளே நுழைந்த உதய் அதிர்ந்து நின்றான்.

மருத்துவர்கள் மருந்தை கொடுத்துவிட்டு, அவள் பதட்டமடைய கூடாது என்றும் எச்சரித்துவிட்டு சென்றனர். உதய் அங்கு தங்க வம்சி வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

பத்மா கண்விழிக்கவும், “பத்மா, வம்சி குழந்தை நமக்கு வேண்டாம்” என்ன நடந்தாலும் சரியென்று தீர்க்கமாக பேசினான். “பத்மா, நான் சுயநலவாதி தான். நான் நல்லவனா  இருந்திருந்தா, நீ கல்யாணத்துக்கு அப்புறமும் வம்சி கிட்ட எடுத்துகிட்ட உரிமையை தடுத்து நிறுத்திருப்பேன்.  ஆனால், எனக்கு என்னனு ஒதுங்கி தான் நின்னேன். நம்ம வியாபாரத்திற்கு நாம வம்சியை பயன்படுத்தறோம். அவன் நமக்கா நிறைய செலவழிக்கிறான். நானா கேட்டதில்லை. ஆனால், தடுத்ததுமில்லை. ஆனால், நான் கெட்டவன் இல்லை பத்மா. என்ன பாவம் செய்தோமுனு தெரியலை. ஏற்கனவே குழந்தையை இழந்துட்டு நிக்கறோம். நமக்கு தான் ஆண்டவன், சிந்துவை கொடுத்திருக்கானே. நமக்கு சிந்து போதும். குழந்தையும், அம்மா அப்பாவையும் பிரித்த பாவம் நமக்கு வேண்டாம்.” உதய் உறுதியாக கூறினான்.

“யாரும் யாரையும் பிரிக்கலை. உங்களுக்கு என் தம்பி பிள்ளையை வளர்க்க மனசில்லை. அது தான் இப்படி பேசறீங்க தம்பியே தரேன்னு சொல்லிட்டான். உங்களுக்கு என்ன பிரச்சனை.” பத்மப்ரியா பதட்டமாக, ‘மெதுவா பேசி புரியவைப்போம் ‘ என்ற எண்ணத்தோடு, “இப்ப இதை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.” என்று தன் மனைவியிடம் தன்மையாக கூறினான்.

***

வம்சி மிருதுளாவின் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ‘ அக்காவுக்கு நான் கொடுத்த வாக்குறுதி பத்தி தெரிஞ்சா பங்காரு என்ன பண்ணுவா?’  அவன் நெஞ்சை நீவிக் கொண்டான். மிருதுளா அவன் அருகே அமர்ந்து அவன் தலை கோத, அவள் தோளில் முகத்தை புதைத்துக்கொண்டு அவள் வயிற்றின் மீது கை வைத்து கண்ணீர் வடித்தான்.

‘இரண்டில் ஒன்றை கொடுக்க வேண்டுமா? இதை என் பங்காரு எப்படி தாங்குவா? அக்கா கிட்ட என்னால் மறுத்து பேச முடியலையே’ அவன் உடல் குலுங்கியது.

“எல்லாம் சரியாகிடும் . உங்க அக்கா சீக்கிரம் தேறிடுவாங்க” அவன் தமக்கையை எண்ணி வருந்துகிறான் என்று அவள் ஆறுதலாக பேச, ‘பங்காருவிடம் இப்பொழுது சொல்லவா, வேண்டாமா?’ என்றறியாமால் துடித்தான் அன்பு கணவனாக. தவித்தான் பாசக்கார தம்பியாக!

மயங்கும்…                                          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!