மயங்கினேன் பொன்மானிலே – 6

பொன்மானிலே _BG-5dee10ba

மயங்கினேன் பொன்மானிலே – 6

அத்தியாயம் – 6

 விடிந்தும் விடியாத வேலை.

 “அம்மா… குழந்தை! குழந்தை!” என்று மிருதுளா தூக்கத்தில் அலற, வம்சி பயந்து போனான்.

“பங்காரு… பங்காரு…” அவன் அவளை தட்டி எழுப்பினான்.

“…” அவள் எழுந்து அமர்ந்து, வேகவேகமாக மூச்சை வெளியேற்றினாள்.

தன் வயிற்றை மெல்ல தடவிக்கொண்டாள்.

“ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி இங்க என் குழந்தை இருந்தது தெரியுமா?” அவள் அப்பாவியாக கூற, “பங்காரு…” அவன் வார்த்தைகள் வராமல் தவித்தான்.

“ம்… கூம்… நான் மிருதுளா” தூக்க கலக்கத்திலும், சோகத்திலும் அவள் நிதானமாக கூறினாள்.

“மிருதும்மா… நீ ஏன் இப்படி ஆகிட்ட?” அவன் அவள் முகத்தை கைகளில் ஏந்த, அவள் கண்ணீர் துளிகள் அவன் கைகளில் பட்டு தெறிக்க, அவள் அவனை உதறி தள்ளினாள்.

“நான் ஏன் அப்படி ஆகிட்டேன் தெரியுமா? நம்ம குழந்தை வந்தா நீங்க மாறுவீங்கன்னு நான் நம்பினேன். உங்க அக்கா பைத்தியம் தெளியும்ன்னு நான் நினைச்சேன். ஆனால், என் கனவை அழிச்சி என்னை பைத்தியமா புலம்ப வைப்பீங்கன்னு நான் நினைக்கலை. உங்களை நம்பி நான் ஏமாந்துட்டேன்” அவள் முகத்தில் அறைந்து கொண்டு அழுதாள்.

“பங்காரு, இப்படி எல்லாம் பண்ணிக்காத பங்காரு. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ கஷ்டப்படணுமுன்னு நான் நினைக்கவே இல்லை பங்காரு. நீ, நான் உன்னை கஷ்டப்படுத்துற மாதிரியே பேசுற பங்காரு. நீ இப்படி அழுதா என் மனசு தாங்கலை டீ” அவன் அவள் கைகளை பிடிக்க, அவன் குரல் உடைந்திருந்தது.

அவள் அவனிடமிருந்து வேகமாக விலகி சென்று ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி  நின்று கொண்டாள்.

அவன் ஜன்னல் பக்கம் சென்று, அவள் அருகே நின்று அவளை தீண்டாமல் அவளை சுற்றி வளைத்து அவள் கைகளுக்கு அருகே தன் கைகளை அந்த ஜன்னல் கம்பிகளில் வைத்தான். நீ எங்கு சென்றாலும் நான் இருப்பேன் என்பது போல.

 

விலக அவள் நினைக்க, விலக அவன் நின்ற விதம் வழிகொடுக்கவில்லை.

“முகம் தெரியாத ஒரு சின்ன புள்ளி அது. அவ்வுளவு தான். நமக்கு குழந்தை இன்னும் கொஞ்சம் நாளில் வரும்.” அவன் அவளை சமாதானம் செய்ய,

“எப்படி வரும்? நீங்க எனக்கு வேண்டாம். நான் கிளம்பறேன்” அவள் இப்பொழுது சிறு குழந்தை போல் கூற, “பங்காரு…” அவன் அவள் தோள்களை தொட,

“பங்காரு, கங்காருனு என்னை தொட்டிங்க கொன்னுடுவேன்.” அவள் விரல்களை உயர்த்த, அவன் கோபம் விர்ரென்று ஏறியது.

“மிருதுளா, நீ ரொம்ப பேசுற. ஏதோ உன்கிட்ட சொல்லாமல் பண்ணிட்டேன் தப்புத்தான். அது என் குழந்தையும் தான். அந்த குழந்தை மேல எனக்கும் முழு உரிமை இருக்கு. பாசம் இருக்கு. அதை விட எனக்கு உன் மேல் அக்கறை இருக்கு. அக்கா குழந்தை வந்தா, நீ தான் ரெண்டு குழந்தையையும் வச்சிக்கிட்டு கஷ்டப்படணும். உன் நல்லதுக்காக நான் பார்த்து பார்த்து பண்றேன். அது புரியாமல்…” அவன் ஒரு நொடி நிறுத்தினான்.

“திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை பேசிகிட்டு இருக்காத. நீ என்னை விட்டு எங்கையும் போக முடியாது. அத்தை, மாமா வருவாங்க. அவங்க இங்க இருக்கட்டும். நீ ரெஸ்ட் எடு” அவன் அதிகாரமாக கூறினான்.

“என்ன மிரட்டல் ரொம்ப ஓவரா இருக்கு. நீங்க எகிறினா பயப்பட நான் என்ன பங்காருவா? இல்லை இந்த வம்சி வேணுமுன்னு நினைக்குற மிருதுளாவா? இரண்டும் இல்லை.” அவளும் கோபமாக பேசினாள்.

“நீங்க செய்த காரியத்துக்கு தாலியை கழட்டி உங்க மூஞ்சியில் விட்டு எறிஞ்சி போய்கிட்டே இருந்திருக்கணும். அப்படி தாலியை கழட்டி விட்டெறிய இது சினிமாவும் இல்லை. நான் தெருத்தெருவா நடந்து வீடு போய் சேர நான் பாரதி கண்ணம்மாவும் இல்லை. நிஜ வாழ்க்கை. நிதர்சனம் என்னை கட்டி போட்டு வச்சிருக்கு” அவள் அசைய, அவன் கைகளை விலக்க அவள் மெத்தையில் அமர்ந்தாள்.

“என் உடல் நிலை என்னால் தனியா பயணிக்க முடியாது. அது தான் நான் உங்க தயவில் இங்க இருக்கேன். இல்லைனா, எப்பவோ கிளம்பி போயிருப்பேன். இதை சாக்கா வச்சிக்கிட்டு என்னை கொஞ்சுற வேலையோ, மிஞ்சுற வேலையோ வேண்டாம்” அவள் பேசிவிட்டு போர்வையை இழுத்து போர்த்தி படுத்துக் கொண்டாள்.

அன்று காலை மிருதுளாவின் பெற்றோர் வர,

“அம்மா…” தன் தாயின் தோள்களை கட்டிக் கொண்டு கதறினாள் மிருதுளா. அவள் தாயும், தந்தையும் ஆயிரம் சமாதானம் சொல்லியும் அவள் அழுகையை நிறுத்தவே இல்லை.

தொடர்ந்து அழுது, அவள் உடல் பலவீனமாக சரிய, “என்ன மிருது. இதுக்கு போய் யாரவது அழுவாங்களா? வருத்தம் இருக்கத்தான் செய்யும். அதுக்காக இப்படியா? உங்களுக்கு என்ன வயசா ஆகிருச்சு? இன்னும் கொஞ்சம் நாள் கழித்து உடம்பு தேறியதும் ஒரு குழந்தை வரும். இதுக்கு போய் யாராவது இப்படி உடம்பை கெடுத்துப்பாங்களா?” அவள் தாய் தன் மகளை சமாதானம் செய்ய கண்டிப்பை கையில் எடுத்து கொண்டார்.

“அப்படி சொல்லுங்க அத்தை. நானும் இதை தான் சொல்றேன். கேட்கவே மாட்டேங்குறா. நீங்க சொன்னாலாவது கேட்குறளானு பார்க்கலாம்” அவன் தன் மனைவிக்கு சாத்துக்குடி ஜூஸ் கொடுத்தபடியே அவள் தலை கோதினான்.

“எதுக்குமா மிருதுளா அழற? மாப்பிளை மாதிரி தங்கமான குணம் கிடைக்குமா? அவருக்கும் வருத்தமா தானே இருக்கும். அதுலயும் அவர் உன்னை பார்த்திக்குறார் பார்” மிருதுளாவின் தந்தை கூற,

அப்பொழுது தான் அவள் தாய் தந்தையின் முகத்தை கவனித்தாள். அவள் தாயும் அழுதிருக்கிறார். அவர் கண்களும் வீங்கி இருந்தன. அவள் தந்தையின் முகத்தை பார்த்தாள். அவர் முகத்திலும் சோகம் கவ்வி இருந்தது.

‘இதுக்கே இப்படி இருக்காங்க. இதில் நான் வம்சி பத்தி வேற சொன்னா… இப்ப சொல்ல கூடாது. பக்குவமா நேரம் பார்த்து சொல்லணும்’ தன்னை நிதானித்துக் கொண்டாள் மிருதுளா.

“நீங்க பேசிட்டு இருங்க. நான் வந்திடுறேன்” வம்சி அவர்களுக்கு இடம் கொடுத்து வெளியே செல்ல, ‘எப்படி இவன் குற்ற உணர்ச்சியே இல்லாமல் இருக்கான்? இதுல எங்களுக்கு தனிமை கொடுத்து வெளிய போற நல்லவன் வேஷம் வேற. நடிப்பு! அத்தனையும் நடிப்பு.’ அவளுக்கு அவன் மேல் இருந்த மொத்த மரியாததையும் போயிருந்தது. அவள் இதயம் கொதித்தது.

“மாப்பிள்ளை கொஞ்சம் அக்கா… அக்கானு இருக்கிறாரேன்னு எங்களுக்கு ஒரே கவலை. நேத்து உனக்கு உடம்பு சரி இல்லைனதும் எங்களுக்கு ஃபோன் செய்து சொல்லும் பொழுதே அவர் குரலே சரி இல்லை. இப்படி ஆகிருச்சே… உனக்கு உடம்பு இப்படி இருக்கே அப்படின்னு மனசு ரொம்ப கவலைப்பட்டாலும், மாப்பிள்ளை இருக்கிற தைரியத்தில் தான் நேத்து ராத்திரி பயணத்தை முடிச்சோம்.” அவர் கூற,

“ம்… சரிப்பா…” அவள் தலை அசைத்தாள்.

“எல்லாருக்கும் குழந்தை தங்கறதில்லை மிருதும்மா. சிலருக்கு இப்படி ஆகும். இதெல்லாம் சரியாகிரும்” மிருதுளாவின் தாய் அவள் தலை கோதினார்.

குழந்தை இழப்பு மட்டுமே மிருதுளாவை இப்படி சோகம் கொள்ள செய்திருக்கிறது என்று அவர்கள் தன் மகளுக்கு சமாதானம் செய்ய ஆரம்பித்தனர்.

‘இந்த குழந்தை ஏன் தங்கவில்லை? என்று சொன்னால் அம்மா அப்பாவின் நிலை என்ன ஆகும்?’ அவள் வயது முதிர்ந்த தன் பெற்றோரை ஏக்கத்தோடு பார்த்தாள்.

‘இதுவே அதிர்ச்சி. என்னாலையே தாங்க முடியலை. அம்மா, அப்பா எப்படி தாங்குவாங்க? முதலில் இங்கிருந்து கிளம்ப வேண்டும். விஷயம் தெரிந்து பேச்சு வளர்ந்து நான் கிளம்ப முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டால்?’ அவள் வாயை இறுக மூடிக்கொண்டாள்.

“அம்மா, எனக்கு கொஞ்சம் இடம் மாற்றம் வேணும். நான் நம்ம வீட்டில் வந்து தங்கலாமுன்னு பார்க்குறேன். நான் உங்களோட நம்ம வீட்டுக்கு வரவா?” அவள் கேட்க, ‘தன் வீட்டுக்கு செல்லவே அனுமதி கேட்கும் நிலையே திருமணமான பெண்ணின் அவல நிலை’ என்று அவள் மனம் நொந்துக் கொண்டது.

“வா… மிருதுளா. இது என்ன கேள்வி?” அவர்கள் அவளை அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

‘நல்லவன் வேஷமா போடுறீங்க. எனக்கும் எல்லாம் தெரியும்.’ முடிவோடு மிருதுளா கிளம்ப தயாரானாள்.

அப்பொழுது வம்சி உள்ளே நுழைய, “உங்க பெண்ணை கூட்டிட்டு போற மொத்த உரிமையும் உங்களுக்கு இருக்கு. ஆனால், என் மனைவி மேல எனக்கு அக்கறை இருக்கு. இப்ப மிருதுளா இருக்கிற உடல் நிலையில் அவ பஸ்லயோ, ட்ரைன்லயோ பயணம் செய்ய வேண்டாம். ஒரு வாரம் இங்க இருக்கட்டும். நான் ஃபிளைட்டில் டிக்கெட் போடுறேன்” அவன் கூற,

“ஃபிளைட் வேண்டாம். ட்ரைன்ல போறது தான் எனக்கு வசதி” எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னாள் மிருதுளா.

“சரி உன் விருப்பம். ஆனால், இப்ப பயணம் வேண்டாம். ஒரு வாரம் கழித்து போலாம்” அவன் அழுத்தமாக கூற,

“மாப்பிள்ளை சொல்றது சரி தானே?” அவர்கள் பேசும் விதத்தில் எதுவோ சரி இல்லை என்று மிருதுளாவின் பெற்றோரும் சம்மதம் கூறி சமாதான கொடியை பறக்கவிட்டனர்.

மிருதுளா எதுவும் பேசவில்லை. தன் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.

“என்னங்க, இவங்களுக்குள் வேற எதோ பிரச்சனை இருக்குமோ? நான் வந்ததும் குழந்தை பிரச்சனை மட்டும் தானோன்னு யோசிச்சேன். மிருதுளா மாப்பிளை கிட்ட முகம் கொடுத்தே பேச மாட்டேங்குறாளே” மிருதுளா தாய் ரோகினி கூறினார்.

“எனக்கும் அப்படித்தான் தோணுது. ஆனால், மிருதுளா அழுத்தக்காரி எதையும் அவ்வளவு சீக்கிரமா சொல்ல மாட்டா. முதலில் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போவோம். அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுப்போம். அவளே சொல்லுவா” அவள் தந்தை கிருஷ்ணா கூறினார்.

“அதுவும் சரி தான்” அவர்கள் முடிவு எடுத்துக் கொண்டனர்.

மிருதுளா, அவர்கள் அறையில் அவனுக்காக காத்திருந்தாள். வம்சி நுழைந்ததும், “ஒரு வாரத்தில் எதுவும் மாறாது.” அவள் அழுத்தமாக கூற,

“எல்லாம் மாறும்” அவன் சிரிக்க, புன்னகைக்க, அவள் அவனை கூர்மையாக பார்த்தாள்.

“பங்காரு, ரொம்ப சின்ன கணிப்பு தான். நீ அத்தை மாமா வந்ததுமே என்னை பத்தி போட்டு உடைச்சிருக்கலாம். ஆனால், நீ சொல்லலை. ஏன் தெரியுமா?” அவன் கேட்க, அவள் கண்கள் சுருங்கியது.

“நான் செய்தது ஒரு பெரிய தப்பே இல்லை. அது முதல் காரணம். இரண்டாவது காரணம், ஒருவேளை உங்க வீட்டிலும் உன்னை மாதிரி இந்த விஷயத்தை பெருசா எடுத்திட்டா நமக்குள்ள பிரிவு பெருசா வந்திரும். நாம ஒரு நாளும் சமாதானம் ஆக முடியாதுன்னு நீ யோசிக்குற. அதனால் நீ சொல்லாம மறச்சிட்ட. உனக்கு என் மேல கோபம் தான். வருத்தம் தான். அதே நேரம், என் மேல உனக்கு அன்பும் இருக்கு பங்காரு” அவன் உல்லாசமாக அவள் கன்னத்தை தட்டி சிரித்தான்.

“…” அவளும் விரக்தியாக சிரித்துக் கொண்டாள்.

“என்ன சிரிப்பு” அவன் கேட்க, “உங்க கற்பனை ரொம்ப நல்லாருக்கு. அதுக்கு தான் சிரித்தேன்.” அவள் கடினமாக கூறினாள்.

“எங்க அப்பா ஹார்ட் பேஷண்ட். அவங்க வந்ததும் வராததுமா நான் எல்லாத்தையும் எடுத்தோம் கவுத்தோமுன்னு சொல்லி அவங்களை சாவடிக்க சொல்லறீங்களா?” அவள் கூர்மையாக கேட்டாள்.

“எங்க வீட்டுக்கு போய், நான் பக்குவமா சொல்லிப்பேன். உங்க கிட்ட சொல்லி சண்டை போட்டு நியாயம் கேட்க, நாம என்ன புருஷன் பொண்டாட்டியா வாழ போறோமா என்ன? உங்களுக்கு டைவர்ஸ் நோட்டீஸ் வரும். கையெழுத்து போடுங்க” அவள் கூற,

“நீ என்னை விட்டு போக முடியாது பங்காரு” அவன் அவள் கழுத்தை பிடிக்க, ‘இவனிடம் எகிற முடியாது. இப்பொழுது எகிறுவதும் சரி இல்லை.’ அவள் சிந்தை விழித்துக் கொள்ள,

“உங்க பங்காருங்கிற அழைப்பு நிஜம்ம்னா நான் போகணும்.” அவள் கூற, அவன் பிடி அவள் வேண்டுதலில் தளர்ந்தது.

“பங்காரு…” அவன் கண்கள் கலங்கியது.

“நீ, தப்பு பண்ற பங்காரு” அவன் குரல் உடைந்தது.

“நான் அப்படி என்ன பெருசா பண்ணிட்டேன்? அது ஒரு முகம் தெரியா புள்ளி. அதுக்காக நீ என்னை விட்டுட்டு போவியா?” அவன் அவள் தோளை பிடித்து குலுக்கினான்.

“….” அவள் எதுவும் பேசவில்லை.

“பங்காரு பேசு…” அவன் அவள் கன்னத்தை பிடிக்க,

“…” அவள் விலகி நின்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“நான் ஒன்னு சொல்லட்டுமா பங்காரு. உனக்கு தான் என் மேல பாசமே கிடையாது. எப்பப்பாரு எங்க அக்கா பெயரை சொல்லி என்கிட்டே சண்டை போடுவ. என்னை பாவான்னு கூப்பிட மாட்ட. ஆனால், நான் பங்காரு… பங்காருனு உன்னை தான் நினைச்சிகிட்டே இருப்பேன்” அவன் பேச,

‘இவனுக்கு மட்டும் எப்படி இப்படி வித்தியாசமான நியாயங்கள் கிடைக்கிறது?’ என்று அவனை முகம் சுளித்து பார்த்தாள்.

“நீ பேச மாட்ட. பேசாமலே என்னை கொல்லனுமுனு முடிவு பண்ணிருக்க. ஒரு முகம் தெரியாத கருவுக்கு கொடுக்க முடியுற முக்கியத்துவத்தை உன்னால் எனக்கு கொடுக்க முடியலை?” அவன் அவள் கைகளை அழுத்தி பிடிக்க அவள் வலியில் முகம் சுளித்தாள்.

“சொல்லு டீ… நான் செய்தது என்னை பொறுத்தவரை தப்பே இல்லை.  முடிந்த போன விஷயத்தை எத்தனை தடவை பேசுறது? நான் உன் வழிக்கே வரேன். நான் அதை பத்தி பேசலை” அவன் நிதானித்தான்.

“உனக்காக நான் இறங்கி வருவேன். உனக்காக நான் விட்டுக்கொடுப்பேன். உன்னை பொறுத்தவரை தப்பு. அப்படித்தானே? சரி… அப்படியே இருக்கட்டும். அதுக்காக என்னை விட்டுட்டு போய்டுவியா? அப்ப, உனக்கு நான் முக்கியமில்லை? அப்படித் தானே?” அவள் முகமருகே சென்று அவள் தாடையை அழுத்தி கேட்டான் வம்சி.

அவன் கண்ணருகே அவள் இதழ்கள். அவனுள் பல நியாபகங்கள். அவன் விழி நீர், அவள் இதழை தீண்டி சென்றது.

“பங்காரு…” அவன் அழைப்பு உயிரை தேக்கி வெளிவந்தது.

உரிமையாய்! அன்பாய்! ஏக்கமாய்!

அவன் சூடான சுவாசக்காற்று அவள் தேகத்தை தீண்டி அவன் கோபத்தை கூற, அவள் விழிமூடி நின்றாள்.

‘இந்த சுவாசத்தை நான் காதலோடு அனுபவித்திருக்கிறேன்.’ அந்த எண்ணம் அவளை சுட,

அவன் சுவாசம் அவள் முகமெங்கும் தீண்ட, அவன் சுவாசத்தின் தீண்டல் அவன் இதழ் தீண்டல்களை நினைவுபடுத்த, ‘வேண்டாம்… இவனின் சுவாசம் கூட விஷம்.’ அவள் விலகி செல்ல எத்தனிக்க, அவன் இடது கரம் அவளை இடையோடு சுற்றி வளைத்து.

“சொல்லு பங்காரு. நான் என்னவோ கெட்டவன் மாதிரி விலகி விலகி போற. நான் எந்த விதத்தில் கெட்டவன்? தண்ணி அடிக்கறேனா? சிகரெட் பிடிக்கறேனா? இல்லை வேற பொண்ணை தப்பா பார்க்குறேனா?”  அவன் தன் மனையாளிடம் நியாயம் கேட்டான்.

“உன்னை கூட உன் விருப்பம் இல்லாம தொட மாட்டானே” அவன் குரல் கதற, ‘உங்க அக்கா…’ மேலும் சிந்திக்க முடியாமல் அவள் கண்கள் கலங்கி அவன் சட்டையை நனைத்தது.

“உன்னை எப்பவாது கை நீட்டிருப்பேன். தப்புத்தான். நீ கூட, கோபம் வந்து என்னை அடிச்ச. நான் எப்பவாது அடிச்சாலும் அடிச்சது தப்புத்தான். நான் இப்ப மன்னிப்பு கேட்குறேன் பங்காரு. நீ ஏன் என்னை விட்டு போகணும் பங்காரு?” அவன் குரல் கெஞ்சியது.

“எனக்கு பதில் வேணும் பங்காரு.” அவன் தன் கைகளை அவள் வயிற்றில் வைத்தான்.

அவன் தீண்டலை விரும்பாது அவள் வயிற்றை சுருக்க, அவன் கைகளும் அவள் விலகலை உணர்ந்தது.

“என்னை விட, இந்த வயிற்றில் வந்து ஒரு சிசு உனக்கு உயர்வா பங்காரு? அதுக்காக என்னை வேண்டாமுன்னு தூக்கி போட்டிருவியா பங்காரு?” அவன் கண்கள் கலங்கியது.

அவள் முகத்தை திருப்பிக் கொள்ள, அவன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்ப இரு விழிகளும் ஒன்றை ஒன்றை பார்த்துக் கொண்டன.

 நேற்று வரை அவன் மீது கொண்ட காதலால் அவள் இதழ்கள் மௌனித்துக் கொண்டனவா? இல்லை பேசி பயனில்லை என்று மௌனித்துக் கொண்டனவோ அவளுக்கு பதில் தெரியவில்லை.  ஆனால், அவள் கண்களில் உணர்ச்சிகள் இல்லை. ஆனால், அவன் கண்கள் காதலை தேக்கி கொண்டு அவளை பார்த்தது.

அவள் தாடையின் மீது அவன் தடையை பாதிக்க, அவர்கள் சுவாசம் அருகாமையில் மற்றறொருவர் சுவாசத்தை உணர, அவன் இடது கைகள் அவள் இடையை தழுவ, அவன் வயிற்றை தீண்டி, “கேட்குறேனில்லை. சொல்லு பங்காரு. முகம் தெரியாத உன் வயிற்றில் வந்த என் சிசுக்காகவே இந்த பாவாவை விட்டுட்டு நீ போய்டுவியா?” அவன் கண்ணீர் அவள் கன்னம் தொட்டு அவள் தேகம் வழியாக வலிந்து அவள் நெஞ்சை தொட்டது.

‘உன் சிசு என்றால் நான் யார்?’ என்று கதற அவள் உள்ளம் துடித்தது.

ஆனால், கண்ணீரோடு அவன் நின்ற கோலத்தில் மென்மையானவள் மௌனித்து கொண்டு, தன் முடிவில் உறுதியாகி இறுகி நின்றாள்.

அவன் தீண்டலில் குழையாத அவள் தேகம் கூறியது அவள் நிலைப்பாட்டை. தன் அணைப்பில் அவள் தேகம் உணர்ந்தவன், அவன் மனதையும் உணர்ந்து கொண்டான்.

“நான் ஒன்னு சொல்லட்டுமா பங்காரு. நமக்கு ஒரு குழந்தை வந்து, என்கிட்டே கேட்காம அந்த குழந்தையை நீ ஏதோவொரு காரணத்துக்காக அழிச்சிருந்தா, நான் கோபப்படுவேன் தான். ஆனால், என் பங்காருவை விட்டுட்டு போகணுமுன்னு நான் நினைக்கவே மாட்டேன்.” அவன் கூற, அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

மூடிய அவள் கண்ணிமைகள், அவன் இதழ் ஸ்பரிசத்தில் விழித்து கொள்ள, அவன் மெல்லிய இடைவெளியோடு விலகி கொண்டான்.

“நான் உன் மேல் கொண்ட காதல் நிஜம். அன்பு நிஜம். உன் மேல் கொண்ட அக்கறை நிஜம். உனக்காக தான் நான் இதை எல்லாம் பண்ணேன் அப்படிக்கறதும் நிஜம்.” அவன் கூற,

“எல்லாம் நிஜமாவே இருக்கணுமுன்னு தான் நான் ஆசைப்படுறேன். எல்லாம் நிஜமன்னா, என்னை உங்க வீட்டிலிருந்து போக விடுங்க” அவள் கையெடுத்து கும்பிட, அவன் கண்கள் கலங்க அவன் தன் உதட்டை மடித்து அழுத்தி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். எதுவும் பேசாமல், அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

நாட்கள் அதன் போக்கில் நகர, அவர்களுக்குள் பெரிய பேச்சு வார்த்தை இல்லை. அவன் அவளை உள்ளங்கையில் வைத்து தங்கினான். அனைத்தையும் அவள் பெற்றோர் கவனித்து கொண்டு தான் இருந்தனர்.

ஒருவாரம் கழித்து, அவள் தன் பெற்றோரோடு கிளம்பினாள். அவள் ஓர் தலையசைப்போடு அவனிடமிருந்து விடைபெற்றாள்.

அவள் அவனை திரும்பியும் பார்க்கவில்லை.

அவள் விலகி சென்றாள்!  ஆனால், அவன் விலகி நிற்பானா?

சென்னையிலிருந்து ரயிலில் கிளம்பிய அவர்கள் மறுநாள் காலையில் தென் தமிழகத்தை சேர்ந்த அவர்கள் ஊரை அடைந்தனர்.

 ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ பிடித்து அவர்கள் வீட்டின் முன் இறங்கினர்.

இறங்கிய அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

அங்கு வம்சி தன் காலை மடக்கி தன் அலைபேசியை நொண்டியபடி அவன் காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

மிருதுளாவின் பெற்றோர் முகத்தில் கேலி புன்னகை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர். ‘ஒரு நாள் கூட மனைவியை விட்டுட்டு இருக்க முடியலை. இதுல இவங்களுக்கு சண்டை வேற’ அவர்கள் விழிகள் சம்பாஷித்துக் கொண்டன.

மிருதுளா சிந்திக்க முடியாமல் சிலை போல் நின்றாள்!

மயங்கும்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!