மெல்லினம்…மேலினம்…02(2)

மெல்லினம்…மேலினம்…02(2)

அதற்குள் போலிசார் அங்கே வருகை தர, அவரை பார்க்க சரவணனுடன் சென்றான் சிம்மன்.

“சொல்லுங்க சார்…”

“நீங்க யாரு?”

“நான் அவங்களோட பையன். பேரு நரசிம்மன்.இந்த விபத்து எப்படி நடந்துச்சுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” நிதானமாக கேட்டாலும் அவன் முகம் இறுகியிருந்தது.

“ஆக்ஷ்வலி உங்க அம்மா தான் ஹைவேஸ்ல யூ-டேர்ன் எடுக்கிறேன்னு, ஆப்போசிட்ல வந்த காரை  ஆக்சிடென்ட் பண்ணியிருக்காங்க. அதிலையும் அவங்க கார்ல ப்ரேக் ஒயர் கட்டாகியிருக்கு” என்றதுமே,

“அந்த கார்ல இருந்த யாருக்கும் ஒன்னுமில்லையே” பதற்றமானான்.

“காரை ஓட்டிட்டு வந்தது ட்ரைவர் மட்டும் தான். அவர் ஸ்பாடௌட் தம்பி. எனக்கு என்னமோ உங்க அம்மாவோட கார்ல வேணும்னே தான் ப்ரேக் ஒயர் கட் பண்ணியிருப்பாங்கன்னு தோணுது. அப்படி இல்லாமலும் இருக்கலாம். இது என்னோட கெஸ்சிங் தான் ” என போலிசார் சொல்லவும், மனம் விறைத்தது.

“ஏதும் சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்கா சார்.? இருந்தா நான் பார்க்கலாமா?”

“யா ஷுயர் மிஸ்டர். நரசிம்மன்” என்ற போலிசார் அவனிடம் அந்த ஃபுட்டேஜை காண்பித்தார்.

அதை பார்த்தாலே நன்றாக தெரிந்தது. மனம் வலித்தது.

அன்னபூரணியின் வண்டி அதிவேகத்துடனே யூ- டேர்ன் எடுக்க, அந்த பக்கமாக வந்து கொண்டிருந்த காரின் மீது வேகம் தாங்காமல் மோதியதில், அந்த கார் தலை குப்புற விழுந்து நொறுங்கி போய் தீப்பற்றியது.

ஏன் அன்னபூரணியின் வாகனம் கூட, சாலையோரம் சாய்ந்து விட்டிருக்க, அதில் தான் அவருக்கு தலையில் பலத்த அடி.

இதை பார்த்தவனுக்கு சில நொடி சிலையாகி நின்றான். அனைத்தும் அங்கே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்திருந்தது.

அந்த வீடியோவை அதற்குமேல் பார்க்க முடியவில்லை. உடல் நடுங்க,உடனே அதை ஆஃப் செய்தான்.

“போதும் சார்…”என்றான்.

“இந்த கேஸ்ல ஆக்சிடென்ட் செய்தவரும் இப்போ கோமால இருக்காங்க. இனி இந்த கேஸை எங்களால மூவான் பண்ண முடியாது மிஸ்டர். நரசிம்மன்… சோ, இதை நாங்க ஃக்ளோஸ் பண்ணிடலாம்னு முடிவெடுத்திருக்கோம்” சொல்லவே, அவனின் முகம் ரௌத்திரத்திற்கு மாறியது.

“என்ன இப்படி பேசுறீங்க சார்?” சரவணன் முன் வர,

“இது கொலை கேஸா இருந்தாலும் ஆக்சிடென்ட் கேஸா இருந்தாலும் தப்பு என்னவோ உங்க பக்கம் தான் இருக்கு. கொஞ்சம் பார்த்து பேசுங்க”

“அமைதியா இரு சரவணா” நண்பனை அடக்கி,” நாங்க இப்போ என்ன பண்ணணும் சார்?” என்றான்.

“காம்ப்ரமைஸா போறது தான் நல்லது” சொல்லவும்,

“நாங்க பேசிக்கிறோம் சார்…” என்று அவரை பார்த்து ஒரு கும்பிட்டை போட்டவன், சரவணனுடன் அவ்விடத்தை காலி செய்தான்.

சரவணனனிற்கு  நண்பனை பார்க்க வேதனையாக இருந்தது.

“மச்சான், கவலை படாதே டா. அம்மா சீக்கிரமே கண்ணு முழிச்சிடுவாங்க. பயப்படாம இரு டா ” ஆறுதலாக பேச, புன்முறுவலித்தான்.

“இல்லாதவங்களை இழக்கிறதை விட, இருக்கிறவங்க இருப்பாங்களா இல்லாமலே போயிருவாங்களான்ற நினைப்பே அத்தனை அத்தனை வலியையும் வேதனையையும் தரும் டா. அதிலும் அங்க ஒரு குடும்பத்தோட ஆணிவேரையே இல்லாம செய்திட்டோமே டா.எதை கொடுத்தாலும் அவங்களோட இழப்பை ஈடு செய்திட முடியாதே” மனத்தாங்கலுடன் பேச, அவனை சமாதானம் செய்ய முனையவில்லை சரவணன்.

அப்போது அங்கே வந்த மாணிக்கத்தை அழைத்த சிம்மன்,” அங்கிள்! தாத்தாவுக்கும் பாட்டிக்கும் விஷயம் தெரியுமா?”

“ம்ம்ம், சொல்லியாச்சு இன்னேரம் சென்னை ரீச் ஆகியிருப்பாங்க” என்றதும் பெருமூச்சொன்றை விட்டான் சிம்மன்.

பின், அந்த ட்ரைவர் வேலை பார்த்த இடத்திலிருந்து அவர்கள் வண்டியை இப்படி செய்ததற்கு இழப்பீடு கேட்டு நிற்கவும், அவர்களுக்கு தேவையான பணத்தை கொடுத்து செட்டில் செய்தவன், சங்கரை பற்றி தெரிந்து கொள்ள முயன்றான்.

அவர்களால் பாதிக்கப்பட்டது என்னவோ சங்கரனின் குடும்பம் மட்டுமே.

எனவே சங்கரனிற்கு பதிலாக அவரிடத்தில் இருந்து அவர்களை காக்க நினைத்தான் சிம்மன்… நரசிம்மன்.

அதற்கான வேலையையும் துவங்கியிருந்தான்.

******
அரசர்குளம்

சங்கரன் இறந்த மூன்றாம் நாளான இன்று பால் சடங்கை வைத்திருந்தனர்.

ரோஜா தான் கொள்ளி வைத்த காரணத்தால், அவளை அழைத்து கொண்டு சங்கரனை எரித்த இடத்திற்கு முத்தையன் பெரியோர்களோடு சென்றான்.

பால், அரைத்த வசம்பு, இளநீர், தேங்காய், சூடம் போன்றவற்றை வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த முத்தையன், பால்லையும் வசம்பையும் அவர் உடலை எரித்த இடத்தில் சுற்றிலும் தெளித்தான்.

வீட்டிலிருந்த பெண்களோ சாணி பதித்து வைத்திருந்த சுவற்றின் அடியில் பாலை வைத்து வணங்க, மீண்டுமொரு முறை கிழவிகள் ஒப்பாரி வைத்தனர். இதையெல்லாம் உயிரற்ற உடலாய் பார்த்து கொண்டிருந்தார் சுந்தரி.

பின், அப்பாலை எடுத்து சென்று பக்கத்தில் இருந்த வாய்க்காலில் ஊற்றிவிட்டு வந்தனர்.

இதோ அதோ என்று சங்கரன் இறந்து பதினாறு நாட்கள் ஆகிவிட்டது. வீடே கலையிழந்து காணப்பட, எப்போதாவது பேத்தியை கரிச்சு கொட்டும் பேச்சி, இப்போதெல்லாம் தினமும் அவளை ஏசினார்.

சங்கரனிற்கு பதினாறாம் நாள் கருமாதி முடித்து, இருந்த சொந்தங்கள் கூட கிளம்பி விட, வீடே வெறிச்சோடியாக இருந்தது.

கௌரியும் முத்தையனும் தான் அவர்களுக்கு துணையாக இருந்தனர்.

சுந்தரி சங்கரனின் புகைப்படத்தை பார்த்தப் படி வெறித்த நிலையிலே அமர்ந்திருக்க, அவர் வந்தமர்ந்தான் முத்தையன்.

“யக்கா…” என்றழைக்க, அசைவே இல்லை.

“நீ இப்படி இருக்காத க்கா. அங்க உன் மாமியா ரோசாவை அந்த ஏசு ஏசிட்டு இருக்கு. உன்னை நம்பி தானே பாப்பாவை அத்தான் விட்டுட்டு போய்ருக்காரு, நீ இப்படி உக்காந்துட்டே இருந்தா என்ன அர்த்தம்?” என்ற தம்பி உறுத்து விழித்தவர்,

“யாரை கேட்டு எங்க ரெண்டு பேரையும் அவரை விட்டுட்டு போக சொன்னது. அந்தாளை நம்பி தானே இங்க கூலோ கஞ்சியோ நாங்க குடிச்சிட்டு இருக்கோம்‌. அப்படி என்ன அவசரம்னு இத்தனை சீக்கிரத்துலே போய் சேர்ந்திட்டாரு” ஆத்திரம் தாங்கவில்லை அவருக்கு.

தன்னோடு காலம் முழுவதும் கூட வருவேன் என்று தாலி கட்டியவன், பாதியிலே ஒரேயடியாக விட்டுச் சென்றிருக்க அதனை தாங்க முடியவில்லை.

“அவரு இருக்கும்போதே அத்தை அத்தனை ஏச்சு பேச்சு பேசுவாங்க. இனி சொல்லவா வேணும்? உசுரோட பாடை கட்டிடு வாங்க முத்து. ரோசா எங்களுக்கு பொண்ணா பொறந்ததை தவிர வேற என்ன செஞ்சா, அவளை என்னேரமும் பேசிட்டே தான் இருக்காங்க. பெத்த மனசு இதையெல்லாம் கேட்கும்போது…” என அடுத்து சொல்ல முடியாமல் அழுகையில் கரைந்தார்.

“க்கா, இனி நீ தான் ரோசாக்கு எல்லாமே. அவ சின்ன புள்ள அத்தானை நினைச்சு ரோசாவை விட்டுடாத” அக்காளுக்கு தம்பி புத்திமதி கூறி, ஆறுதலாக தோள் கொடுத்தான்.

அப்போது தான் பக்கத்து வீட்டு பாட்டிகளிடம் ஒரு ஒப்பாரியை வைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைய, மருமகளும் அவன் தம்பியும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து சிடுசிடுத்தார்.

“இந்தா ஆரம்பிச்சிட்டாங்க” கௌரி முணுமுணுப்போடு பாத்திரத்தை கழுவ,

அது பேச்சிக்கு கேட்டதோ என்னவோ,” என்னடி அங்கன ஒரே அரற்றல் விட்டுட்டு இருக்க?”சத்தம் போட,

“ஒன்னுமில்ல ஆத்தா…” என்றாள்.

மனதோ’ பாம்பு காது’ என்றது.

“வேலைக்கு போற உத்தேசம் ஏதும் இருக்கா இல்ல இப்படியே இருந்து எங்களுக்கு கஞ்சி ஊத்த போறியா?” மருமகளை பார்த்து கேட்டார்.

அத்தை கேட்டதன் பின்பு தான் அடுத்து என்ன என்ற கேள்வி பூதாகரமாக அவர் முன் நின்றது.

தான் தேங்கி விட்டால், மகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என பயந்து போனார்.

அதன் பின் அவர் தேங்கவில்லை. ஓடத்துவங்கினார்.

பஞ்சாயத்து காரரின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தவர், அடுத்த சில நாட்களிலே மாலையில் வீட்டு பக்கத்திலே இட்லி விற்க துவங்கினார்.

எங்கேயும் அஞ்சி நிற்காமல் ஓடினார். அனைத்தும் மகளுக்காய்… அவளின் நலனிற்காய்…

வாழ்க்கை என்பது  அழுவதற்கானது அல்ல…

ஆழமான அன்பையும்
அளவான பாசத்தையும்
தந்து பயணிப்பதற்கே…

error: Content is protected !!