மிரட்டும் அமானுஷ்யம் 8
மிரட்டும் அமானுஷ்யம் 8
மிரட்டல் 8
அறைக்கு வந்தபின்னும் ஜானு அவளின் யோசனையின் பிடியிலேயே இருந்தாள். சாக்ஷி அவளைக் கவனித்தாலும் வந்ததிலிருந்து அலைபேசி தொல்லைப்பேசியாகி அவளை தொல்லை செய்து கொண்டிருந்ததால் அவளால் ஜானுவிடம் அதைப் பற்றி பேச முடியவில்லை.
ஜானுவிற்கு நந்தினியிடமிருந்து அழைப்பு வந்ததும் தான் அவளின் யோசனையிலிருந்து வெளிவந்தாள்.
“ஹே ஜானு… இன்னிக்கு கிளாஸ் நடந்துச்சா..? பேய் ஓட்டுறது எப்படின்னு சொல்லிக்குடுத்தங்களா…” என்று அந்த பக்கம் நந்தினியின் குரல் உற்சாகமாக கேட்க, ஜானு ஒரு “ம்ம்ம்”மில் அவளின் விடையை சுருக்கிக் கொண்டாள்.
“ஜானு, அங்க எல்லாம் ஓகே தான… என்னாச்சு… ஏன் ஒரு மாதிரி பேசுற…?” என்ற நந்தினியின் படப்பட கேள்விகளில் தன் தவறை உணர்ந்த ஜானு, “ஹே நந்து… ரிலாக்ஸ்… எனக்கு ஒண்ணும் இல்ல… தலை வலின்னு காஃபி குடிச்சுட்டு இருந்தேன்… உன் கால் வந்ததும் அப்படியே எடுத்து பேசிட்டேன்… அதான் ‘ம்ம்ம்’ன்னு மட்டும் சொன்னேன்…” என்று கூறி சமாளித்தாள்.
“ஓ… ஓகே… காஃபி குடிச்சுட்டு கால் பண்ணு… நானும் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்…” என்று அழைப்பை துண்டித்தாள் நந்தினி.
‘ஷப்பா ஒரு வழியா நந்துவ சமாளிச்சாச்சு… இனி இவ வேற கேப்பாளே…’ என்று மனதிற்குள் நினைத்தவளாய் வெளியே நடந்து கொண்டே அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த சாக்ஷியைக் கண்டாள்.
மணியைப் பார்க்க, அது 6.30 என்று காட்டியது. ஜானுவிற்கு முன்தினம் நிகழ்ந்தவைகள் நினைவிற்கு வர, தனியாக அந்த அறையில் இருப்பது பயமாக இருந்தது.
அவளின் கண்கள் தானாக ஜன்னலிற்கு வெளியே பின் கண்ணாடி என்று மாறி மாறி பயணித்தது.
‘ச்சு… சும்மா இருந்தா தான இப்படி தோணுது… நந்துக்கு திருப்பி கால் பண்ணி பேசலாம்…’ என்று அலைபேசியை பார்க்க, அதில் சிக்னல் சுத்தமாக இல்லை.
‘ப்ச்… இதுக்கு என்னாச்சு… இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நந்துட்ட பேசுனப்போ ஃபுல்லா இருந்துச்சு…’ என்று சலித்துக் கொண்டே வெளியே சென்றாள்.
வெளியில் ஏற்கனவே சாக்ஷி அந்த முழு தாழ்வார்த்தையும் தன் நடையால் அளந்து கொண்டிருந்தாள். அவளிற்கும் சிக்னல் கிடைக்காததால் அலைபேசியில் கத்தியபடி இருந்தாள்.
‘ஹ்ம்ம் இங்க நின்னு எப்படி பேசுறது…’ என்று நினைத்து மூன்றாம் தளம் சென்றாள். அங்கும் இரு பெண்கள் வெளியே உலவியபடி பேசிக் கொண்டிருந்தனர்.
சலிப்பாக அடுத்த மாடி ஏறி சென்றாள். அங்கு யாரும் இல்லை. அப்போது தான் நினைவு வந்தது அது நான்காம் மாடி என்று. ‘இங்க ஏன் யாரும் இல்ல…’ என்ற நேற்றைய யோசனையை தொடர விடாமல் நந்தினியின் அழைப்பு வந்தது.
நந்தினியிடம் கதை பேசும் ஆவலில், நான்காம் தளத்திலிருந்து மொட்டைமாடி சென்றது கூட தெரியவில்லை ஜானுவிற்கு.
அரைமணி நேரம் பேசியவர்கள் மனதே இல்லாமல் (!!!) அழைப்பைத் துண்டிக்க, அப்போது தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்தாள் ஜானு.
‘ஐயோ ஜானு… என்ன பண்ணி வச்சுருக்க… இந்த நேரத்துல இங்க வந்துருக்க… நேத்து மாதிரி வெளிச்சமா கூட இல்ல… இருட்டா வேற இருக்கு…’ என்று நினைத்தவளின் நெற்றியில் வியர்வை அரும்ப, அதை துடைத்தபடி சுற்றியும் கவனித்தாள்.
யாரோ நடக்கும் சத்தம் கேட்க, ஜானு சத்தம் வந்த திசையில் பார்த்தாள். அந்த பகுதி இருள் சூழ்ந்திருந்ததால், அவளால் அங்கு இருப்பதை சரியாக பார்க்க முடியவில்லை.
உள்ளுக்குள் பயம் தோன்றினாலும், வெளியில் சற்று தைரியமாக காட்டிக்கொண்டு, “யாரது…” என்று கேட்டாள். பதட்டத்தில் தமிழில் பேசியதைக் கூட அவள் அறியவில்லை.
“நான் தான்…” – குரல் மட்டும் கேட்டது அவளிற்கு.
அப்போது தான், அவள் தமிழில் பேசியதையும் அதற்கு மறுமொழி தமிழில் வந்ததையும் கவனித்தாள்.
‘இங்க யாரு தமிழ் பேசுறவங்க இருக்காங்க… என்னையும் சாக்ஷியையும் தவற இங்க தமிழ் பேசுறவங்க இல்லன்னு அன்னைக்கு அந்த ஓனர் ஆண்ட்டி கூட சொன்னாங்களே…’ என்று யோசித்து முன்னோக்கி நடந்தாள்.
மூளை அங்கிருந்து சென்று விடு என்று அறிவுறுத்தினாலும், மனம் அசட்டு துணிச்சலில் அங்கு யார் இருக்கிறார்கள் என்று பார்க்க சொன்னது.
இவள் நடக்க, அந்த பக்கம் இருந்தும் இவளை நோக்கி நடந்து வரும் சத்தம் கேட்டது. அப்போது ஜானுவிற்கு பின்னால் ஏதோ சத்தம் கேட்க, அவள் திரும்ப, அதே நேரம் ஜானுவின் முன்னே நின்றிருந்தாள் அவள், ரத்தச் சிவப்பு கண்களுடன்…
‘ச்சே யாரும் இல்ல…’ என்று கூறியவாறு திரும்பிய ஜானு, தனக்கு முன் நின்றிருந்தவளைக் கண்டு அதிர்ந்து தான் போனாள்.
“நி.. நிஷா…” என்று காற்று மட்டுமே வந்தது ஜானுவிற்கு…
“ஹே ஜானு… சாரி… பயமுறுத்திட்டேனா…” என்றாள் நிஷா.
வேக மூச்சுக்களை விட்டுக் கொண்டிருந்த ஜானு, “இல்ல நிஷா… திடீர்னு உன் முகத்த முன்னாடி பார்த்த…. ஹே இப்போ நீ தமிழ்ல பேசுனியா…” என்றாள் திகைப்பாக…
நிஷாவோ சிரிப்புடன், “ஏன் அதுல உனக்கு ஏதாவது பிரச்சனையா…” என்று கேட்டாள்.
“இல்ல இல்ல… உனக்கு எப்பட தமிழ் தெரியும்…”
அழகாக புன்னகைத்தவள், “கத்துக்கிட்டேன்…” என்றாள்.
அதன்பின் சிறிது நேரம், அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
ஜானு அவள் தேர்ந்தெடுத்த படிப்பைப் பற்றிக் கூறவும், அவளை ஒரு எகத்தாள பார்வை பார்த்தாள் நிஷா… ஆனால் அதை ஜானு கவனிக்க வில்லை.
பின் நிஷாவும், ‘ப்ளூ மூன்’ என்ற த்ரீ ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பாளராக வேலை செய்வதாகக் கூறினாள்.
அந்த ‘ப்ளூ மூன்’ பத்து வருடங்களுக்கு முன் தீப்பிடித்து எரிந்து போனது ஜானுவிற்கு தெரிய வில்லை…
அவர்கள் இருவரும் தங்கள் சொந்த ஊர் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர். நிஷா பொறுமையாக ஜானுவின் ஊரைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளின் மனதிலோ, ‘இவ எப்போ முடிப்பா…’ என்று எரிச்சல் அடைந்தது பாவம் ஜானுவிற்கு தெரியவில்லை.
“இவ்ளோ நேரம் நானே பேசிட்டு இருக்கேன்… நீ சொல்லு நிஷா, உன் சொந்த ஊர் எது…”
‘ஷப்பா ஒரு வழியா கேட்டுட்டா… இதுக்காக தான இவ்ளோ நேரம் இவ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருந்தேன்…’
“இங்க தான்… பக்கத்துல ஒரு கிராமம்… பிம்ப்ரிவாடி (கற்பனை ஊர்)” – அதை சொல்லும்போது அவளின் குரல் வேறுபட்டு ஒலித்ததோ…
அவள் மேலும் சொல்லும் முன், ஜானுவின் அலைபேசி ஒலித்தது. சாக்ஷி தான் அவளைக் காணாமல் அழைத்திருந்தாள்.
“ஓகே நிஷா ரொம்ப லேட்டாச்சு… இன்னொரு நாள் பேசலாம்…” என்று சொல்லியவள் அவளின் மறுமொழிக்காக கூட காத்திராமல் வேகவேகமாக படிகளில் இறங்கி சென்றுவிட்டாள்.
இங்கு நிஷாவின் முகமோ கோபத்தில் சிவந்திருந்தது.
******
“ஹே ஜானு எங்க போன இவ்ளோ நேரம்..?” என்ற சாக்ஷியின் குரலில் தெரிந்த பதட்டத்தில், “சாரி சாக்ஷி… சிக்னல் கிடைக்கலன்னு மேல போன் பேச போனேன்… அப்படியே நிஷா கூட பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல…” என்றாள் ஜானு.
“இங்க இருக்குறவங்க எல்லாரும் மொட்டைமாடின்னு சொன்னாலே பேய பாத்த மாதிரி பயப்படுறாங்க… நீ என்னன்னா டெய்லி அங்க போய்ட்டு வர… அது சரி இன்னிக்கும் என்ன கூட்டிட்டு போகல…”
“ஹாஹா இன்னிக்கும் நீ ஃப்ரீயா இல்லையே…”
பின், அவளும் நிஷாவும் பேசியதைக் கூறினாள்.
“ஹே ஜானு, நீ எங்கிட்ட கூட இவ்ளோ பேசுனது இல்ல… அவ கிட்ட இவ்ளோ ஷேர் பண்ணிருக்கியா…” என்று வினவினாள் சாக்ஷி.
அவள் சொன்னதும் தான் அதை உணர்ந்தாள் ஜானு. யோசைனையுடனே, “அதான் எனக்கும் புரியல சாக்ஷி…” என்றாள் ஜானு.
அன்றும் குழப்பத்துடனே உறங்கினாள் ஜானு. நிஷாவைப் பற்றிய சிந்தனையில் இருந்ததால் இரவு சாக்ஷி விளக்கணைத்ததைக் கூட பெரிதாக எடுக்கவில்லை.
********
இங்கு பிபுலோ கவலையில் ஆழ்ந்திருந்தார். தினமும் அவரின் காலை, யாருக்கு என்ன பிரச்சனையோ என்ற பயத்திலேயே விடிந்தது. அதற்கேற்ற வகையில் தினமும் யாராவது அவரின் வீட்டு வாசலில் நின்று, பேய்யை பார்த்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும், கால்நடைகள் காணாமல் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தனர். அவரின் ஒரே நிம்மதி, அம்ரத்தின் இறப்பிற்கு பின் யாரும் இறக்க வில்லை என்பது தான்.
அன்றும் அவ்வாறு தான் ஒரு வயதான மூதாட்டி அங்கு நின்றிருந்தார். பிபுல் கரணை நோக்க, “அவங்க பேத்திக்கு பேய் பிடிச்சுருக்குன்னு சொல்றாங்க ஐயா…” என்றான்.
‘இது என்ன புது பிரச்சனை…’ என்பது போல பிபுல் கரணை பார்த்தார்.
பின் அவருக்கு தெரிந்த சாமியாரை பார்க்கச் செல்லுமாறு அந்த மூதாட்டியிடம் கூறி அவரை அனுப்பி வைத்தார்.
“என்ன கரண் இது… தினமும் புதுசு புதுசா பிரச்சன்ன வருது…” என்று வருத்தத்துடன் கூறினார்.
“ஐயா எனக்கு ரொம்ப பயமா இருக்குதுங்க… உங்க நண்பரு அம்ரத் ஐயாவ அந்த நிலைமைல பார்த்தது இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குதுங்க… உடம்பு முழுசா கூர்மையான நகத்தால கீறி…” அதற்கு மேல் என்ன சொல்ல வந்திருப்பானோ, பிபுல் அவனை தடுத்து விட்டார்.
அவருக்கும் தன் நண்பனை அந்த கோலத்தில் பார்த்தது அதிர்ச்சியே… என்ன தான் இரு குடும்பங்களுக்கும் பகை என்றாலும், கல்லூரியில் இருவரும் ஒரே துறையில் பயிலும் போது கூட குடும்ப பகையை பாராமல் நட்பு பாராட்டி தான் வந்தனர்.
இடையில் ஊர் பிரச்சனை காரணமாக பிபுல் அவரின் அண்ணனுடன் இருக்க, அம்ரத் மேற்படிப்பு படிக்கச் சென்று விட, அவர்களின் நட்பும் விரிசலைக் கண்டது. அதன்பின் ஊரில் இருவரும் ஓரிரு முறை சந்தித்துக் கொண்டாலும் பெரிதாக பேசிவிட வில்லை.
அம்ரத்தின் குணம் சரியில்லை என ஊர் மக்கள் முனங்கியது இவரின் காதிலும் விழத்தான் செய்தது. ஆனால் ஊருக்கு வந்தால் இரண்டே நாட்கள் தங்கிவிட்டு செல்பவரிடம் என்ன அறிவுரை கூறுவது என்று அப்படியே விட்டு விட்டார்.
இப்படியே பல வருடங்கள் செல்ல…. அன்று தான் தன் நண்பரைக் கண்டார், சடலமாக…
ஒரு பெருமூச்சு விட்டு தன்னை இயல்பாக்கி கொண்டவர், “எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு கரண்…அண்ணா எங்கிட்ட சொன்னப்போ, அதால அந்த வீட்ட விட்டு வெளியே வர முடியாதுன்னு சொன்னாரு… ஆனா அம்ரத் இறந்தது அவன் தோப்புக்கு முன்னாடி… அவன் உடம்புல இருக்க காயங்கள வச்சு சாதாரண மனுஷன் பண்ண கொலைன்னு சொல்லவே முடியாது….” என்று பிபுல் வரிசையாக காரணங்களை அடுக்கிக் கொண்டே போனார்.
“ஐயா அப்போ அம்ரத் ஐயாவ கொலை பண்ணது….” என்று கரண் இழுக்க….
அவன் பாவனையை வைத்தே அவன் எண்ணுவதை கண்டுபிடித்தவர், “நீ நினைக்குறது சரி தான் கரண்… அவன கொன்னது வேற பேய் தான் இருக்கணும்.” என்றார்.
*******
இந்நால்வரின் கல்லூரி நாட்கள் வேகமாக சென்றது. காலை பேருந்தில் கலகல பயணம் துவங்கி மாலை புது புது இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு சோர்வான டாக்ஸி பயணம் என்று அவர்களின் நாட்கள் அழகாக சென்றது.
கங்காதரின் படங்களுடன் கூடிய விரிவுரையும், அதை அவர் வழிநடத்திச் செல்லும் முறையும், மாணவர்களின் ஆர்வத்தை தூண்டியது. ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து புதிதாக கற்பதற்கு ஆயத்தமாயிருந்தனர்.
இது ஒரு பக்கம் செல்ல, ஜானுவின் குழப்பங்கள் அதிகரிக்கவே செய்தன… தன்னை யாரோ 24 மணிநேரமும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவளிற்கு நன்கு விளங்கியது. ஆனால் அவள் உணர்ந்ததை தான் யாரிடமும் கூறவில்லை.
நிஷாவை அன்று மொட்டைமாடியில் பார்த்ததோடு சரி, அதற்கு பின் ஜானு மொட்டைமாடிக்கு போக வில்லை, நிஷாவையும் கீழே எங்கும் பார்க்க வில்லை.
இப்போதெல்லாம் அவள் அறையில் இருக்கும் ஜன்னல், கண்ணாடி பார்த்து பயம் எழவில்லை. அதற்கு காரணமும் கங்காதரின் விளக்கம் தான்.
அன்றொரு நாள் வகுப்பில்…
(ஆங்கில உரை தமிழில்)
“உங்களோட அகராதில பேய், பிசாசு இன்னும் வேற வேற பெயர்கள் வச்சு கூப்பிடுறீங்க… ஆனா சயின்ஸ் பொறுத்தவரைக்கும் அதோட பெயர் ‘எதிர்மறை ஆற்றல்’ (நெகடிவ் எனர்ஜி)…”
அவர் இப்படி சொன்னதும் வகுப்பில் சலசலப்பு ஏற்பட்டது.
“எஸ் பிரெண்ட்ஸ்… உங்க குழப்பம் எனக்கு புரியுது… ஆனா சயின்ஸ் ‘அத’ வெறும் ஆற்றலா தான் பார்க்குது… நமக்கெல்லாம் நல்லா தெரியும்… ஒரு அணுல நேர்மறை ஆற்றலும் இருக்கணும் எதிர்மறை ஆற்றலும் இருக்கணும்… அப்போ தான் அந்த அணு நடுநிலைல இருக்கும்… இந்த உலகமும் அணு மாதிரியே தான்… என்ன ரொம்ப பெரிய சைஸ் அணு… இங்க நேர்மறை ஆற்றல்… அதாவது கடவுள் இருந்தா, எதிர்மறை ஆற்றலும் இருக்கத் தான் செய்யும்… அப்போ தான் உலகம் நடுநிலையா இருக்க முடியும்… “
“இப்போ மனுஷங்கள எடுத்துப்போம்… அவங்க கிட்டயும் நேர்மறை எண்ணங்களும் இருக்கும், எதிர்மறை எண்ணங்கள் இருக்கும்… ஒருத்தன் மனவுறுதியோட, எதையும் எதிர்நோக்கும் திறன் உள்ளவனா இருந்தா, அவன் எண்ணங்கள் நேர்மறையா இருக்கும். அதே சமயம் ரொம்ப சோர்வா, தனிமைல இருந்தா, அவன் எண்ணங்களும் எதிர்மறையா தான் இருக்கும்…”
“அப்படி எதிர்மறை எண்ணங்கள் அதிகமா இருந்துச்சுனா எதிர்மறை ஆற்றல் எளிதா அவன ஆக்கிறமிச்சுடும்… இத தான் பேய் பிடிச்சுருக்குன்னு சொல்வாங்க…”
அவர் சொல்ல சொல்ல வகுப்பே அமைதியாக இருந்தது. அவர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் அவரிடம் செலுத்தியிருந்தனர் மாணவர்கள்…
அப்போது ஒருவன், “சார் அப்போ ரொம்ப ‘டிப்ரெஸ்ஸட்’டா இருக்குறவங்களுக்கு தான் பேய் பிடிக்குமா…?” என்றான்.
“ம்ம்ம் அப்படியும் சொல்லலாம்… ரொம்ப குழப்பதுல, மன அழுத்தத்துல இருக்குறவங்களோட மனசு பலவீனமா இருக்கும்… அதனால தான் ‘பேய்’யால ஈஸியா அவங்கள நெருங்க முடியும்…”
“அடுத்து நம்ம பார்க்க போறது, எப்படி இந்த எதிர்மறை ஆற்றலோட சக்திய குறைக்கிறதுன்னு… உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா…?” என்றார் மாணவர்களைப் பார்த்து.
“நேர்மறை ஆற்றல அதிகப்படுத்துறது மூலமா அந்த எதிர்மறை ஆற்றாலோட சக்திய குறைக்கலாம்…” என்றான் ஆதர்ஷ்.
“எக்ஸ்சாக்ட்லி… யூ ஆர் ரைட் ஆதர்ஷ்… அதிகமான எதிர்மறை ஆற்றல நேர்மறை ஆற்றல் மூலமா தகர்க்கனும்…”
“அப்போ பேய் விரட்டுறதுக்கு மந்திரவாதி, சாமியார்லா கூப்பிட்டு பூஜை செய்வதெல்லாம் வேஸ்ட்டா சார்…” என்றாள் ஒரு பெண்.
“அப்படின்னு சொல்ல முடியாது… நான் இப்போ அறிவியலா சொன்னத தான் அவங்க ஆன்மீகமா செய்யுறாங்க… புரியுற மாதிரி சொல்றேன்… நீங்க சொன்ன சாமியார் என்ன பண்ணுவாங்க… சில தாயத்து, தகடு இந்த மாதிரி ஏதாவது கோவில்ல வச்சு பூஜை செஞ்ச பொருளை குடுப்பாங்க… அந்த பூஜை பொருள் தான் நான் சொன்ன நேர்மறை ஆற்றல்… பொதுவாவே கோவில், சர்ச், மசூதி மாதிரியான புண்ணிய இடங்கள் நேர்மறை ஆற்றலால நிரம்பியிருக்கும்… இதுக்கு காரணம் அங்க வர மனுஷங்களோட நேர்மறை சிந்தனைகள்… சோ அங்க வச்சு பூஜை செய்யுற தகடு போன்ற பொருட்கள்லயும் நேர்மறை ஆற்றல் அதிகமா இருக்கும்… அதனால தான் அந்த சாமியார்கள் இத குடுத்து ‘பேய்’ ஓட்டுறாங்க…”
அவர் இதை கூறி முடிக்கவும் அன்றைய தின வகுப்பு முடிவிற்கு வருவதற்கும் சரியாக இருந்தது.
“ஓகே பிரெண்ட்ஸ்… மீதிய நாளைக்கு பார்க்கலாம்… ஏதாவது சந்தேகம் இருந்தா என்ன மீட் பண்ணுங்க…” என்றவாறு அவர் வெளியேறினார்.
அவர் சென்ற பிறகு அனைவரும் அன்றைய பாடத்தைப் பற்றிய விவாதத்தில் இருந்தனர்.
ஜானுவோ, அவர் வெளியேறியதும் அவளும் அவர் பின்னே சென்றாள். ஆதர்ஷ் அந்த விவாதத்தில் இருந்ததால் அவன் ஜானுவை கவனிக்க வில்லை.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்…” என்று அவரின் முன் சென்று நின்றாள். வேகமாக வந்ததால் அவளிற்கு மூச்சு வாங்கியது.
அந்த ஒரு நொடி அவளை தீர்க்கமாக பார்த்த கங்காதர், “எஸ் மை கேர்ள்…. வாட் டூ யூ வான்ட்..?” என்று வினவினார்.
“சார் ஒரு டவுட்…” என்று தயங்கியவளை அவர் தான் பேசுவதற்கு ஊக்கினார்.
அவளும் தன் அறை ஜன்னல் மற்றும் கண்ணாடி பிரச்சனையை கூறினாள். அவள் மனதில் இருக்கும் பயம் நீங்க வழி கேட்டாள்.
“அப்படி ஏதாவது பாத்தா, ரெண்டு நிமிஷம் கண்ண மூடி, அது வெறும் எனர்ஜி தான்னு மனசுக்குள்ள சொல்லிட்டு…. கண்ண தொறந்து பாரு… உன் பயம் குறையும்…” என்று கூறினார்.
அன்று அவர் சொன்னதை தான் இன்று வரை பின்பற்றி வருகிறாள்.
இங்கு ஜானுவின் பயம் குறைய குறைய, அங்கு அதன் கோபம் பெருகிக் கொண்டே இருந்தது….
அமானுஷ்யம் தொடரும்…
இன்றைய அமானுஷ்ய இடம்….
குல்தாரா கிராமம், ராஜஸ்தான் (Kuldhara village)
‘பேய் கிராமம்’ என்று அழைக்கப்படும் இந்த குல்தாரா கிராமம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மருக்கு அருகில் உள்ளது. இங்கு பலிவால் பிராமணர்கள் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர்.
1852ஆம் ஆண்டு குல்தாரா மற்றும் அதை சுற்றியுள்ள 84 கிராமங்களை சேர்ந்தவர்கள் திடீரென்று மறைந்து விட்டதாகவும், அவர்கள் எங்கு சென்றனர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.
இதற்கான பின்கதை இதுவே… அப்போது அப்பகுதியின் திவானாக இருந்தவர் சலும் சிங். அவர் அந்த சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் மீது காதல் வயப்பட்டு அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், அதற்கு அச்சமூகத்தினர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறுகின்றனர். இதனால் கோபமான திவான், அவரின் ஆசைக்கு உடன்படவில்லை என்றால், அவர்களிடமிருந்து அதிகமான வரி வசூலிக்கப்படும் என்றும், இன்னும் பிற தொல்லைகளுக்கு ஆளாகலாம் என்றும் மிரட்டியிருக்கிறார். தங்கள் சமூகத்தின் மரியாதை காப்பதற்காக அவர்கள் அக்கிராமத்தை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அம்மக்கள் அங்கிருந்து செல்லும்போது, தங்கள் நிம்மதியைப் பறித்த அக்கிராமங்களில் இனி ஒருவர் கூட வாழ முடியாது என்ற சாபத்தை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
இப்போதுவரை குல்தாரா கிராமம் யாரும் இல்லாமல் வெறிச்சோடி தான் இருக்கிறது. அங்கு செல்லும் மக்கள் மனதிலும், அவர்கள் அறியாமலேயே சோகம் குடிகொள்வதாகவும் கூறுகின்றனர்.