மயங்கினேன் பொன்மானிலே – 27

பொன்மானிலே _BG-60e2c17a

மயங்கினேன் பொன்மானிலே – 27

அத்தியாயம் – 27

வளைகாப்பு விழா சிறப்பாக முடிந்து, உற்றார் உறவினர் அனைவரும் கிளம்பி விட, அப்பொழுது தான், “சிந்து… சிந்து…” என்று அழைத்துக் கொண்டு வந்தார் சிந்துவின் பாட்டி.

“சிந்துவை நான் எல்லா இடத்துலயும் தேடிட்டேன். அவளை காணவில்லை” என்று உதயின் தாயார் கூறவும், “என்னங்க, இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சிந்து மொபைலை…” என்று மிருதுளா வம்சியிடம் பேச ஆரம்பிக்க, “ஏய், மூடு உன் வாயை” என்று கோபமாக அங்கு வந்தாள் பத்மப்ரியா. “எப்பப்பாரு, என் பொண்ணு பேச்சை எடுத்தாலே, மொபைல்ன்னு சொல்லி குறை சொல்ல வந்திட வேண்டியது. அவ மொபைலே இங்க தான் இருக்கு.” பத்மப்ரியா சீற,
“நானும் அதை தான் சொல்ல வந்தேன். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஃபோன் வந்தது. அது வந்ததும், அவ முகம் எல்லாம் மாறுச்சு. உடனே இந்த மொபைலை இங்க தூக்கி போட்டுட்டு பதட்டமா ஓடினா. நான் அதை சொல்லத்தான் உங்களைத் தேடினேன்” மிருதுளா வம்சியை பார்த்து கூற, ‘இது என்ன புது பிரச்சனை? நானே பிரச்சனை எந்த ரூபத்தில் வெடிக்கும்னு பயந்திட்டு இருக்கேன்.’ அவன் நெற்றி சுருங்கியது.

“அவ கொஞ்சம் நாளாவே சரி இல்லை. மாமன் நீயாவது முன்னாடி நம்ம வீட்டுக்கு அடிக்கடி வருவ. இப்ப, உனக்கு உன் பொண்டாட்டியை பார்க்கவே நேரம் சரியா இருக்கு” பத்மப்ரியா தலையில் அடித்து கொண்டு அழ, அனைவரும் செய்வதறியாது திகைத்தனர்.

“என்னங்க, அவளுக்கு கடைசியா வந்த அழைப்பில் தான் ஏதோவொரு பிரச்சனை” என்று மிருதுளா உறுதியாக கூற, “ஏய், நான் என் பெண்ணை காணுமுன்னு பதட்டமா இருக்கேன். இப்பவும் நீ அவளை குற்றம் கண்டுபிடிக்கவே முந்திகிட்டு வர” என்று பத்மப்ரியா மிருதுளாவிடம் சண்டைக்கு நின்றாள்.
மிருதுளாவின் பெற்றோர், ‘என்ன செய்வது?’ என்று அறியாமல் பார்த்துக் கொண்டிருக்க,

“ஏதோ தப்பா இருக்கு.” மிருதுளா படபடக்க, “அது தானே, என் பெண்ணை குறை சொல்லணும். என்னை பற்றி என்ன சொல்லி கொடுத்தீயோ? என் தம்பி முன்ன மாதிரி என் கிட்ட பேசறதில்லை. இப்ப என் பெண்ணை பற்றி மூட்டி விடுற?” பத்மா கோபமாக கத்தினாள்.
“உங்களுக்கும் உங்க தம்பிக்கும் பிரச்சனைனா, அதுக்கு நான் காரணம் கிடையாது” மிருதுளா சீறிக்கொண்டு எழ, ‘கெடுத்தாலே கெடு. இவங்க ரெண்டு பேரும் பேசியே எல்லா விஷயத்தையும் வெளிய கொண்டு வந்துருவாங்க போலையே’ வம்சியின் இதயத்துடிப்பு ஏறியது. “பங்காரு, டென்ஷன் ஆகாத பங்காரு. உன் உடம்பு…” அவன் தன் மனைவியை அடக்க எத்தனிக்க,

“நீ இப்படி பங்காரு… பங்காருன்னு தாங்க போய்த்தான் அவ இப்படி திமிரா நிக்குறா? ஊர் உலகத்துல யாரும் பிள்ளை பெத்து எடுக்கலையா? குறத்தி பிள்ளையை பெத்தெடுக்க, குறவன் துணை இருந்தானாம். அப்படி இருக்கு உங்க கதை. பங்காரு… பங்காருன்னு எப்ப பாரும் நீ அவளையே சுத்தி வர. உனக்குன்னு நீ ஏதாவது யோசிக்கறீயா தம்பி. எப்பப்பப்பாரு பங்காரு…பங்காரு… நீ பங்காருனு கூப்பிடறதை கேட்டாலே எனக்கு எரிச்சலா இருக்கு. யாராவது முன்ன பங்காருன்னு கூப்பிட்டா எனக்கு கேட்கவே பிடிக்கும். இப்பவெல்லாம் கடுப்பாகுது.” பத்மப்ரியா பேசிக்கொண்டே போக, “போதும் நிறுத்தறீங்களா?” என்று மிருதுளா, தன் வயிற்றை பிடித்துக்கொண்டு முன்னே நடந்து வந்தாள்.

அவளை அமைதி காக்க முயற்சித்து அனைவரும் தோற்றே போயினர். “உங்க பிரச்சனையே இது தான். உங்க பெண்ணை காணும். அதைவிட்டுட்டு தம்பி… தம்பின்னு அவரையே யோசிக்கிறீங்க. எந்த அம்மாவாது இப்படி இருப்பாங்களா?” அவள் கேட்க, “பங்காரு, அக்கா பதட்டத்தில் இப்படி…” என்று தன் மனைவியை சமாதானம் செய்ய, அவர்களிடம் சண்டையிட எத்தனித்த பத்மப்ரியாவை “பத்மா…” என்ற ஒற்றை அழைப்பிலும், பார்வையிலும் அடக்கினான் உதய்.

“மிருதுளா, நீ சொல்றது தான் சரின்னு எனக்கும் தோணுது. சிந்து மொபைல் இல்லாம இருக்கவே மாட்டா. அது இங்க இருக்குன்னா அதில் ஏதோவொரு பிரச்சனை இருக்கு” என்று கூறி சிந்துவின் அலைபேசியை எடுத்த உதய் , “எனக்கு பாஸ்வேர்டு தெரியாது” என்று பரிதாபமாக கூறினான்.
குடும்பத்தில் அனைவரும் திருதிருவென்று முழிக்க, “எனக்கு தெரியும்.” என்று கூறி, அலைபேசியை பார்க்க ஆரம்பித்தாள். “என் மகளை நீ எப்பவும் சந்தேக கண்ணோடையே கண்காணிச்சிட்டு இருந்திருக்க…” பத்மப்ரியா அவளிடம் பாய, அவளை யாரும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. வம்சி, படபடவென்று உதயோடு வெளியே சென்றான்.

யாரும் யாரோடும் பேசவில்லை. வம்சி இல்லத்தில் நிசப்தமே நிலவியது. மிருதுளாவின் தாயார், தன் மகளை உள்ளே அழைத்துச் சென்று, அவளை ஓய்வெடுக்க சொன்னார். மிருதுளா, உடையை மாற்றியதும் “நீ எதுக்கு எல்லார் விஷயத்திலும் தலையிடுற? அவங்க பொண்ணை அவங்களுக்கு பார்த்துக்க தெரியாதா?” என்று தன் மகளை கண்டிக்க, “அந்த பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனைனா, உங்க மாப்பிள்ளை தாங்க மாட்டங்க அம்மா” என்று சற்று அழுத்தமாக கூற, தன் மகளின் கூற்றில், மிருதுளாவின் பெற்றோர் மேலே எதுவும் பேசவில்லை.

சில நிமிடங்களில், ‘சிந்துவை பார்த்துவிட்டோம்.’ என்ற குறுஞ்செய்தி அவர்களுக்கு வந்தது. சில மணித்துளிகள் கழித்தே, உதய், வம்சி, சிந்து மூவரும் வீடு திரும்பினர். வம்சியின் முகமும், உதயின் முகமும் இறுகி இருந்தது. சிந்து தலையை குனிந்து கொண்டு வந்தாள். ஆண்களின் முகஇறுக்கத்தில், வீட்டு பெண்கள் அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

“சிந்து, யார் கிட்டயும் சொல்லாம எங்கடீ போன? உன்னால் கண்டகண்ட பேச்சை எல்லாம் கேட்க வேண்டியதா போச்சு” பத்மப்ரியா தன் மகளிடம் சிடுசிடுக்க, “அவ, ஃபிரெண்டுக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு பார்க்க போயிருக்கா” வம்சி பொய் என்றாலும் அழுத்தமாக உண்மை போல் சட்டென்று கூற, உதய் தன் மகளை முறைத்தான். சிந்து குற்ற உணர்ச்சியோடு தலையை குனிந்து கொண்டாள். “அது தானே பார்த்தேன். என் மகளை பற்றி எனக்கு தெரியாதா?” பத்மப்ரியா பெருமிதமாக கூற, அவள் வெகுளித்தனத்தில் வம்சியின் மனம் இளக, உதயின் மனம் வருந்தியது.

“பத்மா, கிளம்புவோம் வீட்டுக்கு” உதய் கடினமான குரலில் கூறினான். அவன் மனமோ, ‘நடந்ததை பத்மாவிடம் பக்குவமாக கூற வேண்டும்.’ என்று எண்ணிக்கொண்டு தன் குடும்பத்தை கூட்டிக்கொண்டு வாசல் வரை சென்றான். வாசல் வரை சென்றவன், அனைவரும் காரில் ஏறி விட, மடமடவென்று வீட்டிற்குள் நுழைந்தான். வம்சியும், மிருதுளாவும் அவனை புரியாமல் பார்க்க, “வம்சி…” அவன் தோள்களை கட்டிக்கொண்டு கண்ணீர் உகுத்தான். “என் மனசறிந்து, நான் உனக்கு எந்த கெட்டதும் பண்ணதில்லை வம்சி. ஆனால், நல்லதுன்னு ஒன்னு செய்ததே இல்லை” அவன் உணர்ச்சி பூர்வமாக கூற, “எங்க அக்கா சந்தோஷமா இருக்கா மாமா. அது நீங்க எனக்கு பண்ண பெரிய நல்லது மாமா. அதுமட்டுமில்லை, உங்க குடும்பம் இல்லைனா, இந்த வம்சியே இல்லை மாமா” அவன் குரலிலும் உணர்ச்சி பெருக்கு இருந்தது.

“இல்லை வம்சி. நீ சொன்ன மாதிரி, நான் ஆரம்ப காலத்தில் நினைத்தது உண்டு. ஆனால், நீ அதை விட அதிகமா எங்க குடும்பத்துக்கு பண்ணிட்ட. அதுவும் இன்னைக்கு நீ பண்ணது.” அவன் குலுங்கி அழுதான். மிருதுளாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டான். “நீ இன்னைக்கு என் குடும்பத்துக்கு பண்ண உதவிக்கு நான் நன்றி கடன் தீர்க்கவே முடியாது மிருதுளா. ஆனால், தீர்க்க கூடிய சந்தர்ப்பத்தை அந்த ஆண்டவன் எனக்கு தருவான் அப்படினா, நிச்சயம் உனக்கு நல்லது பண்ணிருவேன்மா.” மேலும் பேசினால், தேவை இல்லாமல் எதையாவது பேசிவிடுவோம் என்று உதய் மடமடவென்று வெளியே சென்றுவிட்டான்.
***

அன்றிரவு,
மிருதுளா மிக சோர்வாக இருந்தாள். கால்களை நீட்டியபடி மெத்தையில் அமர, அவள் காலருகே அவன் அமர்ந்தான். அவள் கால்களை மடக்கி கொள்ள எத்தனிக்க, அவன் அவள் கால்களை அழுத்தி பிடித்தான். “இப்ப எதுக்கு மடக்குற?” அவள் கால்களை தன் மடியில் எடுத்து வைத்து கொண்டு அவளுக்கு கால்களை பிடித்து, மெல்ல அவள் விரல்களை நீவி விட்டபடி கேட்டான்.

“உங்களுக்கும் உங்க அக்காவுக்கும் என்ன பிரச்சனை?” அவள் சோர்ந்து போன முகத்தோடு கேட்டாள். “பங்காரு, ரொம்ப சோர்வா தெரியுற. உங்க வீட்டுக்கு உன்னை வளைகாப்புக்கு அனுப்புற எண்ணம் எனக்கில்லை. அதனால், மெதுவாவே வளைகாப்பு வச்சிக்கலாமுன்னு அத்தை மாமா சொன்னதை வைத்து நானும் மெதுவா வளைகாப்பு வச்சிட்டேன். ஆனால், நீ இன்னைக்கு ரொம்ப சிரமப்பட்டுட்ட பங்காரு. டெலிவரி தேதி வேற ரொம்ப பக்கத்தில் இருக்கு. உனக்கு இன்னைக்கு ரொம்ப டென்ஷன்” அவன் அவள் படுக்க ஏதுவாக தலையணையை வைத்துவிட்டு விலக, அவள் அவன் கைகளை பிடித்து நிறுத்தினாள்.
“இன்னைக்கு சிந்து விஷயத்தில் எதுவும் பெரிய பிரச்சனையா?” அவள் கவலையாக கேட்க, “பெரிய பிரச்சனையையா வர வேண்டியது. நீ சரியான நேரத்தில் எல்லாத்தையும் தடுத்து நிறுத்திட்ட” அவன் அவள் தலை கோதி கூறினான். “நீ படு. நான் உன்னை தொந்திரவு செய்ய விரும்பலை” அவன் மீண்டும் விலகி செல்ல எத்தனிக்க, “நான் உங்க அக்கா பத்தி கேட்க மாட்டேன். நீங்க என் பக்கத்தில் இருங்க” அவள் அவன் அருகாமையை விரும்பி அழைக்க, அவனும் அவள் அருகில் அமர்ந்தான்.

“நான், உன்னை கேட்க கூடாதுனு சொல்லவே இல்லையே பங்காரு.” அவன் கூற, “சொல்ல மாட்டீங்க. ஆனால், பேசாம காணாமல் போயிடுவீங்க.” அவள் சிரிக்க, “பங்காரு, என்னை கேலி பண்ற?” அவன் அவள் காதை திருக, “அம்மா…” அவள் சத்தமிட்டாள். “பங்காரு, நான் இந்த அளவுக்கெல்லாம், ஒண்ணுமே செய்யலியே…” அவன் அவளருகே அமர்ந்து கொண்டு, அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான். அவள் அவன் கைகளை அவள் வயிற்றின் மீது வைத்தாள். “உங்க குழந்தை, என்னை எட்டி மிதிக்குது.” அவள் கூற, அந்த குழந்தை அவன் ஸ்பர்சிதையும் அதன் அசைவால் அவனை தீண்டியது. ‘இது எந்த குழந்தை? நான் அக்காவிடம் கொடுப்பதாக வாக்கு கொடுத்த குழந்தை இந்த குழந்தையாக இருந்துவிட்டால்… என்னை தீண்டிய முதல் குழந்தையை நான் கொடுக்க வேண்டுமா?’ அவன் கைகள் நடுங்கியது.

அவன் கைகள் மேல் தன் கைகளை வைத்து அழுத்தினாள். “ப…பங்காரு…” அவன் குரல் நடுங்கியது. “எனக்கு ரொம்ப பயமா இருக்குது பங்காரு” அவன் கூற, அவள் கிண்கிணியாக சிரித்தாள். “இதுக்கே பயந்தா எப்படி? ரெண்டு பிள்ளையையும் நானா பார்க்க முடியும்? நீங்களும் ஒரு குழந்தையை பார்க்கணும்” அவள் கூற, அவன் அவளை ஆழமாக பார்த்தான். “குழந்தைகளை எப்படி படிக்க வைக்கணும். எப்படி வளர்க்கணும். எல்லாம் நான் சொல்ற மாதிரி தான். சரியா? நீங்க ரொம்ப செல்லம் கொடுத்திருவீங்க. அதனால், குழந்தைகளின் முழு பொறுப்பும் என்னது தான். நான் ஒரு கண்டிப்பான அம்மா” அவள் அவனிடம் கண்ணடித்து வம்பிழுக்க, “உண்மை தான் பங்காரு. சிந்து விஷயம் நீ எப்படி ஆரம்பத்துலையே கண்டுபிடிச்சிட்ட. சொல்லி கூட எனக்கு புரியலை. என் அக்கா எவ்வளவு வெகுளி பாரு. இவ்வளவு நடந்த பிறகும், தன் பொண்ணு முகத்தை பார்த்து கூட கண்டுபிடிக்க தெரியலை. இதில் மாமா எப்படி அக்கா கிட்ட சொல்லி புரிய வைக்க போறாங்ஙனே எனக்கு தெரியலை” அவன் கூற, “என்ன பிரச்சனை?” அவள் கேட்கும் பொழுதே அவள் அலறினாள்.

“அம்மா….” அவளுக்கு அடுத்த வலி. “பங்காரு…” அவன் துடித்தான். காரில் அவர்கள் செல்ல, அவன் அவள் அருகே அமர்ந்திருந்தான். “அம்மா… அம்மா… அம்மா…” அவளின் ஒவ்வொரு அலறலுக்கும் அவன் இதயம் நின்று நின்று துடித்தது. அவன் அவள் கைகளை அழுந்த பற்றினான். ‘பங்காருவின் வலியை என்னால் வாங்கி கொள்ள முடியாதா?’என்று அவன் கரங்கள் அவளை ஆறுதலாக பற்றியது. ‘புள்ளி…’ என்ற அவன் சொன்ன வார்த்தையின் வலியை, அவளின் “அம்மா…” என்ற துடிப்பில் உணர்ந்தான். “பங்காரு…” அவன் அழைக்க, அவளின் மொத்த இடையையும் அவன் மேல் சரித்து கொண்டு அவள் வழியெங்கும் வலியில் துடித்தாள். ‘என் பங்காரு, இத்தனை சிரமப்பட்டு பெற்றேடுக்கும் குழந்தைகளை அக்கா ஏன் கேட்க வேண்டும்?’ அவன் விழி நீர் அவள் தேகத்தில் பட்டு தெறிக்க, அவன் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

“எனக்கு எதுவும் ஆகாது. எனக்கு ஏதாவது ஆகிட்டா, உங்க அக்கா குடும்பத்தோட சந்தோஷமா இருக்கலாமுன்னு நினைக்குறீங்களா? அப்படி எல்லாம் உங்களை நிம்மதியா விட்டுட்டு நான் போகவே மாட்டேன். கூட இருந்தே தான் உயிரை எடுப்பேன்” அவள் வலியிலும், அவன் காதில் கிசுகிசுக்க, அவன் அவள் பேச்சை ரசித்தான். 

“பணியாரம் செய்தே பங்கம் பண்ற பங்காரு சாமானியப்பட்டவ இல்லை” அவள் பேசினாலும், அவள் முகம் வலியில் சுருங்கியது. “கொஞ்ச தூரம் தான்ம்மா” அவன் அவளுக்கு ஆறுதல் கூற, “பங்காருன்னு சொல்லுங்க. உங்க அக்காவுக்கு நீங்க என்னை பங்காருன்னு கூப்பிடறது எரிச்சலா இருக்குனு சொன்னதிலிருந்து எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” வலியினோடு அவள் பேசினாள். அவள் வலியில் அவன் தான் மிரண்டிருந்தான்.
மருத்துவமனைக்கு வந்ததும் வலியோடு உடை மாற்றி அவளை அழைத்து செல்ல எத்தனிக்க, அவள் அவனை பார்த்தாள். அவன் கண்களிலிருந்த மிரட்சி அவளை ஏதோ செய்தது. தாயை பார்த்த நினைவுகள் கூட இல்லாத அவன் தாயாக போகும் அவளை குழந்தையின் ஏக்கத்தோடு பார்ப்பது அவளுக்கு புரிந்தது. பிரசவம் மறுஜென்மம். இந்நேரத்தில், அவனை தவிக்க விட்டு செல்ல அவளுக்கு பிடிக்கவில்லை. அவனை ஒற்றை விரலால் அருகே அழைத்து கண்களால் அவனை முகம் அருகே அழைத்தாள். அவன் அவளை நெருங்க,

“பாவா…” அவன் செவிகளில் அவள் அன்போடு உரிமையாக அழைக்க, அவன் அவள் வலியை மறந்து, “பங்காரு… பங்காரு… பங்காரு…” அவள் கைகளை அழுந்த பற்றிக்கொண்டு ஆனந்தத்தின் உச்சியில் உணர்ச்சியின் பிடியில் அவள் பெயரையே சுவாசித்தான் அந்த அன்பானவன்.
அன்பை பெறுவதும் தனி சுகம் தானே. அவன் அன்பில் அவள் கரைய, அந்த வலியிலும் அவள் முகத்தில் புன்னகை. ‘இந்த பங்காரு என்ற அழைப்புக்கு நான் எத்தனை வலியை வேண்டுமென்றாலும் தாங்குவேன்.’ என்பது போல் அவளை அழைத்து சென்ற செவிலியர்களோடு வலியோடு பங்காரு என்ற அழைப்போடு உள்ளே சென்றுவிட்டாள்.

அதே நேரம், பத்மப்ரியா வீட்டிற்கும் தகவல் அனுப்பப்பட்டது.
“குழந்தை பிறந்ததும், மிருதுளா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வர அன்னைக்கு நம்ம குழந்தையை நாம முதலில் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருவோம்.” அவள் கூற, உதய் அதிர்ந்து நின்றான்.
மயங்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!