மழைத்துளி-22

மழைத்துளி-22
மழைத்துளி-22
“சும்மா சீன் ஓட்டாம காரை எடு” என்றாள் திவ்யபாரதி.
“எந்த சீனும் இல்லைடி… நீ உள்ள வா” வெற்றி அழைக்க,
“பைத்தியமா பிடிச்சிருக்கு உனக்கு” அவள் கேட்க, ஏதோ சொல்ல
வந்தவனிடம், “வேணாம் உன்மேல பைத்தியம்னு டயலாக் அடிச்சேன்னா
சாவடிச்சிருவேன்” என்று கடுகடுத்தாள்.
அதில் சிரித்தவன், “சரி, உள்ள போலாம் வா” அவனழைக்க, “வேணாம்”
என்றாள் காவல் நிலையத்தை பார்த்தபடியே.
“ஏன் என்மேல அவ்வளவு லவ்வா?” அவன் வினவ,
“ச்சை!” தலையில் அடித்துக்கொண்டவள், காரிலிருந்து இறங்கி, “வா
போலாம்” என்றாள் கெத்தாக.
மனதில் அவளை மெச்சியவன் இறங்கி உள்ளே செல்ல அவனிற்கு
அத்தனை மரியாதை உள்ளே. “உள்ள போகப்போற எனக்கு எவ்வளவு
மரியாதை பார்த்தியா?” அவன் கேட்க முறைத்தாள்.
இருவரையும் எஸ்ஐ வரவேற்க, “பார்த்தியா, மாமியார் வீட்ல
வரவேற்பை” திவ்யபாரதி கேலி செய்ய அவளை முறைத்தான்.
“என்னாச்சு வெற்றி… இவ்வளவு தூரம்… அதுவும் வைபையும்
கூட்டிட்டு” அவர் கேட்க,
“ஒரு கம்ப்ளைன்ட்” வெற்றி.
“யாரு மேல?” எஸ்ஐ.
“என்மேல தான்” வெற்றி சொல்ல அவரோ விசித்திரமாய்
கணவனையும் மனைவியையும் பார்த்தார்.
“நீங்க இவ்வளவு ஆச்சரியப்படவே தேவையில்லை… கம்ப்ளைன்ட்
குடுக்கப்போறது என் வைப்தான்” வெற்றி சொல்ல தலையை
பிய்த்துக்கொள்ளாத குறைதான் எஸ்ஐக்கு.
“வெற்றி யோசிச்சு தான் பேசிறீங்களா… மேடம், உங்க ஹஸ்பன்ட்
சொல்றது உண்மையா?” அவர் கேட்க,
“ம்ம், ஆமா” என்றாள்.
“சரி, கம்ப்ளைன்ட் எழுதிக்குடுங்க” அவர் இருவரிடமும் சொல்ல
திவ்யபாரதி கம்ப்ளைன்ட்டை எழுதினாள்.
திவ்யபாரதி கம்ப்ளைன்ட் எழுத வெற்றி அவரிடம் நீட்டினான். படித்தவர்
அதிர்ந்து வெற்றியைப் பார்க்க அவனோ முகத்தில் எதையும்
காட்டவில்லை.
“வெற்றி ரிஸ்க் எடுக்காதீங்க” எஸ்ஐ.
“இல்லனா நான் கமிஷனர் ஆபிஸ் போறேன் எஸ்ஐ” வெற்றி.
“எங்கண்ணே அவன்?”வெளியே அமர்ஷாவின் குரல் கேட்க வெற்றி
தலையில் கை வைத்தான்.
உள்ளே வந்தவன் எஸ்ஐயைப் பார்த்துவிட்டு இருவரிமும் திரும்பி,
“இரண்டு பேரும் பைத்தியமா?” கோபமாக எஸ்ஐ மனதில்
நினைத்ததைக் அவன் கேட்க எஸ்ஐயிற்கு ஆறுதலாக இருந்தது.
வெற்றியின் கார் வந்தபோதே அங்கிருந்த ஏட்டு அமர்ஷாவிற்கு
அழைத்துவிட்டார். “மாப்ளே, இது என் தப்புக்குத் தான்” வெற்றி சொல்ல,
“இல்ல எனக்கு புரியல… இரண்டுபேரும் எதுக்கு இப்ப தேவையில்லாத
கன்ட்டென்ட் எல்லாம் பண்றீக?” கடுகடுக்க அவன் வினவ,
“மாப்ளே, ரிலாக்ஸ்டா… பாத்துக்கலாம்” வெற்றி சமாதானம் செய்ய,
“எது நீ உள்ளபோய் களி திங்கறதையா?” அமர்ஷா முறைத்தான்.
“எஸ்ஐ, என்ன உங்களை அந்தக் கேஸுல வெளியே எடுத்துவிட்டது
மறந்திருச்சா?” அமர்ஷா அவரை பார்வையாலேயே கதிகலங்க வைக்க,
“நான் என்ன பண்றது… இவரு இங்க எடுக்கலைன்னா கமிஷ்னர்
ஆபிஸ் போவேன்னு சொல்றாப்புல… அங்க போனா நியூஸ் எல்லாம்
வந்திடும்… மீடியாவைப் பத்தித் தெரியாதா” அவர் மீடியாவை இன்னும்
திட்ட,
“எஸ்ஐ… பத்திரிகை ஆளை வச்சிட்டே பேசற தைரியம் யாருக்கும்
வராது” அமர்ஷா நக்கலடிக்க, “யாரு?” வினவினார் எஸ்ஐ.
“நம்ம வெற்றி சம்சாரம் தான்” அமர்ஷா சொல்ல திவ்யபாரதியை அவர்
பார்க்க அவளோ முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ஸாரி மேடம்” அவர் சொல்ல,
“ம்ம்”, “சீக்கிரம் எப்ஐஆர் ஃபைல் பண்ணிடுங்க” என்றவள் எழுந்தாள்.
நால்வரும் பேசியபடியே வெளியே வர, “வா போலாம்” என்றாள்
திவ்யபாரதி.
“எங்க?” வெற்றி.
“வீட்டுக்கு” திவ்யபாரதி சொல்ல எஸ்ஐயும் அமர்ஷாவும் தலையில்
அடித்துக்கொண்டனர்.
“என்ன ஸ்கூல்லையா கம்ப்ளைன்ட் தந்திருக்கோம்…” வெற்றி
சிரிப்புடன் கேட்க திவ்யபாரதிக்கு அப்போது தான் உண்மை உறைத்தது.
“கார் ட்ரைவ் பண்ணிட்டு போயிடுவியா?” சாவியைத் தந்து அவன்
வினவ, கண்ணீர் தன்னையும் மீறி வெளிவருவதை உணர்ந்தவள், “ம்ம்”
என்றுவிட்டு தன் பலவீனத்தைக் காட்டாமல் அங்கிருந்து அகன்றாள்.
வந்து காரை எடுத்தவளுக்கு தன் மனமே முரண்டியது. அவனை
நேற்றிரவு நாக்கை பிடுங்கும் அளவிற்கு கேள்விகேட்டது அவள் தான்.
ஆனால், அவனை இப்போது புகார் கொடுத்துவிட்டு வந்தவளால்
முடியவில்லை. அவன் ஏமாற்றிய போதுகூட அவனிடம் இருந்து
விலகினாளே தவிர அவனை கம்பியெண்ண வைக்க வேண்டும் என்று
நினைத்ததில்லை.
அதுவும் நேற்று அவள் பேசியதிற்கு ஒரு வார்த்தை திருப்பிப் பேசாமல்
அவளையே கண்கலங்க பார்த்துக்கொண்டிருந்த ஆதி புதிதாய்த்
தெரிந்தான்.
நேற்று அவனை தடுத்திருந்தால் அவன் நெருங்கியிருக்க மாட்டான்
என்று அவளிற்கு நன்கு தெரியும். தடுத்து அப்போதே அவனிடம்
கேட்டிருக்கலாம் அவள். எப்போதுமே ஒரு விஷயத்தை முன்னாலேயே
கேட்டால் அது சொல்லிக் காண்பித்தல் என்றுதானே ஆகும். ஆனால்,
மீண்டும் அதை செய்தபின் கேட்கும் போது அது குற்ற உணர்வின்
விளிம்பில் தள்ளும். அதற்காகவே திவ்யபாரதி அவ்வாறு செய்தது.
அவள் வீடு செல்வதற்குள் அமர்ஷா வீட்டிற்குச் சொல்லிவிட்டான்.
விசாலாட்சியும் தையல்நாயகியும் வெற்றிக்காக கண்ணீர் சிந்த, “இப்ப
எதுக்கு அழறீக… வீட்டுல இருக்கவன் எப்படி இருக்கான்… என்ன
பண்ணியருக்கான்னு தெரியாம பெருமையடிக்க தெரிஞ்சுதுல…
இதையும் அனுபவிங்க… அந்தப்புள்ளை வந்தா யாரும் எதுவும்
கேக்கக்கூடாது சொல்லிட்டேன்” சேனாதிபதி சொல்லிவிட வீட்டிற்கு
வந்த திவ்யபாரதியையும் யாரும் எதுவும் கேட்கவில்லை.
“மாமா, அவரை…” தயக்கத்துடன் தொடங்கியவளிடம், “தெரியும்மா”
புன்னகையுடன் சென்றுவிட்டார்.
தையல்நாயகி திவ்யபாரதியைப் பார்த்தபடி நிற்க, “என்னைத்
திட்டமாட்டியா கிழவி… உம்பேரனை உள்ள தள்ளிட்டு வந்திருக்கேன்”
கரகரத்த குரலில் அவள் கேட்க,
“அம்மாடி…” என்றவர் திவ்யபாரதியைக் கட்டிக்கொண்டு அழ
ஆரம்பித்தார்.
“எல்லார்கிட்டையும் அவன் அப்படிக் கிடையாதுத்தா… உன்
விஷயத்துல ஏன் இப்படி நடந்துக்கிட்டான்னு புரியலையே” அரற்றியவர்,
“நீ எம்புட்டு கஷ்டம் அனுபவிச்சிருப்பேன்னு புரியுதுத்தா… ஆனாலும்,
எம்பேரனுக்கு இப்படியொரு நிலமை வருமுன்னு நினைக்கல”
அழுதவரைப் பார்க்க பாவமாக இருந்தது திவ்யபாரதிக்கு.
“அவனவன் செஞ்ச தப்புக்கு தண்டனையை அனுபவிக்கணும்…
விடுங்கத்தை, வேலையை பாருங்க…” விசாலாட்சி கண்ணீரை சேலைத்
தலைப்பால் துடைத்தபடியே செல்ல திவ்யபாரதிக்கு தலைவலி
பிடித்தது.
அறைக்கு வந்து முடங்கியவளுக்கு விஷயமறிந்து அழைத்த தாத்தா
அவளை பிடிபிடியென்று பிடித்துவிட்டார். சதீஷும் கவிநயாவும் இதில்
தலையிடவில்லை. திவ்யபாரதிக்கு அழைத்த இந்திரா வினவ, “ஆம்”
என்றாள்.
“அதுதான் ஆதின்னு தாத்தா சொல்லி எங்களுக்கும் முன்னாடியே
தெரியும்” அவர் சொல்ல, “ம்ம்” என்றாள்.
“வெற்றி உன்னை நல்லா பாத்துப்பாருன்னு அனலைஸ் பண்ணித்தான்
தாத்தாகிட்டையும் சரின்னு சொன்னேன்” என்றவரிடம், “ஏன் யாருமே
என்கிட்ட சொல்லலை?” கேட்டாள்.
“நீயா சொல்லுவேன்னு எதிர்பார்த்தோம்… ஆனா, கடைசி வரைக்கும்
சொல்லலை”, “ஏன் சொல்லலை திவ்யா?” அவர் வினவ
அமைதியானாள்.
“உனக்கு அவனை அசிங்கப்படுத்திப் பார்க்க விரும்பில அதானே…”
அவளை நன்கு அறிந்தவராய் கேட்க, “ம்ம்” என்றவள், “அதுக்காக
அவன்கூட வாழணும்னு நினைக்கல” தெளிவாக வந்தது
திவ்யபாரதியிடம் இருந்து.
“இனி உன் மனசுக்குள்ள இருக்க கேள்விக்கு பதில் உங்கிட்டையே
இருக்கு… நீதான் அதைத் தேடணும்…” என்றவர் வசீகரனிடம் தர, “நீ
என்ன செய்யணும்னு நினைக்கறியோ செய்… உன் பின்னாடி நானும்,
நம்ம நிஜம் ரிப்போர்ட்ஸும் இருக்கும்” என்றவரிடம் நன்றியுரைத்தவள்
வைத்துவிட்டாள்.
அமர்ஷாவோ வெற்றியை பெயிலில் எடுக்க பார் கவுன்சிலில்
விஷயத்தைத் தெரிவித்து, ஆட்களை வைத்து நண்பனை பெயிலில்
எடுக்க ஏற்பாடு செய்தான். ஆனால், வெற்றியின் மேலுள்ள வழக்கோ
சாதரணமானது அல்லவே. பெயில் கிடைக்க அடுத்தநாள் ஆக ஒரு
இரவு வெற்றி உள்ளே இருக்கும்படி ஆனது. வெற்றி, “எதுக்கு மாப்ளே
இப்படிப் பண்ணே?” வரும் வழியில் கேட்க வண்டியை நிறுத்திய
அமர்ஷாவோ, “பின்னே… நடந்தது நடந்து முடிஞ்சிடுச்சு… அதை எதுக்கு
தோண்டி எடுக்கணும்கறேன்” கோபமாகக் கேட்டான்.
அதற்கு மேல் முடியாதவன் நண்பனை அணைத்து அழுதுவிட்டான்.
“முடியல மாப்ளே, சின்னப் பொண்ணுன்னு தெரியாதுடா…
தெரிஞ்சிருந்தா விட்டு விலகியிருப்பனான்னு கேட்டாலும்
சந்தேகம்தான்… அவளை ரொம்ப ரொம்ப புடிக்கும் மாப்ளே… ஆனா, என்
கண்ணுல மட்டும் தப்பாவே தெரிஞ்சுட்டா… ஏமாத்தறான்னு பொறுக்க
முடியாமதான்… நானும் எதுவும் கேக்காம… எனக்காக எல்லாத்தையும்
தலை ஆட்டிட்டு செஞ்சாடா… ஆனா, நான்தான் அவளை… கொழந்த
மாப்ளே அவ” ஆறடி ஆண்மகன் கண்ணீர்விட அம்ரஷா நண்பனின்
தோளை ஆதரவாய்த் தட்டி,
“இரண்டு பேருமே அதை மறக்க ட்ரை பண்ணுங்க மாப்ளே… மனசுவிட்டு
பேசுங்க”அவன் சொல்ல,
“என்னால அவ முகத்தைப் பார்த்து எதுவும் பேசமுடியலடா… தப்பு
செஞ்சிட்டு மன்னிப்புக்கூட கேக்கமுடியல… நினைச்சுப்பாரு மாப்ளே,
நான் ஏமாத்துனது தாங்க முடியாம எதாவது அவ பண்ணியிருந்தா…”
அவன் கேட்க அமர்ஷாவும் உள்ளுக்குள் ஆடித்தான் போனான்.
“என் குழந்தை சாகறதுக்கு நானும் ஒரு காரணம் மாப்ளே… நான் மட்டும்
அவ கூடவே இருந்திருந்தா, என்னைத் தேடி வந்திருப்பா… அந்த
சம்பவமும் நடந்திருக்காது” வெற்றி கோபமும் ஆதங்கமுமாய் சொல்ல,
“குழந்தையா?” அமர்ஷா அதிர்ந்தான்.
குழந்தை உருவானதும், அடுத்தநாளே நடந்ததையும் வெற்றி சொல்ல,
“யாரு மாப்ளே அவனுக?” அமர்ஷா ஆத்திரத்துடன் கேட்க,
“அவ தெளிவா சொல்லல மாப்ளே… மகாகிட்ட கேக்கணும்” என்றான்.
“அந்த சனியனால தான் எல்லாம்… எதுவும் தெரியாம வெண்ணை
மாதிரி…” அமர்ஷா திட்ட, “அவ இதுல பத்து பர்சன்ட் காரணம்னா, நான்
எண்பது மாப்ளே… மிச்ச பத்து அந்த இரண்டு நாய்க” என்றான்.
“நாய் கூட கம்பேர் பண்ணாத மாப்ளே… அது நன்றியுள்ள ஜீவன்”
அமர்ஷா.
வீட்டிற்குள் வெற்றி நுழைய தையல்நாயகி வந்து பேரனைக்
கட்டிக்கொண்டு அழ, விசாலாட்சி வந்து எட்டிப் பார்த்துவிட்டு நகர்ந்து
விட்டார். அன்னை, தந்தை இருவரும் உண்மை தெரிந்தபின் மகனிடம்
பேசுவதை நிறுத்திவிட்டனர்.
“நீ அழுகற அளவுக்கு எல்லாம் உம்பேரன் அவ்வளவு நல்லவனில்ல
அப்பத்தா” என்றவன் அறைக்குச் செல்ல,
“எய்யா, நீயாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல” அமர்ஷாவிடம்
அப்பத்தா கேட்க, தலை கவிழ்ந்தான்.
“நான் வரேன் அப்பத்தா” என்றவன் திரும்ப சேனாதிபதி அவனைப்
பார்த்த பார்வையில் கண்களை தாழ்த்தியபடி அவன் அவரைக் கடக்க,
“இப்படிப்பட்ட நண்பனுக்கே நீ இம்புட்டு சப்போர்ட்டா” அவர் எள்ளலாக
வினவ அவனிற்கு கோபம் வந்தது.
“என் பிரண்ட் எனக்கு பெரிசுங்கப்பா… அவன் செஞ்சதை
நியாயப்படுத்த மாட்டேன்… தப்புதான்… அதுக்குன்னு அவனைவிட்டு
போயிடவும் மாட்டேன்…” என்றவன், “என்னை மீறி யாரு அவனை உள்ள
வச்சிடறீகன்னு பாக்கறேன்.”
“நாலு வருசத்துக்கு முந்தி நாங்க ஆறு மாசம் பேசாம இருந்தமேப்பா…
அது இந்த விஷயத்துலதான்… நானும் வெற்றியை அந்த விஷயத்துல
சும்மா விடலை அப்ப” என்றவன் கிளம்பிவிட்டான்.
இருவரின் நட்பு சேனாதிபதிக்கு பிரமிப்பைத் தந்தது. காதலிற்கு மட்டும்
இல்லை, நட்பிற்கும் கண்ணில்லை தான்.
அறைக்கு வந்த வெற்றி திவ்யபாரதியைப் பார்க்க அவளோ
லேப்டாப்பில் ஆழ்ந்திருந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு எதுவும்
பேசவில்லை. “இல்ல அமர்ஷாதான்…” அவன் தொடங்க,
“எனக்கு கம்ப்ளைன்ட் குடுக்கும்போதே தெரியும்… நீ பெயில்ல
வந்திடுவேன்னு… ஆனா, எப்படி குடுத்தாங்க இந்தக் கேஸுக்கு”
சாதரணம்போல எள்ளலாக வினவினாள்.
அவனோ எதுவும் பேசாமல் குற்ற உணர்வுடன் படுக்கையில் படுத்துக்
கொண்டான். ஒரே இரவில் ஓய்ந்து காணப்பட்டான். திவ்யபாரதிக்கு
அதைக் கண்டு மனம் இளகினாலும், அவளின் மனதில் பச்சை ரணமாய்
இன்னும் காயங்கள் இருந்தது. அதை ஆற்ற வெற்றியின் குற்ற
உணர்ச்சி என்னும் மருந்து அவளிற்கு தேவைப்பட்டது.
அப்படியொருவன் அறையில் இல்லாததுபோல அவள் தனது
வேலையில் இருந்தாள். மனநிறைவுடன் எழுதி முடித்தவள் சோம்பல்
முறித்தபடி பால்கனிக்கு வர, மழை தூறல் போட்டது.
கைநீட்டி தன் கைகளில் அதை ஏந்தியவள் தோட்டத்தை ரசித்தபடி நிற்க,
அவளிற்கே தூக்கிவாரிப் போட்டது. ‘மழையுடன் நானா?’ என்று
நினைத்தவளுக்கு பயமின் சுவடேயில்லை. யோசனையுடன் உள்ளே
நுழைந்தவளுக்கு விடை தெரியவில்லை. ஒருவேளை மனதில் இருந்த
அனைத்தையும் கொட்டியதன் விளைவோ!
‘எப்படியோ பயம்போனா சரி’ நினைத்தவள் தன்னுடைய எழுத்தை
வசீகரனிற்கு அனுப்பிவைத்தாள்.
எதற்கு!!!
முன்பின் தெரியாத முகநூல் நட்பு எதற்கு?
ஆபாசமான ஆடை எதற்கு?
அன்னியனிடம் அரவணைப்பான பேச்சு எதற்கு?
அனைவரையும் நம்புவது எதற்கு?
வலைதளத்தில் வசியமாவது எதற்கு?
களங்கமடைந்து கண்ணீர் எதற்கு?
பெண்ணே!!
நெருப்பாய் இரு நெருங்குவதில்லை!
வரையறையுடன் இரு வம்பிழுப்பதில்லை!
தெளிவாக இரு வசீகரப்பதில்லை!
கண்ணியமாய் இரு கலங்குவதில்லை!
தண்ணீராய் இரு அணைப்பதில்லை!
காற்றாய் இரு கட்டிபோடுவதில்லை!
தைரியத்துடன் இரு தீண்டுவதில்லை!
எச்சரிக்கையாய் இரு ஏமாறுவதில்லை!
வழிகாட்டியாய் இரு வழிதவறுவதில்லை!
நீ நீயாய் இரு!!!
ஆண்மகனே!!
பாதுக்காப்பாய் இரு!
அன்பாய் இரு!
உண்மையாய் இரு!
உவமையாய் இரு!
ஒழுக்கமாய் இரு!
கட்டுப்பாடுடன் இரு!
கள்ளமில்லாமல் இரு!
ஆதரவாய் இரு!
கடமைகளுடன் இரு!
மரியாதையுடன் இரு!
ஆண்மையுடன் இரு!!!
தான் எழுதியதை ஒருமுறை படித்துப் பார்த்தவளுக்கு உடல் சிலிர்த்து.
அதை அனுப்பி வைத்தவள் வெற்றி உறங்குவதைக் கண்டாள். அவன்
உறங்குவதை கலைக்க நினைத்தவள், லேப்டாப்பில் சத்தமாக பாடலை
ஓடவிட தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான். அவன்
சண்டையிடுவான் என்று அவள் நினைக்க, அவனோ குளிக்கச்
சென்றான்.
அவளிற்கு இப்போது ஏதாவது அவனை எதாவது செய்தாக வேண்டுமே.
அவனது கப்போர்டில் இருந்த சட்டைகளை எடுத்தவள் அனைத்திலும்
பேனாவால் கிறுக்கி வைத்தாள் அவன் வருவதற்குள். வந்தவன்
அனைத்தையும் பார்த்துவிட்டு பனியனுடனே சென்றவன், வாசுவிடம்
சட்டையை வாங்கி அணிந்துகொண்டு அறைக்கு வந்து எதையோ தேடிக்
கொண்டிருந்தான்.
திவ்யபாரதியின் விரல் சொடிக்கில் திரும்பியவன் அவளை பார்க்க,
“என்ன ரொம்ப நல்லவனா ட்ராமா பண்றியா?” கேட்டாள்.
“இல்லையே” என்றவன் கீழே செல்ல அவளும் சென்றாள்.
கீழே வந்தவன் சாப்பிட அமர, தையல்நாயகி எழுந்து பேரனிற்கு
பரிமாறச் சென்றார். “ஆமா, இன்னும் நல்லா செஞ்சு போடு…
ஜெயிலுக்கு போயிட்டா எதுவும் கிடைக்காது” சேனாதிபதி கத்த,
“ஏன்டா சாப்பிட வந்தவனை இப்படிப் பேசற?” தையல்நாயகி சீற,
“வம்சத்துக்கே பாவத்தை சேர்த்துட்டுல வந்திருக்கான்” என்றார்.
வெற்றி எழுந்துவிட்டான். திவ்யபாரதி பேச்சிலும் செயலிலும் கோபம்
வராதவனிற்கு இப்போது வெளிவந்தது. இருந்தும் தன் மேலுள்ள
தவறினால் எதுவும்பேசாமல் வெளியே கிளம்பிவிட்டான்.
“எய்யா, சாப்டுட்டு போயா” தையல்நாயகி அவன் பின்னால் ஓட,
“ஒருநாள் சாப்பிடலேனா உம்பேரன் செத்திடமாட்டான் அப்பத்தா”
என்றவன் அமர்ஷாவைப் பார்க்கக் கிளம்பிவிட்டான்.
செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருந்த திவ்யபாரதிக்கு அனைத்தும்
கேட்டாலும் அவள் நிமிரவில்லை. வேறுயாராக இருந்தாலும்
பேசியிருப்பாளோ என்னவோ. மாமனாரின் மேல் கொண்ட மரியாதை
அவளை அப்படியே அமரச் செய்தது.
“தப்பா நினைக்காதம்மா… நானும் ஒரு பொம்பள புள்ளைக்கு அப்பன்…
அதான் பொறுத்துக்க முடியல” எதிரே அமர்ந்திருந்த திவ்யபாரதியிடம்
அவர் சொல்ல, “இல்ல மாமா… உங்க பையன், உங்களுக்கு முழுஉரிமை
இருக்கு” என்றாள்.
••••
தங்களின் தோட்டத்தில் அமர்ந்து ஆதித்யன், ஆனந்த், சபரி, பிரதீப்
அனைவரும் அமர்ந்து மதுவை ஊற்றிக்கொண்டு இருந்தனர் அந்த
தோட்டத்தின் கும்மிருட்டின் நடுவே.
“உங்கூட பேசிட்டு இருக்காளா… அவளை எப்பக் கூட்டிட்டு வர்ற?” ஆதி
சபரியிடம் வினவ,
“கொஞ்சம் கொஞ்சமா பேசி நைஸ் பண்ணிட்டு இருக்கேன் மாப்ளே…
அடுத்த மாசம் ரெடி ஆகிடும்” அவன் சொல்ல ஆதி அந்தக் கயிற்றுக்
கட்டிலில் அமர்ந்து சிரிக்க கட்டிலை யாரோ பின்னாலிருந்து எத்தியதில்
தலைகுப்புற விழுந்தான்.
அதில் நால்வரும் எழ இருவர் முகத்தை துணியால் மூடியபடி
நின்றிருந்தனர். “டேய், யாருடா நீங்க?” ஆனந்த் கத்த, ஒருவன் அவனை
வந்து நெஞ்சில் எட்டி உதைக்க இன்னொருவன் சபரியையும்
பிரதீப்பையும் கவனித்தான்.
மது அதிகளவு உள்ளே சென்றதால் அவர்களால் அதிகமாக எதிர்த்துப்
போராட முடியவில்லை. இடியாய் ஒவ்வொரு அடியும் கண்மண்
தெரியாமல் விழுந்தது. வெற்றியோ ஆனந்தின் முகத்தில் விடாமல்
குத்த அவன் முகத்தில் வெளிவந்த இரத்தமோ வெற்றி கைகளில்
படர்ந்தது.
ஆதியை அமர்ஷா பதம் பார்த்து அவன் கையை உடைத்திருந்தான்.
உயிருக்கு ஆபத்தில்லாமல் அனைவரையும் கலங்கடித்து, சபரியின்
அலைபேசியிலிருந்தே ஆம்புலன்ஸிற்கு சொல்லிவிட்டு இருவரும்
கிளம்பிவிட்டனர்.
நடுஇரவில் சோழவந்தான் திரும்பிய இருவரும் முதலில் இரத்தம் படிந்த
சட்டையை கழற்றி ஆற்றில் வீசினர். “வீட்டுக்கு வந்து சாப்புட்டு, காலைல
வீட்டுக்குப் போ மாப்ளே” அமர்ஷா வற்புறுத்தி வெற்றியை அழைத்துச்
சென்றான்.
அடுத்தநாள் வீட்டிற்கு வந்த வெற்றி அப்பத்தா வாசுவைத் தவிர யாரும்
கண்டுகொள்ளவில்லை. அதீதியோ திவ்யபாரதியிடம்
ஒன்றியிருந்ததால் அத்தையிடமே லயித்திருந்தாள். தனது உடமைகளை
எடுத்தவன் வீட்டிற்குப் பின் சென்றான். கிணற்றுக்கு அருகிலுள்ள ஓட்டு
வீட்டில் அனைத்தையும் வைத்தவன் அமர்ஷாவிடம் சொல்லி சமைக்க
அதுஇதுவென வாங்கியிருந்தான்.
“ஏன் மாப்ளே இப்படி கஷ்டப்படறே?” அமர்ஷா வினவ,
“என்னைப் பாத்துட்டே இருந்தா… எல்லாருக்கும் வெறுப்பு தான் மாப்ளே
வரும்… யாராவது இருக்க இடத்துக்கு நான் வேலையா போனாவே முகம்
மாறறாங்க… முக்கியமா என்னால பாரதி முகத்தைப் பார்க்கமுடியல…
அவளைப் பார்க்கும் போதெல்லாம் வலிக்குது மாப்ளே” என்றான்
வேதனையுடன்.
வீட்டிற்கு வந்த சேனாதிபதிக்கு அன்னை விஷயத்தைச் காதில்போட
அவரோ, “ம்ம்” என்றதுடன் நகர்ந்துகொண்டார்.
நாட்கள் முயல் வேகத்தில் நகர அமர்ஷா பல்கிஸின் நிக்காஹ் மூன்று
மாதத்தில் முடிவு செய்யப்பட்டது. அமர்ஷா அன்னையை வைத்து தாஜா
செய்து தந்தையை பல்கிஸின் வீட்டில் பேசச் செய்தான்.
அதேசமயம் வெற்றி மேலிருந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வர அமர்ஷா
நண்பனிற்காக வாதாடத் தயாரானான். திவ்யபாரதியையும்
பாதிக்காமல் நண்பனை வெளியே எடுக்க முடிவுசெய்தான்.
அன்று கோர்ட்டிற்கு வந்த வெற்றியும் அமர்ஷாவும் திவ்யபாரதிக்காக
காத்திருந்தனர். அமர்ஷா அவள் வருகையைப் பற்றிக் கேட்க,
“காலைலயே அப்பத்தா என்னை வந்து பார்த்தப்போ, அவ கிளம்பீட்டு
இருக்கானு சொல்லுச்சு” என்றான் வெற்றி.
நேரம் கடந்தும் திவ்யபாரதி வராததால் வெற்றி அவளிற்கு அழைத்தான்.
அழைப்பை அவள் எடுக்கவில்லை. வாசுவின் அலைபேசியில் இருந்து
அழைப்பு வர ஏற்றவன், அமர்ஷாவோடு சோழவந்தான் கிளம்பினான்.