மாயவனின் மயிலிறகே 22 prefinal

மாயவனின் மயிலிறகே 22 prefinal

மாயவனின் மயிலிறகே 22

தேவர்கள் நல்லாட்சி செய்யும் சுபதினத்தில் கதிரவன் கிழக்கில் பிறக்கும் நன்நேரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க, ஆன்றோர் சான்றோர் அட்சதை தூவ, குடும்பத்தினரின் அளவில்லாப் புன்னகையைத் தானும் பிரதிபலித்தவாறே மங்கல நாண் அணிவித்து  மதுவை தன் மனையாளாக ஏற்றுக்கொண்டான் அபிஜித்.

 

பார்த்தசாரதி, புவனா முன்வரிசையில் அமர்ந்திருக்க, ரவிசந்திரன், மனையாள் காயத்ரியுடன் மேடையில் ஒருபுறம் நின்றிருக்க, மறுபுறம் ஷௌரியா, நேனா நின்றிருந்தனர்.

 

அர்னவ் ஜனனியிடம் வாகாய் அமர்ந்திருந்தான். தவிர அபிஜித்தின் நண்பர்கள் பட்டாளமும், சஞ்சய் தன் அன்னையுடனும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். 

 

தலை குனிந்திருந்த மதுவிற்கோ, முடியாதோ என நினைத்த திருமணம் முடிந்திருந்ததில் ஒரு ஆசுவாசம் பிறந்தது. அபிஜித் கரம் அவள் தோளைச்சுற்றி நெற்றிவகிட்டில் குங்குமம் வைக்க கண்மூடி அந்த கணத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.

 

இன்னுமே அவளால் மறக்க முடியவில்லை,   ‘மேஜிக்கல் மொமண்ட்ஸ்’ போன்ற அந்த தருணத்தை. அன்று  அவனிடம், “என்னை  விட்டுடாத ப்ளீஸ்” என ஒரு உந்துதலில் கூறியவள் அவன் பதிலை கேட்க பயந்தபடி நிற்க,

 

 நின்றவாக்கிலேயே, “பிடிச்சா இனி எப்பவும் விடமாட்டேன் மது… உனக்கு சம்மதமா?” எனக் கேட்டிருந்தான்.

 

 

“அதான் சொல்லிட்டனே! இதுக்கும் மேல எப்படி சொல்ல?” என்றவள்  ஓடி தன் அறைக்குள் அடைந்து கொண்டாள்.  

 

‘அவன் என்ன நினைப்பான்? ஏன் இப்படி சொன்ன?’  என மனம் நினைக்க, “என்னவோ நினைக்கட்டும்… இனி என்னால மறைக்க முடியாது. மனசுல இருக்கறத வெளில சொல்லமுடியாம நரக வேதனையா இருக்கு… நான் சொல்லிட்டேன். இனி நான் வேணும்னா அவனே பாத்துப்பான்” என வாய்விட்டு கூறியவளுக்கு அப்படி ஒரு அழுகை. ஒருவேளை மனதின் பாரம் இறங்கியதாலோ என்னவோ? அழுதழுது அப்படியே உறங்கியும் போனாள்.

 

கீழே அபிஜித்தோ அவள் கூறிய வார்த்தைகளின் பொருளை கிரகித்துக் கொண்டிருந்தான். நெற்றியை விரல் கொண்டு வருடியவாறே முகம் கொள்ளாப் புன்னகை  விரவிப் பரவ, அவள் செல்வதை அறிந்தும் தடுக்க தோன்றாமல் அங்கேயே சோபாவில் அமர்ந்துவிட்டான்.

 

அவள் கூறியதைப்போல இப்பொழுதே விடாமல் பிடித்துவைத்துக் கொள்ளலாம் போல தோன்றியது அவனுக்கு. ஆனால், நாளை நிச்சயம் என்ற இந்த நிலை, இதை எப்படி சரி செய்வது என யோசித்துக் கொண்டிருந்தான். 

 

சற்று நேரம் கழித்து கோவிலுக்கு சென்ற  பெரியவர்கள் மூவரும் வந்தபோது பார்த்தது புன்னகையுடன் அமர்ந்திருந்த அபிஜித்தையே! ரவிசந்திரன் அப்படியே  தோப்பை பார்க்க சென்றுவிட்டார். 

 

“அபி நேரமா வந்துட்டயா?  நாளைக்கு நிச்சயத்துக்கு லீவ் சொல்லிடு. இங்கதான் இருக்கனும், எந்த சாக்குபோக்கும் சொல்லக்கூடாது” என்றவாறே புவனா அவனருகில் அமர்ந்தார்.

 

அவரைப் பார்த்தவன், “கண்டிப்பா பாட்டி நான் இல்லாம நிச்சயமா” என புன்னகை புரியவும், காயத்ரி ‘என்னவாயிற்று இவனுக்கு…’ என கேள்வியும் ஆச்சர்யமும், குழப்பமுமாய் பார்த்திருந்தார். 

 

அபிஜித்  தாத்தாவிடம் சென்று  அவர்முன் மண்டிபோட்டு அமர்ந்தவன், “தாத்தா… என்னை பத்தி என்ன நினைக்கறீங்க…ஐ மீன் கல்யாண விசயத்துல மாப்பிள்ளையா?” என கேட்டான்.

 

இப்போது எதற்கு என யோசித்தாலும், “உனக்கென்னடா, ராஜா நீ… பொண்ணும், பொண்ண பெத்தவங்களும் குடுத்து வச்சிருக்கனும்” எனக் கூற,

 

“அப்ப அத்தையும் மாமாவும் கொடுத்து வைக்கலயா, இல்ல நான் கொடுத்து வைக்கலயா?” நேரடிக் கேள்வியில் அனைவருமே அதிர்ந்துவிட்டனர். 

 

என்ன சொல்ல வருகிறான் இவன் என குழம்பினர். அதில் பாட்டி சற்று தெளிந்தவர், “கண்ணா நீ… மதுவ…” எனக் கேள்வியாய் நிறுத்த,

 

“ஏன் பாட்டி எனக்கு உரிமையில்லையா? தகுதியில்லையா?” என ஒரே போடாய் போட்டான். 

 

“ரெண்டுமே உனக்குதான்டா முதல்ல… ஆனா இப்ப எப்படி? மது சம்மதிக்கனும் இல்லையா?”  என தாத்தாவும் கேட்க,

 

“அதனாலதான் தாத்தா  இப்ப கேக்கறேன்… இல்லனா முன்னவே கேட்டிருப்பேன்” 

 

‘மது சம்மதித்துவிட்டாளா?’ என மகிழ்வுடன்  காயத்ரி அபியைப் பார்க்க, அவன் புன்னகையுடன் ‘ஆமா’ மென்று தலையாட்டினான். 

 

பெரியவர்கள் “இருவரும் விரும்புகிறார்களா?” என யோசித்துக் கொண்டிருக்கவும், “ஏம்ப்பா என் பையனுக்கு பொண்ணு கொடுக்க அவ்வளவு யோசிக்கனுமா?”  என காயத்ரியும் மகனுக்கு பரிந்து வர,

 

“அட என்னமா நீ! நான் யோசிச்சதே வேற… இத அன்னைக்கே சொல்லியிருக்கலாமே? எங்களுக்கும் இதவிட வேறென்ன சந்தோஷம் இருக்க போகுது… நாங்க இத ஏற்கனவே யோசிச்சோம். ஆனா எப்படி கேக்கன்னு நினைச்சுதான் தடுமாறினோம். அப்ப  இந்த சம்பந்தம்  வரவும் அபி என்ன நினைக்கறான்னு தெரிஞ்சிக்கதான்  அவன்கிட்ட சொன்னோம். ஆனா, அவன் ஒன்னுமே சொல்லாம இருந்தது எங்களுக்கும் பெரிய ஏமாற்றம்தான்.  மதுவும் எதுவும் சொல்லல. அதனால நாங்களும் இவங்களுக்கு பிரியமில்லன்னு விட்டாச்சு. இப்போ நிச்சயம் வரை வந்த பிறகு  அவங்ககிட்ட எப்படி சொல்ல…” என பெரியவர்  வெகுவாய் சங்கடப்பட்டார், வாக்கு தவறியதைப்போல ஆகிவிடுமே என்று…

 

அவரின் சம்மதத்தை உணர்ந்தவன், “தாத்தா இதுதான் பிரச்சனைன்னா நான் பேசிக்கறேன். நீங்க டென்சன் ஆகாதீங்க.” என்றவன் தாயிடம்  அவர்களை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டுத் தோட்டத்துப் பக்கம் சென்றுவிட்டான். 

 

என்ன பேசினானோ அவர்களும் பிரச்சனை செய்யாமல் ஒதுங்கிவிட, உடனே ரவிசந்திரனுக்கு விசயம் தெரிவிக்கப்பட்டது.  அடுத்த நாள் குறித்த நேரத்திலேயே அபிஜித்திற்கும் மதுமிளாவிற்கும் நிச்சயம் நடத்திக் காட்டினார் அவர். 

 

ஷௌரியாவிற்கும் தெரிவிக்கப்பட அவனும் வந்துவிட்டான் குடும்பத்துடன். அன்று  செல்லும்போதே அவள் நினைவு திரும்பியதை மறைக்கிறாள் என அறிந்தவன், “ஏன்?” என்று மதுவிடம் தனிமையில் பேச, அவள் அபியைப் பற்றிக் கூறிய பதிலில், இருவரின் விருப்பம் ஓரளவு அறிந்த ஷௌரியா சொன்னது இதைத்தான், “மது, ஏன் உன்னை மறைக்கற, எதுவா இருந்தாலும் அபிகிட்ட சொல்லு. உன்னை யார்ன்னு தெரியாதப்பவே அப்படி பாத்துக்கிட்டான். எனக்கு தெரிஞ்சு ‘அந்த பாப்பு’வான உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவான். அதனால சொல்லாம காலம் தாழ்த்தாத, அது விபரீதத்துல கொண்டு விட்டுடும்” எனக்கூறி சென்றுவிட்டான். 

 

 ஆனால், மதுதான் அப்போது இருந்த குழப்பத்தில் எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டாளே! இப்போது இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படவும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். 

 

 நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடையிலான இந்த இரண்டு மாதங்களில் அபியும் மதுவும் காதலர்களாக கை கோர்த்து ஊர் சுற்றினார்களா என்றால்? இல்லை. 

 

“உன்னை எனக்கு பிடித்திருக்கிறது , நான் விரும்புகிறேன்” என வாய் வார்த்தையாக கூறிக்கொள்ளவும் இல்லை. பதிலாக, முன்பு தவறவிட்டதை இப்போது செய்தனர். ஆம், மற்றவரை உணர்ந்தனர், மற்றவர்க்கு உணர்த்தினர். 

 

பார்வைகள் பின்னிக்கொண்டன. வார்த்தைகள்  மௌனங்களாயின. ஜனனியோ, “அண்ணி அண்ணி” என அழைத்து ஒருவழியாக்கினாள்.  வாழ்க்கை வண்ணமயமாகிவிட்டதைப் போன்ற மகிழ்ச்சியில் மதுவின் முகமே தேஜசாக  ஜொலித்துக்கொண்டிருந்தது. 

 

இதைக் கண்ட பெரியவர்களுக்கும் பெரும் திருப்தி. இதைவிட வேறென்ன வேண்டும் அவர்களுக்கு. 

 

இதோ இப்பொழுது திருமணமும் முடிந்துவிட்டது. இனி மது “திருமதி. அபிஜித்” 

 

இவை அனைத்தும் மின்னலாய் மனதுக்குள் ஓட, குனிந்தபடியே இருந்தாள் மது. அபி மனையாளின் முகம் பார்க்க எண்ணியவன், கரத்தை விலக்காமல் இன்னும் நன்றாக தோளோடு இறுக்கி நெற்றியில் ஒரு அழுத்தம் கொடுக்க, அதில் கலைந்தவள் என்னவென்று அவன் முகம் கண்டாள்.

 

அஞ்சனம் தீட்டிய கண்கள் இரண்டும் கேள்வியாய் அவனை நோக்க, அவனோ விரிந்த புன்னகையுடன் ஒன்றுமில்லையென தலையாட்டினான். 

 

அவனின் சேட்டையில் மூக்கைச் சுருக்கி செல்லமாக முறைத்தவள், அக்கம்பக்கம் சுட்டிக்காட்ட மெதுவாக அவளை உணர்ந்தவாறே கரத்தை விலக்கினான். அதில் இவள்தான் நெளிந்துவிடாமல் இருக்க பெரும் பிரயத்தனப்பட்டாள். மனம் முறைக்க நினைக்க   அவள் முகமோ அதற்கு மாறாய்  வெட்கப் புன்னகையைப் பூசிக்கொண்டது.

 

அடுத்த சடங்கு சம்பிரதாயங்கள் நடக்க, ஐயர் கன்னிகாதானம் செய்ய அழைத்தார். “மாப்பிள்ளையோட பெத்தவா வாங்கோ ”   அபிஜித்தின் பெற்றோர் வரவும், அவர்கள் இருவரின் கையின்மேல் மணமக்களின் கையை வைத்து, “பொண்ண பெத்தவா வாங்கோ” என அவர் கூறியதும் மதுவின் கண்கள்  தானாக கலங்கியது தாய் தந்தையை எண்ணி. அவள் கலங்கவும் அபிஜித் அவளை கண்களாலேயே தேற்றினான். 

 

அனைவரும் அதேபோல் கலங்க, சந்திரன், “நாங்க..” என ஏதோ கூறுவதற்குள்  ஷௌரியா நேனாவுடன் அருகில் வந்தவன், “நாங்க பொண்ணோட அப்பா, அம்மாவா சடங்கு செய்யலாமில்லையா” என கேட்கவும்,  அவர்களை பார்த்தவர், “ஓ..பேஷா பண்ணலாமே” என சடங்கை ஆரம்பித்தார். 

 

அனைவரும் நெகிழ்ந்து ஷௌரியாவைப்  பார்த்தபடி இருக்க, “என்ன எல்லோரும் என்னை அப்படி பாக்கறீங்க. நான் சொன்னது சரிதானே மது”  என மதுவைப் பார்க்க கண்ணீர்ப் புன்னகையுடன் ஆமாமென்று தலையாட்டினாள். அபி அவனைப் பார்த்து நிறைவாக சிரிக்க, பதிலுக்கு இவனும் சினேகமாய் புன்னகைத்தவன் , கர்மசிரத்தையாய் சடங்கை செய்து கொண்டிருந்தான். 

 

ஒருவழியாக சடங்கெல்லாம் முடிய நண்பர்கள் பட்டாளம் தம்பதிகளை சூழ்ந்து கொண்டது. கேலி கலாட்டக்கள் மண்டபத்தை நிறைத்தது. மதுவும் சரி அபிஜித்தும் சரி அனைத்திற்கும் புன்னகைத்த வண்ணமே இருந்தனர்.  

 

தம்பதிகள் வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கும் விளக்கேற்றுதல், பால் பழம் சாப்பிடுதல் போன்ற சம்பிரதாயங்கள் செய்து  மீண்டும் மண்டபம் திரும்பினர். 

 

மாலை ரிசப்சன் அந்த மண்டபத்திலேயே இருக்க சற்று நேரம் ஒய்வெடுத்தவர்கள் மீண்டும் அலங்காரம் விருந்தினர்கள் என பிஸியாகினர்.

 

ஷௌரியா பம்பரமாகத்தான் சுழன்றான். எந்த குறையும் இருக்கக்கூடாதென ஒவ்வொன்றையும் சந்திரனிடம் கேட்டு கேட்டு செய்தான்.  

 

அபிஜித் கலெக்டர் என்பதால் முக்கிய அதிகாரிகள், அவன் க்ரேட் உள்ள உடன் படித்தவர்கள், இப்படி வந்திருக்க, ஷௌரியாவின் பக்கம்  பிஸினஸ்மேன்கள் அணிவகுத்தனர், சந்திரனோ அரசியல் பக்கம் அழைத்திருக்க பெரும் கும்பல்தான். அபிஜித் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முகம் காட்டினான். சமாளிக்க எத்தனை பேர் இருந்தாலும் போதவில்லை.  ஆனாலும்  நின்று தாங்கினர் என்று சொல்லலாம்.

 

சற்று நேரத்தில் அபிஜித்தின் அறுபடை நண்பர்கள் குழு மேடையேறினர். அவர்களுடன் பேச மனம் துடித்தாலும் போட்டுக்கொண்ட வேடத்திற்கு ஏற்ப புன்னகையை மட்டுமே சிந்த முடிந்தது மதுவால்.

 

பரிசுகள் தடைசெய்யப்பட்டிருந்தாலும் சில விதிவிலக்குகள் உண்டல்லவா?  நண்பர்கள்  வாழ்த்த, பவன் பரிசொன்றைக்   கொடுத்தவன், ” இத அப்பறமா ரெண்டுபேரும் சேர்ந்து பிரிச்சு பாருங்க ” என்றான். 

 

அடுத்ததாக சஞ்சய் ஜானகியுடன் வரும்போதும் அபி அறிமுகம் செய்து வைக்க, அவர்களுடனும் இயல்பாக  பேச முடியாமல் மிகவும் தவித்தாள் மது. பேசாமல் நினைவிருப்பதை கூறி விடலாமா? என எண்ணியவள் இப்போதும் அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். 

 

ஆனால் அப்போதே கூறியிருக்கலாமோ? என காலம் அவளுக்கும் உணர்த்தும் போது?

 

ஜானகி தங்கத்தால் ஆன நெக்லசை பரிசளித்தார். தடுக்க வந்த அபியை, “இது என் பொண்ணுக்கு அபி தடுக்காத… ” எனக்கூறி அணிவித்திருந்தார்.  இதுதான் சாக்கென்று  மது ஜானகியிடம் ஆசிர்வாதம் வாங்க, அவர் இவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, “சந்தோசமா இருடா…” என வாழ்த்த இவளும் நெகிழ்ந்து அவரை இறுக அணைத்துக் கொண்டாள்.

 

“அபி  என் பொண்ண பத்திரமா பாத்துக்க” என மீண்டும் கூறவும் அபி மதுவை தோளோடு அணைத்தவன், “அத நீங்க சொல்லனுமாம்மா” எனப் புன்னகைக்க,

 

“டேய் அவதான் என் பொண்ணு… நீ உறவு முறைய மாத்தாத என்னை இனி அத்தைனு கூப்பிடு” என வாதிட,

 

“நேத்து வந்த பொண்ணுக்காக என்ன டீப்ரமோட் பண்ணிட்டீங்களா? நடத்துங்க… நடத்துங்க” எனக் கூறினாலும் அதில் சந்தோஷமே நிறைந்திருந்தது.

 

“இன்னைக்கு வந்தாலும், நேத்து வந்தாலும் பொண்ணு பொண்ணுதான!”  என புருவம் உயர்த்தியவர் மற்றவர்கள் மேடை ஏற காத்திருப்பதால் , “சரி அபி… நான் கெளம்பறேன். பாப்புவ கூட்டிட்டு கண்டிப்பா வீட்டுக்கு வரனும்” என்ற கட்டளையோடு புறப்பட, ஜனனியை அழைத்தவன் அவர்களை கவனிக்க சொல்லி உடன் அனுப்பினான்.

 

இரவு பத்துமணி வரை ரிசப்ஷன் இருக்க, அதற்கு மேல் இவர்கள் வீடு வந்துவிட்டனர்.  தாய்மாமனின் வீட்டில் மருமகளாக தன் பயணத்தை ஆரம்பித்தாள் மது. 

 

அடுத்த அரைமணி நேரத்தில் முறையாக அபியின் அறைக்கு அனுப்பப்பட்டாள் மது. இயல்பான படபடப்புடன்  அறையினுள் சென்றவள்,  கதவைத் தாளிட்டு திரும்பி, அபியைத் தேட , அவன் பால்கனியில் நின்றிருந்தான்.

 

 குளித்திருப்பான் போல, வெள்ளை நிற  பைஜாமா உடையில் இருந்தான்.  ஏற்கனவே அவனறையில் அவனுடன் இருந்தவள்தான். ஆனால் அது வேறல்லவா!

 

கதவைத் தாளிடும் சத்தத்தில் திரும்பியவன், கடலின் வகைவகையான நீலத்தை கலந்து நெய்திருந்த மெல்லிய ஷிஃபான் சேலை ஒற்றை மடிப்பில் விடப்பட்டு,  பால்கனியிலிருந்து ஊடுருவி உள்ளே வந்த காற்றில் அலையாய் ஆட, சற்றே தோளைத் தாண்டி வளர்ந்திருந்த கூந்தலை இருபுறமும் எடுத்து க்ளிப் செய்து, அதற்கேற்றார்போல் இரண்டு மூன்று முழம் ஜாதிமல்லிகைப் பூவைச் சூடி நின்றிருந்தவளைப் பார்த்தான். 

 

வகிட்டில் குங்குமம், கழுத்தில் மஞ்சள் கயிற்றில் தாலி, அதற்குமேல் ஒரு ஆரம். கையில் இவள் அசைந்தால் கூட தெரியுமளவிற்கு வளையல்கள். 

 

அது, காயத்ரி தந்தது, தன் அன்னைக்கு செய்திருந்ததாக கூறியது, என எதையும் தவிர்க்க முடியவில்லை. புது வாழ்க்கை தொடங்கும்முன் அவர்களது ஆசிர்வாதங்களாக போடப்பட்டது.  கையே  கனமாக இருந்தது போல, மாற்றி மாற்றி தாங்கிய வண்ணம் நின்றிருந்தாள். 

 

காலையில் பச்சை நிற கூரைச் சேலையில் தெய்வ தரிசனமாக இருக்க, மாலை ரிசப்ஷனில் டிசைனர் வியரில் அப்சரஸ்தான்… வெகுவாக ரசித்திருந்தாலும் அதை காட்ட இயலா நிலையில் இருந்தவன், இப்போது  ஆளை அடிக்கும் மோகினியைப்  போல வந்தவளைப் பார்த்து பார்த்தபடி நின்றான்.  

 

‘அங்கு செல்வோமா இல்லை இங்கேயே இருப்போமா?’ என மது யோசித்துக் கொண்டிருக்க, ஒருவழியாக அவனே உள்ளே வந்தான். 

 

வந்தவன் இயல்பாக அவள் கை இரண்டையும் பற்றி,” வெய்ட்டா இருக்குன்னா கழட்ட வேண்டியதுதான” என இரு கையிலும் ஒற்றை வளையலை விட்டு மீதி வளையல்களை கழட்டி பத்திரப்படுத்தி வந்தான். எப்போதும்போல அவனின் அன்பில், கவனிப்பில் மகிழ்வாய் உணர்ந்தாள். அவளிடமிருந்த படபடப்பெல்லாம் காணாமல் போனது. 

 

“வா…மது” என்றவன், அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்று, பெட்டில் அமரவைத்தான். “ரிலாக்ஸா  இரு மது. டயர்டா இருந்தா தூங்கு” எனவும்,

 

 “உங்களுக்கு டயர்டா இருக்கா” என கேட்க, 

 

“என் வேலைல இதெல்லாம் பழக்கம்தான் மது. உனக்குதான் இது புதுசா இருக்கும். பாரு சோர்வா தெரியற. ”  என்றான் வாஞ்சையுடன்.

 

“இல்ல அப்படி இல்ல. நான் நல்லாதான் இருக்கறேன்” என்றவள், பார்வையை சுழல விட்டாள். அப்போது அங்கிருந்த பவனின் பரிசைப் பார்த்து, “உங்களுக்கு ஓ.கே ன்னா அந்த கிஃப்ட் பிரிச்சு பாக்கலாமா?” எனக் கேட்க,

 

சமாளிக்கிறாள்,  என மனதுக்குள் சிரித்தவன், “இப்பயா? சரி வா இப்போதைக்கு தூங்க முடியாது. இதையாவது செய்வோம்” என அதை எடுத்துக்கொண்டு வந்து அவளருகில் அமர்ந்தான். மது மெத்தையில் அமர்ந்து பவன் கொடுத்த கிஃப்ட்டை   ஆவலோடு பிரித்தவள், “வாவ்” என வாய்விட்டு தன்னால் கூறிவிட, அபியும் அது என்னவென்று பார்த்தவன் ஸ்தம்பித்துதான் போனான். 

 

அது கூர்க்கில் எடுக்கப்பட்ட போட்டோ. மது முன்னால் நின்றிருக்க அபி அவளின் பின்னால், அவனுடைய  ஒரு கை மதுவுடன் கேக் வெட்ட இணைந்திருக்க, மற்றொன்று அவளின் தோளில் அணைவாய். மது முகத்தை மட்டும் திருப்பி அபியை புன்னகையுடன் பார்த்திருக்க, அபி அவளை கண்நிறைந்த காதலோடு பார்த்திருந்தான். க்ளோஸ்அப்   ஷாட். இருவரின் முகமும் அருகருகில். 

 

அதைப் பார்த்தனர்… பார்த்தனர்… பார்த்துக்கொண்டே இருந்தனர். தெவிட்டவே இல்லை. 

 

சில நிமிடங்கள் சென்று, மது அதிலிருந்து பார்வையைப் பிரித்து அருகில் அமர்ந்திருந்த அபியைப் பார்க்க, போட்டோவில இருந்த அதே பார்வையோடு இப்போது இவளைப் பார்த்திருந்தான். 

 

அதேபோல க்ளோஸ்அப்  தோற்றம். அவ்வளவு அருகில் முகம். அதில் ஒரு மயக்கம்… அதில் மூழ்கி கடக்க வேண்டி சிறு தயக்கம் என அவனது தோற்றம் இவளைப் புரட்டிபோட, சிலையாய் சமைந்துவிட்டாள். 

 

கண்களின் வழியே அவளை விருந்தாடிக் கொண்டிருந்தான் அபி!

 

மெல்ல உறக்கம் கலைந்தது மதுவிற்கு.  எழ  முயல, முடியவில்லை!  ஏன் என மெல்ல கண் திறந்து பார்க்க கழுத்தோடு கரம் ஒன்று இவளை வளைத்திருந்தது. விலக்க நினைக்க முடியவில்லை.  மென்மையாய் இருந்தாலும் அதிலிருந்து தப்ப முடியாது என தோன்றியது மதுவிற்கு.

 

இரவை நினைத்து மண்டைக்குள் மணியடிக்க அவசரமாக தன்னை ஆராய்ந்தாள். அவன் குர்த்தி இவள் அணிந்திருக்க, மூச்சைப் பிடித்துக்கொண்டு மெல்லத் திரும்பிப் பின்னால் பார்த்தாள்,  அபி வெறும் பேண்ட்டுடன் வெற்று மேலோடு உறங்கிக்கொண்டிருந்தான். 

 

“மாயக்காரன்” மனம் தித்திப்புடன் எண்ணிக்கொண்டது. 

 

பிடித்திருந்த மூச்சை மெல்ல வெளிவிட்டவள், அவன் கையை மெல்ல விலக்கிவிட்டு, “என்ன மது இப்படி கவுந்துட்ட…” எனக்கூறி வெட்கியவாறு தொளதொளவென்று இருந்த  அவன் பைஜாமாவை மேலே இழுத்து முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

 

 

 

 

 

உடனே பின்னால் அவன் சிரிக்கும் மெல்லிய சத்தமும், கூந்தலில் முகம் புதைத்து முத்தமிடுவதும் தெரிய சிலிர்த்து மேலும் அவனோடு ஒன்றினாள். 

 

“நீங்க எங்க கவுந்தீங்க மிளா மேடம்… நான்தான் மொத்தமா விழுந்துட்டேன்”  என்றவன் அவளைத் திருப்பி , “குட் மார்னிங்கடா” என நெற்றியில் முத்தமிட, சிலிர்ப்பு மறைந்து, “ஹேப்பி மார்னிங்…” என்றவள், 

 

“அது என்ன மிளா?” 

 

அவளை வாசம் பிடித்தவன், ” ‘மிளா’ ன்னா மான்குட்டியாம்… நீயும் அப்படிதான இருக்க… அதான் மிளா. நான் மீள நினைக்காத என் மிளா ”  

 

அவன் விளக்கத்தில் மோகனமாய்ப் புன்னகைத்தவள், “நீங்க முன்னவே முழிச்சிட்டீங்களா?” எனக் கேட்க,

 

“ம்…எங்க தூங்கினேன்… நேத்து மோகினி ஒன்னு என்னை மொத்தமா வேட்டையாடிடுச்சு… அத…..” 

 

 

“ச்சோ…நீங்க என்ன இப்படி பேசறீங்க” என அவன் வாய்மூட, மேலும் அவளை வம்பிழுத்துக்கொண்டு படுத்திருந்தான் அபி.

 

இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. இயல்பான வாழ்க்கைக்குள் புகுந்திருந்தனர் இளம் தம்பதிகள். தேனிலவு என்று எங்கும் செல்லவில்லை. முக்கிய உறவினர்கள் வீட்டிற்கு மட்டும் விருந்திற்கு சென்று வந்தனர். வீட்டுப் பெரியவர்கள்  உடனே ஒரு பிள்ளை செல்வத்துக்கு மனதோடு வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தனர். 

 

அன்று மதுவிற்கு லேசாக வயிறு வலிக்க, அப்போதுதான் தேதி பார்த்தாள், “அச்சோ இத எப்படி மறந்தேன். ஸ்டாக் வேற இல்லையே. ” என யோசித்துக்கொண்டிருந்தாள். 

 

ஜனனி,  “அண்ணி” என்றவாறு அறையினுள் வந்தவள்  பை ஒன்றை கொடுத்தாள். 

 

 “என்ன ஜனனி இது” 

 

” அண்ணா குடுத்துட்டு போனாங்க.. அவசரமா மீட்டிங் இருக்காம். என்னை வெளியில வர சொல்லி குடுத்துட்டு போய்ட்டாங்க. ஹான் அப்பறம்  சமத்தா ரெஸ்ட் எடுப்பீங்களாம் உங்க ஸ்வீட் ஹார்ட்டோட ஆர்டர்” என கொடுத்து சென்றுவிட்டாள். 

 

ஜனனி சென்றதும் அது என்னவெனப் பார்க்க அவள் ‘ஸ்டாக் இல்லை’ என நினைத்ததை வாங்கித் தந்திருந்தான் அபி. பெருமையில் மனம் நிறைந்து போனது பெண்ணிற்கு. ‘நானே மறந்துட்டேன் இவன் நினைவு வைத்திருக்கிறானா?’ என.

 

முன்பு,அவள் அடிபட்டு சுயநினைவில் இல்லாதபோது  இப்படி முதல் முறை  வீட்டிற்கு விலக்கான நாள் நினைவில் வந்தது. அன்று எழும்போதே ஒரே வயிற்றுவலி. அதைவிட போர்வையை விலக்கியபோது பெட்டெல்லாம் ஒரே சிவப்பாக இருக்கவும் அதிர்ந்தவள், ‘ஜித்து’ என பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

 

அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தவன் ‘என்னவோ’ என்று வந்து பார்க்க அவனுக்குமே அதிர்ச்சிதான். அவனுக்கும் என்ன தெரியும். ஏதோ ஒரளவு மேம்போக்காக தெரிந்ததுதான். 

 

இவள் வேறு ‘குழந்தை போல’ எடுக்க சொல்லி கைகளை தூக்கிக்கொண்டு, “ஜித்து வயிரெல்லாம் வலிக்குது… இது வேற இப்படி…. நான் சாகப்போறனா?” என கண்களில் கலவரத்தைத் தேக்கி கேட்க, விரைந்து சென்று அணைத்துக் கொண்டவன், “இல்லடா குட்டி. இது சாதாரணம்தான். நான் போய் பொன்னம்மாவ வர சொல்றேன்.” எனவும், “இல்ல… என்னை விட்டு போகாத” என மேலும் அழ ஆரம்பித்துவிட்டாள். 

 

அங்கிருந்தே பொன்னம்மாவிற்கு அலைபேசியில் அழைத்தவன் விவரத்தைக் கூறவும் அவரும் வந்துவிட்டார். அதன்பின் அவர் என்ன வேண்டுமென்று கூற சிறிதும் சங்கூஜமின்றி உடனே வாங்கிவந்தான். அதற்குள் பொன்னம்மா அவளைத் தேற்றி குளிக்க வைத்து படுக்கை விரிப்புகளை மாற்றி வைத்திருக்க அமைதியாக அமர்ந்திருந்தவளைப் பார்த்ததும்தான் மனது சமன்பட்டது. அந்த மூன்று நாட்களும் முடிந்தவரை அவளை தோள்தாங்கினான். 

 

அன்றிலிருந்து இந்த பழக்கம். சரியாக நாள் நினைவில் வைத்து அவள் தேவைக்கும் முன்பே வாங்கி வைத்துவிடுவான். இங்கு மாற்றலாகி வந்ததும் ஜனனிக்கும் சேர்த்து வாங்கிதர, ஜனனி “தேங்க்ஸ்ண்ணா…தேங்க்ஸ்ண்ணா ”  என நெகிழவும்தான், தான் ஜனனியிடம் இன்னும் சரியாக நடந்திருக்கலாமோ என்ற எண்ணம் அவனை வாட்டியது.  அதிலிருந்து இருவருக்கும் இந்த தேவையை தீர்த்து வைப்பவன் அவனாகிப் போனான். 

 

இதையெல்லாம். நினைத்து கொண்டிருந்த மது, பவன் பரிசளித்த போட்டோவிடம் சென்றாள். ஆம், அதை பெரிதாக செய்து அறையினுள்  மாட்டியிருந்தான் அபிஜித். அருகில் சென்றவள் அதில் இருந்தவனைப் பார்த்து,  “எல்லாரையும் மயக்கறடா மாயக்காரா!” எனக் கொஞ்சி நிழலுக்கு முத்தத்தை அழுத்தமாகப் பதித்தாள். 

 

ஆனால் மது ஒன்றை அறியவில்லை. அவன் நேசித்ததை விட, ‘அவனை உயிராய் நேசித்த பாப்புவை’ அவன் மிகவும் மிஸ் செய்கிறான் என்று. 

 

ஆள் அதே மதுதான். ஆனால், ஒரு ஆணிடம் மனைவியா? மகளா? என்றால் முதலில் மகள்தான் என்பான். அதுதான் இயல்பு. 

 

அதேபோல முதலில் ஒரு குழந்தையாய் வந்து கள்ளமில்லா பாசத்துடன்  இவனை உயிர்க்கச்செய்த பாப்புவை  இழந்தது இன்னும் முனுமுனுவென்றுதான் இருந்தது அவனிற்கு. அது இயற்கையாக நடந்ததென்றால் பரவாயில்லை. ஆனால், மது அதை திட்டமிட்டு மறைத்திருக்கிறாள் என்று அறிந்தால்?  

 

அன்று மாலை நான்கு மணி அளவில் மதுவும் ஜனனியும்  ஒன்றாக ஜனனியின் அறையில் அமர்ந்து டிவியில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.  அதுவும் கீழே பாய்விரித்து அமர்ந்து  கொரிக்க குடிக்க என சகல பொருட்களுடன். இருவரும் அதில் லயித்திருக்க அபி வந்ததைக் கவனிக்கவில்லை. 

 

அப்போது முக்கியமான அதிரடி சீன் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. தீவிரவாதிகள் சூழ்ந்திருக்க ஹீரோ, ஹீரோயினையும் அவனது தாயையும் காப்பாற்ற  சண்டை போட்டுக் கொண்டிருந்தான். 

 

திடுமென ஜனனி,  “ஏன் அண்ணி அன்னைக்கு நமக்கும் இப்படிதான நடந்தது” என கேட்க,

 

அதிலேயே மூழ்கி படம் பார்த்துக்கொண்டிருந்த மது தன்னிலை மறந்து, “ம்… எனக்கு அப்படியே கை காலெல்லாம் நடுங்கிடுச்சு. அதுவும் அவன் கத்தியெல்லாம் கழுத்துல வைக்கவும் உயிரே போயிடுச்சு”  என  அன்றைய நினைவில் சிலிர்த்து, மீண்டும்  படம் பார்க்கலானாள். 

 

ஆனால் பின்னால் நின்றிருந்த அபிஜித்தோ குழம்பி,  பின் இறுகி மதுவை வெற்றுப்பார்வை பார்த்து  சென்றதை அறியவில்லை அவ்விருவரும். 

 

சிறிது நேரத்தில் “மது” என அபியின்  சத்தம் கேட்க,  “அச்சோ! உங்கண்ணன் வந்துட்டாரு போல, நான் போறேன்” என்றவாறு ஆவலுடன் அவனைக்காண அறைக்கு விரைந்திருந்தாள் மது .

 

அறைக்குள் செல்லவும் சட்டென்று அவளை இழுத்தவன் சுவரோடு சாய்த்துக் கொண்டான். அவள் “ஏன் இப்படி?” என விழிக்கவும், கண்களில் முத்தமிட்டவன் ஒரு விரல் கொண்டு அவள் நெற்றியில் இருந்து மெதுவாக ஊர்ந்து வர, “என்ன பண்றீங்க… இன்…”   

 

“ஷ்ஷ்ஷ்…” அவளை முடிக்கவிடாமல் தடை செய்தவன்,  தன் பணியைத் தொடர கரைந்துருகிக் கொண்டிருந்தாள் மது. 

 

அவள் கண்மூடி நிற்கவும் மெதுவாக காதோரம் மீசை உரச நின்று, “பாப்பு…” என அழைத்திருந்தான்.  அவள் பதில் சொல்லாமல் இருக்கவும் மீண்டும், “பாப்பு… நான் பேசறது கேக்குதா” என ஹஸ்கி வாய்ஸில் கேட்க, தன்னிலை மறந்து “ம்… ஜித்து” என்றிருந்தாள். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!