மலர் கரை சேர்ந்தது (நிறைவு)

12c8865601b907386b12d3c682c53db3-0fe65ad9

மலர் கரை சேர்ந்தது (நிறைவு)

அத்தியாயம் – 27

நரசிம்மன் மனமோ சொத்தை அடைய முடியவில்லையே என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. கடைசி நேரத்தில் வந்து ஆட்டத்தைக் கலைத்த ஜெகதீஸ் குடும்பத்தின் மீது அவரின் கோபம் திரும்பியது.

தன் மகளை நேரில் பார்த்த சந்தோஷத்தில், “தவமிருந்து பெற்ற பெண்ணை இழந்துட்டு நான் தவிச்சு போயிட்டேன்” என்ற சங்கீதா மகளை அணைத்துக் கொள்ள தாயின் தோளில் முகம் புதைத்து அழுதாள் மகள்..

அவளின் தலையைச் செல்லமாக வருடிய தந்தையினை கண்டவுடன், “அப்பா” என்று அவரின் அருகே செல்ல அவளின் நெற்றியில் முத்தம் பதித்தவரின் விழிகள் மகளின் வளர்ச்சியைக் கண்டு வியந்தது.

“ஒரு தகப்பனாக உடனிருந்து வழிகாட்ட முடியாமல் போனாலும் உன்னோட வளர்ச்சியும் பக்குவமான பேச்சும் என் மனசுக்கு நிறைவை தருதுடா. என் மகள் ரொம்ப பெரிய பொண்ணாக வளர்ந்தாலும் என்னுடைய நேர்மையான குணம் உன் ரத்தத்தில் ஊறியிருக்கு என்று நிருப்பிச்சிட்ட” என்றவரின் கண்களில் கண்ணீர் திரையிட்டது.

அவர்களின் குடும்பம் சேர்ந்திருப்பதை கண்ட மனோஜ், “வெற்றியை உனக்கு அடையாளம் தெரியலயா?” என்று கேட்க இடது கரத்தினால் மகளை அணைத்தவர் வெற்றியை பார்வையால் அருகே அழைத்தார்.

அடுத்த நிமிடமே குழந்தையாக மாறி ஓடிவந்து, “மாமா” என்ற அழைப்புடன் அவரை அணைத்தான் வெற்றி. மழையிலும், வெயில் என்று பாராமல் மார்பிலும், தோளிலும் சுமந்த மருமகன் ஒருப்பக்கம், ஒரே மகளென்று கால் விரல்கூட தரையில் படாமல் தூக்கி வளர்த்த மகள் மறுப்பக்கம் என்று அணைத்துக்கொண்ட ஜெகதீஸ் தோளைப் பற்றிய தளிர் விரல்களுக்கு சொந்தக்காரி யாரென்று நிமிர்ந்து பார்த்தார்.

“மாமா” என்று கண்கலங்கிய மருமகளைக் கண்டவுடன் அவர்களை விலக்கி, “என் செல்ல மருமகளே.. இந்த தாய்  மாமனை உனக்கு அடையாளம் தெரிகிறதா?” என்றவர் அவளின் குழந்தைத்தனம் மின்னும் முகத்தை கையில் ஏந்திட கண்ணீரோடு தலையசைத்தாள்.

அவர்களின் பாசபிணைப்பை கண்டு மனம் இறுகிட, “யாருக்கு சொத்து வேண்டாம் என்றாலும் பரவாயில்ல.. எனக்கு இந்த சொத்து வேண்டும்” என்ற தந்தையை துச்சமாக பார்த்த வெற்றி வக்கீலிடம் இருந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்க அவனின் பின்பற்றி செவ்வந்தியும் அதே செயலை செய்தாள்.

பிறகு நரசிம்மனின் எதிரே வந்து நின்றவள், “எந்த காலத்தில் யார் செய்த புண்ணியமோ கடலலையில் இருந்து தப்பிப் பிழைத்து இத்தனை வருடத்திற்கு பிறகு ஒன்றாக சேர்ந்து இருக்கிறோம் இந்த சொத்தை வைத்து நீ சந்தோசமாக இரு..” என்றவள் அவர்களை அழைத்துக்கொண்டு வெளியேற நினைக்க மனைவியின் கரம்பற்றி தடுத்தான் வெற்றி.

அவள் கணவனை கேள்வியாக நோக்கிட, “அப்பா பெத்தவங்க செய்யும் பாவம் பிள்ளைகளுக்கு என்பது மாறி இன்னைக்கு அவரவர் செய்யும் பாவத்தை அவங்களே அனுபவிச்சு சாக வேண்டும்னு எழுதி இருக்கு” என்ற மகனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்.

“இந்த பணம் இருந்தால் தான் நீ சமுதாயத்தில் வாழவே தகுதியானவன்” என்று நரசிம்மன் சொன்னதைகேட்டு வாய்விட்டு சிரித்தான்.

பிறகு தன் தந்தையின் அருகே சென்று, “பணம் தேவைக்கு அளவாக இருந்தால் போதும். அது அளவுக்கு அதிகமாக இருந்தால் ஆபத்துதான். என்னை ராசி இல்லாதவன் என்று சொன்னீங்க.. எனக்கு எவ்வளவு பணம் வேணும் என்றாலும் சம்பாரிக்க என் கையில் திறமையிருக்கு. அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டும் நீங்கதான் கைலாகதவன்” என்று பதிலடி கொடுத்துவிட்டு தன் மாமனின் குடும்பத்துடன் வாசலை நோக்கி நடந்தான் வெற்றி.

தன்னை தூக்கி வளர்த்த அண்ணன் செல்வதைக் கண்ட ஜமுனா, “எனக்கு என்னோட அண்ணாதான் வேணும்” என்று செல்ல நினைத்தவளை கைப்பிடித்துத் தடுத்தார் நரசிம்மன்.

அவரின் கையை உதறி, “இந்த பணத்துக்கு ஆசைப்பட்டு நாளைக்கு நீ என்னை கொலைகூட செய்வ.. அடுத்தவங்க சம்பாரித்த பணத்திற்கு ஆசைப்படும் நீயெல்லாம் ஒரு அப்பா..” என்றவள் ஓடிச்சென்று தன் அண்ணனின் கையைப் பாசத்துடன் பிடித்துக் கொண்டாள். அவளின் தலையைச் செல்லமாக வருடிய வெற்றி அங்கிருந்து கிளம்பினார்கள்.

இத்தனை நடந்தபிறகும் சொத்தை கைபற்றிவிட்ட சந்தோஷத்தில் சோபாவில் அமர்ந்தவர் அடுத்து என்ன செய்வதென்று சிந்தனையில் இறங்கினார்.

அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த பொறுமையைக் காற்றில் பறக்கவிட்டு, “நீயெல்லாம் திருந்தவே போறது கிடையாதுன்னு தெளிவாக புரிஞ்சி போச்சு. இதுவரை உன் பேச்சைக்கேட்டு நான் செய்ததெல்லாம் போதும். இனிமேல் எனக்கு என் பிள்ளைகளோட சந்தோசம்தான் முக்கியம்” என்றவர் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.

எல்லோரும் சென்ற பிறகும், “பணத்தை வைத்து வாழ தெரியாமல் பக்கம் பக்கமாக டைலாக் பேசிட்டு போகுதுங்க” என்றவர் கூற மனோஜ் மற்றும் வக்கீல் அனைவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

தன் அண்ணனின் குடும்பம் செல்வதைக் கண்டு வேகமாக சென்ற விமலா, “நானும் உங்களோடு வரேன்” என்ற தாயின் கரத்தை பிடித்த ஜமுனா கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டார்.

அவரின் கண்களில் வியப்பு வெளிப்படையாக தெரிய, “இத்தனை வருடத்திற்கு பிறகு கணவன் முக்கியம் இல்லன்னு நீ எடுத்திருக்கும் முடிவு எனக்கு பிடிச்சிருக்கும்மா” என்ற மகளை இழுத்து மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டார்.

அவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அங்கிருந்து செல்வதை மாடியில் நின்று பார்த்த நரசிம்மனுக்கு கர்வம் தலைக்கு ஏறியிருந்தது.

தன் மொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு நேராக வீட்டிற்கு வந்தவனிடம், “இது யாரோட வீடு அண்ணா” என அக்கறையுடன் விசாரித்தாள் தங்கை.

“நானும் உங்க அண்ணியும் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு” வெற்றியின் பார்வை தன் மனையாளின் மீது படிந்து மீண்டது. தான் சொத்து வேண்டாமென்று வெளியேற போவதாக சொன்னபோது புதிதாக விலைக்கு வந்த வீட்டை வாங்கிப்போட சொன்னாள் மனைவி.

அவன் காரணம் கேட்டதற்கு, “நாளைக்கு நம்ம தங்குவதற்கு ஒரு வீடு அவசியம் தேவை. வயசு பெண்ணுடன் நடுரோட்டில் நின்றால் நல்லாவா இருக்கும்” என்று கோபத்துடன் கேட்டாள். அதன் பின்விளைவால் இந்த வீட்டை வாங்கி போட்டிருந்தான்.

இந்த இரண்டு மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வருமானத்தை சேர்த்து வீட்டுக்கு தேவையான சகலப் பொருட்களையும் வாங்கி வைத்தனர். அவர்களின் புத்திசாலி தனத்தை நினைத்து வியந்த ஜமுனா, “நானும் கத்துக்கணும்” என்ற தங்கையின் காதைப்பிடித்து செல்லமாக திருகி சிரித்தான்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் கடையின் பொறுப்பை மொத்தமாக ஜெகதீஸ் கையில் ஒப்படைத்த கணவனும், மனைவியும் அவரவர் வேலைகளைக் கவனித்தனர். நாளைடைவில் கடைக்கு வாடகை அதிகமாக செல்வதை கவனித்த வெற்றி அடுத்த கட்ட பணியில் இறங்கினான்

 தன் திறமையால் பக்கத்தில் இருக்கும் இடத்தை வாங்கி கடை அமைக்க அஸ்திவாரம் போட கணவனுக்கு உறுதுணையாக நின்றாள் செவ்வந்தி. இருவரும் ஒருவரையொருவர் விட்டுகொடுக்காமல் போட்டி போட்டுக்கொண்டு திறமையுடன் கைநிறைய சம்பாரிப்பதை நினைத்து பெரியவர்களின் உள்ளம் மகிழ்ந்தது.

அவர்கள் மொத்தமாக பணியை முடித்துவிட்டு கடைக்கு பூஜை போட்டு அனைவரையும் அமர வைத்து உணவு பரிமாறினார். ஜெகதீஸ் – சங்கீதா மற்றும்  விமலா மூவரும் சாப்பிட சொல்லி வற்புறுத்தினர். அப்போது மறுத்துவிட்டு வந்தவர்களை கவனித்த மூவரும் கடைசியாக சாப்பிட அமரும்போது சாம்பாரும் அப்பளமும் மட்டுமே மிஞ்சியது.

ஒரே இலையில் இருந்த சோற்றை போட்டு சாம்பார் ஊற்றி பிசைந்த வெற்றியின் எதிரே பெண்கள் இருவரும் அமரவே, “இன்னைக்கு மனசுக்கு நிறைவாக இருக்கு” என்று பேசியபடியே தங்கைக்கு சாதத்தை ஊட்டினான்.

“ம்ஹும்.. நமக்கு சொந்தமாக ஒரு கடை.. இதிலும் நீங்களும் நானும் 50% பாட்னர் தான்” என்ற மிரட்டிய செவ்வந்திக்கும் ஊட்டிவிட்டான்.

அவன் இறுதியாக சாப்பிட நினைக்கும்போது இரண்டு கரங்களும் அவனை நோக்கி நீண்டது. ஒருப்பக்கம் தங்கையும், மறுபக்கம் மனைவியும் உணவை எடுத்து நீட்டுவதை கண்டு சந்தோஷத்தில் கண்கள் கலங்கிட வாய்திறந்தான்.

அங்கே குறைவான உணவு இருந்தாலும் நெஞ்சம் நிறைய இருந்த அன்பே அவர்களின் பசியை ஆற்றியது. மூவரும் குழந்தைகள் போல பேசி சிரிப்பதைக் கண்ட விமலா, “என் பிள்ளைகள் இத்தனை வருடமாக சிரித்து நான் பார்க்கவே இல்ல. பாசமென்ற அழகிய கூட்டுக்குள் மூன்று குருவிகள்” என்று பொங்கிய கண்ணீரை சேலையில் துடைத்தார்.

அந்த சமயத்தில் அவர்களைத் தேடி ஒரு வாய்ப்பு வந்தது.

செவ்வந்தி அடிக்கடி அப்லோட் செய்யும் புதிய உடைகளை கவனித்துக் கொண்டே இருந்த புதிய இயக்குனர் பிரதீப் அவளின் கடையைத் தேடி வந்தான். தான் புதிதாக எடுக்க போகும் படத்தின் நாயகிக்குபிரத்யோக ஆடைகளை வடிவமைத்து தரும்படி கேட்டு வந்தான்.

அதை தனக்கொரு சவாலாக எடுத்து செய்த மனைவிக்கு ஊக்கம் கொடுத்து உற்சாகம் கொடுக்க அந்த படம் தயாரிக்கபட்டு வெளியிட்டதில் பிரம்மாண்டமான வெற்றியடைந்தது. அந்த படத்திற்கு பிறகு அவளுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க கணவனிடம் ஜவுளிக்கடையைக் கவனிக்கும்படி கூறிவிட்டு அந்த வேலையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டாள்.

அடுத்த சில மாதங்கள் கழிந்திட மீண்டும் அவர்களைத் தேடி வந்த பிரதீப், “எனக்கு உங்க தங்கை ஜமுனாவைத் திருமணம் செய்து தர முடியுமா?” என்று வெற்றியிடம் நேரடியாக கேட்டான்.

ஜமுனாவின் அருகே சென்று, “உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதா?” என கேட்டதற்கு ஒப்புதலாக தலையசைத்தாள். அடுத்து வந்த முகூர்த்ததில் பிரதீப் – ஜமுனா இருவருக்கும் ஊரறிய திருமணம் விமர்சியாக நடந்து முடிந்தது.

அந்த திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் தன் சம்பாத்தியத்தில் செய்து தங்கையை புகுந்த வீட்டுக்கு அனுப்பிய அண்ணனின் தோள் சாய்ந்து அழுத தங்கையின் முகம் தாங்கி, “எனக்கு இனி எத்தனை குழந்தைகள் பிறந்தாலும்  நீதான் என் முதல் குழந்தை.. உனக்கு ஒண்ணுன்னா அண்ணன் முதலில் வந்து நிற்பேன் தைரியமாக போயிட்டு வாடா” என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தான் வெற்றி.

அவர்களின் பாசபிணைப்பை கண்ட பிரதீப்பிடம், “ஜமுனாவை நல்லா பார்த்துகோங்க.. அடிக்கடி வீட்டுக்கு வரணும்” என்று கண்டிப்புடன் கூறினாள்.

பணத்தோடு பணம் சேர்ந்து இழந்ததைவிட இரட்டிப்பாக சம்பாரித்தபோதும் பணத்தை மதிக்காத கணவன் – மனைவியின் குணம் பிரதீப்பிற்கு பிடித்திருந்தது. அந்த தோளில் வளர்ந்த பிறகு தானும் சமநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

ஆனால் நரசிம்மன் மாறவே இல்லை. அவருக்கு பணத்தை தவிர மற்ற எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. யாரை ராசியில்லாதவன் என்று சொன்னானோ அவனே தனியாக உடைகளை தயாரித்து விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்து நின்றான். மற்றொரு பக்கம் செவ்வந்தி அவளின் திறமையால் திரைப்பட திரையில் லாவமாக கால் பதித்தாள்.

தன் பிள்ளைகள் சமுதாயத்தில் வளர்ந்து நிற்பதைக் கண்ட ஜெகதீஸின் அருகே வந்து அமர்ந்த வெற்றி, “இறைக்கிற கிணறு என்றுமே ஊரும் மாமா.. இந்த பணத்தை சின்ன சின்ன ஆசரமங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க போறேன். நான் ஒருத்தன் மாறுவதால் எல்லோரும் மாறுவாங்க என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த மாற்றம் மனசுக்கு நிறைவாக இருக்கு மாமா” என்றான் மருமகன்.

தன் கணவனின் பரந்த மனதை புரிந்து வைத்திருந்த செவ்வந்தியும் அதற்கு சம்மதிக்க நேரான வழியில் இல்லாத மக்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு செய்ய தொடங்கினர் கணவனும், மனைவியும்!

அவர்களின் முன்னேற்றத்தை கொண்டாட நினைத்த ராம்மோகன் – சரண்யா, பிரகாஷ் – ஜோதி மற்றும் மைதிலி அனைவரும் சின்ன நிகழ்ச்சி போல ஒன்றை ஏற்பாடு செய்தனர். அதில் கணவனோடு வந்து கலந்து கொண்டாள் ஜமுனா.

ஆட்டம் பாட்டம் என்று களைக்கட்டியது. அனைவரும் சேர்ந்து செவ்வந்தியை பாட சொல்லி வற்புறுத்திட, “இல்ல என்னால பாட முடியாது” என்று மறுத்துவிட்டாள்.

அன்றிரவு வீடு வந்தவர்கள் களைப்புடன் அவரவர் அறைகளுக்குள் சென்று மறைய உடை மாற்றிவிட்டு படுக்கையில் வந்தவன் உடைமாற்றாமல் அமர்ந்திருந்தவளின் அருகே சென்று நெருங்கி அமர்ந்தான்.

“நீ மட்டும் ஏன் பாட்டு பாடவே மாட்டேன்னு சொல்லிட்ட” என்று கேட்ட கணவனை மெளனமாக ஏறிட்ட மனையாளின் பார்வையில் வழிந்த காதலைக் கண்டு மௌனமானான். அவனின் தோளில் சாய்ந்தவளை அணைத்துக்கொண்டு படுக்கையில் சரிந்த வெற்றியின் காதுகளில் மெல்ல ஒலித்தது அவளது குரல்! 

“அலையில் மிதந்த மலர் கண்டு..

அதன்மேல் கருணை மனம் கொண்டு..

தலையில் இறைவன் சூடிக்கொண்டான்..

தானே அதனை சேர்த்து கொண்டான்..

குழலில் சூடிய ஒரு மலரும்..

கோவில் சேர்ந்த ஒரு மலரும்..

இரண்டும் வாழ்வில் பெருமைபெறும்..

இதயம் என்றும் அமைதி பேரும்..” என்ற வரிகளைக் கேட்டு அவனின் கண்கள் லேசாக கலங்கியது.

அவளின் பாடல் வரிகளில் மனம் நெகிழ்ந்திருப்பதை இதழ் முத்தத்தால் அவளுக்கு உணர்த்திய கணவனின் கைபிடித்து வயிற்றில் வைத்து மனையாளை புரியாமல் பார்த்தான்.

மெல்ல வருடிய வெற்றி மனையாளின் கன்னச்சிவப்பைக் கண்டு, ‘நிஜமா’ என கேட்க அவளும் ஒப்புதலாக தலையசைக்க முத்தத்தால் அவளைக் குளிபாட்டினான். அவளை மார்புடன் சேர்த்து அணைத்த வெற்றி, “ஐ லவ் யூ” என்ற கணவனின் இதழ்களை சிறை செய்தாள் பெண்ணவள்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் விசயமறிந்து மற்றவர்கள் வாழ்த்து கூறினார். இந்த விஷயம் தெரிந்து சந்தோஷத்தில் குழந்தையாக துள்ளிக் குதித்தாள் ஜமுனா.

எட்டு வருடங்களுக்கு பிறகு..

தன்னுடைய மூன்று வயதான நேத்ராவிற்கு  தாய் மாமன் மடியில் அமர வைத்து காது குத்த வேண்டும் என்று சொல்ல குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு வந்திருந்தனர்.

அனைவரும் ஏற்பாடுகளை கவனிக்க வெற்றி – செவ்வந்தியின் ஏழு வயதான மகன் ஆகாஷ், “அப்பா வேண்டாப்பா.. நேத்துவுக்கு காது வலிக்கும்” என்று விடாமல் சொல்லிக்கொண்டே தந்தையின் பின்னோடு சுற்றினான்.

அங்கே இருந்த மற்றவர்கள் அவனை கேலி செய்ய, “மருமகனே.. இப்பவே என் மகள்மீது இவ்வளவு பாசமாடா” என்று பிரதீப் அவனைத் தூக்கி சுற்றினான்.

“அவன் எங்க அண்ணா மாதிரி..” என்ற ஜமுனாவின் பார்வை தன் மனைவிக்கு தேவையானவற்றை கேட்டு எடுத்து கொடுத்துகொண்டே பேசி சிரித்து கொண்டிருந்த அண்ணனின் மீது படிந்து மீண்டது.

தன் மருமகளுக்கு காது குத்தியதும் வீரிட்டு அழுத நேத்ராவை தூக்கி மார்புடன் சேர்த்து அணைத்த வெற்றி, “பாப்பாவுக்கு கம்மல் போடணும் இல்ல.. இப்போ பாரு குட்டிம்மா எவ்வளவு அழகாக இருக்காங்க..” என்று குழந்தையை சமாதானம் செய்தான் வெற்றி.

ஆனால் குழந்தை வலியால் அழுக கணவனிடம் இருந்து குழந்தையை வாங்கிய செவ்வந்தி, “உங்க மாமாவை அடிச்சிடலாம் பாப்பா.. நீங்க அழுகாதீங்க செல்லமே” என்று அவளை தோளில் போட்டு தட்டி கொடுக்க சிறிது நேரத்தில் உறங்கினாள்.

அங்கே நேத்ராவிற்கு காதுகுத்து முடிந்தவுடன் அனைவருக்கும் பரிமாறி கொண்டிருக்க சிறியவர்களை தாத்தா – பாட்டியின் வசம் ஒப்படைத்தனர். கோயிலுக்கு வெளியே இருந்த அரசமரத்தின் நிழலில் ஜெகதீஸ் – சங்கீதா மற்றும் விமலா மூவரும் அமர்ந்திருக்க தூரத்தில் வேகமாக ஒரு வேகமாக அவர்களை கடந்து சென்றது.

“பாட்டி தாத்தா கார் நிற்காமல் போகுது” என்ற மகனின் பின்னோடு வந்து நின்ற வெற்றிக்கு வருத்தமே மேலோங்கியது. தனக்கு தந்தை வேண்டாம் என்று உதறிவிட்டு வந்தாலும் பணம் மட்டுமே பிரதானம் என்று வாழும் தந்தையை நினைத்து மனம் கனத்தது.

தன் அண்ணனின் பின்னோடு வந்த ஜமுனா, “மருமகனே இதுக்கெல்லாம் வருத்தப்படவே கூடாது..” என்று மறைமுகமாக தன் அண்ணனுக்கும் கூறிய ஜமுனா தன் மன வருத்தத்தை மனதோடு மறைத்தாள்.

சிறிதுநேரம் அங்கே மௌனம் நிலவியது..

அன்று இரவு வீடு வந்த பிறகும் வருத்தத்துடன் பால்கனியில் நின்று கொட்டும் மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். தன் மகனுக்கு உடல்கழுவி உடைமாற்றி உறங்கிய பிறகு வெற்றியைத் தேடி வந்தாள் செவ்வந்தி.

அவன் நின்றிருந்த தோரணையில் இருந்தே வருத்தத்துடன் இருப்பதை உணர்ந்து, “என்னங்க மாமா பற்றிய யோசனையா?” என்ற கேள்வியுடன் கணவனை நெருங்கினாள்.

அவளின் இழுத்து மார்புடன் அணைத்துக்கொண்ட வெற்றி, “இத்தனை வருடமாகியும் அவர் திருந்தவே இல்லையே செவ்வந்தி” என்றவன் வருத்தத்துடன் கூற அவளோ நெஞ்சில் முகம் புதைத்து மௌனமானாள்.

சிறிதுநேரம் கழிந்தபிறகு அவளிடம் அசைவில்லை என்று உணர்ந்து குனிந்து பார்க்க நின்ற நிலையில் உறங்கியிருந்த மனைவியைத் தட்டி எழுப்ப, “நீ விடியும் வரை வருத்தப்பட்டுட்டே நில்லு மாமா.. எனக்கு இப்போ தூக்கம் வருது..” என்று சிணுங்கிய செவ்வந்தியின் இதழ் தேடி குனிந்தான் வெற்றி.

அவன் முத்தமிட்டு நிமிர முகம் வெக்கத்தில் சிவக்க, அவனின் கையோடு தன் கரம் கோர்த்து, “ஐ லவ் யூ வேந்தன் மாமா” என்று மெல்லிய குரலில் கிசுகிசுக்க அவனின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.

அவளின் காதலில் பாகாக உருகியது அவனின் உள்ளம்.  மனையாளின் நெற்றியில் செல்லமாக முட்டிய வெற்றி, “ஐ லவ் யூ செவ்வரளி” என்றவன் கரங்கள் மனைவியின் தோளோடு சுற்றி வளைத்தது.

இருவரின் விழிகளும் காதலென்ற மொழி பேசிட சில்லென்ற காற்று அவர்களை தீண்டிவிட்டு சென்றது. தூவானம் தூறல்கள் போட காதல் கொண்ட இதயங்கள் இதமாக நனைய தொடங்கியது.

 அலையில் மிதந்த பெண் மலரான அவளை மீட்டெடுத்து காதலாக நெஞ்சில் சுமந்த வேந்தனை வாழ்க்கை பாதையிலும் வெற்றியடைய வைத்துவிட்டாள் அவனின் செல்ல செவ்வரளி..

Leave a Reply

error: Content is protected !!