மிரட்டும் அமானுஷ்யம் 14

மிரட்டும் அமானுஷ்யம் 14

 

மிரட்டல் 14

 

நிஷாவை ஹாஸ்டலில் சென்று பார்ப்போம் என்ற சதீஷின் யோசனை, அவன் சொன்னதைப் போல அவ்வளவு எளிதானதாக இல்லை. ஏனெனில் அதே பெயரில் அங்கு நிறைய விடுதிகள் இருந்தன.

 

வேறு வழியில்லாமல் எல்லா ஹாஸ்டலுக்கும் சென்று பார்த்தனர். கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட ஹாஸ்டல்களில் விசாரித்தனர். சில இடங்களில் அங்கு தங்குபவர்களின் விவரங்களை சேமித்து வைத்திருந்தாலும், பத்து வருடங்களுக்கு முன்னிருந்த விபரங்கள் என்பதால் அதைத் தேட சற்று தாமதமாகியது. எனினும் பொறுமையாக விபரங்களை பார்த்தனர். 

 

அர்ஜுனினோ அவளைப் பார்த்துவிட மாட்டோமா என்ற தவிப்புடனே ஒவ்வொரு ஹாஸ்டலிற்கும் சென்றான். அவனின் தவிப்பு சிறிதும் குறையாமல், நண்பனின் வாழ்விற்காக வேண்டிக் கொண்டே சதீஷும் சென்றான்.

 

இடையில் ஒரு ஹோட்டலில் மதிய உணவை முடித்தவர்கள் மீண்டும் தங்கள் தேடுதல் வேட்டையைத் துவங்கினர். ஆனால் சற்று நேரத்திலேயே சோர்ந்து விட்டனர். பல மணி நேர விமானப் பயணம், அதைத் தொடர்ந்த டாக்சி பயணம் என்று அவர்களின் உடம்பிற்கு சிறிதும் ஓய்வில்லாமல் அலைந்ததால் இருவருமே சோர்ந்து தான் இருந்தனர். 

 

அர்ஜுனே சோர்ந்து விட்டான் என்றால்,  கோமாவிலிருந்து எழுந்த சதீஷிற்கு உடம்பு வலித்தது தான், ஆனால் அதை அர்ஜுனிடம் கூறாமல் சமாளித்தான்.

 

அப்போது தான் அர்ஜுனிற்கு நண்பனின் நிலை நினைவிற்கு வந்தது. “சாரி டா… உன்னையும் ரெஸ்ட்டே எடுக்க விடாம அலைய விடுறேன்…” என்று நண்பனிற்காக வருந்தினான்.

 

“ஹே எனக்கு மட்டுமா ரெஸ்ட் இல்ல… நீயும் தான் எங்கூட ட்ராவல் பண்ணிருக்க… உனக்கும் தான ரெஸ்ட் இல்ல விடு டா… இன்னும் ஒரே ஒரு ஹாஸ்டல் தான்… எனக்கென்னமோ நிஷா அங்க தான் இருப்பான்னு தோணுது…” என்றான் சதீஷ்.

 

“இல்ல டா இப்போ நமக்கு தேவை ரெஸ்ட்… இங்கயிருந்து நாம தங்கியிருக்க ஹோட்டல் தான் பக்கம்… அந்த ஹாஸ்டலுக்கு இன்னும் ரெண்டு கிலோமீட்டர் போகணும்… சோ இப்போ ஹோட்டல் போய் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் அந்த ஹாஸ்டல் போலாம்…” என்றான் அர்ஜுன்.

 

ஆனால் இவர்கள் அங்கு செல்லும்போது நிலைமை கைமீறி இருக்கும் என்று அர்ஜுனிற்கு தெரியவில்லை. மதியமே வந்திருக்கலாமோ… வந்திருந்தால் அவர்களைத் தடுத்திருக்கலாமோ என்று அப்போது வருந்தப் போவதை அறியவும் இல்லை.

 

********

ஜான்வி மற்றும் சாக்ஷியின் அறை… இரவு நடந்த நிகழ்விலிருந்து இன்னமும் அவர்கள் வெளிவரவில்லை. சரியான தூக்கம் இல்லாமல் இருவரும் சோர்ந்து போய் இருந்தனர். இருவரின் மனதிலும்  இங்கிருந்து செல்ல வேண்டும் என்பதே தோன்றியது.

 

காலையில் முதல் வேலையாக, ஆதர்ஷிற்கு அழைத்து “எப்போது கிளம்புகிறோம்…” என்று கேட்டாள் ஜான்வி.

 

இவர்கள் முன்பதிவு செய்த டாக்சி ஓட்டுனர், காலை வேளையில் காவலர்கள் ரோந்து பணி இருப்பதால், அங்கு செல்வது தாமதமாகும் என்று கூறியதால், மாலை 4 மணிக்கு கிளம்பலாம் என்று திட்டமிட்டனர்.

 

ஜான்வியிடம் அதைக் கூறியதும், ஒரு நொடி யோசித்தவள், பின் ‘சரி’ என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

 

“ஜானு, நேத்து இங்க நடந்தத ஆதர்ஷ் கிட்ட சொல்லிருக்கலாம்ல…” என்று கேட்டாள் சாக்ஷி.

 

“நிஷாவுக்கு நம்ம இங்கயிருக்குறது பிடிக்கல போல… அதான் இங்கேயிருந்து நம்மள விரட்டப் பாக்குறா… நம்ம இங்க போயிட்டா இந்த பிரச்சன இருக்காதுன்னு நெனைக்கிறேன்… இதுக்காக தேவையில்லாம அவங்களையும் எதுக்கு பதட்டப்பட வைக்கணும்…” 

 

அதன்பின்பு தோழிகள் இருவரும் சற்று கவனத்துடனே தங்கள் உடைமைகளை எடுத்து வைத்தனர். அவர்களின் உடைமையோடு நிஷாவின் செயினும் டைரியும் அவர்களின் பைக்குள் எடுத்து வைத்ததை இருவரும் கவனிக்க வில்லை.

 

********

 

அர்ஜுனும் சதீஷும் ஹோட்டலை அடைந்ததும், சற்று நேரம் தூங்கினர். பின் மூன்றரை மணியளவில் கிளம்ப ஆரம்பித்தனர்.

 

அர்ஜுன் கிளம்பிக் கொண்டிருக்க, சதீஷ் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து செய்தகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அர்ஜுன் கிளம்பியதும், சதீஷை அழைத்தான். 

 

“இதோ வரேன் டா…” என்ற சதீஷ், தொலைக்காட்சியை அணைக்க முயல, அதன் தொலையியக்கியோ வேலை செய்யவில்லை.

 

“இன்னும் என்ன டா பண்ணிட்டு இருக்க…” என்று கத்தினான் அர்ஜுன்.

 

“ஹே அர்ஜு டிவி ஆஃப் ஆகல டா…”என்றான் சதீஷ்.

 

“ப்ச் சுவிட்ச்ச ஆஃப் பண்ணிட்டு வரவேண்டியது தான…” என்ற அர்ஜுன் தானே சென்று அணைக்க முயன்றான்.

 

அப்போது தொலைக்காட்சியில், புனேயில் நிகழ்ந்த கலவரம் பற்றியும், தற்போது நிலவும் சூழ்நிலை பற்றியும் கூறிக் கொண்டிருந்தனர். அங்கே கண்ட காட்சியில், புருவம் சுருங்கிய அர்ஜுனின் சொடுக்கியை அணைக்கச் சென்ற கை அந்தரத்தில் நின்றது.

 

‘என்ன சீக்கிரம் வர சொல்லிட்டு இவன் என்ன டிவி முன்னாடி போஸ் குடுத்துட்டு இருக்கான்…’

 

“டேய் அர்ஜு…” என்று அவனின் தோளை தொட்டான் சதீஷ்.

 

அர்ஜுனின் பார்வையோ தொலைக்காட்சியிலிருந்து சற்றும் நகரவில்லை. அவன் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்ட சதீஷ், “அர்ஜு என்னாச்சு டா..?” என்று பதறினான்.

 

தொலைக்காட்சியில் ஒரு மனிதரைக் காட்டியவன், “சித்தப்பா டா…” என்றான்.

 

சதீஷும் அதில் சற்று அதிர்ந்தான். இங்கு இருவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியவர், தன் நண்பர் கங்காதருடன் புனே வீதியில் நடந்து கொண்டிருந்தார்.

 

“அர்ஜு… உனக்கு நல்லா தெரியுமா, அவரு உங்க சித்தப்பான்னு…”

 

“ஹ்ம்ம் சின்ன வயசுல எங்க அப்பா கூட க்ளோஸா இருந்தத விட சித்தப்பா கூட தான் டா ரொம்ப க்ளோஸ்… எனக்கு கண்டிப்பா தெரியும் டா அது என் சித்தப்பா தான்…” என்றான் உடைந்த குரலில்…

 

“உங்க சித்தப்பாவும் சித்தியும் அந்த வீட்டுல மாட்டி இறந்துட்டதா சொன்னாரே டா உங்க மாமா…”

 

“எங்கிட்ட ரெண்டு பேரும் ஆக்சிடென்ட்ல இறந்துட்டதா சொன்னாங்க டா… மே பீ மாமாக்கு, சித்தப்பா உயிரோட இருக்குறது தெரியாம இருந்திருக்கும்… ஆனா என் சந்தேகமெல்லாம் சித்தப்பா ஏன் இப்போ வரைக்கும் எங்கள வந்து பார்க்கல…” 

 

“விடு அர்ஜு… அதான் இப்போ உங்க சித்தப்பா இங்க தான் இருக்காருன்னு தெரிஞ்சுடுச்சுல… ஃபர்ஸ்ட் நிஷாவ கண்டுபிடிச்சுட்டு, உங்க சித்தப்பாவையும் கூட்டிட்டு ஊருக்கு போலாம்…” என்று அர்ஜுனை சமாதானப் படுத்தியவன் அவனுடன் சேர்ந்து நிஷாவைக் தேடும் பயணத்தை மீண்டும் ஆரம்பித்தான்.

 

**********

 

மாலை மணி 4.15… ஆதர்ஷும்  விஷ்வாவும், ஜான்வி – சாக்ஷி ஹாஸ்டல் முன்பு,  டாக்சியில் காத்திருந்தனர்.

 

“ச்சே இந்த பொண்ணுங்க கிட்ட காலைல 4 மணின்னு சொல்லிருக்கணும் டா மச்சான். அப்போ தான் இவங்க மேக்-அப் முடிச்சுட்டு வர கரெக்ட்டா இருந்துருக்கும்…” என்று விஷ்வா கூறிக் கொண்டிருக்கையில், அவன் பின்மண்டையில் தன் கைப்பையால் அடித்தாள் சாக்ஷி.

 

“ஒரு கால் மணி நேரம் லேட்டானதுக்கு எங்கள கலாய்க்குறியா… உனக்கெல்லாம் ரெண்டு மணி நேரம் மேக்-அப் போடுற பொண்ணு தான் பொண்டாட்டியா வருவா…” என்றாள் சாக்ஷி.

 

“ஹாஹா நீ குடுக்குற சாபமெல்லாம் பலிக்காது…”

 

இவ்வாறு ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தது அவர்களின் பயணம்… பயணம் முடியும்போது இதே சந்தோஷம் அவர்களிடம் நீடிக்குமா…

 

இவர்கள் நால்வரும் அங்கிருந்து கிளம்புவதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நிஷாவிற்கு ஒரு புறம் அவர்களை நினைத்து கவலை இருந்தாலும், அர்ஜூனைக் காக்க (!!!) வேண்டும் என்று தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.

 

அவர்களின் டாக்சி அங்கிருந்து செல்லவும், அர்ஜுன் – சதீஷின் டாக்சி அந்த ஹாஸ்டல் முன்பு வரவும் சரியாக இருந்தது.

 

அந்த டாக்சியிலிருந்து அர்ஜுன் இறங்கியதைக் கண்ட நிஷாவிற்கு உள்ளம் கலங்கியது… ஆம் அவள் ஆவி தான்… மரித்து விட்டவள் தான்… ஆனால் உடல் தானே அழிந்து போனது… அவளின் உணர்வுகள், அவனிற்கான உணர்வுகள் உயிரோடு தானே இருக்கின்றன… கண்களில் கண்ணீர் வரவில்லை என்றாலும், அவள் உள்ளம் அழுது கொண்டு தானே இருக்கிறது…

 

அவனைக் கண்டதில் தான் இருக்கும் சூழ்நிலையை மறந்தாள்… தன் நிலைப்பாட்டை மறந்தாள்… தன்னையே மறந்தாள்…

 

அதற்குள் ஹாஸ்டலினுள்ளே வந்த அர்ஜுனும் சதீஷும், ஹாஸ்டல் வார்டனிடம் நிஷாவைப் பற்றி விசாரித்தனர்.

 

“மேடம், இந்த ஹாஸ்டல்ல நிஷான்னு யாராவது இருக்காங்களா… இப்போ இல்லைனாலும் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்துருக்கங்களா…” என்று சற்றே பதட்டத்துடன் வினவினான் அர்ஜுன்.

 

அவர்கள் நிஷாவைக் கேட்டதும், சற்று வெளிறிய வார்டனின் கைகள் தானாக உயர்ந்து மாடியைக் காட்ட, வாயோ, “ஃபோர்த் ஃப்ளோர்” என்றது.

 

அதில் மகிழ்ந்த அர்ஜுன், சற்றும் தாமதிக்காமல் மாடியை நோக்கி ஓட, அவன் பின்னாடியே சென்றான் சதீஷ்.

 

‘பெண்கள் விடுதியினுள், ஆண்கள் செல்லக் கூடாது…’ என்று அவர்களை தடுக்கக் கூட தோன்றாமல் அதிர்சியில் இருந்தார் அந்த வார்டன்.

 

நான்காம் தளத்திற்கு சென்றவர்கள் அங்கு அனைத்து அறைகளும் பூட்டியிருப்பதைக் கண்டவர்கள், குழப்பத்துடன் நின்றனர். அப்போது மொட்டை மாடி கதவு திறக்கும் சத்தம் கேட்டு அங்கு பார்த்தனர். அர்ஜுன் ஏதோ உந்த, மொட்டைமாடியை நோக்கி நடந்தான்.

 

சதீஷிற்கு இங்கு வந்ததிலிருந்து குழப்பமாக இருந்தது. நிஷாவைப் பற்றி பேசியதும், வார்டனின் அதிர்ச்சியை அர்ஜுன் கவனிக்காமல் போனாலும், சதீஷ் கவனித்திருந்தான்.  அதே குழப்பத்துடன் அர்ஜுனை பின்தொடர்ந்தான். மொட்டைமாடிக்குச் சென்ற அர்ஜுன் அங்கு யாரேனும் இருக்கிறார்களா என்று தன் பார்வையை சுழற்றிப் பார்த்தான்.

 

அங்கு சிலுசிலுவென காற்று வீச, திரும்பி நின்றிருந்தவளின் துப்பட்டா அர்ஜுனின் முகத்தில் மோதி, அவளின் இருப்பைக் காட்டியது.

 

“நிஷா…” என்று அந்த வார்த்தைக்கும் வலிக்காதவாறு மென்மையாக அழைத்தான்.

 

மெல்ல திரும்பினாள் அவள்… அவளின் மதிமுகம் கண்டவனின் மூளை நரம்புகள் அவளைப் பற்றிய நினைவுகளை நினைவு பெட்டகத்தின் அடியாழத்திலிருந்து தோண்டி எடுத்து அவனின் தொலைந்த நினைவுகளை மீட்டெடுக்க முயற்சித்தது.

 

மூளைக்குள் நரம்புகள் வெடிப்பதை போன்ற வலியை உணர்ந்தவன் சற்று தடுமாற, அவனை தாங்கிக் கொண்டான் சதீஷ். தன்னவனின் வலியைப் பார்க்க மட்டுமே முடிந்தது நிஷாவினால். அதையும் கவனித்துக் கொண்டான் சதீஷ்.

 

அர்ஜுன் வலியைத் தாங்க முடியாமல் மயக்க நிலைக்குச் சென்றான். அதைக் கண்டு பதறிய சதீஷ், அவனை அழைத்துக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தான்.

 

அங்கிருந்த மருத்துவரிடம் அவனின் நிலையை விளங்கினான் சதீஷ்.

 

“மிஸ்டர். சதீஷ், அவரோட ரிப்போர்ட்ஸ் இல்லாம நான் எதுவும் கன்ஃபார்மா சொல்ல முடியாது… ஆனா இது மாதிரி நினைவு திரும்புறப்போ தலைவலி உண்டாகுறது சகஜம் தான். அவங்க நல்லா தூங்கி எழுந்தா தலைவலி குறைஞ்சுடும்… அவரு இப்போ தூங்கிட்டு இருக்காரு… முழிச்சதும் பார்க்கலாம்…” என்றார் அந்த மருத்துவர்.

 

ஐந்து மணி நேரம் கழித்து எழுந்த அர்ஜுன் முதலில் தேடியது நிஷாவை தான். நிஷா அங்கில்லாததைக் கண்ட அர்ஜுன் மெல்ல எழுந்தவன், “சதீஷ், நிஷா எங்க..?” என்றான்.

 

அவன் எழுவதைக் கண்டு பதறிய சதீஷ், “அர்ஜு, ஃபர்ஸ்ட் உட்காரு டா…” என்று அவனைத் தாங்கினான்.

 

அப்போது அறைக்குள் நுழைந்த நிஷாவைக் கண்டு, “நிஷு…” என்றான் காதலாக.

 

அர்ஜுனிற்கு முழுதாக நினைவு திரும்பவில்லை என்றாலும், நிஷாவும் அவர்களின் காதலும் நினைவிற்கு வந்தது. 

 

அவனின் ‘நிஷு’ என்ற அழைப்பில் அவனிடம் சரணடைய முடியாத தன் நிலையை எண்ணி நிஷாவின் ஆன்மா கதறியது. அப்போது தான் இங்கிருக்கும் சூழ்நிலையை நினைவில் நிறுத்தினாள் நிஷா.

 

‘இல்ல… இப்போ அஜு இங்க இருக்கக் கூடாது… ‘அது’க்கு அஜு இங்க இருக்குறது தெரிஞ்சா, என் உயிர விட்டு நான் காப்பாத்துனக்கு அர்த்தமே இல்லாம போயிடும்… அஜுவ இங்கிருந்து அனுப்பனும்…’ என்று எண்ணினாள்.

 

“அஜு… இப்போ எதுக்கு புனே வந்தீங்க…” சற்று கறாராகவே கேட்டாள் நிஷா.

 

அர்ஜுனோ அவளின் குரல் வேறுபாட்டை கவனிக்கும் நிலையிலேயே இல்லை. “நிஷு… இத்தன வருஷம் உன் நினைவே இல்லாம இருந்துருக்கிறேன்… ரொம்ப சாரி நிஷு… நான் இல்லாம நீ எவ்ளோ கஷ்டப்பட்டிருப்ப… இனிமே உன்ன தனியா விடமாட்டேன் நிஷு… எங்கூட வந்துடு நிஷு… நாம இங்கயிருக்க வேணாம்… சிங்கப்பூர் போயிடலாம்…” என்று புலம்பியவன், அவளருகே சென்று அவளின் கையைப் பற்ற முயன்றான்.

 

தன்னவன் தன்னிடம் மன்னிப்பை யாசிப்பதைக் கண்டவள் உருகித் தான் போனாள். ஆனால் இனி அவளால் அவனுடன் செல்ல இயலாதே. அதை எப்படி அவனிற்கு கூற என்று யோசித்துக் கொண்டிருந்தவள், சுதாரிக்கும் முன்னே, அர்ஜுன் அவளின் கரத்தை பற்ற முயல, அவனின் கரம் அவளின் கரத்தை ஊடுருவிச் சென்றதை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

 

சதீஷ் இதை யூகித்திருந்ததால், அவன் கண்கள் சோகத்தையும் வலியையுமே பிரதிபலித்தது.

 

“நிஷு….” – அர்ஜுன் அதிர்ச்சியுடன் நிஷாவைக் காண, “புரிஞ்சுக்கோங்க அஜு… இது தான் உண்மை… என்னால உங்கக்கூட எங்கயும் வர முடியாது… நீங்க இங்கயிருந்து போயிடுங்க…” என்றாள் நிஷா.

 

*******

 

நால்வர் கூட்டணி, புனே நகரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். சிலுசிலுவென காற்று வீச, இரவு தூங்காததால் ஏற்பட்ட சோர்வினால், ஜான்வியும் சாக்ஷியும் உறக்கத்திற்குச் சென்றனர்.

 

ஆதர்ஷும் விஷ்வாவும் மென்குரலில் பேசியபடியே வந்தனர். அப்போது அந்த டாக்சி சடன் ப்ரேக்கோடு குலுங்கியபடி நின்றது.

 

அதில் முழித்த தோழிகள் இருவரும், ஆதர்ஷ் மற்றும் விஷ்வாவைப் பார்க்க, அவர்கள் ஓட்டுனரிடம், “என்ன பிரச்சனை…” என்று வினவினர்.

 

அவரோ, “ஊருக்குள்ள வந்துட்டோம் சார். இங்க எங்க போகணும்னு சொன்னீங்கனா அங்க உங்கள இறக்கிவிடுவேன்…” என்று ஹிந்தியில் கூறினார்.

 

அவர்களுக்கு எங்கு சென்று தங்குவது என்று தெரியவில்லை. இதுவே நகரம் என்றால் ஏதாவது ஹோட்டலில் தங்கலாம். இந்த இடத்தைப் பார்த்தால், அந்த வசதி இருப்பது போன்று தெரியவில்லை. 

 

“டேய் ட்ரிப் பிளான் பண்றப்போ எங்க ஸ்டே பண்றதுன்னு பிளான் பண்ண வேணாமா…” என்று விஷ்வாவின் காதில் மட்டும் விழுமாறு அவனைத் திட்டினான்.

 

“இப்போ எதுக்கு இவன் நம்மள திட்டுறான்… இவன் தான பிளான் பண்ணான்…” என்று குழம்பியபடி அவனைப் பார்த்தான் விஷ்வா.

 

இவர்கள் முணுமுணுப்பதைக் கண்ட ஓட்டுனர், “இங்க பஞ்சாயத்து தலைவர் கிட்ட நீங்க வந்த காரணத்த சொன்னா, அவரே உங்களுக்கு தங்க இடம் ஏற்பாடு பண்ணி குடுப்பாரு…” என்றார்.

 

அவர்களுக்கும் வேறு வழியில்லாததால், அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்கே அழைத்துச் செல்ல பணித்தனர்.

 

ஓட்டுனரும் வழியில் செல்வோரிடம் வழி கேட்டு, அவர்களை பஞ்சாயத்து தலைவரின் வீட்டில் இறக்கி விட்டார்.

 

இவர்கள் ஊருக்குள் நுழைந்த விஷயம், இவர்களுக்கு முன்பாகவே அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவரான பிபுலின் கவனத்திற்கு வந்து விட்டது. அவர்களை யோசைனையுடனே வரவேற்றார் பிபுல்.

 

நால்வரில் சாக்ஷிக்கு தான் ஹிந்தி நன்றாக பேசத் தெரியும் என்பதால் அவள் முன்சென்று, “ஐயா, உங்க ஊர சுத்திப் பார்க்க வந்துருக்கோம்… இங்க எங்க தங்குறதுன்னு எங்களுக்கு தெரியல… ரெண்டு நாள் நாங்க தங்க ஒரு இடம் ஏற்பாடு பண்ணி குடுத்தீங்கன்னா எங்களுக்கு வசதியா இருக்கும்… தங்குறதுக்கான செலவ உங்களுக்கு நாங்க கொடுத்துடுவோம்…” என்றாள்.

 

அவர்களிடம் ஒன்றும் கூறாமல், கரணை அழைத்தவர், “நம்ம தோட்ட வீட்ட சுத்தப்படுத்தி, அங்க இவங்க தங்க ஏற்பாடு பண்ணி குடு…” என்றார்.

 

பின் சாக்ஷியிடம், “இந்த ஊருக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு… அது என்னன்னு கரண் சொல்லுவான்… இங்க தங்கியிருக்குறப்போ நீங்களும் அந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான் நடக்கணும்…” என்றார்.

 

சாக்ஷியும், “ரொம்ப நன்றி ஐயா… கண்டிப்பா உங்க ஊர் கட்டுப்பாடுகள நாங்க மீற மாட்டோம்…” என்று வாக்குறுதி கொடுத்தாள். அந்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகப் போவதையோ, அதனால் அவர்கள் அனுபவிக்கப் போவதையோ அப்போது அவள் அறிய வில்லை.

 

பிபுல் கூறியதை, தன் நண்பர்களுக்கும் மொழிபெயர்த்தாள். பின் அனைவரும் பிபுலிடம் விடைபெற்று கரணுடன் சென்றனர்.

 

கரண் செல்லும் வழியிலேயே, அந்த வீட்டைப் பற்றியும் அதனால் அங்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைப் பற்றியும் கூறினான். புது ஆட்கள் என்பதால், முழுதாகக் கூறாமல், அது ‘பேய் வீடு’ என்பதை மட்டும் கூறியிருந்தான்.

 

அதற்குள் அவர்கள் தங்கப் போகும் தோட்ட வீடு வந்துவிட்டது. ஏற்கனவே சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவதால், அதை திறந்து விட்டவன், “உங்களுக்கான சாப்பாடு நேரா நேரத்துக்கு வந்துடும்… உங்களுக்கு எங்கயாவது போகணும்னா இந்த தன்வீர கூட்டிட்டு போங்க…” என்று அங்கு வாட்டசாட்டமாக இருந்தவனைக் காட்டினான் கரண்.

 

வேறு ஏதாவது உதவி வேண்டுமானாலும் கேட்குமாறு கூறி அவர்களிடமிருந்து விடைப்பெற்றான் கரண்.

 

“ச்சே நான் கூட ஃபர்ஸ்ட் அந்த பஞ்சாயத்து தலைவர் பார்வைய பார்த்ததும் என்னமோன்னு நெனச்சேன்… பட் நல்லா ஹெல்ப் பண்றாங்கள… இருக்க வீடு, சாப்பிட சாப்பாடு… அது மட்டுமில்லாம ஊர் சுத்தி பார்க்க கைட்… இதுக்கு மேல என்ன வேணும்…” என்றான் விஷ்வா.

 

தோழிகள் இருவரும் ஒரு அறையை பகிர்ந்து கொள்வதாகக் கூறி உள்ளே சென்றனர்.

 

விஷ்வா மற்றோரு அறைக்குள் செல்ல முற்பட, அவனின் முதுகிலிருந்த பையை பிடித்து பின்னால் இழுத்த ஆதர்ஷ், “திரும்பவும் அந்த பேய் வீட்டுக்கு போகலாம்னு பிளான் போட்ட… அவ்ளோ தான்…” என்று மிரட்டி விட்டு உள்ளே சென்றான்.

 

‘அடேய் நான் எங்க டா பிளான் போட்டேன்… பிளான் போட்டது எல்லாம் இவன்… இப்போ வந்து என்ன சொல்லிட்டு இருக்கான்…’ என்று மனதிற்குள் புலம்பியவாறு உள்ளே சென்றான்.

 

********

 

பிபுலின் வீட்டில்… பிபுலின் முடிவைக் கண்டு அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார் பிபுலின் மனைவி.

 

இந்த மூன்று மாதங்களில், வெளியிலிருந்து வருபவர்களை, அவ்வளவாக ஊருக்குள் தங்க வைப்பதில்லை. அப்படியே தங்குவதற்கு சம்மதித்தாலும், அவர்கள் வந்த நோக்கத்தை தீர விசாரித்த பிறகே அவர்கள் தங்குவதற்கு இடம் ஒதுக்கி கொடுப்பார், பிபுல்.

 

ஆனால் இன்றோ, அவர்கள் வந்து கேட்டதும் உடனே சம்மதித்தை எண்ணியே ஆச்சரியப்பட்டார் அவர். தன் சந்தேகத்தை கணவரிடமும் வினவினார்.

 

ஒரு பெருமூச்சை விட்ட பிபுல், “எல்லாம் இந்த ஊரு நன்மைக்காக தான் ஷர்மி… பத்து வருஷத்துக்கு முன்னாடி அந்த பசங்க இங்க வந்திருந்தாங்க… அவங்களோட நம்ம கிராமத்த சேர்ந்த பேராசை பிடிச்சவங்களையும் காவு வாங்கிட்டு அடங்குச்சு அந்த வீடு… இப்போவும் அதே மாதிரி இவங்க வந்திருக்காங்க… ஹ்ம்ம் விதி படி நடக்கும்…” என்று விட்டு உள்ளே சென்றார்.

 

*******

 

அறைக்குள் வந்த ஜான்வியும் சாக்ஷியும் தங்களை சுத்தப் படுத்திக் கொள்ள தங்கள் பையிலிருந்து துண்டை எடுக்க முயல அதனுடன் சேர்ந்து நிஷாவின் டைரியும் வெளியே விழுந்து, பக்கங்கள் புரண்டன.

 

அதைக் கண்ட சாக்ஷி பயத்துடன், “ஜானு, இது நிஷாவோட டைரி தான…” என்றாள்.

 

ஜான்வி எதுவும் கூறாமல் அதை எடுத்தாள். அப்போது அந்த பக்கங்கள் எழுத்துக்களால் நிரம்பியிருந்ததைக் கண்டு இருவருமே அதிர்ந்தனர்.

 

மெல்ல பக்கங்களை புரட்டினாள் ஜான்வி. “இத படிச்சா நிஷா எதுக்கு நம்மள விரட்டுனான்னு தெரிஞ்சுக்க முடியும்னு நெனைக்கிறேன் சாக்ஷி…”

 

இருவரும் கட்டிலில் அமர்ந்து நிஷாவின் டைரியை படிக்கத் துவங்கினர்.

 

********

 

“நிஷா, உனக்கு… நீ… எப்படி இப்படி ஆச்சுன்னு சொல்லு…” என்றான் அர்ஜுன். அவனிற்கு இன்னமும் தன் ‘நிஷு’ உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை.

 

அவள் எதுவும் சொல்ல மறுத்தாள்.

 

“நீ உன் ஊருக்கு போயிருக்கேன்னு தான எங்கிட்ட சொன்ன… அப்பறம் என்னாச்சு… ப்ளீஸ் நிஷு சொல்லு…” அவளின் கைகளை மீண்டும் பற்ற முயன்று தோற்றவனின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

 

அவனின் கண்ணீர் அவளை வாட்டினாலும் வாய் திறக்க மறுத்தாள்.

 

அப்போது ஏதோ யோசித்த அர்ஜுன், “நான் இப்போ உயிரோட இருக்குறதுக்கு காரணம் உன்னோட இந்த நிலைமையா நிஷு…” என்று குரல் நடுங்க கேட்டான் அர்ஜுன்.

 

அவளின் மௌனமே அது தான் உண்மை எனக் கூறியது அர்ஜுனிற்கு.

 

அதை அறிந்ததும் தொய்ந்து போய் கீழே அமர்ந்தவன், “ஏன் நிஷு…” என்று மட்டும் கேட்டான்.

 

“ஏன்னா நீங்க என் உயிருக்கும் மேல அஜு… உங்களுக்காக என் உயிர குடுப்பேன்னு சொன்னது வெறும் வாய் வார்த்தை இல்ல…” என்று கூறியவள் அவனருகில் அமர்ந்தாள்.

 

இவர்களின் காதலைக் கண்ட சதீஷின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. நினைவே இல்லாத போதும் காதலிக்காக துடித்தவனின் காதலைக் கண்டு வியந்திருந்த சதீஷ், இப்போது அதற்கும் ஒரு படி மேலே, காதலனுக்காக உயிரையும் தந்தவளின் காதலில் சிந்தை மறந்து நின்றிருந்தான். இவர்களின் காதலைப் பிரித்த கடவுளை மனதில் சபித்துக் கொண்டிருந்தான்.

 

“என்னாச்சுன்னு சொல்லு நிஷு…? நீ எப்படி ‘அது’ கிட்ட மாட்டுன…?”

 

ஒரு பெருமூச்சுடன் கூறத் துவங்கினாள். “உங்கள பத்தின நியூஸ் டிவில பார்த்ததும், நான் பதறிட்டேன், அஜு… எங்க மாமா ஊரு அந்த ஊருக்கு பக்கத்துலங்கிறதால அந்த வீட்ட பத்தி நானும் கேள்வி பட்டிருந்தேன்… அங்க தான் நீங்க போகப் போறீங்கன்னு முன்னாடியே தெரிஞ்சுருந்தா கண்டிப்பா உங்கள தடுத்துருப்பேன்… டிவில நீங்க இறந்துட்டதா சொன்னாங்க… ஆனா என் மனசு நீங்க உயிரோட இருக்கிறதா அடிச்சு சொல்லுச்சு… அதான் யாருக்கிட்டயும்  சொல்லாம ராத்திரி நேரம், அந்த வீட்டுக்கு போனேன்…”

 

“அப்படி போனப்போ தான் அந்த ராஸ்கல் அம்ரத் எங்கிட்ட தப்பா நடக்க ட்ரை பண்ணான். அவன் குடிச்சுருந்ததால அவன கீழ தள்ளவும் மயங்கிட்டான்… ஒரு வழியா அந்த வீடு இருந்த இடத்துக்கு போனேன்… நான் அங்க போனப்போ வீடு இல்ல… சுத்திலும் பார்த்தேன்… பயமா இருந்தாலும், உங்கள காப்பத்தணும்னு மனசுல சொல்லிட்டே இருந்தேன்…”

 

“அப்போ, எனக்கு பின்னாடி யாரோ இருந்த மாதிரி இருந்துச்சு…”

 

*********

 

பத்து வருடங்களுக்கு முன்…

 

நிஷா அந்த வீடு இருந்தாக சொல்லப்பட்ட இடத்தில் நின்று, சுற்றிலும் தேடிக் கொண்டிருந்தாள். ‘எதைத் தேடுகிறோம்…’ என்று தெரியாமலேயே தேடிக் கொண்டிருந்தாள். தன்னவனை உயிருடன் கண்டுவிட மாட்டாளா என்பது மட்டுமே அவளின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. 

 

அப்போது அவளின் பின்னே யாரோ நிற்பது போல உணர்ந்தாள். அந்த ‘யாரோ’வின்  மூச்சுக் காற்று பலமாக அவளின் முதுகில் படுவதை உணர்ந்தவள், திரும்பவும் அந்த அம்ரத் வந்து விட்டானோ என்று பயந்தபடி திரும்பினாள்.

 

ஆனால் அங்கு இருந்ததோ ஒரு பெண். அவளின் கண்கள் கூர்மையாக தன்னை அளவிடுவதைக் கண்ட நிஷா சற்று வித்தியாசமாக உணர்ந்தாள்.

 

அந்த பெண்ணோ அவளை அளவிட்டவாறே, “யார் நீ..? இந்த நேரத்துல இங்க என்ன பண்ற..?” என்று கர்ஜித்தாள்.

 

அவளின் கோபத்தின் அளவைக் கண்டு நிஷாவிற்கு சிறிது பயம் ஏற்பட்டது.

 

“நா…  என் அஜுவ தேடி வந்தேன்…” என்று திக்கியவாறு கூறினாள் நிஷா.

 

அப்பெண்ணோ புருவம் சுருக்கி யோசித்தவள், “ஓ நேத்து அந்த வீட்டுக்குள்ள போனானே அந்த பையனா…” என்று நிஷாவின் பின்னே கையை நீட்ட, அங்கு பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

 

சற்று முன்பு தேடியபோதும் ஒன்றும் இல்லாமல் வெற்று நிலமாக இருந்த இடத்தில் இப்போது கம்பீரமாக உயர்ந்து நின்றது, அந்த மரவீடு.

 

“இத்…இது… எப்ப..எப்படி…” என்று திக்கியவள் பின்னே திரும்பிப் பார்க்க, அந்த பெண் நின்ற இடம் வெறுமையாக இருந்தது.

 

பயந்து கொண்டே சுற்றிலும் தன் பார்வையை சுழற்றினாள். காலையில் பசுமையாய் தெரியும் வயல் கூட இருட்டில்  அமானுஷ்யமாக தெரியுமாம்… நிஷா நின்றிருக்கும் இடமோ, பகல் பொழுதிலேயே பயங்கரமானதாகக் காட்சியளிக்கும். இப்போது இரவின் மடியில், அங்கு அசையும் ஒரு இலை கூட அவளை மிரட்டியது.

 

பயத்தில் எச்சிலை விழுங்கியவள், மீண்டும் வீடிருக்கும் திசை திரும்ப, அவள் முகத்தின் நேரே கூர் பார்வையுடன் நின்றிருந்தாள் அப்பெண். அவளின் ஊசி  பார்வையின், நிஷாவின் உள்ளம் நடுங்க ஆரம்பித்தது.

 

“நீ அவன காப்பாத்த போறீயா…?” என்றாள் அப்பெண் கிண்டலாக.

 

தன்னவன் நினைவெழுந்ததும், பயம் சற்று மட்டுப்பட்டது. உறுதியுடன் ‘ஆம்’ என்றாள். அவனிற்காக எதையும் எதிர்கொள்ளும் நிலைக்கு மனதை தயார் படுத்தினாள்.

 

ஆம் தயார் படுத்தினாள் தான்… தான் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற யூகம் அவளிற்கு இருந்தது. இந்த அகால வேளையில் ‘அதை’த் தவிர யார் இங்கு அலைய போகிறார்கள். அவளின் முடிவு அதன் கையில் என்று நன்கு விளங்கியது நிஷாவிற்கு. ஆனால் சாவதற்கு முன்பாக தன்னவனை எப்படியாவது காக்க வேண்டும் என்று நினைத்தாள். 

 

இப்போதுவரை அதனை நேராக பார்க்காமல் தவிர்த்து வந்தவள், தன் மனதில் மேற்கொண்ட முடிவின் விளைவால் அதன் கண்களைப் பார்த்து, “நான் என் அஜுவ என் உயிர குடுத்தாவது காப்பாத்துவேன்…” என்றாள்.

 

“ஓ உயிர குடுத்து காப்பாத்துற அளவுக்கு தெய்வீக காதலா இவன் மேல…” என்று அந்த வீட்டிற்குள்ளே கீழே விழுந்து கிடைந்தவனைக் காட்டியது.

 

அவனைப் பார்த்ததும், “அஜு…” என்று கத்தியபடி அவ்வீட்டிற்குள் நுழைய முற்பட, அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ‘அது’ அவளைத் தாண்டி சென்று அவனைத் தூக்கியபடி அந்தரத்தில் பறந்தது.

 

நிஷாவின் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சியைக் கண்ட ‘அது’ இடியென சிரித்தது. அதன் சிரிப்பில் அவ்வீடே அதிர்ந்தது.

 

“ச்சு… இவன தான நீ காப்பாத்தப் போறன்னு சொன்ன…” என்று சிரிப்புடன் கூறி, அவன் கழுத்தில் தன் கூரிய நகத்தை வைத்து லேசாக கீரியது.

 

“நோ… ப்ளீஸ் அவன விட்டுடு…” என்று கெஞ்சினாள் நிஷா.

 

“விடுறதுக்காகவா இவ்ளோ நாள் காத்திருந்தேன்… பத்து வருஷமா இவனுக்காக காத்திட்டு இருக்கேன்… அன்னிக்கே இவன என்னால கொன்னுருக்க முடியும்… ஆனா இவ்ளோ நாள் ஏன் காத்திருந்தேன் தெரியுமா… வாழ்க்கைல எல்லாம் கெடைக்கும் போது, அத அனுபவிக்க முடியாம போற வலிய அவங்க உணரனும்..” என்று கூறியதன் முகம் கோரமாக மாறியது.

 

கண்கள் இருக்க வேண்டிய ஓட்டை வெற்றிடமாக இருக்க, வாய் கிழிந்து, தோல் சுருங்கி, உடம்பின் பல இடங்கள் அழுகி என்று பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது.

 

அதன் உருவம் மாற ஆரம்பித்ததுமே, அதை பார்க்க முடியாமல் கண்களை முடிய நிஷா, தன்னருகில் துர்நாற்றத்தை உணர்ந்தாள். அது தன்னருகே இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாலும், கண்களைத் திறக்க வில்லை.

 

மெல்ல மெல்ல அந்த துர்நாற்றம் குறையத் துவங்கியது. சில நொடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்தவள் குழம்பினாள். அவளைச் சுற்றி அனைத்தும் இருட்டாக இருந்தது. எங்கிருக்கிறாள், எதன் மீது  நிற்கிறாள் என்பது கூடத் தெரியவில்லை.

 

அப்போது சிறு வெளிச்சம் தெரிந்தது. அதன் மூலம் தான் இருக்குமிடம் அவ்வீட்டின் அடித்தளம் என்பதை அறிந்து கொண்டாள்.

 

முதலில் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று எண்ணியவள், நடக்க முற்பட, அவளின் கால் எதிலோ மாட்டியிருப்பதை உணர்ந்தாள். அது என்னவென்று பார்க்க வெளிச்சம் போதவில்லை. எனவே கீழே குனிந்து தன் காலை அதிலிருந்து விடுவிக்க முயன்றாள். அப்படி முயற்சிக்கும் போது அவளின் கையோடு ‘அது’ வரவே, அதை எடுத்தவள் கீற்றாக ஒளிரும் வெளிச்சத்தில் பார்க்க, அது சமீபத்தில் இறந்த ஒருவரின் கை என்று தெரிந்தது.

 

அதைக் கண்டு பயந்தவள், அதை கீழே வீசினாள். அப்போது அந்த அறையில் இன்னும் வெளிச்சம் வர, அவள் நின்றிருந்த இடத்தை கண்டவளுக்கு தலை சுற்றியது. எத்தனை பேர் என்று கணக்கிட முடியாதவாறு உடல் உறுப்புகள் தனி தனியாக அங்கு இருந்தன.

 

அதைக் கண்டு அலறியடித்து அந்த அறையிலிருந்து வெளி வந்தாள். ஓடி வந்தவள் எதன் மீதோ மோதிக் கொண்டாள்.

 

அங்கு தலையிலிருந்து வழியும் இரத்தத்துடன் நின்றிருந்தான் அர்ஜுன். அவனைக் கண்டவள், “அஜு…” என்றாள் கண்ணீருடன்.

 

“இங்க இருக்க வேணாம் நிஷா…” என்று அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் அர்ஜுன்.

 

வேகவேகமாக அந்த வீட்டை விட்டு வெளியே வந்தனர் இருவரும். சிறிது தூரம் வந்த பிறகே, சற்று நிதானித்தான் அர்ஜுன்.

 

“நிஷு உனக்கு ஒண்ணுமில்லையே…” என்றான் அர்ஜுன்.

 

சற்று நேரத்திற்கு முன்பு தான் அனுபவித்த வேதனைகள் எல்லாம் அந்த நொடி, அவன் குரலைக் கேட்ட நொடி, அவள் நினைவிலிருந்து மறைந்து தான் போனது.

 

“ஒண்ணுமில்ல அஜு… உங்களுக்கு தான் ரத்தம் வருது…” என்று அதைத் துடைத்தாள்.

 

ஆனால் நிஷாவிற்கு தான் நம்பமுடியவில்லை. “அஜு… நாம அங்கிருந்து வந்தத, என்னால நம்பவே முடியல…” என்று கூறி அவனை அணைத்துக் கொண்டாள்.

 

“ஏன் நிஷு நம்ப முடியல…” – அந்த குரல் அர்ஜுனுடையது அல்ல…

 

அதிர்ச்சியில் அவனிடமிருந்து விலக, தன் கிழிந்த வாய் மேலும் விரிய சிரிப்புடன் இருந்தது ‘அது’.

 

சுற்றி பார்க்க, இன்னும் அந்த வீட்டிற்குள் தான் இருந்தாள்.

 

‘அதை’ப் பார்த்தபடியே பின்னே சென்றாள். அவள் செல்வதை மர்ம சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது அது.

 

பின் அதனிடமிருந்து தப்பிக்க அந்த வீட்டை சுற்றி ஓடிக் கொண்டிருந்தாள். கண்களில் அர்ஜுன் எங்காவது தென்படுகிறானா என்று பார்த்தவாறே…

 

இப்படியே அரை மணி நேரம் கழிய, அதற்கு மேல் ஓட தெம்பில்லாமல், கீழே சரிந்து அமர்ந்து விட்டாள்.

 

“என்ன அவ்ளோ தானா…?” என்று காதருகே கேட்ட குரலில் துள்ளி எழுந்தாள். ஆனால் அவளருகே யாரும் இல்லை.

 

“ப்ளீஸ் என்ன கொன்னுடு… இப்படி கொஞ்சம் கொஞ்சமா பயமுறுத்தி சாகடிக்காத…” என்று அழுகையுடன் கெஞ்சினாள்.

 

“நீ எப்போ சாகணும்ங்கிறத நான் தான் முடிவு பண்ணனும்… ஹாஹா…” மீண்டும் கன்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது.

 

இப்படியே அலைக்கழித்து அவளின் சக்தி முழுவதும் வற்றிய பின்பே, அவளின் முன் தோன்றியது.

 

“என்ன இதுக்கே சோர்ந்து போயிட்டனா, உன் ‘அஜு’வ எப்படி காப்பாத்த போற…?” நக்கலாக கேட்டது அது.

 

இப்போது அதைக் கண்டு, முதல் முறை பயந்தது போல, அவள் பயப்பட வில்லை. மாறாக சோர்வினால் மூச்சு வாங்கியபடி, “எதுக்கு அவன கொல்லணும்னு நினைக்கிற…” என்றாள்.

 

“என் வீட்ட அவன் மீட்டெடுப்பானாம்… இங்க தங்குனதுக்கே அவன் குடும்பத்தோட நிம்மதிய பறிச்சவ நான்… இத சொந்தமாக்கிக்கணும்னு நெனச்சவன சும்மா விடுவேனா… நான் வாழ்ந்து அனுபவிக்காத இந்த வீட்டுல யாரும் வாழக் கூடாது…. அன்னிக்கு நான் அனுபவிச்ச வலிய அவன் காலத்துக்கும் அனுபவிக்கணும்… அவன கொல்லறது எனக்கு பெருசில்ல… அவன இன்னும் விட்டு வச்சுருக்கேனா, அதுக்கு காரணம் அவன் வாழ்நாள் முழுசும், வலியோட வாழனும்…” என்று அது தீவிரமாகக் கூறியது.

 

அது கூறியதை கவனித்தவள், “அவன் வாழ்நாள் முழுசும் வலி அனுபவிக்கணும்னா நீ என்ன கொல்லணும்… நான் இல்லாம அவன் உயிரோட இருக்குறதே அவனுக்கு பெரிய வலி தான்…” என்று தீர்க்கமாக கூறினாள்.

 

“ஓ உங்க காதல் ஆத்மார்த்தமான காதல்ல… நீ இறந்துட்டா அவன் உன்ன நெனச்சு மறுகிட்டு இருப்பானா… எந்த காலத்துல இருக்க நீ… நீ இல்லனா இன்னொரு பொண்ணு… இவன காப்பாத்த நீ வந்து இப்படி மாட்டிக்கிட்டியே…” என்று அவளைக் கண்டு பரிதாபப்பட்டது.

 

“இல்ல என் அஜு நிச்சயமா இன்னொரு பொண்ண மனசால கூட நெனைக்க மாட்டான்…” என்றாள் ரோஷம் வந்தவளாக…

 

எதையோ யோசித்த அதுவும், அவளிடம், “நான் சொன்ன மாதிரி அவன் உயிர் எனக்கு முக்கியமில்ல… அவனுக்கு வலிக்கணும்… அதுக்கு உன்ன கொல்லனும்னா கூட எனக்கு ஓகே தான்…” என்று கூறியது.

 

“அதான் என்ன கொல்ல போறல, அதுக்கு முன்னாடி ஒரு அஞ்சு நிமிஷம் என் அஜுவோட இருக்கணும்… ப்ளீஸ்…”

 

கேலியாக தலையாட்டிய ‘அது’, நிஷாவின் தலை மேலே கையை காட்டியது. இவ்வளவு நேரமும் நிஷாவின் தலைக்கு மேல் தான் அர்ஜுன் காற்றில் மிதந்து கொண்டிருந்தான், சுயநினைவின்றி…

 

அவனைக் கீழே இறக்கிவிட்ட ‘அது’, மறைந்து விட்டது.

 

“அஜு… அஜு…” என்றாள் தவிப்பாக. அவளிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனை தலை முதல் கால் வரை பார்த்து, கைகளால் வருடி, அந்த நொடிகளை தனக்குள் சேமித்துக் கொண்டாள். 

 

“அஜு எனக்கு ப்ராமிஸ் பண்ணு… உனக்காக, உன் வாழ்க்கைக்காக என்னோட உயிர தரேன்… நீ எந்த காரணத்திற்காகவும் உன் வாழ்க்கைய நீயே அழிச்சுக்குற முடிவுக்கு வரக் கூடாது… என்ன பத்தி உனக்கு தெரிஞ்சாலும், என்ன மறந்துட்டு… உன் வாழ்க்கைய வாழனும்…” என்று அழுதுக் கொண்டே கூறியவள், அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

 

“என்ன முடிஞ்சுதா…” என்று கூறியவாறே அவளின் முன் தோன்றியது.

 

கண்களைத் துடைத்துக் கொண்டவள், “என்ன கொன்னதுக்கு அப்பறம், இவன கொல்ல மாட்டன்னு நான் எப்படி நம்புறது… உன்னால இந்த வீட்டோட எல்லை வரை தான் உலவ முடியும்னு எனக்கு தெரியும்… அதனால அஜுவ இந்த வீட்டு எல்லை தாண்டி விட்டதுக்கு அப்பறம் தான் என்ன கொல்லனும்…” என்றாள்.

 

“ஹ்ம்ம் உன் ஆசை… அதுவும் கடைசி ஆசைய ஏன் கெடுப்பானேன்…” என்று அதன் கண்ணசைவில் அந்த வீட்டின் எல்லைக்கு வெளியே தூக்கி வீசப் பட்டான் அர்ஜுன்.

 

ஆனால் அவளைக் கொல்லும் நொடியில், “நீ இப்போ சாகுறது கூட வேஸ்ட் தான்… இப்போ எங்கிட்ட இருந்து காப்பாத்துனதா நீ நெனைக்குறவன், அவன் தங்கச்சிக்காக என்ன தேடி வருவான்…” என்று கூறியது இன்னமும் அவளின் காதுகளில் எதிரொலித்தது.

 

இவற்றையெல்லாம் அவள் சொல்லி முடித்ததும், அர்ஜுனின் நிலை தான் பாவமாக இருந்தது.

 

“எனக்காக உயிர குடுக்குற அளவுக்கு நான் என்ன பண்ணேன் நிஷு… இப்படி என்ன காதலிச்சவ இறந்தது கூட தெரியாம இவ்ளோ வருஷம் வாழ்ந்துருக்கேன்…” என்று கண்ணீர் சிந்தினான்.

 

“இவ்ளோ வருஷம் உங்களுக்கு ஒரு காதல் இருந்திருக்குன்னு தெரியாமையே, வேறொரு பொண்ணுக்கு உங்க மனசுல கூட இடம் குடுக்கலையே அஜு… இதுலயிருந்தே உங்களுக்கு புரியலையா… காதல் எதையும் எதிர்பார்க்காது அஜு…” என்று கூறியவள் பின் நினைவு வந்தவளாக, “அஜு இப்போ நீங்க இங்க வந்திருக்க கூடாது… உடனே கிளம்புங்க… சிங்கப்பூருக்கே போங்க…” என்று கத்தினாள் நிஷா.

 

அதுவரை அமைதியாக இருந்த சதீஷ், “என்னாச்சு நிஷா… அர்ஜுன் ஊருக்கு வந்தது தப்பா இல்ல இப்போ ஊருக்கு வந்தது தப்பா…” என்று வினவினான்.

 

“ரெண்டுமே தப்பு தான்… முதல ரெண்டு பேரும் இங்கயிருந்து கிளம்புங்க… இன்னும் ஒரு நாள் தான்… அதுக்கப்பறம் உங்களுக்கு ஆபத்து இல்ல அஜு… சொன்னா கேளுங்க… நீங்க இங்க இருக்குறது அதுக்கு தெரியக் கூடாது.”

 

“ஏன் நிஷு ஒரு நாள்ல என்ன மாறிடப் போகுது…” என்று குழப்பமாக அர்ஜுன் கேட்டான்.

 

“உங்க தங்கச்சிய கொன்னு இத்தன வருஷ பகைய தீர்த்துக்க போகுது ‘அது’…”

 

அமானுஷ்யம் தொடரும்…

 

 

இன்றைய அமானுஷ்ய இடம்…

 

ஜி. பி பிளாக் (GP Block, Meerut)

 

 

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள மீரட், பழமையான நகரமாகும். அங்குள்ள ஜிபி பிளாக் என்னும் இடம் பாழடைந்து, சுவர்கள் சிதைந்து, காட்டுச் செடிகளும் முட்புதர்களும் படர்ந்து, இரவில் பார்ப்பதற்கு சற்று அமானுஷ்யமாகவே காட்சியளிக்கிறது.

 

அங்குள்ளவர்கள் அந்த இடத்தில் பேய் நடமாட்டம் உள்ளதாக கூறுகின்றனர். மேலும், அந்த கட்டிடத்தின் மாடியில் ஒரு பெண் அமர்ந்திருப்பது போலவும், சிவப்பு வண்ண உடையில் அந்த கட்டிடத்தில் ஒரு பெண் உதவுவது போலவும், நான்கு ஆண்கள் அங்கு அமர்ந்து குடிப்பது போலவும் தெரிவதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

 

இது போன்ற நிகழ்வுகளால் அந்த இடம் அமானுஷ்யமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பல அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் அங்கு சென்று ஆய்வு நடத்தியதாகவும் கூறுகின்றனர்.

 

ஜிபி ப்ளாக்கை பற்றிய வேறு செய்தி….

 

ஜிபி பிளாக் என்பது எந்தவொரு தனி நபருக்கும் சொந்தமானது அல்ல. அது இந்திய பாதுகாப்பு படையினருக்கு சொந்தமானது. 1950களில்  இராணுவத்தினர் தங்களில் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டனர். அதன்பின் அந்த இடத்தை பராமரிக்க சிறப்பு கவனிப்பாளர்களை அவர்கள் நியமித்தனர். ஆனால் அவர்களோ தங்கள் சுயலாபத்திற்காக அந்த இடத்தை, சில மணி நேரங்கள் மட்டும் இளம் ஜோடிகளுக்கும், ரௌடிகளுக்கும் வாடகைக்கு விட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்தனர். இதையறிந்த இராணுவத்தினர் அவர்களை வேலையை விட்டு நீக்கி, அந்த கட்டிடத்திற்கு பெரிய இரும்பு கதவு அமைத்து அக்கட்டிடத்தை அடைத்து வைத்ததாகக் கூறுகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!