Oh Papa Laali–Epi 1

அத்தியாயம் 1

 

சிங்கப்பூரின் ஆர்ச்சர் ரோட் டிசம்பர் மாதத்தில் களைகட்டும். கிறிஸ்துமஸ் அலங்காரங்கள், வண்ண விளக்குகள் என்று அந்த வீதி எங்கும் தடபுடல் படும். உலகெமெங்கும் உள்ள மக்கள் அதைக் காண படையெடுத்து வருவார்கள்.  

 

“மாமா! வசந்தத்துல உங்க நிகழ்ச்சி வந்துருச்சு! வாங்க எழுந்து வாங்க!” என தூங்கிக் கொண்டிருந்த தன் மாமன் மேல் ஏறி முதுகில் படுத்துக் கொண்டே எழுப்பினான் ஐந்து வயது ரோஹித்.

மருமகன் மேலே ஏறி படுத்திருப்பது மசாஜ் செய்வது போல சுகமாக இருக்க இன்னும் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போனான் சூர்யவர்மன்.

அறைவாயிலில் வந்து நின்ற மதுரா,

“ரோஹி! மாமா தூங்கட்டும் விடு. நைட்டு ரொம்ப லேட்டா வந்தாங்கடா! அம்மா தான் ரெக்கார்டிங் போட்டுருக்கேன்ல! எழுந்ததும் அந்த நிகழ்ச்சியப் பார்ப்பாங்க! நீ வெளிய வா!” என தன் மகனை அழைத்தாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் மாமா கூட இருந்துட்டு வரேன்மா! ஓன் வீக்கா மாமா கூட வெளாடவே இல்ல” என மூக்கை சுருக்கிக் கெஞ்சினான் சின்னவன்.

“இப்போ வெளிய வரீயா இல்லையா?” குரலை உயர்த்தினாள் மதுரா.

“விடுக்கா இருக்கட்டும்! நானும் என் மருமகனும் கொஞ்சிக்கிட்டா உனக்குப் பொறாமை பொங்குமே!” தூக்கம் கண்ணை சுழட்டினாலும், மருமகன் முகம் வாடுவது பொறுக்காமல் முதுகில் படுத்திருந்தவனை இழுத்துப் பக்கத்தில் போட்டு கட்டிக் கொண்டான் சூர்யா.

“ஒரு வாரமா தாய்லாந்துக்கு ஷூட்டிங் போய்ட்டு வந்து களைச்சிப் போய் தூங்கறியேன்னு பாவம் பார்த்தா, எனக்குப் பொறாமையா? எப்படியோ போங்கடா!” என சலித்துக் கொண்ட மதுரா, பாதியில் விட்ட சமையலைத் தொடர சமயலறைக்குப் போனாள்.

“மாமா!”

“ஹ்ம்ம்”

“ஏந்துரு மாமா!”

“டூ மினிட்ஸ்டா!” என்ற சூர்யா மருமகனின் கழுத்தில் மூக்கை வைத்து நன்றாக வாசம் இழுத்தான்.

“கூசுது மாமா!” என கிளுக்கி சிரித்தான் ரோஹித்.

“உங்கம்மா உனக்கு நல்லா பவுடர் போட்டு வாசமா வச்சிருக்காங்கடா! ரோஹி வாசப்பையன்” என கண்ணை மூடிக்கொண்டே மருமகனை கொஞ்சிக் கொண்டான் சூர்யா.

சூர்யவர்மன் முப்பது வயதான சுமாரான இளைஞன். இவனே சுமாரென மனதில் நினைத்து தன்னம்பிக்கையை ஏற்றி வைத்திருக்கிறான். நேரில் பார்க்க சுமார் மூஞ்சி குமாரை விட இன்னும் சாதாரணமாக இருப்பான். திராவிட நிறம், கொழு கொழு குண்டு கன்னம், ஒற்றை கன்னத்தில் மட்டும் விழும் குழி, நீள மூக்கு, குட்டி கண்கள், அகன்ற நெற்றி என ஒரு முறை பார்த்தால் மறு முறை பார்க்கத் தேவையில்லை எனும் அளவுக்கு இருப்பான். அக்காவின் சமையலில் சதைப்பிடிப்பான உடம்பு, கொஞ்சமாய் துருத்திக் கொண்டு தெரியும் தொப்பை என அடுத்த வீட்டுப் பையன் போல தோற்றம். சரியாக சொல்ல வேண்டும் என்றால், படங்களில் கதாநாயகன் அழகாகத் தெரிய வேண்டும் என படு சாதாரணமாக நான்கு நண்பர்களை அவனோடு நடிக்க வைப்பார்களே, அந்த நண்பர் குழாமில் இவன் ஒருவன் என சொல்லலாம்.  

சொந்தமாக டிஜிட்டல் பிரிண்டிங் தொழில் நடத்துகிறான். ஆனால் அது அவனுக்கு சைட் பிஸ்னஸ் தான். மேயின் பிஸ்னஸ் கொம்பெரிங் எனப்படும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வேலை. நல்ல நகைச்சுவை உணர்வு, தடுமாற்றமில்லாத பேச்சு, சட்டென கவுண்ட்டர் அடிப்பது என வாய் வித்தையில் கில்லாடி இவன். சிங்கப்பூரின் வசந்தம் சேனலின் செல்லப்பிள்ளை. அதோடு தமிழ், மலாய் சீரியல்களிலும் நடித்து வருகிறான். நன்றாக பாடவும் வரும்.   

சூர்யவர்மன் சிங்கிள் தான் கெத்து என் சுற்றிக் கொண்டிருக்கும் முரட்டு பீஸ். மிங்கிளாக இவனுக்கும் ஆசைதான் ஆனால் பெண்கள் தான் இவனை பிரண்ட் சோனில் நிறுத்தி வைத்து அழகு பார்க்கிறார்கள். அவன் புகழுக்காக திரும்பிப் பார்த்த ஒரு சில பெண்களையும் இவனுக்குப் பிடிக்கவில்லை. தன்னை தனக்காக விரும்பும் ஒருத்தி கண்டிப்பாக வருவாள் என காத்திருக்கிறான், மனதில் உள்ள காதலையெல்லாம் அவள் மேல் கொட்டலாம் என எதிர்ப்பார்த்திருக்கிறான் சூர்யவர்மன்.

நேற்றிரவு மணி ஒன்றுக்குத்தான் தாய்லாந்தில் ஒரு மலாய் நாடக ஷூட்டிங் முடித்து சிங்கப்பூர் வந்திறங்கி இருந்தான். வீட்டுக்கு வந்து போர்த்திக் கொண்டு படுத்தவன் தான், பகல் மணி ஒன்றாகி விட்டது இன்னும் எழவில்லை. நடிப்பு என்றால் ஹீரோ வேடம் எல்லாம் இல்லை. எப்பொழுதும் ஹீரோவுக்கு நண்பனாக வருவான், அல்லது ஹீரோயினால் ரிஜேக்ட் செய்யப்படும் ஒரு தலை காதலனாக வருவான். சில சமயங்களில் காமெடி செய்யும் வில்லன் கேரக்டரும் கிடைக்கும். அசராமல் கிடைத்த வேடங்களில் தன் திறமையை நிரூபித்து வசந்தம் சேனல் நடத்தும் பிரதான விழாவில் ஒரு அவார்டாவது வாங்கி விடுவான் சூர்யவர்மன்.

இவன் தட்டிக் கொடுக்க, எழுப்ப வந்த ரோஹித்தும் அவனோடு சேர்ந்து தூங்கி விட்டான். சத்தமே காணோம் என உள்ளே வந்த மதுரா தலையில் அடித்துக் கொண்டாள்.

“சூரி டேய், எழுந்திரிடா படவா! சின்னவனையும் தூங்க வச்சிருக்க! ஈவ்னிங் நான் படுக்கற டைம்ல தூக்கம் வரலன்னு எகிறி எகிறி குதிப்பானேடா!” என சத்தம் போட்டவள் தலையணையால் அடித்து தன் இரு செல்வங்களையும் எழுப்பினாள். வளர்ந்தவனாக இருந்தாலும் தம்பியும் அவளுக்கு இன்னொரு மகனே. இதற்கு மேல் தூங்கினால் மதுரா பத்ரகாளி டான்ஸ் ஆடுவாள் என அறிந்திருந்த சூர்யா, மெல்ல துயில் கலைந்தான்.

இவள் மகனை அழைத்துக் கொண்டு வெளியேற, சூர்யா ரூமோடு இருக்கும் அட்டாச் பாத்ரூமில் குளிக்க நுழைந்தான். இவர்கள் இருப்பது நான்கறை எச்.டி.பி பிளாட் வகையாகும். அது புக்கிட் பாத்தோக் எனும் இடத்தில் இருந்தது. நான்கறை என்றால் மூன்று ரூம்களும் ஒரு ஹாலும் இருக்கும். ஒரு அறையை சூர்யா பயன்படுத்த, அவன் அக்காவும் மாமாவும் இன்னொரு அறையை உபயோகிக்கிறார்கள். சின்னதாக இருந்த குட்டி ரூமை, குட்டிக்காக ஒதுக்கி இருந்தார்கள்.

சிங்கப்பூர் தான் இவர்கள் பிறந்து வளர்ந்த ஊர். அப்பாவும் சிங்கப்பூரர்தான். அம்மா மட்டும் மலேசிய நாட்டை சேர்ந்தவர். இன்னும் இவர்களுக்கு சொந்தங்கள் பலர் மலேசியாவில் இருக்கிறார்கள். பிள்ளைகள் இவர்கள் இருவரும் சிங்கப்பூர் பிரஜைகள்.

சொந்தங்களை பார்க்கப் போன பெற்றவர்கள் மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் ஒரு கோர விபத்தில் பலியானார்கள். அப்பொழுது இவனுக்கு இருபது வயது. மதுராவுக்கு இருபத்து ஐந்து வயது. படித்துக் கொண்டிருந்தவனை, மதுராதான் அரவணைத்துக் கொண்டாள். அப்பாவின் சீ.பீ.எப் (மத்திய சேமநிதி) தாராளமாக இருந்தது. வீடும் சொந்த வீடு. ஆனால் மாத தவணை இன்னும் கட்டிக் கொண்டு தான் இருந்தார்கள். அப்பொழுது ஒரு ஆபிசில் அட்மின் வேலையில் இருந்த மதுரா தான், மாஸ் கோம்யுனிகேஷன் படித்துக் கொண்டிருந்த தம்பிக்குப் பக்கபலமாக இருந்தாள். அக்கா தம்பி இருவரையும் பெற்றவர்கள் இருக்கும் போதே மாப்பிள்ளையாக பேசி வைத்திருந்த ரகுராம் குடும்பமாய் தாங்கிக் கொண்டான். திருமணத்துக்குப் பிறகு முழுநேர அட்மின் வேலையை விட்டு விட்டு பகுதி நேரமாக பைனான்சியல் கண்சல்டனாக(இன்சுரன்ஸ்) இருக்கிறாள் மதுரா.        

குளித்து வெளியே வந்தவனுக்கு கபகபவென பசிக்க ஆரம்பித்திருந்தது. நேற்று இரவு ஏர்போர்ட்டில் சாப்பிட்ட பர்கர் கிங் சாண்ட்வீச் எப்பொழுதோ கரைந்து காணாமல் போயிருந்தது. வீட்டில் போடும் ஷார்ட்ஸ் மற்றும் டீ சர்டை அணிந்துக் கொண்டவன், கண்ணாடி முன் வந்து நின்றான். அடர்த்தியாக தோள் வரை வைத்திருக்கும் முடியை சீவி ரப்பர் பேண்ட் போட்டுக் கொண்டவனின் பார்வை வயிற்றில் வந்து நின்றது.

‘லேசா வயிறு உள்ளப் போயிட்ட மாதிரி இல்ல!’ என மனதில் நினைத்துக் கொண்டே வயிற்றைத் தடவிக் கொண்டான். பின் ரூமை திரும்பி பார்த்தவன், பெரிய பெருமூச்சொன்றை இழுத்து விட்டான்.

“கடவுளே! எனக்கு கொஞ்சிப் பேசறதுக்கு ஒரு பொண்ணு குடுக்கலனா கூட பரவாயில்ல! அட் லீஸ்ட் என் ரூம கூட்டிப் பெருக்கி சுத்தம் பண்ணி குடுக்கவாவது ஒரு பொண்ண காட்டு” என முணுமுணுத்துக் கொண்டே இறைந்துக் கிடந்த ரூமை சுத்தம் செய்ய முயற்சி செய்தான். வயிறு ட்ரம் கொட்ட, கிடக்கிறது என அப்படியே பாதியிலேயே விட்டு விட்டு சமையல் அறைக்கு வந்தான்.

“க்கா! என்ன மெனு இன்னிக்கு?”

“சாம்பார், மீன் சம்பல், கீரை அவியல், கடைசியா உனக்குப் பிடிச்ச காடை முட்டை அவிச்சு வச்சிருக்கேன். சாப்புடு வா” என சொல்லி தட்டை எடுத்து வைத்தாள் மதுரா. ஏற்கனவே ரோஹித் மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டுக் கொண்டே,

“மது!” என குழைவுடன் அழைத்தான் சூர்யா.

“முடியாது” என பதிலளித்தாள் மதுரா.

“இன்னும் நான் ஒன்னும் கேக்கவே இல்ல, அதுக்குள்ள வொய் திஸ் கொலைவெறிக்கா?”

“உன் குரலு எப்பப்ப என்னென்ன டிசைனா மாறும்னு எனக்கு தெரியாதா! எதாச்சும் வேலை ஆகனும்னா அப்படியே குழையுவியே”

“சார் எவ்ளோ பிசி பிசின்னு உனக்கு தெரியுது தானே! என் ரூம கொஞ்சம் க்ளின் பண்ண கூடாதாக்கா?”

“நமக்குள்ள என்ன டீலிங்?”

“மறந்துப் போச்சு!”

“எனக்கு மறக்கலடா கேடி! அவங்க அவங்க ரூம அவங்க அவங்க க்ளின் பண்ணனும். என் வேலை குக்கிங் தென் ஹால், கிச்சன் கிளினிங் மட்டும் தான். லாண்டரி உங்க மாமா வேலை. குட்டிக்கு வீட்ல தூசி துடைக்கற வேலை. இதுல மட்டும் எந்த வித காம்ப்ரமைசும் இல்ல”

“அப்படினா ஏன் மாமா உனக்கு பாத்திரமெல்லாம் கழுவிக் குடுக்கறாரு? மாப் போட்டுக் குடுக்கறாரு? அப்போ நீ சீட்டிங் பண்ணுற தானே?”

“அது..அது புருஷன் பொண்டாட்டி டீலிங். அது வேற டிபார்ட்மெண்ட். இதுல நீ கேள்வி கேக்கக் கூடாது! லாண்டரில உன் துணி கூட தான் வெக்கப்படாம உங்க மாமா துவைச்சிக் குடுக்கறாரு. அத நான் என்னன்னு கேட்டேனா?”

“அதானே! மதுக்குட்டி இதெல்லாம் கண்டுக்காம இருக்கால்ல! அதே மாதிரி நான் அவளுக்கு கால் பிடிச்சு விடறதுல இருந்து, கைப்பை தூக்கற விஷயம் வரைக்கும் நீயும் கண்டுக்கக் கூடாது மாப்பு” என சொல்லியபடியே உள்ளே நுழைந்தான் ரகுராம், மதுராவின் பெட்டர் ஹால்ப்.

“வாங்க ரகு! சீக்கிரம் வந்துட்டீங்க” என இவள் வரவேற்க,

“வந்துட்டாருடா பொண்டாட்டிக்குக் கரெக்டா காக்கா பிடிக்க” என கிண்டலடித்தான் சூர்யா.

“மை பொண்டாட்டி மேன்! நான் காக்கா பிடிப்பேன், குருவியும் பிடிப்பேன்! யூ வை காண்டு?” என கேட்டப்படியே மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டான் ரகு.

“சாப்பிடுங்க!”

“இல்லடா, லன்ச் சாப்பிட்டுட்டேன்! உன் கையால ஒரு ஸ்பெஷல் டீ போட்டுக் குடுடா” என கேட்டவன் மகனையும் முத்தமிட்டு விட்டு சூர்யாவின் அருகில் அமர்ந்தான். ரகுராம் ஃபேர்ப்ரைஸ் எனப்படும் சூப்பர்மார்கேட்டில் மேனேஜர் பதவியில் இருப்பவன். இவனுக்கு வேலை நேரம் அடிக்கடி மாறுபடும்.

“அப்புறம் மாப்பு?” என சூர்யாவைப் பார்த்து இழுத்தான் ரகு.

“என்ன மாம்ஸ்?”

“வசந்தத்துல நீ ஹோஸ்ட் பண்ண கதம்ப நிகழ்ச்சி நேத்து நைட் போட்டாங்களாம்!”

“ஆமா, போட்டுருப்பாங்க! அதுக்கு என்ன?”

“என் வேலை எடத்துல டோகல்ல(சிங்கப்பூரின் சேனலில் வந்த நிகழ்ச்சிகளை மறுபடியும் இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்) அதப் பார்த்துட்டு எல்லா பயலுகலும் மெர்சலாகிட்டானுங்க”

தன் காலர் இல்லாத டீ ஷர்டைத் தூக்கி விட்டுக் கொண்டவன்,

“பிரபலம் வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம் மாம்ஸ்! என்னால நீங்களூம் பேமஸ் ஆகிட்டு வரீங்கன்னு நெனைக்கறப்போ அப்படியே கிராஸ் இட்ச் பண்ணுது!” என சொல்லி புன்னகைத்தான்.

“கிராஸ் இட்ச்னா என்ன மாமா?” என கேட்டான் ரோஹித்.

“ஆஹ்! உங்க மாமாக்கு புல்லரிக்குதாம்!” என மதுரா மகனுக்கு பதில் அளித்தாள்.

“ஆணவத்துல ஆடாதே மாப்பு! உன் நிகழ்ச்சிய பாத்துட்டு துப்பித் தள்ளிட்டானுங்க!”

“ஏன், ஏன்? அப்படி என்ன துப்பற அளவுக்கு குறைய கண்டுட்டாங்களாம்?” என எகிறி கொண்டு வந்தாள் மதுரா.

“குறைலாம் ஒன்னும் இல்லையாம்டி! ஸ்டேஜ் மட்டும் அப்படியே நனைஞ்சி போச்சாம்!”

சூர்யாவுக்கு லேசாக புரிவது போல இருக்க, அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தான்.

“என்ன சொல்லறீங்க? புரியல எனக்கு”

“கோ ஹோஸ்ட் பண்ண பொண்ண பார்த்து உன்ற தம்பி ஜொள்ளு ஜொள்ளா ஊத்திருக்கான்! அதான் ஸ்டேஜ் நனைஞ்சு போச்சாம்”

“அவ்ளோ ஓப்வியசாவா தெரியுது?” என வடிவேலு ஸ்டைலில் இழுத்து சொன்ன சூர்யா அசட்டு சிரிப்பொன்றை சிரித்து வைத்தான்.

“ஆனா அந்தப் பொண்ணு புத்திசாலி!”

“ஏன்?” என தம்பியைப் பார்த்தப்படியே கணவனிடம் கேள்வியை கேட்டாள் மதுரா.

“இவன் ஜொள்ள பார்த்து, சொல்லுங்க ப்ரோ, அப்படியே ப்ரோ, ஆமா ப்ரோன்னு இவன அடிச்சு ஓரம் கட்டிருச்சாம்!”

அந்த நிகழ்ச்சியை மிஸ் செய்திருந்த மதுரா,

“யார் கூடடா ஷோ செஞ்ச?” என கேட்டாள்.

“அதான்கா அந்த ரேகா! வெள்ள வெளேர்னு தமன்னா மாதிரி இருப்பாளே அவ கூட!”

“இவன் ஒருத்தன்! வெள்ள வெளேர்னு இருந்தா அழகுன்னு யார் சொன்னா? உடம்புல மெலனின் பத்தலன்னு அர்த்தம்! சோகை வந்து வெளிறி போய் கிடக்கான்னு அர்த்தம். அந்த வெளிறி போன வெள்ளை காக்காய்க்கு என் தம்பி மாதிரி தங்கக் கம்பி கிடைக்க குடுத்து வைக்கல! அவ மூக்கு முறம் மாதிரி இருக்கு, உடம்பு ட்ரம் மாதிரி இருக்கு. அதுக்கே இவ்ளோ பில்டப் வேணா”

கணவருக்கு வைத்த டீயும் மதுரா மாதிரியே சூடாக இருந்தது.

“உன் தம்பி அருமை நமக்குத் தெரியுது! இந்த ஊரு பொண்ணுகளுக்குத் தெரியலையே! பேசாமா வியட்நாம், மியான்மார் நாட்டு பொண்ணுங்கள இங்குள்ள ஆம்பளைங்க கட்டிக்கிறாங்களே, அப்படி இவனுக்கும் பார்க்கலாமா?” என கேட்டவரை அக்கா தம்பி இருவருமே முறைத்தார்கள்.

“உங்க முகத்துக்கே, எங்கக்கா மாதிரி பேரழகி மனைவியா கிடைச்சிருக்கா! அந்த மாதிரி எனக்கும் ஒருத்தி கிடைப்பா மாமோய்! அவ என்ன இனி மேலயா பொறந்து வர போறா! எங்கயாச்சும் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா. கூடிய சீக்கிரம் சூரி நீயே என் பூரின்னு ஓடி வந்து என்னைக் கட்டிப்பா!” என சொல்லிக் கொண்டிருந்தவனின் கைத்தொலைபேசி நோட்டிபிகேஷன் சத்தம் கொடுத்தது. முக புத்தகத்தில் இவனது பேஜில் போட்டிருந்த போட்டோவுக்கு யாரோ நிலா டீபீ வைத்திருந்த ஐடி ஹார்ட் கையில் கொடுக்கும் ஸ்டிக்கரைப் போட்டிருந்தது. பெயரைப் படித்துப் பார்த்தான் சூர்யவர்மன்.

“ஸ்கை மூன்”

அதற்கு ஹார்ட் ஒன்றை தட்டி விட்டவன், மீண்டும் விட்ட வேலையைத் தொடர ஆரம்பித்தான். அதுதான் சாப்பிடும் வேலை வேறென்ன!

(பாடுவான்…..)