மயங்கினேன் பொன்மானிலே – 30 (Final Episode)

பொன்மானிலே _BG-d494d924

மயங்கினேன் பொன்மானிலே – 30 (Final Episode)

அத்தியாயம் – 30 

மிருதுளா குழந்தையோடு பத்மப்ரியாவின் வீட்டிற்குள் நுழைய, அனைவரும் ஹாலுக்கு வந்தனர். பத்மப்ரியாவுக்கு முன் மெத்தையில் சுருட்டப்பட்ட குழந்தையை தாயாய் பத்திரமாகவும் கோபமாகவும் வீசினாள். 

“உங்களுக்கு என்ன வேணும். ஒரு குழந்தை தானே? இந்தாங்க… எந்த அம்மாவும் ஒரு குழந்தையை தர மாட்டா. அப்படி கொடுக்குற அம்மா, பெரிய தியாகியா இருக்கணும். நான் தியாகி எல்லாம் இல்லை. ஆனால், எனக்கு பயமா இருக்குங்க. அக்காவுக்கு பிள்ளையை கொடுக்கலைன்னு என் புருஷனுக்கு ஏதாவது ஆகிருமுன்னு பயமா இருக்கு. இல்லை, நமக்கு இரட்டை பிள்ளை பிறந்ததால் தான் அக்காவோட பிரச்சனை வந்திருச்சோன்னு, அவர் என் பிள்ளைகளை வெறுத்திருவாரோன்னு பயமா இருக்கு.”

“என் குழந்தை உங்ககிட்ட தானே வளரபோகுது. என் புருஷனை மாதிரி பாசக்கார குழந்தையா தானே வளர்ப்பீங்க. நல்லது தான். வளரட்டும். நான் அம்மாவா கூட இல்லைங்கிற ஏக்கம் மட்டும் தானே. இருந்துட்டு போகட்டும். என் குடும்பத்துக்கு இது தான் நல்லதுன்னா, என் பிள்ளைக்கு அம்மா, அப்பா தள்ளி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், பக்கத்துல இருந்தும் அப்பா பாசம் இல்லைன்னு ஒரு நொடி கூட ஆகிட கூடாது. இதுக்கெல்லாம் வலி எனக்கு தானே. என் குடும்பத்துக்காக நான் எந்த வலியையும் தாங்கிப்பேன்” அவள் மடமடவென்று வெளியே செல்ல,

“உன் குழந்தையை எடுத்திட்டு வெளிய போ” என்றாள் பத்மப்ரியா அழுத்தமாக. “பாப்பா, அவங்க அம்மா கிட்ட தான் இருக்கனும் அத்தை. நான் என் அம்மா இல்லாம எப்படி இருப்பேன். அப்படி தானே பாப்பாவும். அத்தை, நான் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாப்பாவோட விளையாடட்டுமா?”  சிந்து குழந்தையை கொஞ்சியப்படி கேட்க, மிருதுளா அவளை ஆச்சரியமாக பார்த்தாள்.

 “சாரி அத்தை, நீங்க அறிவுரை சொன்னப்பல்லாம் எனக்கு உங்களை பிடிக்கலை. ஆனால், ஒரு பிரச்சனையில் மாட்டினப்ப தான் என்னால் உங்களை புரிஞ்சிக்க முடிஞ்சது” சிந்து கூற, மிருதுளா அவள் தலையை வாஞ்சையோடு தடவினாள். 

“எல்லாருக்கும் நீ நல்லவ? நான் கெட்டவ?” பத்மப்ரியா கேட்க, மிருதுளா பதில் பேசவில்லை. “எனக்கு யார் குழந்தையும் வேண்டாம். உன் குடும்பம் இனி இங்க வரக் கூடாது. வெளிய போ” பத்மப்ரியா கூற, மிருதுளா குழந்தையோடு கிளம்பிவிட்டாள்.

 நாட்கள் அதன் போக்கில் நகர,

அக்காவும் தம்பியும் பேசிக்கொள்ளவில்லை. அவர்களுக்கிடையில் வருத்தம். பத்மப்ரியாவிடம் இந்த சில நாட்களில் மௌனம் மட்டுமே. வம்சி சோர்வாக இருந்தாலும் தன்னை மீட்டுக் கொள்ள முயற்சித்தான். காலம் மனவலியை ஆற்றும் என்ற நம்பிக்கையோடு.

குழந்தைகளின் பெயர்ச்சூட்டு விழாவும் வந்தது. வம்சி தன் தமக்கை குடும்பத்திற்கு சீக்கிரமாக வருமாறு அழைப்பு கொடுத்திருந்தான். “பத்மா, கிளம்பு போகணும்” உதய் கூற, “இல்லைங்க, நான் வரலை” அவள் மறுப்பு தெரிவித்தாள். “பத்மா, வம்சி ரொம்ப வருத்தப்படுவான்” உதய் கூற, “இல்லைங்க, அவனுக்கு நான் தான் கஷ்டமே. அவன் கல்யாணத்துக்கு அப்புறம் என்னால் தான் அவங்களுக்கு பிரச்சனையே. நான் இப்படியே இருந்துக்குறேன். தம்பி முதலில் வருத்தப்படுவான். அம்மா, அப்பா இல்லாமலே வளர்ந்திட்டோம். அக்கா இல்லாமல் இருக்க மாட்டானா?” பத்மா கண்ணீர் மல்க புலம்பினாள்.

“நான் விலகி போனா என் தம்பி நல்லாருப்பான்… அப்படினா, நான் விலகி போய்டுறேன்ங்க. எனக்கு என் தம்பி வேண்டாம். எனக்கு சத்தியமா தெரியாதுங்க, நான் என் தம்பிக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுத்திருக்கேன்னு எனக்கு தெரியாதுங்க. அவங்க சின்ன சிறுசுங்க, நான் தான் கூட இருந்து வழிகாட்டணுமுன்னு நினைச்சேனேயொழிய இப்படி எல்லாம் யோசிக்கலைங்க” அவள் தலையில் அடித்து கொண்டு கதறினாள்.

“நேத்து வந்த பிள்ளையை வேண்டாமுன்னு முடிவு பண்ண மிருதுளாவுக்கு எவ்வளவு கஷ்டமோ? எனக்கு என் தம்பி வேண்டாமுன்னு நான் முடிவு எடுக்க அதை விட கஷ்டம்ங்க. நான் என் அம்மாவை, என் அப்பாவை எல்லாத்தையும் என் தம்பி கிட்ட மட்டும் தான் பார்க்குறேன்ங்க. அவன் என் கூட இருக்கும் பொழுது, எனக்கு எல்லாரும் என் கூட இருக்கிற மாதிரி தெரியுதுங்க. அதனால் தான் அவன் சின்னவனா இருந்தாலும் தம்பி… தம்பின்னு என் கூடவே வச்சிக்குறேன். ஆனால், என் தம்பிக்கு என்னால் எவ்வளவு கஷ்டம். இப்படி கஷ்டம் தர்ற அக்கா என் தம்பிக்கு வேண்டாம். இப்ப எங்களுக்குள்ள ஏற்பட்ட இந்த பிரிவை நிரந்திர பிரிவாக்கிருவோம். அவன் சந்தோஷமா இருக்கணும்.” பத்மப்ரியா உறுதியாக மறுத்துவிட,

“உன்னை கஷ்டமுன்னு உன் தம்பி நினைப்பானா?” உதய் கேட்க, “அவன் ஒரு முட்டாப்பையன். அவன் அப்படி நினைச்சிருந்தா, ஒரு சிசுவை அழிக்கிற  பாவத்தை பண்ணிருப்பானா? ஆனால், அவன் பொண்டாட்டி நல்லவளா இருந்தாலும், அவ நினைப்பா தானே? இப்படி ஒரு அக்கா இருக்க போய் தானே இவ்வளவு பிரச்சனையும்முன்னு… அது தான் நான் அவளை அன்னைக்கு வெளிய போக சொல்லிட்டேன். என் தம்பி குழந்தை அழிய நான் காரணமா?” அவள் தலையில் அடித்துக்கொண்டு கதறினாள்.

“பத்மா…” அவன் அவள் கைகளை பிடிக்க, “நடந்த தப்பு எனக்கு தெரியாமல் நடந்த தப்புங்க. ஆனால், இனி நான் என் தம்பி வீட்டுக்கு போனால், அது நான் தெரிந்தே பண்ற தப்புங்க. நான் போக மாட்டேன். நான் இதுவரை எல்லா விஷயத்தையும் என் கோணத்தில் மட்டும் தான் பார்த்தேன். ஆனால், அன்னைக்கு மிருதுளா பிள்ளையை தூக்கி வீசும் பொழுது என் உயிரே போயிடுச்சுங்க. என் தம்பி பிள்ளையை இப்படி எறியறாளேன்னு… எனக்கு எல்லாமே என் தம்பியின் வழியா மட்டும் தான் தெரியுதுங்க. நான் போனால், அவளுக்கும் கஷ்டம் தான். வேண்டாம்… வேண்டாம்…” என்று அவள் உடல் நடுங்க மறுப்பு தெரிவித்தாள்.

“நீ இப்ப உணர்ச்சி வசப்பட்டு பேசுற. உன் தம்பி குரல் கேட்டா கூட நீ மாறிடுவா பத்மா. வம்சி நீ இல்லாமல் சந்தோஷமா இருக்க மாட்டான். நீ வேண்டாமுன்னு நினைச்சிருந்தா, மிருதுளா இங்க குழந்தையோடு வந்திருக்கவே மாட்டா. நீ வேணுமுன்னு தான் அவங்க நினைக்குறாங்க” உதய் கூற, பத்மப்ரியாவின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

“பத்மா… கல்யாணத்துக்கு அப்புறம் அது ஆணா இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவங்க பிறந்தவீட்டு உறவு பொன்மான் மாதிரி தான். தள்ளி இருந்து பார்த்தோமா, ரசித்தோமா, நல்லது பண்ணினோமான்னு இருக்கனும். பக்கத்துல  போய், அங்க ஆட்சி செய்யணும்னு நினைத்தா பொன்மானின் மாயை கலைந்து ஏமாற்றம் தான் மிஞ்சும்.” உதய் கூற, பத்மா மெளனமாக இருந்தாள்.

“மிருதுளாவும் சரி, நானும் சரி உன்னை விலகி போக சொல்லலை. விலகி நின்னு தான் சொல்றோம். நீ விலகி போய்ட்டா… அக்கா, தம்பி இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கமாட்டீங்க” அவன் கூற, வம்சி அலைபேசியில் அழைத்தான்.

“மாமா, அக்கா வரலைனா நான் இன்னைக்கு பெயர் வைக்குற விழாவை நிறுத்திடலாமுன்னு இருக்கேன். மிருதுளாவும் அது தான் சரின்னு சொல்றா” வம்சி பேசுவது தெளிவாக கேட்க, படக்கென்று அலைபேசியை பிடுங்கினாள் பத்மப்ரியா.

“உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் அறிவே கிடையாதா? நான் ஒரு பெரிய மனுஷி இருக்கேன். என்கிட்டே கேட்கமாலே எல்லாம் முடிவு பண்ணுவீங்களா? என் தம்பி பிள்ளைகளுக்கு முதல்முதலா வர்ற விழாவை நிறுத்துவீங்களா? நான் இப்ப வரேன்” பத்மப்ரியா தம்பியின் குரலில் அனைத்தும் மறந்து பாசம் பொங்க கிளம்பிவிட்டாள்.

பொன்மானின் மீது அவள் மயக்கம் தெளிந்தாலும் பொன்மானின் அழகில் அவள் அவ்வப்பொழுது மயங்கத்தான் செய்வாள். ஆனால், இனி வரும் மயக்கத்தின் எல்லைக் கோடுகளை காலம் கற்று கொடுத்துவிட்டது என்பதை அவள் முகத்தில் தோன்றிய தெளிவில் கண்டுகொண்டான் உதய்.

அவள் கைகளை எட்டிப்பிடித்து, அழுது சிவந்திருந்த அவள் முகத்தை தன் கைகளால் துடைத்துவிட்டு, அவளை கிளம்புமாறு கண்களால் செய்கை காட்டினான். சிறியவர்கள் தெளிவாகிவிட, உதயின் தாய் அவர்கள் போக்குக்கு இசைந்து கொடுத்தார்.

***

“அக்கா வா… வா…” தொலைந்த முழுமையான சந்தோசம் தன் கணவனின் முகத்தில் மீண்டுவிட்டத்தில், மிருதுளாவின் முகத்தில் நிறைவு. பத்மா இருவரையும் கவனிக்க தவறவில்லை.

“அக்கா, எனக்கு அம்மா , அப்பா எல்லாம் நீ தான். உன் மடியில் வைத்து தான் பெயர் வைக்கணும். நான் எல்லாருக்கும் புது டிரஸ் வாங்கி வச்சிருக்கேன். நீங்க மாத்திட்டு வாங்க. எல்லாரும் வந்துருவாங்க.” அவன் உற்சாக குரல் அனைவரையும் தொற்றிக்கொள்ள பெயர்சூட்டு விழா இனிதே நடந்தது.

“அத்தையை பாருங்க… அத்தையை பாருங்க…” என்று பத்மப்ரியாவின் குரல் உரிமையாய் அந்த வீடெங்கும் ஒலித்தது. அதில் அவளுக்கும் ஒரு நிறைவு இருந்தது. தன் தமக்கையின் உயிர்ப்பு அவன் வீட்டில் இருக்கும் பொழுது அவனுள்ளும் சொல்லிலடங்கா நிம்மதி பரவியது.

“பங்காரு… பங்காரு…” அவன் அவளை தாங்கினாலும், “அக்கா…” என்ற அழைப்பில் அவளையும் பார்த்துக் கொண்டான். “என் குழந்தைகள்…” என்று அவர்களையும் கொஞ்சிக் கொண்டான்  அந்த பாசக்காரன்.

உடன்பிறந்தவர்கள், ஒன்றாய் வளர்ந்தவர்கள் விலகி நிற்க வேண்டிய இடத்தை இருவருக்கும் அவர்கள் உறவுகளும் காலமும் உணர்த்திவிட்டது. அதை அவர்கள் செய்கையும் மற்றவர்களின் சந்தோஷமும் காட்டியது. சிந்து மாமா, அத்தை என்று வீட்டை வளையவளைய வந்தாள். தன் உரிமையை தட்டி செல்லாத எந்த உறவையும் ஒரு பெண் அரவணைத்துக் கொள்வாள் என்பதை மிருதுளா அவள் செய்கையால் காட்டிக் கொண்டிருக்க, தன்னவளை ரசித்தான் வம்சி.

விழா முடிந்து அனைவரும் சென்று விட அவர்கள் அறையில் தொட்டிலில் இருந்த குழந்தைகளோடு விளையாடி கொண்டிருந்தான் வம்சி.

அறைக்குள் நுழைந்த மிருதுளாவை முதலில் அவன் கவனிக்கவில்லை. “ம்…க்கும்…” என்று அவள் சத்தம் செய்ய, அவன் அவளை கண்டுகொண்டான். “இருந்தும், கவனிக்காதது போலவே குழந்தைகளின் தொட்டிலை ஆட்டிவிட்டு அவன் விளையாட, அவளுக்கு கடுங்கோபம் வந்தது. அருகே இருந்த தலையணையை எடுத்து அவன் மீது வீசினாள் மிருதுளா.

‘அவள் அதைத்தான் செய்வாள்’ என்பது போல் அந்த தலையணையை பின்பக்கமாகவே பிடித்து, அதை மெத்தையில் வீசிவிட்டு அவளை கூர்மையாக பார்த்தபடி அழுத்தமாக நடந்து வந்தான். அவன் நடையில் இருந்த மாறுபாட்டில், அவள் சின்ன சின்ன எட்டுக்களாக பின்னே சென்றாள்.

அவள் சுவரின் மீது இடித்து கொண்டு நிற்க, அவன் அவளுக்கு இருபக்கமும் கைகளை வைத்தான்.

“என் பங்காரு, தலையணையை மட்டும் தான் தூக்கி எறிவாளா? இல்லை பிள்ளையையுமா?” என்று அவன் கேட்க, அவள் திருதிருவென்று விழித்தாள். “அது மட்டுமில்லை, என் கிட்ட கூட கேட்காம, என் பிள்ளையை வச்சிக்கோங்கன்னு சொல்லியிருக்க?” அவன் அவள் காதை திருக, “ஆமா, நீங்க எல்லாத்தையும் என் கிட்ட கேட்டுத்தான் செஞ்சீங்க பாருங்க?” அவள் முகத்தை அசட்டையாக திருப்பினாள்.

“இதெல்லாம் இல்லாம என் அக்காவை வேற மிரட்டியிருக்க?” அவன் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு கேட்க, “நினச்சேன், நான் வந்தும் நீங்க திரும்பி பார்க்காமல் இருக்கும் பொழுதே நினச்சேன்” அவள் அவன் மார்பில் கைகளை குத்தி விலகி சென்றாள்.

“என்ன நினைத்த?” அவன் கண்கள் புரியமால் சுருங்க, “வீட்டுக்கு வந்ததும் உங்க அக்கா வத்தி வச்சிட்டாங்க. வந்ததும் வேலையை ஆரம்பிச்சிட்டாங்க” அவள் முகத்தை சுருக்க, அவளை எட்டிபின்னோடு அணைத்து, “பங்காரு… பங்காரு…” அவள் கழுத்தில் முகம் புதைத்து கொஞ்சினான்.

“என்ன சமாதானம் செய்ய வேண்டாம்” அவள் திமிற, “உன்னை பத்தி அக்கா சொல்லி தெரியணுமா என்ன? என் பங்காரு இப்படித்தான்னு எனக்கே தெரியுமே?” அவன் உல்லாசமாக அவளை சீண்ட, அவன் கைவளைவுக்குளே திரும்பி, அவனை கண்கலங்க பார்த்தாள். “உங்களுக்கு என்ன, உங்க பிள்ளைங்க வந்துட்டாங்க. உங்க அக்கா வந்தாச்சு. உங்க அக்கா மக வந்தாச்சு. நான் யாரோ தானே?” அவள் குரல் சற்று பிசிறு தட்டியது.

அவன் இடது கை அவள் இடையை சுற்றியிருக்க, அவன் வலது கை அவள் முகத்தை நிமிர்த்த அவன் கண்கள் அவள் கண்களை பார்த்தது. பக்குவமாக நடந்து கொள்ளும் மிருதுளா முற்றிலும் காணாமல் போயிருந்தாள். அவன் பங்காரு மட்டுமாய் நிறைந்து நின்றாள். “பங்காரு…” அவன் குரல் இப்பொழுது முழுதுமாக மாறியிருக்க, அவள் இன்னும் முறுக்கிக் கொண்டாள். “அக்கா எதுவும் சொல்லலை பங்காரு. அக்கா மாமியார் சொல்லித்தான் எனக்கு தெரியும். அக்கா ஏதாவது சொன்னாலும், என் பங்காருவை பத்தி எனக்கு தெரியாதா?” அவன் ஆழமான குரலில் கேட்டான்.  “உங்க அக்கா மாமியாரை தூக்கிருவோமா?” அவள் தீவிரமாக கேட்க, “அடிப்பாவி…” அவன் அவள் கன்னத்தை கிள்ளினான்.

“அக்கா, நீ கெட்டிகாரி. நீ சொல்றதை கேட்டு நடந்து, உன்னை நல்லா பார்த்துக்க சொன்னாங்க. ஆனால், நான் அக்கா சொல்றதை எல்லாம் நம்ப வேண்டாம். கொஞ்சம் யோசித்து செயல்படலாமுன்னு இருக்கேன்” அவன் கண்சிமிட்ட, அவன் கைவளைவுக்குள் நின்ற அவள் அவனை செல்லமாக குத்தினாள்.

“குத்தாத பங்காரு… முன்ன அங்க என் பங்காரு மட்டும் தான் இருந்தா. இப்ப என் செல்ல குழந்தைகளும் பங்காருவோட இருக்காங்க. அவங்களுக்கும் வலிக்கும்” அவன் குறும்போடு, அவள் கைகளை பிடித்தான்.

“உங்க சந்தோசம் இப்ப தான் முழுசா திரும்பி இருக்கு.” அவள் அவனை பார்த்தபடி கூற, “சின்ன வயதில் அக்காவுக்கு நிறைய மாப்பிள்ளை வீடு பார்த்தோம். எல்லாரும் பணம் தருவோம். ஆனால், தம்பியை ஹாஸ்டலில் சேர்க்கணும்னு சொல்லிட்டாங்க. எங்க அக்கா யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. என் தம்பியை கூட வச்சிக்க யார் சம்மதம் சொல்றாங்களோ, அவங்களை தான் கல்யாணம் செய்துப்பேன். இல்லைனா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன். என் தம்பி தான் என் குழந்தைன்னு சொல்லிட்டாங்க.”

“அக்கா, எனக்காக செய்த தியாகங்கள் ஏராளம். என்னால், அவங்க வீட்டில்  பட்ட அவமானங்கள் ஏராளம்.  எனக்கு என் அக்கா மேல கண்மூடித்தனமான பாசம். அதுக்காக உன் மேல…” அவன் பேச, அவன் இதழ்களை மூடினாள் அவள்.

“என் மீதான உங்க பாசம் எனக்கு தெரியும்” அவள் கம்பிரமாக கூற, “பங்காரு…” அவன் உருகி நின்றான். “உன்கிட்ட எல்லாம் சொல்லணும்னு நினைப்பேன். ஆனால்…” அவன் இன்றும் முழுதாக சொல்லி அனுதாபத்தை அவளிடம் தேடிக்கொள்ள அவன் விரும்பவில்லை. அவர்களுக்கு இடையில் புரிதல் மட்டுமே!

“எனக்குன்னு குடும்பம் வந்த பிறகு அக்கா குடும்பத்தை எங்க வைக்கணும்னு தெரியுது பங்காரு…” அவன் மெத்தையில் அமர்ந்து பேச, “உங்க அக்கா குடும்பத்தை எங்க வைக்கணும்னு தெரிந்த உங்களுக்கு உங்க குடும்பத்தை எங்க வைக்கணுமுன்னு தெரியலையே?” அவர்களுக்கு இடையே இருந்த இடைவெளியை காட்டி, அவள் கேலி பேச, “தவறுகள் நிறைந்த சராசரி மனிதன் மேல அன்பு செலுத்தும் என் பங்காருவை…” அவன் இழுக்க அவள் அவனருகே மெத்தையில் சரிந்தாள்.

“பங்காரு…” அவன் நெற்றியில் இதழ் பதிக்க, அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டாள். அவள் நெருக்கத்தில் அவன் மயங்கி, “பங்காரு…” அவள் கன்னத்தில் இதழ் பதித்தான். “பாவா…” அவள் இனிமையாக அழைக்க, அரிதாய் வரும் அவள் ‘பாவா…’ என்ற அழைப்பில், “பங்காரு…” என்ற அழைப்பினோடு அவன் முழுதாய் தன்னை மறந்து பரிசுகளை வாரி இறைத்தான். அவள் அவன் அன்பில் அணைப்பில் முழுதாய் கரைந்து போக ஆரம்பித்தாள்.

“பங்காரு… பங்காரு… பங்காரு…” என்ற அழைப்பு மட்டும் இனிய கானமாக அவர்கள் இல்லத்தில் முழு நிம்மதியோடு ஒலிக்க ஆரம்பித்தது.

பொன்மானிற்கான அவன் மயக்கம் தெளிந்தாலும், பங்காருவிற்கான அவன் மயக்கம் நீண்டு கொண்டேதான் போனது. சில மயக்கம் தானே நம்மை வாழ்வில் ருசிகரமாக பயணிக்க வைக்கிறது.

மயக்கங்கள் நீளட்டுமே!

இன்பங்கள் கொட்டட்டுமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!