மருகுவதேனோ மதிமலரே 3

IMG-20210101-WA0052-832b58fc

மருகுவதேனோ மதிமலரே 3

மதிமலர் 3

வீழ்ந்தோம் என நினைத்தாய்..!

வலிகள் பல சுமந்தாய்..!

 காலம் கை சேர்கையில்,

 காட்சிகள் உந்தன் வசமாகும்..!

மருகாதே மதிமலரே!

“இவ  இங்க என்ன பண்றா? இந்நேரம் டியூட்டி முடிஞ்சு போயிருக்கனுமே?   யப்பா!  கொஞ்சத்துல இவட்ட சிக்கிருப்போம்…”

என வாய்விட்டு புலம்பியவாறே  சிறையின் வராண்டாவில் நடந்துகொண்டிருந்தான் சங்கர்.

ஆணாக இருந்தாலும், அரசியல் பலம் இருந்தாலும் இவனால் யாழினியிடம் பயம் கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

காரணம், அன்றொரு நாள் யாழினியிடம் மற்ற பெண்களைப் போல நினைத்து வம்பிழுக்க அவளோ அதிரடியாக துப்பாக்கியை இவன் நெற்றிப்பொட்டில் வைத்துவிட்டாள்.

“மத்தவங்கள மாதிரி நினைச்சு என்கிட்ட வாலாட்டின சுட்டுத்தள்ளிட்டு போய்ட்டே இருப்பேன்” பல்லைக்கடித்து வார்த்தைகளை துப்பியவாறு காளிதேவியாய் நின்றவளை பார்த்து, சர்வமும் ஆடியது அவனுக்கு.

அதில் அரண்டவன்தான். அன்றிலிருந்து யாழினி என்றால் ஒரு பயம். ஆனால் மற்ற பெண்களிடம் தன் புத்தியைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறான்.

அவர்களும் யாழினியைப் போல இருந்திருந்தால் சங்கரும் இப்படி பெண்பித்தனாக இருந்திருக்க மாட்டானோ என்னவோ?

ஆனால் காலமும் வாய்ப்பும் அனைவருக்கும் ஒன்றுபோல் அமைவதில்லை அல்லவா! யாழினிக்கு அமைந்தது மஞ்சுவுக்கு அமையவில்லை.

சங்கர் யாழினியை திட்டியவாறு வராண்டாவில் நடந்துகொண்டிருக்க, அவன் கண்களில் சிறையின் மருத்துவ அறையில் விளக்குகள் எரிவது தெரிந்தது.

யாழினியை மறந்தவன், ‘இந்நேரத்துக்கு யாருக்கு என்ன?’  என யோசித்தவாறு அங்கே விரைந்தான்.

மதியின் உடல்நிலையை கவனித்துக்கொண்டிருந்த நீலாவிற்கு, சங்கரை அந்நேரத்தில் அங்கு கண்டதும்  திக்கென்றிருந்தது.

“ஐய்யய்யோ இவனா! இன்னைக்கு வந்துட்டானா!  மேடம்   இவள பாக்க யாரையும் விடக்கூடாதுன்னு சொன்னாங்க. ஆனா யார நினைச்சு சொன்னாங்களோ அவனே வரானே…” என நினைத்தவர் பெட்டை பார்க்க மதி இன்னும் மயக்கத்தில்தான் இருந்தாள்.

நீலாவிற்கு, மதி வயது இல்லையென்றாலும் அவளைவிட சிறியதாக எட்டாவது படிக்கும் பெண்பிள்ளை உண்டு. அதனால் அவருக்கு மதியைப் பார்த்த மாத்திரத்தில் அவள்மேல் சிறு இரக்கம் வந்திருந்தது.

இவன் கண்ணில் பட்டால் இவள் நிலை என்னவாகும் என ஒரு தாயின் நிலையில் இருந்து பதறினார்.

“இந்த புள்ள இவன் கண்ணுல படாம பாத்துக்கனுமே!” என எண்ணியவாறு வேகமாக வெளியில் வர அதற்குள் சங்கரும் அறையின் நுழைவுக்கு வந்திருந்தான்.

“என்ன நீலா… சௌக்கியமா இருக்கறியா?” என வழியலுடன் கேட்டவன், யார் இங்கு இருப்பது? என அவரைத்தாண்டி பார்க்க முற்பட அவனைத் தடுத்தவாறு நின்றவர், ‘இவன்வேற வயசு வித்தியாசம் பாக்காம மூஞ்சிய அலைய விடறான்’ என மனதில் சாடியவாறு,  “சார் உள்ள அக்யூஸ்ட்க்கு ட்ரீட்மெண்ட் போகுது…” என அவனை நிறுத்த முற்பட்டார்.

“யாருக்கு என்ன?” என்றவாறு  அவரைத் தாண்டி பார்த்தவன் கண்டது மதியின் பாதங்களை மட்டுமே. இது போதாதே அவனுக்கு!

“நகரு நான் உள்ள போகனும்” சங்கர் பிடிவாதமாக நிற்க நீலாவும்முடிந்தவரை எதேதோ சொல்லி தடுத்துப் பார்த்தார்.

இவர் தடுக்க தடுக்க அவனுக்கு ஆர்வம் பிறக்க, “சொன்னா கேக்கமாட்டியா நீ?” என்றவாறு அவர் மேல் கைவைக்க வரவும் அவர் சட்டென்று நகர்ந்தார்.

“அட உன்ன நகர்த்ததான் கை நீட்டினேன்” என இழிப்புடன் கூறியவன் இதுதான் சமயமென உள்ளே நுழைந்தான்.

“வாவ்… வாட் அ ப்யூட்டி” அவனிதழ்கள் தன்னால் முனுமுனுத்தது மதியின் முகத்தைப்பார்த்து.

கழுத்து வரை போர்த்தியிருந்தாலும்  அவள் உடல் வரிவடிவத்தைக் கொண்டே அவன் பார்வை துகிலுரிவதாய் இருந்தது. பார்வையால்  ஒருவரை மானபங்கபடுத்த முடியுமா?

முடியுமென  சங்கர் காட்டிக்கொண்டிருந்தான்.

அவனைப் பின்தொடர்ந்து வேகமாக அறைக்குள் நுழைந்த நீலாவிற்கு இவன் பார்வையைக் கண்டதும் பற்றிக்கொண்டு வந்தது. ஆனால் உயரதிகாரியாக போனதால் அமைதியாக நிற்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு.

“யாரு நீலா இது? இவ்ளோ அம்சமா இருக்கா, இதுவரை பாத்ததில்ல எதாவது புது கேஸா?” என மதியைப்பார்த்தவாறே கேட்டான்.

சங்கர் இரண்டுநாள் விடுமுறை முடிந்து இன்றுதான் பணிக்கு திரும்பியிருந்தான்.

“அது… வந்து.. வந்து…” என திணறினார் அவர். மதியைப்பற்றி ஒரு தகவலும் அவனிடம் சொல்ல விருப்பமில்லை அவருக்கு.

அவரின் மௌனத்தில் தலையைத் திருப்பி  கண்கள் இடுங்க பார்த்தவன், “என்ன வாய் நொண்டியடிக்குது. உன் பொண்ண பத்தியா கேட்டேன். யாரோ ஒருத்தியதான கேட்டேன்” என நக்கலாய் கேட்டுவைக்க நீலாவின் முகம் அருவறுப்பை அப்பட்டமாக காட்டியது.

அதை ஒதுக்கி தள்ளியவன், “என்ன நீலா பதில் சொல்லப்போறயா? இல்லையா?” என அதட்ட,

“அது யாழினி மேடம் யாருக்கும் எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க சார். உங்களுக்கு எதாவது தெரியனும்னா மேடத்துக்கிட்ட கேட்டுக்கோங்க. இப்ப கிளம்புங்க சார். மேடம் அவங்க அனுமதி இல்லாம  இவள யாரும் பாக்கக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க” என ஒரு வேகத்தில் சொல்லிவிட்டார்.

அதைக் கேட்ட சங்கரின் முகம் கோவத்தில் இறுகியிருக்க நீலாவைப் பார்த்தவாறு, “என்ன என்னை அசிங்கப்படுத்தறீங்களா? எத்தனை வருசம் என்னை பார்க்கறீங்க, என்னை பத்தி தெரிஞ்சும் இத்தன அலட்சியமா? எல்லாருக்கும் என்மேல இருந்த  பயம் விட்ருச்சு போல. எல்லாம் அந்த யாழினி இருக்கற தைரியம்.  பாத்துக்கறேன் உங்க எல்லாரையும்” என உறுமியவன் மீண்டும் மதியை முறையற்ற பார்வை பார்த்துவிட்டு வெளியேறிவிட்டான்.

நீலா அவன் சென்றதும் சற்று ஆசுவாசமானவர், “இவனையெல்லாம் யாரு பொண்ணுங்க ஜெயிலுக்கு ஜெயிலரா போட்டது”  என கருவியவாறு மதியின் அருகில் சென்று அமர்ந்துகொண்டார்.

மதியின் முகத்தைப் பார்த்தவருக்கு இவள் கொலை செய்திருப்பாள் என ஒரு சதவீதம் கூட நம்பமுடியவில்லை. அங்கு சிறுவயது பெண்கள் இருக்கின்றனர்தான். ஆனால் அவர்கள் தாய் தந்தை குற்றத்தில் ஈடுபடுபவர்களா இருப்பர். ஆனால் எந்த குற்றப் பின்னனியும் இல்லாமல் இருக்கும் இவளை சூழ்நிலைதான் இங்கு அழைத்து வந்திருக்கும் என அவரது இத்தனை வருட அனுபவத்தில் ஊகித்திருந்தார்.

***  

அந்த மிகப்பெரிய மாளிகையின் உள் இருந்த அனைவரின் முகமும் சோகத்தை ஏற்றிருக்க, மாலையிட்ட அவன் படத்தின் முன்நின்ற “அவர்” மட்டும் கோபத்தில் சிவந்திருந்தார்.

அவர் சாமிதுரை.  இந்த வட்டாரத்தில் முதல் முன்று இடங்களில் இருக்கும் தொழிலதிபர்களில் ஒருவர்.

அவர் மகன் குரு, இறந்த மூன்றாம்நாள் சடங்குகள் நடந்துகொண்டிருந்தன.

மூத்த மகன் என செல்லம் கொடுத்து வளர்த்தது இப்படி பலிகொடுக்கத்தானா? அதுவும் எப்படி ஒரு செயலைச் செய்துவிட்டு ஒரு சிறு பெண்ணால் கொல்லப்பட்டிருக்கிறான் என கோபம் பாதி துக்கம் பாதியாய் கலவையான உணர்வுகளில் சிக்குண்டிருந்தாலும் முகம் மட்டும் கோபத்தை பிரதானமாக சூடிக்கொண்டது.

குரு ட்ரேடர்ஸ், குரு பர்னீச்சர்ஸ், குரு டைல்ஸ் என அத்தனையும் மகன் பிறந்ததும் அவன் பெயரில் ஆரம்பித்தது.

அதற்கு முன் பல தொழில்கள் ஆரம்பித்து நஷ்டத்தில் முடிந்திருக்க, மகன் பெயரில் ஆரம்பித்த குரு ட்ரேடர்ஸ் லாபக்கணக்கை தொடங்கியது.

அதற்கு காரணம் தன் உழைப்பே என நம்பாதவர் மகனின் பெயரை அவன் அதிர்ஷ்டத்தை நம்பினார். அதை மெய்ப்படுத்துவதுபோல் அடுத்தடுத்து அவன் பெயரில் ஆரம்பித்த தொழில்கள் அனைத்தும் நன்றாக சென்றது.

விளைவு மகனுக்கு கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து, “நீதான்டா என்னோட அதிர்ஷ்டம்” என சொல்ல வைத்தது.

பத்து வயதில் செல்போன். பதினைந்தில் கார். தன்னையொத்த சக தோழர்களுடன் ஊர்சுற்றல், புகைப்பழக்கம், தண்ணியடித்தல், அதோடு பத்தொன்பது வயதில் உடல் ரீதியாக பெண் பழக்கம்.

இவை அனைத்தும் தந்தைக்கு அரசல்புரசலாக தெரிந்தாலும் சிறுவயது மற்றவர்களை பாதிக்காத வகையில் அவன் விருப்பப்படி இருந்துவிட்டு போகட்டும் என விட்டுவிட்டார்.

மகனை வைத்து ஒப்பீடு பார்க்கையில் சாமிதுரை கண்ணியமானவர். எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாதவர். நேர்மையாக தொழிலை நடத்துபவர்.

மகன் தனது பலம் என அவர் நினைத்திருக்க அவனே தனது பலகீனம் என அறியாமல் போனார்.

அதுவும் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலைச்செய்து அதனால் தன் உயிரையும் விட்டுவிட்டான்.

நேற்றிலிருந்து போன் மேல் போன். அனைவரும் துக்கம் விசாரிப்பது போல அரசல்புரசலாக கேள்விபட்ட  மகனின் நடத்தையை காட்டி கிண்டல் செய்வது போல பேசியது வேறு அவரது கோபத்தை பல்மடங்காக பெருகச் செய்திருந்தது. ஆனால் இல்லாத மகனின் மீது கோபத்தை காட்டி என்ன செய்ய?

செயலைச் செய்தவன் சென்றுவிட்டான். ஆனால் பழிச்சொல் காலம் உள்ளவரை குடும்பத்தை தொடருமே!

கண்கள் தனது மனைவியையும் மகளையும் தொட்டு மீண்டது.  ஒரு பெண்பிள்ளை வேறு இருக்க குடும்ப மானம் வீதிகளிலும் மீடியாக்களிலும் விளையாட்டுப்  பொருளாக பலரால் பந்தாடப்படுவது அவருக்கு பயங்கர வலியைக் கொடுத்திருந்தது.

மகன் செய்தது தவறுதான் ஆனால் …. ஆனால் அதை வெளி உலகுக்கு ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை.

அவன் உயிரோடு இருந்திருந்தால் அவன் மீது விழுந்திருக்க வேண்டிய அவப்பெயர், அவன் இல்லாதபட்சத்தில் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டது.

இந்த அவப்பெயரை எப்படியாவது போக்கவேண்டும். அதற்கு மகன் நல்லவன் என அனைவரையும் நம்பவைக்க வேண்டும் என எண்ணியவர் சற்று தூரத்தில் உறவினர்கள் மத்தியில் அமர்ந்திருக்கும் மனைவி மகளை மீண்டும் பார்த்தார்.

அவர்களுக்கும் விசயம் ஓரளவு தெரிந்துதான் இருந்தது. அவன் உயிரோடு இருந்திருந்தால் நிலைமை வேறு. ஆனால் உயிரிழப்பு என்ற ஒன்றால் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என இவருக்கும் கூட தெரியவில்லை. சுற்றிலும் உறவினர்கள் இருப்பதால் அவர்களிடம் பேச வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இப்படி மகன் இருந்தால், இல்லாமல் போனதால் என அவன் செயலின் மூலமாக ஏற்படும் விளைவுகளின் இருவேறு பரிமாணங்களை யோசித்துக்கொண்டிருந்தார்.

முடிவில் மகனை நல்லவனாக இந்த உலகிற்கு சித்தரிக்கவேண்டும் இல்லையெனில் என்றாவது ஒருநாள் இந்த அவப்பெயர் என் குடும்பத்தை, என்வீட்டு பெண்களைத் தாக்கும் என ஒரு குடும்பத்தலைவன் என்னும் நிலையில்  இருந்து நிதானமாக யோசித்து அவராகவே ஒரு முடிவை எடுத்தார்.

இவர் யோசனைசெய்து முடித்தபோது அவரது மேனேஜர் அவரிடம் ஏதோ ஒன்றை ரகசியமாக கூறிவிட்டு சென்றார்.

அவர் சென்ற சிறிதுநேரத்தில் தனது விருந்தினர் மாளிகை ஒன்றில் கோபத்துடன் நான்கு வாலிபர்களை அடித்து துவைத்துக்கொண்டிருந்தார் சாமிதுரை.

“ஏன்டா இந்த வயசுல உங்களுக்கு என்ன இந்தளவு வெறி. ஒரு பொண்ண கொல்ற அளவுக்கு உடம்பு வெறிபுடிச்சு அலையறீங்களா?” என சவுக்கால் பின்னி எடுத்துவிட்டார்.

“ஆ..அம்மா…ஐயோ…” என அவர்கள் அலறித்துடித்தனர். அதைக்கண்டு அங்கு நின்றிருந்த அவர்களின் தந்தைகளாலும் ஒன்றும் கூறமுடியவில்லை.

ஆம், தன் மகனோடு சேர்ந்து இந்த பாதகத்தை செய்த மற்றவர்களையும், அவர்களது தகப்பன்மாரையும் வரவழைத்திருந்தார் சாமிதுரை.

அவர்கள் சாமிதுரை அளவிற்கு வசதியானவர்கள் இல்லை. அதனால் தத்தம் மக்களை இ்வ்வழக்கிலிருந்து காப்பாற்ற இவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு.

நால்வரில் ஒருவன் இவர் அடியை வாங்கிக்கொண்டே, “அங்கிள் நான் சொன்னேன் அங்கிள் இவனுங்கதான் கேக்கல. அதனால நான் அப்பவே வெளிய போய்ட்டேன் அங்கிள். எனக்கு எதுவும் தெரியாது என்னை நம்புங்க” என கதறி அழ மற்றவர்கள் அந்நிலையிலும் அவனை முறைத்தனர்.

அவன் கூறியதில் சற்று தேங்கியவர், மற்ற மூவரும் அவனை முறைக்கவும் மீண்டும் அடி பின்னி எடுத்துவிட்டார். அந்த ஒருவனைத் தவிர்த்து.

ஒருவழியாக அரைமணிநேர விளாசலுக்குப்பிறகு வந்து அமர்ந்தவர் முகம் சற்று கோபத்தை தணித்திருந்தது.

உடன் மற்ற நால்வரின் தகப்பன்மார்களும் அவருக்கு எதிரில் அமர்ந்தனர்.

“உங்க பிள்ளைக்காக வருந்தறோம்ங்க. சின்ன பசங்க ஏதோ தெரியாம…” என பேசிய நால்வரில் ஒருவனின் தகப்பன் சாமிதுரையின் பார்வையில் கப்பென வாயை மூடிக்கொண்டார்.

அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அழுத்தமாக தனது பேச்சை ஆரம்பித்தார் சாமிதுரை.

“இந்த மாதிரி பாலிஷா பேச நான் இங்க வரல உடைச்சு பேசறேன்” என்றவர்,

“நம்ம புள்ளைங்க செஞ்சது பெரும்பாவம் இத மறுக்க முடியாது. நம்ம வீட்லயும் பொண்ணுங்க இருக்காங்க அவங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா நமக்கு எப்படி துடிக்கும். ஒருவேள என் பையன் சாகாம இருந்து இந்த விசயம் நம்ம தவிர மத்தவங்களுக்கு வெளிய தெரியாம இருந்திருந்தா நானேகூட அவனை கொன்றுப்பேன்” என முகம் இறுக அவர் கூறியதும் மற்றவர்கள் அரண்டனர்.

ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக்கொள்ள மீண்டும் அவர் ஆரம்பித்திருந்தார்.

“தப்புதான் அவன் தப்பான வழியில போறான்னு தெரிஞ்சும் அவன கண்டிக்காம விட்டது என் தப்புதான். சரி ஏதோ புரியாத வயசு இதெல்லாம் பண்றான் போகபோக அவன திருத்திரலாம்னு தப்பு கணக்கு போட்டுட்டேன். ஆனா இப்படி அரக்கனா இருப்பான்னு நான் நினைச்சுகூட பாக்கல.”

“இப்பகூட அவனுக்கு நடந்தத நினைச்சு கவலைப்படல. இது அவனுக்கான தண்டனைதான். ஆனா இந்த கேஸ்ல இருந்து அவன நல்லவன்னு விடுவிக்கனும்” என நிறுத்தியவர், “என் பொண்ணுக்காக, என் குடும்பத்துக்காக. விசயம் தெரிஞ்சு நாளைக்கு வரவன் போறவனெல்லாம் அவ அண்ணன வச்சு என் பொண்ண ஜட்ஜ் பண்ணுவான். பெத்தவங்க எங்களாலயும் வெளில தலைகாட்ட முடியாது. இது காலம் பூராவும் அழியாது. அதனால பலதும் யோசிச்சுதான் ஒரு முடிவெடுத்திருக்கேன்.”

“சார் பேசாம அந்த பொண்ண ஜெயில்லயே போட்டுத்தள்ளிட்டா…” என கூறிய ஒருவரை அற்ப புழுவைப் போல பார்ததவர், “ஏன்யா ஏன்? ஏற்கனவே செஞ்ச பாவத்துக்கு எத்தன ஜென்மம் எடுத்து கரைக்க போறமோ தெரில. இதுல இன்னொரு கொலையா!” என மனம் வலிக்க கூறியவர், “நான் சொல்றபடி செய்யறதா இருந்தா என்கூட இருங்க இல்லனா நீங்க தனியா இந்த கேஸ பாத்துக்கோங்க” என முடித்துவிட்டார்.

அவர்கள் வேறுவழியில்லாமல் இவர் வழிக்கு வரவுமே தன் திட்டத்தை விவரித்தவர் அவர்கள் ஒப்புதல் அளிக்கவும் அவர்களை அனுப்பினார்.

அவர்கள் சென்றபின் அமர்ந்திருந்த சோபாவின் விளிம்பில் தலையை சாய்த்து சீலிங்கை பார்த்தவாறு இருந்தவரின் கண்ணோரம் நீர் துளிர்த்தது.

அது மகனை நினைத்தா? அவனால் இறந்த பெண்ணை நினைத்தா? இல்லை, இனி தன் குடும்பம் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைகளை நினைத்தா? இல்லை, எவனோ ஒருவனின் இச்சைக்காக தன் குடும்பத்தை இழந்து ஜெயிலுக்கும் சென்றிருக்கும் அந்த சிறிய பெண்ணை நினைத்தா? என அவரே அறியார்.

சாமிதுரை நல்லவர்தான்.  ஆனால் சூழல் அவரை சுயநலமாக முடிவெடுக்க வைத்திருந்தது. ஒரு சிறு பெண்ணின் வலியை உணர்ந்தும் அவளை மேலும் மனதால் வதைக்கக்கூடிய செயல்களை செய்ய துணிந்துவிட்டார்.

மதி காக்கப்படுவாளா? அழிக்கப்படுவாளா?

  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!